குருமார்களின் சரித்திரங்கள்

Page 33 URL: §

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/33_yoga04_05.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

பதினெட்டாவது அத்தியாயம் §

யோக சுவாமியின் கடைசி காலம் §

1960 களில், சுவாமியின் கடைசி காலத்தில், இலங்கையில் இருந்த தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு இடையே இனப்பிரச்சனை நடந்துகொண்டு இருந்தது. அந்த பகை உணர்ச்சி பல நூற்றாண்டுகளாக இருந்து வந்தது. அந்த நாட்டில் சிங்கள புத்தர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தார்கள். அந்த சமயத்தில் அவர்கள், சிங்கள மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக மாற்ற முயற்சி செய்தனர். இந்த முயற்சி மற்றும் அதன் விளைவுகளால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலவரம் மூண்டது. இந்த மோதல்கள் பல வருடங்களுக்கு தொடர்ந்துக்கொண்டு இருந்தன. §§

பிப்ரவரி 21, 1961 அன்று யோக சுவாமி வழக்கம் போல, காலையில் ஆசிரமத்தில் இருந்து கிளம்பி வண்ணார்பண்ணைக்கு நடந்து சென்றார். அவர் டச்சு கோட்டையை கடந்து செல்லும் போது, அங்கே மக்கள் தெருக்களில் சண்டையிட்டுக்கொண்டு இருந்தார்கள், மற்றும் அவர் தன் கண் முன்னே வன்முறையையும் இரத்தம் சிந்துவதையும் கண்டார். அவர் கம்பீரமாக அந்த சண்டையில் தலையிடாமல் திரும்பி, தனது ஆசிரமத்தை நோக்கி நடக்குத் தொடங்கி, மதியம் சென்றடைந்தார். §§

அவர் வழக்கமாக தனது குடிசைக்கு வந்ததும், சாலையின் மறுபுறத்தில் இருந்த கிணற்றில் தன் கால்களை கழுவி, கைகள் மற்றும் முகத்தை அழுத்தி தேய்த்துவிட்டு வருவார். அந்த கிணற்றில் தான் ஆசிரம வளாகத்தில் நுழையும் எல்லா அன்பர்களும் தங்களை சுத்தப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் அன்று, அவர் வாகனத்தில் இருந்து இறங்கி, தனது குடிசையின் வாசலை தாண்டி இருந்த புல்வெளியில் சுமார் 60 கஜ தூரம் நடந்து சென்று, மாட்டு கொட்டகைக்குள் நுழைந்தார். அங்கே அவரது மாடு வள்ளி கட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த மாடு கடந்த சில நாட்களாக முரட்டுத்தனமாக நடந்துகொள்வதால், அதற்கு அருகில் செல்ல வேண்டாம் என்று திருநாவுக்கரசுவின் மகள் எச்சரித்து இருந்தாலும், அவர் வழக்கமாக செய்வதை போல, அதை அன்பாக தடவிக்கொடுத்து, அதற்கு சில வாழைப்பழங்களை வழங்கினார். விளையாடிக்கொண்டு இருக்கும் கால்நடைகள் வழக்கமாக செய்வதை போல, வள்ளி தன் முகத்தை சுவாமியை நோக்கி திருப்பி, தனது ஆயிரம் பவுண்ட் உடலமைப்பின் எடையுடன் அவரை தாக்கியது. எண்பது வயது நிரம்பி பலவீனமான உடலுடன் இருந்த சுவாமி தூக்கி எறியப்பட்டார். அவரால் எழுந்திருக்க முடியவில்லை. தான் தரையில் விழுந்ததால், தனது இடது இடுப்பு எலும்பு முறிந்ததுவிட்டது என்பதை அவர் பின்னர் தெரிந்துகொண்டார். §§

அதிஷ்டவசமாக, சுவாமியை காண்பதற்காக ஆசிரமத்தில் காத்திருந்த திரு. பாலகுமார் மற்றும் அவரது மனைவி, விபத்தை பார்த்ததும் சுவாமியை நோக்கி விரைந்து வந்தனர். அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்தவரை அழைத்து, வங்கியில் செய்துக்கொண்டு இருந்த திரு. திருநாவுக்கரசு மற்றும் புத்தகக்கடையில் வேலை செய்த திரு. திருவேந்திரத்திற்கும், இந்த செய்தியை அவசரமாக தெரிவிக்குமாறு கூறினார்கள். திருவேந்திரம் திரு. கே. பிரம்மாநந்தாவிற்கு தகவல் தெரிவித்தார். எல்லோரும் ஆசிரமத்திற்கு விரைந்தனர். §§

image§

யோக சுவாமி விபத்தை சந்திக்கும் வரை, தனது வாழ்நாளில் பெரும்பாலும் சுதந்திரமாக சுற்றித் திருந்து, அவருக்கு பிடித்தமான இலங்கையின் வீதிகளில் நாள்முழுவதும் நடந்துகொண்டு இருப்பார். ஆனால் அவர் கீழே விழுந்ததால், 88 வயதில் அவரது இடுப்பு எலும்பு முறிந்தது மற்றும் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்த வேண்டியதாயிற்று. இதன் காரணமாக, அன்பர்கள் அவரை எந்த தயக்கமும் இன்றி சந்திக்க முடிந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர்கள் சுவாமியை ஒரு தற்காலிக தூக்குப் படுக்கையில் வைத்து, திரு. பிரம்மாநந்தாவின் வேன் வரை சுமந்து சென்று, பின்னர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு விரைந்தனர். முன்பே தகவலை பெற்ற திரு. அ. தில்லையம்பலம் மருத்துவமனைக்கு வந்திருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் கொழும்பு அன்பர்களுக்கு தகவலை தெரிவித்தார். அடுத்த நாள் காலையில் இருபது சீடர்கள் கொழும்பில் இருந்து விமானம் மூலம் வந்தனர். அதில் Dr. வி. இராசநாயகம் மற்றும் Dr. ஏ. ஜே. அந்தோனிஸ் என்ற இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களும் இருந்தனர். யோக சுவாமிக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டு, சிறப்பான கவனிப்பு வழங்கப்பட்டது. §§

அவர் மருத்துவமனையில் நுழைந்ததும், அது கோயிலாக மாறிவிட்டது. அங்கே கூடியிருந்த அன்பர்கள் அவரது உடல்நிலை பற்றிய தகவலை பெறுவதற்காக காத்து இருக்கும் போதும், சுவாமிக்கு பிடித்தமான நற்சிந்தனை மற்றும் சிவபுராண பாடல்களை அமைதியாக பாடிக்கொண்டு இருந்தனர். அன்று மாலையில், எலும்பியல் சிகிச்சை நிபுணராக இருந்த Dr. வி. இராசநாயகம், சுவாமியின் இடுப்பிற்கு சிகிச்சை வழங்கினார். சுவாமியின் இடுப்பு குணமடைந்து விட்டாலும், அவரால் எழுந்து நடக்க முடியாது என்று அவர் சிகிச்சைக்கு பிறகு தெரிவித்தார். அங்கே சுவாமி தங்கியிருந்த போது Dr. சி. குருசாமி, Dr. எஸ். இராமநாதன், Dr. வி.டி. பசுதி, Dr. எஸ். ஏ. வெட்டிவெலு மற்றும் Dr. என். வாலூபிள்ளை என்று ஐந்து மருத்துவர்கள் ஒரு சுழற்சியில் அவரை கவனித்துக்கொண்டனர். §§

image§

தூல உடலின் மீது அதிக கவலையுடன் இருக்க வேண்டாம், ஆனால் அதை நன்றாக பயன்படுத்துங்கள் என்று குறிப்பிடும் வண்ணம், யோக சுவாமி தனது சீடர்களிடம், “உடலை ஒரு சந்தனத்தை போல அணிந்து கொள்ளுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார். ஒரு நாள் சுவாமி தான் வளர்த்த வள்ளி என்ற பசுமாட்டிற்கு வாழைப்பழங்களை வழங்கிக்கொண்டு இருக்கும் போது, அது அவரை தனது தலையால் முட்டி, தரையில் தள்ளியது. அதன் பிறகு அவர் வாழ்க்கை மாறியது, ஆனால் அவரது பற்றின்மை என்றும் தடுமாறவில்லை. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“என்றாவது ஒரு நாள் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்”§

சுவாமி இரவு நேரங்களில் அசையாமல் நன்றாக உறங்கவெண்டுமே என்ற கவலை மருத்துவர்களுக்கு தோன்றியது. அவர்கள் சுவாமியை சூழ்ந்து கொண்டு, விரைவாக குணமடைய அசையாமல் இருப்பது ஏன் முக்கியம் என்று விளக்கம் அளித்தனர். சுவாமி தனக்கு ஏற்பட்ட காயத்தை மருத்துவர்களை போல அல்லாமல் வித்தியாசமாக கருதி, “இது முக்கியமாக உங்களுக்கு தோன்றுகிறதா. எனக்கு இது ஒன்றுமில்லை,” என்று கூறினார். ஆனால் அவர்ககளின் கவலை மற்றும் வற்புறுத்தலின் காரணமாக, அவர் தூக்க மருந்துக்கு சம்மதம் தெரிவித்தார். அவர்கள் வழங்கும் மருந்து காரணமாக அவருக்கு காலை எட்டு மணி வரை சோர்வாக இருக்கும் என்று கூறி மருத்துவர்கள் அவருக்கு ஊசி போட்டனர். யோக சுவாமி உடனடியாக நன்றாக உறங்கிவிட்டார், மற்றும் தங்கள் திட்டம் நிறைவேறுவதாக மருத்துவர்களுக்கு தோன்றியது. ஆனால் அதிகாலை நான்கு மணி அளவில் அவர் விழித்துக்கொண்டார். §§

அவர் தினமும் விரைவாக விழித்துக்கொண்டார். நான்கு மணி அளவில் அவர் அமைதியாக உட்கார்ந்து இருப்பார், மற்றும் மக்கள் மெதுவாக ஒன்று சேர ஆரம்பித்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சீடர்கள் என்று எல்லோரும் கூடினார்கள். அவர்கள் 4:30 மணி முதல் துதிப்பாடல்களை பாடவும் பாராயணம் செய்யவும் ஆரம்பித்தனர். அன்பர்கள் தூபம் மற்றும் கற்பூரத்தை ஏற்றினார்கள். சிலசமயங்களில் யோக சுவாமி அவர்களிடம் பேசுவார். அவர் வழக்கமாக தன்னை சந்திக்க வந்தவர்களிடம் ஒரு குறிப்பிட்ட சாஸ்திரத்தில் இருந்து பாடவோ அல்லது ஓதவோ கேட்டுக்கொள்வார். §§

அவர் 5:45 மணி அளவில் தங்கள் வேலைகளுக்கு செல்லுமாறு எல்லோரிடமும் கேட்டுக்கொண்டு, தனது சிப்பந்திகளிடம் அறையை சுத்தம் செய்து விரிப்புக்களை சரி செய்யுமாறு கூறுவார். தினமும் காலை ஆறு மணிக்கு அவரது மருத்துவ தேவைகளை கவனித்துக்கொள்ள ஒரு ஆங்கிலேய கன்னியாஸ்திரி வருவார். அந்த கன்னியாஸ்திரியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, எல்லாம் அமைந்திருக்க வேண்டும் என்பதை சுவாமி வலியுறுத்துவார். அவர் தூபத்தில் இருந்து விழுந்த சாம்பல் சுத்தம் செய்யப்பட்டு, படுக்கை விரிப்புகள் சரியாக இருப்பதை உறுதி செய்துக்கொள்வார். அந்த கன்னியாஸ்திரி சுவாமியை வணங்கி, “வணக்கம், தந்தையே. எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்பார். அதற்கு சுவாமி, “வணக்கம் அன்னையே,” என்பார். §§

ஒரு நாள் சுவாமி அந்த பெண் துறவியிடம், தினமும் எப்போது பிரார்த்தனை செய்கிறார் என்று கேட்டார். அதற்கு அந்த பெண் துறவி, “நான் செய்யும் வேலையே என் பிரார்த்தனை. தந்தையே, கைகளால் செய்யும் வேலையே, நான் செய்யும் பிரார்த்தனை.” “நாங்களும் அப்படித்தான்,” என்று சுவாமி பதில் அளித்தார். “அந்த வகை பிரார்த்தனையால், எங்களுக்குள் இருக்கும் இறைவன், எங்கள் வாயிலாக வேலை செய்வதற்காக, நாங்கள் சுத்தமாக இருக்கிறோம்.” சுவாமி உள்ளிருக்கும் இறைவனை பற்றிப் பேசியதும் பெண் துறவி தனது காதுகளை மூடிக்கொண்டு, தனது கண்களுக்கு உள்ளிருக்கும் இறைவன் தெரியவில்லை என்றும், அத்தகைய ஒரு கருத்தை தன்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்பதையும் குறிப்பிட்டார். யோக சுவாமி சிரித்துக்கொண்டு, “சரி, பரவாயில்லை. என்றாவது ஒரு நாள் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்,” என்றார். §§

மாலை நேரத்தில், மருத்துவமனையில் முக்கியமான வேலைகள் முடிந்தவுடன், அவரது தரிசனத்துடன் பாடல்களை பாடி அருகில் அமர்ந்து இருக்க, மக்கள் சுவாமியின் அறையில் மீண்டும் கூடினார்கள். அவர்கள் விளக்குகளுடன் மீண்டும் தூபம் மற்றும் கற்பூரத்தை ஏற்றினார்கள். §§

தன்னை நாடி வந்த அன்பர்களுக்கு எல்லாம் யோக சுவாமி என்றுமே ஒரு வலுவான இருப்பாக, அருகாமையில் துடிப்புணர்வுடன் இருந்தார். சிலர் வியக்க வைத்த அந்த இருப்பைக் கண்டு பயந்தனர். அது சிலருக்கு ஒரு தாயின் இரக்கத்தைப் போல தோன்றியது. அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அவர் அறிந்து இருந்தார். தனக்கு ஏற்பட்ட விபத்துக்கு பிறகு, அதிக நேரம் தனக்கு உட்புறமாக செலவழித்து, வெளிப்புறத்தில் அதிக மென்மையாக மற்றும் தனிமையில் இருந்தார். அவரை சுற்றி ஒரு ஒளியை பார்த்தவர்களுக்கு, அவர் சொர்க்க லோகத்தில் இருப்பது போல தோன்றியது. அவர் முன்பு கடுமையாக நடந்துக்கொண்டு இருந்தவர்களிடமும், அந்த விபத்துக்கு பிறகு மென்மையான வரவேற்பை வழங்கினார். §§

சிலசமயங்களில் யோக சுவாமி ஆழ்ந்த தியானத்தில் நுழைந்து, தனது உடலை முழுவதுமாக மறந்து விட்ட போது, செல்லப்பகுரு தனது இருப்பை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் மறைத்து இருந்தார் என்று அவர் கூறியதைப் போல, அவரும் தனது இருப்பை மறைத்துள்ளார் என்பது அப்போது தான் மக்கள் உணர தொடங்கினார்கள். இந்த காலகட்டத்தில் அவர் எப்படி இருந்தார் என்பதன் மூலம், குருவின் உண்மையான இயல்பை அன்பர்களால் சிறிதளவு உணர முடிந்தது. அவர் தனது உடலை சுட்டிக்காட்டி, “நீங்கள் இந்த நபரை குருவாக நினைக்கககூடாது. இதிலிருந்து குரு முற்றிலும் மாறுபட்டவர். ”§§

ஒரு அன்பர் மருத்துவமனையில் சுவாமியை சென்று பார்த்தது பற்றியும், தனது காயத்தைப் பற்றி சுவாமி தந்த விவரத்தைக் பற்றியும் எழுதியுள்ளார்.§§

நான் அவரை பார்க்க என் மாமனாருடன் மருத்துவமனைக்கு சென்றேன். நாங்கள் வாகனத்தில் சென்றுகொண்டு இருக்கும் போது, யோக சுவாமியின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக என் மாமனார் என்னிடம் கூறினார். “அவர் ஒரு தெய்வீக புருஷர், வாழ்க்கையில் நடக்கும் வேதனைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை உலக மக்களுக்கு தெரிவிக்கவே, அத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன,” என்று பதில் அளித்தேன். நாங்கள் நுழையும் போது, யோக சுவாமி மருத்துவரின் கைகளை பிடித்துக்கொண்டு, “இராசா? எனக்கு நடந்த விபத்தால், நான் அதிக வேதனையை அனுபவிப்பதாக, உங்களுக்கு தோன்றுகிறது அல்லவா? எனக்கு எந்த குறையும் இல்லை. தவறான செயலை செய்த உடல், அதற்கான பலனை அனுபவித்துக் கொண்டிருக்கிறது,” என்று கூறிய போது அவர் கால்களில் கட்டு போடப்பட்டு இருந்தது, மற்றும் அவரது மனம் அதிக பற்றின்றி இருந்ததால், அவர் முகம் ஒரு புதிய ரோசாவைப் போல வாடாமல் இருந்தது! §§

மேலே குறிப்பிட்ட கருத்தை, இன் வர்டுஸ் ஆஃப் அவர் மாஸ்டர் என்ற புத்தகத்தில் சுவாமி விரிவாக விளக்கியுள்ளார்: §§

இது [நோய்] ஒரு வரப்பிரசாதம். நாம் கர்மவினையை முழுமையாக அனுபவித்தாக வேண்டும். எனக்கும் இந்த உடலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. இந்த உடம்பு தோன்றிய போது அதோடு சம்பந்தப்பட்ட எல்லா விதைகளையும் தன்னுடன் கொண்டு வந்துள்ளது. அதில் நோயும் ஒன்றாகும். இதன் காரணத்தை அறிந்தவர்கள், இதை வேதனைகளின் முடிவாக கருதி மனம் தளராமல் இருப்பார்கள். அறியாமையில் இருப்பவர்கள் சோகமாக பதட்டத்துடன் இருப்பார்கள்.”§§

அவரது உடல்நிலை குறித்து அன்பர்கள் தங்கள் மனவேதனையை கூச்சலுடன் வெளிப்படுத்திய போது, யோக சுவாமி, “உங்களால் என் கர்மவினையை நிறுத்த முடியுமா?” என்று அவர்களை சமாதானப்படுத்தினார். அவருடைய கண்ணோட்டத்தில் எல்லாம் முழுமையான ஒழுங்கில் இருக்கிறது என்பதையும், அவரது உடல்நிலைக்கு ஒரு அன்புள்ளம் கொண்ட சாட்சியாக இருப்பதே அவருக்கு செய்யும் சிறந்த உதவியாக இருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். §§

image§

யோக சுவாமி உடலுறுதியுடன் இருந்தாலும், அவர் நீரழிவு நோயால் அவதிப்பட்டார். 50 களின் தொடக்கத்தில் இருந்து, அவரது சீடனாக இருந்த ஒரு மருத்துவரால் அவருக்கு தினமும் இன்சுலின் ஊசி போடப்பட்டு வந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அந்த மாட்டை மக்கள் திட்டத்தொடங்கிய போது, யோக சுவாமி அவர்களை நிறுத்தி, “நாம் வள்ளியின் வழியில் குறிக்கிட்டோம். எப்போவோ முடிந்த காரியத்தை அந்த மாடு செய்யவில்லை,” என்று கூறினார். எதிர்காலத்தில் தமிழ் சமூகம் பல பிரச்சனைகள் மற்றும் இன்னல்களை சந்திக்க உள்ளது என்பது சுவாமி முன்பே அறிந்து இருந்தார் மற்றும் அவர் எதிர்பார்த்த பயங்கரமான கர்மவினைகளை தணிக்கும் முயற்சியாக, தனக்கு ஏற்பட்ட காயத்தின் மூலம் அவர்களது வேதனைகளில் சிலவற்றை தானே தாங்கிக்கொண்டதாக பல சீடர்கள் நம்புகிறார்கள். §§

இது தொடர்பாக எஸ். சண்முகசுந்தரம் தனது அனுபவத்தை பகிர்கிறார். பல வருடங்களுக்கு முன்பு, ஒரு அன்பர் சுவாமியிடம் எதற்காக தனது வியாதிகளுக்கு மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை என்றும், எதற்காக நோயை வரவழைத்துக் கொண்டார் என்றும் கேட்டபோது, யோக சுவாமி, “நான் இறக்கவேண்டும் என்று நினைத்தால், இப்போதே என் கண்களை மூடி படுக்கையில் படுத்து சிறிது நேரத்தில் இறந்து விடமுடியும். ஆனால் நான் இன்னும் சில வேலைகளை செய்யவேண்டி இருக்கின்றன. எனது கோபத்தை சிறிது குறைக்க வேண்டும்,” என்று பதில் அளித்தார். தான் உயிர் துறக்கும் போது, திரும்பி வராமல் நிரந்தரமாக செல்ல விரும்பியதால், எல்லாம் முழுமையாக முடித்துவிட்டு கிளம்ப விரும்பினார். §§

சுவாமி மெதுவாக தனது உடல் வலிமையை பெற்று, மரத்தால் செய்த ஒரு வசதியான சக்கர நாற்காலி மற்றும் ஒரு நடக்கும் கருவியை பயன்படுத்தி நடக்க ஆரம்பித்தார். சந்தசுவாமி ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சுவாமிக்காக வானூர்தி மூலம், துருவுறா எஃகில் தயாரித்த ஒரு நவீன நாற்காலியை கொண்டு வந்தார், ஆனால் அவர் தனது பழைய நாற்காலியையே விரும்பிப் பயன்படுத்தினார். §§

அவர் மருத்துவமனையில் குணமடைந்து வந்த போது, அவரது ஆசிரமத்திற்கு வடக்கே ஒரு புதிய ஆசிரமத்தை அவரது சீடர்கள் இரவு பகலாக கட்டி வந்தார்கள். அது பழைய ஓலைக்குடிசையின் அளவுடன், கற்காரை சுவர்கள் மற்றும் தரை, களிமண் ஓடு பயன்படுத்திய கூரை, சக்கர நாற்காலிக்கு தேவையான வசதி, உட்புறத்தில் குழாய் வசதி, மின்சார வசதி, ஒரு வசதியான படுக்கை மற்றும் சுவாமி மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் அவருக்கு தேவையான மற்ற வசதிகளுடன் நிரம்பி இருந்தது. அந்த கட்டிடம் நிறைவேறும் வரை, மருத்துவர்கள் வெளியே செல்ல அவருக்கு அனுமதி வழங்கவில்லை. §§

“அவரது இருப்பில் நாங்கள் அமைதியை கற்றுக்கொண்டோம்”§

யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் மூன்று மாதங்கள் இருந்த பிறகு, ஜூன் 1961, கொழும்புத்துறை திரும்பி தனது புதிய ஆசிரமத்தில் வசிக்க ஆரம்பித்தார். அவரை கவனித்துக்கொள்ள, அன்பர்கள் தங்களுக்குள் ஒரு சுழற்சியை அமைத்துக்கொண்டனர். அவரது தேவைகளை கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு அன்பர் அவருக்கு அருகில் இருந்தார், மற்றும் தினமும் காலையில் சுவாமிக்கு உடலியக்க சிகிச்சையை வழங்க Dr. ராசகருணா வந்துக்கொண்டு இருந்தார். ஆனாலும் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை. §§

அவருக்கு உடலில் வலிமை திரும்பியதும், சுவாமி தனது சக்கர நாற்காலியில் சிறு பயணங்களை மேற்கொண்டார். திரு. திருநாவுக்கரசுவின் மருமகன் சிவயோகேஸ்வரன் சுவாமியின் நாற்காலியை தள்ளிக்கொண்டு இருக்க, அவர் பெரும்பாலும் ஆசிரமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செல்வார். அவர் காலையில் வாகனத்திலும் நகரத்தை சுற்றி வந்தார். அவர் மதியம் உணவு சாப்பிட்ட பிறகு, மாலை 4 மணி வரை ஒரு குட்டித்தூக்கம் போடுவார். அவர் மாலையில் தனது ஆசிரமத்தில் அன்பர்களை சந்திப்பார். §§

ஒவ்வொரு வாரக்கடைசியிலும் கடற்கரையோரம் வாகனத்தில் செல்வது அவரது விசேட நடவடிக்கையாக இருந்தது. குறிப்பாக அந்த நாட்களின் போது கடற்கரையோரம் செல்வதை அவர் விரும்பினார் மற்றும் அது அவர் உடலுக்கு ஆறுதல் தருவதாக இருந்தது. 4:30 மணி அளவில் அ. தில்லையம்பலம் மற்றும் அவரது பதின்ம வயது மகன் தி. சிவயோகபதி, தங்கள் வாகன ஓட்டியுடன் தங்கள் ரோவர் வாகனத்தில் வந்து சேர்வார்கள். சுவாமியை சிறிது தூரம் தெருவில் அழைத்து செல்ல அவரது உடலை பஞ்சு கொண்டு துடைத்து, வெளியே செல்வதற்கான உடை அணிவித்து, அவரை மிகவும் மெதுவாக சக்கர நாற்காலிக்கு அழைத்து செல்வதை மகன் கவனித்துக்கொண்டான். §§

அவர்கள் கடற்கரை நோக்கி சென்ற போது, சுவாமி முன்பக்க இருக்கையில் அமர்ந்து கொள்வார். அவர்கள் அங்கே சென்றதும், அவர் கடல் காற்றை அனுபவிப்பதற்காக, வாகனத்தின் கதவுகளை திறந்து வைத்து, மேல் கூரை பின்னே தள்ளப்பட்ட நிலையில் நிறுத்தி இருந்தனர். கடற்கரை ஓரமாக சுவாமியும் அவர்களை உபசரித்த இருவரும் சிவதொண்டன் நிலையத்திற்கு சென்றனர். அங்கே சென்றதும், சுவாமி வாகனத்தில் இருந்துக்கொண்டு செல்லத்துரையை வெளியே அழைத்து, அவருடன் சிறிது நேரம் பேசுவார். §§

அவர்கள் வழக்கமாக நல்லூர் கோயிலுக்கு செல்வார்கள். வாகனம் தேரடிக்கு முன்பாக நிறுத்தப்படும், மற்றும் சுவாமி சிவபுராணம் பாடி இறைவனை வணங்குவார். தெய்வத்தின் ஆசிகளை வேண்டி ஒரு விசேட அர்ச்சனை செய்வதற்கு பணம், தேங்காய்கள் மற்றும் கற்பூரம் அடங்கிய ஒரு கூடை கோயிலுக்குள் அனுப்பப்படும். §§

வழக்கமாக சாதுக்களும் மற்றவர்களும் அந்த வாகனத்தை நெருங்கியதும், சுவாமி ஒவ்வொருவருக்கும் தன் கைப்பட ஒரு வாழைப்பழத்தை வழங்க, இன்னொருபுறம் அமர்ந்து இருந்த தில்லையம்பலம், இந்த தருணத்திற்காக தயார் நிலையில் வைத்திருந்த தனது சில்லறை பணப்பையில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஒரு ரூபாய் நாணயம், பத்து அல்லது ஐம்பது ரூபாயை தருவார். அந்த காலத்தில் ஒரு ரூபாய் மூன்று வேளை உணவிற்கும் போதுமானதாக இருந்ததால், அது ஒரு தாராளமான நன்கொடையாக இருந்தது. இது ஜனவரி 1964 வரை தொடர்ந்தது. §§

ஒரு காலத்தில் அச்சுறுத்திய முனிவரைக் கண்டு மக்கள் இனி அஞ்சவில்லை, மற்றும் அவரை நெருங்க பயந்தவர்கள் அவரை நாடி வரத்தொடங்கினார்கள். அவர் வழக்கமாக அவர்களை சிவ தொண்டன் நிலையத்திற்கு அனுப்பிவிடுவார். §§

சுவாமிக்கு வேதனையில் இருந்து நிவாரணம் அளிக்க அதிகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் கால்களில் அதிகமான நீர் தேங்கி இருந்ததால் ஏற்பட்ட வீக்கம், யாராவது தேய்த்து விட்டால் சற்று குறைந்தது. தனது கால்களை தேய்த்து விடுவதற்கு சுவாமி சில ஆண் அன்பர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கினார், மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட சோர்வை சுவாமி உணர்ந்து, தன் உடலை தேய்த்து விடுவதை நிறுத்த சொல்லவில்லை என்றால், அவர்கள் அந்த பணியை தங்களுக்கு கிடைத்த பாக்கியமாக கருதி தொடர்ந்து தேய்த்துக் கொண்டு இருப்பார்கள். §§

இந்த இறுதி வருடங்களைப் பற்றி ரத்னா மா நவரத்தினம் ஒரு சிறிய கண்ணோட்டத்தை வழங்குகிறார். §§

அவரை 1961 முதல் 1964 வரையில் வருத்திய தியாக உணர்வு நிரம்பிய காயம், அவரது சீடர்களின் இதயங்களில் தணிக்க முடியாத பக்தியின் சுடரை ஏற்றி இருந்தது, மற்றும் அது கர்மவினை அல்லது தியானத்தைப் போன்று பக்தியும் நிறைவில்லாதது என்ற உணர்தலை வெளிப்படுத்தியது. நாங்கள் அவரது இருப்பில் அமைதியாக இருந்தோம் மற்றும் அவரது உதட்டில் இருந்து உதிரும் அமுதத்திற்கு காத்து இருந்தோம். பகலும் இரவும் ஒன்றாக இருந்தது, மற்றும் சாந்தமான அமைதிக்கு தன்னை விடுவித்துக் கொண்டிருந்த எங்களது சிறைப்பட்ட மனங்கள் மீது எதிர்மறைகளின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டு சென்றது. சுவாமி எங்களை பின்னோக்கியும் முன்னோக்கியும் அழைத்து சென்றார். ஈடு இணையற்ற தனது குருநாதன், செல்லப்பசுவாமி பற்றிய பல தெளிவுபடுத்தும் நினைவுகளை நினைவுக்கூர்ந்தார்.§§

எப்போதும் எதிரொலித்துக் கொண்டிருந்த குருவின் குரல், பூமியில் அவர் வாழ்ந்த இறுதி நாட்களின் போது பாசத்துடன் மென்மையாக ஒலித்தது. அவர் தெய்வீகத் தாயான, தையல்நாயகி தேவியை பிரார்த்தனை செய்து, அவள் ஒவ்வொருவரின் மனதிலும் குடிகொண்டு, ஒவ்வொருவரின் வேதனை மற்றும் மகிழ்ச்சியை உறுதியாக அறிந்து இருப்பதால், அவள் மனதில் தடுமாற்றம் இல்லாத தனது குழந்தைகளின் அழைப்பிற்கு விரைவில் பதில் அளிப்பவள் என்று அறிவிப்பார். அவர் எங்களிடம், தையல்நாயகி பற்றிய பாடலில் இருந்து நான்கு வரிகளை பல மணிநேரங்களுக்கு பாடச் சொல்வார். நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்து நோய்கள் மற்றும் எச்சரிக்கைகளில் இருந்து நம்மை காப்பாற்றும் அன்புள்ளம் கொண்ட குருவின் வடிவமாக அந்த தாய் இருக்கிறாளா? அது புனிதமான சாஸ்திரங்கள் போற்றிப் பாடும் தெய்வீக சக்தியாக இருக்குமா?§§

அவர் ஆசிரமத்தில் இருந்த இறுதி மூன்று வருடங்களின் போது வழக்கமாக நல்லூர் கோயில் மற்றும் வைத்தீஸ்வரன்-தையல்நாயகி சிவன் கோயிலில் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்ய பரிந்துரைப்பார். பாத யாத்திரியாக சிவ தொண்டன் நிலையத்தில் இருந்து நல்லூர் கோயிலுக்கு சென்று, பிறகு தனது ஆசிரமத்திற்கு திரும்புவது, அவர் வழங்கிய இன்னொரு பரிந்துரையாக இருந்தது. §§

அவர் கந்தபுராணத்தை வீட்டிலும் கோயிலிலும் படிக்கவேண்டும் என்று தனது சீடர்களிடம் கேட்டுக்கொண்டார். அவர் தனது மகாசமாதி நாளை நெருங்கிக்கொண்டு இருந்த போது, கந்த புராணத்தில் ஒரு அத்தியாயமாக இருந்த மார்கண்டேய படலத்தை, அன்பர்களுக்கு கற்பிக்க ஏற்பாடு செய்து இருந்த பாணியில், கவிஞரின் பாடல்களை ஒருவர் பாடுவார் மற்றும் இன்னொருவர் தனது சொந்த வார்த்தைகளில் அதற்கான விளக்கத்தை பாடுவார். அந்த அமர்வில், ஒரு ஆசிரியராக இருந்த தம்பையா விளக்கங்களை வழங்கினார். இத்தகைய ஆன்மீக சொற்பொழிவில் சுவாமி அடிக்கடி பங்குபெற்று, மற்றவர்களும் இதைப்போன்று நடத்த ஊக்குவித்தார். §§

அவரது மகாசமாதிக்கு ஒரு மாதம் முன்பாக, வரவிருந்த இன்னல்களை அறிந்திருந்த யோக சுவாமி உரத்த குரலில், “தையல்நாயகி அம்மா! தமிழ் மக்கள் எதிர்காலத்தில் சந்திக்க இருக்கும் வேதனைகளில் இருந்து காப்பாற்றி அருள் புரிந்திடு. அவர்களுக்கு எதிர்காலத்தில் தினமும் ஒரு குவளை அரிசி கஞ்சி கிடைப்பதே கடினமாக இருக்கும்!” அவர் மேலும், “எல்லா தமிழர்களும், எதிர்காலத்தில் வரும் இன்னல்களை எதிர்கொள்ள, நெல்பயிர் சாகுபடியுடன் பல்வேறு தானியங்களையும் சாகுபடி செய்ய வேண்டும்!” என்று உத்தரவிட்டார். §§

இனப்போர் வெடித்து, அதனுடன் முப்பது வருடங்களுக்கு சண்டை, பசி மற்றும் வேதனைகளை கொண்டு வந்த போது, சுவாமி எதிர்காலம் பற்றி வழங்கிய தீர்க்க தரிசனம் துல்லியமானது என்பதை, இலங்கை தமிழ் சமூகம் முழுவதும் இருபது வருடங்கள் கழித்து புரிந்துகொண்டனர். §§

யோக சுவாமி மருத்துவமனையில் இருந்து திரும்பிய போது, அவர் இனி நீண்டநாட்கள் உயிர் வாழப்போவது இல்லை என்பதை அறிந்திருந்த ஒரு அன்பர், அவரை வைத்து மூன்று புகைப்படங்களை எடுத்தார். சுவாமி வழக்கமாக தன்னை வைத்து புகைப்படம் எடுப்பதை அனுமதித்ததில்லை என்பதால், அந்த புகைப்படங்கள் அவரது வாழ்நாள் முழுவதிலும் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களில் ஒன்றாக விளங்கின. பலர் சுவாமியை படம்பிடித்து விட்டதாக நினைத்தனர், ஆனால் உருத்துலக்கல் அறையில் (developing room) இருந்து வெளிவந்த புகைப்பட எதிர்மறை எந்த உருவமும் இல்லாமல் காலியாக இருந்தது. அவர் படுக்கையில் அமர்ந்த போது எடுத்த இவையும், 1951 ஆம் ஆண்டு 19 வயது சாமி பசுபதி எடுத்த இரண்டு புகைப்படங்கள் மட்டுமே, அவரது ஆசியை பெற்று இருந்தன. இந்த ஐந்து புகைப்படங்கள் மற்றும் அவர் தனது கையில் ஒரு குடையுடன் புகைப்படக்கருவியில் இருந்து விலகி, தெருவில் நடந்து சென்ற போது எடுத்த இன்னொரு புகைப்படம் மட்டுமே, அவர் வாழ்நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகும். 2006 ஆம் ஆண்டு, சுவாமியின் புகைப்படங்களை எடுத்த அனுபவம் பற்றி சாமி பசுபதி விளக்குகிறார். §§

அந்த சமயத்தில் சுவாமிஜியை வணங்குவதற்கு எங்களிடம் எந்த புகைப்படம் எதுவும் இல்லை. ஒரு புகைப்படம் எடுக்க பலர் முயற்சி செய்து இருந்தாலும், யாருக்கும் அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஒரு நாள், யோக சுவாமி எங்கள் வீட்டில் தங்கி இருந்த போது, எனது தாய், தமிழ் அம்மையார் என்னிடம், “நாளை காலையில், சுவாமிஜி பிரார்த்தனை செய்துக்கொண்டு இருக்கும் போது, நீ ஒரு புகைப்படம் எடு,” என்றார். அப்படி புகைப்படம் எடுத்தால் அவர் என்னை திட்டுவார் என்று நான் பயந்தேன். அப்போது என் தாயார், “கவலைப்படாதே, அவர் திட்டினால், அதற்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன்,” என்றார். §§

அடுத்த நாள் காலையில் 6:30 மணிக்கு, என் தாயார் என்னை எழுப்பி, “சுவாமிஜி இப்போது பிரார்த்தனை செய்துக்கொண்டு இருக்கிறார். நீ அவர் தியானம் செய்யும் அறைக்குள் செல்லக்கூடாது, ஆனால் நீ வெளியில் நின்று புகைப்படம் எடுக்கலாம்.” நான் ஒரு புகைப்படம் எடுத்தேன். அதன் பிறகு சுவாமிஜி காலை சிற்றுண்டியை சாப்பிடும் போது, “யாராவது என் அறைக்குள் நுழைந்தீர்களா?” என்று கேட்டார். “யாரும் உள்ளே வரவில்லை,” என்று எனது தாயார் பதில் அளித்தார். பின்னர் நாங்கள் அவருடன் வெளியே அமர்ந்து இருந்த போது, “நாங்கள் ஒரு பெரிய தவறு செய்துவிட்டோம்,” என்ற என் தாயார் கூறினார். சுவாமி என் தாயாரை ஒரு சிறுமியாக இருந்ததில் இருந்தே அறிந்து இருந்ததால், “நீ தவறு செய்திருக்க வாய்ப்பில்லை,” என்று கூறினார். “உங்கள் அனுமதி இல்லாமல், உங்களை ஒரு முறை புகைப்படம் எடுத்துவிட்டோம்,” என்று செய்த தவறை என் தாயார் ஒப்புக்கொண்டார். அப்போது சுவாமி அமைதியாக இருந்ததால், அவர் என்ன சொல்லப்போகிறாரோ என்று நாங்கள் பயந்து இருந்தோம். அதன் பிறகு அவர் உற்சாகமாக சிரித்த போது, எங்களுக்கு பெரிதும் நிம்மதியாக இருந்தது. அதன் பிறகு நான், “சுவாமிஜி, நான் இன்னொரு புகைப்படம் எடுக்காலாமா?” என்று கேட்டேன். “நீ முன்பே ஒன்றை எடுத்துவிட்டாய், இன்னொன்று எடுக்கவேண்டிய அவசியம் இல்லை, “ என்று கூறி, சுவாமி சிறிதுநேரம் கழித்து தானே முன் வந்து, “சரி, நீ ஒரு புகைப்படம் எடுத்து விட்டாய். இன்னொன்று எடுப்பதில் எந்த தீங்குமில்லை,” என்று கூறினார். அதனால் அவர் திண்ணையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் போது, இன்னொரு புகைப்படத்தை எடுத்தேன். §§

அவர் குரலை பதிவு செய்ய மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் தோல்வியைத் தழுவின. அன்பர்கள் அவர் தலைமை தாங்கிய பாடலை பதிவு செய்ய அவரிடம் இருந்து ஆசிகளை பெற்று இருப்பார்கள். சுவாமி அந்த குழுவில் உரக்க பாடி இருந்தாலும், ஒலிப்பதிவில் அவர் குரலைத் தவிர மற்ற அனைத்தும் நன்றாக பதிவாகி இருந்தது. §§

“நான் இதை என்றுமே மறந்தது இல்லை, மற்றும் என்றுமே மறக்கமாட்டேன்”§

டிசம்பர் 1963 தொடங்கி, அடிக்கடி விசேடமான எச்சரிக்கைகள் வந்துக்கொண்டு இருந்தன. தனது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று சுவாமி ஒரு முறை கூறினார். அவர் தனக்கு நெருக்கமான சீடர்களிடம் மற்ற சீடர்களை அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். குருவின் மகாசமாதியின் போது அவருடன் இருப்பதற்காக, கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் என்று வெகு தொலைவில் இருந்து அன்பர்கள் வந்தார்கள். §§

ஒரு குரு அல்லது ஒரு மகான் உயிர் துறக்கும் தருணத்தில், அவரது வாழ்நாளில் என்றுமே இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்துகிறார் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் அன்பர்கள் அந்த விசேடமான ஆசிகளை எதிர்பார்த்து இருந்தனர். மேலும் அவர்கள் அவர் மீது வலுவான பற்றுடன் இருந்ததால், சோகமான முகத்துடன் அவரை பார்க்க வந்தனர். ஒரு பெரிய கூட்டம் கூடிய போது, சுவாமி அவரைப் பார்த்து தொடர்ந்து சிரித்துக்கொண்டு இருந்து, பின்னர் அவர்களை அனுப்பி வைத்தார். §§

அதன் பிறகு அவர் ஒரே சமயத்தில் பல நாட்கள் அல்லது பல வாரங்களுக்கு நன்றாக இருந்து, வாகனங்களில் நீண்ட பயணங்களை மேற்கொள்வார். சுவாமியை நீண்டதூரம் தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்ல, கொழும்புத்துறைக்கு தங்கள் குடும்பங்களுடன் திரு. திருவேந்திரம், திரு. காசிப்பிள்ளை நவரத்தினம், திரு. கதிர்கேசன் மற்றும் திரு. ராசேந்திரம் ஆகியோர் தொடர்ந்து வந்துக்கொண்டு இருந்தனர். §§

அன்பர்கள் அவரை பார்க்க ஆசிரமத்திற்கு வந்த போது, சுவாமி அவர்களிடம் பாடுமாறு கேட்டுக்கொள்வார் மற்றும் அவரும் வழக்கமாக அவர்களுடன் சேர்ந்து பாடுவார். அவர் குரல் அப்போது கணீரென்று இருந்தது. சிலசமயங்களில் அவர்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்கள் வரை பாடினார்கள். ஒரு அன்பரின் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், சிவ புராணத்தில் இருந்து சில பகுதிகளை பாடுமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவர்கள் குருவின் முன்பாக பாடிக்கொண்டு, மகிழ்ச்சியாக அமர்ந்து இருந்தனர். §§

யோக சுவாமி வாழ்ந்த இறுதி மாதங்களின் போது, அவரை சந்தித்த நாகேந்திரன் என்ற ஒரு சீடன் பின்வரும் வர்ணனையை வழங்கினார். §§

சுவாமி மகாசமாதி அடைவதற்கு சில மாதங்கள் முன்பு, எனது மாமா சிவநாதனும் நானும் கொழும்புத்துறை சென்றோம். அப்போது இரவு 8 மணியாகி இருந்தது மற்றும் யோகர் படுக்கையில் அமர்ந்து இருந்தார். அவரது இடுப்புப் பகுதியில் ஒரு வெள்ளை நிற சால்வை போர்த்தி இருந்தது. அவர் மேலங்கி எதுவும் இல்லாமல் இருந்தார். அவர் தலையில் நரைந்த முடி சிறிது கலைந்து இருந்தது. அவர் வாடிய முகம், குடிதாழ்ந்த கண்களுடன் இருந்தார். சாய்ந்து இருந்த அவரது முதுகை தாங்கிக்கொள்ள, அவரது இரு கைகளும் பின்னால் வைக்கப்பட்டு இருந்தன. அந்த அறையில் மின்சார ஒளி நிரம்பியிருந்தது. அன்றிலிருந்து எனது பூஜை அறையில் யோகரின் படத்தை வைத்து இருக்கிறேன். என் மாமா சிவாவும் நானும் அவருக்கு எங்கள் மரியாதையை செலுத்திக்கொண்டு இருக்கும் போது, அவர் தெய்வீக பாடல்களை பாடத் தொடங்கினார். சத்தமாகவும் தெளிவாகவும் இருந்த அந்த பாடல்கள், அறையில் எதிரொலித்துக் கொண்டிருந்தன. அவர் சுமார் பத்து நிமிடங்களுக்கு பாடினார். அவர் கண்கள் பிரகாசித்தன, மற்றும் அவற்றில் இருந்து அன்பு வெளிவந்து அவரது முகத்தில் பரவியது. நான் இதை என்றுமே மறந்தது இல்லை, மற்றும் என்றுமே மறக்கமாட்டேன். §§

“எல்லாம் தங்கமயமாக இருக்கிறது”§

ஜனவரி மாதத்தின் இறுதியில் இருந்து, சுவாமி கடற்கரை செல்வதற்கு அல்லது வெளியே மற்ற இடங்களுக்கு செல்வதை விரும்பாமல், சக்கர நாற்காலியில் அருகில் மட்டும் சென்று வந்தார். இதைப் பற்றி ரத்னா மா நவரத்தினம் வழங்கும் பகிர்வு: §§

அவர் இந்த காலகட்டத்தில் ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லாமல் இருந்ததால், எல்லோரும் அவரை எளிதாக சந்திக்க முடிந்தது. அன்பர்கள் பெருமளவில் அவரை நாடி வந்தனர், மற்றும் அவர் சுத்தப்படுத்தும் தனது அருளை யார் கண்களுக்கும் தெரியாமல் எல்லையற்ற பொறுமை மற்றும் அன்புடன் வழங்கினார். அவர் தனது விசித்திரமான வெப்பம் மற்றும் குளிர்ச்சி கலந்த சிகிச்சையின் மூலம் மக்கள் மனதிற்கு ஆறுதல் அளித்து, சோககீதம் இசைத்துக்கொண்டு இருந்த மனிதநேயத்தை தாங்கிக்கொண்டார். அவர் உருவாக்கிய சக்திக்கு இணையான ஒரு சக்தி கடலிலும் நிலத்திலும் இருந்ததில்லை, மற்றும் உற்சாகத்தை தூண்டிவிடும் நற்சிந்தனை பாடல்கள் மற்றும் வீட்டில் வழங்கிய சொற்பொழிவுகள் மூலம் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி நின்றிருந்த அனைவரையும் அந்த சக்தி ஊக்குவித்தது. அதனால் அவருக்கு ஏற்பட்ட விபத்து, இறையருளை வெளிக்கொண்டு வரும் வடிகாலாக அவரது சீடர்கள் கருதினார்கள். சுவாமி தனது லௌகீக வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில், இறை விருப்பத்தின் மிகவும் உயர்வான இறையாண்மையைப் பற்றி கற்றுத் தந்தார். “அவர் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் வியாபித்து இருக்கிறார். அவரது விருப்பத்தில் வாசம் செய்யுங்கள்,” என்பது அவர் வலியுறுத்திய வேண்டுகோளாக இருந்தது. §

image§

யோக சுவாமிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, தங்களுக்கு பிடித்தமான சற்குருவை தங்குதடையின்றி அணுக முடிந்ததால், அன்பர்கள் அதை தியாக உணர்வு நிரம்பிய காயமாக கருதினார்கள். அவர்கள் தினமும் பக்தியுடன் ஆசிரமத்தில் ஒன்று கூடி பாடினார்கள், தியானம் செய்தார்கள் மற்றும் அவரது ஞான மொழிகளை கேட்டறிந்து, முன்பு எப்போதும் அறிந்திராத நெருக்கத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர் மனரீதியாக முழு கவனத்துடன் இருந்தார். அவரது மகாபயணத்திற்கு ஒரு மாதம் முன்பாக, திரு. அம்பிகைபாகனை சந்தித்து இருந்தார். வைத்தீஸ்வரன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆசிரம வளாகத்தில் நுழையும் போது, சுவாமியின் ஞாபக சக்தி குறைந்து இருக்கும் மற்றும் அவருடன் தான் எப்படி பேசுவது என்ற சிந்தனையுடன் நுழைந்தார். அவர் ஆசிரமத்தில் நுழைந்த போது, சுவாமியின் சிரிப்பொலி அவரது காதில் விழுந்தது. அதன் பிறகு சுவாமி, “அம்பிகைபாகன், பதினைந்து வருடங்களுக்கு முன், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு எதிர்புறத்தில் நீங்கள் என்னுடன் இருந்த போது, நான் அந்த அன்பரை திட்டியது உங்களுக்கு நினைவு இருக்கிறதா?” என்று கேள்வி கேட்டார். சுவாமி எப்போதும் போல ஆர்வத்துடன் இருப்பதை பார்த்ததும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மகிழ்ச்சி அடைந்தார். §§

இந்த காலகட்டத்தில், சுவாமியிடம் தனது தந்தை ஆசிகள் பெற்ற சம்பவத்தை பற்றி தி. சிவயோகபதி தெரிவிக்கிறார். §§

சுவாமியின் மகாசமாதிக்கு ஒரு சில வாரங்கள் முன்பாக, அவரது சீடராகவும் நம்பிக்கைக்கு பாத்திரமானவராகவும் இருந்த திரு. அ. தில்லையம்பலம் வழக்கம் போல சுவாமியின் ஆசிரமத்திற்கு சென்றார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, சுவாமியின் குரல் உறுதியடைந்து: “ தில்லையம்பலம்! இந்த உலகில் பலர் இரவு பகலாக தங்களிடம் இருக்கும் பணத்தை எண்ணிக்கொண்டு, தங்களது வங்கி இருப்புத் தொகையை கணக்கிட்டுக்கொண்டு ஒரு மகிழ்ச்சியில்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஆனால் நீங்கள் வழங்கும் நன்கொடை மற்றும் சமூகத்திற்கு பரந்த மனப்பான்மையுடன் செய்யும் சேவையின் மதிப்பாக இருக்கும் உங்கள் வங்கியின் இருப்புத் தொகையை யாராலும் தொடவும் முடியாது அல்லது கணக்கிடவும் முடியாது, ஏனென்றால் அது தனித்தன்மை வாய்ந்தது. தேவையானவர்களுக்கு வழங்கும் நன்கொடை ஒரு உன்னதமான சிவ தொண்டு ஆகும்!” அவ்வாறு சொல்லிக்கொண்டு, சுவாமி தனது சீடனுக்கு பாசம் நிறைந்த சிரிப்புடன் ஆசிகளை வழங்கினார். §§

சுவாமி தான் இருந்த உலகில் எல்லோரும் இருக்கிறார்கள் என்று நினைத்ததாக தோன்றுகிறது. அது ஒருவரின் இறுதி நாட்களில் நடைபெறும் விந்தையாக இருக்கிறது. எல்லோரும் ஒரே உலகில் வாழ்வதைப் போல அவர் தனது சீடர்கள் மற்றும் கண்ணுக்கு தென்படாத சக்திகள், தேவர்கள் அல்லது தெய்வங்களுடன் பேசுவார். அவர் ஒரு அன்பரை அழைத்து, கண்ணுக்கு தென்படாத ஒருவரை அவரது வாகனத்தில் ஊர் சுற்றி காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டார். அது வரை சுவாமி கூறியதை தவறாமல் செய்து வந்த அன்பருக்கு, அப்போது என்ன செய்வது என்று புரியவில்லை. அவர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு, “சுவாமி, என் கண்ணுக்கு யாரும் தெரியவில்லை,” என்று முணுமுணுப்பார். அதற்கு சுவாமி, “அவர் இங்கே உனக்கு அருகிலேயே இருக்கிறார். நீ அவருக்கு நகரத்தை சுற்றி காண்பித்து அழைத்து வா,” என்று பதில் அளிப்பார். §§

அதனால் அந்த அன்பர், தனக்கு ஒரு கற்பனை சக்தியாக தோன்றிய ஒரு நபருக்காக கதவை திறந்து, கதவை மூடி, சுற்றி வந்து, வாகனத்தில் ஏறி ஊரை சுற்ற கிளம்புவதைத் தவிர, அவருக்கு வேறு எந்த வழியும தெரியவில்லை. அவர் தனது பணியில், அந்த உயிர்சக்திக்காக கதவை திறக்கவில்லை என்றால், “நீ கதவை திறக்கவில்லை! அவர் தெருவில் நின்றுக்கொண்டு இருக்கிறார்! உன் வாகனத்தை பின்னே கொண்டு வந்து, அவரை ஏற்றிக்கொள்!” என்று கத்துவார்.§§

இந்த உயிர்சக்திகளுடன் சுவாமி பல சீடர்களை அனுப்பி வைத்தார். ஒரு முறை ஒரு கண்ணுக்கு தெரியாத விருந்தாளியுடன் ஒரு சீடனை சுடுகாட்டிற்கு அனுப்பினார். அந்த அன்பருக்கு சுவாமியின் உத்தரவை பின்பற்றுவதைத் தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லை. அவர் தன் பணியை சரியாக செய்யவில்லை என்றால், சுவாமிக்கு தெரிந்து விடும் மற்றும் சுவாமி மீண்டும் அதே பணியை மீண்டும் செய்ய உத்தரவிடுவார். §§

அவர் ஒரு முறை ஒரு அன்பரிடம், அவரது வீட்டிற்கு ஒரு தேவரை அழைத்து சென்று தேநீர் வழங்கி உபசரிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த அன்பர் கடமையுணர்வுடன் தனது வீட்டிற்கு சென்று, மனதில் அவமானத்துடன், “என்னுடன் ஒரு நண்பர் தேநீர் அருந்த வந்துள்ளார். எங்களுக்காக தேநீரை தயார் செய்,” என்று தன் மனைவியிடம் அறிவித்தார். சிலசமயம் அன்பர்கள் சுவாமி தங்களுக்கு வழங்கிய பணியை முழுமையாக செய்யாமல், வாகனத்தில் சிறிது நேரம் சுற்றிவிட்டு திரும்பி விடுவார்கள். இவ்வாறு ஒரு அன்பர் பாதியில் வந்ததும், சுவாமி, “நீ அவரை வீட்டிற்கு அழைத்து சென்று, தேநீர் வழங்கவில்லை என்று கூறுகிறார். நீ மீண்டும் அவரை அழைத்து சென்று தேநீர் வழங்கிவிட்டு திரும்பி வா.” அந்த மகிழ்ச்சிகரமான தருணங்கள், குழப்புவதாக இருந்தாலும், எல்லோரும் அவற்றை விரும்பினார்கள். §§

அந்த காலகட்டத்தில் சுவாமிக்கு துணையாக எப்போதும், கண்ணுக்கு தென்படாத ஒரு குழந்தை இருந்ததாக தோன்றுகிறது. அவர் ஒரு அன்பரிடம் அந்த குழந்தைக்கு நடைப்பயிற்சி வழங்குமாறு கேட்டுக்கொள்வார். “இப்போது அந்த குழந்தை உறங்கவேண்டும். தம்பி இங்கே வா. இந்த குழந்தையை சிறிது நடக்கவைத்து உறங்க வை,” என்று ஒரு அன்பரிடம் கூறுவார். அந்த அன்பர் தனது கைகளை விரித்துக்கொள்ள, சுவாமி அவரிடம் அந்த குழந்தையை கவனமாக ஒப்படைப்பார். “மிகவும் கவனா இரு, அந்த குழந்தை நன்றாக உறங்கவேண்டும்,” என்று கேட்டுக்கொள்வார். அல்லது சுவாமி, “அவனுக்கு பசிக்கிறது. அவனுக்கு ஒரு குவளையில் பாலை கொடுங்கள்,” என்று அந்த குழந்தைக்கு உணவு அளிக்க சொல்வார். “சுவாமி, அது ஒரு குழந்தை ரூபத்தில் இருக்கும் ஆன்மா தானே?” அல்லது “சுவாமி, அந்த குழந்தை பாலமுருகன் தானே?” என்று யாராவது கேள்வி கேட்டால், அதற்கு பதில் அளிக்கமாட்டார். §§

சுவாமி தனது இறுதி நாட்களில் ஒரு கடை தொடங்க திட்டமிட்டு வந்தார். “நாம் ஒரு கடையை தொடங்கலாம். நாம் அதில் மக்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கலாம், சரியா? நாம் அதில் ஒரு பைசா லாபமும் எதிர்பார்க்கக்கூடாது, சரியா? இந்த கடையை திட்டமிடுவதற்கு, அவர் பல நாட்கள் திட்டமிட்டார். “சுவாமி, இது மெய்ப்பொருளை விற்கும் கடையா?” என்று ஒரு அன்பர் கேள்வி கேட்ட போது, அதற்கு பதில் அளிக்கவில்லை. அவரது திட்டங்கள் அன்பர்களுக்கு விசித்திரமாக இருந்ததைப் போல, அவர்களது கேள்விகள் அவருக்கு விசித்திரமாக இருந்திருக்க வேண்டும். மனதின் பல்வேறு உலகங்களுக்கு இடையே இருந்த மாறுபாடுகள், அவருக்கு மங்கியிருக்க வேண்டும். உட்புற மற்றும் வெளிப்புற உலகங்களுக்கு மத்தியில் இருந்த திரையை அவரால் உணர முடியவில்லை. எல்லாம் அந்த நொடிப்பொழுதில் ஒன்றாகவும் முழுமையாகவும் இருந்தன. §§

ஒரு எண்ணெய் விளக்கு மட்டும் எரிந்துக்கொண்டு இருந்த அந்த அறை, ஒரு உட்புற ஒளியால் பிரகாசித்தது போல தோன்றியது. மேலும் அந்த அறையில் இருந்த காற்றில் விவரிக்க முடியாத குளுமை நிரம்பி இருந்தது. அவர் எந்த ஒரு தருணத்திலும், தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு வெளிப்படையாக தெரியாமல், மெய்மறந்த நிலைக்கு சென்று விடுவார். §§

அவர் ஒரு முறை இந்த நிலையில் இருந்த போது, தையல்நாயகி அம்மனிடம் உரக்க பேசினார். அம்மனின் சக்தியில் இருந்து வெளிவந்த அன்பினால், அவர் முகம் ஒரு சிறுவனின் தோற்றத்துடன் பிரகாசமாக இருந்தது. அவர் அந்த அன்பை மெல்லிய குரலில் பாராட்டி, அவளது இருப்பில் தான் உணர்ந்த சக்தியை பற்றியும் உயர்வாக பேசினார். அதன் பிறகு அவர் செல்லப்பசுவாமியுடன் இருந்தார். அவர் தனது குருவிடம் பணி தொடர்பான முக்கிய தகவல்களைச் சொல்லி, தான் அவருடன் வருவதற்கு இன்னும் தயாராக இல்லை என்றும் கூறினார். இந்த சமயத்தில் சுவாமியை பார்த்த மக்கள், அவர் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனதுடன், செல்லப்பகுருவுக்கு அவர் இன்னும் சீடனாக இருந்ததை, அவர் முகம் வெளிப்படுத்தியதாக கூறினார்கள். அவர் நீண்டநேரம் அசையாமல் அமர்ந்து இருந்தார், மற்றும் அவரது உணர்ச்சி வெளிப்பாடு பேரானந்தத்தில் பிரகாசமாக இருந்தது. ஒவ்வொருவரின் காதுகளின் உள்ளும் மிகவும் உயர்வான உட்புற சப்தங்கள் ஒலித்தாலும், அவை மெதுவாக ஊடுருவின. §§

அவர் சிறிதுநேரம் கழித்து, தனக்கு முன்பாக அமர்ந்து இருந்தவர்களின் நிலைக்கு திரும்பி, அவர்கள் தன்னுடன் இருந்தார்களா என்று கேட்பார். தான் பார்த்ததை அவர்களும் பார்த்தார்களா என்று கேட்பார். அதன் பிறகு அவர் அந்த அற்புதமான உலகைப்பற்றி விவரித்தார்: “எல்லாம் தங்கமயமாக இருந்தது. அங்கே நமது கற்பனை சக்தியை கடந்த, ஒரு மென்மையான மற்றும் சுயமாக-பிரகாசிக்கும் ஒளி இருந்தது.” §§

சுவாமி மகாசமாதி அடைவதற்கு சில நாட்கள் முன்பாக, ஒரு அன்பர் அவரது திருவடிகளில் பழம் மற்றும் பூக்களை காணிக்கையாக வைத்து வணங்கினார். சுவாமி அந்த காணிக்கையை இன்னொரு அன்பரிடம் வழங்கி, “இதை எடுத்து சென்று நல்லூர் கோயிலில் அபிஷேகம் செய்யுங்கள்,” என்று அறிவுறுத்தினார்.§§

யோக சுவாமியின் உயிர் பிரிந்தது§

சுவாமி மார்ச் 20, 1964 அன்று படுத்த படுக்கையாகி, சாப்பிடுவதையும் குடிப்பதையும் தவிர்த்து, மருத்துவர்களை விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் உடல்நலம் மோசமடைந்து வருகிறது என்ற எச்சரிக்கை ஒலி ஊரெங்கும் பரவியது. அவர் நாள் முழுவதும் அசையாமல் இருந்தார் மற்றும் விழித்து இருக்கும் போது ஒரு குழந்தையின் குரலில் பேசினார். அவரை காண பலர் கூடியிருந்தனர். அவர்கள் சோகமாக இருந்தாலும், அமைதியாக பாடினார்கள் அல்லது சுலோகம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சுவாமி விரைவில் தங்களை விட்டு பிரியவிருப்பதை நினைத்து எல்லோரும் சோகமாக இருப்பது நன்றாக தெரிந்தது. எந்த நேரமும் அவர் உயிர் பிரியலாம் என்பதை அறிந்த அன்பர்கள் கூட்டம், அவரை தரிசிக்க மற்றும் தங்களுக்கு பிரியமான குருவுக்காக பிரார்த்தனை செய்ய மற்றும் அவரிடம் இருந்து ஆசிகளை பெறுவதற்காக, அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து வந்துக்கொண்டு இருந்தது. §§

சுவாமி எப்போதாவது தனது உட்புற உலகில் முழுமையாக ஒதுங்கிக்கொள்வார். அவருடைய உடல் வெப்பநிலை இறங்கி, நாடித்துடிப்பு குறைந்தது, மற்றும் சில சமயங்களில் முற்றிலும் நின்று மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் இந்த நிலையில், தன் உடலின் மீது ஒரு மெல்லிய பிடிப்பை மட்டுமே வைத்து இருந்தார். §§

மார்ச் 23 அன்று இரவு நேரத்தில், சுமார் பதினைந்து அன்பர்கள் சுவாமியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்துகொண்டு, ஒருவர் மாறி ஒருவர் பாடிக்கொண்டு இருந்தனர். இரவு 10 மணிக்கு, ஒரு சீடர் வந்தார். அவருக்கு சுவாமியிடம் நேரடி தொடர்பு இருந்தது. அவர் பெயர் Dr. எஸ். ஏ. வெட்டிவேலு. அவர் தினமும் சுவாமியின் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதிக்க, இன்சுலின் ஊசியை வழங்க வந்துக்கொண்டு இருந்தார். அவர் எந்தவித தயக்கமும் இன்றி, அவரிடம் வந்து, “எப்படி இருக்கிறீர்கள், சுவாமி?” என்று கேட்டார். “எல்லாம் சரி," என்று சத்தமாக கூறினார். இந்த வார்த்தைகளை கேட்டதும், பெரும்பாலான அன்பர்கள் அவர் குணமடைந்து விட்டார் என்று நினைத்து கிளம்பினார்கள். §§

image§

யோக சுவாமி இறந்த போது, அவரை சுடுகாட்டிற்கு கிராமங்கள் வழியாக ஒரு மூடு பல்லக்கில் மக்கள் சுமந்து சென்றார்கள். பல இதயங்களை தொட்டு, இலங்கையின் மாமனிதராக இருந்த அவருக்கு நாடு முழுவதும் இரங்கல் தெரிவித்தது மற்றும் அவருக்கு மரியாதை செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இரவு 11:30 மணி அளவில், ஐந்து அன்பர்கள் மீதம் இருந்தனர்: Dr. எஸ். ஏ. வெட்டிவேலு, திரு. அ. தில்லையம்பலம், திரு. காசிப்பிள்ளை நவரத்தினம், திரு. பிரம்மாநந்தா மற்றும் திரு. திருநாவுக்கரசு. மக்கள் கூட்டம் கிளம்பி இருந்ததால், அறையில் இருந்தவர்களின் மனநிலை உணர்ச்சிப்பூர்வமான பதட்டத்தில் இருந்து விளக்க முடியாத அமைதியாக மாறி இருந்தது. சுவாமி அமைதியாக இருந்தார். ஒரு சமயத்தில் அவர் அமைதியாக பேசி, தன்னை சுற்றி இருந்தவர்களிடம் பாட்டு பாடுமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் எப்போதும் முக்கியமான தருணங்களில் பாடிய இரண்டு பாடல்களை பாடினார்கள்: சுவாமி எழுதிய “எங்கள் குருநாதன்" மற்றும் மாணிக்கவாசகர் எழுதிய பழங்கால பாடல் “நமச்சிவாயம் வாழ்க." §§

மார்ச் 24, 1964 திங்கட்கிழமை காலை 3:18 மணிக்கு, யோக சுவாமி உயிர் துறந்தார். அங்கே இருந்தவர்களின் வாழ்க்கையில் இருந்த மற்ற அனுபவங்களை மறைக்கும் அளவிற்கு, அவர்கள் மிகவும் தீவிரமாக பரவிய சக்தியின் ஆதிக்கத்தில் இருந்ததால், தாங்கள் எல்லா உணர்வுகளையும் இழந்ததாக அவர்கள் தெரிவித்தார்கள். §§

மரணத்தின் அணுகுமுறை நமக்கு உலக வாழ்க்கை நிலையற்றது என்பதை தெரிவிக்கிறது. இத்துடன் நமது உடைமைகள், பதவி மற்றும் ஆணவம் முடிவுக்கு வருகிறது. இந்த உண்மையை அறிந்து இறைவனை நோக்கி, வாழ்க்கையின் முடிவான குறிக்கோளான முக்தியை நோக்கி மற்றும் அந்த முக்தியை பெறுவதற்கு ஆன்மாவை அழைத்து செல்லும் அறவழியை நோக்கி, தங்கள் மனதை செலுத்த யாழ்ப்பாண சைவ இந்துக்களுக்கு கற்றுத்தரப்பட்டது. அவர்கள் இதை அச்சத்துடன் மேற்கொள்ளாமல், இந்த தூல பிறவியில் தாங்கள் ஆன்மீக முன்னேற்றம் பெறுவதற்கு கிடைத்த வாய்ப்பாக கருத்தி உறுதியாக, நம்பிக்கை மற்றும் நன்றி உணர்வுடன் மேற்கொண்டனர்.§§

மக்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்து மரணம் பல்வேறு வகையில் விளக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெறும் உடல் மற்றும் மூளையாக மட்டும் இருந்தால் (மனித நலக்கோட்பாடுகளை பின்பற்றுபவர் மற்றும் நாத்தீகர்கள் கருதுவதை போல), மரணம் என்பது புலனுணர்வு அனுபவம் மற்றும் ஆன்மாவின் முடிவாக விளங்குகிறது. நாம் ஒரு முறை வாழ்ந்தால், பூமியில் நமது வாசம் மரணத்துடன் முடிவுக்கு வருகிறது மற்றும் அதனால் அது இயல்பாக அச்சம் தருவதாக இருக்கிறது. நாம் மீண்டும் மீண்டும் பிறந்தால், நித்தியத்தை நோக்கி ஆன்மா மேற்கொள்ளும் யாத்திரையின் பின்னணியில் அது தனது அச்சத்தை மறக்கிறது. §§

நமது நோய் எவ்வளவு தீவிரமாக இருந்தாலும், நமது உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், நமது உயிர்சக்தியில் ஒரு அமைதியான ஆறுதல் அளிக்கும் மையமாக நமக்குள் இருக்கும் மூலத்தில் நாம் ஒதுங்கிக்கொள்ளலாம். அது நமது உடல், நமது மனம் மற்றும் உணர்ச்சியை காட்டிலும் அதிகமாக நமது பண்பை குறிப்பிடுகிறது. அதற்கு மரணம் இல்லை. அதற்கு தீங்கு விளைவிக்க முடியாது மற்றும் அதை பயமுறுத்த முடியாது. உடல் ரீதியான சோர்வு மற்றும் மரணம் நெருங்கும் போது, நாம் இந்த மையத்தை நாடுகிறோம். நாம் இதை பரமாத்மன், இறைவன், பரமாத்துமா அல்லது தெய்வீக உணர்வு என்று பல்வேறு பெயர்களுடன் அழைக்கிறோம். “முழுமுதற்பொருளை கிரகித்துக்கொள்ள முடியாதவர்களுக்கு மரணம் ஒரு மாயையாக மட்டுமே காட்சி அளிக்கிறது. ஆன்மா அழிவில்லாமல், சுயமாக இயங்கி, சுயமாக பிரகாசித்து என்றும் இறக்காமல் இருக்கிறது,” என்று மரணத்தை கட்டுப்படுத்தும் கடவுளாக விளங்கும் எமன் கதா உபநிடதத்தில் விளக்குகிறார். §§

பிற்காலத்தில் இந்த செயல்முறையை பற்றி சிவாய சுப்பிரமுனியசுவாமி தரும் விளக்கம்: §§

சைவ சித்தாந்த தத்துவத்தில், சம்ஸ்காரங்கள் என்று அழைக்கப்படும், வாழ்க்கையின் “சிந்தனை-சக்தி" அனுபவ பதிவுகளை லிங்க ஷரீர என்கிற ஆன்மாவின் சூட்சும உடல் சேமிக்கிறது. தூல உடல் இறந்ததும், தூல பண்புடன் இல்லாத இந்த கோசம் மனநிலைகள், ஞாபகங்கள், ஆசைகள் போன்ற சூட்சுமமான பிரிவுகளின் குழுவாக இருந்து வருகிறது. இந்த சூட்சும உடலுக்குள், தேவையிருந்தால், ஆன்மா மறுபிறவி எடுக்கிறது. இந்து சமயத்தில், மரணம் என்பது உயிருக்கு முரணாக இருப்பதில்லை. உயிரின் பிரபஞ்ச சுழற்சியில் மரணமும் பிறப்பும் இரண்டு பக்கங்களாக விளங்குகின்றன. அந்த சுழற்சியின் முடிவாக முக்தி விளங்குகிறது. “ஆசையை கைவிடுவதன் மூலம், மனிதன் பிறப்பை முழுவதுமாக முடிவு கொண்டு வந்துவிடலாம்,” என்று யோக சுவாமி கற்றுத் தந்தார். §§

மரண அனுபவத்தை நெருங்கிய பலர் தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது நண்பர்களுக்கு தாங்கள் நிறைவேற்றாத பொறுப்புக்களை முடிப்பதற்கு திரும்பியதாக கூறியுள்ளார்கள். ஒருவருக்கு விரைவில் நிலைமாற்றம் ஏற்படவிருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது ஒரு மிகப்பெரிய வரம் ஆகும். மரணத்தை நெருங்கும் ஒரு இந்து, தனது மொத்த கர்மவினைகளில், இந்த பிறவிக்கு ஒதுக்கப்பட்ட கர்மவினைகள் அனைத்தையும் எதிர்கொண்டு கரைக்கும், தனது வாழ்நாள் “பணியை” முடிவுக்கு கொண்டு வர கடுமையாக உழைக்கிறார். தீர்வு காணப்படாத மனவேற்றுமைகள், பரிகாரம் செய்யாத பாவங்கள் அல்லது நிறைவேறாத பொறுப்புக்கள் என்று முடிவுறாத பணிகள் இருக்கும் போது மரணம் நேர்ந்தால், அந்த கர்மவினையை கரைப்பதற்கு இன்னொரு பிறவி தேவைப்படும். அதனால் வயதான அல்லது நோயால் வாடும் இந்துக்கள், தங்களது கடைசி காலத்தில் நண்பர்கள் மற்றும் எதிரிகளை சந்தித்து அன்பு, உதவி மற்றும் ஆசிகளை வழங்கி, சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை சரிசெய்ய முயற்சி செய்து, மன்னிப்புக்களை வழங்கி, அறிந்த கடமைகள் அனைத்தையும் நிறைவேற்றுவது வழக்கமாக இருந்தது. நவீன காலத்தில் அந்த இந்து மற்றவர்களுக்கு எந்த பணியையும் மீதம் வைக்காமல், தனது உயிலை எழுதி, சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை தனது வாரிசுகள், நன்கொடைகள் மற்றும் அறக்கட்டளைக்கு பகிர்ந்து வழங்கி விடுவார். §§

அதை செய்து முடித்தவுடன், விரைவில் நிலைமாறவிருக்கும் ஆன்மா இறைவனாக மாறி, சாஸ்திரங்களை படித்து, கோயில் விழாக்களில் பங்குபெற்று, தியானம் மற்றும் பக்தியை விரிவுபடுத்துகிறது. அவர் புனிதத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்வார் அல்லது தனிமையான இடத்திற்கு சென்று ஜபம் மற்றும் யோக சாதனாக்களை அப்பியாசம் செய்வார். அவர் வாழ்க்கையின் இறுதி நிலையான, சந்நியாசம் என்கிற துறவறத்தில் நுழைந்து விட்டார் என்பதை உணர்ந்த அவரது குடும்பத்தினர், அவரது இந்த முயற்சிகள் அல்லது சமூக கடமை அல்லது தொடர்பில் இருந்து, அவர் பெற்ற ஓய்வை தடை செய்யாமல் இருப்பார்கள். §§

சுவாமி தான் உயிர் துறக்கும் நேரம் பற்றி சில குறிப்புக்கள் மற்றும் இந்த உலகை விட்டு கிளம்புவது பற்றி தனது சிந்தனைகளை ஒரு அன்பரிடம் பகிர்ந்துகொண்டார். அந்த அன்பர் இதனை நினைவுக் கூர்கிறார்: §§

சுவாமியின் மகாசமாதிக்கு மூன்று மாதங்கள் முன்பு, நாங்கள் அவரை சந்திக்க அடிக்கடி சென்றுகொண்டு இருந்தோம். அப்போது அவர் எங்களிடம், “மூன்று மணி ஆகிவிட்டதா? மூன்று மணி ஆனதும், நான் கிளம்ப வேண்டும், அதனால் மூன்று மணி ஆனதும் என்னிடம் சொல்லுங்கள்,” என்று கேட்டுக்கொள்வார். அவர் வழக்கமாக மூன்று மணிக்கு வெளியே கிளம்பி விடுவார். அந்த சமயத்தில் ஒரு அன்பரின் வாகனம் அவருக்காக காத்துக்கொண்டு இருக்கும், மற்றும் அதில் அவர் சென்று விடுவார். ஒரு நாள் சுவாமி, “நான் எல்லாம் செய்து முடித்துவிட்டேன். என் மீது யாராலும் குற்றம் சுமத்த முடியாது. நான் எல்லோருக்கும் எல்லாம் செய்துவிட்டேன். நான் உங்களுக்காக ஏற்பாடுகளை செய்து விட்டேன்,” என்று கூறி, தான் பிரியப்போவதை குறிப்பிடும் வண்ணம் தலை வணங்கினார். இறுதியாக, அவர் காலை 3 மணிக்கு உயிர் துறந்தார். அதன் பின்னர் நாங்கள் நடந்த சம்பவங்களை தொடர்புப்படுத்தி பார்க்கும் போது, அவர் தொடர்ந்து நேரத்தை கேட்டுக்கொண்டு, தனது இறுதி பயணத்திற்கு தயாராகிக் கொண்டு இருந்தார் என்பது எங்களுக்கு புரிய வந்தது. §§

சுவாமி தூல உடல் தனக்கு முக்கியம் இல்லை என்று சொல்லி, தனது இறுதி மகாபயணத்திற்கு எல்லோரையும் தயார் செய்தார். “நான் உயிர் துறந்தவுடன், அந்த உடலை வீசி எரித்துவிடுங்கள். நான் செய்யவேண்டியது அனைத்தையும் எல்லோருக்கும் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக செய்துவிட்டேன். நான் சொல்லவேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டேன். எனக்கு எந்த குறையும் இல்லை,” என்று அவர் ஒரு அன்பரிடம் கூறினார். அவர் தனது பணியை செய்ய அல்லது தனது இருப்பை வெளிப்படுத்த, தனக்கு தனது தூல உடல் தேவையில்லை என்று கூறி, உலகமெங்கும் இருக்கும் மக்கள் தன்னைப்பற்றி அறிந்து, குருவின் ஆசிகளை உணரும் காலத்தைப் பற்றியும் குறிப்பிட்டார். §§

இந்து சாதனம் என்ற பத்திரிகையில் “யாழ்ப்பாணத்தின் ஒளி” என்ற தலைப்பில், அவரது இறுதிச்சடங்கு பற்றிய பின்வரும் விவரம் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. §§

கொழும்புத்துறை ஆசிரமத்தில் 24-3-1964 செவ்வாய்க்கிழமையன்று, அவரது புனித உடலுக்கு அன்பர்கள், பள்ளி சிறுவர்கள் மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். அன்பர்கள் குழுவாக திருமுறை, தமிழில் துதிப்பாடல்கள் மற்றும் இனிமையான இசையுடன் நற்சிந்தனை பாடல்களை பாடினார்கள். 25-3-1964, புதன்கிழமை அதிகாலை சுமார் 5 மணி அளவில், சுவாமிகளின் உடலுக்கு அவர்கள் சிரத்தையுடன் அபிஷேகம் செய்தார்கள். §§

சுவாமிகளின் உடல் சுத்தமான வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்தது மற்றும் அதன் மீது மலர் மாலைகள் இருந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சதுர வடிவ பெட்டியில் அவரது உடல் சுமந்து செல்லப்பட்டது. அதை அன்பர்கள் துண்டி சுடுகாட்டிற்கு கொழும்புத்துறை சாலை வழியாக சுமந்து சென்றார்கள். ஊர்வலம் சென்ற வழி எல்லாம் இலைகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அந்த தெருக்களில் வசித்த மக்கள், எண்ணெய் விளக்குகளை ஏற்றி, தங்கள் வீடுகளுக்கு முன்பாக தண்ணீர் பானைகளை வைத்து, பஜனை செய்து மரியாதை செலுத்தினார்கள். §§

சுமார் 9 மணி அளவில் ஊர்வலம் இறுதி சடங்கு நடக்கும் மைதானத்தை வந்து அடைந்தது. தகனத்தை பார்க்க ஆயிரக்கண்கானோர் கூடியிருந்தனர். ஆண்களையும் பெண்களையும் தனித்தனி வரிசைகளில் தன்னார்வத் தொண்டர்கள் அமர்த்திக்கொண்டு இருந்தார்கள். மயானத்தில் அமைதி நிலவியது. உடல் ஒரு விறகு அடுக்கு மீது வைக்கப்பட்டு இருந்தது. அதில் கால் டன் எடையுள்ள சந்தனமரமும் சேர்க்கப்பட்ட இருந்தது. எல்லோரும் யோக சுவாமிகளின் அருள் மற்றும் இந்த உலகில் மிகப்பெரிய சித்தர் வாழ்ந்த காலத்தில் தாங்களும் வாழ்ந்ததை நினைத்து தியானம் செய்துக்கொண்டு இருந்தனர். கொக்குவில் திரு. தி. குமாரசுவாமி புலவர் பக்தியுடன் திருவாசகம் பாடங்கள் மற்றும் ஒரு புராணத்தையும் பாராயணம் செய்துக்கொண்டு இருந்தார். அதன் பிறகு செய்து அந்த உடல் சடங்களுடன் தீ மூட்டப்பட்டது. எல்லோரும் சத்தமாக “அரோகரா" என்று சொல்லிக்கொண்டு, அந்த ஒளியை வழிபட்டனர். §§

சிங்கள சகோதரர்கள், இசுலாமியர்கள் மற்றும் கிறுத்துவர்களும் அஞ்சலி செலுத்த வந்திருந்தனர். இதைப்போன்று, ஒவ்வொருவரும் ஒளியுடன் சுவாமி ஐக்கியமாவதை கவனித்தார்கள். அந்த இடம் பூமிக்கு வந்த கைலாயம் போன்று இருந்தது. §§

பின்வரும் விளக்கத்தை வி. முத்துகுமாரசுவாமி வழங்கினார்.§§

கொழும்புத்துறையை சேர்ந்த மகானுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்த, பெருமளவில் வந்திருந்த பல்வேறு மதங்களை சேர்ந்த அன்பர்களின் கூட்டத்தை, யாழ்ப்பாணம் அதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. நூற்றுக்கணக்கான அன்பர்கள் வந்து இருந்தார்கள். யாழ்ப்பாணமே அங்கே கூடியிருந்தது போல தோன்றியது. அவர் தங்களது குறைகளை தங்களுக்கு வெளிப்படுத்தி விடுவார் என்ற அச்சத்தில், தங்கள் வாழ்நாள் முழுவதும் அவரைக் கண்டு அஞ்சி இருந்தவர்கள், ஒரு தியாக வாழ்க்கையை வாழ்ந்த இந்த மகானுக்கு அங்கே அஞ்சலி செலுத்தினார்கள். அது ஒரு புனிதமான நிகழ்வாக இருந்தது. ஆன்மா அழிவில்லாதது என்று அறிந்து இருந்தாலும், பலரால் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. உண்மையான மரணம் என்று ஒன்றும் இல்லை என்றும் இறைவனை சென்று அடைவதற்காக தான் மேற்கொள்ளும் யாத்திரையில் ஆன்மா ஒரு உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு செல்கிறது என்றும் சிறுவயது முதல் அவர்களது சாஸ்திரங்கள் மற்றும் போதனைகள் கற்றுத் தந்துள்ளது. மேலும் சுவாமி சம்சாரத்தில் இருந்து முக்தி பெற்று பேரானந்தத்தை உறுதியாக அனுபவித்துக் கொண்டிருப்பார் என்பதை அவர்களும் அறிந்து இருந்தார்கள். அவர்கள் சுவாமியை இழந்து தாங்கள் உணர்ந்த வெறுமையை நினைத்து அழுதுகொண்டு இருந்தனர். §§

தி சிவ தொண்டன் பத்திரிக்கையில் ஸ்ரீ ஆனந்த பெரேரா பின்வரும் புகழஞ்சலியை வழங்கியுள்ளார்:§§

பலர் பெறுவதில் ஆர்வம் காட்டினாலும், வெகு சிலரே வழங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். யோக சுவாமி ஒரு ஈடு இணையற்ற வள்ளலாக இருந்தார். அவர் தன் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு வழங்கிக்கொண்டு இருந்தார். §§

அவரை 1952 மற்றும் 1963 ஆண்டுகளில் சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த இரண்டு சந்திப்பிற்கு இடையில், காலம் மற்றும் ஒரு துக்ககரமான விபத்து தவிர்க்க முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. நான் அவரை முதல் முறை சந்தித்த போது, அவர் உடலுறுதியுடன் இருந்தார். ஆனால் இந்த முறை அவர் சோர்வாக கிட்டத்தட்ட படுத்த படுக்கையாக, தனது அடிப்படை தேவைகளுக்கு மற்றவர்களை நம்பி இருந்தார். மிகவும் பிரகாசமாகவும் கூர்மையாகவும் இருந்த அவரது கண்கள், தற்போது சோர்ந்து இருந்தன. அவர் குரல் தனது எதிரொலிக்கும் தன்மையை இழந்து இருந்தது. உறுதியாக இருந்த கைகள் தற்போது நடுங்கின, மற்றும் மரியாதைக்குரிய முகத்தில் வலி தன் சுவடுகளை உருவாக்கி இருந்தது. சமூகத்தில் மிகவும் உயர்வானவர்களும், மாற்றத்தின் விதியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதற்கு அவர் ஒரு சான்றாக விளங்கினார். §§

ஆனால் அவரிடம் இருந்த அந்த தலைமை பண்பின் சுடர் எப்போதும் போல பிரகாசமாக இருப்பதை கவனித்தேன். அந்த மங்கலான கண்கள், இன்னும் மனித இதயத்தின் ஆழத்திற்குள் ஊடுருவி சென்றுகொண்டு இருந்தன. அவரது குரலில் அதிகாரத்தின் சாயல் இன்னும் இருந்தது. அந்த நடுங்கும் கைகள், இன்னும் உண்மையான அரசரின் செங்கோலை பிடித்துக்கொண்டு இருந்தது. அவர் இன்னும் வழங்கிக்கொண்டு இருந்தார், மற்றும் நான் பெறுபவனாக இருந்தேன். §§

அவர் எதை வழங்கினார்? அமைதி, வலிமை, நம்பிக்கை, தைரியம் என்று அவர் வழங்கிய பரிசுகள் ஏராளம். ஆனால் அவர் மிகவும் முக்கியமாக அன்பை வழங்கினார். சூரியனிடம் இருந்து ஒளியும் வெப்பமும் வெளிப்பட்டதைப் போல, அவரிடம் இருந்து அந்த அன்பு வெளிப்பட்டது. §§

நான் எதை பெற்றேன்? எனது திறமைக்கு ஏற்ப பெற்றுக்கொண்டேன். ஒரு குவளையுடன் நீர்வீழ்ச்சிக்கு அடியில் நில்லுங்கள். அந்த நீர்வீழ்ச்சியின் ஆற்றல் உங்களை வியக்க வைத்தாலும், உங்களால் ஒரு குவளை அளவு தண்ணீரை மட்டுமே பிடிக்க முடியும்.§§

ரத்னா மா நவரத்தினம் தனது கருத்தை தெரிவிக்கிறார்:§§

சுமார் தொண்ணூற்று இரண்டு வருடங்களுக்கு, பழங்கால சைவத் துறவிகளின் பிரகாசத்தை பிரதிபலிக்கும் ஒளிக்கதிராக விளங்கினார். அவர் வாழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்த யாழ்ப்பாண மக்கள் மெதுவாக வளர்ச்சி அடைந்து, அவரது இருப்பை நன்மை தரும் சூரிய ஒளி போன்று இயல்பானதாக ஏற்றுக்கொண்டதால், மார்ச் 24 1964 அன்று நடைபெற்ற அவரது மகாசமாதி, பல தலைமுறைகளுக்கு அவரது பிரகாசத்தில் மகிழ்ச்சியாக இருந்த பல தரப்பு மக்களின் மத்தியில் ஒரு அசாதாரண கலக்கம் மற்றும் வேதனையை ஏற்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டில் ஞானோதயம் பெற்ற தீர்க்கதரிசியாக மரியாதை செலுத்தப்பட்ட சுவாமி, பூமியில் இறைவனின் சாட்சியாக, புனிதத்தை இரகசியமாக வைத்திருந்த ஒரு மகானாக இருந்தார். அவர் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் திரிவேணி சங்கமமாக விளங்கினார். அவர் உலகம் முழுவதையும், சிவபெருமானின் ஒப்புயர்வற்ற விருப்பத்துடன் தொடர்பில் வைத்து இருந்ததாக தோன்றுகிறது. பிரதான சிவதொண்டன், சிவபெருமானுக்கு வழங்கும் சேவையான, சிவ தொண்டு என்கிற தனது பொதுவான போதனை மூலமாக, சேவை மற்றும் துறவறத்தின் பாதையை தெளிவாக வெளிப்படுத்தினார். ஒவ்வொரு நொடியும் சிவபெருமானின் சேவகர்களாக வாழவேண்டும் என்பது இக்காலத்து மனிதனுக்கு அவர் வழங்கிய தெளிவான வேண்டுகோளாக இருந்தது. §§

தகனத்திற்கு பிறகு, சுவாமியின் அஸ்தி புதிய ஆசிரமத்தில் வைக்கப்பட்டு இருந்தது. ஆசிரம நிலத்தின் உரிமையாளராக இருந்த திரு. திருநாவுக்கரசு ஒரு முறையான சமாதி அமைக்க வேண்டிய தேவையை உணர்ந்து, சுவாமியின் மூன்று மூத்த சீடர்களாக இருந்த Dr. சி. குருசாமி, திரு. அ. தில்லையம்பலம் மற்றும் திரு. ஸ்ரீகந்தாவுடன் ஆலோசித்தார். அவர்கள் பழைய குடிசையை இடித்து, அந்த இடத்தில் சமாதி அமைக்கவேண்டும் என்று ஒருமனதுடன் முடிவு செய்தனர். சிவ தொண்டன் சமூகம் மூலம் நிதி திரட்டப்பட்டது, மற்றும் அடுத்த சில மாதங்களில் பழைய கற்காரை தரையின் மீது ஒரு புதிய கட்டுமானப் பணி தொடங்கியது. கட்டிடத்தின் மேற்கில் இருந்த சுற்றுப்புற சுவரின் மீது ஒரு பெரிய உள்ளறை கட்டப்பட்டது. அதன் மீது சுவாமியின் அஸ்தி, நிலத்திற்கு அடியில் இருந்த ஒரு சிறு பள்ளத்தில் வைக்கப்பட்டு, அதன் மீது கிழக்கு பார்த்தபடி ஒரு முறையான சந்நிதி அமைக்கப்பட்டது. அந்த சந்நிதி ஒரு சில மாதங்களில் நிறைவுற்றது, மற்றும் ஒரு சிறிய எளிமையான சடங்கின் போது அஸ்தி அந்த சிறு பள்ளத்தில் வைக்கப்பட்டது. §§

அங்கே வைக்கப்பட்டுள்ள அவரது திருவடிகளுக்கு, ஒரு பூசாரி தினமும் பூஜை செய்கிறார். சுவாமி உட்கார்ந்த, தியானம் செய்த மற்றும் உறங்கிய இடமும் ஒரு வழிபாட்டு இடமாக இருக்கிறது. அதற்கு பின்புறம் இருந்த சுவற்றில், சுவாமி தியானம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் பூசாரி பூஜை செய்கிறார். அவர் அமர்ந்த இடத்தில், தனித்து தெரியும் வண்ணம் வெள்ளை நிற பீங்கான் ஓடு பதிக்கப்பட்டுள்ளது. இங்கே தினமும் மலர்கள் தூவப்பட்டு, படையல்கள் வைக்கப்படுகின்றன. §§

சுவாமி தொடர்ந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறார் §

உணர்தலையும் முக்தியையும் பெற்ற ஒரு ஆன்மா தன் உயிரை துறக்கும் போது, அவர் பூமியில் மேலும் மறுபிறவி எடுப்பதில் இருந்து தானாக விடுவிக்கப்படுவதாக சிலர் கருதுகிறார்கள். இது பெரும்பாலானோருக்கு உண்மையாக இருந்தாலும், முக்தி பெற்றவர்கள் மீண்டும் திரும்பி வந்து சேவை செய்ய ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதற்கான வாய்ப்பு இருப்பதாக, யோக சுவாமி ஒரு சீடனிடம் கூறிய பின்வரும் கதை பரிந்துரைக்கிறது. §§

image§

சுத்தமான சந்தனமரமும் சேர்க்கப்பட்டிருந்த ஒரு சிதையில் யோக சுவாமியின் உடல் தீ மூடப்பட்டது. அதற்கு பிந்தைய வருடங்களில், அவர் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இருக்கிறார் என்பதை உணர்ந்ததன் மூலமாகவும், அவரது மரணம் அவருக்கு முடிவாக இருக்கவில்லை என்பதை அறிந்ததன் மூலமாகவும், பலர் அவரை அவரது சூட்சும உடலில் எதிர்கொண்டனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

நல்லூரில் பல வருடங்களுக்கு முன்பாக, செல்லப்பகுருவின் ஜென்ம நட்சத்திரம் முகமதுவின் பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பாக வந்து இருந்தது, மற்றும் செல்லப்பர் நல்லூர் கோயிலுக்கு சுவாமியை அழைத்து சென்று, போர்த்துகீசியர்கள் மூலம் கோயில் அழிக்கப்பட்ட சமயத்தில் புதைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய இசுலாமிய குருவின் கல்லறைக்கு அழைத்து சென்றார். அவர் புதைக்கப்பட்ட இடத்தை சுற்றி ஒரு கல்லறை கட்டப்பட்டது; அந்த சமாதி பின்னர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. அங்கே புதையுண்டு இருந்த இசுலாமிய மகான் நான் தான் என்று செல்லப்பர் கூறியதாக யோக சுவாமி கூறினார். அதாவது செல்லப்பகுரு முந்தைய பிறவியில், அந்த முக்தி பெற்ற குருவின் உடலில் இருந்துள்ளார் மற்றும் அவர் மீண்டும் பூமிக்கு செல்லப்பராக திரும்பியுள்ளார் என்பதை அவர் குறிப்பிட்டார். யோக சுவாமி இந்த கதையை சொல்லிக்கொண்டு இருக்கும் போது, தனது சீடனை நேருக்கு நேராக பார்த்து, “அதைப்போன்று தான் நாமும்,” என்று கூறினார். §§

யோக சுவாமி லௌகீக உலகில் வாழ்ந்த போதும், அவர் தனது சூட்சும உடலில் தோன்றியதை பல அன்பர்கள் பார்த்துள்ளனர். அதே போன்ற அனுபவத்தை, அவர் மகாசமாதி அடைந்த பிறகு இந்தியா, மலேஷியா, இலங்கை மற்றும் அமெரிக்காவில் இருந்த மக்கள் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர் பூமியில் நடந்து சென்றதை போல, பலர் அவரை ஆகாய வடிவில் பார்த்துள்ளனர். அவரது உருவத்தை பார்க்காதவர்களும், அவர் உருவத்தை தரிசித்து இருக்கிறார்கள். அவருக்கு நெருக்கமான சீடர்கள் அமைதியான தருணங்களில் பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆன்மீக பணியில் முழு கவனத்தை செலுத்த, சுவாமி அவர்களது தியானங்களில் வெளிப்பட்டு, அவர்களுக்கு தேவையானதை வழங்கியுள்ளார். §§

சுவாமி மகாசமாதி அடைந்து பல மாதங்களுக்கு பிறகு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அன்பர், இரவு நேரத்தில் தனது வீட்டில் ஒரு நுணுக்கமான, விளக்கமுடியாத மாற்றத்தை உணர்ந்தார். அந்த உணர்வு மிகவும் வலுவாக இருந்ததால், அவரால் அதை புறக்கணிக்க முடியவில்லை. அவர் அதை தெரிந்துக்கொள்ள தன் படுக்கையில் இருந்து எழுந்து, பல இடங்களுக்கு சென்று, இறுதியாக பூஜை அறையில் நுழைந்தார். அங்கே யோக சுவாமி, அந்த பிரபல புகைப்படத்தில் இருந்ததைப் போல, பிரகாசமாக பகலைப் போன்று தெளிவாக, தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமர்ந்து தியானம் செய்துக்கொண்டு இருந்தார். அந்த அன்பர் அவரை வழிபட்டு, தன் மனைவி மற்றும் குழந்தைகளை வந்து பார்க்குமாறு அழைத்தார். அவர்கள் வந்த போது, அந்த உருவம் சுவரில் மறையத்தொடங்கியது. ஆனால் அவர்களுக்கும் அதை தரிசித்தனர். அதே அனுபவத்தை மற்ற குடும்பங்களும் பெற்றன. §§

யோக சுவாமியை நன்கு அறிந்த சீடர்கள், அவர் தங்களுக்கு அருகில் தூல உடலுடன் இருந்ததைப் போன்று, அவரது குரல் தெளிவாக கேட்டதாக பலர் கூறியுள்ளனர். அவர் உயிர் நீத்த சில நாட்கள் கழித்து, சுவாமிக்கு நெருக்கமான சீடராக இருந்த ஒரு பெண்மணி, அவரது ஆசிரம வளாகத்திற்கு சென்று எளிமையான குடிசையில் அமர்ந்து கொண்டாள். சுவாமியின் நினைவாகவே அவள், அவரது பிரிவால் சோகமாக இருந்தாள். சுவாமி தனக்கு எதிரில் இருந்த போது தான் பெற்ற மனநிறைவை பெறுவதற்காக, அவருக்கு முன்பாக தான் பலமுறை பாடிய பாடலை பாடத் தொடங்கினாள். அவள் பாட்டை பாதியில் நிறுத்தி அமைதியாக அமர்ந்து கொண்டாள். அப்போது சுவாமி தன்னிடம், “நான் எப்போதும் போலவே இருக்கிறேன். நான் இங்கே, அங்கே மற்றும் எங்கும் இருக்கிறேன். உனக்கு சோகமான சிந்தனை வேண்டாம்,” என்று முன்பைப் போல தெளிவாக பேசுவதை கேட்டாள். §§

இந்த காலகட்டத்தில் சுவாமி அன்பர்களின் கனவுகளில் அடிக்கடி வந்துக்கொண்டு இருந்தார். வழக்கமாக சுவாமியிடம் சென்று ஆலோசனை பெற்ற அன்பர்களில் சிலர் பிரச்சனைகளை சந்தித்த போது, அவர் அவர்களது கனவுகளில் தோன்றி ஆலோசனைகளை வழங்கினார். அன்பர்களுக்கு தோன்றிய சில கனவுகளில், அவர் தங்களுக்கு அருகில் அமர்ந்து இருப்பதைப் போன்று, அவர்கள் அவரது சக்தியின் தீவிரத்தை தெளிவாக உணர்ந்தனர். சக்தி வாய்ந்த இந்த சந்திப்புக்கள் அவர்களை ஊக்குவித்து புதிய திசையையும் வழங்கியது. §§

இதைப்போன்ற அனுபவங்கள் மெதுவாக குறைந்தன. 1968 வருடத்திற்கு பிறகு அவரது நெருக்கமும் தீவிரமும் குறைந்தது. அவர் தற்போது சக்தியை வெளிப்படுத்திக் கொண்டு மனதின் சூட்சும உலகங்களில் முழுமையாக வாழ்ந்து வருகிறார். அவருடன் இருக்க விரும்பும் அன்பர், தற்போது ஒரு ஆழமான யாத்திரையை மேற்கொள்ளவேண்டும். §§

1972 ஆம் ஆண்டு, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி சைவ சாஸ்திரங்களில் இருந்த தனது சூட்சும ஞான கண்ணோட்டத்தின் மூலம், இலங்கையில் யோக சுவாமி தனது ஆசிரமத்தின் ஒரு சிறிய அறையில் வாழ்ந்ததை போல, அவர் எவ்வாறு ஒரு சிறிய குகையில் வாழ்கிறார் என்பதை தெளிவுப்படுத்தினார். “அவர் தன் கண்களை சிமிட்டி அதை பெரிதுபடுத்தி விடலாம். ஆனால் அவர் ஒரு ஆழமான சமாதியில் அமர்ந்துகொண்டு, அவரது பெயரில் பூஜை நடைபெறும் புனிதமான இடங்களுக்கு தனது தரிசனத்தை வழங்குகிறார். அவரை வேண்டிக்கொண்டு பூஜை நடைபெறும் போது, அவரது சுவர்கள் திறந்துக் கொள்கின்றன மற்றும் அவர் பூஜை நடைபெறும் இடத்தில் இருக்கிறார். அவர் அங்கே செல்வது இல்லை; பூஜை நடைபெறும் சூழல் வலுவாக ஊடுருவினால் அது அவரிடம் வருகிறது.” அன்பர்கள் தனது பாடல்களை பாடும் போது, யோக சுவாமி அந்தர்லோகத்தில் பங்குபெறுகிறார் என்பதை அறிந்து இருந்த சுப்பிரமுனியசுவாமி, நற்சிந்தனை பாடல்களை கற்றுக்கொண்டு பாடுவதற்கு தனது சீடர்களையும் ஊக்குவித்தார். §§

மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் அத்வைத சைவ சித்தாந்தத்தின் தோற்றத்தை யோக சுவாமி வாழ்நாள் முழுவதும் அறிந்து இருந்தார். அமெரிக்க கண்டத்தில் சிவ வழிபாடு, எப்போதும் இருந்து வந்துள்ளதாக அவர் தனது நெருக்கமான சீடர்களிடம் குறிப்பிட்டார். கிராண்ட் கேனியனுக்கு அருகிலுள்ள கொலராடோ நதி படுகையில் வாழ்ந்த ஒரு பழங்கால குழுவினர், இந்தியாவின் பழங்கால முனிவர்களின் புரிதலுடன் சிவபெருமானை வழிபட்டதாக அவர் ஒரு முறை விளக்கினார். பூமியில் பழங்கால சைவ வழிபாட்டின் புனிதத்தை மீட்க, நன்றாக பக்குவமடைந்த பல இந்துக்கள் அமெரிக்காவில் வரவிருக்கும் காலத்தில் பிறக்க இருப்பதாகவும், இதன் மூலம் பூமியில் வலுவான ஆன்மீக வாழ்க்கையின் ஒரு புதிய யுகம் தொடங்கும் என்றும் சுவாமி அறிவித்தார். §§

யோக சுவாமி தனது வாழ்நாளில், அத்வைத சைவ சித்தாந்தம் அல்லது ஒருமைவாத சைவ சித்தாந்தம் என்ற பாதையை நெறிமுறைப்படுத்தினார். அவர் சிறிய தடைகளை நீக்கி, அந்த பாதையை தெளிவாக்கினார். அவர் சிவபெருமானின் அழகு மற்றும் ஆழம் மற்றும் யாவும் கடந்த நிலையின் உருவமாக விளங்கினார். நிகழ்காலத்திற்கும் பழங்கால சைவ வழிபாட்டின் யதார்த்தத்திற்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்த தனது வாழ்நாளை அர்பணித்த சைவ சித்தாந்தத்தின் நவீன யுக மகானாக, யோக சுவாமி இன்று யாழ்ப்பாணத்திலும் இந்தியாவிலும் நினைவுக்கூரப்படுகிறார். §§

சுவாமியின் தெய்வீக திட்டம் அவருக்கு முன்பாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, அவர்களது அங்கங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கும் போது, அவர் தேவையில்லாத ஆரவாரத்தை அனுமதிக்க மாட்டார். அது முற்றிலும் இயல்பானது என்றும், அதன் மீது விசேட கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கருதினார். தங்களுக்கு முன்பாக விரிவாக்கம் பெறுவதை பார்த்து வியந்து இருக்கும் மக்களிடம் சுவாமி, “இந்த உலகில் அற்புதம் என்று ஒன்றும் இல்லை. இது உங்களுக்கு அற்புதமாக தோன்றும் போது, உங்களது அறியாமை வெளிப்படுகிறது. இது எப்போவோ முடிந்த காரியம்.” “எது அற்புதமாக இருக்கக்கூடும்?” என்று கேள்வி கேட்டு, “நான் நீயாகவும் நீங்கள் நானாகவும் இருக்கிறோம். நான் நித்தியமாக, பிறப்பு இல்லாமல், இறப்பு இல்லாமல், மரணம் இல்லாமல், மாற்றம் இல்லாமல், இரண்டாவது இல்லாமல் இருக்கிறேன்.”§§

ஒரு நாள் ஒரு பெண்மணி, “சுவாமி, உங்களுக்கு வயதாகிக்கொண்டு இருக்கிறது. உங்கள் இடத்தை நிரப்ப ஒரு குருவை தயார் செய்ய போகிறீர்களா?” என்று கேட்டார். “அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இல்லை. எனக்கு அமெரிக்காவில் ஒருவர் இருக்கிறார்,” என்று யோக சுவாமி பதில் அளித்தார். §§