குருமார்களின் சரித்திரங்கள்

Page 24 URL:§

https://www.himalayanacademy.com/media/books/the-guru-chronicles/web/24_yo03_03.html§

குருமார்களின் சரித்திரங்கள் §

பத்தாவது அத்தியாயம் §

“நீ என்னை இன்னும் எட்டிப்பிடிக்க வில்லை”§

செல்லப்பா மற்றவர்களிடம் நேரடியாக பேசியது மிகவும் குறைவு. அவர் யோக சுவாமியிடம், தான் அவரது குரு என்று எப்போதும் சொல்லியது இல்லை; அவ்வாறு அவரிடம் பேசியதும் இல்லை. ஆனால் அவருக்கு பயிற்சி அளித்தார். யோக சுவாமி தனது மனதை குருவின் மனதுடன் முழுமையாக ஒருங்கிணைத்து, அவரது மறைமுக அறிவுறுத்தல்களை கிரகித்துக்கொள்வதற்காக, தனது சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகள், திட்டங்கள், பேச்சு மற்றும் உடை என்று தனது பண்புகள் அனைத்தையும் மாற்றிக்கொண்டார். §§

செல்லப்பசுவாமி தனது பணியை சர்வசாதரணமாக செய்தார். அவர் யோக சுவாமிக்கு எப்போதும் ஒருமுகச்சிந்தனையுடன் இருக்க பயிற்சி அளித்தார் மற்றும் அவரது மிகவும் நுணுக்கமான பழக்கங்கள் மற்றும் பற்றுகளை தகர்த்து எரிவதில் எந்த வாய்ப்பையும் நழுவவிடாமல், நடவடிக்கை ஏதும் இல்லை என்றாலும், இருவரும் சேர்ந்து இருந்த ஒவ்வொரு தருணமும், தனது சீடனிடம் கவனசிதறல் இல்லாத முழுமையான கவனத்தை வலியுறுத்தினார். செல்லப்பசுவாமியுடன் இருக்கும் போது ஒரு நடைமுறை ஒழுங்கு, ஒரு ஓய்வு, ஒரு தளர்வு என்று எதுவும் இருக்காது. அவருடன் சேர்ந்து இருக்கும் ஒரு நாள், ஒரு வருடத்திற்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கைக்கு சமமாக இருக்கும். §§

அவரது தொடர்ச்சியான உளறல் குழம்பிய பேச்சாக இல்லாமல், தன்னை குறிப்பிடும் அக்கறையுள்ள, கவனமான அறிக்கைகளாக இருந்தன. அவர் ஒரு தெளிவான முடிவு அல்லது நோக்கம் இல்லாமல் தொடர்ந்து தனக்குத்தானே தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தாலும், ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் இருந்த அவரது குரல் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு, அவர் மனதின் முழுமையான சக்தியை வெளிப்படுத்தின. அது யோக சுவாமியை வெகுவாக கவர்ந்தது. முடிந்தவரை முயற்சி செய்தாலும், ஆழமாக ஒரு லயத்துடன் இருந்த செல்லப்பசுவாமியின் குரல் நயம் மற்றும் அபத்தம் போல அவரது உதடுகளில் இருந்து வெளிவந்த வாசகங்களுடன் இணைந்த பிரகாசமான பார்வைக்கு, அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. §§

மிகவும் மோசமான பிதற்றலுக்கு மத்தியில் வழக்கமாக ஒரு முத்து போன்ற மிகவும் சுத்தமான ஞானம் இருக்கும் என்பதாலும், செல்லப்பருக்கு நெருக்கமாக இருந்தவர்களால் மட்டுமே உயரிய ஞானத்தின் மதிப்புமிக்க அறிக்கைகளை கேட்கமுடிந்தது என்பதாலும், யோக சுவாமிக்கு கேட்பதில் சலிப்பு ஏற்படவில்லை. அவர் தனது குரு அர்த்தத்துடன் மற்றும் அர்த்தமில்லாமல் பேசிய, ஒவ்வொரு வார்த்தை மீதும் கவனம் செலுத்தியதால், இந்த முத்துக்களை யோக சுவாமி கிரகித்துக்கொண்டு தனது சொந்த ஆன்மீக மனதை திறக்கும் நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டார். இந்த முத்துக்களை மட்டும் செல்லப்பசுவாமி போதனைகளாக வழங்கி இருந்தால், அவை சீடனுக்கு ஞானத்தை வழங்க போதுமானதாக இருக்கும். யோக சுவாமி பிற்காலத்தில், தனது சற்குருவின் மகாவாக்கியம் என்ற பெயரில் தலைசிறந்த அறிக்கைகளாக, இந்த சூத்திரங்களை தனது சீடர்களுக்கு வழங்கினார். §§

தனது கவிதை தொகுப்பான, நற்சிந்தனையில் யோக சுவாமி இந்த நான்கு பொருத்தமான அறிக்கைகளை, “முழுதும் உண்மை. ஒரு பொல்லாப்பும் இல்லை. எப்போவோ முடிந்தது. நாம் அறியோம்.” என்று தொகுத்து வழங்கினார். இந்த வாசகங்களைப் பற்றி கவனமாக சிந்தித்து பார்க்கும் போது, அது மனதிற்குள் ஆழமான உட்பார்வையை வழங்கும் அளவிற்கு மனதில் ஊடுருவும் என்று யோக சுவாமி விளக்கம் அளித்தார். இயல்பான இருமை பண்பு மற்றும் சுயமாக-உருவாக்கப்பட்ட கோட்பாடுகளாக இருக்கும் மனதின் உணர்தல், சாதனாவின் மூலம் மனதை கடந்து இருக்கும் பரசிவம், அத்வைத பரமாத்துமா, முழுமுதற்பொருளின் உணர்தலை நோக்கி வழிநடத்தி செல்கிறது. அவர் தனக்கு நெருக்கமான சீடர்களிடம், இந்த வாசகங்களை ஆழமான தியானம் செய்யும் விசைகளாக பயன்படுத்துமாறு குறிப்பிட்டார். அவை ஒரு மொழி வழங்கக்கூடிய ஆழமான போதனைகளாக விளங்குகின்றன. §§

image§

செல்லப்பசுவாமி ஒரு கந்தலான வேட்டி உடுத்திய ஒரு புதிராக விளங்கினார். தனக்குத்தானே தத்துவ பழமொழிகளை முணுமுணுத்துக்கொண்டு, புதியவர்களை நிந்தனை செய்த இந்த தனிமையான சாது, அந்த காலத்தில் அதிக ஞானோதயம் பெற்ற ஆன்மாக்களில் ஒருவராக விளங்கினார் என்பது வெகு சிலருக்கே தெரிந்து இருந்தது. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

செல்லப்பசுவாமியை தூரத்தில் இருந்து பார்க்கும் போது, கோயிலை சுற்றி வரும் ஒரு சாதாரண சாதுவாகவே காட்சி அளித்தார். வெகு சிலரே அவரது ஆன்மீக சக்தி மற்றும் ஆன்மாவின் பக்குவத்தை அறிந்து இருந்தார்கள். அந்த வெகு சிலர் இவரது விசுவாசமான சீடர்களாக மாறி, அதட்டல்கள் மற்றும் முட்டாள்தனமான பேச்சுக்கள் குறைவாக இருந்தாலும் அல்லது அதிகமாக இருந்தாலும், உற்சாகமாக தாங்கிக்கொண்டு இருந்தார்கள். இது அவர்களை குறிவைக்கவில்லை என்றும், அவர் வழங்கும் போதனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாதவர்கள் மற்றும் கோழைகளை துரத்தி அனுப்புவதற்காக, அவர் பயன்படுத்திய உத்தி என்பதை அவர்கள் அறிந்து இருந்தார்கள். மக்கள் தன்னை தவறாக புரிந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று செல்லப்பசுவாமி வருந்தவில்லை. இதனை யோக சுவாமி “விசரன்" என்ற பாட்டில் குறிப்பிடுகிறார்: §§

கந்தை துணியணிவான் கந்தன்திரு முன்றில்நிற்பான் §

வந்தாரைப்போ வாரைவாயில் - சின்னதங்கம் §

வந்தபடி ஏசிடுவான்.§

அப்படியே உள்ளதென்பான் அங்குமிங்கு மாயலைவான் §

செப்படி வித்தையென்பான் - சின்னதங்கம் §

தேரடியில் இருப்பானடி. §

சாதி சமயமென் னுஞ் சங்கடத்துக் குள்ளாகான் §

சேதியொன் றுஞ் சொல்லகில்லான் - சின்னதங்கம் §

சித்த பிரமையென்பார். §

நீதி அநீதிஎன்னும் நிலைமையொன்றும் இல்லா தான் §

மாதிரிகள் ஒன்றுஞ்செய்யான் - சின்னதங்கம் §

மத்தன்னைப்போல் திரிவானடி. §

நீறு மணியான் நெற்றியிலே பொட்டுமிடான் §

கூறிய தைக்கூறான் - சின்னதங்கம் §

குணமொன்று மில்லானடி. §

ஆறுதலா யிருமென்னான் ஆணவத்தை நீக்குமென்னான் §

மாறுபாடாய்ப் பேசிடுவான் - சின்னதங்கம் §

மதியிழந்தான் என்பராடி. §

சின்னத் தனமாய்த் தெருவாலே போவாரை §

என்னப்பன் பேசிடுவான் - சின்னதங்கம் §

இவன் விசரன் என்பாரடி. §

உல்லாச நடையனடி ஊரூராய்த் திரிவானடி §

எல்லோரு மிவனைக்கண்டு - சின்னத்தங்கம் §

ஏளனஞ் செய்வாராடி. §§

“உலகில் இருக்கும் அனைத்து வங்கிகளின் பணமும் என்னுடையது,” என்று அவர் மீண்டும் மீண்டும் சொன்னதாக ஒரு குறிப்பு கூறுகிறது. ஒருமுறை அவருக்கு கட்டுமஸ்தான உடலுடைய ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர் தன் உடலமைப்பின் மீது பெருமையுடன் இருந்தார். அவர் தன் தசைகளை வளைத்து தன் நெஞ்சை புடைக்க செய்தார். இதைப்பார்த்த செல்லப்பசுவாமி, அந்த நபரை சுட்டிக்காட்டி, “அந்த உடல் என்னுடையது!” என்று கத்தினார். தனது உடலைமைப்பை வளர்க்க பல வருடங்கள் உழைத்து இருந்த அந்த நபர், அந்த அத்வைத கோரிக்கையை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் மற்றும் அவர் மனம் தளர்வடைந்தது. §§

அவரை சந்தித்தவர்களில் பெரும்பாலானோருக்கு அவரது முரடடுத்தனம் மட்டுமே நினைவில் இருந்தாலும், செல்லப்பசுவாமி ஒரு சுதந்திர ஆன்மாவாக இருந்தார். அவர் பூமியும் அதன் மீது இருக்கும் அனைத்தும் தனக்கு சொந்தம் என்பதைப் போல, கருணை மற்றும் கவலையற்ற பண்பை வெளிப்படுத்தி, தனது நடத்தை மற்றும் தனது நிற்கும் தோரணையில் ஒரு அரசரின் நேர்த்தியுடன் பவனி வந்தார். அவர் அதிகமான சீடர்களை ஈர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. அவர் தனக்கு பலனாக எதையும் எதிர்பார்க்காமல், தயாராக இருந்தவர்களுக்கு போதனைகளை வழங்கினார். அவர் இரகசியமாக வேலை செய்தாரா அல்லது எப்போதும் வெளிப்படையாக இருந்தாரா? அவர் நம்பியிருந்த தனது பைத்தியத்தின் போர்வையால் அதிசயத்தில் ஆர்வமுள்ளவர்கள், அதிசயத்தின் வியாபாரிகள் மற்றும் கோழைகளை தவிர்த்தார். §§

அவரது பெரும்பாலான சீடர்கள் சம்சாரிகளாக இருந்தார்கள். அவர் தனது வாழ்நாளில் யோக சுவாமி மற்றும் கதிர்வேலுசுவாமி என்ற இரண்டு சீடர்களுக்கு மட்டுமே தீட்சை வழங்கினார். செல்லப்பசுவாமியை தனது குருவாக பாவித்து அவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சீடர்கள் இருந்தார்கள், ஆனால் அவர்கள் எல்லோரும் யோக சுவாமி மற்றும் அவரது சகோதர சுவாமியை போன்ற நன்மதிப்பை பெறவில்லை. அவரது செயல்முறை உறுதியாக இருந்தது, ஆனால் அவர்கள் என்றுமே விவாதிக்கப்படாத அவரது அடிப்படை அக்கறையை உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் குரு வழங்கும் அருளின் ஆதரவில் வாழ்வதை உணர்ந்து இருந்தார்கள். §§

செல்லப்பசுவாமி ஒவ்வொரு அனுபவம் மற்றும் பாடத்தில் யோக சுவாமியை அதிக அமைதியாகவும் அதிக விழிப்புடனும் வைத்து இருந்ததால், அவர் மெதுவாக உள்ளத்தின் ஆழத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, தனது குருவுடன் ஒரே நேரத்தில் ஒரு முழுமையான இணக்கத்தில் பல மாதங்களுக்கு வாழ்ந்தார். அவரது மனம் மற்றும் இதயம் ஒளி நிரம்பி இருந்தது; அவர் தெய்வங்கள் அதிகம் விரும்பிய உலகங்களில் வாழ்ந்தார். அவர் அதிகமாக உறங்கவில்லை. அவர் செல்லப்பசுவாமியுடன் இல்லையென்றால், அவர் தனியாக உட்கார்ந்து, அவரது குருவின் அருள் வழங்கிய விசாலமான ஆன்மீக வாழ்க்கையில் பேரானந்தத்துடன் மூழ்கி இருப்பார். இருந்தாலும், சுத்தப்படுத்தும் வசவுகள் நின்றபாடில்லை. §§

அவரை செல்லப்பசுவாமி மிகவும் குறைவான தவறுகளுக்கும், தவறே இல்லை என்றாலும், செல்லப்பசுவாமி அறிந்து இருந்த ஒரு தெய்வீக இயல்பு மட்டும் மீதம் இருக்கும் வரை அனைத்தையும் அபகரித்து, இழிவுபடுத்தி நீண்டநேரம் ஆவேசத்துடன் உரை வழங்குவார். பரசிவம் அல்லாமல் கொடுக்கல் அல்லது வாங்கல், இலாபம் அல்லது இழப்பு போன்றவற்றின் மீது யோக சுவாமிக்கு மிகவும் குறைவான உணர்வு இருக்கும் வரை, செல்லப்பசுவாமி கோபத்துடன் முறைத்துக்கொண்டு இருப்பார். யோக சுவாமியின் பார்வையே குருவின் கோபத்தை அதிகரித்துவிடும். அவர் தான் செய்தது அனைத்தையும் குருவிடம் தெரிவிப்பார், ஆனால் அவை என்றுமே போதுமானதாக இருக்காது. யோக சுவாமி “எனது ஆசான்” என்ற தலைப்பில், இந்த தலைசிறந்த முனிவரைப் பற்றியும் அவருடன் தனது உறவை பற்றியும் பாடியுள்ளார்: §§

இந்த ஆசான் அடிப்படை மந்திரத்தின் மறைபொருளை வழங்கினார். அவர் அன்புள்ள இதயங்களில் வாசம் செய்கிறார். அவர் சிரித்துக்கொண்டு, நல்லூரின் பிரகாரங்களில் சுற்றித்திரிகிறார். அவர் ஆற்றல் படைத்தவராக காட்சி அளிக்கிறார்; வெளிப்புற பாசாங்கு அனைத்தையும் வெறுக்கிறார். அவரது கருத்த மேனியில் கந்தல்துணியை மட்டுமே அணிந்து இருக்கிறார். §§

அவர் எரித்துவிட்டதால், இப்போது எனது பாவங்கள் அனைத்தும் தொலைந்துவிட்டன! கடந்தகாலத்தில் தூண்டப்பட்ட வலுவான கர்மவினைகள் அனைத்தும் நீக்கப்பட்டன. அவரது இதயம் இறையன்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒளியால் அலங்கரிக்கப்பட்ட குடிசைகள் மின்னுவதை போல, அவர் புனிதத்தன்மையுடன் பிரகாசிக்கிறார். நல்லூரில் அன்றைய தினம் அவர் என்னை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். சோதனைகளுக்கு பிறகு அவர் என்னை சும்மா இருக்கச் சொன்னார். §§

தனக்குத்தானே ஓசைப்படாமல் தொடர்ந்து முணங்கிக்கொண்டு இருக்கும் அவர், தன்னை துணிந்து நெருங்கி வருபவருக்கு உண்மையான வாழ்க்கையின் ஆசியை வழங்குவார். அவர் எனது மனதைக் கொண்டு ஒரு கோயிலை உருவாக்கி இருக்கிறார். அவர் புறத்தோற்றம் மற்றும் பழக்கத்தின் வெளிவேடத்தை வெறுக்கிறார். §§

அதிக அன்புடன் பக்தர்கள் தன்னை வழிபடுவதற்கு வரும் போது, அவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தி எமனை போல கோபத்துடன் திருப்பி அனுப்புவார். இருந்தாலும், அவர் என்னை கலைநயத்துடன் தனது கட்டுப்பாட்டிற்குள் இழுத்துக்கொண்டார். அவர் தான் என்னை உருவாக்கியவர், ஆனால் நான் அவரை அணுகினால் கருணையில்லாமல் என்னை தாக்குவார். அவர் என்னை பார்த்து, பல வார்த்தைகளை பேசுவார். அந்த பார்வை நோக்கங்கள் மற்றும் கருத்துக்கள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்! §§

அவர் மனதில் எந்த உருவத்தையும் கற்பனை செய்ய எனக்கு அனுமதி வழங்கவில்லை. எந்த சேவை செய்யவும் என்னை அனுமதிக்கவில்லை. என்ன நடக்கப்போகிறது என்பதை அறியவும் எனக்கு அனுமதி வழங்கவில்லை. இருந்தாலும் இந்த தெய்வம் என் இதயத்தில் இருந்த ஆசையை பூர்த்தி செய்தது. அவருக்கு சேவை செய்வது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது, ஆனால் அவர் அதை அனுமதிக்கமாட்டார். அவரது விருப்பம் எதில் இருக்கிறது என்பதை நான் அறிந்துக்கொள்ள அனுமதிக்கமாட்டார். §§

நான் இன்பத்தை தரும் ஸித்திகளை அடைய எனக்கு அனுமதி வழங்கமாட்டார். இருந்தாலும், இப்படித்தான் அவர் எனக்கு நண்பரானார். என்ன ஓர் அதிசயம்! “ அதிசயம் ஒன்றும் இல்லை!” என்று அவர் கூறுவார். வியப்பு மற்றும் ஆச்சரியத்துடன் வந்தவர்கள் அவரை நெருங்க தயங்குவார்கள்; அவர் அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். ஆனால் உண்மையான ஞானத்தை வழங்கிய அந்த ஆசான், தனது சீடர்கள் வணங்குவதற்கு அனுமதி வழங்கினார். §§

புதிர் நிறைந்த பாடங்கள் §

காலையில் தாங்கள் மேற்கொண்ட பெரும்பாலான நடைப் பயணங்களின் போது, மதிய உணவிற்கு கத்திரிக்காய் வாங்க, யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஒரு கிராமப்புற சந்தைக்கு செல்லப்பசுவாமி வழிநடத்தி சென்றார். அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், அந்த தீவில் மிகவும் சுவையான கத்திரிக்காய்களை வளர்த்து, அவற்றை சந்தையில் விற்று வந்தனர். தனது இருப்பிடத்திற்கு யோக சுவாமி வந்ததும், செல்லப்பசுவாமி தனது உடையின் ஓரத்தில் சில சில்லறைகளை கட்டிக்கொண்டு, நல்ல கத்திரிக்காய்கள் தீரும் முன்பாக, அங்கே விரைந்து சென்று வாங்க அவசரத்தில் இருப்பார். செல்லப்பசுவாமி விரைவாக நடப்பவர் என்றாலும், இரண்டு மணிநேரம் நடக்க வேண்டியிருக்கும். அங்கே சென்றதும், தனது சற்குரு சந்தையில் இருந்த ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, டஜன் கணக்கான கத்திரிக்காய்களை நிதானமாக சோதித்து பார்த்து, இறுதியில் சென்ற கடைக்கே சென்று மீண்டும் சென்று ஒன்று அல்லது இரண்டு காய்கறியை மட்டும் வாங்கும் வரை, யோக சுவாமி காத்து இருப்பார். அதன் பிறகு அவர்கள் நல்லூர் திரும்புவார்கள். §§

அவர் இரு கைகளிலும் கத்திரிக்காய்களை சுமந்து கொண்டு தனது குடிசைக்கு திரும்பி, இளைப்பாற உட்காராமல், நேராக மூன்று கற்களின் மீது வைக்கப்பட்டு இருந்த ஒரு மட்கலத்தில் தண்ணீரை கொதிக்க வைக்க, தரையில் விரகை பற்ற வைத்து சமைக்க உட்கார்ந்து விடுவார். செல்லப்பசுவாமி ஒரே மட்கலத்தில் அரிசி, நருமணப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக கொதிக்க வைத்தாலும், அவர் ஒரு திறமையான சமையல்காரராக இருந்தார். செல்லப்பசுவாமி பெரும்பாலும் தான் சமைத்த உணவை மட்டுமே சாப்பிட்டதால், தனது குரு மதிய உணவை தயார் செய்து தனக்கு பரிமாறும் வரை, வழக்கமாக யோக சுவாமி அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருப்பார். §§

மட்கலம் கொதிக்க ஆரம்பித்ததும், அதனுடன் நறுக்கிய நருமணப்பொருட்களை சேர்ப்பார், பிறகு அடுப்பின் முன்பாக உட்கார்ந்துகொண்டு பனையோலையால் மட்கலத்தின் மீது விசிறிக்கொண்டு இருப்பார். யோக சுவாமியின் மனம் அலைபாய்வதாக தோன்றினால், அவரை கடிந்துக்கொள்ள பேசுவாரேத் தவிர, மற்ற நேரங்களில் மௌனமாக தனது சமையலில் கவனமாக இருப்பார். அது அவர்களது அன்றைய உணவாக இருந்ததால், அவரது முழு கவனமும் தேவைப்பட்டது. ஆனால் செல்லப்பசுவாமிக்கு உணவின் மீது சிறிதளவு ஆசை அல்லது பற்று ஏற்பட்டாலும், அல்லது அவரது வாயில் இருந்து எச்சில் ஊறினாலும், அவர் தனது சமையலை அப்படியே நிறுத்திவிட்டு அந்த மட்கலத்தை தரையில் வீசி உடைத்து விடுவார். அன்று மதியம் விரதம் இருந்து, அடுத்த வேலையை தொடர்வார்கள். §§

image§

பிரம்மச்சாரிகளின் கடமைகளை போல, செல்லப்பசுவாமி கடைக்கு செல்வது மற்றும் தனக்கு தேவையான உணவை சமைப்பது போன்றவற்றை தானே கவனித்துக்கொண்டார். வழக்கமாக அவரும் யோக சுவாமியும் சந்தை வரை நடந்து சென்று, நல்ல பச்சை கத்திரிக்காய்களை பேரம் பேசி வாங்கி, நல்லூருக்கு திரும்பி வந்து, ஒரே மட்கலத்தில் எல்லா பொருட்களையும் ஒன்று சேர சமைத்து, தனது புகழ்பெற்ற செல்லப்பன் குழம்பை தயார் செய்வார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அது குரு தனது உள்ளுணர்வு இயல்பை ஒழுங்குப்படுத்தி கட்டுப்படுத்த பயன்படுத்தும் செயல்முறையாக விளங்கியது. அவர் இவ்வாறு அடிக்கடி செய்ததால், அவரது குடிசையை சுற்றி இருந்த வளாகத்தில் உடைந்த துண்டுகள் சிதறி கிடந்தன. பிற்காலத்தில் யோக சுவாமி தனது குருவை, “உடைந்த மட்கலங்களால் சூழப்பட்டு இருந்தவர்,” என்று குறிப்பிட்டார். யோக சுவாமி தன் வாழ்வில் வருவதற்கு முன்பாகவே செல்லப்பசுவாமி இதை செய்து வந்தார் மற்றும், “உனக்கு சாதம் சாப்பிட ஆசையா!” என்று சொல்லி தனக்குத்தானே வழங்கும் தண்டனையாக, சற்று முன் தயாரித்த உணவு நிரம்பிய கொதிக்கும் பானையை உடைப்பதை, யோக சுவாமி தன்னிடம் வந்து சேர்வதற்கு முன்பாகவே செய்து வந்தார். அவரது துறவறம் அவ்வளவு தீவிரமாக இருந்தது. §§

இந்த முனிவரை பார்க்கும் போது ஒரு சாதாரண மனிதனுக்கு ஒரு வழக்கமான பிச்சைக்காரனாக தென்பட்டார், ஆனால் செல்லப்பசுவாமி செய்தது அனைத்தும், அவரது எல்லையற்ற அருளாக யோக சுவாமிக்கு காட்சி அளித்தது. அவரது வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக ஆத்ம ஞானத்தை பெறுவது அமைந்து இருந்தது, அதனால் குறைவாக இருந்தால் போதுமானது என்ற சிந்தனையை அனுமதிப்பதற்கு வாய்ப்பே இல்லை. யோக சுவாமி தனது குருவின் தகவலை, சீற்றம் குறையாது “சிங்கத்தில்” பதிவு செய்துள்ளார்:§§

image§

ஒரு நாள் செல்லப்பசுவாமியும் யோக சுவாமியும் கடற்கரை ஓரமாக நடந்துகொண்டு இருக்கும் போது, கத்திரிக்காய்களை விற்பனை செய்த ஒரு பெண்ணின் கடையை வந்து அடைந்தனர். யோக சுவாமிக்கு அந்த காய்கறி மிகவும் பிடிக்கும். தனது சீடனுக்கு கத்திரிக்காய் மீது இருந்த விருப்பத்தை அறிந்து இருந்த செல்லப்பா, சீடனின் ஆசையை பூர்த்தி செய்யாமல், கடையில் இருந்து கிளம்பி நடக்கதொடங்கினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

தன்னை த்தன்னால் அறிந்திட வேண்டுமே§

தானா யேங்குஞ் செறிந்திட வேண்டுமே §

பொன்னை மாதரைப் போக்கிட வேண்டுமே§

புவியி னாசையை நீக்கிடா வேண்டுமே §

கண்ணைப் போலறங் காத்திட வேண்டுமே §

கமல பாதந் தொழுதிட வேண்டுமே §

எண்ணம் யாவு மிறத்திட வேண்டுமே§

என் குருபர! புங்கவ சிங்கமே!§§

இருளை நீக்கி இருந்திட வேண்டுமே§

எங்குந் தெய்வத்தைக் கண்டிட வேண்டுமே§

பொருளை யறிந்தினிப் போற்றிட வேண்டுமே§

பொய்ய ழுக்கா றகற்றிட வேண்டுமே§

மருளைத் தந்து மயக்கும் பொருள்களை §

மாற்றி யேயரு ளாக்கிட வேண்டுமே§

பெருமையிற் பிறர் பேசுங் குருபர!§

பெத்த னேன்னையும் பேணிய சிங்கமே. §§

பிற்காலத்தில் யோக சுவாமியின் கவிதைகள் சிறகடித்து பறந்ததற்கு, நன்றியுணர்வு மற்றும் மிகமிஞ்சிய பாராட்டு போன்றவற்றை செல்லப்பசுவாமி தீவிரமாக தடை செய்ததே காரணமாக இருந்திருக்க வேண்டும். அவரது குருவை போற்றுவதாக அமைந்துள்ள அந்த பாடல்கள், அவரது மனதில் தோன்றி செல்லப்பர் முன்னிலையில் உரைக்க தடை விதிக்கப்பட்டதாக இருக்கவேண்டும். “மறுபிறவிக்கு நிவாரணம்" என்ற இன்னொரு பாட்டில், தனக்கு பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியில் இருந்து விடுதலை வழங்கிய செல்லப்பசுவாமியை மிகப்பெரிய ஆன்மாவாக சுவாமி புகழ்ந்து பாடுகிறார்: §§

அருமையான நறுமணம் நிறைந்த மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, பெருந்தன்மையின் மையமாக, முக்தியின் சுடராக, உருவம் மற்றும் உருவமில்லாமல் எங்கும்-வியாபித்து இருக்கும் மெய்யுணர்வாக நின்று, இங்கும் அங்கும் இருந்து மற்றும் அரசர் மற்றும் குருவாக மாறி இருக்கும் தேவர்களின் தலைவனை பார்த்ததும் என் மனம் அமைதி அடைகிறது. §§

அவர் எனது இந்த பிறவியை நிறைவு செய்வார்; அவர் என்னுடன் அனைத்து பிறவிகளிலும் இணைந்து இருந்தார்; எனது எதிர்கால பிறவிகளில் இருந்து முக்தி அளிக்க, அவர் தனது கருணையை எனக்குத் வழங்கியுள்ளார். அவருக்கு சமமானவர் அவர் மட்டும் தான். அவர் நித்தியம் முழுவதும் நிலைத்து இருக்கிறார். அவரை போற்றி பாடுவோருக்கு, எதிர்கால பிறப்பு அல்லது இறப்பு இருக்காது. §§

இந்த தீபகற்பம் முழுவதும் நல்லூர் கந்தசுவாமி கோயில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. மேலும் இன்றும் தூரத்து கிராம மக்கள், தங்கள் வாழ்நாளில் பலமுறை இந்த தலத்திற்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். சிலசமயங்களில், ஏன் என்று காரணம் தெரியாமல், தெருவில் நடந்து செல்லும் அத்தகைய பக்தர்கள் இந்த விசித்திரமான ரிஷியின் மூலம் அழைக்கப்பட்டு, தங்களுக்கு தெரியாமல் தங்களுக்குள் இருந்த சிந்தனைகள் மற்றும் செயல்களுக்காக கண்டிக்க மற்றும் நிந்திக்கப்படுவார்கள். §§

அந்த நிந்தனை அவர்களுக்கு புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அது தங்களுடன் தொடர்புடையதா என்ற யோசனையில் அவர்கள் இருக்க, அவர் ஒரு முக்கியமான வேறுபாட்டை விளக்கிக் கொண்டு, அந்த பக்தர்களை அசராமல் உட்கார வைத்து இருந்தார்; அவர்கள் கண்ணியமாக கேட்டுக்கொண்டு, அங்கிருந்து கிளம்புவதற்காக காத்து இருந்தார்கள். அவர் அவர்களை திருப்பி அனுப்பியதும், அப்போது தங்களுக்குள் நடந்த சுத்திகரிப்பைப் பற்றிய எதுவும் தெரியாமல், அந்த அனுபவத்தின் மூலம் குழம்பி இருந்தார்கள். பலர் இந்த சோதனைக்கு தங்களை ஆளாக்கிய நபரின் பெயரை அறியாமல் இருந்தார்கள். ஆனால் அதன் பிறகு பல வருடங்கள் கழித்து, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ளும் போது, அசம்பாவிதம் நடக்கவிருந்ததில் இருந்து தங்களுக்கு கிடைத்த ஒரு விடுதலையை உணர்ந்தார்கள். நல்லூர் முனிவரிடம் இருந்து தாங்கள் பெற்ற வசவின் காரணமாக, இந்த விடுதலை தங்களுக்கு கிடைத்தது என்று சிலர் தெரிந்துகொண்டு, அந்த சம்பவத்தை நினைவுக்கூர்வார்கள். தங்களது வணக்கத்தை தெரிவிக்க, கைகளில் பூக்கள் அல்லது பழங்களை சுமந்துகொண்டு, அவரைக் காண வருவார்கள். தன்னை வழிபட வந்ததற்காக சுவாமி அவர்களை திட்டி, துரத்தி அனுப்பி விடுவார். §§

குருவின் அருளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள தயாராக இருந்து, ஆனால் அவரது தீவிரத்தை எதிர்கொள்ள தயாராக இல்லாதவர்களை தவிர்ப்பதில் அல்லது அவர்களை நீக்குவதில் அவர் விவேகத்துடன் நடந்துகொண்டார். அவர் தனது கோபத்தை முழுமையாக திட்டி தீர்க்கும் வரை துரத்திக்கொண்டு இருப்பார். அந்த முயற்சி தவறினால், அவர் அவர்களிடம் இருந்து மறைந்து இருப்பார். அவர் பார்க்க விரும்பாத நபரை, தனது குடிசையில் தனக்கு இடையூறு விளைவிக்கும் நோக்கத்துடன் வரும் நபரை, தங்கள் வீட்டு மதில் சுவருக்குள் சகோதரி அனுமதித்தால், அவர் பல நாட்களுக்கு வீடு திரும்பமாட்டார். §§

செல்லப்பசுவாமி இதைப்போன்ற சம்பவங்களில், ஏதாவது ஒரு முறையில் சமாளித்து விடுவார். முயற்சியில் பக்தி அல்லது வேண்டுதல் அல்லது பிடிவாதம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அவை பலன் அளிக்காது. யோக சுவாமி அவரிடம் வந்து சேர்வதற்கு முன்பாக, செல்லப்பசுவாமியுடன் ஒரு சிறுவன் காணப்பட்டான். செல்லப்பசுவாமிக்கு அந்த சிறுவனை பிடித்து இருந்தது என்றும், அவர் தனது சீடனுக்கு குரு பயிற்சி அளிக்கிறார் என்று கிராமவாசிகள் கருதினார்கள். அவன் தினமும் தேரடிக்கு அருகில் இருக்க அனுமதி அளிக்கப்பட்டாலும், இரவில் தங்க அனுமதிக்கப்படவில்லை. அந்த சிறுவனுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தங்கள் யாரும் இல்லாவிட்டாலும், அவன் எவ்வளவு மன்றாடினாலும், அவனை மாலை நேரத்தில் செல்லப்பசுவாமி துரத்திவிடுவார். §§

இது பல மாதங்களுக்கு தொடர்ந்துக்கொண்டு இருந்தது. இறுதியில் மனைவியை இழந்த ஒரு வணிகருடன் தங்க, செல்லப்பசுவாமி அவனுக்கு அனுமதி வழங்கினார். அவரது சீடனாக இருந்த அந்த வணிகர், கோயிலுக்கு அருகில் ஒரு கடையை திறந்து இருந்தார். அவரும் அவரது இரு குழந்தைகளும் கோயிலுக்கு பின்னால் இருந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். அங்கே சிறுவன் உறங்குவதற்கு தாராளமாக இடம் இருந்தது என்று செல்லப்பசுவாமி கருதினார். அது ஒரு நல்ல ஏற்பாடாக இருந்தது. ஆனால் சில வாரங்கள் கழித்து, ஒரு நாள் காலையில் அவரை சந்திக்க வந்த அந்த சாதகன், அவரது குடிசையின் முன்பாக நின்றுக்கொண்டு, அந்த வணிகர் வீட்டில் வாழ்வதில் பல பிரச்சனைகள் இருப்பதாக புகார் கூறி, அவருடன் தங்க அனுமதிக்க முடியுமா என்று கேட்டான். செல்லப்பசுவாமி அவனது பிரச்சனைகளை பற்றி விசாரித்தார். §§

தாய் இல்லாத காரணத்தால், வீட்டு வேலைகளை வணிகரின் மகள் கவனித்துக்கொள்வதாகவும், இப்போது தான் அந்த வீட்டில் இருப்பதால், தான் அவளது வீட்டில் வாழ்வதை பற்றி மக்கள் தவறாக பேசுகிறார்கள் என்றும் கூறினான். இந்த வதந்தி பரவி வருவதால், அவனை முதலில் அந்த வீட்டிற்கு அனுப்பாமல் இருந்திருந்தால், இதை தவிர்த்து இருக்கலாம் என்றும் கூறினான். இந்த வேண்டுகோள் காரணமாக, செல்லப்பசுவாமி தம்மிடம் மன்னிப்பு கேட்டு தான் செய்த தவறை ஏற்றுக்கொள்வார் என்று அந்த சிறுவன் நினைத்தான். ஆனால் அவர் ஒரு நொடியும் தாமதிக்காமல், அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை என்று அறிவித்து, தானே திருமண ஏற்பாடுகளை செய்யத் தொடங்கிவிட்டார். ஒரு வாரத்திற்கு பிறகு, புதுமண தம்பதிகள் கொழும்புத்துறையில் தங்களது சொந்த வீட்டில் குடியேறி இருந்தார்கள். அதன் பிறகு அவர்களது வாழ்க்கை சீராக இயங்குவதற்கு செல்லப்பசுவாமி தேவையானவற்றை கவனித்துக்கொண்டார், மற்றும் அவர்கள் அவரது விசுவாசமான சீடர்களாக இருந்தார்கள். §§

செல்லப்பசுவாமியின் உலகில் §

கோடைகாலத்தில் ஒரு நாள் காலையில், ஒரு தொலைதூர கிராமத்து பாதையில் யோக சுவாமி தனது குருவை பின்தொடர்ந்து செல்லும் போது, கீரிமலை சென்று புனித நீராடி வரலாம் என்று செல்லப்பசுவாமி முடிவு செய்தார். அந்த இடத்தில், கடற்கரைக்கு அருகே பல கோயில்களைக் கொண்ட ஒரு வளாகத்தில் இருந்த, ஒரு பெரிய சிவன் கோயிலில், ஒரு வற்றாத நன்னீர் ஊற்றாக சுவர்களால் சூழப்பட்ட இரண்டு தீர்த்தக் கேணிகளில் மக்கள் புனித நீராடுவார்கள். மக்கள் பிரசித்தி பெற்ற இந்த குளங்களில் புனித நீராடுவதற்காக நீண்டதூரம் நடந்து வருவார்கள். இந்த சுத்தமான நீரில் பெயவர்களும் சிறியவர்களும் சந்தோசமாக குதித்துக்கொண்டு நீராடுவார்கள். பெரியவர்கள் குறுக்காகவும் நெடுக்காகவும் நீந்துவார்கள். குழந்தைகள் அங்கும் இங்குமாக நீந்தி தண்ணீரை தெறித்துக்கொண்டு நீச்சல் கற்றுக்கொண்டு இருப்பார்கள். §§

அவர்கள் கீரிமலையை நோக்கி நடந்தனர். இரு வழிகளிலும் இருபத்தி ஓரு கிலோமீட்டர் தூரத்தை கடக்க நாள் முழுவதும் நடக்கவேண்டி இருந்ததால், இரவு உணவு சாப்பிடுவதற்கு தாமதம் ஏற்படும், மற்றும் கடற்கரையோர குளத்தின் குளிர்ந்த நீரில் நீந்திக்குளிக்கும் ஆர்வத்தை யோக சுவாமியால் கட்டுப்படுத்த முடியவில்லை. அத்தகைய ஆசைகள், அவரது குருவுடன் இருக்கும் போது நிறைவேறுவது சற்று கடினமாக இருந்தது. சுட்டெரிக்கும் வெய்யிலில் குடைகளை உயர பிடித்துக்கொண்டு, பல மணிநேரங்களுக்கு நடந்து சென்றனர். §§

இறுதியாக, அவர்கள் புகழ்பெற்ற குளங்களை சென்றடைந்தனர். அவர்களுக்கு முன்பாக சில யாத்ரீகர்கள் மட்டுமே வரிசையில் நின்று இருந்தனர். உச்சியில் இருந்த சூரியன் குளிர்ச்சியான நீல நிற தண்ணீரில் பிரகாசித்துக் கொண்டு இருந்தது, மற்றும் அவர்களை நோக்கி நடுக்கடலில் இருந்து லேசான காற்று வீசிக்கொண்டு இருந்தது. யோக சுவாமி சந்தோச பெருமூச்சுடன், உப்புக்கலந்த காற்றை நுகர்ந்தார். செல்லப்பசுவாமி தன்னை சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு, “சரி, நாம் புனித நீராடிவிட்டோம்,” என்று அறிவித்து கிளம்ப ஆரம்பித்தார். யோக சுவாமி குளத்தில் இருந்த குளிர்ச்சியான நீரை தன்னால் தொட்டுணர முடியவில்லை என்பதால் சிறிது அதிர்ச்சியுடன் பின்தொடர ஆரம்பித்தார்.§§

நல்லூருக்கு திரும்பிச் செல்லும் வழியில், அவர்கள் மருதடி விநாயகர் கோயிலில் தேர் திருவிழா நடைபெறுவதை பார்த்தனர். செல்லப்பசுவாமி பாதியில் நின்று, “உனக்கு பசித்துக்கொண்டு இருக்கும்” என்று கூறி, புட்டு வாங்கி சாப்பிடுவதற்காக யோக சுவாமியிடம் இரண்டு காசுகளை தந்தார். யோக சுவாமி வேகவைத்த அரிசி மாவு மற்றும் தேங்காயில் செய்த அந்த இனிமையான உணவையும், தண்ணீர் பந்தலில் எழும்பிச்சை மற்றும் சர்க்கரை நீரையும் வாங்கிக்கொண்டார். செல்லப்பசுவாமி தனக்கென்று எதையும் வாங்கிக்கொள்ளவில்லை. தனது சீடனின் பசியாறும் வரை காத்து இருந்தார். யோக சுவாமி உணவை முழுமையாக சாப்பிட்டு முடித்தவுடன், செல்லப்பசுவாமி வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். §§

குருவுடன் சேர்ந்து நடக்க, யோக சுவாமி விரைவாக நடந்தார். அதனால் வயிற்றில் இருந்து பிட்டும் உணவும் குலுங்கத் தொடங்கின. “இனி என்னால் நடக்க முடியாது,” என்று சீடன் நினைத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்க நினைத்தார். செல்லப்பசுவாமி பின்னால் திரும்பிப் பார்க்காமலேயே, “சரி, வா வா” என்று சத்தமிட்டார். யோக சுவாமிக்கு நடப்பது கடினமாக இருந்தது. நல்லூருக்கு வந்து தேரடிக்கு திரும்பியதும், செல்லப்பசுவாமி சீடனிடம் தேநீர் குடிப்பதற்கு சில காசுகளை வழங்கினார். அவரும் ஒரு குவளை தேநீர் அருந்தினார். அது வரை அவர் தனது வயிற்றுக்கு உணவு ஏதும் அளிக்கவில்லை. யோக சுவாமி தனது பாடல்களில் ஒன்றில், உடல் பற்றிய பாடங்களை குறிப்பிடுகிறார்:§§

தேகமே மெய்யென்று சிதடனாய்த் திரிவேனை§

மோக மறுத்தாண்ட முழுமுதலை மொய்குழலாள்§

பாகம் மறைத்துப் பரிந்துவந்த பாக்கியத்தை §

நாகமலர் சொரியும் நல்லைநகர் கண்டேனே.§

இருவினையால் மதிமயங்கி இடர்பட்டுக் கிடப்பேனைக் §

கருவினையால் ஆண்டு கொள்ளக் கடவுள் திருவுளங் கொண்டு §

அருள்மேனி தாங்கி அவனியிலே வந்தானைத் §

திருவாரும் நல்லைநகர்த் தேரடியிற் கண்டேனே. §§

ஒரு நாள் அதிகாலையில் செல்லப்பசுவாமி தன் முதல் வேலையாக, யோக சுவாமியை யாசகத்திற்கு அழைத்து சென்றார். அவர்கள் யாழ்ப்பாணத்தின் முக்கிய வணிக மாவட்டமான கிராண்ட் பஜார் சென்று, அங்கு கடை வைத்திருந்த ஒரு பணக்கார வணிகரிடம் இருந்து, யாசகமாக எதையாவது வாங்கலாம் என்று செல்லப்பசுவாமி கூறினார். வெளியே பனி பொழிந்துக்கொண்டு இருக்கும் போதே, அவர்கள் கடைக்கு வெளியே நிற்கத்தொடங்கி, காணிக்கை கிடைக்கும் என்று காத்து இருந்தனர். இந்த வணிகரிடம் காணிக்கை கிடைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. தன்னிடம் யாசகம் கேட்டு வரும் சாதுக்களை “அற்பமான பிச்சைக்காரர்கள்" என்று அழைத்து, காணிக்கையாக எதையும் வழங்காத கருமி என்று செல்லப்பசுவாமி அறிந்து இருந்தார் என்பது யோக சுவாமிக்கு தெரியும். §§

இவர்கள் இருவரும் வந்து ஒரு மணி நேரம் கழித்து, வணிகர் கடைக்கு வந்தார். சுவாமிகள் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிந்து இருந்தாலும், அவர் நேராக கடைக்குள் சென்று, தனது கணக்குப்பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்தி, அவர்களை பார்க்காததைப் போல, திண்ணையில் இருந்த மேசையில் நன்றாக தெரியும் படி உட்கார்ந்து கொண்டார். வியாபாரம் வழக்கம் போல இயங்கிக்கொண்டு இருந்தது. அவர் காலையில் தனது கணக்குப் புத்தகங்களை சரிபார்த்த பிறகு கடையை மூடி, குளித்துவிட்டு மதிய உணவு சாப்பிடுவதற்காக வீடு திரும்பினார். §§

இரண்டு சாதுக்களும் வெயில் கொளுத்திய பிற்பகல் முழுவதும் வெளியே அமர்ந்து இருந்தார்கள். செல்லப்பசுவாமி பேரானந்தத்தில் தனக்குத்தானே பேசிக்கொண்டு இருந்தார். யோக சுவாமி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். பிற்பகல் வணிகர் மீண்டும் தனது கடைக்கு திரும்பினார். பல மணிநேரங்களுக்கு, அவர்கள் யாசகம் வேண்டி வெளியே காத்து இருந்தனர். அன்றைய தினம், கடை மூடுவதற்கான நெருங்கிய போது, யோக சுவாமிக்கு பதட்டம் அதிகரித்துக்கொண்டு இருந்தது. செல்லப்பசுவாமி பொறுமையாக இருந்தார். இறுதியாக, வணிகர் தனது கணக்குப் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து நிற்கும் போது, யாசகர்களின் பார்வை அவர் மீது விழுந்தது. அவர் தனது கணக்குப்பிள்ளையை அழைத்து, சுவாமிகளுக்கு ஒரு பைசா வழங்குமாறு உத்தரவிட்டார். ஒரு பைசா! செல்லப்பசுவாமி அந்த ஒற்றை காசை ஒரு புதையலைப் போல பெருமையுடன் உயர்ந்திக்கொண்டு, “ஒரு நாள் வேலைக்கு கிடைத்த அருமையான கூலி!” என்று அறிவித்தார். யோக சுவாமி தனது மனதில் இருப்பதை கொட்டித்தீர்க்க நினைத்தார், ஆனால் செல்லப்பசுவாமி அவரை வழி மறித்து, அந்த தெருவில் இருந்த ஒரு தேநீர் கடைக்கு அழைத்து சென்றார். அவர் அந்த ஒற்றைக் காசை தனது சீடனிடம் கொடுத்து ஒரு குவளை தேநீர் குடிக்க சொன்னார். §§

யோக சுவாமி அந்த கடை முதலாளியின் கருமித்தனத்தால் போராட்டத்தில் இருந்ததாலும், தனது குரு பகிர்ந்துக்கொள்ளாத எந்த ஒரு சிற்றுண்டியை உட்கொள்ள விரும்பாததாலும், முதலில் தேநீர் குடிக்க மறுத்தார். ஆனால் செல்லப்பசுவாமி வற்புறுத்தினார். யோக சுவாமி பால் கலக்காத தேநீர் குடித்துக்கொண்டு இருக்கும் போது, செல்லப்பசுவாமி தனது சீடனின் நலனுக்காக, அந்த சீடனிடம் இருந்த எல்லையற்ற பொறுமையை வெளிப்படுத்தவே நாள் முழுவதும் யாசகம் செய்தார் என்பதை அவர் புரிந்துகொண்டார். அந்த வணிகர் ஒற்றை காசுடன் தனது வெறுப்பையும் வெளிப்படுத்தினார், ஆனால் குரு இரண்டையும் வாங்கிக்கொண்டார். ஆனால் செல்லப்பசுவாமி கிளம்ப தயாராகிவிட்டதால், அவர் மீதம் இருந்த தேநீரை குடித்து விட்டு, குருவை பின்தொடர்ந்து நல்லூருக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினார். §§

image§

அந்த கோடைக்கால வெய்யிலில், நல்லூரில் இருந்து கீரிமலைக்கு அருகில் இருந்த கடலுக்கு 21 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற சம்பவத்தை பற்றி யோக சுவாமி அடிக்கடி எடுத்துரைப்பார். யோக சுவாமி குளிர்ச்சியான அந்த குளத்தில் குளிக்க தயாராகிக்கொண்டு இருந்த போது, அவரது குரு “நாம் புனித நீராடிவிட்டோம்” என்று கூறி அந்த இடத்தில் இருந்து கிளம்பினார். இதன் மூலம் அவர் தனது சீடனுக்கு பற்றின்மை பற்றி ஒரு பாடம் புகட்டினார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

அவர்களுக்கு இடையே நடந்த கருத்து பரிமாற்றங்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்து இருந்தன. செல்லப்பசுவாமி தனது சீடனிடம் நேரடியாக அபூர்வமாக பேசினார்; அவரது செயல்முறை மறைமுகமாக இருந்தாலும், யோக சுவாமி அவரை முழுமையாக புரிந்துக்கொண்டு இருந்தார். அவர் ஆன்மீக பாதையை பற்றி, சிவபெருமானை பற்றி, சைவ சித்தாந்த தத்துவதைப் பற்றி அல்லது வேறு எதையாவது பற்றி எந்த கேள்வியையும் கேட்காமல், செல்லப்பசுவாமி தனக்கு வழங்குவது அனைத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தார். §§

செல்லப்பசுவாமி எதையாவது வழங்குவாரா என்று கேள்விக்கு வாய்ப்பே இருந்தது இல்லை. அவர் பெறுவதற்கு தயாராக இருந்த எல்லோருக்கும் வழங்கிக்கொண்டு இருந்தார். செல்லப்பசுவாமி தன்னை பார்த்த முதல் பார்வையில், தனது முற்பிறவி கர்மவினைகளின் தாக்கங்கள், தனது ஆசைகள் அனைத்தும் மற்றும் தனது லௌகீக பற்றுகள் அனைத்தும் அழிந்தன என்று யோக சுவாமி தனது வாழ்க்கை முழுவதும் வியப்புடன் அறிவித்து வந்தார். அவர் இதையும் இதற்கு மேற்பட்ட தகவல்கள் பலவற்றையும் “சற்குரு தாள்கள் வாழ்க” என்ற பாடலில் தெளிவாக விளக்கி, செல்லப்பசுவாமி தனக்கு வழங்கிய புதையல்களையும் குறிப்பிடுகிறார்:§§

ஆக்கைநீ யல்லைநீயோ ஆன்மாவென் றெனக்குச்சொல்லித்§

தீக்கைவைத் தாண்டுகொண்ட தேசிகன் றிருத்தாள் வாழ்க! வாழ்க! §

இருந்துபா ரென்றெனக்கோர் இனியநல் வாக்குத்தந்த§

அருந்தவன் என்னும்வல்ல ஆசான்றன் தாள்கள் வாழ்க! வாழ்க! §

ஈயாத புல்லர் தங்கள் இல்லத்திற் கேகாவண்ணம்§

தாயாரைப் போல்வந்தாண்ட சற்குரு தாள்கள் வாழ்க! வாழ்க! §

உன்மத்தன் போலேவந்தென் னுடல்பொரு ளாவிமூன்றும்§

தன்னத்தம் வாங்கிக்கொண்ட சற்குரு தாள்கள் வாழ்க! வாழ்க! §

ஊனுமாய் உயிருமாகி உள்ளுமாய்ப் புறம்புமாகி§

நானுமாய் நீயுமாகி நடஞ்செயுந் திருத்தாள் வாழ்க! வாழ்க! §

எண்ணிய வண்ணம்வாழ எனக்குநல் லருளைத்தந்த§

கண்ணிய முடையசெல்வன் கழலடி யென்றும் வாழ்க! வாழ்க! §

ஏடவிழ் கோதைமாதர் எழில்கண்டு மயங்காவண்ணம்§

தாடலை தன்னில்வைத்த சற்குரு தாள்கள் வாழ்க! வாழ்க! §

ஐயமேன் காணுமென்றே அடியனேன் தன்னைநோக்கி§

உய்யநல் லருளைத்தந்த உத்தமன் பாதம் வாழ்க! வாழ்க! §

ஒருமொழி யதனாலென்னை ஓவியம் போலவாக்கி§

வருபயம் நீக்கியாண்ட வள்ளல்தம் திருத்தாள் வாழ்க! வாழ்க! §

ஓமெனும் எழுத்தினுள்ளே உலகெலாம் விளங்கக்காட்டி§

நாமென்று சொல்லுகின்ற நற்றவன் றிருத்தாள் வாழ்க! வாழ்க! §

ஒளவன நல்லைதன்னில் அழகிய ஆடல்காட்டிச்§

செவ்விதி னாண்டுகொண்ட செல்வன்றன் தாள்கள் வாழ்க! வாழ்க! §

அஃகமுங் காசுந்தேடி அலைந்துநான் திரியாவண்ணம்§

நஃகுதல் செய்தநல்ல நாதன்றாள் வாழ்க! வாழ்க! §§

செயல்களின் தாக்கங்களை ஈடு செய்வதற்கு மற்றும் சீடனிடம் இருந்த ஆன்மீக பண்புகளை அதிகப்படுத்துவதற்கு, குருவின் சக்தி பயன்படுவதை யோக சுவாமி பலமுறை பார்த்து இருந்தார். இருந்தாலும், செல்லப்பசுவாமி தங்களுக்கு செய்ததை என்றுமே சந்தேகிக்காத, சில அபூர்வமான மக்களை அவர் கவனித்தார். குரு நிகழ்த்தும் அதிசயம் எப்போதும் செல்லப்பசுவாமியை சுற்றி நிகழ்ந்துந்தாலும், அவை எப்போதும் குருவின் வெளிப்புற ஆளுமையை தழுவாமல் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. யோக சுவாமி மற்றும் கதிர்வேலுசுவாமி மற்றும் வெகு சிலருக்கு மட்டுமே, நல்லூரின் முனிவர் தனது ஆழமான ஆத்மாவை காண்பித்தார். இந்த இரண்டு சீடர்கள் தன்னுடன் இருக்கும் போது, அவர் பெரும்பாலும் சிரித்துக்கொண்டே நடனமாடிக்கொண்டு, “ இல்லை, நீங்கள் என்னை இன்னும் எட்டிப்பிடிக்க வில்லை! என்னை இன்னும் எட்டிப்பிடிக்க வில்லை!” என்று அவர்களை கேலி செய்வார். §§

சிலசமயம் செல்லப்பசுவாமி யாழ்ப்பாணம் நகரத்தில் இருந்த ஒரு கடைக்கு சென்று சில காசுகள், ஒரு தேங்காய் அல்லது சில வாழைப்பழங்கள் என்று தனது தேவையை கேட்டுக்கொண்டு இருப்பார், மற்றும் அது தனக்கு கிடைக்கும் வரை தனது முயற்சியை கைவிடாமல் இருப்பார். ஒருமுறை செல்லப்பசுவாமி, அத்தகைய ஒரு கோரிக்கையை விடுத்துக்கொண்டு இருக்கும் போது, ஒரு அன்பர் அருகில் நின்றுக்கொண்டு இருந்தார். எதையும் தரமுடியாது என்று மறுத்து, தனது கடையில் இருந்து கிளம்பும் கடைக்காரர் குருவை திட்டிக்கொண்டு இருந்தார். செல்லப்பசுவாமி தனது வற்புறுத்தலை வலுப்படுத்தி முயற்சியை தொடர்ந்தார். இந்த வாக்குவாதத்தால் அந்த அன்பர் அவமானமடைந்து, குருவிற்கு தேவையானது எதுவாக இருந்தாலும், அதைத்தான் கடையில் இருந்து வாங்கித் தருவதாக அவருக்கு வாக்கு அளித்தார். ஆனால் அந்த அன்பர் பேசத்தொடங்கியதும், செல்லப்பசுவாமி அவர் அந்த அன்பரை திட்டத்தொடங்கி, அவரை கடையில் இருந்து விரட்டி அனுப்பினார். அதன் பிறகு கடைக்காரரைப் பார்த்து, “நான் உங்களுக்காக சேவை செய்துக்கொண்டு இருக்கிறேன், அதற்காக நீங்கள் எனக்கு கூலி தரவேண்டும்,”என்று கூச்சலிட ஆரம்பித்தார். §§

ஒரு திருவிழா தினத்தன்று யோக சுவாமி, எல்லாம் தனது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்ற திருப்தியுடன் நிரந்தர பேரானந்தத்தில் மூழ்கி, நல்லூர் வீதியில் நின்றுக்கொண்டு இருந்தார். கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருக்க, உற்சவமூர்த்தி கோயிலை சுற்றி அழைத்து வரப்பட்டார். இதைப்பார்த்த யோக சுவாமி, “கோயில் சிப்பந்திகள் குடைகளை கொண்டு வரவில்லை. இன்று சுவாமி (உற்சவமூர்த்தி) மழையில் முழுமையாக நனையப்போகிறார்,” என்று கூறினார். §§

யோக சுவாமி பேசி முடிப்பதற்குள், அவரது குரு, “இந்த நல்லூர்வீதியில் பலர் இப்படி சொல்லி இருக்கிறார்கள்,” என்று தூரத்தில் இருந்து உறுமினார். அது அவரது குரு அவமதிக்கும் குரலில் வழங்கிய, ஒரு அதிக நுணுக்கமற்ற திருத்தமாக இருந்தது. யோக சுவாமி அமைதி அடைந்தார். தெளிவான வானத்தை மேகங்கள் மூடியது, மற்றும் சில நிமிடங்களில் மழை பெய்ய ஆரம்பித்தது. தான் செய்த அற்பமான கணிப்பு பலித்ததில், யோக சுவாமி அவமானம் அடைந்தார். தனது சீடனிடம் துளிர்விட்ட மாயவித்தை காட்டும் மயக்கத்தை, செல்லப்பசுவாமி அவ்வபோது கிள்ளிக்கொண்டு இருந்தார். §§

image§

யோக சுவாமியை தீட்சைக்கு தயார் செய்யும் பொருட்டு, அவரை இன்னொரு சீடருடன் ஒரு பெரிய கற்பலகையில் உட்காருமாறு செல்லப்பசுவாமி கூறினார். அவர்கள் இருவரும் 40 நாட்களுக்கு கடுமையாக தியானம் செய்தார்கள். அந்த விரதத்தை நிறைவு செய்யும் பொருட்டு, குரு உணவை தயார் செய்து, அதை ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரத்தில் கொடுத்தார். அதன் பிறகு அந்த பாத்திரங்களை அவர்களது கைகளில் இருந்து எட்டி உதைத்து, “என்னிடம் உங்களுக்கு தருவதற்கு இது மட்டுமே இருக்கிறது!” என்று அறிவித்தார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

“சிவகுருவை கண்டேன்”§

1906 வருடத்து இலையுதிர் காலத்தின் போது, யோக சுவாமியின் ஆன்மீக தேடல் முழுமை அடைந்து இருந்தது. அவர் தனது குருவுடன் பல வருடங்கள் இணைந்து இருந்தார். கிளிநொச்சியில் இருந்து நல்லூர் வரை பயணம் செய்த இளைஞன் இப்போது இல்லை. அவனுக்கு பதிலாக கம்பீரமாக மேலங்கி இல்லாமல், கந்தலான வெள்ளை நிற பருத்தி வேஷ்டி, தலைக்கு பின்னால் ஆங்காங்கே நரைத்த முடியுடன் ஒரு கொண்டையாக பின்னப்பட்ட அடர்த்தியான தலைமுடி, நெற்றியில் பிரகாசமான விபூதி மற்றும் வலுவான மற்றும் உறுதியான நடையுடன் ஒரு அனுபவமிக்க சுவாமி நின்றுக்கொண்டு இருந்தார். §§

அவரது உயர்ந்த கன்னங்கள் மற்றும் மென்மையான பழுப்பு கண்களை அடர்த்தியான, கருப்பு நிற தாடி சூழ்ந்து இருந்தது. கீழ்படிதலால் பக்குவமடைந்து, உள்ளத்தின் விசாலமான ஆழத்தின் அமைதி மீது கவனமாக இருக்கும் ஒருவரின் மேலோட்ட தோற்றத்தை, அந்த கண்களில் காட்சி அளித்த வலுவான அமைதி காண்பித்தது. அவரது கண்கள் மிகவும் ஆழமாகவும் சாந்தமாகவும் இருந்ததால், அதை பார்ப்பவர்களுக்கு பிரபஞ்சம் முழுவதும் தென்பட்டது. யோக சுவாமி ஒரு இளைய சிங்கம் போல இருந்தார். அவரது கண்கள் இரும்பைப் போல கூர்மையாக இருந்தன. அவரது 34 வயது உடல் ஒல்லியாக உறுதியாக இருந்தது. அவர் புதையல்களில் சிறந்த புதையலான தனது குருவை தேடிக்கொண்டதும், அதிக தேவைகள் நிரம்பிய ஆன்மீக பாதையில் முன்னேறி செல்ல அதிக ஆவலுடன் இருந்தார். §§

யோக சுவாமி தனது சற்குருவின் வழிகாட்டுதலின் கீழ், சாதனா மற்றும் தவத்தின் ஒரு கடுமையான பயிற்சியை மேற்கொண்டார். அதில் ஒரு தவமாக, யாழ்ப்பாணத்தின் கடுமையான வெயிலில், தனது உடலில் சிவப்பு மிளகாய் பசையை தடவிக்கொண்டு, பிற்பகல் வெயிலில் மேலங்கி இல்லாமல் தியானம் செய்வார் அல்லது இன்றும் பக்தியுடன் நோன்பு மேற்கொள்பவர்களைப் போல, பொசுக்கும் மணலில் அங்கப்பிரதட்சணம் செய்வார். கொழும்புத்துறையில் இருந்து நல்லூர் வரை இருந்த மூன்று கிலோமீட்டர் தூரம் முழுவதையும், யோக சுவாமி இரண்டு அல்லது மூன்று முறை அங்கப்பிரதட்சணம் செய்ததாக வைத்தியலிங்கம் தெரிவித்தார். §§

கொழும்புத்துறை மற்றும் நல்லூருக்கு இடையே இருந்த அழகான கைலாச பிள்ளையார் கோயிலில், குருவும் சீடனும் சந்தித்து பல மணிநேரங்கள் அமர்ந்து இருப்பார்கள். அந்த விசித்திரமான சோடி பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கும் சென்று, சர்க்கரை பொங்கலை சமைத்து, அதை அம்மனுக்கு படைத்து, பிரார்த்தனை மற்றும் தியானம் செய்த பிறகு, அந்த பொங்கலை தங்களது மதிய உணவாக எடுத்துக்கொண்டு நல்லூர் கோயிலுக்கு கால்நடையாக திரும்புவார்கள். இதுவே அவர்களது வழக்கமாக 1910 வருடத்தின் தொடக்கம் வரை இருந்தது. இறுதியில், அவர்கள் குரு மற்றும் சீடனாக இல்லாமல், ஒரு உயிர்சக்தியாக இருந்தார்கள். செல்லப்பசுவாமியின் வன்மை குறைந்து இருந்தது. அவர் தொடர்ந்து கண்டிப்பாக இருந்தார், மற்றும் அவரிடம் இருந்த ஏராளமான விசித்திர குணங்கள் அவரை விட்டு என்றுமே விலகவில்லை, ஆனால் அவர் தனது எழுபதாவது வயதை நெருங்கும் போது, அவரது தீவிரம் குறைந்தது மற்றும் அதன் பிறகு அவர் யோக சுவாமியிடம் கடுமையாக நடந்துகொள்ளவில்லை. இந்த முக்கியமான நாட்கள் பற்றிய கண்ணோட்டங்களை, நம்முடன் சுவாமி “குருவின் தரிசனத்தில்” பகிர்ந்துள்ளார்:§§

மனதில் இரண்டாவது எண்ணம் இல்லாத மிகப்பெரிய முனிவர்கள் வாழும் உன்னதமான நல்லூரில், நான் கண்ட சிவகுரு, செல்லப்பன் என்று அழைக்கப்பட்டு, பெண்களின் மினுமினுக்கும் கண்கள் பாய்ச்சும் காம வலையில் சிக்காத நிலையில் இருந்தார். அவர் “எல்லாம் நன்றாக இருக்கிறது, மகனே,” என்று அன்புடன் அறிவித்தார்.§§

காலத்தின் தொடக்கத்தில் இருந்து இன்று வரை, அது ஒன்றா அல்லது இரண்டா அல்லது மூன்றா என்று எல்லோரும் விசாரித்து வந்துள்ளனர். எல்லா தத்துவங்களையும் கடந்து நிலைத்து இருப்பவர், நல்லூரின் புகழ்பெற்ற குருவாக வந்து, எனக்கு உயர்வான கௌரவத்தை வழங்கினார்.§§

களங்கம் இல்லாமல் இருந்து காற்று, நெருப்பு, நீர் மற்றும் மிகப்பெரிய பூமியாக மாறி, யாராலும் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் சற்குரு, என் கண் எதிரே தோன்றி எனது சந்தேகங்கள் அனைத்தையும் அழித்து, என்னை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றார். அதன் பிறகு நான் நிற்குண நிலையை அடைந்தேன்.§§

நீர்விழ்ச்சி சத்தத்தில் இருந்து பறவைகள் வெளிவரும், தங்க பூமியான இலங்கையின் நல்லூர் நகரத்தில், பரமாத்துமாவின் புதல்வன் தனது முடிவை வெளியிடாமல், தெய்வீக குருவாக திருப்தியுடன் வாசம் செய்து, எனக்கு உண்மையான உயிரை வழங்குவதற்காக தோன்றி, தனது திருவடிகளை காண்பித்து என்னை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார். §§

சிலசமயங்களில் எதையோ தேடிய செல்லப்பசுவாமியின் பார்வை மற்றும் அவரது கண்டிப்பில் ஏற்பட்ட தளர்வின் மூலம், விரைவில் மாற்றம் நிகழவிருந்தததை யோக சுவாமி உணர்ந்தார். இவை என்ன வரவிருக்கிறது என்பதை, வார்த்தைகளை காட்டிலும் மிகவும் தெளிவாக எடுத்துரைத்தன. §§

“உங்களுக்கு தருவதற்கு என்னிடம் இது மட்டுமே இருக்கிறது”§

இந்த காலகட்டத்தில், செல்லப்பசுவாமியின் இரண்டாவது சீடன் கதிர்வேலுசுவாமி அவர்களுடன் இருந்தார். யோக சுவாமி அவரை எப்போதாவது சந்திப்பார். அவர்கள் இருவரும் ஒரே குருவின் சீடர்களாக இருந்தாலும், அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் தென்படுவது அபூர்வம், மற்றும் ஒருவர் மற்றொருவரின் பெயரை தவிர வேறு எதையும் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் ஒருவர் இன்னொருவரை தனக்குள் கண்டார்கள். அவர்கள் இருவரும் சந்திக்கும் போது, ஒருவர் மற்றொருவரை அடையாளம் கண்டுகொண்டு தலை அசைப்பார்கள். செல்லப்பசுவாமி அவர்களை பிரித்து, மக்களின் பார்வையில் இருந்து மறைத்து மற்றும் விலக்கி வைப்பதில் மிகவும் கவனமாக இருந்தார். §§

கந்த சஷ்டி திருவிழா நடைபெற்ற வாரத்தில், செல்லப்பசுவாமி தனது இரு சீடர்களையும் அழைத்து, “தியானம்" செய்வதற்கு ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்து சென்றார். நல்லூர் கோயிலுக்கு மிகவும் அருகாமையில், ஒரு பாலை மரத்தின் நிழலில், சமமாக செதுக்கப்பட்ட நீண்ட கருங்கல் பலகை ஒன்று, பல வருடங்களாக கேட்பாரற்று இருந்தது. செல்லப்பசுவாமி தனது சீடர்களை அந்த கல்லின் மீது உட்கார சொல்லி, தான் அழைக்கும் வரை தியானம் செய்யுமாறு உத்தரவிட்டார். அவர்கள் வெறும் கல்லில் உட்கார்ந்துகொண்டு தங்களது கண்களை மூடிக்கொண்டனர். நல்லூர் முனிவர் மெதுவாக அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார். §§

அவர் சிறிது நேரம் கழித்து, ஒவ்வொருவருக்கும் ஒரு பானையில் தண்ணீர் கொண்டு வந்தார். அவர் பல நாட்கள் கழித்து மீண்டும் வந்த போது தேநீர் கொண்டு வந்து, அதை ஓசைப்படாமல் அவர்களுக்கு அருகில் வைத்துவிட்டு கிளம்பினார். அவர் இவ்வாறு பல வாரங்களுக்கு, அவர்களது தியானத்தை சிதற அடிக்காமல், அவர்களை பாதுகாத்தும் கண்காணித்தும் வந்தார். இரண்டு தபஸ்விகளை கண்காணிக்க ஒரு மூத்த சீடரையும் நியமித்து இருந்தார். அவர்கள் விரதம் காரணமாக மெலிந்து, சோர்வாகவும் வெயிலால் உடல் சிவந்தும் இருந்தாலும், இருவரும் இயற்கையின் அழைப்பிற்கு மட்டுமே தங்கள் இருப்பிடத்தை விட்டு அசைந்தார்கள். ஒரு மாதம் கழித்து, அவர்களுக்கு தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டது. §§

செல்லப்பசுவாமி அவர்கள் தியானம் செய்யும் இடத்திற்கு வந்து, பல மணி நேரங்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவரை பார்த்துக்கொண்டு இருப்பார். இறுதியாக நாற்பதாவது நாளன்று (சிலர் அதை விட குறைவான நாட்கள் என்று குறிப்பிடுகின்றனர்), ஒரு திறந்தவெளி விறகு அடுப்பில் முறையாக தயார் செய்த தேநீர் கொண்டு வந்து, அவர்களது உலோக குவளையில் ஊற்றினார். அவர்கள் அவற்றை குடிக்க மெதுவாக உயர்த்தியதும், அவர் திடீரென்று திரும்பி அவர்கள் கைகளில் இருந்த குவளைகளை தட்டிவிட்டார். அவர்கள் உலர்ந்த தரையில் தேநீர் சிந்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், குருவின் நடவடிக்கையை கலங்காமல் ஏற்றுக்கொண்டனர். §§

அவர் அவர்களை சிறிது நேரம் நோட்டமிட்டு பின்னர் உணவு சமைக்க தொடங்கினார். அவர்கள் பலமுறை பார்த்திருந்த அந்த காட்சியை ஆர்வத்துடன் கவனித்தனர். பானையில் செல்லப்பாவின் குழம்பு என்று அழைக்கப்பட்ட, அரிசி மற்றும் காய்கறியின் ஒரு பிரத்யேக கலவை கொதித்துக்கொண்டு இருக்க, அவர் பனைமர இலைகளைக் கொண்டு சாப்பிடும் தொண்ணைகளை தயார் செய்தார். உணவு தயாரானதும், கரண்டியால் ஒரு சிறிய பகுதி எடுத்து, ஒவ்வொருவருக்கும் ஆவி பறக்கும் தொண்ணைகளில் அதை வழங்கினார். அவர்கள் உணவு உண்ண ஆரம்பித்ததும், அவர்கள் கைகளில் இருந்த உணவை கால்களால் தட்டிவிட்டு, “உங்களுக்கு தருவதற்கு என்னிடம் இது மட்டுமே இருக்கிறது! நீங்கள் வெளியே சென்று யாசகம் செய்து சாப்பிடுங்கள்!” என்று கத்தினார். அந்த சம்பவம் அவர்கள் இருவருக்கும் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அது ஒரு அபூர்வமான தீட்சை என்றும், அது தங்களது பயிற்சி முடிந்ததற்கான அறிகுறி என்றும் அவர்கள் அறிந்து இருந்தார்கள். “இரு யானைகளை ஒரு கம்பத்தில் கட்டி வைத்திருக்க முடியாது,” என்று அவர் அறிவித்து, அவர்களது கடினமான தியானத்தில் இருந்து அவர்களுக்கு விடுதலை அளித்தார். §§

image§

செல்லப்பசுவாமி தனது இரண்டு சீடர்களுக்கும் தீட்சையை வழங்கிய பின்னர், இரண்டு யானைகளை ஒரே கம்பத்தில் கட்டி வைக்க முடியாது என்று அறிவித்து, இருவரையும் வெவ்வேறு திசைகளில் அனுப்பி வைத்தார். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§§

கதிர்வேலுசுவாமி மறைவாக சென்று சில நாட்கள் ஆகியிருந்தன. அவர் இந்தியா சென்றதாக கூறப்படுகிறது. யோக சுவாமியும் மறைவாக சென்றுவிட்டார். தான் மேற்கொண்ட கடினமான நோன்பில் இருந்து மீள்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும், அவர் கொழும்புத்துறை திரும்பி இருந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு, செல்லப்பசுவாமியுடன் இருப்பதற்கு அவர் நல்லூர் வரை நடந்து சென்றார். தனது குருவை காணப்போகிறோம் என்ற பேரானந்தம் மற்றும் ஆர்வத்தில், சுவாமியின் இருப்பிடத்திற்குள் நுழைந்தார். §§

அவர்கள் ஒன்றாக அமர்ந்து இருந்த சில நிமிடங்களின் போது, செல்லப்பசுவாமி, “இங்கே கவனி! இங்கே கவனி! உலகம் இருக்கும் வரை, கடல்கள் இருக்கும் வரை, நான் இலங்கை நகரத்தை வழங்கிவிட்டேன். அரசரின் கீரிடத்தை வழங்கிவிட்டேன்.” 1910 வருடத்து பங்குனி மாதத்தின் இரண்டாவது திங்களன்று, இரண்டாவது தீட்சை வழங்கப்பட்டது. அதில் யோக சுவாமியின் அண்டை வீட்டுக்காரராகவும், செல்லப்பசுவாமியின் சீடனாகவும் இருந்த தியாகர் பொன்னையா கலந்து கொண்டார். சுவாமி அன்றில் இருந்து, அந்த நாளை தனது தீட்சை நாளாக கடைப்பிடித்து, அந்த நாளை ஒரு அரசரின் முடிசூட்டு விழாவை போன்றதாக விவரித்தார். §§