குருமார்களின் சரித்திரங்கள்

Page 26: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/26_yo03_05.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

பன்னிரண்டாவது அத்தியாயம் §

யோக சுவாமி, இளவயது குரு§

ந்த காலகட்டத்தில் பலர் யோக சுவாமியை கவனித்து இருந்தாலும், அவரிடம் இருந்த ஆன்மீக சக்தியை வெகு சிலரால் மட்டுமே உணர முடிந்தது. தான் யோக சுவாமிக்கு தீட்சை வழங்கியதை பற்றி, செல்லப்பசுவாமி யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. அவர் அதை பெரிதுபடுத்தாமல், சுவாமிக்கு தெளிவின்மையின் சலுகையை வழங்கி, அந்த தீட்சையின் சக்தியை தனக்குள் விரிவாக்கம் செய்து கொள்ள அனுமதித்தார். ஆனால் இந்த இரகசியம், பெரும்பாலான இரகசியங்களை போல, மறைப்பது கடினமாக இருந்தது. இது தொடர்பாக இந்துமதி அம்மா வழங்கும் குறிப்பு:§§

அந்த ஆரம்பகாலத்தில், செல்லப்பசுவாமியை தரிசிக்க கொழும்புத்துறையில் இருந்து வந்த அன்பர்கள் மிகவும் குறைவு. செல்லப்பசுவாமி தனது சொத்து மற்றும் ஆசிகளை சிவயோகருக்கு வழங்கி இருந்தார் என்பதை அவர்கள் தெளிவான குறிப்புகள் மூலமாக அறிந்து இருந்தார்கள். அதனால் அவர்கள் சிவயோகரை தனது சகாவாக கருதினாலும், தங்கள் இதயங்களில், அவர் மீது வலுவான பக்தியை கொண்டு இருந்தார்கள். செல்லப்பர் மீது தங்களுக்கு இருந்த பக்தியை போல, சிவயோகர் மீது தங்களுக்கு இருந்த பக்தியை தங்கள் இதயங்களில் மறைத்து வைத்து, வெளியில் நண்பர்களைப் போல பழகினார்கள். இவர்களுள் ஒருவராக இருந்த துரையப்பா என்ற பக்தரால், தனது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நல்லூர் கோயில் மற்றும் அதன் தேரடி படிக்கட்டில் தேவாரப் பாடல்களை பாடுவது, அவரது வழக்கமாக இருந்தது. அவர் குடிசைக்கு வந்து, சிவயோகர் முன்னிலையில் தேவாரப் பாடல்களை பாடுவார். அந்த குடிசை ஒரு வாழ்ந்துகொண்டிருக்கும் கடவுளின் கோயிலாக விளங்கியது என்பதற்கு, இது ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற முதல் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக விளங்கியது. §§

இந்த காலகட்டத்தில் சுவாமியின் வாழ்க்கை பற்றி, ரத்னா மா நவரத்தினம் விளக்குகிறார்:§§

சுவாமி 1915 ஆண்டில் இருந்து, ஒரு துறவியின் வாழ்க்கையை வாழ்ந்தார்; அவர் கொழும்புத்துறையின் பள்ளி சந்திப்பில் இருந்த இலுப்பை மரம், நல்லூர் தேரடி, அரியாலை ஆசிரமம், துண்டி சுடுகாடு, கோட்டை மைதானம் மற்றும் கிராண்ட் பஜாரின் பாதைகளில் அடிக்கடி தென்பட்டார். அவை சமாதி அனுபவங்கள் மற்றும் முதிர்ச்சி அடையும் வருடங்களாக இருந்தன. §§

யோக சுவாமி இலுப்பை மரம் அல்லது அதற்கு அருகில் இருந்த தனது குடிசையில், எம். எஸ். இளையதம்பி, அ. அம்பலவாணர், முதலியார் சு. திருச்சிற்றம்பலம், ம. சபாரத்னசிங்கி, வி. முத்துக்குமாரு, கலைப்புலவர் க. நவரத்தினம், த. ந. சுப்பையா, சி. மயில்வாகனம் மற்றும் புலவர் அ. பெரியதம்பிப்பிள்ளை போன்ற தனது நெருக்கமான சீடர்களுடன் விவாதங்கள் நடத்தியதாக, அ. தில்லையம்பலத்தின் மகன் தி. சிவயோகபதி குறிப்பிடுகிறார். இது 1916 ஆம் ஆண்டில் தொடங்கியது.§§

image§

தனது சற்குருவின் சமாதிக்கு பிறகு, பல வருடங்கள் பிரபலமாக இல்லாமல் முக்கிய இடங்களில் தென்பட்ட வருடங்களில், யோக சுவாமி சாதனா மற்றும் சமாதியின் ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார். §

• • • • • • • • • • • • • • §§

யாழ்ப்பாணம் தத்துவம் மற்றும் பக்தி தொடர்பான சாதனைகளுக்கு பிரபலமான இடமாக விளங்கியுள்ளது மற்றும் அந்த சமூகத்தில் இருந்த சாதகர்களும் ஆன்மீக இலக்கியத்தில் நாட்டம் இருந்தவர்களும், ஒருமைவாத சைவ சித்தாந்தத்தில் புலமை பெற்று இருந்த யோக சுவாமி மீது ஈர்க்கப்பட்டனர். அவர் அவர்களுக்கு அறிவு மற்றும் உணர்தலின் ஒரு அரிய கலவையாக காட்சி அளித்தார், மற்றும் அவர் தங்களது அறிவுணர்வு மற்றும் அறிவுறுத்தும் நாட்டங்களை ஊக்குவித்ததால், அவர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்களில் ஒருவராக, சைவ சித்தாந்தத்தில் புலமை பெற்ற, திருவிளங்கம் என்ற யாழ்ப்பாண வழக்கறிஞர் யோக சுவாமியை 1920 ஆம் ஆண்டு சந்தித்தார். அவர் சிவஞானசித்தியார், சிவபிரகாசம், திருப்புகழ் மற்றும் கந்தர் அலங்காரம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் கொழும்பில் உயிர் நீத்த போது, யோக சுவாமி தனது ஆசிரமத்தில் இருந்து வெளியேறி, “இன்று திருவிளங்கம் சிவசோதியுடன் கலந்துவிட்டான்! (‘சிவனின் ஒளி’)” என்று வானத்தைப் பார்த்து கோஷமிட்டார். §§

சைவ தத்துவத்தில் புலமைபெற்ற, கொக்குவில் நகரத்தின் ஸ்ரீ தி. குமாரசுவாமி, கோயில்களில் சொற்பொழிவுகள் மற்றும் சத்சங்கங்களை நடத்தினார் மற்றும் பின்னர் யோக சுவாமியின் அறிவுறுத்தலின் கீழ் சில புத்தகங்களை எழுதினார். இந்து சமயம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் புலமை பெற்று இருந்த, நவாலியின் ஸ்ரீ சோமசுந்தர புலவரும் சைவ சமயத்திற்கு சேவை செய்தார். §§

யோக சுவாமிக்கு தமிழ் இலக்கியத்தின் அழகு மற்றும் ஆழம் பிடித்து இருந்தது மற்றும் அவர் இந்த அன்பர்களின் மூலம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒரு சிறிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அவர் சொந்தமாக எழுதிய பாடல்களில் பழங்கால சாத்திரங்களை வலுவாக பயன்படுத்தியதோடு, அவர் அதனோடு சேர்க்கும் ஒரு நேரடியான விளக்கம், இன்றைய தமிழ் அறிஞர்கள் மத்தியிலும் நல்ல வலுவான வரவேற்பை பெற்றுள்ளது. §§

கொழும்புத்துறை ஆசிரமத்தின் ஆரம்பக்காலக் கோலம்§

சுவாமி தனது ஆசிரமத்தில் கழித்த ஆரம்பக்காலத்தைப் பற்றி ஒரு சீடன் அன்புடன் நினைவுக்கூர்கிறார்: §§

பெரிய அளவில் சீடர்கள் அவரை நாடி வந்து இருந்தாலும், அவர்கள் அங்கே இல்லாததை போல, சுவாமி தான் விரும்பும் போது தியானத்தில் ஆழ்நிலையை அடைந்தார். ஒவ்வொரு சிவராத்திரியும் இரவு முழுவதும் தியானம் செய்வது அவரது வழக்கமாக இருந்தது. அந்த சமயத்தில் சுவாமியுடன் இருந்த சில பாக்கியசாலி அன்பர்களுக்கு, அவர் இருந்த இடத்தில் ஒரு பிரகாசமான ஒளி தென்பட்டது. அவர்கள் அதை அவரது உண்மையான மற்றும் மாசற்ற உருவமாக கருதினார்கள். அவரை சுற்றி இருந்த பிரகாசமான ஒளியை காணமுடியாத அன்பர்களும், ஒரு சிலையை போல அசையாமல் நிமிர்ந்து உட்கார்ந்து இருக்கும் சுவாமியின் உருவத்தை கண்டு வியந்தனர். அவரது பொன்னிற உடல், அந்த குடிசையின் மூலையில் இருந்த குடையை போல நிலையாக இருந்தது. ஒரு சமயத்தில் சுவாமி அசையாமல் தியானம் செய்துகொண்டு இருந்த போது, ஒரு காகம் அவரது தலை மீது சிறிது நேரம் அமர்ந்து பிறகு கிளம்பிவிட்டது. §§

ஒரு மணல் நிரம்பிய வளாகத்தில் மண் சுவர்கள், ஓலை கூரை மற்றும் மாட்டு சாணத்தால் மொழுகிய களிமண் தரையுடன் அமைந்த ஒரு சாதாரண குடியிருப்பாக அந்த குடிசை இருந்தது. அந்த தனி அறையின் உட்புறத்தில், வலது புறமாக இருந்த இடத்தின் கால் பாகத்தை ஒரு சிறிய சுவர் பிரித்து இருந்தது. இந்த இடத்தில் சுவாமி தன்னிடம் இருந்த சொற்பமான உடைமைகள் மற்றும் உணவுப்பொருட்களை வைத்து இருந்தார். அந்த அறையின் தென்புறத்தில், அறையில் நுழைந்ததும் வலது புறமாக, ஊர்ந்து செல்லும் விலங்குகளில் இருந்து விலகி இருக்க, சிறிய கால்களுடன் தரையில் இருந்து பதினைந்து சென்டிமீட்டர் உயரத்தில், ஐந்து சென்டிமீட்டர் கனத்துடன் இருந்த வேப்பமர (பூச்சிகளை துரத்தி அடிக்கும் வேம்பு மரம்) பலகையின் மீது சுவாமி உறங்குவார், தியானம் செய்வார் மற்றும் தன்னை நாடி வந்தவர்களை உபசரிப்பார். §§

சுவாமி உறங்கிய அறையின் மூலையில் ஒரு பாம்பு புற்று ஒரு சில வருடங்களுக்கு இருந்தது. உலர்ந்த பகுதியில் வழக்கமாக இருப்பதைப் போல, அந்த குடிசை முற்றத்திலும் ஆங்காங்கே புற்றுகள் இருந்தன. யோக சுவாமி ஆரம்பக்காலத்தில், இடைத்தடுப்புடன் சாணத்தால் மொழுகிய ஒரு சிறிய பகுதியில் உறங்கினார். இரவில் ஒரு நாள் விழிக்கும் போது, தன்னருகில் பாம்பு ஒன்று இருப்பதை கண்டார். ஒரு கொடிய பாம்பை எதிர்கொண்டதும், “நீ இங்கே நன்றாக உறங்குகிறாய் என்று தோன்றுகிறது. நான் இந்த அறையின் மறுபுறத்தில் இனிமேல் உறங்குகிறேன்,” என்று உடனே அதனிடம் வாக்குறுதி அளித்து, அன்றிலிருந்து அறையின் பிரதான பகுதியில் உறங்கினார். §§

சுவாமி தனது குடிசையில் நிலவிய இருட்டிற்கு சிறிய நிவாரணமாக கற்பூரம் ஏற்ற அனுமதித்தாலும், ஒரு விளக்கை ஏறுவதற்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. மேலும் அவர் தனது ஆசிரமத்தை புதுமைப்படுத்த அனுமதிக்காமல், எளிமையாக இருப்பதையே விரும்பினார். ஆனால் ஒவ்வொரு வருடமும் தனக்கு விசுவாசமான சீடர்களை புதிதாக கூரையை வேய்வதற்கு அனுமதிப்பார், அவர்களும் அந்த வேலையை ஒரு நாளுக்குள் முடித்து விடுவார்கள். அவர் அவருக்கு விருப்பமான இடத்திற்கு ஒரு வாகனத்தில் அழைத்து செல்லப்படுவார். அந்த சமயத்தில் அவர்கள் பழைய ஓலைகளுக்கு பதிலாக புதிய ஒலைகளை பொருத்தி, உட்புறத்தை முழுமையாக சுத்தம் செய்து, சுவாமி பயன்படுத்தும் பொருட்களை மீண்டும் அதே இடத்தில் முறையாக அடுக்கிவிடுவார்கள். அவர் மாலை 6 மணிக்கு திரும்பும் போது, அவர்களது வேலை முழுமையாக முடிந்து இருக்கும். தரை வழியாக நிறைய பாம்புகள் வரத்தொடங்கியதால், அவர் 1920 களின் ஆரம்பத்தில் குடிசையின் தரையில் காரை பூசுவதற்கு ஒப்புதல் தெரிவித்தார். §§

அவர் குடிசையில் இருந்து 40 மீட்டர் கிழக்கே இலுப்பை மரம் இருந்தது, மற்றும் இன்னொரு புறம் சுவாமியார் சாலை என்ற ஒரு சிறிய பாதை இருந்தது. குடிசையின் வடக்கு எல்லையாக பிரதான சாலை இருந்தது, மற்றும் மறுபுறம் கொழும்புத்துறை மகா வித்தியாலயம் மற்றும் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. §§

செல்லப்பசுவாமியின் தெய்வீக பாதுகைகளை, கோயில் தோட்டத்தின் பிரகார சுவரில் ஒரு மூலையில் வைத்து யோக சுவாமி வழிபட்டு வந்தார். அதன் பின்னர் அவர் தனது குருவின் திருவடிகளை தனது குடிசையின் வடமேற்கு மூலையில் வைத்தார். அவர் அதை வைத்த மேடையில், எப்போதும் ஏற்றி வைத்திருந்த ஒரு சிறிய எண்ணெய் விளக்கும் இருந்தது. அவர் தினமும் காலையில் குளித்த பிறகு, அந்த பாதுகைகளை மலர்களால் அலங்கரித்து, அனைத்தையும் அப்படியே–தன்னைப் போலவே, பார்க்க கற்றுத்தந்த முனிவரான, தனது சற்குருவிற்கு அமைதியாக கற்பூர ஆரத்தி காண்பித்தார். §§

அவர் தரிசனம் தருவதற்காக, தனது மர இருக்கை மற்றும் படுக்கைக்கு முன்பாக, எப்போதும் வடக்கு திசையை நோக்கி அமர்ந்து இருப்பார். அவர் எப்போதும் தனக்கு முன்பாக, ஒரு சிறிய ஆரத்தித் தட்டு மற்றும் சில கற்பூர வில்லைகள், தனக்கென்று ஒரு பிரத்யேமான பித்தளை பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர், மற்றும் அந்த பாத்திரத்தை பயன்படுத்தாத போது, அதன் மூடியாக விளங்கிய ஒரு தண்ணீர் குடிக்கும் குவளை என்று குறிப்பிட்ட சில பொருட்களை எப்போதும் வைத்து இருந்தார். அந்த குவளை துருவுறா எஃகில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்த இடத்தில் அன்பர்கள் வழங்கிய பூக்களும் வைக்கப்பட்டன. §§

ஆசிரம நடவடிக்கைகளை இந்துமதி அம்மா விவரிக்கிறார்: §§

image§

1914 ஆம் ஆண்டில் இருந்து 1964 ஆம் ஆண்டில் யோக சுவாமியின் மகாசமாதி வரை, கொழும்புத்துறையில் இருந்த இந்த சிறிய குடிசை அவரது இருப்பிடம் மற்றும் ஆசிரமமாக விளங்கியது. அங்கே அன்பர்கள் தினமும் பாடுவதற்கு, ஆன்மீக பாதையில் அவரது வழிகாட்டலை பெறுவதற்கு மற்றும் அவருடைய உபதேசங்கள் மற்றும் பிரகாசமான ஆன்மீக அருளை பெறுவதற்கு கூடுவார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

யோக சுவாமி அமர்ந்து இருந்த இறையருள் நிரம்பிய அந்த ஆசிரமத்தில், சாத்திரங்களில் புலமை பெற்று சைவ சமய கோட்பாடுகளை பின்பற்றிய மு. திருவிளங்கம் என்ற சைவ சமய முக்கியஸ்தர் மற்றும் மற்ற பிரமுகர்கள் வருகைதந்து அமைதியாக அமர்ந்து இருப்பார்கள். ஆசிரம வளாகத்தில் கதவுகள் திறப்பதற்காக, தங்கள் இதயங்களில் உற்சாகம் கலந்த பதட்டத்துடன், சார் பொன்னம்பலம் ராமநாதன் மற்றும் மற்ற அரசியல் தலைவர்கள் அமைதியாக, வெளியே காத்து இருப்பார்கள். யோக சுவாமியை கலைப்புலவர் மற்றும் மற்ற கல்வியாளர்கள் சுற்றி வர ஆரம்பித்தனர். சுவாமிக்கு முன்பாக தமிழ் இலக்கிய மேதைகளான சோமசுந்தர புலவர் மற்றும் கணேஷ ஐயர், பக்தியுடன் வணக்கம் தெரிவித்த வண்ணம் நின்று இருந்தார்கள். அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பலர், நன்றாக கல்வி கற்றவர்கள், படிப்பறிவு இல்லாமல் வயலில் வேலை செய்த பெண்கள், மாட்டு வண்டியை ஓட்டியவர்கள் என்று அந்த ஊரில் இருந்த ஒவ்வொருவரும் சுவாமியை சுற்றி வர ஆரம்பித்தனர். §§

அவரை நாத்தீகர்கள், குடிப்பழக்கம் மற்றும் புகைக்கும் பழக்கத்தை விட முடியாதவர்களும் தரையில் விழுந்து வணங்கினார்கள். அவரது அருளை கிறுத்துவர்கள், பெளத்த சமயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இசுலாமியர்களும் நாடினார்கள். அந்த புனிதமான குடிசையில், அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரை கூட்டம் கூட்டமாக அன்பர்கள் வந்து, குருவை தரிசித்து திரும்பிக்கொண்டு இருந்தனர். விடியற்காலையில் இருந்து பொழுது சாயும் வரை, அந்த ஆசிரமத்திற்கு முன்பாக இருந்த சாலையில் வாகனங்கள், மாட்டு வண்டிகள், கையால் இழுக்கப்படும் வண்டிகள் நிறுத்தப்பட்டு இருக்கும். §§

ஆரம்பக்காலத்தில் துரையப்பாவின் தேவாரம் மட்டுமே அதிகாலையிலும் அந்தி வேளையிலும் ஒலிக்கும். அந்த சமயத்தில் கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக சென்று வந்திருந்த திருமதி. அருணாச்சலம், தொடர்ந்து விளக்கேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொணடார். இன்னொரு அன்பர் தைரியமாக முன்வந்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி வந்தார். ஆசிரமத்தில் இருந்து தேவாரம் மற்றும் கீர்த்தனங்களின் [பாடல்கள்] இனிமையான ஒலி எதிரொலிக்க தொடங்கின. வழிபாட்டு பொருட்களின் அருமையான நறுமணம் காற்றில் வியாபித்து இருந்தது.§§

சுவாமி தனக்கு முன்பாக இருப்பவர்களிடம் மிகவும் இயல்பாக பேசினார். ஆனால் அந்த எளிமையான வார்த்தைகளிலும் உயர்ந்த தத்துவம் எதிரொலித்தது. ஒரு முறை சுவாமி ஒரு சீடனிடம், “என்ன செய்தி?” என்று கேட்டார். அந்த சீடன் வழக்கம் போல, அந்த சமூகத்தில் சமீபமாக நடந்த சம்பவத்தை விவரிக்க ஆரம்பித்தார். உடனே சுவாமி, “இதில் புதிய செய்தி எதுவும் இல்லை. அனைத்தும் அப்படியே இருக்கிறது,” என்று பதில் அளித்தார். §§

தன்னை நாடி வந்திருந்த சீடர்களின் தேவைகளுக்கு ஏற்ப சில சமயங்களில் விவேகசூடாமணி, பகவத் கீதை மற்றும் மற்ற தத்துவ படைப்புக்கள் வாசிக்கப்படும். இதன் உண்மையான பொருளை வழங்கும் பொருட்டு, சுவாமி இடையிடையே அதன் மீது தனது கருத்துக்களை கூறி, சீடர்களின் அறியாமையை நீக்குவார். தினமும் மாலையில் சிவபுராணம் வாசிக்கப்படும். சிவபுராணத்தின் பொருளாக விளங்கும் சிவபெருமானாக, அவர் அமர்ந்து இருந்ததால், அவருக்கு முன்பாக வாசிப்பதால் கிடைக்கும் பலனுக்காக சீடர்கள் பெருமளவில் கூடியிருப்பார்கள். §§

பாடல்கள் முடிந்ததும், கிளம்ப தயாராக இருந்தது சீடர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கிக்கொண்டு, “போய் திரும்பி வாருங்கள். ஆனால் நாம் போவதும் இல்லை வருவதும் இல்லை,” என்று கூறுவார். சீடர்கள் சாலையில், “இவர் போவதும் வருவதும் இல்லாத ஒரு புண்ணிய ஆன்மா,” என்று பெருமையுடன் உற்சாகமாக பேசிக்கொண்டு சென்றார்கள். இவ்வாறு அந்த ஆசிரமம், ஒரு இறைவன் வாழும் ஆசிரமமாக மாறியது. §§

image§

யோக சுவாமி பெரும்பாலும் யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் காணப்பட்டார். அவர் அம்மனின் அமைதியான சந்நிதி முன்பாக அமர்ந்துகொண்டு தனது ஆன்மீக பாடல்களை இயற்றுவார். ஒரு நாள் தியானம் செய்த போது, அந்த அம்மன் ஒளியின் உலகில் நடனமாட, அவளது கால் சலங்கை ஒலி தனக்கு கேட்டதாகவும் தனது சீடர்களிடம் கூறினார். தையல்நாயகி என்றால் “அழகான அம்மன்" என்று பொருள். §

• • • • • • • • • • • • • • §§

இது தொடர்பாக தி. சிவயோகபதி வழங்கும் குறிப்பு:§§

தினமும் மாலை 6:30 மணிக்கு துரையப்பா யோக சுவாமியின் ஆசிரமம் வந்து கிளியே நற்சிந்தனை பாடலை பாடுவார். துரையப்பாவின் வீடு சுவாமியின் குடிசையில் இருந்து சுமார் 100 கஜ தூரத்தில் இருந்தது. விடியற்காலைகளில் பலமுறை, அவர்கள் கொழும்புத்துறை கடற்கரையில் சாவகாசமாக நடந்து செல்வார்கள். தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு முதல் திங்கள் அன்று திருஞானசம்பந்தர், துரையப்பா மற்றும் யோக சுவாமி, பன்றித்தலைச்சி அம்மன் கோயிலுக்கு சென்று, அங்கே அம்மனுக்கு பொங்கல் படைத்து, வழிபட்டு, மதிய உணவாக அந்த பொங்கலை ருசித்து, மாலையில் கொழும்புத்துறை ஆசிரமம் திரும்புவார்கள் என்று எனதருமை தந்தை என்னிடம் கூறினார். அவர்கள் இந்த பயணத்தை மாட்டு வண்டியில் மேற்கொண்டார்கள். §§

மெதுவாக அந்த குடிசைக்கு, அக்கம் பக்கம் மற்றும் வெகு தொலைவில் இருந்தும் மக்கள் தொடர்ந்து யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். வா. முத்துகுமாரசுவாமி, தமிழ் சேஜஸ் அண்ட் சீர்ஸ் ஆஃப் சிலோன் என்ற தனது புத்தகத்தில், சுவாமியின் குதிர் எவ்வாறு இருந்தது என்று விளக்கம் அளித்துள்ளார்:§§

எனது பதின்ம வயதில், யோக சுவாமியை அவரது கொழும்புத்துறை ஆசிரமத்தில் சந்தித்தது நினைவில் இருக்கிறது. அங்கே சாம்பிராணி மற்றும் கற்பூரத்தின் நறுமணம் பரவி இருந்தது. அங்கே செம்பருத்தி, முல்லை, சிகப்பு தாமரை, செண்பகம் மற்றும் பல்வேறு நிறங்களில் வேறுசில பூக்களும் இருந்தன. அங்கே யோக சுவாமி அமரும் மான் தோலும் இருந்தது. அந்த காட்சி இராமாயணத்தில் விஸ்வாமித்திரர் அல்லது வசிஷ்டரை நினைவுறுத்துவதாக இருந்தது. யோக சுவாமி நீண்ட தாடி மற்றும் நரைத்த முடியுடன் இருந்தார். அவரது கண்கள் காந்தத்தன்மையுடன் இருந்தது. அவர்களை தரிசிக்க வந்தவர்கள் வெற்றிலை, பாக்கு, மாம்பழங்கள், மாதுளை பழங்கள், அன்னாசிப் பழங்கள், அரிசி மற்றும் காய்கறிகள் என்று பல்வேறு காணிக்கைகளுடன் வந்தனர். வேறு சிலர் பிட்டு, இடியாப்பம், தோசை, வடை, மோதகம் போன்ற தயார் செய்த உணவுடன் வந்தார்கள். யோக சுவாமி அன்பர்களை அமைதியாக உட்கார்ந்திருக்க சொல்வார், மற்றும் சில அன்பர்கள் எழுந்து மீதம் இருக்கும் அன்பர்களுக்கு காணிக்கைகளை பகிர்ந்து அளிப்பார்கள். §§

ச. அம்பிகைபாகன் எழுதிய யோக சுவாமியின் சுயசரிதையில், மத்திய கல்லூரியின் முதல்வர் திரு. தாம்பர், இந்த விளக்கத்தை அளிக்கிறார்: §§

image§

யோக சுவாமியின் ஆசிரமம் ஒரு துறவியின் இருப்பிடத்தில் இருக்கும் எளிமையான துறவற வாழ்க்கையை கொண்டிருந்தது. பிரதான அறையில் ஒரு வேப்பமர பலகை இருந்தது. அது இரவில் படுக்கையாகவும் பகலில் இருக்கையாகவும் விளங்கியது. அவர் ஒரு திரைக்கு பின்னால் வைத்திருந்த தனது குருவின் பாதுகைகளை, தினமும் கற்பூரம் ஏற்றி வழிபட்டு வந்தார். §

• • • • • • • • • • • • • • §§

நாங்கள் கொழும்புத்துறை மற்றும் சுவாமியார் தெருக்களின் சந்திப்பை அடைந்த போது, இருட்டத் தொடங்கியிருந்தது மற்றும் தெருவின் மண் எண்ணெய் விளக்கின் நிழலில் ஒரு தெய்வீக சக்தி உட்கார்ந்து இருப்பதை கண்டோம். அவர் வெள்ளை நிறத்தில் வேட்டி அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து இருந்தார். சுவாமிகள் சிங்கம் போன்ற தோற்றம், மென்மையான சருமம், வெள்ளை தாடி மற்றும் நரைத்த முடியுடன், பழங்கால ரிஷிகளைப் போன்று உண்மையில் அற்புதமாக காட்சி அளித்தார். அவர் தனது தியானநிலையில் இருந்து வெளிவந்த போது, இரவு நேரத்தில் புலியின் கண்கள் பிரதிபலிப்பதை போல அவரது கண்கள் பிரகாசமாக இருந்தன. அதன் பிறகு ஒரு அணையில் இருந்த தண்ணீரை கடலுக்குள் திறந்து விட்டதைப் போல, அவர் தெய்வீக பாடல்களை பாட தொடங்கிவிட்டார். அது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு சூறாவளி வீசியது போன்று இருந்தது. அந்த பாடல்கள் அவரது நுரையீரலின் ஆழத்தில் இருந்து வந்தன. நாங்களும் மற்றவர்களும் அவரது இசையில் மகிழ்ச்சியடைந்து மெய்மறந்து நின்றோம். அவர் பாடி முடித்ததும் அங்கே முழுமையான மௌனமும் அமைதியும் நிலவியது. §§

சந்தைக்கடை கோயிலில் §

1920 களின் ஆரம்பத்தில், கடையிற்சுவாமி அடிக்கடி வந்துக்கொண்டு இருந்த யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணை மாவட்டத்தில் இருக்கும் சிவன் கோயிலின் முன்பாக, யோக சுவாமி நேரத்தை கழிக்க ஆரம்பித்தார். வரங்கள் மற்றும் ஆசிகள் நிரம்பி வழியும் இந்த கோயில் கிராண்ட் பசாருக்கு மத்தியில் அமைந்து இருக்கிறது மற்றும் சீடர்கள் பெருமளவில் வழங்கிய நிலம், அணிகலன்கள் மற்றும் தங்கத்தின் காரணத்தால், இது இலங்கை முழுவதிலும் அதிக செல்வ வளம் நிறைந்த கோயிலாக மாறியது. இந்த இடத்தை சுற்றியுள்ள யாழ்ப்பாணத்து பொற்கொல்லர் கடைகள், கோயிலின் அற்புதமான சக்திக்கு வலிமை சேர்க்கிறது. அந்த காலத்தில் இந்தியாவும் இலங்கையும் ஒன்றாகவே செயல்பட்டதால், இந்தியாவில் வாழ்ந்த இந்த கோயிலின் பக்தர்கள் அனுப்பிய, பூக்களின் வண்டிகள் தினமும் வந்துக்கொண்டு இருந்தன. §§

இந்த இடத்தில் சிவனின் சக்தியாக, பிரபஞ்சத்தின் அன்னையாக விளங்கிய தையல்நாயகியின் தரிசனத்தில், சுவாமி தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இருந்தார். அவளது சந்நிதி சிவபெருமானின் சந்நிதிக்கு அருகில் இருந்தாலும், அது அதிக ஒதுக்குபுறமாக இருந்து, அவருக்கு விருப்பமான ஒரு பாதுகாப்பையும் வழங்கியது. இந்த கோயிலின் அமைதியான, வெளிச்சம் இல்லாத மூலையை அவர் தியானம் செய்ய, ஆன்மீக பாடல்களை இயற்ற மற்றும் செல்லப்பசுவாமியுடன் சூட்சும ரீதியாக தொடர்பு கொள்ள ஒரு விசேட புகலிடமாக பயன்படுத்திக் கொண்டார். §§

“தையல்நாயகி கோயிலை வலம் வரும் போது, அவளது சலங்கை ஒலியை கேட்டால் போதும்,” என்று அவர் தனது ஆழ்ந்த சிந்தனை நிலையில் தெரிவித்தார். அம்மனின் சலங்கை ஒலியை அவரே கேட்டு இருந்தார் மற்றும் அவர் சீடர்களுடன் இந்த பாடலை பகிர்ந்துகொண்டார்:§§

தையல் நாயகித் தாயே §

இதுநல்ல தருணம் அம்மா §

வையம் புகழும் வண்ணைமா நகரில் §

வந்த வாணி யேசிவ காமியே §

கந்த சாமி யைப்பெற்ற தையல் §

நாயகித் தாயே - தையல் §

நாயகித் தாயே. §§

கோயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், அவரை யாரும் சீண்டவில்லை. கோயிலில் வழிபட வந்தவர்கள், அவரது தோற்றத்திற்கு மரியாதை அளித்தனர். ஆனாலும் யோக சுவாமி ஈடுபடுத்தியிருந்த ஆன்மீக பணியின் மீது ஒரு அன்பருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அவர் சுவாமியை ச. ர. கந்தையா என்பவர் பல வாரங்களாக அமைதியாக கண்காணித்தார். அதன் பின்னர் ஒரு நாள் சுவாமி தனது நீண்ட தியானத்தை முடித்து நடந்துகொண்டு இருந்த போது, அவரிடம் சென்று, “வணக்கம். சுவாமிகள். தங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும். எனது கடையில் ஒரு பகுதி காலியாக இருக்கிறது. அது இங்கிருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. அதை நீங்கள் தங்குவதற்கு பயன்படுத்திக் கொண்டால், அது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியமாக கருதுவேன்.” §§

யோக சுவாமி ஏற்றுக்கொண்டார் மற்றும் அவர் அங்கே அடிக்கடி காணப்பட்டார். அவர் சிறிய போதனைகளையும் வழங்கவும் ஆரம்பித்தார். அவர் ஒரு எளிமையான மரப்பலகையின் மீது அமர்ந்துகொண்டு, அம்மனின் அன்பு மிகவும் வலிமையானது என்றும், அதை ஒருவர் தனது உள்ளத்தில் தக்க வைத்துக்கொண்டால், அது அவரை கரைத்துவிடும் என்றும் அங்கே வருகை தந்தவர்களிடம் கூறினார். வழக்கமாக யோக சுவாமி அருகில் இருந்த கோயிலில், சிவபெருமான் மற்றும் தையல்நாயகி அம்மனை வணங்கிக்கொண்டு இருப்பார்.§§

முரடர்களின் குழு §

1920 மற்றும் 1930 களில் பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் சுவாமிக்கு நெருக்கமாகினார்கள். அவர்களை சுவாமி “அதிக மதிப்புமிக்க மற்றும் கற்றறிந்த முரடர்களின் குழு" என்று அன்புடனே அழைத்தார். அவர் வண்ணார்பண்ணை சிவன் கோயில் கட்டப்பட்ட சமயத்தில் கட்டப்பட்டு, அதற்கு அருகாமையில் இருந்த ஒரு அங்கத்தினரின் பெரிய வீட்டில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் வணிகர்கள் அடங்கிய இந்த பக்தியுள்ள கல்விமான்களின் குழுவை வாரம் ஒரு முறை சந்தித்தார். அவர்கள் எதிர்காலத்தில் உருவான, சிவதொண்டன் நிலையத்தின் மிகவும் முக்கிய குழுவாக விளங்கினார்கள். §§

சுவாமி தனது முரடர்களின் குழுவிடம் இயல்பாக பழகினார். அவர்களது சகவாசத்தில் அவரும் அவர்களும் தங்களை தளர்த்திக்கொள்ள முடிந்தது. அவர்கள் ஒன்றாக கூடும் போது, ஒருவர் மாற்றி ஒருவர் இந்து சாத்திரங்களை வாசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் வாசிக்கும் போது, இடையிடையே யோக சுவாமி தனது முக்கிய கருத்துக்களை வழங்குவார். இந்த தருணங்களுக்கு அவர்கள் அதிக மதிப்பு அளித்தனர். ஆனால் அவர்கள் வாசிக்கும் படைப்பை வழங்கிய துறவி அல்லது தன்னை, அவர்களுக்கு மேலாக கருதுவதை சுவாமி அனுமதிக்கவில்லை. “நீங்கள் வாசிக்கும் அல்லது கேட்கும் சொற்களின் பேச்சாளராக மாறவேண்டும். உங்கள் எண்ணத்தில் இருப்பதைப் போன்று நீங்கள் இல்லை. நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள். அதைத்தான் நீங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.” §§

இந்த கூட்டங்களில் யோக சுவாமி சிலசமயம், சுவாமி விவேகானந்தரைப் பற்றி பேசுவார். அவர் ஜனவரி 1897 இலங்கையில் நடைப்பெற்ற சுவாமி விவகானந்தரின் உரைகளில் கலந்துகொண்டார். தனது உள்ளத்தில் இருந்து வரும் சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி, தனது கருத்துக்கள் அனைத்தையும் முழுமையாக வெளிப்படுத்த முடியாமல், மேடையின் மேலும் கீழுமாக கர்ஜித்துக்கொண்டே நடைப்போடும் சிங்கத்தை போல விவேகானந்தரின் உரைகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். வேதாந்த புலமை பெற்ற 34 வயது துறவி, “காலம் சிறியதாக இருக்கிறது, ஆனால் பாடம் பெரியதாக இருக்கிறது,” என்று தனது உரையை துவக்குவார். இந்த வாசகத்தை சுவாமி தனது வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார். §§

பல பிரபலங்கள் அடங்கிய இந்த குழுவில் சார் வைத்தியலிங்கம் துரைசாமி, Dr. சி. குருசாமி, திரு. அ. தில்லையம்பலம், திரு. வி. காராளசிங்கம், Dr. வி. தி. பசுபதி, பண்டிதர் த. மயில்வாகனம் (பிற்காலத்தில் சுவாமி விபுலாநந்தர்), கலைப்புலவர் க. நவரத்தினம், திரு. செ. மயில்வாகனம், திரு. வி. முத்துக்குமாரு, திரு. வை.சி.சி. குமாரசாமி, திரு. ரி.என். சுப்பையா, புலவர்மணி ஏ. பெரியத்தம்பிப்பிள்ளை, திரு. ஆர். என். சிவபிரகாசம், திரு. எம். எஸ். இளையதம்பி, திரு. எம். சபாரத்னசிங்கி, திரு. திருவிளங்கம், உச்சநீதிமன்ற நீதிபதி ஹே. வி. தம்பையா, திரு. ம. ஸ்ரீகாந்தா, திரு. காசிப்பிள்ளை நவரத்தினம், திரு. த. சின்னதம்பி, திரு. கே.கே. நடராஜன், பண்டிதர் ஏ. வி. மயில்வாகனம், அமைதி நடுவர் திரு. எஸ். சுப்ரமணியம் ஆகியோர் அடங்குவர். அதில் பெரும்பாலனோர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுவாமியின் சீடர்களாக இருந்தனர். §§

நடை பயணங்கள் §

சுவாமி தனது வாழ்நாள் முழுவதும், செல்லப்பசுவாமி தனக்கு முன்பாக இருப்பதைப் போன்று வெளிப்படை பேசிக்கொண்டு இருந்தார். செல்லப்பசுவாமி மகாசமாதி அடைந்த பிறகு, சுவாமி அவருடன் தொடர்புகொள்ளும் ஸித்தியில் பக்குவம் அடைந்து இருக்கிறார் என்பது சீடர்களுக்கு பின்னர் தெரிய வந்தது. அப்போதில் இருந்து, செல்லப்பசுவாமி ஆன்மீக ரீதியாக வழிகாட்டி வந்தார். அவர் பிரபஞ்சத்தின் சூட்சும சக்திகள், கடவுள்கள், தேவர்கள் மற்றும் சைவத்துறவிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும், அவர்களும் அதைப்போன்று வழிகாட்டியதாக சுவாமி குறிப்பிட்டார். §§

ஒரு இளம்வயது குருவாக இருந்த சுவாமி, யாழ்ப்பாணத்திற்கு வெளியே நீண்டகாலம் தங்குவதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். அவர் கொழும்பு செல்வார், அல்லது உள் நாட்டிற்குள், அல்லது கொழும்புத்துறையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பூநகரி கிராமத்தில், பிள்ளையார் கோயில் மற்றும் அதற்கு அருகில தாமரை மலர்கள் நிறைந்த குளம் இருக்கும் நெல் வயல்களின் மத்தியில் இருந்த தனது ஒதுக்குபுறமான இடத்திற்கு செல்வார். கோயிலின் மறுபுறத்தில் நிழல் தரும் ஒரு குருந்தை மரம் இருந்தது. இதைப்போன்ற ஒரு மரத்திற்கு அடியில் மணிக்கவாசகர் சிவனை குருவாக கண்டார் என்பதால், இதை சைவர்கள் புனிதமாக கருதி வழிபாடு நடத்துகிறார்கள். யாருக்கும் இந்த இடத்தைப் பற்றி தெரியாது என்பதால், அங்கே சுவாமிக்கு யாரும் தொந்தரவு கொடுக்கவில்லை மற்றும் அவர் அங்கே பல நாட்களுக்கு தொடர்ந்து தங்கி இருப்பார். அதனை சுற்றி சுறுசுறுப்பாக விவசாயிகள் வேலைசெய்துக்கொண்டு இருக்க, அந்த இடம் வயல்களுக்கு மத்தியில் அமைதியாக இருந்தது. §§

சுவாமிக்கு நடந்து செல்வது பிடிக்கும் மற்றும் அவர் யாழ்ப்பாணம் தீபகற்பம் முழுவதும் நீண்டதூரம் நடந்து செல்வார். பிற்காலத்தில், அவரை நாடி எண்ணற்ற சீடர்கள் வந்த போது, அவர் சீடர்கள் வருவதற்கு முன்பாக விரைவாக எழுந்து, கையில் குடையை பிடித்துக்கொண்டு, மேடு பள்ளம் நிறைந்த சாலைகள் வழியாக, ஓய்வு இல்லாமல் நடந்து, வழியில் இருந்த புனித தலங்களுக்கு சென்று, முன்னறிவப்பின்றி ஒரு சீடனின் வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு, தனது ஆசிரமத்தில் யாரும் இல்லாத போது அல்லது அதிக பக்தியுள்ள சீடர்கள் மட்டும் இருக்கும் போது, அவர் தனது குடிசைக்கு திரும்புவார். §§

அவருக்கு ஒவ்வொரு சாலை, ஒவ்வொரு சந்து, ஒவ்வொரு பாதை பரிச்சயமாக இருந்தது. 1940 களில் அல்லது 1950 களில், யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய புயல் உருவானது. அதிவேக காற்றின் காரணமாக, பல நாட்களுக்கு இடைவிடாமல் பலத்த மழை பெய்து, அது மரங்களை சாய்த்து சாலைகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. அந்த புயல் ஓய்ந்த பிறகு அது விளைவித்த சேதத்தை பார்வையிட, யாழ்ப்பாணத்தை சுற்றி காண்பிக்குமாறு தனது நெருக்கமான சீடர்களில் ஒருவரிடம் கேட்டுக்கொண்டார். அவர்களது பயணத்தில் முன்னேறி செல்லமுடியாத சாலை வரும் போதெல்லாம், சுவாமி அந்த உள்ளூர் மக்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்த குறுகலான சந்துகள் வழியாக செல்லும் இன்னொரு பாதையில் வழிநடத்தி செல்வார். அவரது பூகோள புலமையை பார்த்து அந்த சீடன் தனது வியப்பை வெளிப்படுத்தியதும், “இது எனக்கு சொந்தமான நிலம். எனக்கு இதில் இருக்கும் ஒவ்வொரு அங்குலமும் தெரியும்,” என்று சுவாமி அறிவிப்பார். யோக சுவாமி எந்த இடத்திற்கு சென்றாலும், அது எவ்வளவு தூரமாக இருந்தாலும், அவர் இறுதியில் இலுப்பை மரம் வந்து சேர்ந்துவிடுவார். §§

சுவாமி பருத்த உடல் மற்றும் ஐந்து அடி ஏழு அங்குல உயரத்துடன் இருந்தார். அது அந்த காலத்தில் யாழ்ப்பாண ஆண்களின் சராசரி உயரமாக இருந்தது. கம்பீரமாகவும் வலுவாகவும் இருந்த அவர், தனது எழுபது வயதிலும், தினமும் அறுபது கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். அவர் தவிர்க்க விரும்பிய நபர்களை மிரட்டுவதற்காக, தனது அச்சுறுத்தும் தோற்றம் மற்றும் உடல் வலிமையையும் பயன்படுத்த தயங்கியது இல்லை. Dr. எஸ். ராமநாதன், என்ற சீடர் மறக்கமுடியாத இந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறார்: §§

நான் 1920 ஆம் ஆண்டில், நல்லூரை சேர்ந்த வழக்கறிஞர் சோமசுந்தரத்துடன் சுவாமியை சந்திக்க சென்றேன். நான் இளைஞனாக இருந்த போது, கத்திச்சண்டை மற்றும் அதைப்போன்ற மற்ற வித்தைகளில் தேர்ச்சி பெற்று இருந்தேன். இந்த திறமைகளின் காரணமாக, நான் சற்று ஆணவத்துடன் இருந்தேன். நான் ஆசிரமத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது, சுவாமி நடுத்தெருவில் என்னுடன் போட்டியிட்டு என்னை வீழ்த்தினார். என்னால் அந்த சம்பவத்தை என்றுமே மறக்க முடியாது. அவர் அன்று காண்பித்த திறமையை, தங்கள் கைகள் மற்றும் கால்களை கொண்டு, தற்காப்பு கலைகளை கற்பிக்கும் ஆசிரியர்களாலும் காண்பித்து இருக்கமுடியாது. எனக்கு பெருமையை வழங்கிய ஒரே திறமை, அன்று நான் தரையில் வீழ்வதற்கு காரணமாக இருந்தது. அதன் பிறகு சுவாமி என்னை ஆசிரமத்திற்கு அழைத்து சென்று என் மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்தார். அன்று என்னை மண்ணை கவ்வ வைத்த தெய்வீக விளையாட்டைப் பற்றி, என்னால் பல வருடங்கள் கழித்தே கற்றுக்கொள்ள முடிந்தது. அதன் பிறகு நான் எப்போது யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டாலும், ஆசிரமத்திற்கு சென்று அவரது தரிசனத்தை பெற்றேன். சில சமயம் அவர் என்னை திட்டி அனுப்பி விடுவார். ஆனால் அவரை காணும் ஒரே நோக்கத்துடன் செல்லும் போது, அவர் என்னை அன்புடன் வரவேற்று என் மீது பாசத்தை பொழிவார். §§

பலர் அவரிடம் இருந்து விலகியே இருந்தனர். அவர்கள் சுவாமி தெருவில் நடந்து வருவதை கண்டால், அவர்கள் ஒளிந்துக்கொள்வார்கள் அல்லது வேறு வழியில் சென்று விடுவார்கள். மக்கள் இலுப்பை மரம் வழியாக செல்லாமல், நீளமான மாற்றுப்பாதை வழியாக செல்வார்கள். ஆனால் சிலசமயம், அதிக ஆர்வத்துடன் கவனம் குறைவான நபர் ஒருவர் அவரை நெருங்கி வரும் போது, யோக சுவாமி அவரை உரத்த குரலில் திட்டி அனுப்புவார். ஆனால் அது அந்த அழையாத விருந்தினரை தடுக்கவில்லை என்றால், மீண்டும் அவரிடம் அந்த ஆர்வம் ஆதிக்கம் செலுத்தாதவாறு அவரை அடித்து அனுப்புவார். பல வருடங்கள் கழித்து, சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி அத்தகைய கோபத்தின் வெளிப்பாடுகள் பற்றி தனது உட்பார்வையை வழங்கினார்: §§

மக்களிடம் யோக சுவாமி கோபித்து கொள்வார் என்ற கருத்து நிலவுகிறது. மக்களால் அவரது கோபத்தை பொறுத்துக் கொள்ளமுடியாது, ஆனால் பின்னர் அந்த கோபத்தால் தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக அவர்கள் கூறுவார்கள். அது கட்டுப்படுத்தப்படாமல் மற்றும் கட்டுப்படுத்தமுடியாமல் நெருப்பை கக்கும் சாதாரண மனிதனின் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களின் தீவிரமான கோபத்தில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது? யோக சுவாமி தனது நியாயமான கோபத்தில் வெள்ளை நிற சுடர்கள், இளம் சிவப்பு நீல வண்ணத்தை வெளியிடுவார். “நான் உனக்குள் இருக்கும் இந்த கொடிய பண்புகளை அழிக்கப்போகிறேன்,” என்று அன்பரின் நலனுக்காக குறிப்பிடுவார். அவரை பார்க்கும் போது கோபத்தின மீது தனது கட்டுப்பாட்டை இழந்தது போல காட்சி அளிக்கலாம், ஆனால் அது உள்ளுணர்வு மனிதனின் கோபமாக இருக்காது. ரிஷிகள் அதிக கோபத்துடன் அதிகமாக அடக்கி ஆளும் பண்பையும் பெறுவதாக மக்களிடம் ஒரு கருத்து நிலவுகிறது. அவர்கள் கோபத்தை பயன்படுத்தினாலும், அதை ஒரு வெள்ளை நிற சுடருடன் கூடிய நியாயமான கோபம் என்று சொல்வதே மிகவும் சரியாக இருக்கும். அதன் பின்னர், அவர்களுக்கு முன்பு எது வருத்தத்தை ஏற்படுத்தியதோ, அதில் இருந்து முழுமையாக விடுதலையை பெறுவதால், அந்த ரிஷியின் கோபம் தங்களுக்கு கிடைத்த பாக்கியமாக மக்கள் கருதுகிறார்கள். அது அவர்களிடம் இருந்து முழுமையாக எரிக்கப்பட்ட ஒரு ஆசியாக விளங்குகிறது. §§

கொழும்புத்துறையில் இருந்த அவரது குடிசையை பிற்காலத்துடன் ஒப்பிடும் போது, ஆரம்ப காலத்தில் வெகு தொலைவில் அணுக முடியாமல் இருந்தது. யாழ்ப்பாணம் நகரம் மற்றும் சுவாமியின் கிராமத்திற்கு இடையிலான பகுதி, உயரமான புதர்கள் வழியாக செல்லும் ஒரு அகலமான வழித்தடமாகத்தான் இருந்தது. மற்றும் அங்கே மூன்று-நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வீடு எதுவும் இருந்ததில்லை. மக்கள் அந்த வழியாக இரவில் வரும் போது வழிப்பறி கொள்ளையர்களை கண்டு பயந்ததால், சுவாமி தைரியம் இல்லாதவர்களை சந்திக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. மிகவும் தீவிரமான, அச்சம் இல்லாத அன்பர்கள் மட்டுமே மாலை நேரத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணம் மேற்கொள்வார்கள். §§

ஒரு நாள் இரவு சுவாமியை தேடி சில சிறுவர்கள் வந்தார்கள். சுவாமி யாழ்ப்பாணத்தை சுற்றி நடந்துகொண்டு இருந்த போது, அந்த சிறுவர்கள் அவரை சந்திக்க நினைத்தார்கள், ஆனால் அவர்களால் அவரது வேகமாக நடைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் ஆசிரமத்திற்கு மாலை நேரத்தில் வந்து சேர்ந்தனர். அப்போது யோக சுவாமி எண்ணெய் விளக்குகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். அவர்கள் வந்ததை பொருட்படுத்தாமல், வழக்கம் போல் தனது மாலை நேர பாடல்களை பாட ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் அவர்களை தனது குடிசைக்குள் வரவழைத்து, அவர்கள் வந்த காரணத்தை விசாரித்தார். தாங்கள் சமீபத்தில் பட்டபடிப்பு தேர்வை எழுதியதாகவும், அதில் தாங்கள் வெற்றி பெற்றால், இலங்கையில் இருக்கும் பல்கலைகழகம் அல்லது வெளிநாட்டிற்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்கள் விளக்கினார்கள். §§

தேர்தலின் முடிவு வெளியாகவில்லை என்பதால் அவர்கள் கவலையில் இருந்தார்கள். பெரியவர்களாக தாங்கள் விரைவில் ஏற்கவிருக்கும் பொறுப்புக்களை அவர்கள் உணரவும் தொடங்கியிருந்தார்கள், மற்றும் இன்று இரவு யாத்திரை மேற்கொண்டு, கொழும்புத்துறையின் முனிவரை தரிசித்து அவரது ஆலோசனையை பெறுவது அவர்களுக்கு சரியென்று தோன்றியது. அவர்கள் அத்தகைய ஒரு உயர்ந்த ஆன்மாவிடம் இருந்து வரும் ஆசிகளின் சக்தியை பற்றி அறிந்து இருந்தார்கள். சுவாமி விரைவில், “நீங்கள் நல்ல புத்திசாலி மாணவர்களாக இருக்கிறீர்கள். பிறகு ஏன் கவலைப்படுகிறீர்கள்? நீங்கள் மனதில் அச்சத்துடன் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது,” என்று கூறி அவர்களது மனதில் இருந்து தேர்வு முடிவுகள் பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்தார். §§

அந்த வயதில் பலர் செய்வதைப் போல, அவர்களும் வழித்தவறி செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதை சுவாமி அறிந்து இருந்தார். ஆனால் முறையான வழிகாட்டலின் மூலம், அவர்கள் தங்களது வாழ்க்கையின் குறிக்கோளைப் பற்றி ஒரு வலுவான புரிதலை உருவாக்கிக்கொள்ள முடியும். அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு தொடர்ந்து அனுசரித்து நடந்து, நிலையற்ற லௌகீக ஆசைகளில் ஈடுபடாமல் கற்புடன் நிலைத்து இருக்கவேண்டும் என்று அவர்களது வாழ்க்கைக்கு, அவர் வலுவான கட்டுப்பாட்டை அறிவித்தார். அவர் வாழ்க்கை முழுவதும் கடைப்பிடிக்க முழுமையான கண்ணோட்டத்தை விவரித்தார்: §§

நமக்கு மேல் அல்லது நமக்கு மேலதிகாரியாக யாரும் இல்லை. நன்மையும் தீமையும் நம்மை சீண்ட முடியாது. நமக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை. நமக்கு விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. நமக்கு லௌகீக பொருட்களின் மீது ஆசை கிடையாது. நமக்கு மனதின் கவலைகள் வேதனை வழங்குவதும் இல்லை இடம், காலம் அல்லது கர்மவினையால் நாம் கட்டுப்படுவதும் இல்லை. §§

இராஜயோகி தரையில் விழுந்து வணங்குதல் §

அந்த காலத்தில் சங்கரசுப்பையர் என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவரை எல்லோரும் மரியாதையுடன் இராஜயோகி என்று அழைத்தனர். அவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். அவர் ஒரு இளைஞனாக இருந்த போது, ஒரு ஆன்மீக வேட்கையுடன் வீட்டில் இருந்து வெளியேறி தென்னிந்தியா சென்றார். அவர் பல வருடங்களுக்கு சாதனா செய்ததுடன், தத்துவம் மற்றும் சொற்பொழிவு வழங்குவதில் பயிற்சியும் பெற்றார். அவர் சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்று, அதிக மதிக்கப்பட்ட சொற்பொழிவாளராக முதிர்ச்சி பெற்றார். இந்து கோயில்களில் விசேஷமான நாட்களில் பூஜைகள் முடிந்த பிறகு, அங்கே அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் பேச்சாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெறும். இராஜயோகி அத்தகைய விசேஷங்களின் போது, தென்னிந்தியா முழுவதும் பயணம் மேற்கொண்டு, சைவ சமயத்தின் முக்கிய கருத்துக்களை தெளிவுபடுத்தி, கதைகளை சொல்லி மற்றும் அதன் பொருள்களை விளக்குவார். அவரது சொற்பொழிவை கேட்க மக்கள் வெகுதூரத்தில் இருந்து வந்தனர். அவர் சடங்குகளை முழுமையாக புரிந்துகொள்ளாமல் பின்பற்றியவர்களுக்கு, குறிப்பிடும் படியாகவும் ஒரு எளிமையான பாணியிலும், சைவ வழிபாட்டின் ஆன்மீக முக்கியத்துவத்தை வழங்கினார். §§

1920 களின் ஆரம்பத்தில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அந்த மேதாவி மகன் சொந்த மண்ணிற்கு திரும்பினார். அவர் பல வருடங்களாக தனது சொந்த மண்ணில் இல்லையென்றாலும், அவர் பிரபலமாகவும் நல்ல மதிப்புடனும் இருந்தார். அவர் கல்லால் உருவாக்கப்பட்ட பழங்கால கோயில்களில் பேசுவதை, தென்னிந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட பல இலங்கைவாசிகள் பார்த்து இருந்தனர். இறுதியில் ஒரு வெற்றி வீரனை போன்று, அவர் சமய சொற்பொழிவுகளை வழங்க சொந்த மண்ணிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். இராஜயோகி படகு மூலம் கொழும்பு வந்தடைந்து, தலைநகரத்து மக்களின் கவனத்தை பல வாரங்கள் கவர்ந்திருந்து, யாழ்ப்பாணத்திற்கு இரயில் மூலம் பயணம் மேற்கொண்டார். §§

அந்த சமூகம் முழுவதும் உற்சாகத்தில் இருந்தது. அமைதியான வட இலங்கையில், அத்தகைய சம்பவங்கள் அபூர்வமாக நடந்தன. தாங்கள் வரவேற்கும் முக்கியஸ்தரை சொந்த மண்ணிற்கு அழைத்து வர, வரவேற்பு குழுவின் பிரதிநிதிகள் கொழும்பில் இருந்து எட்டு மணிநேரம் பயணம் மேற்கொண்டனர். பிரபலத்தை வரவேற்கும் பெண்கள், ஆயிரக்கணக்கான மலர்கள் மற்றும் பனை ஒலைகளின் துணையுடன் இரயில் நிலையத்தை சிறப்பாக அலங்கரித்து இருந்தார்கள். விழாவிற்கு வருகை தரும் பிரமுகர்கள் வரவேற்புரை வழங்கவும், பண்டிதர் யாழ்ப்பாண மக்களுக்கு தனது முதல் உரையை வழங்கவும், ஒரு புதிய மேடை அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் பல முக்கியமான சமய மற்றும் சமூக குழுக்கள் இருந்தன. அவற்றில் ஒவ்வொன்றும் தங்கள் கைகளில் ஆடம்பரமான மலர் மாலைகளுடன், அவரை கௌரவிக்க அங்கே குழுமியிருந்தனர். காற்றில் சாம்பிராணி மற்றும் ரோசாப்பூ மற்றும் மல்லிகையின் நறுமணம் நிரம்பி இருந்தது. அவர் வந்து சேரும் நேரம் நெருங்கியதும், அதிகமான மக்கள் மேடைக்கு அருகில் குழும ஆரம்பித்தனர். §§

இதற்கிடையில், தன்னை உபசரிக்கும் குழுவினரிடம் உரையாடிக்கொண்டு இருந்த இராஜயோகி, சொந்த மண்ணிற்கு திரும்புவது ஆனந்தம் தருவதாக இருக்கிறது என்று கூறினார். ஆனால் இரயில் பளை இரயில் நிலையத்தில் இரயில் நின்றதும், அவர் பேசுவதை நிறுத்தி, கண்களை மூடிக்கொண்டு ஒரு ஆழமான பேரானந்த நிலையில் நுழைந்தார். மன நிறைவால் அவரது முகம் பிரகாசித்தது. அவர் சிறிது நேரம் கழித்து, தனக்கு கிடைத்த அனுபவத்தில் முழுமையாக மூழ்கிய நிலையில் தனது கண்களை திறந்தார். §§

உபசரிக்கும் குழுவின் தலைவர், “என்ன பிரச்சனை சுவாமி? பயணம் காரணமாக சோர்வாக இருக்கிறதா?” என்று கேட்டார். இராஜயோகி பெருமூச்சு விட்டுக்கொண்டு, “சென்ற இரயில் நிலையத்தில், ஒரு சிறந்த சோதி இரயிலில் ஏறுவதை உணர்ந்தேன். அந்த ஒளி இரயில் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது,” என்றார். அவர் மீண்டும் உட்புறமாக கவனம் செலுத்தி, மீதம் இருந்த பயணம் முழுவதும் அந்த தரிசனத்தில் மூழ்கி இருந்தார். §§

அந்த சோதி யாழ்ப்பாணம் பணிமனைக்கு முன்பாக புங்கன்குளம் நிலையத்தில், இரயிலில் இருந்து இறங்கி செல்வதை உணர்ந்தார். அவர் யார் என்று உபசரிக்கும் குழுவினரிடம் விசாரித்தார். ஒருவர் சன்னல் வழியாக எட்டிப் பார்த்தார், அவர் யோக சுவாமி நடந்து செல்வதை பார்த்ததும், சுவாமியை இராஜயோகிக்கு காண்பித்துக்கொண்டு, “அவர் ஒரு துறவி. அவர் அருகில் இருக்கும் கிராமத்தில் வாழ்கிறார்,” என்றார். §§

இரயில் கிளம்ப தயாராக இருந்தது. அந்த இரயில் நிலையத்தில் உடனே இறங்கவேண்டும் என்று இராஜயோகி வற்புறுத்தினார். வரவேற்பு குழுவில் யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் அந்த உயிர்சக்தியின் ஆன்மீக வெளிச்சத்தை தெளிவாக உணர்ந்து இருந்தார். அந்த தருணத்தில், அந்த உயிர்சக்தியை சந்திப்பதே அவரது வாழ்க்கையில் முக்கியமான பணியாக இருந்தது. §§

வரவேற்கும் குழு குழப்பத்தில் இருந்தது. அந்த இரயில் நிலையத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த விழா மேடையில், இராஜயோகிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதே, அவர்களது பொறுப்பாக இருந்தது. அங்கே நூற்றுக்கண்கான மக்கள் காத்து இருந்தனர். அவர் தாமதமாக வந்தால் அல்லது ஏதாவது தவறாக நடந்தால், அவர்கள் மீது பழி சுமத்தப்படும். அவருக்கு அவர்களது இக்கட்டான சூழ்நிலை புரிந்து இருந்தாலும், தான் யோக சுவாமியை பார்க்க வேண்டும் என்று வற்புறுத்தினார். “இரயிலில் இருந்து இறங்க எனக்கு அனுமதி அளியுங்கள். வரவேற்பு நிகழ்ச்சியை நான் உரையாற்றும் நேரம் வரை ஒத்தி வையுங்கள். பழியை என் மீது சுமத்துங்கள்,” என்று அவர் வேண்டிக்கொண்டார். வரவேற்பு குழுவும் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியை சுருக்கி, நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரை தாங்களே யோக சுவாமியிடம் அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்தனர். இதற்கு இராஜயோகி சம்மதம் தெரிவிக்க, இரயில் ஒரு ஆட்டத்துடன் யாழ்ப்பாணம் நோக்கி மெதுவாக முன்னேறியது. §§

அப்போது அந்த குழுவினர், பிரபலமான இராஜயோகி யோக சுவாமியை சந்திக்க ஏன் ஆர்வத்துடன் இருக்கிறார் என்று யோசிக்க ஆரம்பித்தனர். அவர்கள் சுவாமியை பல வருடங்களாக பார்த்து இருந்தனர், மற்றும் அவரிடம் விசேட சக்தி இருப்பதாக அவர்களுக்கு தோன்றியது இல்லை. அவர்களைப் பொறுத்தவரை, அவர் அச்சத்துடன் தவிர்க்க வேண்டிய ஒரு மர்மமான சாதுவாக இருந்தார். இராஜயோகி ஒரு பரிச்சயம் இல்லாத நபருடன் ஒருசில தருணங்கள் இருப்பதற்காக, நீண்ட நேரமாக காத்திருந்த நண்பர்களின் கௌரவத்தை துறக்க தயாராக இருந்தார். அவருக்கு வழங்கப்படவிருந்த வரவேற்பு நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பல வருடங்களில் நடந்த சிறப்பான ஒன்றாக இருந்திருக்கும், மற்றும் யோக சுவாமியை தரிசிக்க அவர் அதை தவிர்க்க விரும்பினார்! §§

அவர்கள் யாழ்ப்பாண இரயில் நிலையத்தில் நுழைந்த போது, உள்ளூர் மக்கள் நடைமேடையில் நிரம்பி இருந்தனர். இசைக்கலைஞர்கள் தவில் மற்றும் நாதசுவரத்தில் பண்டிகைக் கால மெட்டுக்களை இசைத்துக்கொண்டு இருந்தார்கள். இராஜயோகி சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டதால், மாலைகள் தன் முகத்தை மறைக்காமல் இருக்க அவற்றை உடனே அகற்ற வேண்டி இருந்தது. §§

image§

ஒரு முறை இராஜயோகி என்ற அதிக மரியாதைக்குரிய பண்டிதர், கொழும்புவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரயிலில் பயணம் செய்த போது, அருகில் ஒரு தலைசிறந்த சோதி இருப்பதை உணர்ந்தார். அவர் அந்த ஆன்மீக சக்தியின் மூலத்தை பற்றி விசாரித்த போது, யாழ்ப்பாணத்திற்கு முந்தைய இரயில் நிலையத்தில் யோக சுவாமி, இரயிலில் இருந்து இறங்கி செல்வதை பார்த்ததாக, அவருடைய குழுவில் ஒருவர் தெரிவித்தார். தான் உணர்ந்த சக்தியால் ஆச்சரியம் அடைந்த பண்டிதர், அந்த சக்தியை பின்தொடர்ந்தார். §

• • • • • • • • • • • • • • §§

அவரது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், தீவிர எதிர்ப்பை கடந்து, தாங்கள் வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப, வரவேற்பு நிகழ்ச்சியின் முக்கிய பகுதியை மாலை வரை ஒத்திவைக்க ஏற்பாடு செய்தனர். இராஜயோகி முடிந்தவரை விரைவாக கிளம்ப வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் வழங்கிய சிறிய, சரளமான மற்றும் நகைச்சுவை நிறைந்த உரை வந்திருந்த மக்கள் கூட்டத்தை திருப்திப்படுத்தியது. அவர் நிகழ்ச்சியை சுருக்கியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டு, தனது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுடன் சுவாமியை காண வாகனத்தில் கிளம்பினார். §§

இலங்கையில் எங்கும் காணப்படும் கருப்பு நிற அம்பாஸடர் செடன்களில், அவர்கள் எல்லோரும் ஏறிக்கொண்டு கொழும்புத்துறை நோக்கி புறப்பட்டனர். இராஜயோகி சுவாமியின் குடிசையை அடைந்ததும், மிகவும் உயர்வான நமஸ்கார வடிவில், தனது தலைக்கு மேல் கைகளை உயர்த்திக்கொண்டு, முனிவருக்கு அருகில் சென்று, தரையில் விழுந்து வணங்கினார். அவர் அஷ்டாங்க நமஸ்கார நிலையில் நீண்டநேரம் இருந்தார், பின்னர் பேசமுடியாமல் பிரமிப்பில் எழுந்து நின்றார். யோக சுவாமி அவரை அன்புடன் அழைத்து, அருகில் அமர்த்திக்கொண்டார். §§

சிறிது நேரத்திற்கு தீவிரமான அமைதி நிலவியது, அதன் பிறகே இராஜயோகி, “எனக்கு இந்த தருணத்தில் கிடைத்துள்ள அமைதியை போன்று முன்னெப்போதும் உணர்ந்தது இல்லை,” என்று கூறினார். “நீங்கள் உணர்வது உங்களுக்குள் இருக்கிறது. நான் உங்களுக்குள் இருக்கிறேன்,” என்று யோக சுவாமி பதில் அளித்தார். அவர்கள் இருவரும் கலந்து உரையாடினார்கள் மற்றும் தனிப்பட்ட அமைதியில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தார்கள். அதன் பிறகு இராஜயோகி கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்று சுவாமி அறிவித்தார். மக்கள் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பதை அறிந்திருந்த சுவாமி, தங்களது சந்திப்பைப் பற்றி மௌனம் சாதிக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார். “இரகசியம் புனிதமானது, புனிதம் இரகசியமானது. நீ மட்டும் தான் இருக்கிறாய். ஒரு இரகசியத்தை காப்பாற்றுவதன் மூலம் அதை அறிந்துக்கொள்.” §§

அன்று இரவு, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் யாழ்ப்பாண குடிமக்களை சந்தித்த போது, சுவாமியுடன் தான் மேற்கொண்ட சந்திப்பைப் பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் எல்லோரும் அறிந்து இருந்தார்கள். அதுவே யாழ்ப்பாண மக்களின் வழக்கமாகவும் இருக்கிறது. அவரது குழுவை சேர்ந்தவர்களால் தங்களது உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் பிரபலமான தங்களது பண்டிதர் யோக சுவாமியை தனது குருவாக ஏற்றுக்கொண்டது பற்றி பேச ஆரம்பித்தனர். §§

இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது; சுவாமியின் அபூர்வமான ஆன்மீகத்தை பற்றி மற்றவர்களுக்கு தெரிய தொடங்கி, அவர்களும் நாடி வந்தனர். அவர் மிகவும் தனியாக, பற்றின்றி இருந்ததுடன், அவரை அணுகுவதும் கடினமாக இருந்ததால், மக்கள் பெருமளவில் அவரை நாடி வரவில்லை. அவர் எளிமையான, தனிமையான வாழ்வை வாழ்ந்து, தொடர்ந்து தவத்தில் ஈடுபட்டு காலம், உருவம், பரவெளி மற்றும் மனதின் இயக்கங்களை கடந்து, உள்பொருளின் உச்சத்திற்கு அவர் உயர்ந்து செல்ல, பற்றின் ஒவ்வொரு இழையையும் உணர்வுடன் நீக்கிக்கொண்டு வந்தார். §§

சாதகர்களுடன் இணைந்து செயல்படுதல் §

செல்லப்பசுவாமி தான் ஒரு குருவாக அறியப்படுவதற்கு எப்போதும் அனுமதி வழங்கவில்லை. யோக சுவாமி அந்த நிலையின் மெய்யறிவை அறிந்து இருந்தார். மிகவும் உயர்ந்த சக்கரங்களில் தேவையான பக்குவம் மற்றும் திடநிலையை அடையும் முன்னர், ஒருவர் சீடர்களை ஏற்றுக்கொள்ள தன்னை தயார்படுத்திக்கொண்டால், அவர் செருக்குள்ள சுயநலவாதியாக மாற வாய்ப்புள்ளது என்பதை சுவாமி அறிந்து இருந்தார். அவர்கள் தங்களது விரிவாக்கத்தில் ஒரு மாற்றமில்லாத இடைநிலையை அடைந்து, தங்களை முன்கூட்டியே வெளிப்படுத்தி, தங்களது தவத்தை நிறுத்தி, மற்றவர்களை பாதையில் கொண்டு வருவதற்கு தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். §§

இந்த சுவாமிகளின் நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும், அவர்களை சுற்றியிருக்கும் கும்பலால் எதிர்பாராத வேதனைகளுக்கு ஆளாகிறார்கள். இதனுடன் வரும் வழிபாடு மற்றும் பாராட்டு மழையை எதிர்கொள்ளவும், அவற்றை உள்ளுக்குள் இருக்கும் பரம்பொருளின் பலி பீடத்திற்கு சுமந்து செல்லவும் தேவைப்படும் பணிவும் பக்குவமும் அவர்களிடம் இருப்பதில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் ஆன்மீக செருக்கால் பாதிக்கப்பட்டு, அவர்கள் உருவாக்கும் ஒரு புதிய, லௌகீக ஆணவம், குறிக்கோள் பாதையில் அவர்களது சொந்த முன்னேற்றத்தை தடுப்பதோடு, மற்றவர்களுக்கு அவர்கள் வழிகாட்ட மேற்கொள்ளும் முயற்சியையும் பயனற்றதாக்குகிறது. §§

இந்த காலக்கட்டத்தில் சுவாமி அந்த படுகுழியில் சிக்கிக் கொள்ளாமல், பூமியில் வாழும் ஒரு சற்குருவிற்கு உதவி செய்யும் அல்லது அவர்கள் வாயிலாக தனது பணிகளை செய்யும் சிவபெருமான் மற்றும் அந்தர்லோகத்தில் வாழும் தெய்வங்கள், தேவர்கள் மற்றும் குருக்களுக்கு, ஒரு மதிக்கத்தக்க பாதையாக சேவை செய்வதற்காக, தனது நிலைமாற்றத்தை நிறைவு செய்து தன்னை பரமாத்துமாவிற்குள் உறுதியாக நிலைநிறுத்திக்கொள்ள, தன்னை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். அவர் மீண்டும் மீண்டும் முழுமுதற்பொருளான பரமாத்துமாவை உணர்ந்து, சமாதி நிலையில் வலுவாக அமர்ந்து இருந்தார். அவர் புனித தலங்களுக்கு செல்வது, ஆன்மீக சக்திகளுடன் தொடர்பு கொள்வது மற்றும் ஆன்மீக ஆணைகளுக்கு கட்டுப்பட்டு ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு யாத்திரை செல்வதில் தனது நேரத்தை கழித்தார். §§

அவரை சுற்றி அதிகமான அன்பர்கள் சேர ஆரம்பித்த இந்த காலகட்டத்தைப் பற்றி இந்துமதி அம்மா எழுதியுள்ளார்: §§

image§

இராஜயோகி யோக சுவாமியை அவரது குடிசையில் சந்தித்து, அந்த பரிச்சயமில்லாத நபரின் கால்களில் விழுந்து வணங்கி, அவரது சிறப்பை அங்கீகரித்து, உலகிற்கு அவரது மேன்மையைப் பற்றி தெரிவித்தார். சுவாமியை மேன்மை பொருந்திய பண்டிதர் தரையில் விழுந்தது வணங்கியதால், தங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு மிகப்பெரிய ஆன்மாவை பற்றி அந்த சமூகம் முழுவதும் தெரிந்துகொண்டது. §

• • • • • • • • • • • • • • §§

சிறிய காலத்தில் சிவயோகரின் போக்கில் ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. விடியற்காலையில் குடிசையின் முற்றத்தில் கூட்டிப்பெருக்கும் ஓசை கேட்டது. அந்த குடிசையின் தரை மாட்டு சாணத்தால் பூசி மொழுகி சுத்தமாக இருந்தது. பாம்பு குடியிருக்கும் ஒரு பாழ்மனையின் அடையாளம் எதுவும் இல்லாமல் இருந்தது. குடிசையின் வடக்கில் இருந்த அறையில், திருவடிகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. §§

சிவயோகர் தெருவில் காணப்படும் போது, அவரது வெண்மையான நரைத்த முடி நேர்த்தியாக முடிக்கப்பட்டு இருந்தது. அவரது நெற்றியில் தாராளமாக பூசப்பட்ட திருநீறு, சூரிய ஒளியில் பிரகாசமாக ஒளிர்ந்தது. தோளில் போர்த்திய சால்வை, அழகான கோலத்தில் இருந்தது. அவர் எல்லோருக்கும் பாதுகாவலன் என்பதை குறிப்பிடும் வண்ணம், அவரது கையில் ஒரு கூடை இருந்தது. §§

அவர் அந்த காலத்தில் பிரபலமாக இருந்த சண்முகநாதன் புத்தகக்கடையில் அடிக்கடி தென்பட்டார். அங்கே அறிவுப்பசியுடன் வருபவர்கள், ஞானத்தின் சொரூபமாக வீற்றிருந்த சுவாமியால் ஈர்க்கப்பட்டனர். அந்த பக்குவமடைந்த ஆன்மாக்களை பார்த்து, “அறிவியல் மற்றும் கலைகளில் ஆழமாக செல்லாமல், உங்கள் மனதை திறந்து இதய புத்தகத்தை படியுங்கள்,” என்று கூறினார். சுவாமிக்கு பிடித்தமான மற்ற இடங்களில் வண்ணார்பண்ணையில் இருந்த விவேகானந்தர் அச்சகம் மற்றும் நாவலர் அச்சகம் மற்றும் புத்தகக் கடையும் அடங்கும்.§§

சிவயோக சுவாமி சில சமயங்களில், உள்ளூர் மருத்துவர் கஸ்தூரி முத்துக்குமாரு வீட்டிற்கு சென்று வந்தார். அந்த ஆயுர்வேத மருத்துவர் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தது மட்டுமல்லாமல், அவர்கள் தொலைதூரத்தில் இருந்து வந்திருந்தால் அவர்களுக்கு பயண செலவையும் வழங்கி அனுப்பி வைத்தார். அங்கே சென்றவர்கள் ஒரு பிரபலமான மருத்துவர் வழங்கிய மருந்துகளை மட்டும் பெறாமல், இரக்கத்தின் உருவமாக இருந்த சிவயோக சுவாமியின் அருளையும் பெறும் பாக்கியசாலிகளாக இருந்தார்கள். §§

நாற்பது ஆண்டுகால ஆன்மீக மேன்மையின் ஆரம்ப காலத்தில், யோக சுவாமியின் புகழ் எவ்வாறு பரவியது என்பதைப் பற்றி திரு. வி. ராஜசேகரம் நினைவுக்கூர்கிறார்:§§

சுமார் 1925 ஆண்டில், யாழ்ப்பாணத்தில் இருந்த பலர் யோக சுவாமியின் பெயரை அதிக பக்தி மற்றும் சிரத்தையுடன் உச்சரிக்க ஆரம்பித்தனர். “அவர் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அறிந்த முனிவர்" என்று மக்கள் அவரைப்பற்றி பேச ஆரம்பித்தனர். மலைகள் எதுவும் இல்லாத அந்த தீபகற்பத்தில், அவர் அருள் மற்றும் இரக்கத்தின் மலையாக பிரகாசித்தார். இந்த வார்த்தைகளை கேட்டதும், அவரை தரிசிக்க வேண்டும் என்ற எனது ஆசை அதிக வலுவடைந்தது. §§

சுவாமியின் யோகசக்தியை பற்றி மக்கள் அறியத்தொடங்கியதும், மக்கள் அவரை ஒரு குறி சொல்பவர், சோதிடர் அல்லது கைரேகை சோதிடரைப் போல நினைத்துக்கொண்டு, “சுவாமி, நான் கொழும்பு செல்ல இருக்கிறேன். அங்குள்ள ஒரு பல்கலைகழகத்தில் எனக்கு ஒரு வேலை கிடைத்துள்ளது. எனது எதிர்காலம் எப்படி இருக்கும்? அந்த வேலை எனக்கு நல்ல பலன் தருவதாக இருக்குமா?” போன்ற கேள்விகளை கேட்டனர். தங்களிடம் இருந்து ஏதாவது அபகரிக்கப்படும் அல்லது ஏதாவது மோசமான அனுபவம் நடக்கக்கூடும் என்ற எண்ணத்தில் கேட்கப்படும் அத்தகைய கேள்விகள், வலுவான கண்டனத்துடன் நிராகரிக்கப்பட்டது. “உங்களது வாழ்நாளில் எப்போதும் உங்களுக்கு தேவையானது கிடைக்காமல் இருந்ததில்லை. நமக்கு தேவையானது அனைத்தும் நமக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. நமக்கு தேவையானது நமக்கு கிடைத்துவிட்டது என்பதை நாம் அறியாததால் அவதிப்படுகிறோம்,” என்று அவர்களது வெளிப்படையான தப்பெண்ணத்தை அவர் தொடர்ந்து குறிப்பிட்டு வந்தார். §§

வாழ்கையில் வருத்தம் தரும் அல்லது மகிழ்ச்சியை தரும் அனுபவங்களை, ஆன்மீக பாதையில் நமது நிறைவான அடுத்த கட்டமாக ஏற்றுக்கொள்வதில் இருக்கும் முக்கியத்துவத்தை சுவாமி சுட்டிக்காட்டினார். அத்தகைய வலுவான கண்டனத்தை பெற்று இருந்த, சுவாமியின் கடிந்துரைகளை தாங்கிக்கொண்ட பலர், அதன் பிறகு தனது வாழ்நாளில் வேறு எதையும் நினைத்து பயப்படவில்லை என்பதை தெரியப்படுத்தினர். அவர்களுக்கு சுவாமி தீவிரமான அதிர்ச்சியை வழங்கி இருந்தார். அந்த அதிர்ச்சியை வெறும் விதியின் மாற்றத்தினால் என்றுமே வழங்கமுடியாது. அவருக்கு நெருக்கமான அன்பர்களில் ஒருவரான, சுன்னாகத்தை சேர்ந்த Dr. ச. ராமநாதன், ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்:§§

சுவாமி நட்சத்திர இயக்கங்கள் மற்றும் ராசிகளில் இருக்கும் அறிவியலை பற்றி விளக்குவார். அவர்களது மாணவர்களில் ஒருவரான, நீதிபதி அக்பர் என்பர், இந்த அறிவியலை மிகவும் நன்றாக அறிந்து இருந்ததாக அவர் குறிப்பிடுவார். அவரிடம் சோதிடம் பற்றி யாராவது விசாரித்தால், தான் ஒரு சோதிடர் இல்லை என்று அவர் குறிப்பிடுவார். நான் சுவாமியின் கைகளில் இருந்த ரேகைகளை ஆய்வு செய்தேன்; அவை தெள்ளந்தெளிவாக இருந்தன. நான் அவரிடம் அவரது கைரேகையை ஆய்வு செய்த கேட்டுக்கொண்ட போது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து “இங்கே நடக்கும் அனைத்தும் சிவபெருமானின் திருநடனம் என்று நம்பி, நாளைய கவலை இல்லாமல், நடக்கும் அனைத்திற்கும் சாட்சியாக மட்டும் இருக்கும் ஒருவனுக்கு, எதிர்காலம் பற்றி கணிக்கும் சோதிடம் அல்லது அறிவியலின் தேவை எதற்கு?” என்று கேட்டார். §§

தத்துவத்தில் நிலைகொண்டு, பக்தியுடன் இருக்கும் நேர்மையான அன்பர்கள் தன்னை நாடி வந்த போது, அவர் அவர்களது வாழ்வில் ஒரு முக்கிய பங்கை ஏற்றுக்கொண்டார். அவர் அவர்களுடைய இருப்பிடத்திற்கு சென்று, அவர்களுக்கு தொல்லைகளையும் வழங்கினார். ஒரு முறை ஒரு அன்பரின் வீட்டிற்கு விடியற்காலையில் சென்று, வீட்டிற்குள் நுழைந்து, அவர் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் வரை அருகில் அமர்ந்து இருந்தார். அந்த அன்பர் கண்களை திறந்ததும், யோக சுவாமி அவரிடம், “நீ கனவுகளில் இங்கே சென்று இருந்தாய்? நீ எங்கே சென்றாய் என்பது எனக்கு தெரியும், ஆனால் நீ அங்கே செல்லக்கூடாது. இனிமேல் நீ என்னை மட்டும் நாடி வரவேண்டும்,” என்று கட்டளையிட ஆரம்பித்தார். அந்த அன்பர் விழித்திருக்கும் நேரத்தில் புனிதமாக இருப்பதைப் போல கனவிலும் இருக்கவேண்டும என்பதை சுவாமி குறிப்பிட்டார். அதன் பிறகு சுவாமி அந்த அன்பர் பூஜை செய்வதை கவனித்து, அந்த பூஜையில் கவனக்குறைவாக அல்லது பக்தி இல்லாமல் இருந்த செயலை நேரடியாக திருத்தம் செய்தார். இந்த பூஜையின் மூலம் தெய்வங்களை வணங்கிய பிறகே, தன்னை ஒரு குருவாக வணங்க அனுமதித்தார். §§

image§

யோக சுவாமி தனது குடிசையில் இருந்த ஒரு சிறிய பூஜை மாடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது குருவின் பாதுகைகளில் தஞ்சம் புகுந்து இருக்க, தினமும் அவரது திருவடிகளை சீடர்கள் வணங்கி வந்தனர். அவர் தியானத்தில் இருந்த போது, சிலசமயம் சிவலோகத்தில் நடனமாடும் அம்மனின் வெள்ளி சலங்கை ஒளியை தனது காதால் கேட்டார். §

• • • • • • • • • • • • • • §§

செல்லப்பசுவாமி தனக்கு செய்ததை போல, சுவாமி தனது சீடனுக்கு தனிப்பட்ட மற்றும் வாழ்க்கையை திசை திருப்பும் பாடங்களை புகட்டுவதற்காக, அவர் அந்த சீடன் மீது பல நாட்களுக்கு கவனம் செலுத்துவதை தனது வழக்கமாக கொண்டிருந்தார். “நீ உனது உடல் இல்லை. நீ உனது மனம் இல்லை. நீ உனது உணர்ச்சிகள் இல்லை. நீ தான் ஆன்மா. நீ அதுவாக மட்டும் இரு. நீ அதுவாக இருந்து ஒரு சாட்சியாக இரு!” என்று நாள் முழுவதும் அடிக்கடி, சுவாமி தனது சீடனை சாட்சியாக இருக்கும் படி நினைவுறுத்துவார். அத்தகைய ஒரு பற்றில்லாத வாழ்க்கையை சீடர்கள் வாழ்வதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு புளியம் பழத்தை போல இருக்கவேண்டும் என்று அவர் வற்புறுத்துவார். இந்த பழம் பக்குவமடைந்ததும், உலர்ந்து சுருங்கி, அது வளர்ந்த வித்தைப்பையில் இருந்து தன்னை விலக்கிக்கொள்கிறது. அது பழுத்ததும், அது விதைப்பையில் இருந்து முழுமையாக விலகி, விதைப்பை மரத்துடன் சேர்ந்து இருக்கும் இடத்தில் மட்டும் அதை தொட்டுக்கொண்டு இருக்கிறது. §§

பண்டிதர் கே. நவரத்தினத்தின் மீது யோக சுவாமிக்கு ஒரு விசேடமான அன்பு இருந்தது. ஆர்வம் மிகவும் குறைவாக இருந்த மாணவர்கள் எச்சரிக்கையாக இருந்து தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள மற்றும் விபரமறிந்த, வளமான வாழ்க்கையை வாழ, இந்த பள்ளி ஆசிரியர் தேவையான உத்வேகத்தை வழங்கினார். சுவாமி இந்த ஆசிரியரின வீட்டிற்க்கு வழக்கமாக காலையில் வந்து விடுவார். அவர்கள் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து இருந்து, பள்ளி திறப்பதற்கு முன்பாக நீண்ட தூரம் நடந்து வருவார்கள். ஒரு சில சமயம் ஆசிரியருக்கு பள்ளியில் விடுப்பு நேரம் இருந்தால், அந்த பள்ளியின் விளையாட்டு திடலில் சுவாமி அவர் வரும்வரை காத்து இருப்பார். அவர் அங்கே அமர்ந்து இருந்த போது, மக்கள் அவரை சூழ்ந்துகொண்டு பக்தி பாடல்களை பாடுவார்கள். இந்த பாடல்கள் காற்று வழியே வகுப்பறைகள் வரை செல்லும். சிலசமயம் இருவரும் சீடர்களுடன் முத்தவல்லியில் அமர்ந்து, சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீ அரவிந்தரின் புத்தகங்களை வாசிப்பார்கள். §§

நவரத்தினத்திடம் இருந்த கல்விமானின் திறமைகளை ஊக்குவிக்கும் வண்ணம், அவர் வாசிக்க சுவாமி புத்தகங்களை கொண்டு வந்து தருவார். ஒருநாள் சுவாமி அவரிடம், இந்து சமயத்திற்கு வரும் மேற்கத்திய நாட்டு அன்பர்கள் படிப்பதற்காக, அவரே இந்து சமயம் பற்றி ஒரு புத்தகத்தை எழுதவேண்டும் என்று கூறினார். அதனால் பண்டிதர் தனது வாழ்நாளில் இந்து சமயத்தின் பல அற்புத அம்சங்களை பற்றி சிறப்பான புத்தகங்களை எழுதினார், அதில் குறிப்பிடும் படியாக ஸ்டடீஸ் இன் இந்துயிசம் அமைந்து இருந்தது. சுவாமி தனது பெயரை குறிப்பிடுவதற்கு தடை விதித்தார், அதனால் அந்த புத்தகங்கள் பல மகான்கள் மற்றும் முனிவர்களை குறிப்பிட்டு இருந்தாலும், யோக சுவாமியை குறிப்பிடவில்லை. §§

பண்டிதர் யாழ்ப்பாணத்தில் இருந்த பெரும்பாலான பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு பிரபல வழிகாட்டியாக இருந்தார். அவர் இந்து சமூகத்தில் அதிக மதிப்பை பெற்றதால், அவருக்கு கலைப்புலவர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. தமிழ் இலக்கியம் மற்றும் இந்து தத்துவங்கள் தொடர்பான செய்யுள்கள் மற்றும் பாடல்களில் தேர்ச்சி பெற்றவர் என்பது அதன் பொருள். 1927 ஆம் ஆண்டு மகாசிவராத்திரி இரவன்று, அவரும் யோக சுவாமியும் ஒன்றாக அமர்ந்து மாலை 6 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தியானம் செய்தனர். §§