குருமார்களின் சரித்திரங்கள்

Page 16: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/16_na01_08.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

மூன்றாவது அத்தியாயம் §

திருமூலர் சமயப்பணியில் அனுப்பப்படுகிறார்§

மயமலையில் நாத குரு மகரிஷி நந்திநாதாவின் ஆசியுடன் எட்டு ஸித்திகள் மற்றும் முழுமையான ஞானோதயத்தைப் பெற்ற ரிஷி சுந்தரநாதர், பிற்காலத்தில் ரிஷி திருமூலர் என்ற பெயர் பெற்று, மரியாதைக்குரிய நாத பரம்பரையில் சேர்ந்து, பிற்காலத்தில் அந்த பரம்பரையில் மிகவும் பிரபலமான யோகிகளில் ஒருவரானார். அவர் தனது குருவை மையமாகக் கொண்டு திருமந்திரத்தை எழுதினார் :§§

நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்§

நந்தி அருளாலே மூலனை நாடினோம் §

நந்தி அருளாவ தென்செயும் நாட்டினில்§

நந்தி வழிகாட்ட நானிருந் தேனே. 68§§

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் §

நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் §

நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன் §

நந்தி அருளாலே நானிருந் தேனே. 92§§

ஒருமை பற்றிய ஒரு கருத்து §

சுந்தரநாதர் தீட்சை பெற்ற பிறகு, பாரத நாட்டு தென்பகுதியில் சைவ சித்தாந்தத்திற்கு புத்துயிர் அளிக்க, அவரது சற்குருவால் அனுப்பப்பட்டார். நந்திநாதா மற்றும் தனது சந்நியாச சகோதரர்களிடம் இருந்து விடைபெற்ற சுந்தரநாதர், இந்தியாவின் தென் பகுதிகளில், தமிழ் மொழியில் ஆகமங்கள் மற்றும் வேதங்களின் உண்மையான தகவலை கொண்டு வருவதற்காக, தனது வாழ்க்கையின் சமயப்பணியை தொடங்கினார். பழங்காலத்தில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கால்நடையாக சாதாரண சாலைகள் மற்றும் பாதைகளில் செல்வது ஒரு நீளமான மற்றும் கடினமான பயணமாக இருந்தது. திபெத்திய எல்லைக்கு அருகில், கங்கை நதியின் பிறப்பிடத்தில், இமயமலையின் பனிமுகடுகளில் கல்லால் உருவான கோயிலாக, வடக்கு திசையில் இருக்கும் கேதார்நாத்தில் தொடங்கி, தான் செல்லும் பாதையில் இருந்த புனிதமான சைவ மையங்களை காண்பதற்காக, சுந்தரநாதர் கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டியிருந்தது என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. தனது சற்குருவை பிரிந்த இத்தருணத்தில், அவர் கங்கை நதியின் முகட்டில் அமர்ந்துகொண்டார். அவர் பலவருடகாலம் பயின்ற கல்வி நிறைவுப்பெற்று, அவரது சூட்சும ஞான அனுபவங்கள் எங்கும் பரவிக்கொண்டு இருக்க, அவரது வாழ்க்கையின் சமயப்பணி அவருக்காக காத்து இருந்தது. சைவ சமயத்தில் நான்கு வடிவங்கள், நான்கு நிலைகள், இறைவனுடன் ஆன்மாவிற்கு இருக்கும் நான்கு உறவுகள், அடையக்கூடிய நான்கு உணர்தல்கள், ஆன்மாவின் மேம்பட்ட நிலையில் நடைபெறும் அருளின் இறக்கம் மற்றும் உலகை உண்மையாக துறக்கும் சக்தியில் இருக்கும் நான்கு அம்சங்களை பற்றி அவர் பிற்காலத்தில் இவ்வாறு எழுதினார்:§§

image§

தலைசிறந்த சித்தரான நந்திநாதா தன்னிடம் சீடனாக இருந்த சுந்தரநாதருக்கு ஆசிகளை வழங்கி, இறைவனும் ஆன்மாவும் ஒன்றாக இருக்கும் பரசிவத்தின் முடிவான அனுபவத்தினால், மனிதநேயம் தன்முனைப்பின் மாயை மீது வெற்றிகொள்ள, அத்வைத சைவ சித்தாந்தத்தை தென்னிந்தியாவில் பிரகடனம் செய்யவேண்டும் என்று அந்த திசையை நோக்கி கடினமான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

குறிப்பறிந் தேன்உட லோடுயிர் கூடிச் §

செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை§

மறிப்பறி யாதுவந் துள்ளம் புகுந்தான் §

கறிப்பறி யாமிகும் கல்விகற் றேனே. 290§§

சரியாதி நான்குந் தருஞான நான்கும்§

விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்§

பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து§

மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.1449§§

திருமூலர் எங்கே வாழ்ந்தார் என்று வரலாற்று ஆசிரியர்களிடம் கேட்டால், உங்களுக்கு ஆறு வித்தியாசமான பதில்கள் வரக்கூடும். திருமூலரின் திருமந்திரத்தின் அடிப்படையில், கி.மு. 200 யில் வாழ்ந்து, யோக சூத்திரங்களின் ஆசிரியராக இருந்த, யோகி பதஞ்சலியின் சமகாலத்தவராக, இந்த வாழ்க்கை வரலாறு, திருமூலரை குறிப்பிடுகிறது. இன்னொரு பகுப்பாய்வில், சுந்தரமூர்த்தி நாயனார் தனது நாயன்மார்களின் பட்டியலில் திருமூலரை குறிப்பிடுகிறார். சுந்தரமூர்த்தி நாயனார் கி.பி. 840 மற்றும் 864 வருடத்திற்கு இடையே வாழ்ந்தார் என்ற பொதுவான கருத்து, திருமூலர் அந்த காலத்தில் வாழ்ந்து இருக்கவேண்டும் என்பதை தெரிவிக்கிறது. மேலும் திருமூலர் தனது திருமந்திரத்தில் சிதம்பரத்தில் இருக்கும் பொன்னம்பலம் பற்றி குறிப்பிட்டுள்ளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த சிம்மவர்மன் என்கிற பல்லவ அரசனால், முதல் முறையாக பொற்கூரை வேயப்பட்டது என்பதால், திருமூலர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து இருக்கவேண்டும் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் இந்த முடிவு, திருமூலர் தனது திருமந்திரத்தில், சிதம்பரத்தை தனது தூல கண்களால் அல்லாமல் சூட்சும பார்வையால் விவரிக்கிறார் என்ற கூற்றை நிராகரிக்கிறது. ராஜா ராஜ சோழனின் தோழமையை பெற்று, கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போகர் ரிஷிக்கு காலாங்கி (திருமூலரிடம் சீடனாக இருந்தவரின் பெயர்) என்ற முனிவர் குருவாக இருந்தார் என்பதை கருத்தில் கொண்டு, அந்த காலத்தில் திருமூலர் இருந்ததாக சிலர் கருதுகிறார்கள். மேலும் சிலர் அவரது எழுத்து நடையை சுட்டிக்காட்டி, அவர் பதினோராம் நூற்றாண்டு அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் வரலாறு சர்ச்சைக்குரியது என்பது ஒருபுறம் இருக்க, இந்த தலைசிறந்த குருமார்கள் எந்த காலத்தில் வாழ்ந்தார்கள் என்பது தொடர்ந்து புதிராக இருக்கக்கூடும். §§

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் தான் இயற்றிய பெரியப்புராணத்தில் தெளிவாக பதிவு செய்துள்ள திருமூலரின் பயணங்கள், கீழிருக்கும் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சுந்தரநாதர் மட்டும் தனியாக, நேபாளத்தின் காத்மாண்டுவில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இவருக்கு 300 அல்லது 400 வருடங்கள் முன்பாக, கௌதம புத்தர் தனது தத்துவங்களுடன், நேபாளத்தில் இருந்து தென்னிந்தியா வந்தார் மற்றும் அதன் பிறகு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அந்த சிவன் கோயிலில், சுந்தரநாதர் புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் மற்றும் தனது சொந்த எதிர்காலம் பற்றி அழமாக சிந்தித்தார். கெளதமரின் வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்த சிந்தனை மேற்கொண்டு, ஊக்கத்துடன் தனது புனித யாத்திரைக்கு தயாரானார். ஆனால் அதில் ஒரு வித்தியாசம் இருந்தது. சிவபெருமான் மீது மிகவும் வலுவாக, முழுமையாக மற்றும் தீவிரமான அன்புடன் இருந்த திருமூலரின் ஈடுபாடு, பௌத்த சமயத்தில் காண முடியவில்லை. இறையன்பு ஆன்மாவில் இருக்கும் மாசுகளை அழித்து அதனை சுத்தப்படுத்துகிறது என்பதை அவர் அனுபவப்பூர்வமாக தெரிந்துகொண்டார். §§

image§

சுந்தரனாதர் இமயமலையில் இருந்து கால்நடையாக, பலவருடங்களுக்கு மேற்கொண்ட கடுமையான பயணம் பனைமரங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் முடிவடைந்தது. இந்த படத்தில் திருமூலர் நடந்து செல்லும் பாதையில், பனைமரம் ஏறுபவன் மரத்தில் ஏறி நுங்கு பறிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்§

பொன்போற் கனவில் பொரிய வறுப்பினும்§

அன்போ டுருகி அகங்கழை வார்க்கன்றி §

என்பொலோ மணியினை எய்தஒண் ணாதே. 272§§

சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை §

அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை §

புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் §

தவனச் சடைமுடித் தாமரையானே. 5§§

காத்மாண்டுவின் உயரமான பள்ளத்தாக்குகளை கடந்து, தென்கிழக்கு திசையில் முன்னேறி, இன்று வாரணாசி என்று அழைக்கப்பட்டு, சிவபெருமானின் திருத்தலமாக, ஒளியின் நகரமான காசிக்கு முன்னேறினார். அங்கே அவர் விஸ்வநாதர் கோயிலில் சிவபெருமானை தரிசித்தார். அந்த வடநாட்டு கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழக்கத்தைப் போல, அவர் தனது மகாதேவனுக்கு அருகில் சென்று, தனது சொந்த கைகளால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். இந்த வழிபாட்டின் போது, தான் நன்றாக கற்ற வேத-ஆகமங்களின் உண்மையை, தனது குருவான மகரிஷி நந்திநாதா விளக்கச்சொல்லி கேட்க, மீண்டும் இமயமலைக்கு சென்று, அவருக்கு அருகில் இருக்கவேண்டும் என்ற ஏக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த சிவலிங்கம் அவரது உள்ளத்தில் இருந்து அவரிடம் பேசத்தொடங்கி, குரு உண்மையில் அவருடன் இருந்து, அவருடன் பயணித்துக்கொண்டு இருப்பதாகவும், இந்த ஒருமையை என்றும் மாற்றமுடியாது என்றும் நினைவூட்டியது. §§

கோயிலில் நமஸ்காரம் செய்துவிட்டு, பின்னோக்கி நடந்துவந்து, நுழைவாயிலில் வலது பக்கமாக திரும்பி, நம்பிக்கை மற்றும் மனஉறுதியுடன் கிளம்பினார். சுந்தரநாதர் வடஇந்தியாவின் சமவெளிகளில் இருந்து வெளிவந்து, பல மாதங்களுக்கு கிராமத்து பாதைகள், சாலைகள் மற்றும் பலவண்ணங்களில் இருந்த நெல் வயல்களுக்கு அருகில் இருந்த பாதைகள் வழியாக தனது புனித யாத்திரையை தொடர்ந்தார். §§

தென் இந்தியாவிற்குள் நுழைதல் §

விந்தியா, ஸ்ரீ பட்வர்தன் மற்றும் காளஹஸ்தியில் சிவபெருமானை தரிசித்ததாக அவரது வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர் ஸ்ரீ காளஹஸ்தி கோயிலில் சிறிது காலம் தங்கினார். இந்த கோயில் பஞ்ச பூதங்களில் காற்றுடனும், நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவுடன் சம்பந்தப்பட்டும் இருக்கிறது. இங்கே அவர் பன்மைவாத சைவ சித்தாந்தத்திற்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் அதன் பிரபலத்தை பார்த்து, தென்னிந்திய மக்களின் மனதில் அத்வைத சைவ சித்தாந்ததின் உண்மைகளுக்கு சம்மதத்தை பெறும் தனது பணியின் அவசியத்தை உணர்ந்து இருக்கவேண்டும். அவர் சிவபெருமானின் யாவும் கடந்தத் தன்மையை உணர்ந்து இருந்தாலும், சிவபெருமானை எங்கும் மற்றும் தான் சந்திக்கும் ஒவ்வொருவரின உள்ளும் கண்டார். §§

அங்கிருந்து பூமியில் இருக்கும் மிகவும் பழமையான காக்கேசிய இனத்தவர்களான, திராவிட நாட்டு மக்களின் தமிழ்நாட்டில் உள்ள திருவிலங்காட்டிற்கு சுந்தரநாதர் சென்று, பின்னர் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார். காஞ்சிபுரத்தில் அவர் முதலில் பஞ்சபூங்களில் நிலத்துடன் தொடர்புடைய கோயிலுக்கு சென்றார், இங்கே சிவபெருமானின் குணப்படுத்தும் சக்திகள் உறுதியாக, மிகவும் சிறப்பானதாக மற்றும் பிரபலமாக இருக்கின்றன. ஒவ்வொரு கோயிலிலும் திருமூலரின் இறையன்பு அதிக வலுவடைந்து, சிவபெருமானின் மீது அவரது ஈடுபாடு அதிக முழுமை பெற்றது. இதைப்பற்றி அவர்:§§

image§

சுந்தரநாதர் தென் இந்தியாவில் தொலைதூரத்தில் இருந்த சிதம்பரத்தை வந்தடைந்தார். அவருக்கு நகரமும் அதன் செயல்பாடுகளும் பிடிக்காமல் காடுகளில் வசித்து வந்தார். அவர் ஓடைகளில் குளித்து, தரையிலும் விலங்குகள் மற்றும் பூச்சிகளை தவிர்க்க சிலசமயங்களில் மரக்கிளைகளிலும் உறங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்§

தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை §

ஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும் §

ஆத்தம்செய் தீசன் அருள்பெற லாமே. 39§§

குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும்§

நிறைந்தடை செம்பொனின் நேரோளி ஒக்கும் §

மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் §

புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. 40§§

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று §

பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின் §

றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று§

நாடுவன் நானின் றறிவது தானே. 50§§

image§

சுந்தரநாதர் தனது சூட்சும உடலுடன் இறந்த இடையனின் உடலை நெருங்கி, அந்த பிரேதத்திற்குள் மனோஉணர்வுடன் நுழைந்து, அதற்கு மீண்டும் உயிரளித்தார். அவர் ஒரு தமிழனின் உடலில் நுழைந்து முதல்முறையாக விழித்ததும், தங்களை மேய்க்கும் இடையன் மீண்டும் உயிர்பெற்று நலமாக இருப்பதை கண்ட பசுக்களின் கூட்டம் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இங்கிருந்து சுந்தரநாதர் மலையேற்றம் மூலம் சிதம்பரத்திற்கு சென்று, அங்கே நீண்டநாட்கள் தங்கியிருந்து, சிவபெருமானின் ஆனந்த தாண்டவ தரிசனத்தை பெற்றார். திருமூலர் ஆழ்ந்த தியானம் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து, உட்புறமாக தனது கவனத்தை திருப்பி, சிறந்த விரதங்களை மேற்கொண்டு, தனக்குள் நடைபெறும் நடனமாக மெய்யுணர்வை அனுபவித்தார். அவர் நுழைந்த யோக நிலைகள் காலத்தை கடந்து இருந்ததால், தில்லையில் (சிதம்பரத்திற்கு இன்னொரு பெயர்) பல்லாயிரக்கணக்கான வருடங்கள் கழித்ததாக உருவக வடிவில் எழுதியுள்ளார். §§

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்§

அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்§

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின் §

ஒப்பிலி கோடி யுகம்இருந் தேனே. 74§§

ஒரு நாள் அவர் வழக்கமாக நடந்து செல்லும் போது, ஒரு அடர்த்தியான காட்டை அடைந்தார். அங்கே சுந்தரநாதரின் கால் ஒரு சிவலிங்கத்தின் மீது தடுக்கியது. அதனால் அவர் உடனடியாக தரையில் விழுந்ததுவிட்டார். அது தனது கருங்கல் அடித்தளத்துடன் ஒரு வலுவான லிங்கமாக, சுமார் ஐம்பது சென்டிமீட்டர் உயரத்துடன் இருந்தது. சுந்தரநாதரின் வழிபாடு அதிக முழுமையாக, வலுவான ஒருமுகச்சிந்தனையுடன் தன்னையே மறந்தநிலையில் இருந்ததால், ஒற்றுமையின் ஒரு ஆற்றல்மிக்க அனுபவத்தில், லிங்கத்துடன் ஒன்றி இருக்கும் உணர்வை பெற்றார். இந்த நான்-கடவுள் அனுபவம் அந்த லிங்கத்திற்கு மேலும் சக்தியை வழங்கியது. இன்று முப்பத்தி ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் சிதம்பரம் கோயில் வளாகத்தில், தனது சொந்த கர்ப்பக்கிரகத்தில் அமைந்துள்ள அந்த லிங்கத்தின் மீது வழிபாடு நடத்தப்படுகிறது. §§

ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்§

ஆய பசுவும் அடலே றெனநிற்கும்§

ஆய பலிபீடம் ஆகுநற் பாசமாம்§

ஆய அரனிலை ஆய்ந்துகொள் வார்கட்கே. 2411§§

மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்§

மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்§

மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்§

மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே. 1726§§

சுந்தரநாதருடன் சக-மாணவராக இருந்த வியாகிறபாத முனிவர், அந்த சுயம்பு லிங்கத்தை திருடர்களிடம் இருந்து காப்பாற்ற, முட்களுடன் சதுப்புநிலத்தில் செழிப்பாக வளரும் தில்லை மரங்களின் (Excoecaria agallocha) புதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கூடாரத்தில், அதனை ஸ்தாபனம் செய்து, ஒரு சிறிய குளத்திற்கு அருகே தனது சாதனா மற்றும் வழிபாட்டை நடத்தினார் என்றும் அந்த குளம் பிற்காலத்தில், கோயிலில் நுழைவதற்கு முன்பாக பக்தர்கள் தங்கள் கை கால்களை கழுவிக்கொள்ளும் கோயில் குளமாக மாறியது என்றும் சிதம்பரம் கோயில் தல புராணம் குறிப்பிடுகிறது. §§

இறக்காமல் மறுபிறவி எடுத்தல் §

அதிக செயல்பாடுகள் இல்லாமல் மந்தமாக இருந்த சிதம்பரம் கிராமத்தில் இருந்து கிளம்பி, காவேரி ஆற்றை கடந்து, திருவாவடுதுறை வந்து அடைந்தார். இந்த சிவதலத்தில் திருமூலரின் ஜீவ சமாதி அமைந்து இருக்கிறது. ஆனால் இன்று அந்த ஆதினத்தில் இருக்கும் நிர்வாகிகள், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதைப் பற்றிய உண்மை யாருக்கும் தெரியாது என்று கூறுகிறார்கள். இந்த தலத்தில் சிவபெருமான் அவரை தன்னுடன் வரும்படி அழைத்து இருக்கிறார், ஆனால் அவருக்கு அந்த இடத்தை விட்டு செல்ல மனமில்லை. §§

காவேரி நதிக்கரையில் ஒரு நாள் நடந்து சென்றுகொண்டு இருக்கும் போது, இறந்து இருந்த ஒரு இடையனுக்கு அருகில் ஒரு பசுக்களின் கூட்டம் அழுதுக்கொண்டு இருப்பதைக் கண்டு மனம் பதறினார். பசுக்களின் துயரம் கண்டு மனம் இரங்கிய சுந்தரநாதர், அவற்றின் துயர்துடைக்க நினைத்தார். சித்த யோகத்தில ஒரு சிறந்த வல்லுனராக இருந்ததால், அவர் அந்த இடையனின் உடலுக்குள் செல்ல ஒரு திட்டம் தீட்டினார். §§

அவர் தனது தூல உடலை மறைக்க இடம் தேடிய போது, அவருக்கு உட்புறமாக காலியாக இருக்கும் ஒரு மரக்கட்டை கிடைத்தது. அவரது உடல் பாதுகாப்பாக இருக்க, அந்த மரக்கட்டைக்குள் தவழ்ந்து சென்று, மனதை வசியம் செய்து உடலை செயலற்று வைத்திருக்கும் மெய்மறதி நிலைக்கு சென்று, தனது சூட்சும உடலுடன் வெளியே வந்து, இறந்திருந்த இடையன் மூலனின் உடலுக்கு அருகில் சென்று, அந்த பிணத்தின் மீது சாய்ந்து, அதனுள் நுழைந்து அதற்கு மீண்டும் உயிர் வழங்கினார். அவர் மூலனின் உடலில் நுழைந்து விழித்ததும் முதலில், அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பசு தனது முகத்தை பார்த்துக்கொண்டு இருப்பதையும், அது தன் பெரிய கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிப்பதையும் கண்டார். இதைக்கண்ட மற்ற பசுக்கள் அனைத்தும் தங்களுக்கு பிரியமான மூலனை சுற்றி நின்று, தங்களது கூர்மையான நாக்குகளை கொண்டு மூலனின் முகம் மற்றும் உடலை நக்கி சந்தோஷத்தில் பலமாக உக்காரமிட்டன. சிறிது நேரம் கழித்து, அவை வழக்கம் போல புல்லை மேயத் தொடங்கின. இதை கண்ட சுந்தரநாதரின் இதயம் கனிந்தது. §§

மாலை பொழுது சாய்ந்ததும், பசுக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கின. அந்த பசுக்கள் புதிய மூலனை வழிநடத்தி சென்றன. மூலனின் மனைவி வாசலில் காத்து இருந்தாள். அவள் தனது கணவனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு அழத்தொடங்கினாள். தான் அவளது கணவன் இல்லை என்றும், அவளது கணவன் இறந்துவிட்டான் என்றும் சுந்தரநாதர் அவளிடம் கூறி, வீட்டில் நுழையாமல் வழியில் தான் கண்ட ஒரு மடத்திற்கு சென்றுவிட்டார். §§

image§

திருமூலர் ஒரு குகையில் தனியாக, பலவருடங்களுக்கு சமாதிநிலையில் இருந்ததாக புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், அந்த வருடம் முழுவதும் செய்த தியானத்தின் விளைவாக ஒரு பாடலை, ஒரு பனை ஓலைச் சுவடியில் ஒரு எழுத்தாணியின் மூலம் எழுதுவார். இவ்வாறு அவர் மிகவும் பொறுமையாக சூட்சும ஞான உரையாக விளங்கும் திருமந்திரத்தை இயற்றினார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

தனது கணவனின் விசித்திரமான நடவடிக்கையைப் பற்றி, மூலனின் மனைவி ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தாள். அவர்கள் மடத்தில் மூலனின் உருவில் இருந்த சுந்தரநாதரிடம் விசாரிக்க தொடங்கினார்கள். ஆனால் சுந்தரநாதரின் புலமை மற்றும் சமயோசித புத்தியை பார்த்து வியந்தனர். மூலனின் மனைவி குறிப்பிட்டதைப் போல, அவரது மனநலம் பாதிக்கப்படவில்லை என்றும், அவர் சிவயோகியை போல காட்சி அளிக்கிறார் என்றும், அவரது சிறப்பை தங்களால் மதிப்பிட முடியவில்லை என்றும் ஊர் பெரியவர்கள் மூலனின் மனைவிடம் கூறி, அந்த மடத்தை விட்டுக் கிளம்பினர். மூலனின் மனைவி குழம்பி நின்றாள், ஆனால் தனது கணவனிடம் மாற்றம் இருக்கிறது என்பதை விரைவில் அவளும் புரிந்துகொண்டாள். கிராமவாசிகள் இடையனாக இருந்த அந்த திருமூலரை, “புனிதமான மூலன்” என்று அழைக்க ஆரம்பித்தனர். திருமூலருக்கு வாழ்க்கை மற்றும் மரணத்தில் இருந்த மர்மங்கள் விசித்திரமாக தோன்றவில்லை, மற்றும் அவர் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை பற்றியும், வாழ்க்கையின் இந்த அடிப்படை உண்மைக்கு மக்கள் உரிய மதிப்பு அளிக்காதது பற்றியும் எழுதினார்:§§

வாசந்தி பேசி மணம்புணர்ந்து அப்பதி§

நேசந் தெவிட்டி நினைப்பொழி வார்பின்னை§

ஆசந்தி மேல்வைத்து அமைய அழுதிட்டுப்§

பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னார்களே. 150§§

வைச்சகல் வுற்றது கண்டு மனிதர்கள்§

அச்சக லாதென நாடும் அரும்பொருள்§

பிச்சது வாய்ப்பின் தொடர்வுறு மற்றவர்§

எச்சக லாநின் றிளைக்கின்ற வாறே. 156§§

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே §

விழக்கண்டும் தேறார் வழியிலா மாந்தர் §

குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில் §

விழக்கண்டும் தேறார் வியனுல கோரே. 177§§

பாலன் இளையன் விருத்தன் எனநின்ற§

காலங் கழிவன கண்டும் அறிகிலார்§

ஞாலம்கடந்து அண்டம் ஊடறுத் தான்அடி§

மேலுங் கிடந்து விரும்புவன் நானே. 181§§

திருமூலர் தான் புல்வெளிக்கு அருகில் விட்டுச்சென்ற உடலை தேடினார். உட்புறமாக காலியாக இருந்த மரக்கட்டையை தேடிப்பிடித்து, அதனுள் பார்த்த போது அவரது உடலை காணவில்லை. அங்கே அதைப்பொன்ற மரக்கட்டைகளில் பல நாட்களுக்கு தேடினார். இறுதியாக விரக்தி அடைந்து, தனது வடநாட்டு உடலை விட்டுச்சென்ற அந்த மரக்கட்டை மீது பத்மாசனத்தில் உட்கார்ந்துக்கொண்டார். யோக சமாதியின் ஆழ்த்திற்கு சென்று, அவர் தனது குருவான மகரிஷி நந்திநாதாவை தொடர்புக்கொண்ட போது, தமிழ் பேசும் இடையனின் உடலுடன் தன்னை நன்றாக பொருத்திக்கொண்டு, தமிழையும் சரளமாக பேசத்தொடங்கியதை கண்ட சிவபெருமான், தனது அழிக்கும் சக்தியை பயன்படுத்தி அந்த வடநாட்டு உடலின் அணு அமைப்பை அழித்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டார். சித்தாந்தம் மற்றும் வேதாந்தத்தை நிரந்தரமாக இணைத்து, தமிழ் பேசும் மக்களுக்கு சைவ ஆகமங்கள் மற்றும் புனிதமான வேதங்களின் உண்மைகளை, தன்னால் இனி சிறந்த முறையில் தரமுடியும் என்பதை உணர்ந்துக்கொண்டார். தனக்கு சிவபெருமான் தந்த குறிக்கோள் பணியை பற்றி, அவர் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார்:§§

image§

காலத்தால் ஏற்பட்ட மாற்றங்களினால், நாம் திருமூலரின் நூற்றுக்கணக்கான சீடர்களின் வழித்தடங்களை இழந்து இருக்கிறோம். இமயமலையில் இருந்து வந்த ரிஷி பெங்களூரில் தோன்றும் வரை, கி.மு. 200 முதல் கி.பி. 1700 வரை, வாழ்ந்த குருமார்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாறு நம்மிடம் இல்லை. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

பின்னைநின்று என்னே பிறவி பெறுவது§

முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்§

என்னைநன் றாக இறைவன் படைத்தனன்§

தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே. 81§§

3,000 வருடங்கள் மேற்கொண்ட யோகம் §

ரிஷி திருமூலர் திருவாவடுதுறைக்கு திரும்பி, கோயிலின் மேற்கே இருந்த புனிதமான அரசமரம் அல்லது போதி மரத்து அடையில், பத்மாசனத்தில் அமர்ந்து சிவபெருமானை வழிபடத் தொடங்கினார். இந்த 3,000 வருடங்களும், இறுதி முக்தியான மோக்ஷத்தை பெறுவதற்காகவும், காத்திருக்கும் சிவபெருமானின் அருளை தேடிப்பிடிக்கவும், உச்சந்தலை வரை குண்டலினி எழுச்சி பெற்ற காரணத்தால், சாட்சி சக்கரங்களை உடைத்துக்கொண்டு வந்த போது நாடிகள், பிராண சக்திகள், ஞான ஒளிகள், மந்திரங்கள் மற்றும் யந்திரங்களின் பல விரிவாக்கங்களை வெளிக்கொண்டு வந்த ஒரு ஆழமான யோகம் மற்றும் உட்புற பாதையாக விளங்கியது. இந்த உட்புற தேடல்களைப் பற்றி, இந்த மிகப்பெரிய யோகி திருமந்திரத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான மறைஞான பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். §§

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்§

டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்§

துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்§

பயனிது காயம் பயமில்லை தானே. 605§§

மூலத்து மேலது முற்சது ரத்தது§

காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில் §

மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற §

கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. 627§§

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே§

சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்§

ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்§

கட்டி இருப்பிடங் காணலு மாகுமே. 768§§

மேலெறிந் துள்ளே வெளிசெய்த வப்பொருள்§

கால்அறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்§

பார்றிந் தண்டஞ் சிறகற நின்றது§

நானறிந்து உள்ளேழ நாடிக்கொண் டேனே. 1017§§

அவர் வருடத்திற்கு ஒரு முறை தனது சமாதியில் இருந்து வெளிவந்து, தனது தியானங்களில் இருந்து ஒரு பாடலை வழங்கி, அதன் அர்த்தத்தைப் பற்றி ஒரு சிறிய விளக்கம் வழங்கியதாக புராணக்கதைகள் கூறுகின்றன. அவர் மூவாயிரத்திற்கும் மேலான பாடல்களை எழுதியதால், அவர் மூவாயிரத்திற்கும் மேலான வருடங்கள் வாழ்ந்து, இரண்டு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக பிறந்து இருக்கவேண்டும். வேறு சிலர் நாளுக்கு ஒன்று என்று 3,000 நாட்களுக்கு பாடல்களை வழங்கியதாகவும், இந்த 3,000 பாடல்களில் அதிக அளவிலான ஞானம் அடங்கி இருப்பதால், 3,000 வருடங்கள் என்று பாடல் வடிவில் புராணக்கதை தோன்றியதாகும் கூறுகின்றனர். ஒவ்வொரு பாடலில் இருக்கும் நான்கு வரிகளையும் முழுமையாக புரிந்துகொள்ள ஒரு வருடத்தின் ஆழமான தியானம் தேவைப்படும். §§

வரலாறு என்னவாக இருந்தாலும் திருமூலரின் புனிதமான உரை நிலைத்து இருந்து, சுமார் 2,200 ஆண்டுகளுக்கு வளர்ச்சி பெற்று இருக்கிறது. இன்றும் பல புதிய மொழிபெயர்ப்புக்கள் மற்றும் பதிவுகள வெளியிடப்படுகின்றன, மற்றும் ஆயிறக்கணகான அமைப்புக்கள் அவற்றை தனது தத்துவ மற்றும் மொழியியல் பொக்கிஷங்களில் ஒன்றாக கருதுகின்றன. அதில் இறுதியாக இருக்கும் பாடல்கள் எங்கும் இருந்து எதிலும் வியாபித்து இருந்து, சொற்களால் விளக்கமுடியாதவராக இருக்கும் சிவபெருமானைப் பற்றி எடுத்துரைக்கிறது. §§

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி§

ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்§

கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்§

ஒழிந்திலகு ஏழுலகு ஒத்துநின் றானே. 3034§§

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்§

மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்§

தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்§

கண்ணவ னாகிக் கலந்துநின் றானே. 3037§§

புவனா பதிமிகு புண்ணியன் எந்தை§

அவனே உலகில் அடர்பெரும் பாகன்§

அவனே அரும்பல சீவனும் ஆகும்§

அவனே இறையென மாலுற்ற வாறே. 3039§§

உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்§

விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்§

மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்§

கண்ணின்று இயங்கும் கருத்தவன் தானே. 3040§§

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்§

தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்§

பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை§

ஊரும் சகலன் உலப்பிலி தானே. 3045§§

சைவ சித்தாந்த தத்துவத்தில் திருமந்திரத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தப்படுத்துவது கடினமாக இருக்கும். இது “முடிவுகளின் முடிவாக விளங்கும்,” சித்தாந்தம் பற்றி முதலில் வந்த, முழுமையான அறிக்கையாக விளங்குகிறது. இது சைவ சித்தாந்தத்தின் நுணுக்கமான இறையியல் பற்றி இதுவரை எழுதப்பட்ட, அதிக முழுமையான மற்றும் ஆழமான விளக்கமாக இருக்கவேண்டும், மற்றும் இது நந்திநாத சம்பிரதாயத்தின் தொடக்கத்தில் இருந்த குருமார்களின் மிகவும் விரிவான உரைகளாக விளங்குகின்றன. தென்னிந்தியாவின் மற்ற சைவ சாஸ்திரங்களுடன் சேர்த்து பார்க்கும் போது, பன்னிரண்டு திருமுறைகளில் அல்லது தெய்வீக புத்தகங்களில் திருமந்திரம் பத்தாவதாக இடம் பெற்று இருக்கிறது. §§

தமிழ் மொழியில் இருக்கும் இலக்கியங்களின் தொகுப்பாக திருமுறை விளங்குகிறது. இந்த இலக்கியங்கள் பெரும்பாலும், பல்வேறு சைவத் துறவிகளால் பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டு, பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் ஒன்று சேர்க்கப்பட்டன. அவை அத்வைத கோட்பாடுகள் மற்றும் ஆத்ம ஞானத்தில் தொடங்கி நெஞ்சை உருக்கும் சிவபெருமானின் துதிப்பாடல்கள் வரை, ஆன்மீக வெளிப்பாடுகளின் அனைத்து வடிவங்களிலும் காணப்படும் ஒரு சைவ கோட்பாடு மற்றும் பாடல்களை உள்ளடக்கியுள்ளது. திருமுறை சைவ சமயத்தின் பக்திப்பிரிவின் உயிர் மூச்சாகக் கருதப்படுகிறது. இது தென்னிந்திய கோயில்கள் மற்றும் உலகெங்கும் சைவ வழிபாடு இருக்கும் மற்ற தலங்களில் தினமும் பாடப்பட்டு வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் ஆகமங்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திருமுறையில் திருமந்திரத்தைத் தவிர அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாகர் போன்ற சமய ஆச்சாரியார்களின் தேவாரப்பாடல்கள், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் மற்றும் மற்ற படைப்புக்கள் அடங்கியுள்ளன. §§

ரிஷி திருமூலர் தனது வாழ்க்கை மற்றும் படைப்புக்களில் தத்துவப் பிரிவுகளை அழித்து, இராஜ்ஜியங்கள் மற்றும் அதன் மக்களிடையே அதிகம் தேவைப்பட்ட ஒற்றுமையை கொண்டு வந்தார். இந்த ஒற்றுமை உருவாக்கிய ஒரு ஒருங்கிணைந்த கலாச்சாரம், தென்னிந்தியா முழுவதும் எண்ணற்ற சிவன் கோயில்கள் மற்றும் இலங்கையில் 1,008 சிவன் கோயில்கள் உருவாக வழிவகுத்தது. பிரபத்தி என்கிற முழுமையான அர்ப்பணிப்புடன் ஐக்கியத்தில் இருக்கும் சூட்சும ஞான யோகமான அத்வைத சைவ சித்தாந்தத்தின் தொடர்ந்து நிலைத்து இருக்கும் தத்துவம், மக்களை திருப்திப்படுத்தி செல்வம், ஸ்திரமான அரசாங்கம் மற்றும் கலாச்சார செழிப்பை கொண்டு வந்தது. அந்த காலத்தில் எங்கும் அமைதி நிலவியது. ஒவ்வொரு சிவலிங்கத்திற்கும் தினமும் அபிஷேகம் நடத்தப்பட்டது. பொதுவாக கடவுளுக்கு வழங்கப்பட்ட மரியாதை ஒவ்வொரு யோகி மற்றும் ரிஷிக்கு வழங்கப்பட்டது. §§

ரிஷி திருமூலரிடம் மலங்கன், இந்திரன், சோமன், பிராமன், ருத்திரன், காலாங்கி மற்றும் கஞ்சமலையான் என்று ஏழு சீடர்கள் இருந்தார்கள். அதில் ஒவ்வொருவரும் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட மடங்களை தோற்றுவித்து ஆகம பாரம்பரியங்களை பரப்பினார். காலாங்கியின் வரிசையில் ரிகாமா, மலிகைதேவா, நாதந்தார், போகதேவா (இவரை சிலர் பழனியின் போகரிஷி என்று குறிப்பிடுகிறார்கள்) மற்றும் பரமானந்தா ஆகிய முனிவர்கள் வந்தார்கள். இவை அனைத்தும் நமக்கு திருமந்திரத்தில் இருந்து தெரிய வருகிறது. ஆனால் இது மிகவும் சிறிய தகவலாக இருக்கிறது, மற்றும் அதன்பிறகு அவர்கள் மேற்கொண்ட அதிகார மாற்றம் மற்றும் கி.மு. 2,200 மற்றும் கி.பி. 1710க்கு இடையே வாழ்ந்த குருமார்களின் முந்தைய தலைமுறைகள், மற்றும் அவர்கள் செய்த சாதனா மற்றும் மிகப்பெரிய தபஸ் பற்றிய எந்த தகவலையும் வரலாறு வழங்கவில்லை. கைலாச பரம்பரை அந்த மறைவான வருடங்களில் நிலைத்து இருந்து, தற்போதும் செயல்பட்டு வருகிறது என்பது மட்டுமே நமக்கு தெரியவருகிறது. குருமார்கள் தங்களது குருமார்களைப் பற்றி மற்றும் அவர்களது குருமார்களின் குருமார்களைப் பற்றிக் கூறியவை, நம்மை நவீன யுகத்தின் முதல் தெளிவான கதைக்கு கொண்டு வருகிறது. அந்த கதையில் வரும் சித்தரின் பெயர் நமக்கு தெரியவில்லை மற்றும் அவரை இமயமலையில் இருந்து வந்த ரிஷியாக நாம் அறிகிறோம். §§