குருமார்களின் சரித்திரங்கள்

Page 34: URL https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/34_guru05_01.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

அத்தியாயம் பத்தொன்பது§

சுப்பிரமுனியசுவாமியின் இளமைப்பருவம்§

எனக்கு தெரிந்து எனது முதல் சூட்சும ஞான அனுபவத்தை, நான் குழந்தையாக எனது தொட்டிலில் படுத்து இருந்த போது பெற்றேன். நான் விழாமல் இருக்க, அதில் சிறிய கம்பிகள் இருந்தன. எனக்கு முன்பாக திடீரென்று, உயரமாக முழுமையாக வளர்ச்சி அடைந்த ஒரு மனிதர், அமைதியாக வெளிர் மஞ்சள் நிற உடையில் நின்றுக்கொண்டு இருந்ததை உணர்ந்தேன். அதன் பிறகு இந்த முழுமையாக வளர்ச்சி அடைந்த மனிதராக இருந்து கொண்டு, இந்த குழந்தையை பார்க்கும் முழுமையான உணர்வை பெற்றேன். பிறகு நான் மீண்டும் குழந்தையின் உணர்வை பெற்று, இந்த மிகப்பெரிய ஆன்மாவை பார்த்துக்கொண்டு இருந்தேன். பிறகு நான் அந்த உயர்ந்த மனிதராக இருந்தேன். அதன் பிறகு நான் மீண்டும் குழந்தையாக இருந்துக்கொண்டு அந்த உயர்ந்த மனிதரை பார்த்துக்கொண்டு இருந்தேன். இவ்வாறு என் உணர்வு இந்த இருவருக்கும் இடையே மாறிக்கொண்டு இருந்தது. உயரமாக வெளிர் மஞ்சள் நிற உடையில் இருந்தவர் ஆனந்தமய கோசம் என்பதை நான் உணர்ந்தேன். நான் தொடர்ந்து ஆன்மீக பக்குவத்தை பெறும் போது, இறுதியாக தூல உடலில் ஆனந்தமய கோசம் முழுமையாக வாசம் செய்யும் என்பதை உணர்ந்தேன். §§

அந்த குழந்தைக்கு ராபர்ட் வால்டர் ஹான்சென் என்ற பெயர் சூட்டப்பட்டது. அவர் பிற்காலத்தில் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமியாக மாறினார். அந்த குழந்தை வால்டர் மற்றும் ஆல்பர்ட்டா நீல்டு ஹான்செனுக்கு ஜனவரி 5, 1927, கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் இருந்த ஃபேபியோலா மருத்துவமனையில் பிறந்தது. அவர் தன் தங்கை கரோல்லுடன், கலிபோர்னியாவில் தஹோ ஏரிக்கு அருகே, ஃபாலன் லீப் ஏரியின் காடுகள் நிரம்பிய கடற்கரைகளில், தனிமையான ஒரு சிறிய குடிசையில் வளர்க்கப்பட்டார். அதிகம் பேசாத வால்டர், கலிபோர்னியாவை சேர்ந்தவர் மற்றும் அவர் பெற்றோர்கள் இருவரும் டென்மார்க் நாட்டை சேர்ந்தவர்கள். கன்சாசில் பிறந்த ஆல்பர்ட்டாவின் தந்தை இங்கிலாந்தில் பிறந்தவர். §§

அவரது தாயும் தந்தையும் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின் மருத்துவ பள்ளியுடன் ஒரு இரகசிய பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் ஒதுக்குப்புறமாக மரக்கட்டையில் கட்டப்பட்ட விடுதிக்கு, அவர் பெற்றோர்கள் எதற்காக காப்பாளர்களாக இருந்தார்கள் என்பதை பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் தாய் இறந்த போது, ஈமச்சடங்கு செலவுகளை விசித்திரமான முறையில் அந்த மருத்துவ பள்ளி ஏற்றுக்கொண்டது. ஸ்டான்போர்டில் நடந்த சம்பவங்கள் பற்றி ராபர்ட் அறிந்திருக்கவில்லை என்பதை, அந்த காலகட்டத்தைப் பற்றி அவர் அளித்த விளக்கம் தெரியப்படுத்துகிறது. §§

இதை உறுதிப்படுத்த உண்மையில் சான்று எதுவும் இல்லை என்றாலும், நான் ஒரு சோதனை குழாய் குழந்தை என்பதை பல்வேறு குறிப்புக்கள் மற்றும் தகவல்களின் மூலம் நான் உணர்ந்துள்ளேன். அந்த குழந்தையை அவர்கள் “டெஸ்ட் ட்யூப் பேபி" என்று அழைப்பார்கள். நான் என் மனதில் அந்த எண்ணங்களுடன் வளர்ந்தேன். எனக்கு நடனத்தை கற்றுத்தந்து தனது மகனாக தத்து எடுத்துக்கொண்ட கிரேஸ் பர்ரோஸ், ஸ்டான்போர்ட பல்கலைகழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சி துறைக்கு என் தாயார் வழங்கிய ஒத்துழைப்பை அறிந்து இருந்தார் என்று நினைக்கிறேன். அந்த காலகட்டத்தில் செயற்கை கருவூட்டல் அல்லது சோதனை குழாய் குழந்தைகள் ஒரு கருத்து வடிவமாகவும், சோதனை நிலையில் மட்டுமே இருந்தது. நான் பிறந்த போது, எங்கள் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த பிரெஞ்சு நாட்டுக்காரர், Dr. சபோவை பார்த்தது எனக்கு நினைவு இருக்கிறது, மற்றும் நான் அவரிடம், இன்று வரை ஒரு தந்தையை போன்ற நெருக்கத்தை உணர்கிறேன். §§

image§

பிறந்து ஒரு சில நாட்களில், குழந்தையாக தொட்டிலில் இருந்த ராபர்ட் ஹான்சென் தனது முதல் காட்சியை கண்டான். அவன் தலை நிமிர்ந்து மேலே பார்த்த போது, அவர் உயரமாக நரைத்த தாடியுடன் இருந்த ஒரு மனிதரின் ஆனந்தமய கோசத்தை கண்டான். உடனே அவன், முழுமையாக பக்குவமடைந்த நிலையில் இருப்பது தானே என்பதை அறிந்துகொண்டான். திடீரென்று, அவர் அந்த மனிதனாக அந்த குழந்தையை பார்த்துக்கொண்டு இருந்தார், அதன் பிறகு மீண்டும் குழந்தை தன்னை பார்த்துக்கொண்டு இருந்தது. பார்வையாளர் நான்கு முறை மாறினார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் தன் வாழ்க்கை முழுவதும் உணர்ச்சிவசப்படாமல், ஆன்மீக பற்றின்மையின் வலுவான உணர்வுடன் இருந்ததற்கு, தனது கருத்தரிப்பு மற்றும் பிறப்பில் உணர்ச்சிகள் இல்லாத அணுகுமுறை காரணமாக இருக்கலாம் என்று அவர் பிற்காலத்தில் தோன்றியது. §§

அந்த சிறிய குடும்பத்தின் வாழ்க்கை கிராமத்தில் கழிந்தது. காடுகளில் தொலை தூரத்தில் இருந்த தஹோ ஏரிப் பகுதி, அமெரிக்காவில் மிகவும் அழகான இடங்களில் ஒன்றாக விளங்கியது, மற்றும் கோடைகாலத்தில் கரடுமுரடாக கட்டப்பட்டிருந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. விருந்தாளிகளை உபசரித்து விடுதியின் பராமரிப்பை கவனித்த வால்டர் மற்றும் ஆல்பர்ட்டா, அந்த விடுதியின் காப்பாளர்களாக இருந்தார்கள். ஆனால் 6,377 அடி உயரத்தில் குளிர் காலம் கடுமையாக இருந்தது; ஹான்சென் குடும்பத்தினர் வழக்கமாக வருடத்திற்கு ஒரு முறை, மிகவும் பழமையான ஃபிர் மற்றும் தேவதாரு மரங்கள் மற்றும் நான்கு முதல் பத்து அடி வரை ஆழமான பனி மழையால் சூழப்பட்டு இருந்தனர். அவர்கள் இவ்வாறு பல பருவங்களை அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து விலகி, குளிர் காலம் வருவதற்கு முன்பாக கவனமாக சேர்த்து வைக்கப்பட்ட டின் உணவுகள் மற்றும் விறகுகளை நம்பி வாழ்ந்து வந்தனர். §§

ஒதுக்குபுறமான இடமாக இருந்தாலும், குழந்தைகளுக்கு அதிகமான கவனத்துடன், பரிசுகள் மற்றும் பொம்மைகளும் கிடைத்தன. கிறிஸ்துமஸ் மரத்திற்கு அடியில் எப்போதும் பரிசுகளின் குவியல் இருந்துக்கொண்டு இருக்கும். குடும்ப சந்திப்புக்களின் போது, அவர்களை சுற்றி இருபது-முப்பது உற்சாகமான சொந்தங்கள் சூழ்ந்து இருப்பார்கள், மற்றும் இருவரின் குழந்தை பருவத்திலும், பெரும்பாலும் ஒவ்வொரு வாரமும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. §§

தன் தங்கை கரோலை விட ராபர்ட் மூன்று வயது மூத்தவனாக இருந்தான், மற்றும் அவன் அவளுக்கு தோழனாக, காப்பாளனாக மற்றும் குழந்தை பராமரிப்பாளராகவும் இருந்தான். அவன் அவளுக்காக பனிமனித பொம்மைகளை உருவாக்குவான், தங்கள் விடுதிக்கு பின்புறம் இருந்த சிறிய சரிவுகளில், ஸ்கூடாபோக் என்ற பெயருடன், மரக்கட்டையில் செய்யப்பட்ட ஒரு பனிச்சறுக்குக் கலத்தை பயன்படுத்தி, அவளுக்கு பனியில் பயணம் செய்யும் நுண்கலையை அறிவுறுத்தி, அவன் சமீபத்தில் தெரிந்துகொண்ட காட்டுவழி பாதையையும் கற்றுத்தந்தான். சகோதரனும் சகோதரியும் சென்ற பள்ளி, ஒரு அறையுடன் மரக்கட்டையில் கட்டப்பட்டு இருந்தது. அந்த பள்ளியில் ஆறு முதல் பதினாறு வரை, ஒவ்வொரு வயதிலும் இருந்த 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே இருந்தார். எப்போதாவது வந்த கடிதமும் பழைய வானொலி மட்டுமே, குளிர்காலத்தில் அவர்களது வெளியுலக தொடர்பாக இருந்தன. அந்த வானொலி அவர்களுக்கு செய்திகளுடன், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ஒவால்டின் விளம்பரதாரர்களாக இருந்த ஒலித்தாக்கம் நிரம்பிய நாடகங்களையும் வழங்கின. §§

ராபர்ட் விளையாட்டில் ஆர்வம் காட்டினான். அவர் தந்தை அவனுக்கு தச்சு வேலை, மேசையை உருவாக்குவது, கருவிகளை தயாரிப்பதில் ஊக்குவிக்க விரும்பினார், ஆனால் அவனுக்கு அவற்றில் ஆர்வம் இல்லை. அவனுக்கு குளிர்காலத்தில் பனியில் வெறுங்காலுடன் நடப்பது, படகு சவாரி, பனிச் சறுக்குதல் மற்றும் பனியில் நடந்து செல்வது பிடிக்கும். அவன் பெரும்பாலும் வழித்தடங்கள் மற்றும் பாதைகள் அல்லது மரங்கள் படர்ந்த பகுதியில் விளையாடினான். கோடை காலத்தில், அவன் ஏரியில் இருந்த ஒரு பாறைக்கு நீந்தி சென்று தியானம் செய்வான். அவன் நீட்டமாக படுத்துக்கொண்டு, தனக்கு பாறையின் உணர்வு வரும் வரை உட்புறமாக சென்றுகொண்டு இருப்பான். அவன் மேல்நோக்கி பார்த்து வானம் மற்றும் பாறை மற்றும் தன்னை சுற்றி இருக்கும் அனைத்திலும் இறைவன் வியாபிப்பதை உணர்வான். §§

“நான் தற்போது நன்றாக இருக்கிறேன்”§

ராபர்ட்டுக்கு மிகவும் பிடித்தமான வானொலி நிகழ்ச்சியாக “தி லோன் ரெஞ்சேர்" விளங்கியது. துணிச்சலான சம்பவங்கள் நிரம்பிய, இந்த தொடர் நாடகம் 1933 முதல் 1954 வரை ஒலிபரப்பப்பட்டது. இந்த கதையின் கதாநாயகனாக இருந்த டெக்ஸாஸ் ரெஞ்சேர் முகத்தில் முகமுடி இருக்கும். அவன் தன்னுடன் டோண்டோ என்ற புத்திசாலி இந்திய கூட்டாளியுடன், அநீதிகளை சீர் செய்ய தனது குதிரை சில்வரின் மீது ஏறி விரைந்து செல்வான். வாரத்திற்கு அரை மணிநேரம் ஒலிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி, ஆர்வத்துடன் இருந்த சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. அவர்களில் ஹான்சென் சகோதர-சகோதரி ஜோடி, எந்த ஒரு தொடரையும் தவறவிட்டது இல்லை. §§

1930 களின் தொடக்கத்தில், குளுமையாக இருந்த ஒரு டிசம்பர் மாத காலைப்பொழுதில், வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்களை வாங்க மற்றும் தங்களுக்கு வந்த கடிதத்தை பெறுவதற்கு, வீட்டில் இருந்து மூன்று மைல் தூரத்தில், சவுத் லேக் தஹோவில் இருந்த ஒரு கிராமத்திற்கு ராபர்ட் தனது தந்தையுடன் சென்றார். அந்த காலத்தில் இருந்த வாகனங்களைப் போல, தங்கள் தேவைக்கேற்ப ஒரு சரக்கு வண்டியை தயார் செய்தனர். பனிக்காலங்களில் நல்ல சாலைகளை தேடும் அவசியம் இல்லாமல், அந்த வண்டியில் முன்பக்க சக்கரங்களுக்கு பதிலாக இரண்டு பெரிய பனிநடை கட்டைகள் பொருத்தப்பட்டு இருந்தன. மற்றும் மேலோட்டமாக நிரம்பியிருந்த பனிகள் மீது பயணம் செய்ய, வாகனத்தின் பின்புறத்தில் இரட்டை சக்கரம் கொண்ட இரும்பு ஸ்னோ டிராக்ஸ் பொருத்தப்பட்டு இருந்தன. அதன் மேற்புறம் துணியால் மூடப்பட்டு இருந்தது, சன்னல்கள் எதுவும் இல்லை மற்றும் பின்புறம் தேவையான பொருட்களை சுமந்து செல்ல ஒரு நீளமான திறந்த வெளிப்பகுதி இருந்தது. அன்று தந்தையும் மகனும் மெதுவாக சென்றுகொண்டு இருந்தார்கள், மற்றும் அது அவனுக்கு வேதனையாக இருந்தது. அன்று மாலையில் “தி லாங் ரேஞ்சர்” தொடர் ஒலிபரப்பாக இருந்தது, மற்றும் அந்த ஒரு தொடரை கேட்காமல் இருப்பதைப் பற்றி அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு விநோதம் நடக்கவிருந்தது. அந்த தருணத்தை அந்த சிறுவன் வாழ்க்கை முழுவதும் மறக்கவில்லை. §§

பனியில் பயணம் செய்யும் எங்கள் வாகனம் அடிக்கடி பனியில் நின்றுவிடும். நாங்கள் முன்னேறுவதற்கு தடையாக இருந்த பனிக்கட்டிகளை என் தந்தை இறங்கி நகர்த்துவதற்கு, ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் ஆகும். நாங்கள் ஒவ்வொரு முறை அந்த கிராமத்திற்கு சென்று வீடு திரும்பும் போதும், எனக்கு பிடித்தமான வானொலி நிகழ்ச்சியை பார்க்க சரியான நேரத்தில் வீடு திரும்ப வேண்டுமே என்ற கவலை, என் சிந்தனை சக்தியை வருத்துவதை கவனித்தேன். “கேப்டன் மிட்நைட்,” “தி லோன் ரேஞ்சர்” மற்றும் “ஜாக் ஆர்ம்ஸ்டிராங், தி ஆல் அமெரிக்கன் பாய்” போன்ற நிகழ்ச்சிகளின் தொடரை தவறவிடுவது எனக்கு பிடிக்கவில்லை. §§

எப்போதும் கவலையில் இருக்கும் மனதின் பகுதி மீது, எனக்கு அப்போது முதல் முறையாக விழிப்புணர்வு கிடைத்திருந்தது. நான் அந்த பகுதியில் விழிப்புடன் இருந்தாலும், எனக்கு அது பிடிக்கவில்லை. “நீ இப்போது நன்றாக இருக்கிறாய். நாம் இன்னும் பனியில் சிக்கிக்கொள்ளவில்லையே?” என்று மனதுக்குள் பேசிக்கொண்டது எனக்கு தெளிவாக நினைவில் இருக்கிறது. அந்த சிறு வயதில், எப்போதும் கவலையில் இருந்த மனதின் பகுதியை விட்டு சாட்சி வெளியே வந்து, இங்கே மற்றும் இப்பொழுதின் முழுமையான சுயநினைவுக்குள் நுழைவதை நான் உண்மையில் உணர்ந்தேன். அதன் பிறகு சாட்சி தற்பொழுதில் இருந்து கடந்த காலத்திற்கு சென்று, “நான்கு நாட்களுக்கு முன்பாக, நாங்கள் பனியில் சிக்கியிருந்த போது, என் தந்தை சிக்கியிருந்த வாகனத்தை மீட்க கடுமையாக போராடினார். நாங்கள் அன்று ஒரு மணி நேரம் தாமதமாக வீடு திரும்பினோம்,” என்று சிந்திக்க தொடங்குவேன். அப்போது என் சாட்சி கடந்தகாலத்திற்கு பயணம் செய்ததை பார்த்தேன். அதன் பிறகு நான் என்னிடம் அதிக உறுதியாக, “நான் தற்போது நன்றாக இருக்கிறேன். நமது பயணத்தில் தாமதம் ஏற்படவில்லை,” என்று சொல்லிக்கொள்வேன். அப்போதும், சாட்சி தற்பொழுதை நோக்கி சாட்சி பயணம் செய்வதை உண்மையில் உணர்ந்தேன். §§

இது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாக மாறிவிட்டது. அந்த சமயத்தில் இருந்து, எனது நுண்ணறிவை எதிர்காலத்திற்கு செல்ல அனுமதித்து, அந்த கண்ணோட்டத்தில் செயல்பட முற்படுவது அல்லது கடந்தகாலத்தில் பின்னோக்கி சென்று அங்கே ஒரு தீர்வு காண முற்படுவதை தவிர்த்து, மனதின் சாரத்திற்குள் ஏதாவது தோன்றும் போது, நான் அந்த கணத்தில் இருந்துக்கொண்டு அதை சமாளித்து சரி செய்யும் திறமையை பெறும் வரை, எனக்குள் நொடிப்பொழுதின் நித்தியசக்தியில் இருந்த முழுமை வலுவடைந்து கொண்டிருந்தது. அந்த சிறிய வயதில், இத்தகைய ஒரு அழகான மற்றும் எளிமையான வகையில், இவையும் மேலும் பல விஷயங்களும் எனக்குள் விரிவாக்கம் பெற்றது. §§

ராபர்ட் சிறுவனாக இருந்த போதும், அவன் மனம் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் சிறந்ததை எடுத்துக்கொண்டதாக தோன்றியது. ஆனால் அந்த சிறுவயது அனுபவங்கள் அனைத்தும் அவனது திறமைக்கு இணங்கியதாக இருக்கவில்லை. §§

அந்த காலத்தில் கிறுத்துவ தேவாலயத்திற்கு செல்வது கட்டாயமாக இருந்தது மற்றும் குழந்தைகளும் அதற்கு விதிவிலக்கு இல்லை. அவன் பாதிரியாரிடம் சில கேள்விகளை கேட்பான், ஆனால் அவர் சிறுவனின் கேள்விக்கு பதில் அளிக்கமாட்டார். “அதனால், நான் எதற்காக செல்ல வேண்டும்?” என்று அவன் தாயிடம் கேள்வி கேட்பான். அவள் பாதிரியாரிடம், “தயவு செய்து அவனை வற்புறுத்த வேண்டாம்,” என்று கேட்டுக்கொள்ள, அவரும் கனிவாக ஏற்றுக்கொண்டார். அவனுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தோன்றுகிறது, மற்றும் ராபர்ட் கிறுத்துவ தேவாலயம் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பள்ளி செல்வது திடீரென்று நின்று விட்டது. §§

ராபர்ட் அனாதை ஆனான் §

ராபர்ட்டுக்கு ஒன்பது வயதாக இருந்த போது, தனது வாழ்நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் துணிகரமான பெண்மணியாகவும் இருந்து, இயற்கை மீது அன்பு செலுத்தி, தனது சொந்த தோட்டத்தில் மூலிகைகளை பறித்து வந்த, அவன் தாயின் உடல்நலம் குன்றியது. அவளுக்கு சித்தபிரமை ஏற்பட்ட சமயத்திலும், அந்த சிறுவன் தன் தாயை கவனித்துக்கொண்டான். ஜூலை 1937 முதல், அவள் பெர்க்லியை சேர்ந்த Dr. மல்கம் ஹாட்டனின் கவனிப்பைப் பெற்றாள். மாதங்கள் செல்ல செல்ல அவள் நிலைமை மோசமாகியது. நவம்பர் மாத தொடக்கத்தில் அவள் ஓக்லாண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நவம்பர் 11, 1937, பெருமூளை நாடிகளின் இறுக்கம் மற்றும் நீடித்த இதயத் தசை வீக்கம் காரணமாக ஆல்பர்ட்டா இறந்து, 10 மற்றும் 7 வயதான குழந்தைகளை தனது கணவனின் பொறுப்பில் விட்டு சென்றாள். அவள் உடல் தகனம் செய்யப்பட்டது. §§

ஹான்சென் குடும்பத்திற்கு நெருக்கமான தோழியாக, அவர்கள் வீட்டிற்கு அருகில் தனது கணவருடன் வசித்து வந்த கிரேஸ் பர்ரோஸ், அந்த குழந்தைகளுக்கு ஒரு தாயைப் போன்ற கவனிப்பை வழங்கினாள். தனது மனைவியின் மரணத்தால் தனியாக அதிக சுமையுடன் இருந்த வால்டர், இறைவனின் கருணையால் ராபர்ட் மற்றும் கரோலை வளர்த்து வந்தார். அந்த ஒதுக்குப்புற காட்டில், தேக ஆரோக்கியத்துடன் இருக்கும் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்து வாழ்வதே கடினமாக இருக்கும், ஆனால் ஒருவர் எல்லா பொறுப்பையும் ஏற்றுக்கொள்வது மிகவும் கடுமையாக இருக்கும். §§

அந்த குடும்பம் எதிர்பார்த்ததைப் போலவே அதிக இன்னல்களுடன் குளிர்காலத்தை எதிர்கொண்டது, ஆனால் வாழ்க்கை முன்பு போல இருக்கவில்லை. எந்த ஒரு தகப்பனும் தனது குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து முகம் சுழிப்பதைப் போல, வால்டரும் நடந்துகொண்டார். அவர் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, நேவெடா கேசினோ மதுபான கூடங்களுக்கு சென்று, அதிகமாக குடிக்க ஆரம்பித்தார். இதுவே வேதனையின் தாக்கம் பற்றி, ராபர்ட் பெற்ற முதல் பாடமாக இருந்தது. §§

மனைவியின் மரணத்திற்கு சில மாதங்கள் பிறகு, இனம் புரியாத காரணத்தினால் தூண்டப்பட்ட வால்டர், தன் மகனை பெல்ட்டினால் அடிக்க ஆரம்பித்தார். இரக்கமற்ற முறையில் தன் தந்தை அடித்ததால், தீவிரமான அதிர்ச்சிக்கு ஆளான ராபர்ட், அந்த அடியை மறக்கவில்லை. அவர்கள் இருவரும் அதன் பிறகு பேசிக்கொள்ளவும் இல்லை. §§

டிசம்பர் 9, 1938, பில் பர்க் என்று உள்ளூரில் கல் உடைக்கும் தொழிலாளியுடன், வால்டர் வீட்டில் இருந்து நகரத்தை நோக்கி வாகனத்தில் கிளம்பினார். வெளியே வானிலை மோசமாக இருந்தது. அவர்கள் சென்ற வாகனத்தின் மீது இன்னொரு வாகனம் மோதி, இவர்கள் சென்ற வாகனம் சாலையில் தூக்கி எறியப்பட்டு, ஒரு மரத்தின் மீது மோதியது. பர்க் சம்பவ இடத்திலேயே இறந்தார், ஆனால் வால்டர் உடலின் மேற்பகுதி சிதைந்து இருந்தது மற்றும் இரண்டு கால் எலும்புகளும் உடைந்து இருந்தன. வால்டரின் பக்கத்து வீட்டில் இருந்த நண்பர் அவரை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார், மற்றும் அன்று இரவு அவர்கள் அவரை ரெனோவில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருந்த அவரது கால்கள் மற்றும் விலா எலும்புகளை குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர், ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரது நிலைமை மோசமாகி, அவர் டிசம்பர் 14 அன்று தனது 50 ஆவது வயதில், நிமோனியா காய்ச்சலுக்கு இரையானார். §§

வால்டரின் சொத்து குழந்தைகள் நலன் கருதி ஒரு அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு வால்டரின் பெற்றோர்கள் புதைக்கப்பட்ட, கலிபோர்னியாவின் அபர்ன் நகரில் நடைபெற்றது. குடும்பத்தினர் ராபர்ட்டிடம் எவ்வளவு கெஞ்சினாலும், அவன் அந்த சடங்கில் கலந்துகொள்ள மறுத்துவிட்டான். தனது 12 ஆவது பிறந்தநாளுக்கு சில நாட்கள் இருக்கையில், அவன் அனாதை ஆனான். §§

image§

ஒதுக்குப்புறமான காடுகளில் வளர்ந்த ராபர்ட், சிறுவயதில் பனிக்கட்டியில் மனித பொம்மைகளை உருவாக்குவான். அவன் தனது ஒன்பதாவது வயதில், தனது தந்தையுடன் பயணம் செய்த போது, பனியில் அவர்கள் சங்கிலி இழுவை வாகனத்தில் சிக்கி, தனக்கு பிடித்தமான வானொலி நிகழ்ச்சியை கேட்க முடியாது என்ற கவலையில் இருந்த போது, அவன் நிரந்தரமான தற்பொழுதைப் பற்றி தெரிந்துகொண்டான். “நான் தற்பொழுது நன்றாக இருக்கிறேன். அந்த சம்பவம் இது வரை நடக்கவில்லை,” என்று தனக்கு உறுதியளித்துக் கொண்டு, அச்சத்தில் இருந்து விடுதலை பெற்றான். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

என் வாழ்க்கையில் நான் இரண்டு முறை அடி வாங்கினேன். ஒரு முறை, திறந்த உள்ளங்கையில் இரண்டு அடிகளை வாங்கினேன். அதன் பிறகு என் தந்தை என்னை பெல்ட் மூலம் அடித்தார். அதன் பிறகு நான் அவருடன் பேசவில்லை. நான் அவரது இறுதிச்சடங்கிற்கு செல்ல மறுத்துவிட்டேன். §§

பிற்காலத்தில், அவரது சிறுவயது பற்றி அவரது மடவாசிகள் கேள்வி கேட்டபோது, அவர் பின்வரும் பகிர்வை வழங்கினார்: §§

நான் சிறுவனாக இருந்த போது, பெரியவர்களால் ஏமாற்றம் அடைந்து, “என்னை விட வயதில் மூத்தவர்கள் சொல்வதை, இனி கேட்கப்போவது இல்லை,” என்று முடிவு செய்தேன். அந்த சமயத்தில், நான் அனாதையாக இருந்ததால், என்னால் என் விருப்பப்படி நடந்துக்கொள்ள முடிந்தது. யாருடைய பேச்சையும் கேட்கவேண்டிய அவசியமில்லை. அதனால் நான் என்னுடைய உட்புற ஆன்மா சொல்வதை கேட்டு, நடனமாடத் தொடங்கினேன். எதற்காக? ஏனென்றால் இறைவன் நடனமாடியதாக கேள்விப்பட்டேன். நடராஜர் நடமாடி இருந்தார். எனக்கு எட்டு-ஒன்பது வயதாகி இருந்த போது எனக்கு பிராணாயாமம், அடிப்படை ஹட யோகம் கற்றுத்தரப்பட்டு இருந்தது. அதன் பிறகு எனது பதின்ம வயதின் போது கவனம் செலுத்துவது, கவனத்தை ஒருங்கிணைப்பது மற்றும் தியானம் செய்வது பற்றி கற்றுக்கொண்டேன். §§

ஃபாலன் லீப் ஏறியில் கிரேஸ் பர்ரோஸ் நடத்திய நடனப்பள்ளிக்கு, அவன் கோடைகாலத்தில் சென்றதைப் பற்றி குறிப்பிட்டுக் கொண்டிருந்தான். ஆல்பர்ட்டாவின் மரணத்திற்கு பிறகு வந்த கோடைகாலத்தில், அவன் தந்தை அந்த பள்ளியில் அவன் பெயரை பதிவு செய்து இருந்தார். தனது இருபது வயதுகளின் மத்தியில், அழகான வட்டவடிவ முகம் மற்றும் கிழக்கத்திய நாடுகளின் தோற்றத்துடன், நெப்ராஸ்காவில் 1895 ஆம் ஆண்டு பிறந்த கிரேஸ், டெனிஷான் நடனக்குழுவுடன் மூன்று வருடங்கள் உலகப்பயணம் மேற்கொண்டார் மற்றும் சுமார் ஒரு வருடத்திற்கு மைசூர் மகாராஜாவின் அரண்மனையில் விருந்தாளியாக இருந்துக்கொண்டு இந்திய நடனம், கலாச்சாரம், கலை மற்றும் தத்துவத்தை கற்று இருந்தார். §§

“நான் நடனமாட விரும்புகிறேன்”§

கிரேஸ் இந்திய மற்றும் ஐரோப்பிய நடனம், இந்திய கலாச்சாரம் மற்றும் தியானம் செய்யும் நுணுக்கமான கலையில் ராபர்ட்டுக்கு பயிற்சி அளித்தார். இந்த கலாச்சார அறிமுகம் ராபர்ட்டை உற்சாகப்படுத்தியது, மற்றும் நடனத்தில் இருந்த கலைத்திறன் மற்றும் ஒழுக்கம் அவன் கவனத்தை முழுமையாக கவர்ந்தது. இது பதின்ம வயதை கடந்த இருந்த அவனுக்கு, அவனது முதல் குறிக்கோள் மற்றும் இலக்கை வழங்கியது. இதைப்பற்றி அவன் பலவருடம் கழித்து நினைவுக்கூர்ந்தான்:§§

image§

ராபர்ட் என்ற சிறுவனுக்கு, சிவபெருமான் நடனத்தின் அரசரான விளங்கும் நடராஜர் மூலம் அறிமுகமானார். ஆசிரியர் அவனுக்கு வழங்கிய ஒரு சிறிய நடராஜர் சிலையை, ஒரு பாறையில் தயாரித்த பெரிய பீடத்தில் மெழுகுவர்த்திகளுடன் வைத்து இருந்தான்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

எனக்கு சுமார் பத்து வயது இருந்த போது, நான் பெரியவன் ஆனதும் என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி தெரிந்துகொண்டேன். “நான் நடனமாட வேண்டும்,” என்று என்னிடம் கூறிக்கொண்டேன். அது எனது உட்புற ஆழத்தில் இருந்து வந்து இருந்தது. இசை எப்போதும் உட்புற உடலின் உட்புற சக்தியை இயக்கி, இறுதியாக தசைகள் நகர்ந்து உடல் நடனமாடத் தொடங்கும். இந்து சமயத்தில், உணர்ச்சி வெளிப்பாட்டின் மிகவும் உயரிய வடிவமாக நடனம் கருதப்படுகிறது. அதன் காரணமாக, பழங்கால கலாச்சாரம் தழுவிய கோயில்களில் வழிபடுவதற்கு நடனம் பயன்படுத்தப்படுகிறது. நடனத்தின் மறைஞான வடிவங்கள் மூலமாக தூல உடலில் இருக்கும் ஓட்டங்கள், மனோமய கோசம் மற்றும் ஆனந்தமய கோசத்தின் இயக்கங்களை பற்றி தெரிந்துகொள்கிறோம். தியானம் செய்யும் நாட்டியக்காரர், இசையால் ஊக்குவிக்கப்பட்டு, முதலில் உட்புற ஓட்டங்கள் இயங்குவதையும், இறுதியாக தூல உடல் இயங்குவதையும் தெரிந்துக்கொள்கிறார். இது சாட்சியை சீரான, விரைவான மற்றும் முறையான பாதையில் மனதின் உட்புற, மெய்ஞ்ஞான உலகங்களுக்குள் வெளியிடுகிறது. நான் எனது நடன வாழ்க்கையை ஒரு நடனத்தைப் போல தொடங்கி, நடனமாக மாற்றமும் பெற்றேன். §§

அந்த இளவயது கலைஞன் கற்பதில் ஆர்வத்துடன் இருந்தான், மற்றும் ஒருமுக கவனத்துடன் இருந்த ஒரு மாணவனை பெற்றதில் திருமதி. பர்ரோஸ் உற்சாகத்துடன் இருந்தார். அவர் அவனுக்கு, இயல்பான உலகின் சக்திகளை ஒரு பாரம்பரிய முறையில் வெளிப்படுத்தும், இந்தியாவின் மணிப்புரி நடனத்தை கற்றுத்தர முடிவு செய்தார். §§

எனக்கு முதல் தூண்டுகோலாக விளங்கிய கிரேஸ் பர்ரோஸ், இந்தியாவின் நடனம் மற்றும் அனைத்து கலாச்சார கலைகளிலும் ஆர்வத்துடன் இருந்தார். அவர் மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஒரு முழுமையான கலாச்சார மையமாக அப்போது விளங்கிய சான் பிரான்சிஸ்கோவில், இந்தியா தொடர்பான கலைகளில் ஆர்வத்தை தூண்டுவதில் முதலாவதாக விளங்கினார். அவர் இசை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை அழைத்து வந்தார். அவருக்கு இந்தியாவில் அரண்மனையை போன்ற சூழலில், இந்து தர்மத்தின் பாரம்பரிய இசை தொடர்ந்து வாசிக்கப்பட்ட நிலையில், பெண்கள் புடவையை அணிந்து இருக்க, தட்டுகளில் உணவு வழங்கப்பட்டு, இராஜ மரியாதையுடன் ஆடம்பரமாக மைசூர் பாரம்பரியத்தை வளர்த்து, ஊக்குவித்து கற்றுத் தரப்பட்ட யோக மற்றும் கலாச்சார பயிற்சிகளை எனக்கு கற்றுத்தந்தார். §§

எனக்கு பன்னிரண்டு வயதாக இருந்த போது, கைகளை கொண்டு சாப்பிடுவது, தலைப்பாகை அணிவதைப் பற்றிக் கற்றுக்கொண்டேன். அதுவே எனக்கு அடுத்த வருட உடையாக இருந்தது. எப்படி நடனமாட வேண்டும் என்று எனக்கு கற்றுத் தரப்பட்டது; எனக்கு அப்போது மணிப்புரி நடனம் கற்றுத்தரப்பட்டது. அவர் எனக்கு ஒருமுக சிந்தனை மற்றும் தியானத்திலும் கவனமாக பயிற்சி வழங்கினார். நாங்கள் அவரது மரக்குடிசையில் அமர்ந்துகொண்டு, கண்ணாடி போன்று காட்சி அளித்த ஏரியை பார்த்து, அதை சிந்தனை இல்லாத மனதின் அமைதியுடன் ஒப்பிட வேண்டும். காற்று மற்றும் மூச்சு நெருப்பை இயக்கும் போது, இசைக்கு நெருப்பு தானும் நடனமாடுவதை போல தோன்ற, நான் எந்த ஹோம குண்டத்திற்கு முன்பாக நடனமாட கற்றுக்கொண்டேன், அதை சுற்றி விளக்குகளை ஏற்றும் சடங்கு முடிந்ததும் நாங்கள் தியானமும் செய்வோம். பிரபஞ்சம் (அந்த காலத்தில் அது எனக்கு ஒரு பெரிய வார்த்தையாக தோன்றியது), நட்சத்திரங்கள், விண்மீன் மண்டலம் மற்றும் மனிதநேயம் மற்றும் மற்ற அனைத்தையும் உருவாக்கி, பாதுகாத்து மற்றும் அழிக்கும் கடவுளான சிவபெருமானை நினைத்து எப்படி தியானம் செய்வது என்று கற்றுத்தரப்பட்டது. உடுக்கை ஒலிக்கு ஏற்ப சிவபெருமான் தனது கால்களை உயர்த்தி ஆடும் தாண்டவத்தை, நான் ஒரு வருடம் முன்பாக கற்று இருந்தேன். §§

நடராஜ மூர்த்தியின் மூலம் நான் சிவபெருமானின் அறிமுகத்தை பெற்றேன். அந்த சிறு வயது நினைவுகள், இந்தியா மற்றும் இந்திய கலாச்சாரம் பற்றிய நீளமான கதைகள் மற்றும் உரையாடல்களுடன் மனதில் நிலைத்து இருக்கும். அந்த பள்ளியில் எனக்கு தெரிந்த வரை இந்திய துணிகள், புடவைகள், வேட்டிகள் மற்றும் கலைப்பொருட்கள் நிரம்பி இருந்தன. §§

image§

தலைப்பாகை கட்டுவது மற்றும் கைகளால் சாப்பிடுவது பற்றி, ராபர்ட்டின் சிறு வயது வழிகாட்டிகள் கற்றுத்தந்தார்கள். அவனது அத்தை அவனை, அழைத்து சென்ற நவீன மற்றும் பாரம்பரிய மேடை நிகழ்ச்சிகளில், எக்டோபிளாசம் என்ற பொருளால் சூட்சும சக்திகளை வெளிப்படுத்திய மனோஉணர்வு கண்காட்சிகளும் அடங்கும். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவனுக்கு கிரேஸ் பல விஷயங்களை கற்றுத் தந்தார். அவர் அந்த சிறுவனிடம் திருத்தும் தேவையை உணர்ந்த போது, மென்மையான ஒழுங்குப்படுத்தும் முறையை கையாண்டார். அந்த செயல்முறை நேரடியாக இல்லை. ஆனால் பாறையில் தயாரிக்கப்பட்ட பீடத்தின் மீது, இருவரும் ஏற்றுக்கொண்டு இடத்தில் தனது கைப்பட சில திருத்தங்களை கிரேஸ் எழுதி வைப்பார். ராபர்ட் அடிக்கடி அந்த இடத்திற்கு சென்று, அவர் எழுதிய குறிப்பை படித்து தன்னை திருத்திக்கொள்வான். எல்லாம் மிகவும் பண்பட்ட முறையில் நடந்தது.§§

நாங்கள் திருத்தங்களை பற்றி என்றுமே நேருக்கு நேராக பேசிக்கொள்ளவில்லை. நான் படிப்பதற்காக ஒரு புனிதமான இடத்தில் ஒரு குறிப்பை எழுதி வைத்து, அவர் எனக்கு தண்டனை வழங்கினார். நான் அதை சிறிது அவமானத்துடன் படித்து, முழுமையாக புரிந்துக்கொண்டு என்னை திருத்திக் கொண்டேன்.§§

தந்தையின் மரணத்திற்கு பிறகு, ராபர்ட் முழுமையாக கிரேஸின் உலகிற்குள் சென்று விட்டான். ரோசிக்ரூசிய சமூகம் மூலம் தீட்சை பெற்று, மறைபொருள் ஆய்வு பற்றி அதிகம் அறிந்து இருந்த கிரேஸ், அந்த சிறுவனின் நடனத்தில் இருந்த ஆன்மீக பண்பை உணர்ந்து இருந்தார். அவரது முன்னிலையில் ராபர்ட்டின் ஆன்மீக விரிவாக்கம் தொடங்கியது. அது அவனது தொடக்க காலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. அவர்களுக்குள் ஒரு நல்ல புரிந்துணர்வு இருந்தது. அவர் மிகவும் சிறப்பான முறையில் விநோதமாக, ஒரு நிஜ வாழ்க்கை ஆன்டி மமே (ஒரு பிரபல ஆங்கில நாவலின் கதாநாயகி) போன்று இருந்தார். §§

ஹான்சென் குழந்தைகளுக்கு கிரேஸ் பாதுகாவலராக இருக்க விரும்பினார், ஆனால் அந்த கலைஞரின் விசித்திரமான நடவடிக்கைகளை அறிந்திருந்த சொந்தங்கள், அதற்கு மதிப்பு அளிக்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக, ராபர்ட்டிற்கு பிடித்த அவனது அத்தை ஹெலனை, அவர்களுக்கு பாதுகாவலராக நியமித்தார்கள். அவர் ஒரு சுத்தமான பெண்மணியாகவும், ஒரு கிறிஸ்டியன் சைந்டிஸ்ட் என்ற சமூகத்தின் அங்கத்தினராக இருந்தார். குழந்தைகளை வளர்க்க தன்னிடம் பணவசதி இல்லை என்பதை ஹெலன் உணர்ந்ததும், தனது கிறுத்துவ தேவாலயத்தில் குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள ஒரு குடும்பத்தை தேடிப்பிடித்தார். 1939 ஆம் ஆண்டு முதல், மெல்வில் மற்றும் புளோரா ஹாமில்டன் தம்பதியர், அழகான தோட்டங்கள் மற்றும் ஒரு குலத்துடன் இருந்த, தங்களது ஓக்லாண்டு ஹில்ஸ் வீட்டில், இந்த குழந்தைகள் பராமரிப்பை தொடர்ந்தனர். குழந்தைகளுக்கு கிறிஸ்டியன் சயன்ஸ் சமூகத்தின் பின்னணி தெரிவிக்கப்பட்டது, மற்றும் அதில் இருந்து ராபர்ட் மனதை குணப்படுத்தும் சக்திகள், ஆன்மீக பாதை மற்றும் சமய சகிப்புத்தன்மையின் மனநிலையை கற்றுக்கொண்டார். §§

இது ஒரு புறம் இருக்க, தந்தையின் மரணத்திற்கு பிறகு, இளம் ராபர்ட்டின் வாழ்க்கையில் கிரேஸ் பர்ரோஸ் மிகவும் முக்கியமான சக்தியாக இருந்தார். அவர் அவனை கோடைகாலத்தில், பாலன் லீப் ஏரியில், “அழகான கனவு" என்று பொருள்படும், போ ரெவ் என்று அவர் பெயரிட்டிருந்த ஒரு மரக்குடிசையில் தான் நடத்திய பள்ளிக்கு அழைத்து சென்று விடுவார். வருடத்தில் மீதமிருந்த நாட்களில், பெர்க்லியில் அவன் அடிக்கடி தென்பட்டான். அவர் ராபர்ட்டிற்கு, அவனது ஒன்பதாவது வயதில் இருந்து பதினான்காவது வயது வரை, கிழக்கத்திய உடை மற்றும் கலாச்சாரம், மணிப்புரி நடனம் மற்றும் பாலே கற்றுத்தந்தார். §§

கிரேஸ் எனக்கு, நான்கு முதல் ஏழு வயது வரை இருந்த சிறு குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியராக இருந்து கண்காணிக்கவும் பயிற்சி அளித்தார்! நான் கிரேஸ் பரோஸின் நடனப்பள்ளியில் ஆசிரியராக இருந்தேன்! அந்த சிறிய வயதில் நான் நன்றாக பாடம் நடத்தினேன் என்று சொல்லியாக வேண்டும். அவர்கள் தாங்கள் கற்றத்தை அழகாக வெளிப்படுத்தினார்கள், மற்றும் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதால் நானும் கற்றுக்கொண்டேன். §§

இறுதியாக, முதல் தூண்டுகோலிடம் இருந்து கற்கவேண்டியதை நான் முழுமையாக கிரகித்துக்கொண்டதும், அவர் என்னை இரண்டாவது தூண்டுகோலாக இருந்த ஹில்டா சார்ல்டனிடம் அறிமுகப்படுத்தினார். உட்புற ஒளி தோன்ற தொடங்குவதற்காக தூல உடல், உணர்ச்சிகளின் உடல் மற்றும் ஆன்மீக உடலைக் கொண்ட, இந்த முழு உயிர்சக்தியையும் எப்படி மையப்படுத்துவது என்று அவர் எனக்கு பொறுமையாக கற்றுத்தந்தார். இந்த தூண்டுகோலின் துணையுடன், நான் கலிபோர்னியாவின் பெர்க்லியில், நான் எனது முதல் உட்புற ஒளி அனுபவத்தை பெற்றேன். §§

“அப்படி என்றால் நான் தான் கடவுள்”§

ஹில்டா சார்ல்டன் அதிக பக்தியுடன் தொடர்ந்து தியானம் செய்து வந்தார். அவர் மனோஉணர்வு செயல்முறைகள் மீது விழிப்புணர்வை பெற்று இருந்தார் மற்றும் ராபர்ட் தனக்கு வழங்கப்பட்ட போதனைகளில் ஆழமாக சென்றுகொண்டு இருக்கிறார் என்பதை முன்னுணர்வின் மூலம் அறிந்து இருந்தார். §§

அவர்கள் முதன்முதலில் சந்திந்த சில நாட்களில், அவர் அந்த பதின்ம சிறுவனிடம், “நீ யார் என்று உனக்கு தெரியுமா?” என்று கேட்டார். அந்த கேள்வி அவனை திகைக்க வைத்தது, மற்றும் சிறிது நேரம் கழித்து அந்த கேள்விக்கு தனக்கு பதில் தெரியாது என்று கூறினான். அதன் பிறகு அவர், “நாம் அடுத்த முறை சந்திக்கும் போது, நீ அதற்கு பதில் சொல்லவேண்டும்,” என்று கூறி அனுப்பினார். §§

அதைப்பற்றி ஒரு சில நாட்களுக்கு யோசித்த பிறகு, அவன் கிறிஸ்டியன் சயன்ஸில் கேட்டிருந்த தகவலில் இருந்து எடுக்கப்பட்ட, ஒரு அறிப்பூர்வமான பதிலை சொல்ல முடிவு செய்து இருந்தான். அடுத்த சந்திப்பின் போது, “நான் கடவுளின் அங்கமாக இருக்கிறேன்,” என்று பதில் சொன்னான். அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்த பிறகு மிகவும் மெதுவாக, “நீ கடவுளின் அங்கமாக இருப்பதை சித்தரிக்கும் வண்ணம், நீ கடலில் இருக்கும் ஒரு நீர்க்குமுழியாக இருந்து, அந்த நீர்க்குமுழி உடைந்தால், நீ என்னவாக இருப்பாய்?” என்று கேட்டார். தான் “கடலாக" இருப்பேன் என்ற பதிலை அவன் அறிந்து இருந்தாலும், உட்புறத்தில் இருந்து திடீரென்று தோன்றிய விழிப்புணர்வில் இருந்து, அதன் உண்மையான அர்த்தம் வெளிவந்தது. அவன் சிறிது வியப்புடன், “அப்படி என்றால் நான் தான் கடவுள்,” என்றான். §§

நான் எனது இரண்டாவது தூண்டுகோலுடன் இருந்த இரண்டு மிகவும் அற்புதமான வருடங்களின் போது, அவரிடம் இருந்து வாரம் இரண்டு முறை அறிவுறுத்தல்களை பெற்றேன். எந்த கேள்விகளையும் கேட்காமல், எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு முடிந்த வரை சிறப்பான முறையில் அடிபணிந்து நடந்தேன். மிகவும் சிறிய வயதில் கேள்விகள் எதுவும் கேட்கக்கூடாது என்று எனக்கு கற்றுத்தரப்பட்டது. உட்புற போதனைகளை கிரகித்துக் கொள்ளவேண்டும் என்றும் எனக்கு கற்றுத்தரப்பட்டது. ஒருவர் தனக்குள் ஆசிரியர் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்து, அந்த கண்ணோட்டத்தில் இருந்து அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனிக்க வேண்டும். இவ்வாறு அந்த மாணவன், உட்புற போதனைகளை கிரகிக்க கற்றுக்கொள்கிறார். அவை அதன் பிறகு அவருக்குள் விழித்துக் கொள்கின்றன மற்றும் அவர் தனது சொந்த ஆன்மீக அறிதலின் மூலம் அவற்றை மேம்படுத்துகிறார். எனது இரண்டாவது தூண்டுகோல் எனக்கு ஆகாசத்தை பார்த்து மிகச்சிறந்த கதிரியக்க, அந்தர்லோக சக்திகளை பார்க்கவும் கற்றுத்தந்தார். §§

எனது இரண்டாவது தூண்டுகோலும் பலவிதமான சூட்சும ஞானம், மறை ஞானம் மற்றும் தியானத்தில் தேர்ச்சி பெற்று இருந்தார். உடலை உறங்க வைத்த பிறகு, ஒருவர் எவ்வாறு தூல உடலை விட்டு வெளியேறுகிறார் என்பதைப் பற்றி துல்லியமாக அவர் கற்றுத்தந்தார். நான் சூட்சும உடலை பற்றியும், அதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி, எவ்வாறு சூட்சும உடலில் தூல உடலை விட்டு செல்லும் அனுபவத்தை வளர்த்துக் கொள்வது என்பதையும், அதே சமயத்தில் என்ன நடக்கிறது என்பதில் முழு கவனத்துடன் தூல உடலை சுற்றி வந்து, அதனுடன் சூட்சும உடலை தொடர்புபடுத்தும் வெள்ளி நாணை கவனித்து, எவ்வாறு சூட்சும உலகில் பயணிப்பது என்பதையும் கற்றுக்கொண்டேன். §§

தூல உடல் இயங்கும் போது, ஏழு சக்கரங்களின் ஆன்மீக சக்திகள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் பல்வேறு விதமான இசைகளால் ஊக்குவிக்கப்படுகின்றன என்பதையும் இந்த தூண்டுகோல் எனக்கு கற்றுத்தந்தார். அவர் எனக்கு தனிச்சையாக ஆடும் நடனத்தில் தீவிரமான அறிவுறுத்தல் மற்றும் பயிற்சியை வழங்கினார். இந்த நடனத்தில் ஒருவர் எந்த விதமான தடையையும் அனுபவிப்பது இல்லை. இந்த நடனம் உணர்ச்சிப் பகுதியின் சக்திகளை கட்டுப்படுத்தி உருமாற்றம் செய்ததால், அது எனது பதினான்கு மற்றும் பதினான்காவது வயதில், எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. §§

ராபர்ட் 14 வயது சிறுவனாக இருந்த போது, அவரது வாழ்க்கையில் நுழைந்த ஹில்டா சார்ல்டன், அவனை சூட்சும ஞான போதனைகளின் ஆழத்திற்குள் அழைத்து சென்றார். அவர் இயல்பான சூட்சும ஞான சக்திகள் மற்றும் முன்னுணர்வுகளுடன் ஒரு தீவிர பக்திமானாக இருந்தார். ஒரு சிறந்த ஆசிரியராக இருந்த அவர் அந்த இளம் சாதகரை ஏழு வருடங்களுக்கு ஒருமுகச்சிந்தனை மற்றும் தியானத்தின் பிரிவுகள், பக்தி யோகம் மற்றும் மனமுவந்து மற்றவர்களுக்கு வழங்கும் கலையின் அழத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் அந்த சாதகருடன் சிலோன் பயணம் செய்தார். §§

1945 ஆம் ஆண்டு, ராபர்ட் 18 வயதை எட்டியவுடன், தனது வளர்ப்பு வீட்டில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நகர்ந்தான். 2007 ஆம் ஆண்டு மரணமடைந்த கரோல், அந்த வீட்டில் 1948 ஆம் ஆண்டு வரை இருந்தார். அதன் பிறகு அண்ணனும் தங்கையும் பல வருடங்களுக்கு சந்திக்காமல், 2000 ஆம் ஆண்டு சந்தித்தனர். அப்போது இருவரும் கலிபோர்னியா, ரெட்வுட் சிட்டியில் இருந்த போர்டர்ஸ் ஸ்டோரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் சந்தித்து ஒரு சில வார்த்தைகளை பேசிக்கொண்டனர். அந்த அளவிற்கு ராபர்ட்டின் துறவறம் முழுமையாக இருந்தது. §§

“தெய்வங்களும் கீழ்படிவார்கள்”§

ஹில்டா சார்ல்டன் அந்த சாதகனை, தனது நெருங்கிய தோழியாக இருந்த கோரா என்ரைட் என்ற ஒரு ஆன்மீகவாதிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் மதர் கிறிஸ்டினி என்று அழைக்கப்பட்டார். அவர் ராபர்ட்டுக்கு மூன்றாவது தூண்டுகோலாக விளங்கி, இந்த இளைஞனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆசிரியராக விளங்கினார். அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில், அவர் அவனை கர்ம, இராஜ மற்றும் ஞான யோகங்களுக்குள் அழைத்து வந்து, அவனுக்கு மற்றவர்களுக்கு கீழ்படிந்து நடத்தல் மற்றும் சேவை செய்தல், சுயநலமின்மை மற்றும் ஞான ஒளியைப் பற்றி கற்றுத்தந்தார். §§

அவரது உயரம் 5' 2". அவர் ராபர்ட்டின் தோள்பட்டையை காட்டிலும் குள்ளமானவர். ஆனால் அவர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்து, கண்ணியமான மற்றும் வெளிப்படையாக பேசும் பண்புடன் இருந்தார். பனிக்கட்டி நிறத்தில் வெள்ளை முடி, குழந்தை போன்ற அப்பாவி முகம் மற்றும் நீளமாக தரையில் பரவியிருந்த உடையுடன், அவரை பார்ப்பதற்கு ஒரு தேவதை அல்லது அந்த தேவதையின் ஞானமாதாவைப் போன்று இருந்தார். §§

அவர் அன்புள்ளம் படைத்த பெண்மணியாகவும், ஒரு கண்டிப்பான ஆசிரியராகவும் இருந்து, வேண்டுகோள் விடுத்து சிலசமயங்களில் ஆதிக்கமும் செலுத்தினார். அவர் ராபர்ட்டை தீவிரமாக சோதனை செய்து, அவனை உறுதியாக திருத்தி, அவன் ஒவ்வொரு நிலையிலும் தனது திறமைகளை வெளிப்படுத்த துணை புரிந்தார். அவன் அவரது வழிமுறைகளை கற்றுக்கொண்டான், மற்றும் அவர் தனக்கு ஆசிரியராக இருந்த காலத்தில், ராபர்ட் தனது ஆன்மீக நடவடிக்கைகளில் வலுவடைந்தான். அவர் தனது சிறு வயது சீடனிடம், “ஆன்மா ஆதிக்கம் செலுத்தும் போது, தெய்வங்களும் கீழ்படிவார்கள்,” என்று கூறினார். மேலும் அவர் ஆன்மீக தலைமைத்துவத்தின் மர்மமான கலைகளிலும், அவனுக்கு பாடம் புகட்டினார். ராபர்ட் தனது ஆசிரியரின் பாணியை பற்றி இங்கே விளக்குகிறார்:§§

மதர் கிறிஸ்டினி தன்னிடம் வருபவர்களின் நேர்மையை அறிந்துக்கொள்ள, எல்லோருக்கும் சோதனைகளை வழங்குவார். அவரிடம் ஒருவன் மாணவனாக படிக்கும் விருப்பத்துடன் வந்தால், அவர் முதலில் எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் அவனிடம் ஒரு கடன் அட்டையை வழங்குவார். அவன் அதை சிறிது நேரம் வைத்துக்கொண்டு, அவரிடம் மீண்டும் திருப்பி தந்துவிட்டால், அவனை தனது மாணவனாக ஏற்றுக்கொள்வார். ஆனால் அவன் அந்த அட்டையை எடுத்துக்கொண்டு, அதைதிருப்பி பின்புறத்தில் இருப்பதை நோட்டமிட்டால், அவர் எதுவும் பேசமாட்டார், மற்றும் அவனுக்கு மறு அழைப்பு வராது. உலக வாழ்க்கையின் நடைமுறைகளை கற்றுத்தந்த மதர் கிறிஸ்டினி, எனது விஷ்வ குருவைப் போன்று இருந்தார். §§

அவரது கத்தோலிக்க பின்னணி முற்றிலும் வழக்கத்திற்கு மாறாக இருந்தது; அவர் தனது இதயத்தில் ஒரு ஆன்மீகவாதியாக, வலுவான மனோஉணர்வு திறமைகளுடன் இருந்தார். அவர் கிறுத்துவ தேவாலயங்கள் செல்வதை நிறுத்தி இருந்தாலும், அவருக்கு அடிக்கடி மகான்கள் காட்சி அளித்தனர் மற்றும் அவர் வழக்கமாக மற்ற உலகங்களுடன் தான் நடத்திய உரையாடல்களை பகிர்ந்துக் கொள்வார். அவர் சைக்கோமெட்ரி தொடர்பான கதைகள், மனித ஒளி உடல் ஆய்வுகள், சூரிய ஒளி சார்ந்த உயிரியல், எக்டோபிளாசத்தின் வெளிப்பாடுகள் மற்றும் கிறுத்து உணர்வு பற்றி பேசி, பிரார்த்தனை கூட்டங்களில் இருப்பவர்கள் மற்றும் தனிநபர்களை மகிழ்ச்சிவிப்பார். §§

கிறுத்துவ மதத்தின் ஒரு சூட்சும வடிவத்தை மதர் கிறிஸ்டினி பின்பற்றினார். அது தங்கள் மத நம்பிக்கைகளுக்கு புறம்பானதாக பல கிறுத்துவர்கள் கருதினார்கள். அது வழக்கமாக கிழக்கத்திய நாடுகளில் பின்பற்றப்பட்ட மதங்களில் காணப்படும் சூட்சும உண்மைகளை, மிகவும் குறுகிய கிறுத்துவ மதத்தின் அமைப்பிற்குள் நுழைக்கும் முயற்சியாக இருந்தது. இத்தகைய சூட்சும ஞானம், 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓரிகன் என்ற தத்துவ ஞானியின் முயற்சியால், கத்தோலிக்க தேவாலய சரித்திரத்தின் தொடக்க காலத்தில் துடிப்புணர்வுடன் இருந்தது. மேலும் இது சமீபகாலத்தில் ரோசிக்ரூசியன்ஸ், பிரம்மஞான மதத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஃப்ரீமேசான்ஸ் சமூகங்களில் பிரதிபலித்தது.§§

மதர் கிறிஸ்டினி வாழ்ந்த காலத்திற்கு ஒரு நூற்றாண்டு முன்பு, அமெரிக்காவில் கிறுத்துவ மதம் மெதுவாக உருமாறி, 1830 ஆண்டில் மோர்மொன்ஸ், 1863 ஆண்டில் செவந்த் டே அட்வெண்டிஸ்டிஸ், 1866 ஆம் ஆண்டில் கிறிஸ்டியன் சயன்ஸ், 1880 ஆம் ஆண்டில் சர்ச் ஆஃப் டிவைன் சயன்ஸ், 1889 ஆம் ஆண்டில் யுநிடி சர்ச் மற்றும் 1927ஆம் ஆண்டில் ரிலிஜியஸ் சயன்ஸ் (சயன்ஸ் ஆஃப் மைண்ட் என்றும் அழைக்கப்பட்டது) என்று பல புதிய கிறுத்துவ தேவாலயங்களை தோற்றுவித்தது. இந்த பட்டியலில் இடம்பெற்ற இறுதி மூன்றும் நியூ தாட் மூவ்மெண்டின் அங்கமாக விளங்கி ஈர்க்கும் விதிகள், குணப்படுத்துதல், உயிர் சக்தி, ஆக்கப்பூர்வ கற்பனை, தனிப்பட்ட சக்தி தொடர்பான மீமெய்யியல் நம்பிக்கைகள் மற்றும் எல்லையற்ற நுண்ணறிவு அல்லது இறைவன் எங்கும் நிறைந்து இருக்கிறார், ஆன்மா என்பது உண்மை பொருட்களின் முழுமை, ஆன்மா தெய்வீகமானது, ஒரு உயர்ந்த சிந்தனை நன்மை பயக்கும் சக்தி, அனைத்து நோய்களும் மனதில் தோன்றுகிறது மற்றும் நேர்மறை சிந்தனை ஒரு குணப்படுத்தும் பலனை வழங்குகிறது என்ற சிந்தனைகளை வலியுறுத்துகிறது. §§

அவர் பின்பற்றிய கிறுத்துவ மதம் பாரம்பரியம் சார்ந்ததாக இல்லை. அவர் ராபர்ட்டை, இறந்தவர்களின் ஆவிகள் உயிருடன் வாழ்பவர்களுடன் பேசும் கூட்டங்கள் மற்றும் உடல் இல்லாத ஆன்மாக்களை மேடைக்கு அழைத்து வந்து, அந்த ஆவிகளுடன் உரையாடி நம்ப மறுத்த கூட்டத்தை வியக்க வைத்த மேடை நாடக ஆன்மீகவாதிகளின் அரங்குகளுக்கு அழைத்து சென்றார். இந்த ஆன்மீகவாதிகள் ரத்தினங்கள் மூலம் ஆசைகளை சீரமைத்தார்கள் அல்லது எதிர்காலத்தை கணித்தார்கள். மற்றவர்கள் கூம்பு வடிவ இசைக்கருவிகள் மூலம் ஆவி உலகின் மெல்லிய குரல்களின் ஒலியை பெருக்கி, அவை பார்வையாளர்களுக்கு உணர்த்தினார்கள். அது இன்னொரு உலகமாக இருந்தது, மற்றும் இளம் சாதகன் அவற்றை எல்லாம் பார்த்து அறியவேண்டும் என்ற அவர் விரும்பினார். அவன் அந்த காட்சிகளை மறக்காமல், பல வருடங்கள் கழித்து தனது சீடர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்கினார். §§

அவர் தனது வாழ்நாளில் வாழ்ந்த ஆன்மீக பிரபலங்களுடன், வியக்க வைக்கும் வகையில் ஒரு நல்ல உறவை பரமாரித்தார். 1934 ஆம் ஆண்டு, அவரது வீடு தயானந்த பிரியதாசியின் (டாரல் பீரிஸ்) தற்காலிக ஆசிரமமாக இருந்தது. அவர் தன்னுடன் பெளத்த சமயத்தின் ஞானோதய பாதையை கொண்டு வந்தார். அவரது வழிமுறைகள் மதர் மதர் கிறிஸ்டினியை கவனத்தை ஈர்த்து, அவர் கிழக்கு நாடுகளின் பாதையை ஆய்வு செய்ய மேலும் ஊக்குவித்தது. இந்த ஆய்வை அவர் தனக்கு விருப்பமான மாணவனுக்கு கற்றுத் தந்தார். §§

அவர் அப்போது பிரபலமாக இருந்த யோகி ஹரி ராமாவையும் அறிந்து இருந்தார். அவர் 1924 ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவிற்கு வந்து அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டு, அமெரிக்க நாட்டவர்கள் முன்பு பார்த்திராத, காற்றில் மிதத்தல் மற்றும் தொலைப்பெயர்ச்சியை செய்து காண்பித்தார். அவர் இவற்றை செய்து காண்பித்தாலும், இவை ஆழமான ஆன்மீக ஸித்திகளை பெறுவதற்கு தேவையில்லை என்றும் வலியுறுத்தினார். அந்த யோகி அவரது ஓக்லாண்டு வீட்டில் யோகத்தை கற்றுத்தந்து அவருக்கு குருவாகி, அவருக்கு மதர் கிறிஸ்டினி என்ற பெயரை வழங்கினார். §§

பரமஹம்ச யோகானந்தாவுடன் மதர் கிறிஸ்டினி இணைந்து செயல்பட்டு, அவரது செல்ஃப் ரியலைசேஷன் பெல்லோஷிப்பின் இயக்குனர்கள் குழுவில் சேவை செய்தார். அவர் மான்லி பி. ஹால் மற்றும் எட்கர் கேய்ஸ் எழுதிய புத்தகங்களை படித்தார், மற்றும் 1930 களில் ஹாலிவுட்டிற்கு ஹட யோகத்தை கொண்டு வந்த இந்திரா தேவியை சந்தித்தார். பனாரஸில் இருந்து அமெரிக்காவிற்கு அந்த சுவாமி பகவான் பிஸ்ஸஸ்ஸர் மீது மதர் கிறிஸ்டினி ஈர்க்கப்பட்டார். அந்த சுவாமி தனது சீடர்களுக்கு பின்வரும் உறுதிமொழியை வழங்கினார்:§§

முழுமுதற்பொருளாக, வரம்புகளை கடந்து ஒரே உண்மைப்பொருளாக இருப்பவரே, என்னிடம் இருக்கும் எல்லையற்ற சக்திகளுக்கு எனது கதவுகளை திறப்பதற்கு, எனக்கு ஞானத்தையும் நம்பிக்கையையும் தா. ஓம் தத் சத் ஓம். ஆன்மீக அறிவு உள்ளே வருவதற்கு என் மனதின் கதவு திறந்து இருக்கிறது. நான் முழுமுதற்பொருளுடன் பிரிக்க முடியாமல் இணைந்து ஒன்றாகி இருக்கிறேன், மற்றும் மூத்த சகோதரர்களின் உதவியை நான் செய்கிறேன்.§§

இந்த இந்திய யோகிகள் மற்றும் சுவாமிகள் மறுபிறவி, எங்கும் வியாபித்து இருக்கும் ஒரு தெய்வீகத்தன்மை, மனிதனுக்குள் இருக்கும் கடவுள் மற்றும் மனிதன் உடல் மற்றும் மனமாக இல்லாமல் ஆன்மாவாக இருப்பதைப் பற்றிய போதனைகளை தங்களுடன் கொண்டு வந்தனர். அவர்கள் பிராணயாமம் மற்றும் உறுதிமொழியின் சக்திகள், தியானத்தின் தீவிரம் மற்றும் உணர்வின் ஏற்றத்தை கற்றுத்தந்தார்கள். அவர்களுடன் மதர் கிறிஸ்டினி பழகி, இந்தியா மற்றும் சிலோனில் இருந்து அவர்கள் கொண்டு வந்த ஞானத்தை கிரகித்துக்கொண்டார். அந்த ஞானத்தை அவர், கிழக்கத்திய நாடுகளின் பாதையில் இருந்த நுணுக்கத்தில், தனது பதின்ம வயது மேதாவியை நிலைநிறுத்த பயன்படுத்திக் கொண்டார். §§

அவர்களது உறவு அடுத்த 24 வருடங்களுக்கு ராபர்ட்டின் வாழ்க்கையில் பரவி இருந்தது. அந்த உறவின் தொடக்கம், சமயம் மற்றும் சூட்சும ஞான போதனைகளில் அவர் பெற்ற மிகபெரிய அனுபவங்களில் ஆரம்பித்து, ராபர்ட் ஒரு பலவீனமான நண்பனை கவனித்துக்கொண்டு இருக்கும் போது முடிவடைந்தது. ராபர்ட் 1960 களின் மத்தியில், அவரது ஒக்லாண்டு வீட்டில் வாரநாட்களில் தங்கி, வீட்டை சுத்தம் செய்தல் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் உதவி செய்து, வாரக்கடைசியில் சான் பிரான்சிஸ்கோ திரும்பி தனது கோயிலை கவனித்துக் கொள்வான். §§

எனது மூன்றாவது தூண்டுகோல் விசேஷமானவராகவும் பொறுமையாகவும் இருந்தார். அவர் எனக்கு நிறங்களின் அதிர்வு விகிதத்தில் இருந்த உளவியல் மற்றும் ஒரு ஒளி உடலை ஆய்வு செய்வது பற்றியும், ஒளி உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு நிறமும் நிறத்தின் கலவையும் வழங்கிய பொருளை புரிந்துக்கொண்டு, அதனை ஒரு நபரின் மனநிலைகள் மற்றும் உணர்ச்சிகள் மற்றும் சிந்தனை சக்தியுடன் தொடர்புபடுத்துவது பற்றியும் கற்றுத்தந்தார். அவர் எனக்கு மனிதனின் இயல்பு, மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள், அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள், மற்றும் அவர்களது உட்புற, அடியுணர்வு தூண்டுதலைப் பற்றி புரிந்துகொள்வதற்கு குணங்களை வர்ணிக்கும் முறையை கற்றுத்தந்தார். §§

அவர் என் குருவைப் பற்றி கூறி, ஒரு நாள் என் குருவை சந்திப்பேன் என்று கூறினார். ஆனால் நான் என் குருவை சந்திப்பதற்கு முன்பாக, நான் ஆத்ம ஞானத்தை பெற்று இருக்க வேண்டும். நான் எனது குருவை சிலோனில் சந்திப்பேன் என்றும், நான் அங்கே சென்று மேலும் கற்பதே நான் செய்யவேண்டிய அடுத்த நடவடிக்கை என்றும் கூறினார். நான் அந்த சமயத்தில், கடிகாரத்தை பயன்படுத்தி, தினமும் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் அசராமல் அமர்ந்து தியானம் செய்து, உட்புறமாக தொடர்ந்து சென்றுகொண்டு, நான் கற்றதையும், பரமாத்துமாவின் புனிதம் மற்றும் எளிமையின் நுணுக்கங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்துக்கொண்டு இருந்தேன். §§

எனது இரண்டாவது வருட பயிற்சியின் போது, மக்களின் வினைகள் மற்றும் எதிர்வினைகள், அவர்கள் எவ்வாறு இயங்கினார்கள், எவ்வாறு சிந்தித்தார்கள் மற்றும் எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதைப் பற்றி நுணுக்கமாக கற்றுக்கொடுக்கப்பட்டேன். ஒருவரது உட்புற பண்புகள் மற்றும் வீட்டில் அவர்களது வாழ்முறை பற்றிய தகவல்கள் அனைத்தையும், அவர்களது மனம் அல்லது உடலின் இயக்கத்தின் மூலம் நான் அறிந்துகொள்ளும் அளவிற்கு, மனதை ஒருமுகப்படுத்தும் சக்திகளுடன் கண்காணிப்பாளராக இருக்க எனக்கு கற்றுத்தரப்பட்டது. §§

எனது மூன்றாவது வருட பயிற்சியின் போது, மாணவர்கள் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் ஆன்மீக ஈடுபாட்டுடன் இருக்கிறார்களா அல்லது கற்பித்தலில் அறிவுப்பூர்வமான ஆர்வத்துடன் இருக்கிறார்களா என்பதை சோதனை செய்ய கற்றுத்தரப்பட்டது. அதன் பிறகு நாங்கள், ஒருவர் தியானம் செய்யும் போது, தனது உட்புற சக்தியின் மூலம் காணும் சிந்தனை வடிவங்கள் மற்றும் உணர்ச்சிகள் மற்றும் பல்வேறு சிந்தனை வடிவங்களின் பொருளைப் பற்றி ஆய்வு செய்தோம். ஒரு நபர் எதைப்பற்றி சிந்திக்கிறார் மற்றும் அந்த கூட்டு சிந்தனை சாரம் தோன்றிய மனதின் பகுதிக்கு சாட்சி சென்ற நோக்கத்தையும் அறியத் தொடங்கினேன். §§

மனதின் உட்புற பகுதிகளில் வாழும் தலைசிறந்த உயிர்சக்திகள் மற்றும் மனிதர்களுடன் செயல்படுவதற்கு மற்றும் தொடர்பு கொள்வதற்கு தூல உடலின் தேவை இல்லாமல், தங்கள் நரம்பியல் அமைப்பில் மேம்பட்டு இருக்கும் உயிர்சக்திகளின் ஆய்வின் மூலமாகவும், எனது மூன்றாவது தூண்டுகோல் என்னை மேம்படுத்தினார். அதைப் போல, தூல உடலுடன் இருந்தாலும் தியானத்தின் ஆழத்தில் செயல்பட்டு, பெற்றோர்கள் தங்கள் குழந்தையை உணர்ச்சிரீதியாகவும் தூல உடல்ரீதியாகவும் அவர்களது பக்குவத்தை கண்காணிப்பதைப் போல, தியானம் செய்பவர்களுக்கு ஒரு ஆன்மீகப்பணியாக உதவி செய்யும் தலைசிறந்த உயிர்சக்திகளைப் பற்றி படித்தேன். §§

எனது பாதையில் இருந்த மூன்றாவது தூண்டுகோலுக்கு, அவரது சிறு வயதில் நேவெடாவில் இருந்த அமெரிக்க இந்தியர்கள், பின்பு இமயமலையில் இருந்து வந்த சுவாமி பகவான் பிஸ்ஸஸ்ஸர், மற்றும் பெனராஸ் சமூகத்தை சேர்ந்த யோகி ஹரி ராமாவிடம் இருந்து சூட்சும ஞானத்தில் முழுமையான பயிற்சி வழங்கப்பட்டது, மற்றும் அந்த அற்புதமான உயிர்சக்திக்கு பிறகு, நான் சிலோன் தீவில் எனது நான்காவது தூண்டுகோலை சந்திக்க விருந்தேன். §§

நான் அவருடன் இருந்த காலத்தில், அவரிடம் பல கேள்விகளை கேட்டதாகவோ அல்லது விவாதத்தில் ஈடுப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. ஆனால் நான் ஒரு முறை அதிக வெளிப்புறமாக இயங்கி, பாடம் எனக்கு தெளிவாக புரியாத போது, நான் அதைப்பற்றி விவாதிக்க விரும்பியது நினைவில் இருக்கிறது. ஆனால், “விவாதிக்க முடியாது,” என்ற அறிவுறுத்தலின் மூலம் அந்த விவாதம் உடனே துண்டிக்கப்பட்டது. நான் மீண்டும் அந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை. எனது ஆசிரியரை போன்று பாடம் நடத்துபவரிடம் இருந்து ஆன்மீக அறிவுறுத்தல்களை கேட்கும் போது, ஒரு வாக்கியத்தை கவனிக்க தவறிவிட்டால் அல்லது ஏதாவது தெளிவாக புரியவில்லை என்றால், சில நிமிடங்கள் காத்து இருங்கள். அதைப்பற்றி நினைவுக்கூரும் போது உங்கள் உட்புறத்தின் ஆழத்தில் இருந்து, அது தானாக தெளிவடையும். நான் இதை மிகவும் சிறிய வயதில் கற்றுக்கொண்டேன். இந்த வழியில் சூட்சும ஞானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் விவாதங்கள் அல்லது கேள்விகள் இருப்பதில்லை. இவ்வாறு செய்து முடிப்பதற்கு, விரிவாக்கம் பெற்ற தலைசிறந்த ஆன்மாக்கள் மற்றும் பாதையில் இருக்கும் உதவியாளர்களிடம் இருந்து பெருமளவிலான உதவி உட்புறத்தில் கிடைக்கிறது. §§

image§

ராபர்ட் மேடையில் நடத்திய நடனங்களுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டு மழையும் கிடைத்தது. அவன் கலை அறிவுடன் இருந்த அந்த உன்னதமான பார்வையாளர்களை பார்க்கும் போது, இருட்டில் வைரங்கள் மின்னுவதைப் போன்று தோன்றியதாக, தனது வாழ்நாளில் பின்னர் குறிப்பிட்டு இருந்தான். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

சான் பிரான்சிஸ்கோ பாலே §

பாரம்பரிய நடனத்தில் மேலும் தீவிர பயிற்சி பெறுவதற்காக, ராபர்ட் தனது பதினாறாவது வயதில் சான் பிரான்சிஸ்கோ பாலே பள்ளியில் சேர்ந்தான். அவன் இரண்டு வருடத்திற்குள் சான் பிரான்சிஸ்கோ பாலே நிறுவனத்தில், முன்னணி நடனக் கலைஞனாக தகுதிப் பெற்று, அந்த குழுவுடன் இரண்டு முறை அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் பயணம் மேற்கொண்டான். யோகம் மற்றும் தியானத்தில் அவனது பயிற்சி இடைவிடாது தொடர்ந்தது. அவன் சான் பிரான்சிஸ்கோவில் இருந்த போது, அந்த பாலே நிறுவனத்திற்கு அருகில் ஃபோல்சம் தெருவில் இருந்த பிரஸ்பைடிரியன் கிறுத்துவ தேவாலயத்தில் தினமும் இரண்டு மணி நேரங்களுக்கு தியானம் செய்வான். §§

இது அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற பாலே நிறுவனங்களில் ஒன்றாக இருந்ததால், அதில் போட்டி அதிகமாக இருந்தது. ராபர்ட் தனது கலையில் கடினமாக உழைத்து, தனது நிலையில் இருந்த ஒரு கலைஞனுக்கு தேவைப்பட்ட வலிமை மற்றும் உடலுறுதியை பெறுவதற்காக தினமும் பல மணி நேரங்கள் தனது உடலை இயக்கிக்கொண்டு இருந்தான். அவன் தனது சக கலைஞர்களை உயர தூக்குவதற்காக, தனது பதினேழாவது வயதில் பெஞ்ச் பிரெஸ்ஸில் 175 பவுண்ட் எடையை தூக்கும் வலிமையுடன் இருந்தான். ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு மாதமும் படிப்பது, நினைவுக்கூர்வது மற்றும் தொடர்ந்து பயிற்சி செய்வதே அவனது வழக்கமாக இருந்தது. §§

தனது திறமைகளை மேலும் மேம்படுத்த, ஒரு பயிற்சியாளரை நியமித்து, தனது நடனத்தை விமர்சனம் செய்யுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டான். “நான் சரியாக செய்வதை எடுத்துக்கூறாமல், நான் தவறாக செய்வதை விமர்சனம் செய்வதற்கு, ஒரு மணி நேரத்திற்கு $20 ஊதியத்தை வழங்கி ஒரு பயிற்சியாளரை நியமித்தேன்,” என்று பல வருடங்கள் கழித்து அவன் பரிகாசமாக தெரிவித்தான். அந்த காலத்தில் $20 என்பது பெரிய தொகையாக இருந்தது. §§

கலைஞர்கள் வழக்கமாக செய்வதைப் போல, அந்த நிறுவனம் பெரும்பாலும் பேருந்து மற்றும் இரயில் மூலம் பயணம் செய்தது. இதன் காரணமாக தனக்கு பயணம் செய்வதில் பிரியம் ஏற்பட்டது என்றும், சில நிமிடங்களில் பயணத்திற்கு தேவையான பொருட்களை இராணுவ துல்லியமாக தயார் செய்துகொள்ளும் திறனை பெற்றதாகவும், அவர் பிற்காலத்தில் குறிப்பிட்டார். அவர் உள்ளூர் அரங்குகள் மற்றும் யுஎஸ்ஓ நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டார். இந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் மும்மும்ரமாக இருந்தது. §§

விரைவாக வளர்ந்துக்கொண்டு இருந்த இந்த நட்சத்திரம், தலைசிறந்த கலைஞர்களுடன் பணி புரிந்தான். ருத் சைன்ட் டெனிஸ் மற்றும் வில்லியம் கிறிஸ்டன்சன் போன்ற பிரபலங்கள் அவனுக்கு நடன இயக்குனர்களாக இருந்தார்கள். அவன் மேடையில், இத்தாலிய நாடகங்களில் தலைமை நடிகை மற்றும் அமெரிக்க பிரபலங்களுடன் நடனமாடினான். அவன் சிறப்பான பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுடன் செயல்புரிந்து, ஓபரா பாடகர் அல்த்யா யங்மானுடன் கூட்டு சேர்ந்தான். §§

தனது குழு தெற்கு கலிபோர்னியாவில் நிகழ்ச்சியை நடத்திய போது, ராபர்ட் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அந்நாளில் அமெரிக்காவின் முன்னணி குருவாக விளங்கிய, பரமஹம்ச யோகானந்தாவை, செல்ஃப் ரியலைசேஷன் பெல்லோஷிப்பின் பசிபிக் பாலிசேட்ஸ் மையத்தில் சந்தித்தார். அவர் தனது ஆட்டோபியோகிரபி ஆஃப் ய யோகி என்ற புத்தகத்தை அச்சிட்ட சமயத்தில், ராபர்ட் அந்த ஆசிரியரை சந்தித்தார். யோகானந்தா அன்புள்ளம் படைத்தவராக இருந்தார், மற்றும் அந்த இளைஞன் தன்னை சந்திக்க வந்த மூன்று முறையும், அவன் கைநிறைய இலக்கிய புத்தகங்களை வழங்கினார். கிழக்கத்திய நாடுகளின் ஆன்மீக குருக்களை ராபர்ட் சந்திப்பது, இதுவே முதல் முறையாக இருந்தது. §§

image§

ராபர்ட் தனது கலை வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த போது, அவனை ஆன்மீக வாழ்க்கை அழைத்தது. அவன் தனது பத்தொன்பதாவது வயதில், பாலே நிறுவனத்தை விட்டு விலகி, தனது குருவை தேடி இந்தியா மற்றும் இலங்கை செல்ல, ஒரு வணிக கப்பல் மூலம், கோல்டன் கேட் தொங்கு பாலத்திற்கு அடியில் இருக்கும், கடல் வழியாக பயணம் மேற்கொண்டான். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நடனம் அவனது பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொண்டாலும், இரவு நேரங்களில் அவன் தனக்கு உட்புறமாக கவனம் செலுத்துவான். உலக வாழ்க்கை பின்வாங்கியது மற்றும் அவன் தன்னிடம் இருந்த சில ஆன்மீக புத்தகங்களை படித்ததுடன் தியானமும் செய்தான். அவனுடைய இயல்பிற்கு படிப்பது மட்டுமே மனநிறைவை அளிக்கவில்லை. அவன் ஒவ்வொரு ஆசிரியரும் புகட்டிய பாடத்தை பயிற்சி மற்றும் ஆய்வு செய்து, தனக்குத்தானே நிரூபித்துக் கொள்ள வேண்டியிருந்தது. §§

அவனுக்கு ஒருவர் பதஞ்சலியின் தி யோக சூத்ராஸ் என்ற ஒரு சிறிய புத்தகத்தின் நகலை வழங்கிய போது, இந்த செயல்முறையை பின்பற்றுவது சவால் விடுவதாக இருந்தது. அவன் நடனத்தில் செய்ததை போல, இந்திய யோகி மூலம் விளக்கப்பட்ட யோக சூத்திரங்களுக்குள் மூழ்கி, அதன் மர்மமான மொழியை வெளிப்படுத்தி, அதன் நுணுக்கமான வழிகாட்டல்களை பின்பற்றி தொடர்ந்து பயிற்சி செய்துக்கொண்டு இருந்தான். அது யோக பாதையில் அவனது தீட்சையாகவும், மெய்ஞ்ஞான நிலை மீது கிழக்கு நாட்டு குருமார்கள் வைத்திருந்த கண்ணோட்டம் பற்றிய முதல் புரிதலாகவும் இருந்தது. §§

அந்த இளம் கலைஞனின் வாழ்க்கையில் நடனம் வளர்ச்சி அடைந்துக்கொண்டு இருந்தது. அவனுக்கு அதன் நாடகங்கள், நுட்பங்கள், சமூகத் தொடர்பு மற்றும் அதில் இருந்த பேரும் புகழும் ஆடம்பரமும் பிடித்து இருந்தது. ஆனால் நடனம் அவனுக்கு மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. அது ஆற்றல், உயிர் சக்தி மீது பெறும் தேர்ச்சி, ஆன்மா பொருட்களை எவ்வாறு இயக்குகிறது மற்றும் சிந்தனை எவ்வாறு செயல்களை வெளிப்படுத்துகிறது என்பதைப் பற்றி ஒரு ஆய்வாக இருந்தது. சூட்சும உடல் எவ்வாறு முதலில் இயங்கி, தூல உடல் அதற்கு எவ்வாறு எதிர்வினை வழங்குகிறது என்பதை அவன் ஆய்வு செய்தான். அவர் இயக்கத்தில் இருந்த உயிர் சக்தி, உடல் மற்றும் மனத்தின் தொடர்பை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு வெறும் ஒரு சிந்தனையாக இல்லாமல், அவரது கலைத்திறனுக்கு காரணமான விஞ்ஞானமாகவும் இருந்தது. ராபர்ட்டிற்கு நடனம் என்பது மனித உணர்ச்சி வெளிப்பாடுகளின் அதிக தெய்வீக வடிவமாகவும், படைப்பாற்றலின் உயரிய வடிவமாகவும் இருந்தது. இந்த ஒரு படைப்பில் மட்டுமே, படைத்தவரும் படைக்கப்பட்டவரும் ஒன்றாக இருக்கிறார்கள். யோகி பிரபஞ்சமாக இருந்ததைப் போன்று, நடனமாடுபவர் நடனமாக இருக்கிறார். மேடை விளக்குகளைக் காட்டிலும், நடனத்தின் இந்த ஆன்மீக அம்சம் அவன் மனதை கவர்ந்தது.§§

அந்த மேடை விளக்கின் ஒளியில், அந்த இளம் கலைஞன் மக்களின் மனதை கவர்ந்தான். அவனிடம் மக்கள் கூட்டம் மீண்டும் நடனமாட கேட்டுக்கொண்ட போது, தனது ஒவ்வொரு உடல் அசைவும் பார்வையாளர் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதை அறிந்திருந்து, தனது அகலக்கால் நடை மற்றும் அழகான கை கால்களுடன் வெளியே வருவான். மேடைக்கு பூச்செண்டுகள் பறந்து வரும். அந்த அறை முழுவதும் வலுவான கரவொலி கர்ஜிக்கும். வைரங்கள் மற்றும் நீலமணிகள் மற்றும் ஆயிரம் டாலர் மதிப்புள்ள மேலங்கிகள் மற்றும் கைகளால் தைக்கப்பட்ட டக்ஸ் அங்கிகள் என்று தனக்கு முன்பாக அமர்ந்து இருந்த செல்வ வளத்தை பார்த்து, அவன் வியந்து நின்றான். அங்கே கிடைத்த பாராட்டு மழை, எளிமையான சூழலில் வளர்ந்திருந்த இளம் ஹான்செனின் வாழ்க்கையில் உச்சமாக விளங்கியது. ஆனால் அவன் அதன் பிறகு பல வருடங்கள் கழித்து இலங்கை, இந்தியா (குறிப்பாக தூத்துக்குடி), மலேஷியா, மொரிஷியஸ் மற்றும் மற்ற நாடுகளில் மேலும் அதிகமான வரவேற்பை பெற்றான். §§

அவன் நடனத்தில் உயர்ந்த நிலையை எட்டி இருந்தான். அவன் பாரம்பரிய தனிநடனங்கள் மற்றும் ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் இருந்து வந்த பாலே நடன மங்கைகளுடன் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்றான். கிரேஸ் பர்ரோஸ் தனக்கு தெரிவித்து இருந்த மற்றும் சுவாமி யோகானந்தாவிடம் கண்ட கிழக்கு நாடுகளுக்கு செல்வதைப் பற்றி அவன் பேச ஆரம்பித்து இருந்தான். §§

அந்த உரையாடல்களில் மதர் கிறிஸ்டினியின் பெயரும் இடம்பெற்று இருந்தது. அவர் இலங்கையில் பலரை அறிந்து இருந்தார். ராபர்ட்டிற்கு தான் வழங்கிய வழிகாட்டலை காட்டிலும், அதிக மேம்பட்ட ஆன்மீக வழிகாட்டல் தேவை என்பதை அவர் உணர்ந்து இருந்தார். அதனால் இலங்கையில் பெளத்த சமய துறவியாக இருந்த தயானந்தா, அவனது பாதையில் அடுத்த ஆலோசகராக இருக்கலாம் என்று அவருக்கு தோன்றியது. §§

அவர் வழங்கிய உற்சாகத்தால் ராபர்ட் ஊக்கமடைந்து, அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று சிந்திக்க ஆரம்பித்தான். அங்கே எப்படி செல்வது? அவன் அங்கே சென்றதும் என்ன செய்வது? அவனுக்கு அங்கே யாரையும் தெரியாது. பெற்றோர்கள் அவனுக்காக விட்டு சென்ற பணத்தில் இருந்து வருடம் ஒருமுறை பெற்ற $700 ஊக்கத்தொகையைத் தவிர, அவனிடம் கையிருப்பாக சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. அதற்கான தீர்வு அவனுக்கு மெதுவாக கிடைத்தது. அவர்கள் அமெரிக்க-ஆசிய கலாச்சாரப் பணியை தொடங்கி, இந்தியா மற்றும் இலங்கை பயணம் மேற்கொண்டு, பாடல்கள் மற்றும் நடனங்கள் மற்றும் தங்கள் கலைகளை பகிர முடிவு செய்தனர். அவன் அந்த பட்டியலில் கிரேஸ் பர்ரோஸ், பாடகர் அல்த்யா யங்மேன், இசை அமைப்பாளர் மற்றும் பியானோ கலைஞராக இருந்த அல்வா காயில் மற்றும் நடன மங்கையாகவும் ஆன்மீகவாதியாகவும் இருந்த ஹில்டா சார்ல்டன் ஆகியோரை சேர்த்துக்கொண்டான். அந்த திட்டம் உறுதி பெற்றதும், அதில் வெற்றி பெறுவதற்கு அவன் அதிக நேரத்தை செலவழித்தான். அவன் தனது பத்தொன்பாவது வயதில் சான் பிரான்சிஸ்கோ பாலே நிறுவனத்தில் இருந்து வெளியேறினான். அதன் பிறகு அவன் அந்த நிறுவனத்திற்கு திரும்பவில்லை. §§

நான் எனது நடன வாழ்க்கையின் உச்சத்தில் இருந்த போது, “நீ உனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது, அதில் இருந்து வெளியேற வேண்டும்,” என்று கூறிய உண்மையான தொழில் நெறிஞர்களின் அறிவுரையை பின்பற்றினேன். நான் எனது குருவை சந்திக்க மிகவும் ஆவலுடன் இருந்ததால், என் ஆசிரியர்களில் ஒருவர் என்னை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். நான் விவேகானந்தர் வழங்கிய போதனைகளை மிகவும் ஆழமாக படித்துக்கொண்டு இருந்தேன். நான் வேதாந்த சமூகம் நடத்திய சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டு, அங்கிருந்த சுவாமிகளையும், பரமஹம்ச யோகானந்தாவையும் சந்தித்தேன். நான் தேடிய குரு, அவர்களிடத்தில் எனக்கு தென்படவில்லை. §§