Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கள்ளாமை

281. §

மற்றவர் தன்னை வெறுக்காமல் வாழ விரும்புபவன் வஞ்சனையால் பொருள் கவரும் எண்ணத்திற்கு இடம் கொடான்.§

282. §

பாபச் செயலை நினைப்பதே பாபம். ஆதலால் பிறர் பொருளைக் களவாட எண்ணுவதையே தவிர்க்க.§

283. §

கள்ளமாகக் கவர்ந்து சேர்த்த செல்வம் பெருகுவது போல் தோன்றினாலும் விரைவில் ஒருமித்தே அழிந்து விடும்.§

284. §

பிறர் பொருளை ஏமாற்றிக் கவருவதில் இன்பம் காண்பவனுக்கு அவ்வின்பம் முதிரும் போது தீராத இன்னல் தரும்.§

285. §

பிறர் பொருளைக் கவரும் நோக்குடன் அவர் சோர்வடையும் தருணம் பார்த்திருப்பவனிடம் தரும சிந்தனையும் அன்புணர்வும் பறந்து விடும்.§

286. §

பிறர் பொருளைக் கவர்வதில் ஊறிய ஆசையுள்ளவர் மெய்யறிவு காட்டும் வழியை அறிந்து ஒழுக மாட்டார்.§

287. §

நல்லொழுக்கத்தில் அளவில்லாப் பற்றுள்ளோரிடம் களவு செய்யும் கெட்டபுத்தி காணப்படாது.§

288. §

நல்லொழுக்கம் உடையோர் நெஞ்சத்தில் நேர்மை நிறைந்திருப்பது போல் களவிலே தேறியோர் நெஞ்சத்தில் வஞ்சகம் என்றும் உறையும்.§

289. §

களவேயன்றி மற்றொன்றும் தெரியாதவர் கொடுமை செய்யத் திட்டமிடும் ஒவ்வொரு கணமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவர்.§

290. §

நேர்மையுள்ளாரை விண்ணுலகம் ஒருபோதும் விலக்காது, பிறரை வஞ்சித்து வாழ்பவனின் உயிருமே அவனை விட்டகலும்.§