குருமார்களின் சரித்திரங்கள்

Page 39 URL:§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/39_guru06_02.html§

குருமார்களின் சரித்திரங்கள்§

அத்தியாயம் இருபத்தி-நான்கு§

கவாயில் தனது வீட்டில் §

மாஸ்டர் தான் வாங்கிய பசுமையான ஏழு ஏக்கர் சொத்தை சிவாசிரமம் என்று பெயரிட்டு அதில் வசிக்க ஆரம்பித்தார். ஒருவர் தனது கடந்த கால நினைவுகள் மற்றும் சொத்துக்களில் இருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில், ஒரு புதிய பகுதி மற்றும் சிறிய தீவிற்கு குடிபோவது, அந்த காலத்தில் ஒரு தைரியமான முடிவாக இருந்தது. இதன் மூலம் அவர் நீண்ட நாட்களாக தனது ஆன்மீக தலைமையகத்திற்கு மேற்கொண்ட தேடுதல் வேட்டை நிறைவு பெற்றது. §§

பல வருடங்களுக்கு முன்பு, நாங்கள் கவாய் வந்து இருந்தோம். ஆனால் அதன் பிறகு நாங்கள் அதை விட்டு கிளம்பவில்லை. நான் கிழக்கு மற்றும் மேற்கில் இருந்த சீடர்களுக்கு அருகாமையில் இருந்து கொண்டு, பெரும்பாலான உலகில் இருந்து விலகி தனியாக இருக்க விரும்பியதால், நான் உலகில் அதிக ஒதுக்குப்புறமாக இருந்த கவாய் தீவை தேர்ந்து எடுத்தேன். ஆமாம், எங்களுக்கு வெளிப்புற வாழ்கையை விட உட்புற வாழ்க்கை மிகவும் முக்கியமாக இருந்தது. நாங்கள் சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க், சிங்கப்பூர் அல்லது புது டில்லியில் இருந்தால், பெரும்பாலும் வெளியீடுகள் மற்றும் இணையம் மூலம் அதிக அளவு மக்களை சென்றடையும், தியானவான்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆழ்சிந்தனை சமூகமாக தற்போது செய்யும் வேலையை செய்ய முடியாது. கவாய் ஒரு ஆன்மீக இடமாக விளங்கி, அங்கிருக்கும் புனிதமான வையாலேலே மலை சிகரம், மாசுபடாத காற்று மற்றும் கடலில் இருந்து வெளிவரும் குணப்படுத்தும் சக்திகளின் சுழலாக இருக்கிறது. §§

எதிர்காலத்தில் வரவிருந்த இன்னர்சர்ச் திட்டங்களுக்கு இணைந்து செயல்பட மற்றும் கவனமாக திட்டமிட்ட, அவர் விர்ஜினியா சிட்டி, சான் பிரான்சிஸ்கோ மற்றும் கவாய் தீவில் இருந்த மூன்று மையங்களுக்கு இடையே ஒரு தொலை தட்டெழுத்து அமைப்பை நிறுவினார். இந்த மாபெரும் உலோக தட்டச்சு நிலையங்கள் யாத்திரை திட்டமிடுவதில் ஒரு பெரிய தெளிவை கொண்டு வந்து, கடல் கடந்து தொடர்பு கொள்ள வழிவகுத்து, தேவாலயத்தின் பல நடவடிக்கைகளை எளிமையாக்கியது. அது அன்றைய மின்னஞ்சலாக விளங்கியது, மற்றும் ஒரே சமயத்தில் இருவர் அல்லது அதற்கு மேலானோர் ஆன்லைனில் இருந்தால், உடனடி தகவல் பரிமாற்றத்திற்கும் வழி வகுத்தது. §§

ஷும் மொழியில் மாமாடீ என்றும் சிலசமயங்களில் மதேரே (சற்குரு என்று பொருள்) அழைக்கப்பட்ட மாஸ்டர், தரையில் அமர்ந்துக்கொண்டு நீளமான தகவல்களை (அப்போது ஆங்கில பெரிய எழுத்துக்கள் மட்டுமே இருந்தன), ஒரு பேப்பர் டிக்கர் டேப்பில் ஆஃப்லைன் முறையில் தட்டச்சு செய்வார். லட்சக்கணக்கான சின்னஞ்சிறிய வட்டவடிவ துளைகளால் துளைக்கப்பட்ட, பல நூறு அடிகள் நீளமான நாடாக்கள், பல நாற்பது கேலன் நெகிழி உருள்தொட்டிகளை நிரப்பி இருந்தன. இந்த நாடாக்கள், தொலைப்பேசி கட்டணம் மிகவும் குறைவாக இருந்த காலத்தில், மீண்டும் இயந்திரத்தில் நுழைக்கப்பட்டு 300 பாட் வேகத்தில், அவரது மடவாசிகளுக்கு பல மணி நேரங்கள் அனுப்பப்படும். இந்த தகவல்கள் மடத்தில், ஒரு இயந்திரத்தில் இருந்த டிராக்டர்-பீட் பேப்பர் வழியாக வெளிவந்தன. அவர் தனது மடவாசிகளுக்கு எழுதிய தகவல்களில், அவர்கள் தங்களது ஆத்ம ஞான குறிக்கோளை நோக்கி செயல்படுவதை ஷும் மொழியில் அறிவுறுத்தும், அருள்ஞானம் நிரம்பிய ஒரு தகவலை இங்கே காணலாம். §§

image§

1970 ஆம் ஆண்டு, மாஸ்டர் தனது வெப்பமண்டல கவாய் மடாலயத்தில், ஒரு பிரம்பு நாற்காலியில் பல வாரங்கள் அமர்ந்து, தன்னிச்சையாக பன்னிரண்டு மணி நேரங்களுக்கு ஆன்மீக உபதேசங்களை அறிவுறுத்தினார். அதன் ஒலிப்பதிவு, பிற்காலத்தில் தி மாஸ்டர் கோர்ஸ் என்ற பெயரில், அவரது முக்கிய கற்பிக்கும் சாதனமாக மாறியது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கோயிலில் இருக்கும் நாட்யாவிற்கு வழங்கப்படும் தகவல் §

செப்டம்ர் 6, 1970§

அனுப்புநர் மதேரே §§

நேற்று நமது நேரப்படி சுமார் ஒரு மணி அளவில் ஷும்சிகா மற்றும் பாதுகாப்பாக லிஹுவுடன் (ஹவாய் மொழியில் உடல் சிலிர்ப்பு) நான் வந்து சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஒரு 747 விமானத்தில் மேற்கொண்ட பயணம் அருமையாக இருந்தது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து சிறப்பாக ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். அவை நினைவில் இருந்து நீங்காமல் நிலைத்து இருக்கின்றன. மெர்சி (நன்றி).§§

நாம் நமது வேலை தொடர்பாக வரும் பதினைந்தாம் தேதி, குடும்பங்களுடன் நடத்தும் சந்திப்புக்களை இப்பொழுதே திட்டமிடத்தொடங்குவது நல்லது. அடுத்த லூவாவ் மற்றும் இது போல மேலும் பல விஷயங்களை பற்றி இன்று விவாதிக்க வேண்டியுள்ளது. குடும்பங்களுடன் நடைபெறும் சந்திப்பும் லூவாவ் விருந்தும், இனிமேல் கோயிலில் நடைபெறும். அதனால் நாம் அதைப்பற்றி திட்டமிட ஆரம்பிக்கலாம். §§

இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள். மூலிங்ஷும் பாடத்தில் கடினமாக பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஒவ்வோருவரும் சில வாக்கிய வரைபடங்களை உருவாக்கி எனக்கு அனுப்புங்கள். இதன் மூலம் உங்களுடன் நானும் கற்றுக்கொள்ளலாம். §§

இங்கே இன்று வானிலை சிறப்பாக இருக்கிறது. சூரியன் நன்றாக பிரகாசிக்கிறது. நதி நிரம்பி ஓடுகிறது. இதை எல்லாம் பார்க்கும் போது, நம் எதிர்கால சந்ததிகள், எல்லா உலகங்களிலும் செழிப்பாக இருக்கப்போகும் நாளை நான் நினைவுக்கூர்கிறேன். §§

ஷும்சிகா பீமா ஊ பசெனம் ஷும்மாலே §§

ஈகைஃப் ஊ எம்கைஃப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் குறிக்கோளை என்றுமே உங்களது தினசரி நிகழ்வுகளின் நினைவு அணுவின் மீது நிலைத்து வைத்திருங்கள். கைஃப் ஓ ஈகைஃப் ஊ எம்கைஃப்.§§

என்றும் அன்புடன், உங்கள் மாமாடீ§§

உலகம் சுற்றும் குரு §

பெரும்பாலும் மாஸ்டரின் கவனம் நெவாடாவில் இருந்து ஹவாய் குடிபுகுவதில் இருந்தாலும், மாஸ்டர் தனது பயண-ஆய்வு திட்டங்களை தொடர்ந்து நடத்தி, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 25 மாணவர்களையும், நவம்பர் மாதத்தில் மேலும் 29 மாணவர்களை டஹிடி மற்றும் சிலோனிற்கும் அழைத்து சென்றார். அவர் இரண்டாவது முறையாக யாழ்ப்பாணம் மேற்கொண்ட பயணம், அவரது சைவ சமய அடிப்படைகள் மற்றும் யோக சுவாமியின் சீடர்களுடன் அவரது உறவை மேம்படுத்தியது, மற்றும் அவருடன் பயணம் செய்தவர்கள் சைவ கோயில் வழிபாடு மற்றும் திருவிழாக்களில் மூழ்கினார்கள். அவர் கொழும்பில் இருந்த போது,பெளத்த சமயத்தின் தியான மையம் வழங்கிய அழைப்பை ஏற்றுக்கொண்டு, அங்கே கூடியிருந்த பெளத்த சமயத்தவர்களுக்கு, ஷும் மொழி மற்றும் ஆங்கில மொழி கலந்து உரை நிகழ்த்தினார். அது முழுவதும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. §§

டிசம்பர் மாதத்தில் தனிமையை நாடி, ஒன்பது நாட்கள் நடைபெற்ற மூன்றாவது யாத்திரையில் ஹவாய், மௌவி மற்றும் ஓஹு தீவுகளும் அடங்கி இருந்தன. கவாய் தீவின் சிவாசிரமத்தில் இருந்த நாட்களில், அவர் தினமும் ஹைபிஸ்கஸ் அறையில் சாதகர்களை ஒன்று திரட்டினார். அவர் சுத்தமான வெள்ளை உடையில், நன்றாக நெய்யப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய பிரம்பு இருக்கையில் அமர்ந்துக்கொண்டு பதிவு செய்த, பல மணிநேர ஊக்கமளிக்கும் உரைகளை, பின்னர் நெவாடாவில் இருந்த அவரது மடவாசிகள் தி மாஸ்டர் கோர்ஸின் ஆறாவது பதிப்பாக, அவற்றை ஒன்று சேர்த்து, அச்சிட்டு தொகுத்து வழங்கினார்கள். ஒலி நாடாவில் பன்னிரண்டு ஒரு மணிநேர பாடங்களாக இருந்த அந்த பதிவு, பல வருடங்களுக்கு அவர் கற்பித்த பாடங்களுக்கு முக்கிய கருவியாக விளங்கியது. §§

கவாய் தீவில் இருந்த தனது வீட்டில் மாஸ்டர் குடி புகுந்த பிறகு, அவர் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு, தனது மற்ற இரு மடங்களுக்கு மாதம் ஒரு முறையும், தியான வகுப்புக்கள் மற்றும் பொது மக்களுக்கு சில வகுப்புக்களை நிகழ்த்த பெரும்பாலும் வாரம் ஒரு முறை ஹானோலுலு சென்றுகொண்டு இருந்தார். அந்த பழைய விடுதியை புனர்நிர்மாணம் செய்ய ஒரு பெரிய திட்டம் உருவாகியது, மற்றும் விரைவில் 1929 வருடத்து சொத்தை தீவிரமாக புதுப்பிக்கும் முயற்சியை மேற்கொள்ள, ஒரு சீடர்கள் குழு கவாய் தீவிற்கு விமானத்தில் வந்து இறங்கினார்கள். சுமார் மூன்று வருடங்களுக்கு ரம்பங்களின் கீச்சிடும் ஒலியும், சுத்தியலால் உடைக்கும் சத்தமும் பழகிவிட்டன. அவர் புதிய அறைகளுக்கு தி பேலஸ் ஆஃப் தி நூன்டே சன், தி ரியோகன், பீகாக் கோர்ட் மற்றும் ஹைபிஸ்கஸ் ரூம் என்று அந்த நாட்டில் பரிச்சயம் இல்லாத பெயர்களை வழங்கினார். அவர் அந்த காலகட்டத்தில் பயணங்களுடன் புதிய மற்றும் தொடர் வெளியீடுகள் தொடர்பான பணிகள் மட்டுமில்லாமல் தனது வீட்டை சீரமைக்கும் பணியிலும் அதிக உற்சாகத்துடன் ஈடுபட்டு இருந்தார். அவர் எப்போதும் அதை ஒரு நிறுவனமாக கருதாமல், குருவின் வீடாக கருதினார். §§

மடவாசிகள் வெப்பமண்டல செடிகளை தங்கள் தோட்டத்தில் பயிரிட்டனர். அவர்கள் மடத்தின் பால் தேவையை பூர்த்தி செய்ய, அந்த மாநிலத்தில் முதல் முறையாக டோகன்பர்க் ஆடுகளை இறக்குமதி செய்தனர். மாஸ்டர் குதிரைகளை வாங்கி, இந்த புத்திசாலி விலங்குகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை கவனிக்க இளம் துறவிகளுக்கு கற்றுக்கொடுத்து, குதிரை சவாரி மற்றும் குதிரைகளில் பீப்பாய்களை வேகமாக சுற்றி வரும் போட்டிகளையும் கற்றுத்தந்தார். பெண் குதிரைகளுக்கு ஏற்ற ஆண் குதிரைகளை வாங்கி கருத்தரிக்கும் சடங்கு மற்றும் பிறப்பை கவனிக்கவும், இயற்கையின் வழிகள் பற்றிய தங்கள் புரிதலை மேம்படுத்திக்கொள்ளவும் பிரம்மச்சாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதைப்போல குருதேவா மடத்தில் சிறிதளவு இயற்கை சூழலை சேர்ப்பதற்காகவும், பால் மற்றும் மற்ற உபயோகமான பொருட்களுக்காகவும் மாடுகளை வாங்கினார். §§

1972 ஆம் ஆண்டு இந்திய யாத்திரையின் போது மாஸ்டருடன் சேர்ந்து 75 சாதகர்கள் ஹவாய், ஜப்பான், தாய்லாந்து, இலங்கை (அது அப்போது குடியரசாக மாறி பெயர் மாற்றம் பெற்று இருந்தது), இந்தியா, இரான், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்கள். அவர் அவர்களை சைவ சமய கோயில் வழிபாட்டின் மர்மங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்தினார், மற்றும் அவர் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் போது வழக்கமாக செய்ததை போல, இந்த பயணத்தின் போது இந்தியாவின் மகான்கள் மற்றும் யோகிகள், தர்மஷாலாவில் தலாய் லாமா, நேபாளத்தில் பெளத்த சமய லாமாக்கள், மாஸ்கோவில் ஆச்சாரமான ரஷ்ய மதகுருமார்கள் என்று தனது சீடர்களை பல்வேறு நாடுகளின் ஆன்மீக தலைவர்களை சந்திக்க அழைத்து சென்றார். §§

இதைப்போன்ற முக்கியமான சந்திப்புக்களுக்கு மத்தியில், மாஸ்டர் தனது எளிமையான நகைச்சுவை உணர்வை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். தலாய் லாமாவை காண தர்மஷாலாவிற்கு பேருந்து மூலம் பயணம் செய்த போது, அவர் தனது இன்னர்சர்ச் குழுவினருக்கு “ஹலோ, டாலி!” என்ற ஒரு நீளமான பாடலை பாடி உற்சாகப்படுத்தினார். சுவாமி முக்தானந்தாவுடன் கணேஷ் புரியில் ஒரு நாள் தங்யிருந்த பிறகு, அவர்கள் பம்பாய் நோக்கி ஒரு பேருந்தில் திரும்பிக்கொண்டு இருந்த போது, அந்த பிரலமான சுவாமி ஞானோதயம் பெற்றவரா என்று மாஸ்டரிடம் ஒரு சீடன் கேட்டார். அன்று ஆசிரமத்தில் நடைபெற்ற தத்துவ ஞான கருத்துப் பரிமாற்றங்களை, வியக்கவைக்கும் சாமர்த்தியத்துடன் பேராசிரியர் ஜிநேந்திர ஜெயின் மொழிபெயர்த்தார். மாஸ்டர் ஒரு நொடி யோசித்த பிறகு, “ஒன்று அவர் பெற்று இருக்கவேண்டும் அல்லது அவர் மொழிபெயர்ப்பாளர் பெற்று இருக்கவேண்டும்,” என்றார். இதைக்கேட்டு பேருந்தில் இருந்த எல்லோரும் வயிறு குலுங்க சிரித்தனர். §§

மாஸ்டர் பாரிஸ் நகரத்தில், சுவாமி புவா என்ற நகைச்சுவை உணர்வு நிரம்பிய ஒரு யோகியை சந்தித்தார். அவர் மாஸ்டரின் மடத்திற்கு அடிக்கடி வருகை தந்தார் மற்றும் அவர் 120 வருடங்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனந்தமயி மா, காஞ்சி மடத்தின் மூத்த பீடாதிபதி, மகரிஷி மகேஷ் யோகி, இந்திரா காந்தி, (பூண்டி கிராமத்தில் வாழ்ந்த) பூண்டிசுவாமி மற்றும் வேறு பலருடன் சிறப்பான சந்திப்புக்களும் நடந்தன. §§

மேற்கில் ஒரு ஆச்சாரமான சைவ ஆதீனத்தை உருவாக்கும் முயற்சியின் அங்கமாக, அவர் கோயில் மற்றும் மடம் கலந்த ஒரு வளாகமாக இருந்த சைவ ஆதீனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன, எவ்வாறு தங்களுக்கு தேவையான நிதியை திரட்டி நிர்வாகம் செய்தன மற்றும் அதன் குருமார்கள் அணிந்த உடை, பேசிய முறை, வழிபட்ட மற்றும் வாழ்ந்த நுணுக்கங்கள், மற்றும் அவர்கள் விருந்தாளிகள் மற்றும் இளம் சுவாமிகளுடன் தொடர்புகொண்ட போது பயன்படுத்திய நெறிமுறைகள், சுற்றுப்புற சமூகத்துடன் பராமரித்த உறவு மற்றும் அன்பர்கள் பாரம்பரிய முறையில் எவ்வாறு சேவை செய்தனர் என்பதை பார்த்து புரிந்துகொண்டு அவற்றையெல்லாம் தனது கவாய் ஆசிரமத்தில் செயல்படுத்தும் ஆர்வத்துடன், அவர் தமிழ்நாடு முழுவதும் சென்று பார்த்தார். §§

அதற்கு பின்வந்த இருபது வருடங்களில் ஷிரோபாஷனம் (ருத்ராட்ச மணிகளின் கிரீடம்), வெள்ளி தண்டம், ஆதீனகர்த்தார் அமர்ந்த சிம்மாசனம், அவர் தன் காதுகளில் அணிந்து இருந்த விசேஷமான குண்டலங்கள் (தங்க காதணிகள்) என்று ஆன்மீக அலுவலின் புனிதமான சின்னங்களை கொண்டு வந்த போது, இந்த பயணத்தின் போது பெற்ற அனுபவங்கள் பலன் அளித்தன. இதன் மூலம் அவர் இந்த சைவ சமய சின்னங்கள் அனைத்தையும் மேற்கத்திய நாடுகளுக்கும், கவாய் தீவிற்கும் கொண்டு வந்தார். §§

ஒரு நாள் புது டில்லியில் அமைதியாக இருந்த ஒரு காலை பொழுதில் அவர் வெளியே நடந்து சென்றார். அது ஒரு மறக்க முடியாத அனுபவமாக மாறியது. இதைப்பற்றி அவர் அளித்த விளக்கம்:§§

நான் எழுபத்தி ஐந்து மடவாசிகள் மற்றும் சீடர்களுடன் இந்தியா மற்றும் இலங்கை முழுவதும் பயணம் மேற்கொண்டு மகான்கள் மற்றும் முனிவர்கள், பழங்கால கோயில்கள், தர்மசாலைகள், ஆதீனங்கள் மற்றும் நவீன ஆசிரமங்கள் என்று பயணம் செய்துவிட்டு, ஒரு நாள் காலையில் சற்று தாமதமாக நிர்மலா காப்பர் பஜார் வழியாக, எதையும் வாங்கும் திட்டம் இல்லாமல் நடந்து சென்றபோது, ஒரு விசேஷமான சிவ நடராஜரின் சிலையை பார்த்தேன். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நடைப்பாதையில், வைக்கப்பட்டிருந்த அந்த அற்புதமான ஆறு அடி வெண்கல சிலையை சுற்றி வந்து, அமைதியாக “ஹலோ!” என்று கூறினேன். அது அந்த கடையின் சின்னமாகவும் காட்சிப் பொருளாகவும் இருந்ததால், அது விலை மதிப்பற்றது என்று கூறி அதை கடைக்காரர் விற்க மறுத்துவிட்டார். அவர் வழங்கிய தகவலை தைரியமாக புறக்கணித்து, அன்றைய காலைப் பொழுது முழுவதும் அவரிடம் பேரம் பேசி இறுதியில் அதை விலைக்கு வாங்கினோம், மற்றும் மாலை நேரம் நெருங்கியதும், அதை வெகுதொலைவில் கவாய் தீவில் இருந்த எங்கள் கார்டன் ஐலன்ட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தோம். §§

ஒரு வருடம் கழித்து, 1973 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி சமயத்தில், கவாய் தீவின் காடுகளுக்கு, நடனத்தின் கடவுளான, எங்கள் கடவுள் நடராஜர் சிலை, சிவாசிரமம் வந்து சேர்ந்து, புனிதமான வாய்லுவா நதியை மேலிருந்து பார்த்த வண்ணம் தோட்டத்தில் வைக்கப்பட்டது. அங்கே அதற்கு நீராட்டி, அலங்கரித்து, பின்னர் வழிபாடு நடத்தப்பட்டது. அதிகாலை நேரத்தில் எனக்கு காட்சி அளித்த முருகப்பெருமான், ஆன்மீக அறிவுக்கூர்மையின் உருவமாகவும் அவரது செங்கோலாகவும் இருக்கும் அவரது பளபளக்கும் வேலை திருப்பி, மடத்தின் நுழைவாயிலில் இருந்த கற்காரை படிகளில் மூன்று முறை குத்தி, அந்த சிலை வைக்கவேண்டிய இடத்தை துல்லியமாக குறிப்பிட்டார். §§

முருகப்பெருமான் வழங்கிய ஆணைகள் பின்பற்றப்பட்டன. மார்ச் 12 அன்று, அந்த சிலை அங்கே வைக்கப்பட்டு உடனே வழிபாடும் தொடங்கியது. சுழற்சி முறையில் 24-மணி நேர கண்காணிப்பு தொடங்கப்பட்டது, மற்றும் அது இன்று வரை ஒரு மணிநேர இடைவெளியும் இல்லாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. மடத்தில் இருக்கும் இந்த உறுதியான ஒழுக்கத்தின் கீழ், துறவிகள் மூன்று மணிநேரத்திற்கு ஒரு முறை தங்களுக்குள் ஒரு சுழற்சியை ஏற்படுத்திக் கொண்டு, இரவு பகலாக, வருடத்திற்கு 365 நாட்களும் கோயிலை கண்காணித்து, தொடர்ந்து தியானம், பூஜை, யோகப்பயிற்சிகள் மற்றும் பாடல்கள் பாடி, மனதை அமைதிப்படுத்தி, இந்த அற்புதமான சிலையின் மீது பிரபத்தி எனப்படும், முழுமையான பக்தியை செலுத்துகிறார்கள். இதனால் சிவ நடராஜரின் சிலையின் வருகையால் எங்கள் வாழ்கையில் மாற்றம் ஏற்பட்டது, மற்றும் அன்றிலிருந்து அவரது தெய்வீக இருப்பை சுற்றியே மடத்தின் பணிகள் அனைத்தும் அமைந்து வந்துள்ளன. §§

வையாலேலே மலை சிகரம் என்று அழைக்கப்படும், ஹவாயின் மிகவும் பழமையான மற்றும் எழுச்சியடங்கிய எரிமலையின் அடிவாரத்தில், உலகில் அதிக தொலை தூரத்தில் அமைந்துள்ள கவாய் தீவின் வெப்பமண்டல கார்டன் ஐலன்டின் பசுமையான சுற்றுச் சூழலில் அமைந்து இருக்கும் இந்த ‘கடவுள்’ இந்து கோயிலின் அமைப்பு, இறுதியாக ஹவாய் தீவின் முதல் இந்து கோயிலாக அரசு ஆவண காப்பகங்களில் ஆளுநர் மூலம் பதிவு செய்யப்பட்டது. §§

நடராஜர் வருகையால், இலங்கையின் விசேஷமான கும்பழாவளை கோயில், சூட்சுமமான நல்லூர் மற்றும் வட மாகாண கடலோரத்தில் அமைந்து இருக்கும் சக்திவாய்ந்த திருகேத்தீஸ்வரம் கோயில் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய சிதம்பரம், மற்றும் பல்வேறு நாடி சோதிடர்கள் கூறியதைப் போன்று, நான் ஒரு முற்பிறவியில் இராஜ இராஜ சோழனாக கட்டியதாக கூறப்படும் தஞ்சாவூர் பிரிஹதீஸ்வரர் கோயில், இருபத்தி இரண்டு தீர்த்த கிணறுகளுடன் பாவ விமோசனம் அளிக்கும் இராமேஸ்வரம் என்று பல்வேறு பழங்கால கோயில்களில் இருந்து, கவாயின் லெமூரிய மலை உச்சியில் இருக்கும் தீவின் ஆன்மீக சூழலுக்குள் பல்லாயிரக்கணக்கில் இரண்டாம் உலக தேவர்கள் மற்றும் மூன்றாம் உலக தேவர்கள் மற்றும் மகாதேவர்கள் ஊடுருவினார்கள். அந்த கணத்தில் மூன்று உலகங்களும் ஒன்றாகின, மற்றும் பூமியின் இந்த பகுதியில் சைவ இந்து சமயம் செழிக்க ஆரம்பித்தது. §§

அதே சமயத்தில், வட இந்தியாவில் கார்த்திகேயா என்று அழைக்கப்படும் முருகப்பெருமான் மீண்டும் ஒரு முறை மாஸ்டருக்கு காட்சி அளித்தார். சான் பிரான்சிஸ்கோ நகரத்தின் சாக்ரமெண்டோ ஸ்ட்ரீட் கோயிலுக்கு அருகில், திருவடி மடத்திற்கு அருகில் அமைந்து இருந்த அவரது சிறிய குடியிருப்பில், அதிகாலை நேரத்தில், மாஸ்டருக்கு முருகப்பெருமான் காட்சி அளித்து, அவரது சந்நியாச சமூக வாழ்க்கையில் தனது முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தினார். திடீரென்று அவர் ஒரு அழகான மற்றும் உறுதியான தசை கட்டுக்களுடன் இருந்த ஒரு உயிர்சக்தியுடன், தனது மடத்தின் அறையை சுற்றி பறந்து வருவதை கண்டார். மாஸ்டர் அந்த வலுவான உயிர்சக்தியிடம் அவர் யார் என்று விசாரித்த போது, “உனக்கு தெரியவில்லை என்றால், வேறு யாருக்கு தெரியும்?” என்று சொன்னதாக மாஸ்டர் தனது மடவாசிகளிடம் பின்னர் கூறினார். அது முருகப்பெருமான் தான் என்பதை அவர் அறிந்து இருந்தார். §§

அந்த அனுபவத்தால் அதிக உத்வேகத்தை பெற்ற மாஸ்டர், பிளையிங் வித் முருகன் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதலாம் என்று திட்டமிட்டிருந்தார். அந்த புத்தகம் வெளிவரவில்லை என்றாலும், அவரது சந்நியாச சமூகத்தின மீது வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் முருகபெருமானின் தாக்கம் வெளிப்பட்டது, மற்றும் சந்நியாசிகளின் முன்னோடியாகவும், சிவபெருமானின் மகனாகவும் இருந்த முருகப்பெருமானை, தனது துறவற சமூகத்தின் இஷ்ட தெய்வமாக மாஸ்டர் என்றென்றும் கருதி வந்தார். அவரது துறவிகளில் பெரும்பாலும் எல்லோருக்கும் முருகப்பெருமானின் பெயர் வழங்கப்பட்டு, இந்த ஆற்றல்மிக்க தெய்வத்தை ஒரு தனிப்பட்ட வழிகாட்டியாக மற்றும் புனிதம், பற்றின்மை, மனஉறுதி மற்றும் சாதிக்கும் வேகத்திற்கு முன் உதாரணமாக கருதுமாறு கற்றுக்கொடுக்கப்பட்டது. §§

அந்தர்லோகங்களில் இருந்து வந்த புத்தகங்கள் §

துறவிகள் வாழ்கையின் மையமாக ‘கடவுள்’ இந்து கோயில் மாறியது, மற்றும் சமஸ்கிருத உச்சரிப்பு மற்றும் பூஜையின் தெய்வீக கலைகளில் பலவருட பயிற்சி தொடர்ந்தது. அவர்களுக்கு மாஸ்டரின் மூலம் மகாதேவர்களின் அறிமுகம் கிடைத்தது, மற்றும் அவர்கள் மகாதேவர்களை தங்கள் வாழ்க்கையின் மையமாக, தங்களது ஆதரவாக மற்றும் தங்களின் நண்பர்களாக மாற்றிக்கொள்ள கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். §§

மாஸ்டர் துறவற குறிக்கோள் ஒவ்வொன்றையும், கோயில் நெறிமுறை ஒவ்வொன்றையும், யோகப்பயிற்சி ஒவ்வொன்றையும், மேற்கத்திய கலாச்சாரத்திற்குள் மெதுவாகவும் முறையாகவும் பெரிய அளவில் கொண்டு வந்து, அவை அனைத்தையும் ஹவாய் தீவின் செழிப்பான பூமியில் விதைத்துக்கொண்டு இருந்தார். §§

அந்த காலத்தில் கிராமங்களுக்கு தபால் வசதி இல்லாததால், அவர் ஒவ்வொரு நாளும், ஒன்று அல்லது இரண்டு துறவிகளுடன் ஐந்து மைல் தொலைவில் இருந்த தபால் நிலையத்திற்கு வாகனத்தில் செல்வார். அவர் ஒரு நாளில் வந்த தபால்கள் அனைத்தையும் கோகோ பாம்ஸ் ஓட்டலின் மேசையில் வைத்து, காபியை வாங்கிக்கொண்டு, தனது பதில்களை அறிவுறுத்த, அவற்றை துறவிகள் தட்டச்சு செய்து மாலையில் தபாலில் அனுப்புவார்கள். §§

அதைப்போன்ற ஒரு நாளில் விசேஷமான ஒரு சம்பவம் நடந்தது. அதைப்போல முன்பு நடந்திருக்கவில்லை. அது பல மாதங்களுக்கு நீடித்தது, மற்றும் அது மீண்டும் நடக்கவில்லை. அன்று காலையில் நடந்த சம்பவத்தைப் பற்றி மாஸ்டர் அளிக்கும் விளக்கம்:§§

நாங்கள் நடராஜர் சிலையை மடத்தில் வைத்தவுடன், தலைசிறந்த எழுத்துப்பிரதிகளின் ஒரு தொகுப்பின் மீது, ஆக்ஞா சக்கரத்தில இருக்கும் எனது ஆன்மீக கண் திறந்துகொண்டது மற்றும் முருகப்பெருமானின் ஆன்மீக நூலகம் காட்சி அளித்தது. அழகான உடையில் முகத்தில் தாடியுடன் உயரமாக இருந்த ஒரு நூலகர், ஒவ்வொரு ஆசை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப, தனது உறுதியான கைகளுடன் ஏதாவது ஒரு அலமாரியில் இருந்து மிகப்பெரிய தொகுப்புக்களை எடுத்து, தேவையான பகுதியை படிப்பதற்காக நமக்கு சரியான பக்கத்தை திறந்து வைப்பார். இந்த ஸித்தி எனக்கு கைக்கூடிய பிறகு, நான் சிவாசிரமத்தில் இருந்த மடவாசிகளுக்கு இந்த தொகுப்புக்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்து காண்பித்தேன். அவர்கள் அதில் கேள்வி கேட்டார்கள். அந்த புத்தகங்கள் என் மனதின் உட்புற ஆகாசத்தில் வைக்கப்பட்டு, அதில் இருந்த பக்கங்களை திருப்பி வாசித்து ரசித்து புரிந்துகொள்ளப்பட்டது. இவ்வாறு வைர துகள்கள் போன்ற சிவபெருமானின் தரிசன வெளிப்பாட்டினால், நமது முருகப்பெருமான் இந்த பூமிக்கு வந்ததில் இருந்து சேர்த்து வைத்திருந்த பதிவுகளை சேமித்து இருந்த, அவரது சொந்த நூலகத்தின் உட்புற கதவு திறக்கப்பட்டது. தென்னிந்திய கடவுளான சுப்பிரமணியம் என்கிற முருகன், கார்த்திகேயா, ஸ்கந்தன் மற்றும் சனத்குமாரா என்று அழைக்கப்பட்டு, எங்களுக்கு அருகாமையில் எப்போதும் இருந்துக்கொண்டு எங்கள் மீது அன்பை பொழிந்து வருகிறார். §§

image§

கோகோ பாம்ஸ் ஓட்டலில் மாஸ்டர் காலைநேர காபியை அருந்திக்கொண்டு இருந்த போது, திடீரென்று கையில் விசித்திரமான எழுத்து பிரதிகளுடன் ஒரு சூட்சும லோக நூலகரை சந்தித்தார். அதில் இருந்த ஒவ்வொரு பக்கத்தையும் அவரது ஆன்மீக கண் கவனமாக படித்து புரிந்துகொண்டது. அவர் பல மாதங்கள் கழித்து, அந்த புத்தகம் முழுவதையும் தனது துறவிகளுக்கு அறிவுறுத்தினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கட்புலனிற்கு அப்பாற்பட்ட இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு, கோகோ பாம்ஸ் ஓட்டலில் தோட்டங்கள் நிரம்பிய உணவகத்தில் நடந்தது. அந்த நூலகர் ஒவ்வொரு தொகுப்பாக எடுத்து அதில் ஒவ்வொரு பக்கமாக திருப்பிய போது, விசுவாசமான ஒரு துறவி எழுத்தருக்கு மெதுவாக நான் அறிவுறுத்த, அவர் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுமையாக பிழை இல்லாமல் எழுதிக்கொண்டார். அந்த காலத்தில் ஓட்டலுக்கு வந்த மேல் வர்க்க விருந்தாளிகள் புகைத்த சிகரெட் புகை அருகில் இருந்த மேசை மீது நிரம்பி, சுற்றுப்புறம் முழுவதும் பரவி ஆகாச லிபிகள் தெளிவாக தெரியும் ஒரு சூழலை உருவாக்கின. கட்புலனுக்கு அப்பாற்பட்ட இந்த ஸித்தியை யதார்த்தமாக மாற்றுவதற்கு, பின்னணியில் கேட்ட ஹவாய் இசையுடன், மக்கள் பேச்சில் இருந்த ஆரவாரம் மற்றும் லௌகீக உணர்வுகளின் கீழ்நிலை அதிர்வும், அடிமனதை வெளிப்படுத்த உதவியது. §§

சில நாட்களில் பல பக்கங்கள் திருப்பப்பட்டு வாசிக்கப்பட்டன, மற்றும் சில நாட்களில் எந்த புத்தகமும் கண்ணுக்கு தெரியாது. அந்தர்லோக நூலகத்தின மீது எனது ஆன்மீக கண் திறந்து கொள்வதற்காக, நாங்கள் பல வாரங்களுக்கு மற்றும் பல மாதங்களுக்கு, காலையில் எழுந்து பழங்கள், தயிர் மற்றும் காபியை ருசித்துக்கொண்டு அமர்ந்து இருப்போம். அந்த உணவகம் ஒரு சாதாரண சூழலில் இல்லாமல், ஹவாய் தீவுக்குழுமத்தின் வடக்கு முனையில் அமைந்து இருந்த கவாய் தீவின் கிழக்கு திசையில் கடலுக்கு அருகில் இருந்த, தீவின் மிகப்பெரிய தென்னந்தோப்புக்கு மத்தியில் வெப்பண்டல குளங்களை பார்த்த வண்ணம் எங்கள் மேசை அமைந்து இருந்தது. பழங்காலத்தில் அரச குடும்ப குழந்தைகள் பிறந்த, பர்த்ஸ்டோன் ஹேஅவ் இடத்திற்கு அருகில் எனது சூட்சுமமான காட்சியால், ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்பட்ட படைப்புக்கள், எழுத்துமடல் வடிவில் இருந்த ஒரு சுருள் குறிப்பேட்டில் எழுதப்பட்டன. நண்பகலுக்கு முன்பாக, நாங்கள் புனிதமான வைலுவா நதியை ஒட்டி நான்கு மைல் தூரம் உள்நோக்கி எங்கள் ஆசிரமத்திற்கு வருவோம். அது தற்போது ‘கடவுள் இந்து கோயிலாக’ இருக்கிறது. §§

அவர் திரும்பி வரும் போது தன்னுடன் எடுத்துவந்த படைப்புக்கள், லெமூரிய மற்றும் திராவிடிய சாஸ்திரங்களில் ஒரு புதிய அத்தியாயமாக விளங்கியது, மற்றும் அவற்றை இருபத்தி நான்கு வருடங்களுக்கு அவரது மடவாசிகள் மட்டுமே படித்தனர். அதன் பிறகு உலகம் அதை படிப்பதற்கு தயாராக இருப்பதை உணர்ந்த மாஸ்டர், அதை லெமூரியன் ஸ்குரோல்ஸ் என்ற தலைப்பில் வெளியிட்டார். நாம் இந்த பூமிக்கு நான்கு மில்லியன் வருடங்களுக்கு முன்பு எவ்வாறு வந்தோம், ஆரம்பக்கால மனிதனின் ஆன்மீக கலாச்சாரம் மற்றும் நம்மிடம் அதிக தகவல்கள் இல்லாத அந்த யுகத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கை மற்றும் பழங்காலத்தில் தனிமையாக இருந்த சைவ மடங்களுக்குள் இருந்த வாழ்க்கைமுறை மீது கவனம் செலுத்தி குண்டலினி மற்றும் மைய சூரியனில் (7 ஆவது சக்கரத்தை கடந்து இருப்பது) இருக்கும் மர்மங்கள் பற்றி மர்மமான தகவலுடன், அது மனிதனின் ஆரம்பக்கால வரலாறு பற்றிய ஒரு தெய்வீக வெளிப்பாடாக இருந்தது. §§

image§

ஒரு நாள் காலையில் மாஸ்டர் உறக்கத்தில் இருந்த போது, அவரது மூன்றாவது கண்ணிற்கு காட்சி அளித்த முருகப்பெருமான், தனது வேலை உயர்த்தி மூன்று முறை ஒரு படியின் மீது பலமாக அடித்து, இந்தியாவில் இருந்து வந்திருந்த சிவ நடராஜர் சிலை “அங்கே"வைக்கவேண்டும் என்பதை குறிப்பிட்டார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மாஸ்டருக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான தகவல்கள், அவரது மடவாசிகளை பயனுள்ள வகையில் நிர்வகித்து வழிநடத்தி செல்ல, இந்து சந்நியாச வாழ்க்கைக்கு ஒரு பாரம்பரிய முறையை வழங்க, அவரது துறவிகளின் ஆன்மீக விரிவாக்கத்தை ஊக்குவிக்க தேவையாக இருந்த பாரம்பரிய கோட்பாடுகளை வழங்கியது. மாஸ்டரின் சந்நியாச சமூகத்திற்காக பிரத்யேகமாக தேவர்களின் குழு எழுதிய ஒரு இரகசிய வெளிப்பாடாக இருக்கும் இந்த சாஸ்திரங்கள், சை வ சாஸ்திரங்களுடன் சேர்ந்து, ஒரு ஆன்மீக வழிகாட்டியாக மாறி, அவர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தி, அவர்களது உயிர்சக்தியின் ஒவ்வொரு பரிணாமத்தையும் விளக்கியது. மாஸ்டரிடம் இருந்து தினமும் இந்த மெய்ஞ்ஞான வெளிப்பாடுகளின் மூலம் பக்கம் பக்கமாக பல யுகங்களின் ஞானம் வந்துக்கொண்டிருக்க, அவருக்கு அருகில் இருப்பதை தங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவும் வரமாகவும் நினைத்து, பல யுகங்களுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளுடன் தாங்கள் இருப்பதை போன்ற ஒரு உணர்வை பெற்றார்கள். அந்த நாட்களைப் பற்றி குருதேவா வழங்கும் குறிப்பு:§§

தொடக்கத்தில் வந்த வெளிப்பாடுகள் சிவாசிரமத்தில் இருந்த மடவாசிகளால் அனுபவிக்கப்பட்டு, எங்கள் தியான மொழியான ஷும் மொழியில் பினிபா என்று அழைக்கப்படும், எங்கள் அமைப்பிற்குள் இயங்கும் ஒரு தொலைத்தட்டெழுத்து பிணையம் மூலம் பகிரப்பட்டது. இந்த வெளிப்பாடுகளின் ஓட்டம் பல வாரங்களுக்கு தொடர்ந்துக்கொண்டு இருக்க, பியானோ வடிவில் இருந்த தொலைதொடர்பு சாதனங்களில் இருந்து தட்டெச்சு சத்தத்துடன் வெளிவந்த பிரமிக்க வைக்கும் தகவல்களை படிக்க, அந்த சாதனங்களை சுற்றி கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் மற்றும் நெவாடாவின் விர்ஜினியா சிட்டியில் மடவாசிகள் ஒன்று கூடினார்கள். மடவாசிகள் எனக்கு கேள்விகளை அனுப்பி, ஆயிரம் மைல் தொலைவில் இருந்த என்னிடம் உடனடியாக பதிலையும் பெற்றார்கள். நாங்கள் இந்த முறையில் பல தத்துவ விவாதங்களை நடத்தினோம். §§

இறுதியில் ஒவ்வொரு புத்தகமாக நிறைவு பெற்றதும், அதை ஒரு மின்சக்தி ஐபிஎம் தட்டச்சு இயந்திரத்தில் ஒரு எழுத்தர் தட்டச்சு செய்தார். அதில் இருந்து சுமார் ஒரு டஜன் நகல்கள் தயார் செய்யப்பட்டு, ஒரு எளிமையான வெள்ளை நிற மென்னட்டை கட்டமைப்பாக அவை உறையிடப்பட்டன. எனது மடவாசிகளின் மத்தியில் சுயநலமற்ற வாழ்முறையின் புதிய தரத்தை உருவாக்குவதற்கு, தியான அமர்வுகளின் போது ஒரு அத்தியாயம் வாசிக்கப்பட்டது. §§

image§

ஒரு நாள் காலை நேரத்தில், மாஸ்டர் சுப்பிரமுனியா தனது சான் பிரான்சிஸ்கோ மடத்தில் தியானம் செய்துக்கொண்டு இருந்த போது, திடீரென்று அந்த அறையில் பறந்துக்கொண்டு சுற்றி வரும் உணர்வை பெற்றார். அவருக்கு அருகில் முருகப்பெருமானும் பறந்துக்கொண்டு இருந்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

வாசிப்பதற்கு மேலும் பல புத்தகங்கள் இருப்பதாக தேவர்கள் இந்த படைப்புக்களில் குறிப்பிட்டு இருந்தார்கள்; ஆனால் இந்த சைவ சாஸ்திரங்கள் நிறைவு பெற்ற பிறகு, தனது ஆன்மீக பார்வையின் திரையில் முருகப்பெருமானின் நூலகத்தை அணுகுவது மாஸ்டருக்கு மிகவும் கடினமாக இருந்தது. வெளியுலக கவனச் சிதறல்கள் காரணமாக, இந்த அந்தர்லோகத்தை அணுக முடியாமல் அவர் போராடிக்கொண்டு இருந்தார். §§

நாங்கள் தற்போது 1974 ஆம் ஆண்டில், எங்களது ஆன்மீக பணியை தொடங்கிக்கொண்டு இருக்கிறோம், மற்றும் திரையில் எனக்கு எதுவும் தென்படவில்லை. தேவர்கள் வேறு எங்காவது சென்று இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அவர்கள் விநாயகரை தரிசிக்கும் யாத்திரையின் அங்கமாக, சிவாசிரமம் வந்திருந்த சில அன்பர்கள் மற்றும் மாணவர்களுடன் தாங்கள் செய்யவேண்டிய பணியை நிறைவு செய்துக்கொண்டு இருந்தனர். எனது நெற்றிக்கு முன்பாக நீல நிற ஆகாசத்தின் மங்கலான ஒளி மற்றும் ஒன்றை மற்றொன்று பிரதிபலித்துக்கொண்டிருந்த மினுமினுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி ஒளிகள் நடனமாடுவதை, நான் எனது மூன்றாவது கண் வழியாக பார்க்க தொடங்கியிருந்தேன். மேலும் புதிய விருந்தாளிகள் மற்றும் அமைதியை நாடி வந்திருந்த சாதகர்கள் காரணமாக எனது பார்வையை மறைத்த உணர்வுகள், சிக்கல்கள் மற்றும் சிந்தனைகளையும் பார்த்துக்கொண்டு இருந்தேன். மங்கலான ஒளி வலுவடைந்ததும், அந்த நபர்கள் மெதுவாக மறைய ஆரம்பித்தார்கள். 1973 ஆம் ஆண்டில் பல மாதங்களுக்கு நன்றாக திறந்து இருந்தது, சாஸ்திர புத்தகங்கள் தென்பட்ட நிலைக்கு வருவதற்கு நான் தற்போது மூன்று நாட்களாக முயற்சி செய்து வருகிறேன். §§

மாஸ்டரின் ஆன்மீக தேடல்கள் நிற்கவில்லை என்றாலும், அவை இந்த தருணத்தில் வியக்கவைக்கும் மாற்றத்தை பெற்றன. அவர் ஆகாசத்தில் இருந்த புத்தகங்களை கட்புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியால் படிக்காமல், தனக்கு சம்பந்தப்பட்ட அன்றாட நிகழ்வுகள் பற்றிய அறிவுரை மற்றும் ஆழமான புரிதலை பெறுவதற்கு, அவர் மூன்று அல்லது நான்கு தேவர்களுடன் கட்புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியின் மூலம் தொடர்பில் இருந்தார். இந்த தகவல்கள் கோயில் சூட்சும ஞானம் பற்றிய உயரிய ஆய்வுக்கட்டுரைகளில் இருந்து புதிய துறவற வேட்பாளரின் கர்மவினைகள் பற்றிய லௌகீக உட்பார்வைகள் வரை விரிவாக வேறுபட்டு இருந்தன. §§

அந்த தகவல் தொடர்புகளில், பூமியில் 10,000 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்திருந்த ஒரு உயர்குடி ஆட்சியாளருடன் நடைப்பெற்ற தொடர்பு மிகவும் முக்கியமானதாக விளங்கியது. அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதும், அவர் மாஸ்டர் ஈடுபட்டிருந்த பணியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டு, குறிப்பாக எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய முக்கிய முடிவுகளை சுட்டிக்காட்டி, ஆழ்நிலை குரலில் வழிகாட்டலை வழங்குவார். பெருபாலும் ஆழமானதாக மற்றும் மிகவும் உயர்வானதகாக இருந்த இந்த ரிஷிகளின் தகவல்கள், ஒரு குறிப்பேட்டில் கவனமாக எழுதப்பட்டன அல்லது ஜப்பானில் ஒரு சிறிய தேனீர் கடை அல்லது மெட்ராஸில் இருந்த ஒரு உணவகத்தில காபி குடித்துக்கொண்டு ஒரு துடைப்புக்குட்டை மீது அவசரமாக எழுதப்பட்டன அல்லது மடத்தில் இருந்த மாஸ்டரின் அலுவலில் ஒரு வசதியான இடத்தில் அமர்ந்து எழுதப்பட்டன. §§

செப்டம்பர் 14, 1983 கவாய் தீவில் நடந்த ஒரு அமர்வின் போது, அஞ்சல் மூலம் பக்தர்களுக்கு மடம் அனுப்பும் ‘கடவுள்’ கோயிலின் விபூதி பிரசாதத்தின் மூலம், தேவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்று எழுத்தராக இருந்த துறவி கேள்வி கேட்டார். அதற்கு ரிஷி வழங்கிய பதில்:§§

நாம் அங்கே பிரசாத வடிவாகவும் சக்தி வடிவாகவும் இருக்கிறோம். இந்த பிரசாதங்கள், ‘கடவுள்’ கோயிலில் இருக்கும் நமக்கும் பக்தர்களுக்கும் இடையே ஒரு நீடித்திருக்கும் பாதையை திறந்து வைக்கிறது. குறிப்பாக அந்த விபூதி அதிர்வை கொண்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் சில கோயில்களின் விபூதி நமது ஆதினத்தில் இருப்பதால், உங்களுக்கும் அந்த கோயில்களுக்கும் இடையே ஒரு தடையில்லாத பாதை உள்ளது. ‘கடவுள்’ கோயிலின் விபூதியை உங்கள் வீடுகளில் தாராளமாக நிரப்பி வைத்தால், அவை ‘கடவுள்’ நடராஜரிடம் இருந்து சக்தியை பெற்று திறந்து வைக்கும் பாதை, விரிவாகவும் தெளிவாகவும் நிலைத்து இருக்கும். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட விபூதியை வாங்கி வையுங்கள். அந்த விபூதி கடவுளின் குரலாக விளங்குகிறது. உங்கள் பிரசாத பைகளில் சிக்கனமாக இருக்காமல், தாராளமாக நிரப்பி வையுங்கள். மேலும் குருவின் விபூதி பைகள் எப்போதும் நிரம்பி வழிய வேண்டும். §§

image§

குருதேவா சில சந்தர்பங்களில், சைவ சமய கடவுள்களான சிவபெருமான், அனுமார், முருகன் மற்றும் விநாயகரிடம் இருந்து கவிதையாகவும் சிலசமயங்களில் மறைபுதிரான செய்யுள்ளாகவும் தகவல்களை பெற்றார். அவர் சிரத்தையுடன் எழுதிக்கொண்டு, விண்ணுலக ஆணைகள் அனைத்தையும் கடைப்பிடித்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

மாஸ்டரின் குழுவில் இருந்த தலைசிறந்த தேவர்கள் பகிர்ந்த தகவலுக்கு, கேட்கப்பட்ட கேள்விகளின் தன்மை மற்றும் ஆழம் மட்டுமே ஒரு வரையறையாக விளங்கியது. ஒரு வலுவான தொடர்பு ஏற்பட்டதும், தேவர்கள் ஒரு மணிநேரம் அல்லது தேவைப்பட்டால் அதிக நேரம் தங்குவதும், மாஸ்டர் அவ்வப்போது, “வேறு ஏதாவது கேள்விகள் இருக்கிறதா?” என்று கேட்பதும் வழக்கமாகிவிட்டது. அன்றாட நிகழ்வுகள், பிரச்சனைகள், பொதுமக்கள், தத்துவம் சார்ந்த கேள்விகள் மற்றும் அன்றைய முக்கியமான பிரச்சனைகள் மீது கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த அமர்வுகளின் போது, அவர் தனது பணியின் ஒவ்வொரு அம்சத்தை பற்றி மதிக்க முடியாத, யதார்த்தமான வழிகாட்டலை பெற்றார் மற்றும் மாஸ்டருக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் இந்த உலகை காட்டிலும் அதிக உண்மையானதாக அவர் கருதும், இன்னொரு உலகின் அரிய மற்றும் குறுகியகால காட்சியை, அவருடன் இருந்த மடவாசிகள் அனுபவித்தார்கள். அந்தர்லோகத்தில் இருக்கும் இந்த உயிர்சக்திகள், தூல உடல்களில் உருவெடுத்த நேர்மையான சாதகர்களுக்கு எவ்வாறு உதவி செய்கிறார்கள் என்பதை அவர் விளக்கினார். §§

பூமிக்கு அருகில் இருந்துக்கொண்டு, உலகெங்கும் இருக்கும் பக்தர்களின் தேவைகளை தொடர்ந்து கவனிக்க, நன்கு பயிற்சி பெற்ற தேவர்கள் அந்தர்லோகத்தில் இருக்கிறார்கள். கவாய் ஆதீனத்தின் ‘கடவுள்’ கோயிலில் குடியிருக்கும் தேவர்கள் சமயப்பணி நடைபெறும் வீடுகள், தர்மசாலைகள் மற்றும் கோயில்கள் மற்றும் நமது அங்கத்தினர்களின் மடங்களில் நடைபெறும் சத்சங்க ஹோமத்தில் பங்குபெறுவார்கள். மகாதேவர்கள் மற்றும் தேவர்கள், சுவாமிகள், யோகிகள், நாட்யாக்கள், சாதகர்கள், பிரம்மச்சாரிகள், பிரம்மச்சாரினிகள், தாய்மார்கள், தந்தைகள், குழந்தைகளின் இந்த ஆன்மீக கூட்டமைப்பில், எல்லோரும் தெய்வீக வழியில் ஒன்றாக செயல்பட்டனர். இதுவே சைவ சமயம். இதுவே சைவ சித்தாந்தம். இதுவே செயல்பாட்டில் இருக்கும் நாத சம்பிரதாயம். பழங்காலத்தில் சைவ சமயம் பூமி எங்கும் செழிப்பாக இருந்த போது, இப்படித்தான் இருந்துள்ளது. இப்போது இப்படித்தான் இருக்கிறது மற்றும் எதிர்காலத்தில் இப்படித்தான் இருக்கும். §§

மனதின் மறுபுறத்தில் இருந்த மாஸ்டரின் உதவியாளர்களால் உற்சாகம் அடைந்த மடவாசிகள், தங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கிய ரிஷி எப்படி இருந்தார் என்பதை தெரிந்துகொள்ள விரும்பினார்கள். 1996 ஆம் ஆண்டில் ஒரு நாள், “ரிஷி சற்று முன் தோன்றினார். அங்கே அவர் வெள்ளை உடையணிந்து அமர்ந்து இருப்பதை பார்த்தேன். அவர் மிகவும் நேர்த்தியாக இருந்தார். அவர் கையை அசைத்துக்கொண்டு “வாழ்த்துக்களை,” தெரிவித்தார். அவர் வழங்கிய தகவல்:”§§

image§

அந்தர்லோகத்தில் இருக்கும் தேவர்கள் குருதேவாவிற்கு வழிகாட்டி, அவரது மற்றும் துறவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து, யதார்த்தமான ஆலோசனையை வழங்கி, தொலைந்து போன பொருட்களை தேடவும் உதவி செய்தார்கள். அவர் அந்த தகவல்களை கடுபுலனுக்கு அப்பாற்பட்ட சக்தியால் அல்லது சிந்தனை பரிமாற்றத்தால் பெற்றார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இது ஒருமுகச்சிந்தனையுடன், துல்லியமாக மற்றும் திடமாக இருக்கும் நேரம். நாம் எதிர்காலத்திற்கும் எல்லா காலத்திற்கும் தேவையான தகவலை, அதிகமாக சேகரித்துள்ளோம். அதை மீண்டும் தொகுத்து, தேவைப்படும் போது மீண்டும் விளக்கம் அளித்து வாழவேண்டும். (மாஸ்டர்: “பலர் [பேசுவதற்கு] தயாராக இருக்கிறார்கள். கேள்விகள் ஏதாவது இருக்கிறதா?” “அவர் வயதில் மிகவும் சிரியவராக தென்படுகிறார்,” என்று மாஸ்டர் கூறியதற்கு ரிஷி வழங்கிய பதில்:)§§

நீங்கள் என்னை பதில் அளிக்க வைத்து எனது வயதை மேலும் குறைக்கிறீர்கள். சிலசமயங்களில் நாங்கள் பேரின்பத்தில் தனிமையை உணர்கிறோம். எங்கள் பரமாத்துமாவின் முழுமை, எங்களது புலனுணர்வுகள் மட்டுமே எங்களுக்கு துணையாக இருக்கின்றன. பேரின்பத்தில் இருப்பவர்கள், தங்களுக்குள் பேசிக்கொள்ள மாட்டார்கள். இங்கே தகவல் தொடர்பு என்று எதுவும் இருப்பதில்லை. எங்களில் ஒவ்வொருவருக்கும் மற்றொருவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்து இருப்பதால், பேசுவதற்கு என்ன இருக்கிறது? அதனால் அறியாமையை நீக்குவது ஒரு வரவேற்கத்தக்க நிகழ்வாக தோன்றுகிறது. (இதன் பிறகு தன் முகத்தில் பெரிய புன்னகையுடன், “நீங்கள் எதை தெரிந்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?” என்று கேட்கும் வண்ணம் சற்று தளர்வாக அமர்ந்து கொள்கிறார். “நீங்கள் எந்த லோகத்தில் இருக்கிறீர்கள்?” என்று ஒரு மடவாசி கேட்கிறார்.) பிரம்ம லோகத்தில் இருக்கிறேன். அது ஒரு அருமையான இடம். அது அதிக துடிப்புணர்வு மற்றும் இணக்கத்துடன் ஆக்கப்பூர்வமாக இருக்கிறது. இங்கே உங்களிடம் இருக்கும் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் அனைத்தும் திட்டமிடப்படுகின்றன. அது திட்டமிடும் உலகமாக விளங்குகிறது. §§

துறவற வாழ்கையில் உறுதியான மனத்துறவு மற்றும் பிரம்மச்சரியத்தின் மதிப்பு, பொருள் மற்றும் அத்தியாவசியம் ஆகியவை துறவிகளுக்கு சாஸ்திரங்கள் வழங்கிய மிகவும் வலுவான தகவல்களில் ஒன்றாக விளங்கியது. பெண்களுடன் வாழ்ந்தவர்களுக்கு விசேஷ சாதனாக்களுடன், தேவர்கள் விரிவான அறிவுறுத்தல்களை வழங்கினார்கள். வாழ்க்கையில் அதிக ஒழுங்குமுறையுடன் வாழ்ந்தவர்கள் மட்டுமே சுவாமியின் சமூகத்தில் நுழைய முடியும். குருதேவா அந்த கருப்பொருளை, கட்புலனுக்கு அப்பாற்பட்ட சக்தியால் படித்த சாஸ்திர புத்தகங்களின் அங்கமாக விளங்கிய தி புக் ஆஃப் வர்ச்சியு என்ற புத்தகத்தில் இருந்து ஒரு பத்தியை எடுத்து, தனது மாஸ்டர் கோர்ஸ் ட்ரைலாஜி (பிரதான பயிற்சி வகுப்பின் முத்தொகுப்பு) பயிற்சி வகுப்பில் குறிப்பிட்டார். §§

பிரம்மச்சரியம் அந்த தனிநபரின் முதுகுத்தண்டின் மையத்தில் தெய்வீகத்தன்மையின் சக்தியை கொண்டிருப்பதால், தூல உடலுக்குள் இருக்கும் சூட்சும உடலின் பஞ்ச பிராண சக்திகள் வழியாக சிவபெருமான் தனது சக்தியை அனுப்பும் போது, அந்த பிராண சக்திகள் தங்களை சீர்செய்து கொண்டு வெளிப்படுத்தும் சக்தி, அவரை சுற்றியிருக்கும் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஐந்து மாபெரும் மனோஉணர்வு திரவங்களை மாற்றி அமைக்க தேவையான வலிமையை பெற்று இருக்கிறது. இந்த பிரம்மச்சரிய சக்தி திரட்டப்பட்டு, சுத்திகரிப்பின் மூலம் பரவ செய்த பிறகு பாலியல் சக்தியின் உருமாற்றம் நடைபெறுகிறது. தினமும் தொடர்ந்து செய்யும் சாதனா, நேர்மறை வாழ்முறையின் உறுதி மற்றும் நமது சமயத்தின் சடங்குகளை கடைப்பிடிப்பதன் மூலம் உருமாற்றம் தானாக நடைபெறுகிறது. உடல் உறவில் ஈடுபடாதவர்களுக்கு பிரம்மச்சரியம் என்பது, அவர்கள் பருவமடைவதில் இருந்து தொடங்கி திருமணம் வரை தொடர்கிறது. அப்படி இல்லையென்றால், பிரம்மச்சரிய சாதனா என்பது எதிர்பாலின உறுப்பினருடன் ஏற்பட்ட கடைசி பாலியல் உறவுக்கு பிறகு மற்றும் பிரம்மச்சரிய பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று உணர்வுடன் முடிவு எடுக்கும் போது தொடங்குகிறது. §§

ஒரு துறவி இது வரை வாழ்ந்த பிறவிகளின் தொடர்ச்சி, செய்த சாதனைகள் மற்றும் இந்த பிறவியில் மாஸ்டரின் சமயப்பணியில் ஆற்றவேண்டிய தொண்டுகள் பற்றி தேவர்கள் அற்புதமான முறையில் விவரித்துக்கொண்டு இருக்க, மாஸ்டர் அவர்களுடன் தனியாக பலமணி நேரங்கள் தனியாக அமர்ந்து, சில சமயங்களில் தனது துறவிகளுக்கு அவர்களது முற்பிறவிவைப் பற்றி நுண்ணறிவுகளை பல வருடங்களுக்கு வழங்கி ஆசீர்வதித்து வந்தார். ஒருவர் தான் முற்பிறவியில் சீன நாட்டில் அச்சுத்துறையில் இருந்ததை, ஒரு முன்னாள் அமெரிக்க தலைவராக மற்றும் ஒரு ஆய்வுப்பணியாளராக இருந்ததை பற்றி தெரிந்துகொண்டார். §§

1982 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு சுவாமியுடன் ஒரு மாத காலம் பயணம் செய்த போது, மாஸ்டர் புது டில்லியில் அதைப்போன்ற ஒரு தகவலை வெளிக்கொண்டு வந்தார். ஒரு தேவர் உணவு அருந்தும் மேசையில் மாஸ்டரை தொடர்பு கொண்டு, தன்னை அந்த உணவக சோதிடரின் தூண்டுதல் சக்தி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, தன்னிடம் சந்தேகங்கள் கேட்குமாறு கேட்டுக்கொண்டார். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, மாஸ்டர் அந்த துறவியின் மூன்று பிறவிகளை பற்றிய தகவல்களை தெரிவித்து, துறவி தனது கேள்விகளை எழுதிக்கொள்ள வேண்டும் என்று அந்த தேவர் விரும்புவதாக கூறி அந்த அமர்வை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்த தேவர் துறவிக்கு பின்னால் நின்றுக்கொண்டு, அந்த கேள்விகளை படித்து அவற்றிற்கு பதில் அளித்து, அவர் இந்தியாவில் ஒரு சாதுவாக, ஐரோப்பாவில் வணிகராக வாழ்ந்த முற்பிறவிகள் மற்றும் இந்த துறவற சமூகத்தில் அவரது எதிர்காலம் பற்றி குறிப்பிட்டார். இந்த தேவர் மற்ற சில தேவர்கள் செய்வதை போல எதையும் பேசாமல், தனது கருத்துக்களை சிந்தனை வடிவங்களாக வெளிப்படுத்துவதை மாஸ்டர் தெரிந்துகொண்டார். அந்த உணவக சோதிடர் கதவு வழியாக பல முறை சென்று இருந்த அந்த ஹவாய் பயணிகள், அந்த கதவில் இருந்த சின்னத்தின் மீது விவரிக்க முடியாத ஈர்ப்பை பெற்றனர். அன்று மாலை நேர முடிவில், கருத்து பரிமாற்றங்களால் ஏற்பட்ட கர்மவினைகளை சரியாக சமநிலைப்படுத்தும் நோக்கத்துடன், மாஸ்டர் துறவியிடம் ஐம்பது ரூபாயை வழங்கி, அவர் பெற்ற சோதிட கணிப்பிற்கு வழங்கும் கட்டணமாக அந்த பணத்தை, சோதிடர் அலுவலக கதவின் அடிப்பகுதி வழியாக உள்ளே நுழைக்குமாறு கேட்டுக்கொண்டார். மாஸ்டரை பொறுத்தவரையில், அவர் பணத்தை பயனுள்ள வகையில் செலவழித்து இருந்தார். §§

தேவர்களுடன் ஏற்பட்ட இந்த அனுபவங்கள் துறவிகளின் நம்பிக்கையை வலுப்படுத்தி, அவர்கள் உட்புறமாக திடமான மற்றும் ஆற்றல்மிக்க போராளிகளாக மாற உதவி செய்தன. அவர்களின் துறவற பாதையில் உதவி செய்து ஊக்குவிப்பதற்காகவே தாங்கள் அங்கே இருப்பதாக, தேவர்களே தங்கள் தகவல்களில் உறுதி அளித்தனர். §§

ஒரு புதிய நாட்யம் அல்லது சாதகர் எங்களது மடங்களில் ஒன்றில் நுழையும் போது, அவரது வாழ்முறையை உணர்ந்து, புரிந்து கிரகித்துக் கொள்ளப்படுகிறது. அந்த நாட்யம் அல்லது சாதகரின் கர்மவினை, எல்லா மடங்கள், பணிகள் மற்றும் தனிப்பட்ட சீடர்களின் மொத்த கர்மவினையில் கிரகித்துக்கொள்ளப்படுகிறது. அவர் நமது சைவ சமயத்தின் மகாதேவர்களுக்கு ஒரு சிவனடியாராக, ஒரு அடிமையாக, ஒரு சேவகனாக தன்னை அர்ப்பணித்துக்கொள்ளும் உயரிய செயலை செய்வதால், அவர் தனது பிரமாணங்களை எடுத்துக்கொண்டு, சந்தன மணி மாலைகளை பெற்ற பிறகு, பீடத்தின் மீது வைக்கப்படும் ஒவ்வொரு மலர், ஒவ்வொரு கற்பூர தீபம், உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் மடம் அல்லது ஒரு பணியில் இருப்பவர் செய்யும் சமயம் சார்ந்த ஒவ்வொரு நடவடிக்கையும், அந்த நாட்யம் அல்லது சாதகரின் கர்மவினையில் சிலவற்றை கரைக்கிறது. அவர் தனது வாழ்க்கையில் சீர் செய்துக்கொள்ள சில விஷயங்கள் இருத்தாலும், அவருக்கு இந்த குழப்பத்தில் உதவி செய்ய சிவலோகம், தேவலோகம், கவாய் ஆதீனம், கடவுள் கோயில் மற்றும் அவர் தங்கியிருக்கும் மடம் மற்றும் அவரை சுற்றி இயங்கும் பணிகளில் இருந்து பல உதவிக்கரங்கள் அவரை நாடி வரும். §§

ஒரு நாள் மடத்தின் தோட்டத்தில் உணவுப் பொருட்களை வளர்த்த துறவிகள், “தோட்ட தேவர்களுடன்" ஆலோசிக்க அழைக்கப்பட்டனர். அதில் இருந்து ஒரு பகுதி: §§

நாங்கள் கேளிக்கையுடன் இருக்கிறோம். நீங்கள் எங்களுடன் வேலை செய்ய விரும்பினால், மகிழ்ச்சியாக செயல்பட்டால் போதும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், எங்களுடன் சேர்ந்து செயல்பட்டால் போதும். அற்புதங்களை நிகழ்த்துங்கள்; அவை எங்களுக்கு பிடிக்கும். முட்டைக்கோஸ் இருக்கும் பகுதியில் வெண்டைக்காய் விதையை மறைப்பது வேடிக்கையாக இருக்கும். தோட்டத்தில் ஒரு வகையை மட்டும் வளர்க்காதீர்கள்; எப்போதும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடாதீர்கள். மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக இருந்ததால், அதில் வேடிக்கை எதுவும் இருக்காது. எங்கள் எல்லோரையும் ஒரே நேர்கோட்டில் வளர்க்காமல், சில பகுதிகளாக பிரித்து, நடுநடுவே வித்தியாசமாக ஒன்றை பயிரிட்டால் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கும். நீங்கள் தினமும் பல விதமான மனிதர்களை பார்ப்பதைப் போல, தோட்டத்திலும் பலவிதமான தாவரங்களை பார்ப்பீர்கள். §§

இப்போது கீரை வகைகளை பார்ப்போம். அதை எப்போதும் முட்டைக்கோசுக்கு அருகே வளர்க்கக்கூடாது. முட்டைக்கோசில் பல வகைகள் உள்ளன, அவை அனைத்தையும் தோட்டத்தின் ஒரு மூலையில், கீரைச் செடியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். §§

கீரைச் செடியை பயிரிடும் பகுதியில், அந்த செடியுடன் நன்றாக ருசிக்கும் முள்ளங்கி, வெங்காயம் மற்றும் கீரைச் செடி போன்றவற்றை பயிரிட்டு மகிழுங்கள், ஆனால் முட்டைக்கோசை கீரையிடம் இருந்து விலக்கி வையுங்கள். கீரைக்கு என்று ஒரு ருசி கிடையாது, அதனால் அது நன்றாக ருசிக்க வைக்கும் செடியை அருகில் பயிரிடுங்கள். §§

ஒரு தலைசிறந்த கலைஞருக்கு அவரது கலைத்திறன் சாதரணமாக தோன்றுவதைப் போல, தேவர்களுடன் பேசும் திறமை அவருக்கு சாதரணமாக சிறப்பில்லாததாக தோன்றியதாலும், அன்பர்கள் தங்களுக்குள் இருக்கும் பரமாத்துமாவை நினைத்து சாதனா செய்து தங்கள் சொந்த ஆன்மீக முன்னேற்றத்தை பெறுவதில் கவனம் செலுத்தாமல், இந்த அற்புதங்கள் மீது கவனம் செலுத்துவார்கள் என்பதாலும் துறவிகள் தனது வாழ்க்கையின் இந்த பகுதியை அதிகமாக பயன்படுத்திக் கொள்வதை, மாஸ்டர் விரும்பவில்லை. அதனால் இந்த சிறிய நிகழ்வுகள், அவரது மடத்தில் வழக்கமாக நடப்பது என்பதால், இவை எப்போதும் வெளியிடப்படவில்லை, மற்றும் இணையதளத்திலும் அறிவிக்கப்படவில்லை. §§

அதே சமயத்தில் தனது அந்தர்லோகம் துறவிகளுக்கு உத்வேகம் அளித்து, திரையை சிறிது உயர்த்தி, பாதையில் இருக்கும் சாதாரண யாத்திரிகள் சென்று பார்க்காத, மனிதன் அடையக்கூடிய இன்னொரு பிரஞ்சத்தை வெளிப்படுத்தும் என்பதை அறிந்து இருந்து, அதைப்பற்றி தனக்கு பிரியமான துறவிகளிடம் வெளிப்படையாக மற்றும் அதே சமயத்தில மிகவும் குறைவாக பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயல்பாக இருக்கும் இந்த புலன்கள், விரிவாக்கம் பெறுவதற்காக காத்து இருப்பதாக அவர் குறிப்பிடுவார். இத்தகைய விஷயங்கள் நமது இயல்பான பாரம்பரியமாகவும் ஆத்ம ஞானம் பெறவேண்டிய உண்மையான பணியில் தொல்லை தரும் கவனச்சிதறலாகவும் விளங்குகிறது என்றும், அதை குறைவான உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டால் அது நம்மை உள்ளே இழுத்துக் கொள்ளும் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி மற்றும் மறைஞானத்தின் மீது மயங்கி அத்துடன் நமது தன்னுணர்வை ஈடுபடுத்தினால், அது நம்மை நமது குறிக்கோளில் இருந்து முற்றிலுமாக திசை திருப்பிவிடும், இருபக்க வாளைப் போன்றது என்றும் அவர் குறிப்பிடுவார். அதனால் அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் தொடக்கத்தில் இருந்து இருந்ததாலும், தன் மீதும் தனது பணியின் மீதும் அது தாக்கம் ஏற்படுத்தாமல் இருக்க அவர் கடினமாக உழைத்ததால், இந்த சமநிலை அவருக்கு முக்கியமாக தேவைப்பட்டது. §§