குருமார்களின் சரித்திரங்கள்

URL Page: 22§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/22_yo03_01.html§

குருமார்களின் சரித்திரங்கள்§

எட்டாம் அத்தியாயம்§

யோக சுவாமியின் இளமைப்பருவம் §

யாழ்ப்பாணத்தில் இருந்து வடக்கே ஐந்து கிலோ தொலைவில் இருக்கும் அமைதியான கிராமமான மாவிட்டபுரம், அதன் பழங்கால கந்தசுவாமி கோயிலுக்கு புகழ் பெற்றது. தென்னிந்திய சோழ சாம்ராச்சியத்தின் அரசரான திசை உக்கிர சோழன், தனது மகளின் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த கிராமத்தை ஏழாம் நூற்றாண்டில் கட்டினார். அதற்கு முன்பாக இந்த கிராமம் மற்றும் கீரிமலை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே இருந்த பகுதி கோவில் கடவை, “கடவுளின் வீடு" என்று அழைக்கப்பட்டது. இது அதே பெயரில் மகாபாரதம் மற்றும் கந்தபுராணத்தில் ஒரு புண்ணிய தீர்த்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான யோகிகள் மற்றும் முனிவர்கள் செய்த தவம், கோவில் கடவையின் புனிதத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. §§

சோழ அரசரின் மகளான மாருதப்புரவல்லி, தனது சிறு வயதில் இருந்து ஒரு குணப்படுத்த முடியாத நோயினால் வாடியதால் அவளது காதுகள் வீங்கி, தாடைகள் பெரிதாகி முகம் உருக்குலைந்து இருந்ததால், அவளது முகம் ஒரு குதிரை போல காட்சி அளித்தது என்று தல வரலாறு கூறுகிறது. எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. அவள் வயதுக்கு வந்ததும், தனக்கு ஏற்பட்டுள்ள நோய் நீங்கவேண்டும் என்று தெய்வங்களின் அருளை வேண்டி, சோழ சாம்ராச்சியத்தில் இருந்த எல்லா கோயில்களுக்கும் சென்று, ஒரு முடிவில்லாத தொடர் யாத்திரையை மேற்கொண்டாள். அவளது நற்குணத்தின் காரணமாக மக்களுக்கு, அவளது அவலநிலை மீது மேலும் அனுதாபத்தை ஏற்படுத்தியது.§§

அவளது அவலநிலை பற்றி, ஊர் ஊராக சுற்றிக்கொண்டு இருந்த சாந்தி லிங்க முனிவருக்கு தெரியவந்தது. இலங்கையின் வடக்கு கரையில் இருந்த கீரிமலையின் புகழ்பெற்ற கடலோர கோயிலுக்கு சென்று, தினமும் அந்த கோயில் குளத்தின் மருத்துவ குணமுள்ள நீரில் குளிக்க வேண்டும் என்று அவர் அவளுக்கு அறிவுறுத்தினார். அந்த இடத்திற்கு மாருதப்புரவல்லி தனது பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களுடன் 785 ஆம் ஆண்டு வந்து அடைந்து, முனிவர் அறிவுறுத்தியதை போல, காலையில் விரதம் இருந்து நீண்டநேரம் கோயில் நீருற்றில் குளித்து, விரதத்துவம் மற்றும் பிரார்த்தனைகளின் ஒரு தீவிரமான மருத்துவ சிகிச்சையை சிரத்தையுடன் நிறைவேற்றினாள். அவளது உடல்நிலையில் தொடக்கத்தில் இருந்தே முன்னேற்றம் தென்பட்டது மற்றும் அவளது நோய் முழுமையாக குணமடைந்த போது, அவள் தனக்கு முன்னெப்போதும் இல்லாத இயல்பான அழகை பெற்றாள். §§

தனக்கு புத்துயிர் கிடைத்ததில் அதிக ஆனந்தம் அடைந்து, இறைவனுக்கு தனது நன்றிக்கடனை செலுத்த விரும்பி, மாருதப்புரவல்லி கோவில் கடவையின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிக்கொண்டு இருந்தாள். அவள் அடிக்கடி கீரிமலை சிவன் கோயிலுக்கு வந்து சென்ற போது, சடையனார் என்ற முதியவர் தினமும் ஒரு ஆலமரத்தின் மூலையில் செப்பில் செய்த ஒரு சிறிய வேலை வைத்து, தீவிரமான பயபக்தியுடன் வழிபடுவதை கவனித்தாள். §§

image§

சதாசிவன் வடக்கு இலங்கையில் ஒரு சிறுவனாக இருந்த போது, வெளிநாட்டவர்கள் ஆட்சியிலும் வலுவாக நிலைத்து இருந்த, தனது ஆச்சாரமான சைவ சமய சமூகத்தின் அரவணைப்பில் இருந்தான். அவன் தனது சிறு வயதில் இருந்து, சிவபெருமானை மையமாக கொண்டு, சிவபெருமானின் மெய்யுணர்வு மற்றும் அருளின் மீது தேடலை மேற்கொண்டு, ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த சாதுக்கள், புனிதமான யாசகர்கள் மற்றும் நாடோடிகளை பார்த்து வளர்ந்து இருந்தான். §

• • • • • • • • • • • • • • §§

ஒரு நாள் காலையில் இந்த எளிமையான கோயிலை பார்க்கும் போது, ஒரு முறையான கந்தன் கோயிலை அந்த இடத்தில் அமைக்கவேண்டும் என்ற தூண்டுதல் மாருதப்புரவல்லிக்கு தோன்றியது. நடந்தது அனைத்தையும் தனது தந்தைக்கு தெரிவித்து, அவரது உதவி வேண்டும் என்று ஒரு வேண்டுகோளை அனுப்பினாள். வெகு தொலைவில் இருந்த இலங்கையில் தனது மகள் குணமடைந்து விட்டாள் என்ற செய்தியை கேட்ட கடமையுணர்ச்சி நிறைந்த தகப்பன் மனமகிழ்ந்து, உடனே கோயில் சிற்பிகள், கல் செதுக்குபவர்கள் மற்றும் பணியாளர்கள் என்று ஏற்பாடு செய்திருந்த ஒரு திறமையான குழு, சில வாரங்களுக்குள் அங்கே வந்து சேர்ந்து தங்களது பணியையும் துவக்கினார்கள். §§

அது ஒரு மிகப்பெரிய பணியாக இருந்தாலும், ஒவ்வொரு நிலையிலும் செல்வம் அதை தேடி வந்தது. யாழ்ப்பாணத்தின் கலிங்க அரசனான உக்கிர சிங்கன், அந்த திட்டப்பணியை நேரடியாக ஆய்வு செய்து, உடனடியாக அந்த பணிக்காக தனது செல்வம் மற்றும் வளங்களை வழங்கினான். சில காலம் கழித்து, அவன் மாருதப்புரவல்லியை திருமணம் செய்துகொண்டான். அந்த கோயிலின் தெய்வமாக, காங்கேயன் என்ற பெயரில் இருந்த முருகப்பெருமானின் அழகான மூர்த்தி, இந்தியாவில் இருந்து பூசாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகளை கொண்ட ஒரு பெரிய குழுவுடன் வந்து சேர்ந்தது. அவர்கள் குடமுழுக்கு விழாவை சீரும் சிறப்புமாக செய்து முடித்தனர். அதன் பிறகு அந்த கோயிலின் புகழ் அந்த தீவு, இந்தியா மற்றும் மலேசியாவிற்கும் பரவியது. அன்றில் இருந்து கோயில் கடவை “குதிரை முகமுடைய கிராமம்" என்ற பொருள்படும் மாவிட்டபுரம் என்ற பெயரை பெற்றது. §§

1619 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் மீது நடைபெற்ற மூன்றாவது முற்றுகையின் போது, 900 ஆண்டுகள் பழமையான கோயிலை போர்த்துகீசிய வீரர்கள் மற்றும் பூசாரிகள் அழித்து தரைமட்டமாக்கினார்கள். அதிலிருந்து பெரும்பாலான கட்டிடத் துண்டுகள், பால்க் நீர்சந்தியில் ஒரு தீவாக இருந்த ஊர்காவற்துறையில் ஒரு கடல் கோட்டையை கட்டுவதற்காக பல கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டன. போர்த்துகீசிய குடியேற்றத்தின் போது, தீபகற்பத்தில் எதையும் விட்டு வைக்காமல், ஒவ்வொரு பெரிய கோயிலும் இதைப்போன்று அழிக்கப்பட்டது. அவர்கள் இலங்கையின் வடக்கு பகுதியில் 41 வருடங்களுக்கு, இரக்கமற்ற சமயப்பரப்பு பணியாளரின் உற்சாகத்துடன் ஆண்டு வந்தனர். அவர்கள் அழித்த சைவ சமய கோயில்களின் இடிபாடுகளில் இருந்து கத்தோலிக்க தேவாலயங்களை கட்டுவது, அவர்களது வழக்கமாகி இருந்தது. §§

1658 ஆம் ஆண்டில் டச்சு கடற்படை போர்த்துகீசியர்களை துரத்தி அடித்ததும், இலங்கையில் டச்சு நாட்டின் ஆட்சி தொடங்கியது. 1798 ஆம் ஆண்டில் டச்சு நாட்டவர்களை ஆங்கியலர்கள் தகர்த்து எரியும் வரை, 140 ஆண்டுகளுக்கு டச்சு பாதிரியார்களின் கீழ், கத்தோலிக்க தேவாலயங்கள் திடீரென்று சீர்திருத்த திருச்சபையை சேர்ந்த தேவாலயங்களாக மாறின. டச்சு ஆட்சியில் சமயம் சார்ந்த சுதந்திரம் சிறிதளவு இருந்தது. ஆனாலும், மாவிட்டபுரம் கோயிலின் புனர்நிர்மாணம் தொடங்குவதற்கு ஒன்றரை நூற்றாண்டுகள் ஆகின. அந்த பணி 1782 ஆம் ஆண்டில் மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கியது. கோயிலில் இருந்த தெய்வங்கள் அனைத்தும் மீட்கப்பட்டன. அவை பெரும்பாலான சமயம், ஒரு கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இந்த யுகத்தை பற்றியும், 1948 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வரும் வரையில், இந்த தீவை அடிமைப்படுத்திய குடியேற்ற சக்திகளை இலங்கை சைவர்கள் எதிர்கொண்டது பற்றியும் ஒரு சிறிய காட்சியாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா நமக்கு வழங்குகிறது: §§

நெதர்லாந்து நாட்டவர்கள் சீர்திருத்த திருச்சபையில் அதிலும் குறிப்பாக கால்வினின் இறையியலில் தீவிர ஆர்வத்துடன் இருந்தனர். மேலும் டச்சு ஆட்சியின் ஆரம்ப காலத்தில் ரோமன் கத்தோலிக்க மதகுருமா்களின் சமயப்பரப்பு நடவடிக்கைகளை தடுக்கவும், இலங்கையில் சீர்திருத்தப்பட்ட தேவாலயத்தை பரப்பவும் ஒரு வலுவான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சமயம் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டு, அதன் பாதிரியார்களுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டது; கத்தோலிக்க தேவாலயங்கள் சீர்திருத்த திருச்சபைக்கு வழங்கப்பட்டு, கால்வினின் இறையியலில் சார்ந்த பாதிரியார்கள் பிரார்த்தனை கூட்டங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இன்னல்கள் இருந்தாலும், பல கத்தோலிக்கர்கள் தங்கள் சமயத்தில் முழு ஈடுபாட்டுடன் இருந்தனர்; சிலர் சீர்திருத்த திருச்சபையை ஓரளவிற்கு ஏற்றுக்கொண்டனர், அதே சமயத்தில் மற்றவர்கள் சுதந்திர கண்டி இராச்சியத்தில குடிபுகுந்தனர். சீர்திருத்த திருச்சபையை சேர்ந்த குருமார்கள் கத்தோலிக்க குருமார்களைக் காட்டிலும் தங்கள் சமயப்பரப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டனர், மற்றும் அதிலும் குறிப்பாக தங்கள் நம்பிக்கையை பரப்ப பள்ளிகளை பயன்படுத்தினார்கள். §§

டச்சு ஆட்சியின போது, கடலோரப்பகுதிகளில் கண்டி இராச்சியத்தில் மற்றும் இலங்கை தீவின் தெற்கு பகுதியில் பெளத்த சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. கத்தோலிக்க சமயம் மீது டச்சு நாட்டவர்களுக்கு இருந்த மிகப்பெரிய விரோதம் காரணமாக இலங்கை, தாய்லாந்து மற்றும் தென்மேற்கு மியான்மரில் (பர்மா) இருந்த அரகன் (ராகைன்) பகுதிக்கு இடையே பெளத்த துறவிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கி பெளத்த சமய மறுமலர்ச்சிக்கு மறைமுகமாக உதவி செய்தனர். டச்சு அரசு மேற்கொண்ட இத்தகைய சேவைகள், கண்டி அரசருடன் நல்ல உறவுகளை பேணி காக்க துணை புரிந்தன. §§

சிங்களம் மற்றும் தமிழ் இலக்கிய மரபுகளில் ஒரு புதிய தொடக்கத்தை குறிப்பிடும் வகையில், டச்சு ஆட்சியில் கிறுத்துவ படைப்புக்கள் வெளிவர தொடங்கின. இந்த புதிய படைப்புக்களில் பெரும்பாலானவை, அடிப்படை நெறிமுறைகளின் மொழிப்பெயர்ப்புக்களாக இருந்தாலும், அதில் சில பெளத்த மற்றும் இந்து சமயத்தை எதிர்த்த தர்க்கங்களாகவும் இருந்தன. இலங்கை கிறுத்துவ இலக்கியத்தில், மிகவும் பிரபலமானவர்களில் ஒருவராக 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜாகோமே கொன்சால்வேஸ் திகழ்ந்தார். சமயப்பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, 1734 ஆம் ஆண்டு டச்சு மேற்கிந்த கம்பனி [வெரினிக்டே வூஸ்ட்-இந்திஸ்சே கொம்பானி] இலங்கையில் தொடங்கிய முதல் அச்சகம், கிறுத்துவ நூல்களின் விரிவாக்கத்திற்கு உதவி செய்தன.§§

இன்று மாவிட்டபுரம் கோயிலின் சன்னிதிகள் மற்றும் திருவிழாக்கள் நிறைவான சிரத்தையுடன் ஆதிசைவர்களால் நிர்வகிக்கப்பட்டு, ஒரு செழிப்பான மற்றும் பிரபலமான கோயிலாக விளங்குகிறது. கோயிலில் சண்முகநாதன் (முருகன்), சிவலிங்கம், செப்பில் உருவாக்கப்பட்ட உண்மையான வேல் மற்றும் விக்னேஸ்வரன் (விநாயகர்) போன்ற விக்கிரகங்கள் உள்ளன. தினமும் அவை அனைத்திற்கும் பூசைகள் நடத்தப்பட்டு, கோயில் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. இது ஒரு உயரமான இராசகோபுரம், வெளியே மூன்று விசாலமான வாசல்கள் மற்றும் ஐந்து ரதங்களை கொண்டிருக்கிறது. §§

இந்த உலகிற்குள் சதாசிவன் பிறக்கிறான் §

வைகாசி மாதம் (மே-ஜூன்), தனிஷ்டா நட்சத்திரம் மே 29, 1872 அன்று அந்த கோயில் வளாகத்திற்கு அருகில் இருந்த ஒரு எளிமையான வீட்டில் கொழும்புத்துறையை சேர்ந்த அம்பலவாணர் மற்றும் சின்னாச்சி அம்மாவிற்கு ஒரு சிறுவன் பிறந்த போது, இன்றைய சீரும் சிறப்பும் அப்போது இருக்கவில்லை. அந்த சிறுவன் மிகவும் ஆச்சாரமான சைவ கலாச்சார சூழலில் வளர்ந்தான். அவனது தந்தை, கிழக்கு கரையோரம் நுவரெலியாவிற்கு அருகில் ஒரு வணிகராக வேலை செய்து வந்தார் மற்றும் அவர் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே தனது வேலையில் மும்முரமாக இருந்தார். சின்னாச்சி சைவ சமயத்தில் பற்றுடன் இருந்தாள். அந்த சிறுவனுக்கு சுமார் பத்து வயது நிரம்பியிருந்த போது அவளது உயிர் பிரிந்தது. அதுவரை அவனை யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் தென்மேற்கு கரையில் இருந்த கொழும்புத்துறையில் தங்களது வீட்டில் வளர்த்து வந்தாள். §§

அவன் தெய்வங்களின் கதைகள், முனிவர்களின் வாழ்க்கைகள், கோயில் மரபுகள் மற்றும் தமிழ் சாத்திரம் பற்றி தன் தாயிடம் இருந்து முதலில் கற்றுக்கொண்டான். “ஒரு தாய் தனது குழந்தையின் முதல் குருவாக விளங்குகிறாள்,” என்று சைவ சமயத்தில ஒரு பழமொழி இருக்கிறது. ஒரு வேளை அவளுக்கு தனது மகனின் ஆன்மீக எதிர்காலம் பற்றி முன்பே தெரிந்து இருந்தாலும், சைவ கலாச்சாரத்தின் பழங்கால நெறிமுறைகளை கற்றுத்தருவதன் மூலம், இதை விட சிறப்பாக அவனை தயார் செய்து இருக்கமுடியாது. அவனுக்கு சதாசிவன் என்று பெயரிட்டாள். §§

ஒரு சந்நியாசியிடம் அவரது கடந்தகாலத்தைப் பற்றி கேட்கக்கூடாது என்று சைவ சமயத்தில் ஒரு வழக்கம் இருக்கிறது. அதனால் யாரும் அவரது குழந்தைப்பருவம் அல்லது குடும்பத்தைப் பற்றி விசாரிக்கவில்லை. அவ்வாறு விசாரித்த சிலருக்கு, “நான் இப்போது போல எப்போதும் இருக்கிறேன்! எப்போதும் இருந்துள்ளேன்!” என்ற ஒரே பதில் தான் கிடைத்தது. தான் புதன்கிழமையில் பிறந்ததாக ஒரு முறை குறிப்பிட்டார், ஆனால் அதைப்பொன்ற ஒரு திட்டவட்டமான பதில் எப்போதும் கிடைத்ததில்லை. காலப்போக்கில், அவர் தனது சீடர்களிடம் ஒரு விவரத்தை பற்றி விளக்கம் அளிக்க சில கதைகளை விவரித்து இருந்தார் மற்றும் அவர்கள் அந்த குறிப்புக்களை பின்னர் ஒப்பிட்டு பார்த்து, அவரது இளவயது பற்றி தோராயமான சுருக்கத்தை ஒன்று சேர்க்க முடிந்தது. இந்துமதி அம்மா பின்வரும் தகவலை வழங்குகிறார்: §§

அவர் குழந்தைப்பருவத்தில் தனது தாயின் கரங்களை பிடித்து நல்லூர் சென்றதில் இருந்து, நல்லூர் தெய்வம் அவரது இதயத்தில் நிறைந்து இருந்தார். கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து, தெய்வத்தின் பாதங்களில் விழுந்து வணங்குவது, அவரது இதயத்தை தொட்ட அனுபவமாக இருந்தது. செண்பக மரத்தை சுற்றியிருந்த துறவிகளை சந்தோசமாக கவனிப்பார். பல்வேறுவிதான பச்சை அரிசி, சீப்பு சீப்பாய் வாழைப்பழங்கள், தேங்காய்கள் மற்றும் மற்ற வழிபாட்டு சாதனங்களை பக்தர்கள் கொண்டு வருவதை பார்த்ததும், அவர் முழுமையான புலன் அடக்கத்தை அனுபவித்தார். பிரகாசமாக இருந்த முருகப்பெருமானுக்கு பிராமண பூசாரி விளக்குகள் மற்றும் கற்பூற தட்டுகளை காண்பிக்கும் போது, தனது கண்ணில் இருந்து கண்ணீர் வடிய நின்று கொண்டு இருப்பார். §§

இவரது சிறிய வயதிலேயே அவரது தாய் மரணமடைந்தாள். எங்களுக்கும் ஒரு சில சீடர்களுக்கும் சுவாமி சொன்ன தகவலில் இருந்து, அவரது பத்தாவது வயது வரை அவரது தாய் வாழ்ந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. சுவாமி தனது குழந்தைப்பருவம் பற்றி ஒரு சில தகவல்களை மட்டும் வழங்கி இருந்தாலும், ஒரு நாள் தனக்கு வழங்கப்பட்ட உணவை முழுமையாக சாப்பிடாமல், வாழை இலையில் உணவை மீதம் வைத்து குப்பையில் எரிந்த சம்பவத்தை பற்றி விவரித்தார். அன்று அவரது தாய், உணவை விரயம் செய்யக்கூடாது என்று தனது மகனுக்கு பாடம் கற்பிக்க முற்பட்டு, “நீ யாசகம் செய்து வாழப் போகிறாய்,” என்று கடிந்துகொண்டாள். அவள் சொன்னதை போலவே, அவர் ஒரு ஆண்டியைப் போல வாழ்ந்தார். “தாய் சொல்லை தட்டாதே” என்ற ஔவையாரின் பொன்மொழியை விளக்குவதற்கு, இந்த சம்பவத்தை ஆனந்தமாக எடுத்துரைப்பார். §§

தனது தாய் இறப்பதற்கு முன்பாக, மாவிட்டபுரம் கோயிலில் நடந்த ஒரு திருவிழாவிற்கு தன்னை இறுதியாக அழைத்து சென்ற சம்பவத்தை பற்றி யோக சுவாமி ஒருமுறை விவரித்தார். அப்போது அந்த கோயிலை ஒரு பெரிய கூட்டம் சுற்றிக்கொண்டு இருந்ததாகவும், அவர்கள் அந்த கூட்டத்தை பின்தொடர்ந்து செல்லும் போது தான் தனது தாயின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருந்ததாகவும் கூறினார். அப்போது அவர் இடுப்பில் ஒரு வேட்டியையும், அதன் மீது ஒரு புதிய பட்டு சால்வையும் அணிந்து இருந்தார். ஆனால் அந்த சால்வை கீழே விழுந்து தொலைந்து விட்டது. ஒரு தமிழ் சிறுவன் முதலில் ஒரு வேட்டியை அணிவது, முதலில் ஒரு பட்டு சால்வையை போர்த்திக்கொள்வது மற்றும் தனது தாயின் கையை பிடித்து செல்வதும் அவனது வயதை மறைமுகமாக குறிப்பிடுகிறது. இந்த குறிப்புகளில் இருந்து, அவரது தாய் இறக்கும் போது, அவருக்கு சுமார் பத்து வயது இருக்கவேண்டும் என்று யூகிக்க முடிகிறது. §§

image§

நல்லூர் கோயிலை சுற்றி இருந்த விவசாய நிலங்கள், அவரது குருவின் இருப்பிடமாக, அவர் தூய வெள்ளை ஒளியில் முதலில் மூழ்கிய இடமாக, அவர் ஆரம்பகாலத்தில் தவம் செய்த இடமாக மற்றும் அவர் சீடர்களை சந்தித்த ஆன்மீக அரங்கமாக யோக சுவாமியின் வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தன. இந்த சித்திரத்தில் சிவபெருமான் “நல்ல இடமாக" இருக்கும் நல்லூரை ஆசீர்வதிக்கிறார்.§

• • • • • • • • • • • • • • §§

பள்ளி நாட்கள் §

தாயின் மரணத்திற்கு பிறகு சுமார் ஆறு ஆண்டுகளுக்கு, சதாசிவனை அவனது அத்தை முத்துப்பிள்ளை மற்றும் மாமன் சின்னையாவும் (அம்பலவாணரின் தங்கை மற்றும் தம்பி) வளர்த்தனர். சைவ சமயத்தில் ஈடுபாட்டுடன் இருந்த அத்தை முத்துப்பிள்ளை, சதாசிவனுக்கு உணவு, உடை மற்றும் பாதுகாப்பை வழங்கியதோடு, சைவ கலாச்சாரத்தில் அவனுக்கு மேலும் பயிற்சி வழங்கவும் பொறுப்பு வகித்தாள். சதாசிவன் யாழ்ப்பாணம் நகரத்தில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்த யாழ்ப்பாணம் கடல் நீரேரிக்கு அருகில் இருந்த கொழும்புத்துறையில் தன் அத்தையின் வீட்டில் வாழ்ந்தான். கெர்னியாடி என்ற கிராமத்திற்கு அருகில் செவ்வக வடிவில் இருந்த ஒரு பெரிய கிணற்றின் அருகே இருந்த ஒரு சிறிய பைரவ கோயிலில், அந்த குடும்பம் தங்கள் வழிபாடுகளை நடத்தினர். அந்த வயல் வெளிகளில் வேலை செய்த விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் தற்காப்பை கருதி, நாயை தனது வாகனமாக கொண்டிருந்த பைரவரை வழிபட்டனர். சின்னையாவின் வீடு அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருந்தது. அம்பலவாணர் வெகு தொலைவில் வேலை செய்ததாலும், அந்த காலத்தில் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவது கடினமாக இருந்ததாலும், சதாசிவனின் பள்ளிப்படிப்பை சின்னையா கவனித்துக்கொண்டார். §§

அண்ணன் மகனை வளர்ப்பதில் முத்துப்பிள்ளை எந்த குறையும் வைக்கவில்லை. சின்னையா ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மாறி இருந்தார் மற்றும் அவரது மனைவி கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்து இருந்தார். இந்த விவரங்கள் இளம் சதாசிவத்தின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. முத்துப்பிள்ளையின் மாமனார், நல்லார் கணபதி, கொழும்புத்துறையில் ஒரு பிரபல சைவ சமய சோதிடராக இருந்தார். அவரும் இந்த சிறுவனை வளர்ப்பதில் அக்கறையுடன் இருந்தார். §§

சதாசிவன் ஒரு தமிழ் பள்ளியில் தனது முறையான கல்வியை தொடங்கி இருந்தாலும், அவனது பத்தாவது வயதில், மாமா சின்னையா அவனை யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரியில் சேர்த்தார். சமயப்பிரச்சாரம் செய்யும் பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம் படிக்கமுடியும் என்பதால், அந்த நாட்களில் கத்தோலிக்க பள்ளிக்கு செல்வது ஒரு வழக்கமாக இருந்தது. இந்துக்களின் சமய நம்பிக்கையை வலுவிழக்க வைக்கும் முயற்சிகளில் இந்த பள்ளிகள் ஈடுபட்டு இருந்தாலும், ஆங்கிலம் பேசுபவர்களுக்கு மட்டுமே அரசுப்பணிகள் வழங்கப்பட்டதால், இந்த பள்ளிகளுக்கு இந்துக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. §§

தங்களுக்கு முன்பு ஆட்சி செய்த போர்த்துகீசியர்கள் மற்றும் டச்சு நாட்டவர்களை போல, ஆங்கிலேயர்களும் உலகெங்கும் பரவியிருந்த தங்கள் சாம்ராச்சியத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு, அந்த தீவில் இருந்த வளங்கள் மற்றும் பொருளாதாரத்தின் மீது வரி விதித்தனர். இலங்கையில் மதசார்பற்ற கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வது அவர்களுக்கு கடினமாக இருந்தாலும், ஆங்கிலத்தை கற்றுத்தந்த மதசார்பற்ற பள்ளிகளுக்கு சிறிய உதவியை வழங்கினார்கள். வெளிநாட்டவர்கள் ஆட்சியில், இலங்கை மக்களின் வாழ்க்கை நிலையற்று இருந்தது; அரசுப்பணி அல்லது சொந்த வியாபாரம் என்றாலும் ஒரு நிலையான தொழிலுக்கு மற்றும் வருமானத்திற்கு சரளமாக ஆங்கிலம் பேசுவது அத்தியாவசியமாக இருந்தது. §§

ஃபோர்டு துரைசாமி அல்லது மார்க் செல்லையா என்று மாணவர்களை பதிவு செய்யும் போது, கிறுத்துவ பெயர்களை வழங்குவது வழக்கமாக இருந்தது. தூய திரு பிரான்சிஸின் துறவிகள் சதாசிவனுக்கு ஜான் பிள்ளை என்று பெயரிட்டார்கள், ஆனால் அந்த பெயர் என்றுமே பயன்படுத்தப்படவில்லை. சதாசிவன் புனித பேட்ரிக்கில் முதல் வருடம் படித்துக்கொண்டு இருக்கும் போது, ஊர் தலைவராக மண்ணியக்காரன் முத்துக்குமாரு என்ற உறுதியான முதியவர் இருந்தார். அவருக்கு தனது கலாச்சாரத்தில் கிறுத்துவ மதமாற்றம் நடைபெறுவது பிடிக்கவில்லை. அவர் பள்ளியில் இருந்து திரும்பும் இளைஞனை மறித்து, அவன் பெயரை கேட்டார். அவன் “ஜான்,” என்று கூறினான். தலைவர் “இல்லை! உன் பெயர் யோகநாதன்,” என்று கூறினார். அதற்கு “யோகத்தின் தலைவன்” என்று பொருள் என்பதால், அது சிறுவனின் எதிர்காலத்தை கணித்து வழங்கப்பட்ட, ஒரு பொருத்தமான பெயராக தோன்றியது. யோக சுவாமி என்ற தலைப்பில் அம்பிகைபாகன் தனது சுயசரிதையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:§§

முத்துப்பிள்ளை ஒரு தீவிர சைவ பக்தையாக இருந்தாள். அவளுக்கு தனது சதோகரன் சின்னையா கத்தோலிக்க மதம் மாறியது மற்றும் தனது மருமகன் யோகநாதன் ஒரு கத்தோலிக்க கல்லூரியில் ஜான் என்ற பெயரில் படிப்பதும் பிடிக்கவில்லை. அவள் யோகநாதன் படிப்பதற்காக, சைவ புத்தகங்கள் மற்றும் உபநிடதங்களை வழங்கினாள். சுவாமிகள் மீது கத்தோலிக்க மதம் தாக்கம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், அவனுக்குள் சைவ சமயத்தின் மீது பக்தியை விதைப்பதிலும் முத்துப்பிள்ளை பெரும்பங்கு வகித்தாள். §§

யோகநாதன் பதினாறு வயது வரை பள்ளியில் படித்தான். அவனுக்கு பள்ளியில் மொழி பிடித்தமான பாடமாக இருந்தது, மற்றும் தனது இளம்வயதில் தனக்கு பிடித்தமான பாடங்களை ஆர்வத்துடன் படித்து, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்ந்த புலமையை பெற்றான். உலகெங்கும் தங்கள் வயதுக்கு மிஞ்சிய புத்தியுடன் இருக்கும் சிறுவர்கள் செய்வதை போல, சிலசமயங்களில் அவன் தனது வகுப்பில் ஆசிரியராக நடித்து, மற்ற சக மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவான். அவன் பாடங்களை நன்றாக படித்தாலும், அவனுக்கு பள்ளியின் மீது அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தது. §§

யோகநாதன் ஒரு அமைதியான இளைஞனாக இருந்தான். அவனுக்கு பள்ளியில் பல நண்பர்கள் இருந்தார்கள் மற்றும் அவன் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாலும், பெரும்பாலான சமயங்களில் அவன் தீவிரமான ஆழ்ந்த சிந்தனையுடன் காட்சி அளித்தான். அவன் தாயை சிறுவயதில் இழந்ததால், சமயப்பற்றுடன் தன் உளஆய்வு மேற்கொள்வதாகவும், காலப்போக்கில் அவன் அதை மறந்துவிடுவான் என்றும் மக்கள் நம்பினார்கள். அவன் பள்ளியில் படித்த வருடங்கள் முழுவதும், அவன் வழக்கமாக தனியாக ஏதாவது ஒரு சிந்தனையில் மூழ்கி இருப்பான் அல்லது கோயிலில் இருப்பான். அவன் தினமும் தமிழ் சாத்திரங்களை படித்து, சைவத்துறவிகள் எழுதிய எண்ணற்ற பாடல்களை கற்றுக்கொண்டு, அவற்றை அவ்வபோது பாடிக்கொண்டு இருந்தான். அவன் திருக்குறள், திருமுறை, ஒளவையாரின் கவிதைகள், தாயுமானவர் பாடல்கள், நமச்சிவாய மாலை மற்றும் மேலும் பல புனிதமான நூல்களை மனப்பாடம் செய்தான். §§

பின்வரும் சம்பவத்தை ஒரு சீடன் பதிவு செய்து இருக்கிறார். “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காண்பிக்க வேண்டும் என்ற விவிலிய போதனையை கிறுத்துவ சகோதரர்களில் ஒருவர், வகுப்பில் ஒரு நாள் விளக்கிக்கொண்டு இருந்தார். திடீரென்று, மேடைக்கு எழுந்து சென்ற யோகநாதன் ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கோபமுற்ற ஆசிரியர் அவரை திரும்பிப் பார்த்ததும், மாணவன் வகுப்பில் இருந்து கிளம்பினான். இதுவே அவரது முறையான கல்வியின் முடிவாகும் ஆன்மீக வேட்கையின் தொடக்கமாகவும் அமைந்தது.”§§