Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

691. §

முற்கோபமுள்ள மன்னரோடு சேர்வோர் தீ அருகில் குளிர் காய்பவர் போல் மிக அருகில் அணுகாமலும் மிக தூரச் செல்லாமலும் இருந்து கொள்ளவேண்டும்.§

692. §

மன்னன் விரும்புவதை நீவீர் பெறுவதற்கு விரும்பாது விடின் அரசனே உங்களுக்கு நிலையான செல்வம் அளிப்பான்.§

693. §

முன் எச்சரிக்கையுடன் இருக்க விரும்புவோர் தம் குற்றங் குறைகள் நிகழாது காத்துக் கொள்ள வேண்டும். உறவில் ஐயம் ஏற்படின் அதை நீக்குதல் அரிதிலும் அரிது.§

694. §

பெரியோர் முன்னிலையில் பிறர் காதில் இரகசியம் பேசுதலையும் முகம் பார்த்துச் சிரித்தலையும் தவிர்த்துக் கொள்க.§

695. §

மன்னன் மறைவாகப் பேசும் போது ஒட்டுக் கேட்காமலும் மேலும் அதில் தலையிடாமலும் இருந்து மன்னன் இரகசியங்களைத் தானாகச் சொல்லும் போது மட்டுமே கேட்டுக் கொள்ளுதல் வேண்டும்.§

696. §

அரசர் மனத்தைக் குறிப்பறிந்து ஊகித்து, தக்க தருணத்தில் அவர் மனத்தைப் புண்படுத்தாது முக்கிய காரியங்களை அவருக்கு எடுத்துக் கூறல் வேண்டும்.§

697. §

மன்னர் விரும்பிக் கேட்கும் பயனுள்ள காரியங்களை மட்டும் சொல்லுக. பலனற்றவற்றை மன்னன் கேட்டாளும் சொல்லாது விடுக.§

698. §

மன்னர் எனக்கு இளையவர், எனது உறவினர் என்று இகழ்ந்து பேசாமல் அரசின் மாட்சிமையை மதிக்கத் தக்கபடி ஒழுகுதல் வேண்டும்.§

699. §

தெளிவான அறிவுடையோர் தம் இழிவான ஒழுக்கத்தைச் சமாளிக்க தமக்குள்ள நன்மதிப்பைப் பயன்படுத்த மாட்டார்.§

700. §

நெடுங்காலம் மன்னனுடன் நட்புப் பூண்டு வாழ்ந்தமையால் அவன் மன்னிப்பான் என்று எண்ணி இழிவான செயல்களைப் புரிபவர் தம் அழிவுக்கே வழி வகுக்கின்றனர். §