குருமார்களின் சரித்திரங்கள்

Page 25: URL§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/25_yo03_04.html§

குருவின் சரித்திரங்கள் §

அத்தியாயம் பதினொன்று §

“யோகநாதன் செத்துவிட்டான்”§

யோக சுவாமி தனது தீட்சையை பெற்றவுடன் தெற்கு திசையில் யாத்திரை மேற்கொள்ள ஆரம்பித்தார். தன்னை தன்னுடைய குருவுடன் மிகவும் நெருக்கமாக சேர்த்து இருந்த இணக்கத்தை, தனது குருவே பிரிக்க நினைப்பதாக அவருக்கு தோன்றி இருக்கலாம். சுவாமி விவேகானந்தர், தனது குருவான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மரணத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்து இருக்கலாம். அல்லது செல்லப்பசுவாமி சொன்ன சொல்லின் அடிப்படை அர்த்தத்தை புரிந்துக்கொண்டு இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும், அவர் அங்கிருந்து கிளம்பி நடக்க ஆரம்பித்தார். தனது துணிகளை மட்டும் சுமந்து கொண்டு, பரிவ்ராஜக என்று அழைக்கப்படும் “நாடோடி துறவிகளை" போல, அந்த தீவில் தெற்கு முனையில் இருந்த முருகன் கோயிலான கதிர்காமத்திற்கு யாத்திரை மேற்கொண்டார். அவர் அங்கே செல்வதாக யாரிடமும் சொல்லவில்லை. §§

நடைப்பயணமாக இலங்கையை சுற்றி வருதல் §

அவர் சிறிய பாதைகள் மற்றும் கிராமப்புற சாலைகள் வழியாக நடந்து, கிழக்கு கரையோரம் நோக்கி முன்னேறினார். அவர் அதன் பிறகு தெற்கு திசையில் முல்லைத்தீவு மற்றும் அதைக்கடந்து தனது விருப்பப்படி நடந்து செல்வார், மற்றும் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களுக்கு தியானம் செய்ய, சந்நிதிகள் அல்லது கோயில்களில் வழக்கமாக தங்கியிருப்பார். அவர் திருகோணமலை, சித்தண்டி, மட்டக்களப்பு, திருக்கோவில் மற்றும் பொத்துவில் வழியாக கிழக்கு பகுதியை சுற்றியிருக்கும் கரையோரத்தில் நடந்து சென்றார். அடுத்து செல்வதற்கு இடமும் இல்லாமல், செய்வதற்கு வேறு எதுவும் இல்லாமல், அவர் நகரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகள் வழியாக, ஒரு அரசர் தனது சொந்த தோட்டத்தில் உலாவுவதைப் போல, சாலைகளில் சிறிய உலா சென்றார். §§

தன்னை அனைத்துமாக மற்றும் அனைத்திலும் தன்னை காண்பதே, அவரது வழக்கமாக இருந்தது. அவர் வழியாகவும் அவரை சுற்றியும் உயிர் அழகாக பாய்ந்து சென்றது மற்றும் அவரது திட்டம் அல்லது மதிப்பீட்டின் அவசியம் இல்லாமல், எல்லாம் தனிச்சையாக வந்து சேர்ந்தன. பொழுது சாயும் போது, அவருக்காக ஒரு குடிசை அல்லது கோயில் தேவஸ்தானம் எப்போதும் காத்துக்கொண்டு இருந்தது. அவருக்கு பசிக்கும் போது யாராவது உணவு வழங்க தயாராக இருப்பார்கள், அல்லது தங்கள் வீட்டில் உணவு அருந்த வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவர் செய்வதற்கு அவரது ஆன்மீக வேலை மட்டுமே இருந்தது, மற்றும் அவர் தனது ஆன்மாவை எங்கே கண்டுகொண்டாலும், தொடர்ந்து உள்ளே சென்றுகொண்டு இருந்தார். §§

அந்த காலத்தில் பெரும்பாலான இலங்கை மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய விவசாயத்திற்கு, சுவாமி ஒரு அமைதியான சாட்சியாக இருந்தார். கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், கடினமான பிரச்சனைகளுடன் விவசாயமும் மீன் பிடிக்கும் தொழிலும் முக்கிய அடிப்படைகளாக விளங்கின. அவர் கண்ட சிவபெருமான் நிரம்பிய அழகான உலகில், எல்லோரும் தங்கள் வேலைகளை செய்துக்கொண்டு, எல்லாம் எப்போதும் முறையாக இருந்தன. மேலும் அவர் தான் பார்த்தது அனைத்தையும் தனதாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு முன்பாக இருந்த வாழ்க்கையின் இயக்கம், அவரது துறவறத்திற்கு புறம்பாக அறிவுறுத்தலுடன் இருந்தது. §§

மேலும் செல்லப்பசுவாமி எந்த உத்தரவையும் வழங்கவில்லை. தங்களது அன்றாட நட்புறவில் இருந்து, செல்பபசுவாமி எதிர்பாராத விதமாக பிரிந்த பிறகு, இது ஒரு ஆழமான ஆன்மீக யாத்திரையாக, மறுசீரமைத்துக்கொள்ளும் நேரமாக இருந்தது. தனது குருவின் உத்தரவை முன்னிட்டு, யோக சுவாமி தனது வாழ்க்கையை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. இதற்கிடையில், அவர் தனது உருவமற்ற வீடான முழுமுதற்பொருள் என்கிற பரமாத்துமாவிற்குள் தன்னை மீண்டும் மீண்டும் ஈடுபடுத்தி, இயலுணர்வு சக்திகளை வளர்த்து, தனது வாழ்நாள் பணிக்கான அடிப்படையை தயார் செய்துக்கொண்டு இருந்தார்.§§

இன்றைய சூழ்நிலையை போல, தீவில் பெரும்பாலானோர் பெளத்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர் தனது பயணத்தின் போது பெளத்த மதத்தவரை அவ்வபோது சந்தித்துக்கொண்டு இருந்தார். இந்து பெரும்பான்மையைக் கொண்ட வடக்கு பகுதியில் தனது வாழ்நாள் முழுவதையும் கழித்து இருந்ததால், இது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. பிற்காலத்தில், பெளத்த மதத்தவர்கள் அவரைக் காண வந்த போது, அவர் ஒரு பிக்குவை போல, பெளத்த சமய போதனைகளை வார்த்தை பிறழாமல் மேற்கோள் காட்டிப் பேசினார். §§

image§

கண்டியில் இருந்து 140 கிலோமீட்டர் வடக்கே, புகழ்பெற்ற 46-அடி-நீள சாய்ந்திருக்கும் புத்தர் இருக்கும் பொலன்னறுவைக்கு யோக சுவாமி பயணம் மேற்கொண்டார். இந்த சிலை புத்தர் நிர்வாணாவிற்குள் நுழையும் தருணத்தை சித்தரிப்பதாக கூறப்படுகிறது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

யோக சுவாமி தனது யாத்திரையில், இலங்கையை முழுமையாக வலம் வந்தார். அதன் வெப்பமண்டல செழுமை, அதன் பூகோள அழகு மற்றும் அதன் மனித வேற்றுமையினால் ஈர்க்கப்பட்டார். அவர் தன்னை சுற்றியிருந்த இடத்தில் மக்கள் செய்வது அனைத்தையும் கவனித்தார் மற்றும் அதன் பிறகு எப்போதும் “எனது தீவு", “எனது மக்கள்,” “எனது துறவிகள் மற்றும் சந்நியாசிகள்" என்று சொல்லிக்கொண்டு இருப்பார். §§

பிற்காலத்தில், அவரது சீடர்களில் ஒருவர் அரசாங்கத்தை தொடர்புகொள்ள வேண்டி இருந்தால், “கவலை வேண்டாம்—எனது அரசு, எனது பிரதமர், எனது நிதி அமைச்சர்,” என்று கூறி அவருக்கு உத்திரவாதம் அளிப்பார். அவர் ஒரு பாட்டில்: §§

இலங்கை நமது பூமி! ஆண் அல்லது பெண், ஒருமை அல்லது வேற்றுமை என்று எதுவும் இல்லை. சொர்க்கமும் பூமியும் ஒன்றே. இது சான்றோர்கள் பேசும் மொழியாகும்! நாம் ஒன்றாக சேர்ந்து உலகை ஆள்வதற்கு, இப்போதே மகிழ்ச்சியுடன் எழுந்து வாருங்கள்! §§

தூரத்து பிரதேசத்தில் இருந்து பணிமாற்றம் பெற்ற ஒருவர், யோக சுவாமியிடம் ஆசிகளை பெறுவதற்காக வந்தால், அவரிடம் சுவாமி அந்த பகுதியில் இருந்த கோயில்கள் மற்றும் சந்நிதிகளை பற்றி தெரிவிப்பார். அவர் தனது சொந்த கிராமத்தை அறிந்து இருந்ததை போல அந்த பிரதேசம், புராணக்கதைகள் மற்றும் உள்ளூர் மக்களைப் பற்றி அறிந்து இருந்தார். போக வேண்டிய கோயில்கள், அதற்கு போகவேண்டிய நேரங்கள் மற்றும் செய்யவேண்டிய பிரார்த்தனைகளைப் பற்றி விளக்கம் அளிப்பார். “நான் அங்கே பல நாட்களுக்கு தியானம் செய்தேன், நீங்கள் அங்கே அடிக்கடி செல்லவேண்டும்” என்று அவர் கூறுவார். அவரது யாத்திரை அவருக்கு வழங்கிய அனுபவங்களின் ஆழம் மற்றும் குறிப்பிடத்தக்க வகைகள், பல வருடங்களுக்கு பிறகு அவரை பிரபலப்படுத்தின. §§

அவர் கொக்கிளாய் வந்தடைந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்து இருந்தன. அவர் அங்கிருந்து கிளம்பும் அவசரத்தில இல்லை. இரண்டு வாரங்கள் கழித்து அவர் திருகோணமலையில் இருந்தார். அதன் பிறகு அவர் உள்நாட்டு பகுதிக்குள் நுழைந்து, மலைப் பிரதேசமான பொலன்னறுவை மற்றும் சிகிரியா சென்று, அங்கிருந்து மீண்டும் மட்டககளப்பு சென்றார். அவர் வழியில் பல மகான்கள், முனிவர்கள், ஆண்டிகள் என்று பல தெய்வீக புருஷர்களை சந்தித்தார். அவர் பெரிய காடுகளின் மத்தியில் அல்லது குன்றுகளில் இருந்த குகைகளில் வாழ்ந்த யோகிகளுடன் சேர்ந்து அமர்ந்துகொண்டார். அவர் பெளத்த சமய மடங்களுக்கு சென்றார் மற்றும் இசுலாமிய மறைமெய்ஞ்ஞானிகள் மற்றும் கிறித்துவ மதகுருமார்களை சந்தித்தார். அவர் எங்கே சென்றாலும் நல்ல வரவேற்புடன் வசதியாக இருந்தார். §§

ஒரு நாள் சாலையில் நடந்து செல்லும் போது, அவர் ஒரு இசுலாமிய தெய்வீக புருஷர் ஒருவரை சந்தித்தார். அவர்கள் மதியம் முழுவதும் ஒன்றாக நடந்து சென்றனர், மற்றும் அவர்கள் பிரியும் முன் அந்த மகான், யோக சுவாமிக்காக தெய்வத்தை புகழ்ந்து பக்தியுடன் அழகாக பாடிய பாடலை, யோக சுவாமி என்றுமே மறக்கவில்லை. அவர் அந்த பாடலை தனது வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டு இருந்தார். அவர் அந்த பாட்டை பாடும் போது, அந்த மகானைப் பற்றி தனது சீடர்களிடம் விளக்குவார். §§

அவர் கல்லோயா நதியை கடக்கும் போது, காடுகளில் குடிசைகளில் வாழ்ந்து கொண்டு, யோக சக்திகளை பெறுவதற்காக தவத்தை செய்த ஏழு ஆண்டிகளை சந்தித்தார். அவர்கள் தங்கள் மனோஉணர்வு நாட்டங்களில் இணைந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுத்தனர், மற்றும் அவரது ஆர்வத்தை தூண்டவும் பல வித்தைகளை செய்தனர், ஆனால் அவர் அதற்கு வளைந்துக்கொடுக்கவில்லை. அவர்கள் சிறிது நேரம் கழித்து தங்கள் முன்பாக ஒரு காட்டு பன்றியை கண்டனர். அதன் தாடையில் இருந்து இரத்தம் சொட்டிக்கொண்டு இருக்க, அது அவரை நோக்கி நேராக வெறியுடன் அலறிக்கொண்டு வந்தது. தன்னை தற்காத்துக்கொள்ள அவருக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை. அவர் பதட்டமும் அடையவில்லை, தன்னை மனரீதியாக தயார்படுத்திக்கொள்ளவும் இல்லை. அவர் பார்த்துக்கொண்டு இருந்தார்; அந்த விலங்கு அவரை தாக்குவதற்கு நெருங்கியதும், அவரது அமைதியை பார்த்து வந்த வேகத்திலேயே மறைந்துவிட்டது. அவர் அவர்கள் அளித்த வேடிக்கைக்கு நன்றி செலுத்திவிட்டு, நதியை கடந்து சென்றார். §§

மட்டககளப்பு மாகாணத்தில் இருந்த ஒரு இசுலாமிய கிராமம் வழியாக சென்றுகொண்டு இருக்கும் போது, தகரர் என்ற இசுலாமிய சூட்சும ஞானியை சந்தித்தார். அவர் சுவாமியின் ஆன்மீக சிந்தனைகளை இயலுணர்வுடன் புரிந்துக்கொண்டு, தெய்வீக புருஷரை கௌரவிக்க விரும்பி, அவரிடம் ஒரு விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இந்து துறவி யோசிப்பதை பார்த்து, அவருக்கு இசுலாம் என்ற வேறுபாடு இருக்கிறதா என்று கேட்டார். தனது குருவான செல்லப்பசுவாமி சாதி மற்றும் மதத்தில் இருந்து விலகி இருந்ததை யோக சுவாமி நினைவுகூர்ந்து விருந்தில் கலந்து கொண்டார். இசுலாமிய மரபிற்கு மாறாக, ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் தன்னை விருந்தில் உபசரித்ததாக, சுவாமி பின்னர் தெரிவித்து இருந்தார். அவரிடம் தகரர் ஒரு காப்பினை வழங்கி, “இதை அணிந்துகொண்டு செல்லுங்கள். எந்த துன்பங்களும் உங்களை நெருங்காது,” என்று கூறினார். “அந்த காப்பு என் கையில் இருந்த வரை இசுலாமியர்கள் எனக்கு அதிக மரியாதை செலுத்தினர். ஆனால் ஒரு நாள் இரவு நான் இருந்த மடத்தில் ‘இது எனக்கு எதற்கு?’என்று நினைத்து அதை கழட்டிவிட்டு சென்றேன், ” என்று இந்த சம்பவத்தை பற்றி பல வருடங்கள் கழித்து சுவாமி குறிப்பிட்டார். §§

அவர் திருக்கோயிலுக்கு அருகே ஒரு குகையில் தனியாக வாழ்ந்த ஒரு ஆண்டியை சந்தித்தார். அவர்கள் மழையில் இருந்து ஒதுங்கி, ஓரிடத்தில் உட்கார்ந்து பல மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தனர். சுவாமி கிளம்ப தயாராகும் போது, அந்த ஆண்டி அந்த குகையில் பதினொரு வருடகாலம் தங்கியிருந்ததற்கு அடையாளமாக விளங்கிய, மந்திர சக்தி கொண்ட ஒரு தகரக் குவளையை பரிசாக அளித்தார். அவர் தனது விருந்தாளியிடம், “அந்த குவளையை உன்னிடம் வைத்துக்கொள். உனக்கு தேவையானது அனைத்தும் உன்னை தேடி வந்து சேரும்,” என்று கூறினார். அந்த பரிசை யோக சுவாமி கண்ணியமாக வாங்கிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினார். சுவாமி கண்ணுக்கு எட்டாத தூரம் சென்று அடைந்ததும், அவர் அந்த குவளையை வீசி எறிந்துவிட்டார். §§

யோக சுவாமி தனது பயணத்தை தொடங்கி சுமார் ஆறு மாதங்கள் முடிந்த நிலையில், ஜூலை மாத மத்தியில் தெற்கு கரையோரம் வந்தடைந்து, அங்கிருந்து வெத்தா பழங்குடியினரின் இருப்பிடமான, மொனராகலை மற்றும் பிபிலை பகுதியின் அடர்த்தியான காடுகள் வழியாக, நிலப்பகுதிக்குள் 120 கிலோமீட்டர் உட்புறமாக, கதிர்காமம் நோக்கி, கரடுமுரடான கடுமையான பாதைகள் வழியாக நடக்க ஆரம்பித்தார். §§

பிற்காலத்தில் யோக சுவாமி, தான் சந்தித்த சில சோதனைகள் பற்றி வல்லிபுரம் என்கிற ஒரு யாழ்ப்பாண பள்ளி ஆசிரியரிடம் எடுத்துரைத்ததை ச. அம்பிகைபாகன் அவரது சுயசரிதையில் விளக்கியுள்ளார்:§§

மட்டக்களப்பிற்கு சமீபமாகச் செல்லும் வழியில், எனக்கு திடீரென்று காய்ச்சல் தொற்றிக்கொண்டது. வலி பொறுக்க முடியவில்லை, அதனால் கல் ஒன்றை தலைகீழாக வைத்து ஒரு மரத்தடியில் படுத்து உறங்கினேன். விடியற்காலையில் எழுந்த போது காய்ச்சல் குணமாகி இருந்தது, மற்றும் நான் பயன்படுத்திய கல்லின் மேல் 25 சதம் (சென்ட்) இருந்தது. அதை எடுத்துச் சென்று கடை ஒன்றில் தோசை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நடந்து செல்லும் போது, ஆனைக்குட்டி சுவாமி (சிற்றானைக்குட்டிச் சுவாமியாக இருக்கவேண்டும்) என்னை கண்டார். அவர் என்னை கண்டதும் ஓடிவந்து என்னை கட்டித் தழுவிக் கொண்டு, “உன்னைக் கண்டதால் மழை பெய்ய வேண்டும்,” என்றார். “இன்னும் ஒரு மணி நேரம் கழித்து பெய்யட்டும்,” என்று நான் பதில் அளித்தேன். ஒரு மணி நேரம் கழித்து மழை பெய்தது. §§

அதன் பின்னர் நடந்து செல்லும் போது, ஒரு ஆறு பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருந்தது. அதற்கு மேல் செல்ல முடியாமல் கரையில் ஓரிடத்தில் மணலை தோண்டி, ஒரு ஆழம் குறைவான பள்ளத்தை உருவாக்கி, அதில் மூன்று நாட்கள் படுத்துக்கொண்டேன். மூன்றாவது நாளன்று, சில பழங்குடியின வேடர்கள் மூங்கில் மரங்களால் கட்டுமரம் கட்டி இக்கரைக்கு வந்து சேர்ந்தனர். வந்தவர்கள், சமையல் செய்து முடித்ததும், என்னருகே வந்து, “உபாசக்கார மாத்தயா” (உபவாசம் இருக்கும் சான்றோரே) என்று கூறி, என்னை விழிக்க வைத்து உணவு அளித்தார்கள். உண்ட பின்னர், அவர்கள் வந்த கட்டு மரத்தில் ஏற்றி என்னை அக்கறை கொண்டு சேர்த்தார்கள். §§

விரைவில் அந்த பாதையில், வருடந்தோறும் ஜூலை-ஆகஸ்ட் மாத பௌர்ணமி அன்று நிறைவடையும் பதினான்கு நாள் எசலா பெரஹெரா திருவிழாவிற்காக, முருகன் சந்நிதியை நோக்கி சென்றுகொண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளம் அலைமோதியது. ஒவ்வொரு பக்தனும் தன்னுடன் உணவு, கற்பூரம் மற்றும் எளிமையான படுக்கையின் ஒரு மூட்டையை சுமந்து சென்றார்கள். வழக்கமாக ஒவ்வொரு யாத்திரியும் கொண்டு வரும், ஒரு தேங்காயை மட்டுமே யோக சுவாமி சுமந்து சென்றார். அந்த தொலைதூர சந்நிதிக்கு சென்றடைய தேவைப்பட்ட மூன்று நாட்களும், அவர் திறந்தவெளியில் உறங்கி உண்ணாமல் விரதம் இருந்தார். அங்கே அவர் இரவு நேரங்களில் பெரும்பாலும், அந்த புனிதமான மலை உச்சியில் தியானம் செய்துக்கொண்டும், முருகப்பெருமானை பிரார்த்தித்துக் கொண்டும் இருந்தார், மற்றும் காலைப்பொழுதில் அவர் காட்டில் இருந்த கோயில் மற்றும் ஆசிரமங்களை சுற்றிப் பார்த்தார். §§

அதே சமயம், யாழ்ப்பாணத்தில் இருந்த யோகநாதனின் சொந்தங்கள், வெகுநாட்களாக அவரை காணாமல் பதட்டமடைந்து, அவரை தேடுவதற்கு தீவிர முயற்சி செய்து வந்தனர். அவர் ஒரு சந்நியாசியாக இருந்ததால், சில வாரங்களுக்கு அவரை பார்க்காமல் இருக்க அவர்கள் பழகியிருந்தாலும், அவர் நீண்டநாட்கள் அவர்களை விட்டு பிரிந்து இருந்ததில்லை. யாழ்ப்பாணத்தில் குடும்ப உறவுகள் வலுவாக இருந்தன, மற்றும் தங்கள் வாழ்க்கையில் ஒருவர் எந்த பாதையை தேர்ந்தெடுத்து இருந்தாலும், மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். பல நாட்கள் பொறுத்த பிறகு இறுதியாக சின்னையா, நல்லூர் வரை தன்னுடன் துணையாக வருவதற்கு, செல்லப்பசுவாமியின் மிகவும் பழைய சீடர்களில் ஒருவரை ஏற்பாடு செய்தார். தனது மருமகன் இருக்கும் இடத்தைப் பற்றி “அந்த விசரன்" அறிந்து இருப்பார் என்று சின்னையா நினைத்தார். §§

அவர்கள் சென்றடைந்த போது, செல்லப்பசுவாமி தேரடியின் படிகளில் தனியாக உட்கார்ந்து, விசிறிகளை பின்னிக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்ததை கண்டார்கள். அவர்கள் தெருவில் நடந்து வருவதை பார்த்ததும், அவர் தனது பின்னும் வேலையை நிறுத்திக்கொண்டார். அவர்கள் அவரை தொந்தரவு செய்ததற்காக மன்னிப்பு கேட்டு, அவரது விசிறிகளின் அழகை பாராட்டி, வானிலையை பற்றி குறிப்பிட்டு, தயக்கத்துடனும் பிறகு பதட்டத்துடனும், “யோகநாதன் எங்கே? நாங்கள் அவனை பார்த்து பல மாதங்கள் ஆகிறது.” என்று விசாரித்தார்கள். செல்லப்பசுவாமி மெத்தனமாக தனது பின்னும் பணியை தொடர்ந்துக்கொண்டு: “ஓ யோகநாதன். அவன் செத்துவிட்டான்,” என்றார். அவரிடம் இதற்கு மேல் பேசுவதற்கு எதுவுமில்லை என்று புரிந்துகொண்ட குடும்பம், ஏமாற்றத்துடன் திரும்பியது. மரண செய்தியால் நிலை குலைந்து இருந்த அவர்கள், அதை பல நாட்களுக்கு நம்பாமல் இருந்தார்கள். குறிப்பாக அத்தை முத்துபிள்ளை அதிக வேதனையில் இருந்தார். அவர்கள் சுவாமி திரும்பி வருவார் என்று பல மாதங்கள் காத்து இருந்து, இறுதியில் தனது மருமகன் இறந்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்தனர். அவர்கள் உடல் இல்லாமல் செய்யக்கூடிய ஈமச்சடங்கை செய்து முடித்து, சுவாமியின் உடைமைகளை அழித்தனர். §§

image§

செல்லப்பசுவாமி யோகநாதனின் குடும்பத்தாரிடம் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்ததும், அவரது அத்தகைய முத்துப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தாள். அவர்கள் அவருக்கு ஈமச்சடங்கை நடத்திய பின்னர், அவர் உயிரோடு இருப்பதை தெரிந்துகொண்டார்கள். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

இதற்கிடையில் யோக சுவாமி இலங்கை தீவு முழுவதையும் முதல்முறையாக சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் இதை மிகவும் சிறப்பான யாத்திரையாக தனது வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டு இருந்தார். அவர் கேள்விப்பட்டதைப் போலவே கதிர்காமம் இருந்தது. திருவிழாக் காலங்களில், அந்த இடத்தில் நிலவிய உற்சாகமளிக்கும் சக்தியும் ஆற்றலும் மனதை மயக்குவதாக இருந்தன. இந்த கோயில் மிகவும் அடர்த்தியான வனாந்தரத்தில் அமைந்து இருந்தாலும், அது இதன் அழகிற்கு மெருகேற்றுவதாக இருந்தது. ஏழு புனிதமான மலைகளால் சூழப்பட்ட இந்த பள்ளத்தாக்கின் மீது ஒரு உன்னதமான, கம்பீரமான சூழல் நிலைத்து இருந்தது. கதிர்காமம் என்கிற பெயரை இந்துக்கள், பெளத்த சமயத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் ஒரே மாதிரியான மரியாதையுடன் உச்சரிக்கிறார்கள். §§

வருடம் முழுவதும் காலியாகவும் அமைதியாகவும் இருக்கும் கதிர்காமம், திருவிழாக் காலங்களில் மிகவும் தீவிரமான நடவடிக்கையாக திடீரென்று சுறுசுறுப்படைந்து, தொடங்கிய வேகத்தில் நிறைவடைகிறது. தெய்வத்தின் சக்தி மற்றும் கருணையின் சிந்தனைகள் நிரம்பி இருக்கும் பக்தர்கள், தொடர்ந்து விசேட தவங்களை செய்து, ஆசிகளை பெற்று, உறுதிமொழிகளை மேற்கொண்டு, விரதங்களை செய்து ஆன்மீக உயரத்தை எட்டுவது போல, வேறு எங்கும் நடைபெறுவதாக தோன்றவில்லை. §§

காட்டில் இருக்கும் இந்த கோயிலில் சுவாமி சில நாட்கள் தங்கியதாக சிலரும், சில மாதங்கள் தங்கியதாக வேறு சிலரும் குறிப்பிடுகிறார்கள். இந்த முருகன் கோயிலில், அவர் தியானம் செய்து “சும்மா இருப்பதில்” பயிற்சி மேற்கொண்டார். அவர் பிற்காலத்தில், இந்த சிறிய துதிப்பாடலை பாடினார்:§§

வேலைத் தூக்கிவிளை யாடுந் தெய்வமே - யென்§

வினைப்பகைதீர் தெய்வமே! §

காலைத்தூக்கி யாடும் கண்ணுதல் தந்த §

கதிர்காமத் தையனே கழலடி நம்பிவந்தேன்.§

எங்கெங்குந் திருமுகம் எங்கெங்குந் திருவிழி §

எங்கெங்குந் திருச்செவி எங்கெங்குந் திருக்கரம் §

எங்கெங்குந் திருவடி எங்கேநீ அங்கே நான் §

ஈசனே கதிர்காம வாசனே முருகேசா. §§

கதிர்காமத்தில் இருந்து யோக சுவாமி கடற்கரையை பின்தொடர்ந்து மாகமா, அம்பாந்தோட்டை, மதாரா, தேவேந்திரமுனை, காலி மற்றும் களுத்துறை வழியாக மேற்கில் கொழும்பு நோக்கி சென்றார். அவர் நூற்றுக்கண்கான கிராமங்கள் வழியாக நடந்து சென்று, மக்களிடம் பேசிக்கொண்டு, தன்னை சுற்றி இயங்கும் வாழ்க்கையை கண்காணித்துக்கொண்டு மிகவும் நிதானமாக பயணம் மேற்கொண்டார். இலங்கையின் தெற்குப்பகுதி சிங்களர்களின் பிரதேசமாகவும், குறைவான இந்து கோயில்கள் இருந்ததாலும், அவர் இந்த இடத்தில் குறைவாகவே தங்கினார். §§

image§

சுவாமி விவேகானந்தர் தனக்கு பிடித்தமான இந்தியாவை ஆய்வு செய்ததை போல, யோக சுவாமி 1910 ஆம் ஆண்டு இலங்கை தீவை சுற்றி வந்தார். அப்போது அவர் மக்களிடம் இருந்த உற்சாகம், புண்ணிய தலங்கள் மற்றும் இலங்கையின் கிராமங்கள் மற்றும் வயல்களின் தினசரி வாழ்க்கை ஓட்டங்களை பார்த்து ரசிக்கச் செய்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

image§

அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தில், ஏதாவது ஒரு தமிழரின் வீட்டில் தவறாமல் தங்குவார். அவர் எதிர்திசையில் பயணம் மேற்கொண்ட ஆறு வாரங்களும், யாசகத்தால் உயிர் வாழ்ந்து, வனங்கள் வழியாக சென்று காட்டு விலங்குகளை எதிர்கொண்டு பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாலும், நதிகள் சேறாக இருந்ததாலும், அவருக்கு சரியான குடிநீர் கிடைக்காமல் மலேரியா நோய் தொற்றிக்கொண்டது. உடல் வழங்கிய புகார்களை பொருட்படுத்தாமல், தினசரி கடமைகளை செய்ய அதை கட்டாயப்படுத்தி, இருபது அல்லது முப்பது கிலோமீட்டர் நடந்து செல்ல, தினமும் காலையில் சிரமப்பட்டு எழுந்திருக்க வேண்டியிருந்தது. §§

இறுதியாக, முருகப்பெருமானின் அருளால், அவர் இலங்கையின் பரபரப்பான துறைமுக தலைநகரமான கொழும்பு மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் சாலையில் சென்றுகொண்டு இருக்கும் போது, இலங்கையின் மிகவும் பிரபலமான சித்தர்களில் ஒருவரான, பருமனான உடலைக்கொண்ட, ஆனைக்குட்டி சுவாமியின் ஆசிகளை பெற்றார். அந்த சித்தர் சோர்வாக இருந்த வழிப்போக்கனுக்கு ஐந்து சத நாணயத்தை வழங்கி, “தும்பிக்கை இது நம்பிக்கை!” என்று ஆசிர்வதித்தார். §§

அவர் கொச்சைக்கடையில் சில நாட்கள் தங்கி இருந்த போது, தினசரி உணவிற்காக யாசகம் செய்தார் மற்றும் இரவு நேரங்களில் நிலக்கரியை கையாளும் இரயில் ஊழியர்களுடன் தங்கி இருந்தார். அவர் ஒரு பிச்சைக்காரனாக, மிகவும் பிரபலமான சர் பொன்னம்பலம் அருணாசலத்திடம் சென்ற போது, அவர் இவருக்கு பத்து சதங்களை வழங்கினார். §§

அவர் இலங்கை தீவின் மிகப்பெரிய நகரமான கொழும்பின் சுற்றுப்புறத்தில், ஒரு மாதம் இருந்த பிறகு, கோட்டை மற்றும் ரத்னபுராவிற்கு இடையே உள்நாட்டில் பல வாரங்கள் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்து செங்குத்தான சாலைகள் வழியாக மலைப்பிரதேசமான கண்டி மற்றும் தெற்கே மலைநாடாகவும் தேயிலை தோட்டங்களின் மையமாகவும் விளங்கும் நுவரெலியாவிற்கு சென்றார். அவர் கிராமப்புற பாதைகள் மற்றும் சாலைகள் வழியாக நடந்து குருணாகல் மற்றும் மீண்டும் கடற்கரை ஓரமாக புத்தளம் வரை சென்றார். அவர் அனுராதபுரத்தில் பல வாரங்கள் தங்கி, தனது யாத்திரையில் இருந்த தொடர்புகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மாத்தளை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார். §§

சுவாமி மாத்தளை வந்து சேர்வதற்கு முந்தைய இரவு, அந்த ஊரின் பொதுப்பணித்துறையில் மேற்பார்வையாளராக இருந்த திரு. சரவணமுத்துவின் புனிதமான கனவில், முருகப்பெருமான் தோன்றி, “அடியான் ஒருவன் கதிர்காமத்தில் இருந்து கால்நடையாக பசியோடும், கந்தைத் துணியோடும் வருகிறான். அவனுக்கு தேவையானவற்றை வழங்கு. அவனை நன்றாக உபசரி. நானும் அவரும் ஒன்று. அவன் யாழ்ப்பாணத்திற்கு திரும்புவது, மக்களுக்கு ஒரு பெரிய வரமாக இருக்கும்,” என்றார். §§

அடுத்த நாள் காலையில், சரவணமுத்து தனது கனவில் வழங்கப்பட்ட விளக்கத்திற்கு பொருத்தமாக ஒரு ஆண்டியை சந்தித்தார். அவரை யாரென்று விசாரித்த பிறகு, தனது வீட்டிற்கு பெருமகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவர் சுவாமியை தனது கரங்களால் உள்ளே அழைத்து செல்லும் போது, தான் கண்ட காட்சியை பற்றி உற்சாகமாக பேசினார். யோக சுவாமி முகத்தில் புன்னகையுடன், அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே உபசரிப்பை ஏற்றுக்கொண்டார். சரவணமுத்து ஒரு புதிய வேட்டி மற்றும் சால்வையை வழங்கி நீராடி வருமாறு கூறினார். ஒரு சிறப்பான விருந்திற்கு பிறகு, சுவாமி தங்குவதற்கு காண்பிக்கப்பட்ட விருந்தினர் இல்லத்தில், அவர் இரண்டு நாட்கள் ஓய்வெடுத்து தனக்கு புத்துணர்ச்சி வழங்கிக்கொண்டார். §§

சுவாமியின் தரிசனத்தால் ஈர்க்கப்பட்டு, தனது வாழ்நாள் முழுவதும் அதீத பக்தியுடன் அவருக்கு சேவை செய்த, சரவணமுத்துவின் மருமகன், இதையெல்லாம் ஒரு சிறுவனாக, அந்த முக்கியமான நாளன்று, தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பின்னால் இருந்துக்கொண்டு, சுவாமியை கூர்ந்து கவனித்துக்கொண்டு இருந்தான். நாற்பது வருடங்கள் கழித்து, சுவாமி அந்த சிறுவனை, யாழ்ப்பாணம் மற்றும் செங்கலடியில் இருந்த தனது சிவதொண்டன் நிலையங்களுக்கு கட்டிடக்கலைஞராக நியமித்தார். அவனது பெயர் அ. தில்லையம்பலம். §§

மூன்றாம் நாளன்று அதிகாலையில், யாழ்ப்பாணம் நோக்கி மீதம் இருந்த தூரத்தை இரயிலில் கடக்க சுவாமி முடிவு செய்தார். சரவணமுத்து தனக்கு வழங்க விரும்பிய ஒரு அடர்த்தியான ரூபாய் கட்டை வாங்க மறுத்து, யோக சுவாமி தனது இரயில் பயணச்சீட்டுக்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டார். “சரவணமுத்து கவலை வேண்டாம். முருகப்பெருமான் என்னை நன்றாக கவனித்து வருகிறார்,” என்று யோக சுவாமி பின்னர் தெரிவித்தார். சுவாமி நன்றி தெரிவிக்கும் விதமாக, பின்வரும் பாடலை பாடினார்:§§

அப்பனும் அம்மையும் நீயே! அரிய சகோதரரும் நீயே!§

ஒப்பில் மனைவியும் நீயே! ஓதரும் மைந்தரும் நீயே! §

செப்பில் அரசரும் நீயே! தேவாதி தேவரும் நீயே! §

இப்புவியெல்லாம் நீயே! என்னை ஆண்டதும் நீயே!§§

தந்தையும் தாயும் நீ. அன்புள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகளும் நீ. ஒப்பிடமுடியாத மனைவி நீ. மதிப்புமிக்க மகன்கள் நீ. வல்லமைமிக்க அரசரும் நீ. தேவாதி தேவரும் நீ. இந்த மாபெரும் பூமியும் நீ; மற்றும் என்னை பாதுகாத்து நிர்வகிப்பவனும் நீ. §§

இலுப்பை மரத்திற்கு அடியில்§

அவர் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட இரயில் பயணம் இரண்டு நாட்கள் நீடித்தது. அந்த பயணம் மீண்டும் அனுராதபுரம் வழியாக சென்று, பின்பு வடக்கே யாழ்ப்பாணம் இரயில் நிலையம் செல்ல 190 கிலோமீட்டர் இருந்தது. யோக சுவாமி சுமார் ஒரு வருடம் முன்பாக தோலில் ஆடைகளை மட்டும் சுமந்துகொண்டு கிளம்பியதை போலவே திரும்பியும் வந்தார். அவர் நேராக நல்லூர் கோயிலுக்கு சென்று, செல்லப்பசுவாமியின் காலடியில் விழுந்து வணங்கினார். தனது பயணங்களை நிறைவு செய்திருந்த யோக சுவாமி மனதில் திருப்தி மற்றும் உற்சாகத்துடன் இருந்தார் மற்றும் குருவிற்காக அவரது இதயத்தில் இருந்து அன்பு பெருக்கெடுத்து ஓடியது. §§

அந்த தருணத்தில் செல்லப்பசுவாமி தனது சீடனிடம், “நீ போய் இலுப்பை வேரைப் பிடி,” என்ற ஒரு புதிய சாதனாவை வழங்கினார். யோக சுவாமி தனது குருவை விட்டு விலகி செல்ல விருப்பில்லாமல் அதே இடத்தில் சுற்றிக்கொண்டு இருந்தார். அவர் செல்லப்பசுவாமிக்கு அருகில் இருந்த மட்கலத்தைப் பார்த்து, “இதை ஒரு புனிதமான கலைப்பொருளாக வைத்திருப்பது, நமக்கு கிடைத்த வரமாக இருக்கும்,” என்று நினைத்தார். திடீரென்று செல்லப்பசுவாமி இடியை போல உறுமிக்கொண்டு, “இதன் மீது உனக்கு பந்தமோ டா” என்று பரிகாசத்துடன் கேட்டார். அவர் அந்த மட்கலத்தை தரையில் வீசி சிதறடித்தார். அது செல்லப்பசுவாமி தனது சீடனுக்கு, குரு-சீடன் இருமைவாதத்தின் முடிவான துண்டிப்பை தெரியப்படுத்தும் சைகையாக இருந்தது. §§

யோக சுவாமி தனது குருவின் உத்தரவுப் படி, கொழும்புத்துறை திரும்பி, சாலை சந்திப்பில் இருந்து மூன்று அடி தூரத்தில், மருத்துவ குணங்கள் மற்றும் எரிபொருள் எண்ணெய்க்கு புகழ்பெற்ற வன்மர வகையை சார்ந்து, நன்றாக வளர்ந்த ஒரு இலுப்பை மரத்திற்கு அடியில் அமர்ந்துகொண்டார். அந்த மரம் பிற்காலத்தில் வழங்கிய நிழல் மற்றும் வானிலை பாதுகாப்பு, அவரது வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகித்தன. கொட்டும் மழை அல்லது சுட்டெரிக்கும் வெயிலிலும் அவர் அசராது, வெளியுலகை மறந்து, தனது உட்புற சக்தியில் மூழ்கி இருந்தார். ஒரு பிள்ளையார் கோயில் இதற்கு நேர் எதிரே சாலையின் மறுபுறத்தில் அமைந்து இருந்தது. அப்போதில் இருந்து, 1911 முதல் 1915 வரை, தன்னுடன் யோக சுவாமி இருப்பதை யோக சுவாமி அனுமதிக்கவில்லை. §§

யோக சுவாமி ஒரு முறை, செல்லப்பசுவாமியின் குடிசைக்கு சென்றார். திடீரென்று முனிவர் கூச்சலுடன் வெளிவந்து, அங்கிருந்து கிளம்புமாறு தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். தனது குரு கையில் கிடைத்ததை எடுத்து வீசப்போகிறார் என்பதை உணர்ந்த யோக சுவாமி, வந்த வழியில் விரைந்து ஓட ஆரம்பித்தார். முனிவர் அவரைப் பார்த்து “ உனது சொந்த கால்களில் நில்!” என்று கூறினார். §§

செல்லப்பசுவாமி எப்போதாவது அந்த இலுப்பை மரத்திற்கு வந்து, தனது சீடனை பார்த்து சென்றுவிடுவார். யோக சுவாமி தனது குரு வருவதை பார்த்ததும், எழுந்து நின்று வணங்குவார். செல்லப்பசுவாமி முறைத்து பார்த்து, “நீ இருமையை பார்க்கிறாயா? ஒருமையை பார்க்க முயற்சி செய்,” என்று அதட்டுவார். இந்த வார்த்தைகளால் அடக்கப்பட்ட சுவாமி, அதே இடத்தில் நிலையாக நின்று இருப்பார். §§

இந்த செய்தி யாழ்ப்பாணத்தில் காட்டுத்தீ போல பரவியது. சுவாமி மீண்டும் தோற்றமளித்த தகவல், அவரது மாமன் சின்னையா மற்றும் அத்தை முத்துப்பிள்ளைக்கு, டஜன் கணக்கான மக்களிடம் இருந்து, அவர் நல்லூர் கோயிலில் இருந்து கிளம்பும் முன்னர் வந்து சேர்ந்தது. அவர்களுக்கு ஒரே சமயத்தில், ஆச்சரியமும் குழப்பமும் ஏற்பட்டது. அவர்கள் அந்த காட்சியை காண, இலுப்பை மரத்திற்கு விரைந்து சென்றார்கள். அங்கே அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அவரிடம் அதிக மாற்றம் ஏற்பட்டு இருந்ததால், அவர்களால் அவரை முதலில் அடையாளம் காணமுடியவில்லை. அவர்கள் அவரை “யோகநாதன்!” என்று அழைத்தார்கள். அவர் பதிலும் அளிக்கவில்லை, கண்களையும் திறக்கவில்லை. ஆனால் அது அவர் தான் என்பதில் எந்த சத்கேகமும் இல்லை. அவர் நலமாக உயிருடன் இருந்தார். §§

அவர்கள் இந்த தகவலை நள்ளிரவில், தங்கள் நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டுக்காரர்களிடம் பேசி, பொழுது விடிந்ததும் சின்னையா, முத்துப்பிள்ளை மற்றும் அவளது மகன் வைத்தியலிங்கம், அந்த மரத்திற்கு மீண்டும் சென்று யோகநாதனிடம் பேசவேண்டும் என்று முடிவு செய்தனர். அவர்கள் அதிகாலையில் வந்த போது, அவர் சமாதியில் ஆழ்ந்து இருந்தார். அவர்கள் அவருக்கு முன்பாக ஒரு தட்டில் பழங்களை வைத்து விட்டு, செல்லப்பசுவாமியை மீண்டும் சந்திக்க மாட்டு வண்டி மூலம் நல்லூர் புறப்பட்டனர். §§

தங்கள் மருமகன் இறந்துவிட்டான் என்று செல்லப்பசுவாமி கூறியது தவறானது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்தது என்று சின்னையா ஆத்திரத்துடன் பேசி முடித்தார். அவர் இந்த முறை முனிவரிடம் தைரியமாக பேசினார். அவர்கள் யோகநாதனுக்கு ஈமச்சடங்கு மற்றும் துக்கம் அனுசரித்த பிறகு, தங்கள் மருமகன் இறக்கவில்லை என்ற உண்மை தங்களுக்கு தெரிய வந்தது என்று அவர் புகார் கூறினார். “எவ்வாறு உங்களால் அந்த பொய்யை சொல்ல முடிந்தது?” என்று அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். செல்லப்பசுவாமி அவர்களது கோபத்தால் பாதிக்கப்படாமல் உறுதியாக இருந்து, “நாங்கள் பொய் சொல்வது இல்லை. யோகநாதன் செத்துவிட்டான்,” என்று அடக்கத்துடன் பதில் அளித்தார். §§

அமைதியான உறுதியுடன் வழங்கப்பட்ட அந்த மர்மமான பதில், அவர்களை பிரமிக்க வைத்தது. மேலும் அவரிடம் பேசுவது பயனற்றது என்பதை புரிந்துக்கொண்டு, அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பினார்கள். அவர்கள் முனிவர் சொன்ன வார்த்தைகளை நீண்ட நேரம் யோசித்த பிறகு, அவர் உடல் ரீதியான மாற்றத்தை அல்லாமல் ஆன்மீக மாற்றத்தை குறிப்பிடுகிறார் என்பதை மெதுவாக புரிந்துகொண்டார்கள். செல்லப்பசுவாமியின் உட்பார்வை தங்களுக்குள் விரிவாக்கம் பெறத்தொடங்கியதும், தங்கள் மருமகன் மாற்றம் அடைந்துள்ளான் என்ற உண்மையை பல வாரங்கள் மற்றும் மாதங்கள் கழித்து, தங்களுக்குள் உணர்ந்து கொண்டார்கள். செல்லப்பசுவாமி தனது மர்மமான தந்திரத்தின் மூலம், யோகநாதன் மீது அவர்களுக்கு இருந்த பற்றுக்கள் அனைத்தையும், தனது மந்திர சக்தியால் துண்டித்தார். அவர் குடும்ப வாழ்க்கையை துறந்து இருந்தார், மற்றும் அவர்கள் அவரை துறக்க நிர்பந்திக்கப்பட்டார்கள். §§

image§

கொழும்புத்துறையில் இருந்த ஒரு இலுப்பை மரத்தடியில் மூன்று நாட்களுக்கு தியானம் செய்யும் கடினமான சாதனாவை, யோக சுவாமி பல வருடங்களுக்கு தொடர்ந்து செய்து வந்தார். நான்காவது நாள் சற்று ஓய்வெடுத்து மற்றும் சுற்றித்திரிந்த பிறகு மீண்டும் இன்னொரு சுற்றுக்கு தயராவார். 1921 ஆம் ஆண்டில் அவரது சீடர்கள் அருகில் இருந்த ஒரு கூரை வெய்த குடிசையில் தங்குவதற்கு, அவரை சம்மதிக்க வைத்தனர். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஒரு சாதாரண குடிசையை இருப்பிடமாக ஏற்றுக்கொள்ளுதல் §

யோக சுவாமி சில வருடங்களுக்கு அந்த இலுப்பை மரத்தை, சாதனா செய்ய தனக்கு பிடித்தமான இடமாக, கூரையில்லாத ஒரு சாலையோர ஆசிரமமாக பயன்படுத்தினார். அவர் தன்னை நெருங்க முயல்பவர்களை, ஒரு கைத்தடியை எடுத்து துரத்திவிடுவார். அதனால் அருகில் வர முயன்ற சிலரும், அதிக அச்சத்துடன் நெருங்கினார்கள். அவர் தனது ஆன்மீக பயிற்சியில் ஈடுபடாத போது, யாழ்ப்பாணம் சுற்றியுள்ள பகுதியில் சுற்றித்திரிந்து தனக்கு பிடித்தமான இடங்களுக்கு செல்வார். இது தொடர்பாக ச. அம்பிகைபாகன் வழங்கும் குறிப்பு: §§

சுவாமிகள் பாத யாத்திரையாக கதிர்காமம் சென்று திரும்பிய பின்பு, நீண்ட நாட்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து தொலை தூரம் செல்லவில்லை. “யாழ்ப்பாணம் விரிகுடாவை விட்டு வெளியே செல்ல எனக்கு அனுமதியில்லை,” என்று சுவாமிகள் சொல்லிக்கொண்டு இருப்பார். நமக்கு கிடைத்த தகவல்களின் படி, சுவாமிகள் 1928 வருடத்திற்கு பிறகே, கண்டி மற்றும் கொழும்பு வரை சென்று வந்தார். அவர் அந்த பயணத்தை, அங்கிருந்த சீடர்களின் நலனுக்காக மேற்கொண்டார். சுவாமிகள் தனக்கு பொருத்தமானவராக கருதிய, வழக்கறிஞர் ம. ச. இளையதம்பி அவருடன் செல்வார். §§

செல்லப்பசுவாமி மகாசமாதி அடைந்து ஒரு வருடம் கழித்து, இலுப்பை மரத்திற்கு அருகில் இருந்த ஒரு வீட்டு தோட்டத்தின் குடிசைக்கு இடம் பெயர்ந்தார். அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு அவரது எளிமையான ஆசிரமமாக இருந்த இந்த குடிசை, கடையிற்சுவாமி முதன்முதலில் இலங்கை வந்த போது, மண்டைத்தீவில் அவரை வரவேற்ற நன்னியருடன் தொடர்புடையதாக இருந்தது. நன்னியர் கடையிற்சுவாமியை இந்த குடிசைக்கு அழைத்து வந்து, அவரது தீவிர பக்தனாகி, குருவிற்கு ஒரு சிறிய கோயிலை பராமரித்து வந்தார். §§

செல்லப்பசுவாமியின் காலத்தில், தசைகள் பொருந்திய பருமனான உடலுடன், மந்தமாக இருந்த நன்னியர், அந்த குடிசையை ஒரு டீக்கடையாக பயன்படுத்தினார். அது அரியாலையில் இருந்த அவரது இன்னொரு வீட்டிற்கு அருகாமையில் இருந்தது. அவர் செல்லப்பசுவாமி மீது பக்தியுடன் இருந்தார், ஆனால் அந்த கடைக்காரர் அவரிடம் ஆசிகளை பெற வரும்போதெல்லாம், சாது எல்லோரையும் புறக்கணிப்பதைப் போல அவரையும் புறக்கணித்தார். நன்னியர் தான் வேண்டியதைப் பெறுவதில் உறுதியாக நிலைத்து இருந்தார். §§

ஒரு நாள் செல்லப்பசுவாமி தனது கடை வழியாக சென்றுகொண்டு இருந்த போது, போதையில் இருந்த நன்னியர், தனது கடைக்கு வெளியே விரைந்து வந்து, குருவை பிடித்து, கால்களால் உதைத்துக்கொண்டும் அலறிக்கொண்டும், கடைக்கு பின்னால் இருந்த வளாகத்திற்கு இழுத்து சென்று, ஒரு கம்பத்தில் கட்டி, தனக்கு அவர் ஆசியை வழங்கும் வரை, அவரை விடுவிக்க போவதில்லை என்று கத்தியை காண்பித்து மிரட்டினார். ஆனால் செல்லப்பசுவாமி திகிலடையும் வகையில், நன்னியர் அவருக்கு நீராட்டி, அவரது தலைக்கு சவரம் செய்து, வெறித்தனமான உற்சாகத்துடன் தனது குருவிற்கு பூஜை செய்து, குருவின் அருளை வேண்டி தனது கைதிக்கு கற்பூரம் காண்பித்தார். §§

இவற்றையெல்லாம் பொருத்தக்கொள்ள முடியாத செல்லப்பசுவாமி, அலறிக்கொண்டு திட்டிக்கொண்டு நன்னியரை தீவிரமாக எதிர்த்து, உதவியை நாடி கூச்சலிட்டார். நன்னியர் கடை வைத்திருந்த வளாகத்தில் அந்த நில உரிமையாளர் குடும்பமும் வசித்தது. தங்கள் வளாகத்தில் கூச்சலை கேட்டு நில உரிமையாளரின் மனைவி, திருமதி. தங்கம்மா தனது வீட்டிற்கு வெளியே விரைந்து வந்த போது, அவள் கண்ட காட்சி விநோதமாகவும் கேலிக்குரியதாகவும் இருந்தது. நடப்பதை பார்வையிட மக்கள் கூட்டம் சேர்ந்துகொண்டு இருக்கும் போது, யோக சுவாமி தனது குருவின் கட்டை அவிழ்த்துவிட்டார். செல்லப்பசுவாமி கோபத்துடன் திட்டிக்கொண்டே, அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இதனால் திருப்தி அடைந்த நன்னியர், செல்லப்பசுவாமியை மீண்டும் சீண்டவில்லை. செல்லப்பசுவாமி இதன் மூலம், நண்ணியாரின் வடிவில் தனக்கு நிகரான ஒருவரை எதிர்கொண்டு இருந்தார். தன்னை யாரும் வழிபடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த குரு, அன்று மட்டும் தோற்றுப்போனார். §§

1914 ஆம் ஆண்டில் அந்த டீக்கடை காலியாக இருந்தது. அதற்கு அருகில் இருந்த இலுப்பை மரத்தில், யோக சுவாமி தினமும் அமர்ந்து இருப்பதை, தங்கம்மாவும் அவளது குடும்பத்தாரும் கவனித்தனர். அந்த குடிசை மண்ணால் எழுப்பப்பட்ட சுவர்கள், மாட்டு சாணத்தால் மொழுகிய தரை மற்றும் ஓலை கூரையுடன் மிகவும் எளிமையாக இருந்தது. வெயில் கொளுத்தினாலும் அல்லது மழை பெய்தாலும், சுவாமி அங்கே தினமும் காணப்பட்டார். அவரை தங்கள் குடிசையில் தங்க சொல்லலாம் என்று அந்த குடும்பத்தினருக்கு தோன்றியது. அந்த வல்லமைமிக்க சாதுவை சந்தித்துப் பேச ஒரு நேர நல்ல நேரத்தை தேடிக்கொண்டு இருந்தனர். தங்களது யோசனையை அவரிடம் தெரிவிக்க சரியான தருணத்தை தெரிந்துக்கொள்ள, அவர்கள் நுணுக்கமான அறிகுறிகள் மற்றும் அவரது முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை, பல நாட்களாக ஆய்வு செய்து, அதில் இறுதியில் வெற்றியும் பெற்றனர். §§

யோக சுவாமியை சந்திக்க தங்கம்மா, அவளது கணவன் திருஞானசம்பந்தர், தங்கம்மாவின் மாமன் வல்லிபுரம் மற்றும் அவரது மனைவி நாகவல்லி ஒன்றாக சேர்ந்து சென்றனர். “சுவாமிகள், நீங்கள் இன்னும் எத்தனை காலம் இந்த சந்திப்பில் அமர்ந்து இருப்பீர்கள்?” என்று தங்கம்மா கேட்டாள். அவள் அந்த குடிசையை காண்பித்துக்கொண்டு, “அந்த குடிசை காலியாக இருக்கிறது. இங்கே உங்களுக்கு தேவைப்படும் வரை அமைதியாக இருந்து கொள்ளலாம்,” என்று தைரியமாக பரிந்துரைத்தாள். அவள் அவரிடம் ஒரு புனிதமான மற்றும் வஞ்சகமற்ற இதயத்துடன் கேட்டுக்கொண்டு, இதே இடத்தில் நன்னியர் செல்லப்பசுவாமியை பிடித்து வைத்து வழிபட்டதைப் பற்றி யோக சுவாமியிடம் விவரித்து, அவர் இங்கே தங்கினால் தங்கள் குடும்பத்திற்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், அவர் இதை தனது ஆசிரமமாக பயன்படுத்தலாம் என்றும், அவருக்கு தேவையானது வழங்கப்படும் என்றும் பரிந்துரைத்தாள். மேலும் தனது குடும்பத்தினர் அவரது தேவைகளை கவனித்து கொள்வார்கள் என்றும், அவருக்கு தனிமை தேவைப்படும் போது அவர்கள் விலகிக்கொள்வார்கள் என்றும் கூறினாள். நன்னியர் செல்லப்பசுவாமிக்கு செய்ததையே, அந்த குடும்பம் அவருக்கு செய்ய விரும்பியதால், அவர்கள் நன்னியரைப் பற்றி மிகவும் கவனமாக குறிப்பிட்டார்கள். §§

யோக சுவாமி இந்த பரிந்துரையை தொடக்கத்தில் மறுத்தார், ஆனால் கொழும்புத்துறையில் இருக்கும் போது, அந்த குடிசையை பயன்படுத்தலாம் என்பதால் இறுதியில் சம்மதித்தார். அன்றிலிருந்து, தங்கம்மா, அவள் மகன் திருநாவுக்கரசு, திருமதி. திருநாவுக்கரசு மற்றும் அவர்கள் குழந்தைகள், யோக சுவாமி மற்றும் அவரது ஆசிரமம் வந்த அன்பர்களுக்கு சுயநலமற்ற சேவையை செய்தனர். அவர் மகாசமாதி அடையும் வரை, இந்த எளிமையான ஆசிரமம் அவரது இருப்பிடமாக மாறியது. §§

“நான் கிளம்புகிறேன். நான் மீண்டும் இங்கே திரும்பி வரப்போவது இல்லை,” என்று சுவாமி பலமுறை அறிவித்து இருந்தார். ஆனால் மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்து, அவர் திரும்பி வந்துவிடுவார். “நான் இங்கிருந்து வெளியேறுவதை செல்லப்பசுவாமி அனுமதிக்கவில்லை. அவர் என்னை திருப்பி அனுப்பிவிட்டார்,” என்று அவர் ஒருமுறை குறிப்பிட்டார். “குருவின் மீது நன்னியரின் பக்தி, நம்மை இங்கே சிறைப்பிடித்து வைத்திருக்கிறது,” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவர் பெரும்பாலும் அதை “செல்லப்பசுவாமியின் குடிசை" என்று குறிப்பிட்டார். §§

“இன்று இரவு இங்கு பெரும் புனிதம் நடக்கும்”§

1915 ஆம் ஆண்டு, தனது 75 ஆம் வயதில், செல்லப்பசுவாமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு சளி மற்றும் மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்ட போது, அவரது சொந்தங்கள் அவருக்கு மூலிகை மருந்துகளால் குளியல் வழங்கினார்கள். அவர் சுமார் இரண்டு வாரங்களுக்கு நோய்வாய்ப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில், யோக சுவாமி அவரை காண செல்லவில்லை. இது செல்லப்பசுவாமியை கவனித்த சீடர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்களை பொருத்தவரை, செல்லப்பசுவாமியை சுற்றி இருந்த மக்கள் கூட்டத்திற்கு வெளியே சுவாமி விலக்கி வைக்கப்பட்டு இருந்தார். அவர் மறைந்து இருக்க வேண்டும் என்பது அவரது குருவின் ஆணையாக இருந்தாலும், எல்லோரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. செல்லப்பசுவாமியின் வாழ்க்கை நிறைவு பெறப்போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து, செல்லப்பசுவாமிக்கு பிறகு அவர் அவரால் தீட்சை பெற குரு யோக சுவாமி என்பதை சந்தேகம் இல்லாமல் தெரிவிக்கும் வண்ணம், ஏதாவது ஒரு முக்கிய கருத்து பரிமாற்றம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், அவர்கள் யோக சுவாமியை தொந்தரவு செய்து வந்தனர். §§

ஒரு நாள் யோக சுவாமிக்கு, தனது குருவின் உடல்நிலை குறித்து கவலை அதிகமாகி, செல்லப்பசுவாமியின் குடிசைக்கு சென்றார். அவர் குருவின் வீட்டை நெருங்கியதும், “யாரடா படலையில்?” (யாரடா கதவில்?) என்று உறுமினார். அது முதன்முதலில் தேரடையில் கேட்ட “யாரடா நீ" போன்ற ஞான வாசகமாக இருந்தது. அதன் பிறகு அவர், “பாரடா நீ வெளியில் நின்று,” (“ஒரு சாட்சியாக வெளியே நில்") என்று கத்தினார். §§

அந்த வளாகத்தை விட்டு, சுவாமி பணிவாக கிளம்பி தனது குடிசைக்கு திரும்பினார். முதலாம் உலகப்போரின் கொடுமையான யுத்தங்களில் உலக நாடுகள் மூழ்கியுள்ளன என்பதை அறிந்திருந்த யோக சுவாமி, “இங்கு எத்தனையோ ராசாக்கள் மாண்டு போகிறார்கள்,” என்று தெரிவித்ததில், மரண வாயிலில் இருந்த அவரது ஆன்மீக அரசரும் அடங்குவார். இரண்டு நாட்கள் கழித்து, பங்குனி மாதத்தில் (மார்ச்-ஏப்ரல்), அஸ்வினி நட்சத்திரத்தில், ஞானோதயம் பெற்ற துறவியாகவும் ஆன்மீக மகானாகவும் இருந்த செல்லப்பசுவாமி மகாசமாதி அடைந்தார். §§

அன்றைய தினம் காலையில், தனக்கு பணிவிடைகள் செய்து வந்த அண்டை வீட்டுக்காரனிடம், “இன்று இரவு இங்கு பெரும் புனிதம் நடக்கவிருக்கிறது. நீ வருவாயா?” என்று கேட்டார். ஆனால் அந்த நபரால் அன்று இரவு செல்ல முடியவில்லை. அவர் அடுத்த நாள் காலையில் சென்ற போது, செல்லப்பசுவாமி தனது குடிசையின் வாசலுக்கு அருகில் தரையில் மடிந்து கிடந்தார், அவரது விரல் ஒன்று வாயில் இருந்தது மற்றும் கால் ஒன்றை மடித்து நடராஜரின் ஆனந்த தாண்டவ பாவனையில் உறைந்து இருந்தது. அவர் ஒரு விசித்திரமான தோரணையில் தனது உயிரை நீத்து இருந்தார். அவரது வாழ்க்கையை போலவே, அவரது இறுதி மகாபயணமும் விசித்திரமாகவும் அற்புதமாகவும் இருந்தது. §§

image§

1915 ஆம் ஆண்டு, செல்லப்பசுவாமி “இன்று இரவு ஒரு பெரும் புனிதம் நடக்கவிருக்கிறது,” என்று சொல்லி, அதை பார்க்க வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த புனிதமான சம்பவம், அவரது மகாசமாதியாக அமைந்தது. அவரது உடல் அடுத்த நாள் தகனம் செய்யப்பட்டது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

ஞானோதயம் பெற்ற மகான்கள் மற்றும் முனிவர்களின் உடலை பெரும்பாலும் ஒரு சமாதி அறையில் வைப்பது வழக்கம். இதைப் போல தனது உடலையும் வைக்க சிலர் வற்புறுத்துவார்கள் என்று அறிந்த செல்லப்பசுவாமி, தனது உடலை தகனம் செய்யவேண்டும் என்று முன்பே உத்தரவிட்டு இருந்தார். அவரது சீடர்கள் அவரது அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, தங்கள் குருவின் அஸ்தியை கீரிமலையில் கரைத்தனர். §§

செல்லப்பசுவாமியை இழந்த சீடர்கள், தங்களை வலிமை இழந்து தன்னிலை இழந்தவர்களாக கருதினார்கள். பலர் விரக்தி அடைந்து, ஊக்கமிழந்து தவித்தனர். யோக சுவாமி ஈமச்சடங்கில் கலந்து கொள்ளாததை, எல்லோரும் கவனித்தனர். தகனம் செய்ய உதவியவர்களில் இருவர், சடங்கு முடிந்ததும் வேதனை தாங்காமல் மது அருந்தினர். அந்த போதை சுவாமி மீது கோபத்தை அதிகப்படுத்தி, அவருடன் எதிர்ப்பதற்கு தேவையான தைரியத்தையும் தந்தது. அவர்கள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவரது இருப்பிடத்திற்குள் நுழைந்து, “நமது குருவின் உயிர் பிரிந்துவிட்டது. எங்களுடன் சேர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவது கூட உங்களுக்கு சரியென்று தோன்றவில்லை,” என்று ஒருவன் கத்தினான். §§

திடீரென்று தனது குடிசை வாசலில் தோன்றிய யோக சுவாமி, கையில் தடியை எடுத்து, தனது குடிசையின் கதவில் இருந்து சாலை செல்லும் வரை அவர் அவர்களை துரத்திக்கொண்டு சென்றார். இருவரும் மிகவும் வேகமாக ஓடி, கிராமத்து தலைவர் வீட்டின் தோட்டத்தில் நுழைந்து, அங்கே குவிந்து இருந்த வைக்கோலுக்குள் சென்று மறைந்து கொண்டனர். யோக சுவாமி தனது அன்றாட மாலை நேர வேலைகளை தொடர்ந்தார். ஆனால் அவர்களுக்கு சோதனை அப்போது தான் தொடங்கவிருந்தது. §§

தங்களை சுற்றியிருந்த மக்கள் கூட்டம் குறையட்டும் என்று அவர்கள் காத்து இருந்த போது, அந்த வைக்கோல் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அவர்கள் இருவரும் சுருட்டு புகைத்துக்கொண்டு இருந்தனர்! அவர்கள் தீயை அணைக்க துள்ளிக் குத்தித்து அங்கும் இங்குமாக அலைந்தனர். அருகில் இருந்தவர்கள் வாளிகளில் தண்ணீரை கொண்டு வந்து, தீயை அணைத்தனர். இரண்டு குற்றவாளிகளையும் கிராமத் தலைவர் காவலரிடம் அழைத்து சென்றார், மற்றும் அவர்கள் இரவை சிறையில் கழித்தனர். §§

சுவாமி பயன்படுத்திய அணுகுமுறை புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. ஒரு செயலை செய்த பின் யோசிக்கும் வகையை சார்ந்த இவர்களுக்கு, சுவாமியின் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர் பண்டிதர்கள் மட்டுமே பேசும் ஆன்மீக வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துகொண்டு இருந்தார். அவருக்கு வாழ்க்கை மற்றும் மரணம் பற்றிய இரகசியங்கள் தெரிந்து இருந்தது. செல்லப்பசுவாமி ஒளியின் நுணுக்கமான உலகமான, தனது அந்தர்லோகத்தில் வாழ்கிறார் என்பதை அவர் நன்றாக அறிந்து இருந்தார். அனைத்திற்கும் மரணம் முடிவாக இருப்பதில்லை. அவர் தனது பழைய பயன்படுத்தப்பட்ட உடலை விட்டு வெளியேறி இருந்தார். §§

முன்பு நல்லூர் வில்வ மரத்தடியில் சுவாமியும் அவரது குருவும் ஆழமான ஆன்மீக கூட்டுறவில் இருந்ததை போல, அன்றைய மாலைப் பொழுதிலும் அவரது குருவுடன் அமர்ந்து இருந்தார். அதனால் ஈமச்சடங்கிற்கு ஏன் செல்லவேண்டும்? அவருக்கு ஆன்மீக உத்தரவு எதுவும் வரவில்லை, மற்றும் தன்னிடம் இருந்து விலகி இருக்க சொன்னதே செல்லப்பசுவாமி தான். அவர் சமூக ஒழுங்குமுறை வற்புறுத்தலுக்காக மட்டும் எதையும் செய்ததில்லை. த. சிவயோகபதி இதைப்பற்றி குறிப்பிடுகிறார்: §§

யோக சுவாமி அதே உணர்வுடன், தனது குருவின் நினைவாக ஒரு ஆசிரமம் கட்டுவதை எப்போதும் ஆதரிக்கவில்லை. அதற்கு பதிலாக, சிவதொண்டன் நிலையத்தில் இருக்கும் தியான மண்டபத்திற்கு சென்று, பக்தியுடன் தியானம் செய்து அந்த பரம்பரையின் அனைத்து குருமார்களின் தரிசனத்தை ரசிக்குமாறு தனது சீடர்களிடம் கூறுவார். “ஒன்றை பற்றி ஓர் அகத்தே இரு” (ஓரிடத்தில் பக்தியுடன் இரு) என்று யோக சுவாமி தன் சீடர்களிடம் எடுத்துரைத்தார். அதனால் யோசுவாமியின் வாழ்நாளில், செல்லப்பசுவாமிக்கு கோயில் எதுவும் கட்டப்படவில்லை. அதன் பிறகு, நல்லூர் பகுதியில் இருந்த அன்பர்கள், அந்த முனிவர் வாழந்து மகாசமாதி அடைந்த குடிசையில், அவரை கௌரவிக்கும் வண்ணம் ஒரு சிறிய கோயிலை கட்டினார்கள். அந்த குடிசையை கற்காரை சுவர்கள் மற்றும் உலோக கூரையுடன் கூடிய, ஒரு சிறிய கோயிலைப் போன்ற கட்டிடமாக சற்குரு சிவாய சுப்பிரமுனிய சுவாமி, 1982 ஆம் ஆண்டில் புனர்நிர்மாணம் செய்தார். அதன் பிறகு, கைலாச பரம்பரையின் பெருமைகளை பாடுவதற்காக, நல்லூர் கோயிலுக்கு அருகில் இருக்கும் அந்த இடத்தில், விசேடமான நாட்களில் நூற்றுக்கணகான பக்தர்கள் கூடினார்கள். §§

இறைவனை உணர்தல் §

செல்லப்பசுவாமியின் இறுதி மகாபயணத்தை முன்னிட்டு, 1915 ஆண்டின் பிற்பகுதியில், யோக சுவாமி தன்னை தீவிரமான சாதனாக்களின் பழக்கங்களில் ஈடுபடுத்திக்கொண்டார். அவர் தனது பின்புறம் மிகப்பெரிய இலுப்பை மரத்தை நோக்கி இருக்குமாறு அமர்ந்துகொண்டு, ஒரே சமயத்தில் பல நாட்களுக்கு விரதத்துடன் சமாதியில் அமர்ந்து இருப்பார். அவர் உறங்குவதாக காட்சி அளிக்காமல் உறங்குவார், மற்றும் ஒருமுறை கொழும்புத்துறை கல்லறையில் பல இரவுகள் தொடர்ந்து தியானம் செய்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு தியானம் செய்வது சித்தர்கள் மற்றும் நாதர்களின் பழக்கம் ஆகும். அவர் பிற்காலத்தில் துறவற சக்தியை பற்றி குறிப்பிடும் போது: “தளைகளை கைவிடு! சுதந்திரமாக சுற்றித் திரி. அனைத்தையும் கவனி. ஒரு சாட்சியாக இரு. இறப்பதற்கு முன்பாக இறந்து விடு!” §§

ஒரு தீவிர சைவராகவும் ஒரு நெருக்கமான சீடனாகவும் இருந்த முனைவர் த. நல்லநாதன், அந்த காலகட்டத்தில் சுவாமி தன்னுடன் பகிர்ந்த கருத்துக்களை நினைவுக்கூர்கிறார்: §§

1922 ஆம் ஆண்டு, இறைவனின் மெய்யுணர்வு தனக்கு முதல் முறையாக கிடைத்ததைப் பற்றி சுவாமி எனக்கு விளக்கினார். அவரது சாதனா மிகவும் கடினமானதாக இருந்தது. அவர் சாதனா மேற்கொள்ளும் ஒரு வாரத்தில், முதல் மூன்று நாட்கள் முழுவதும் நிர்விகல்ப சமாதியில் கழிந்தன; மற்றும் அந்த வாரத்தில் நான்காவது நாள் மட்டும் சிறிது உணவு உண்பதற்கும் நண்பர்களுடன் பேசுவதற்கும் பயன்படுத்திக் கொள்வார். அவர் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் நிர்விகல்ப சமாதியில் மூழ்கி இருப்பார். இந்த கடுமையான மற்றும் தீவிரமான சாதனாவின் முடிவாக, விழித்து இருக்கும் நிலையிலும், நிரந்தர இறைவனின் மெய்யுணர்வான, சாயுஜ்ய சமாதி இருக்கும். ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த தெய்வீக ஆனந்தம் தற்காலிகமாக மறைந்ததும் தோன்றிய சாதாரண மெய்யுணர்வு, உண்மையில் ஒரு படி கீழே இருந்தது. அவர் தனது வழக்கமான சாதனாவை கைவிட்டு, இறைவனின் மெய்யுணர்வு இயல்பாக தனது தூல மூளைக்குள் இறங்க அனுமதித்தார். §§

ஒவ்வொரு வரலாற்று சிறப்புமிக்க சகாப்தத்திலும் பரசிவம், முழுமுதற்பொருள் மற்றும் பரமாத்துமாவை உணர்ந்த வெகுசில ஆன்மாக்களின் தலைசிறந்த குழுவில் யோக சுவாமி இணைந்து கொண்டார். ஆத்ம ஞான அனுபவம் பெற்றவர்கள் மற்றும் தொடர்ந்து பெறுபவர்களால், அந்த அனுபவத்தை விளக்க முடியாது. அவர்கள் பரமாத்துமாவை பற்றி விளக்கும் எதுவும், அவர்களுக்கு திருப்தி அளிப்பதாக இருக்காது. பரமாத்துமா மனதை கடந்து, மெய்யுணர்வின் மிகவும் தூய்மையான மற்றும் புனிதமான நிலையை கடந்து இருப்பதால், அதை விளக்குவதற்கு மொழியை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். உணர்தலை பெற்ற பலர், ஒரு அனுபவமாக இல்லாத அந்த அனுபவத்தை பற்றி மிகவும் குறைவாக பேசுவார்கள். அவர்கள் மாறுபட்டு இருப்பதையும், அவர்களை சுற்றி இருக்கும் பகுதி உற்சாகம் நிறைந்து இருப்பதையும் ஒருவரால் உணர முடியும். ஏதோ ஒரு காரணத்தினால், அவர்கள் மற்றவர்களைப் போன்று இந்த உலகில் இருப்பது இல்லை. சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள், அவர்களிடம் இருந்து வெளிப்படும் தரிசனத்தை, குறிக்கோள் பாதையின் மிகவும் உண்மையான வழிகாட்டியாக கருதுகிறார்கள். ஒரு மிகப்பெரிய ஆன்மாவின் தரிசனத்திற்கு சீடன் தன்னை அதிகமாக தயார்படுத்திக் கொள்கிறான், மற்றும் அவன் பாதையில் எந்த நிலையில் இருந்தாலும், அது அவனை உள்நோக்கி அழைத்து செல்கிறது. §§

அந்த காலகட்டத்தில் பிறந்திருக்காத யோக சுவாமியின் சீடன், சிவாய சுப்பிரமுனியசுவாமி, பிற்காலத்தில் அந்த விளக்கமுடியாத யதார்த்தம் பற்றி ஒரு விளக்கத்தை தருவதற்கு முயற்சி செய்துள்ளார்:§§

பரமாத்துமா காலமற்ற, காரணமற்ற மற்றும் உருவமற்ற நிலையில் இருக்கிறது. அது அந்த பரமாத்துமாவாக இருப்பதால், அதற்கும் காலம், பரவெளி மற்றும் உருவத்திற்கும் எந்த தொடர்பும் இருப்பதில்லை. பரவெளியில் ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தலின் ஒரு தொடர் நிலையில் உருவம் இருந்து, சுயநினைவு என்ற காலத்தை உருவாக்கி காலமற்ற, காரணமற்ற ஒரு உருவமற்றதன்மைக்கு தொடர்பில்லாமல் இருக்கிறது. தனிப்பட்ட ஆன்மா பக்குவம் அடையும் போது, பரவெளி-காலம்-காரணத்தின் சுயநினைவில் இருந்து காலமற்ற, காரணமற்ற, உருவமற்ற பரமாத்துமாவிற்குள் தாவுகிறது. இதுவே இந்த பூமியில் ஆன்மாவின் முடிவான பக்குவமாக விளங்குகிறது. §§

உருவத்தின் கோட்பாடுகள் மற்றும் உணர்வுடன் இருக்கும் உணர்வையும் கதிரியக்க சக்திகள் கைவிடும் போது இருக்கும் சுயநினைவின் உட்புற மையம், ஆற்றலை உருவாக்கும் விசைப்பகுதியின் மையமாக விளங்குகிறது. இந்த மையம் தனது உள்பொருளில் தீவிரமாக இருப்பதுடன், இந்த விசைப்பகுதியின் உட்புற மையத்தின் சுற்றளவில் மட்டும் உணர்வுடன் இருந்து, அனைத்து வெளிப்புற உருவத்திற்கும் வலிமையை வழங்குகிறது.§§

இந்த விசைப்பகுதியின் மையத்தில் சுயநினைவை இழக்கும் போது, அது ஒருவரை உருவம், காலம், பரவெளியை கடந்து துரிதப்படுத்துகிறது. கதிரியக்க சக்தியின் சுழலும் மையம், உருவத்தை மீண்டும் படைத்து, பாதுகாத்து மற்றும் அழித்து விரைவில் மீண்டும் சுயநினைவை உருவாக்குகிறது. ஆனால் இது ஒரு புதிய சுயநினைவாக விளங்குகிறது, ஏனென்றால் நிர்விகல்ப சமாதியின் அனுபவத்தில், சுயநினைவின் தொடர்ச்சி உடைக்கப்படுகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில், முதல் நிர்விகல்ப சமாதி அனுபவம், அடிப்படையில் முதல் முழுமையான உணர்வுள்ள இடை முறிவாக விளங்குகிறது. அதனால், அத்தகைய அனுபவத்திற்கு பிறகு ஒரு புதிய பரிணாம வளர்ச்சி புதிதாக தொடங்குகிறது. பரிணாம வளர்ச்சியின் மாதிரிகள் ஒன்றுக்கு மேல் இன்னொன்று குவிந்து, அடுக்கு அடுக்கான ஒளி வட்டங்களாக நிலை கொண்டு, அனுபவிப்பவரின் இயல்பு முழுவதிலும் அனுபவ மாதிரியிலும் உள்ளார்ந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.”§§

யோக சுவாமி முதல் முறையாக பரமாத்துமாவை உணர்ந்ததும், தனக்கு கிடைத்த வெற்றியின் உற்சாக கொண்டாட்டத்தில், துள்ளி குதித்து நாற்பது கிலோமீட்டர் தூரம் ஓடியதாக கதைகள் உள்ளன. அவர் அந்த முடிவான யதார்த்தத்திற்கு தினமும் திரும்ப தொடங்கி, அவரது உடலின் ஒவ்வொரு அணு மற்றும் அவரது மனதின் ஒவ்வொரு பகுதியிலும், அந்த உணர்தல் ஊடுருவ அனுமதித்ததும், பரசிவம் அவரது அடிப்படையாக மெதுவாக மாறியது. அவர் பரமாத்துமாவிற்குள் செல்லும் போது ஒரு வெளிப்புற நபராக இல்லாமல்; அவர் பரமாத்துமாவில் இருந்து ஒரு உட்புற நபராக வெளிவந்து மீண்டும் அதனுள் சென்றார். தாங்கள் அதைப்பற்றி அறியாவிட்டாலும், அவரும் மற்ற அனைவரும், அந்த பரமாத்துமாவாக முழுமையாக இருந்தார்கள். §§

அவர் இந்த ஆன்மீக ஈடுபாடுகளில் இருந்து வெளிவந்து, தனக்குள் இருந்த அந்த மிகவும் தீவிரமான ஒளியை வெளிப்படுத்தி நடந்து சென்றார், மற்றும் தனது வெளிப்பாடு மற்றும் உணர்தலின் உலகிற்கு ஒரு தோற்றத்தை வழங்க, அவற்றை அவ்வபோது உட்கார்ந்து தமிழ் பாடல்களாக எழுதுவார். பிற்காலத்தில், அவர் இந்த ஆழமான பாடல்களை கோயில்கள் மற்றும் வீடுகள் மற்றும் தனது இலுப்பை மரத்திற்கு எதிரே இருந்த கொழும்புத்துறை விநாயகர் கோயிலில் இயற்றினார். அவர் தனது அனுபவங்களை பற்றி இந்த நற்சிந்தனையில் பாடியுள்ளார்:§§

ஓங்கார மேடையில் மேலேறி நின்றேன் §

ஒன்றையுங் காணேனடி – குதம்பாய் §

ஒன்றையுங் காணேனடி.§

தூங்காமல் தூங்கும் சுகம் வந்து வாய்த்தது §

சும்மா இருந்தேனடி – குதம்பாய்§

சும்மா இருந்தேனடி.§

ஆங்காரம் போச்சுது ஆனந்தம் போச்சுது §

அவனே நானானேனடி – குதம்பாய்§

அவனே நானானேனடி.§

நீங்காத நின்மல நிட்டை பலித்தது §

நீநா னில்லையடி – குதம்பாய் §

நீநா னில்லையடி. §

ஒன்றென இரண்டென ஓத முடியாமல் §

ஓவிய மானேனடி – குதம்பாய்§

ஓவிய மானேனடி.§

நன்றென தீதென நவில முடியாத §

நாதன்தாள் சேர்ந்தேனடி – குதம்பாய்§

நாதன்தாள் சேர்ந்தேனடி. §

கண்ணுக்கு கண்ணாய் இருக்கின்ற கர்த்தனை §

கண்டு களித்தேனடி – குதம்பாய்§

கண்டு களித்தேனடி.§

அண்டமும் பிண்டமும் ஒன்றா இரண்டா என்று §

அறியா திருந்தேனடி – குதம்பாய்§

அறியா திருந்தேனடி.§

ஆதாரம் ஆறும் அவத்தை உறைந்தும் §

அடியோடு போச்சுதடி– குதம்பாய்§

அடியோடு போச்சுதடி.§

பாதார விந்தத்தை காணாமல் கண்டு §

பணியாமல் பணிந்தேனடி – குதம்பாய்§

பணியாமல் பணிந்தேனடி. §§