10 Questions About Hinduism

imageஏன் இந்துக்கள் பலர் நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்கின்றனர்?

நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொட்டு சமயச் சின்னமாகும். அது தெய்வீகத் தோற்றத்தைப் பிரதிபலிப்பதோடு அவர் ஓர் இந்து என்பதையும் அறிவிக்கின்றது. பெண்களுக்கு அது அழகுக்கு அணிசெய்கிறது.

இரண்டு கண்களுக்கிடையில் நெற்றியின் மத்தியில் அணியப்படும் பொட்டு அவர் ஓர் இந்து என்பதின் அடையாளமாகும். இந்தி மொழியில் பிண்டி என்றும் சமஸ்கிரதத்தில் பிண்டு என்றும் தமிழில் பொட்டு (திலகம்) என்றும் அழைப்பார்கள். பழங்காலத்தில் இந்து ஆண்களும் பெண்களும் பொட்டு வைத்துக் கொள்வார்கள். அவர்கள் கடுக்கன், கம்மல் போன்ற காதணியையும் அணிந்து கொள்வார்கள். தற்காலத்தில் பெண்கள் மட்டுமே பொட்டு வைத்துக் கொள்கின்றனர்.

பொட்டுக்கு பொருள் மறைபொருளாகக் கூறுமிடத்து அது ஆன்மீக மூன்றாவது கண்ணாக ஆன்மீகக் காட்சி தரும் ஞானக்கண்ணாகப் பிரதிபலிக்கிறது. நமது பௌதிகக் கண்ணால் பார்க்க முடியாததை அந்த மூன்றாவது கண் (ஞானக்கண்) காணும். இந்துக்கள் யோகத்தின் மூலம் அகக் காட்சியைக் காணத் தட்டி எழுப்புகின்றனர். நெற்றியில் வைக்கப்படும் பொட்டு இதை நினைவூட்டி ஆன்மீகக் காட்சியைக் காணவும் வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தி வாழ்க்கையின் உள் உலக செயல்பாடுகளை நன்கு அறிந்து கொள்ளவும் உதவுகிறது. எதையும் பௌதிக ரீதியில் பார்க்காமல் மனக்கண்ணல் காண வேண்டும். பிண்டி எனப்படும் பொட்டு சிந்தூரம் எனப்படும் சிவப்பு நிறத் தூளாகும். பாரம்பரிய முறைப்படி மஞ்சளுடன் எலுமிச்சை சாறும் கலந்து செய்யப்படுகிறது. சந்தனம் அல்லது ஒப்பனைப் பொருளாலும் பொட்டு வைத்துக் கொள்வர். நெற்றியில் வைத்துக் கொள்ளும் ஆன்மீக பொட்டைத் தவிர்த்து நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொட்டு, திலகம் என்று சமஸ்கிரதத்தில் கூறப்படும். திலகத்தில் பலவகை உண்டு. நெற்றியில் வைக்கப்படும் ஒவ்வொரு வகைப் பொட்டும் இந்து சமயத்தின் குறிப்பிட்ட பிரிவைப் பிரதிபலிக்கிறது. நமக்குள் முக்கிய நான்கு பிரிவுகள் உண்டு. அவை, சைவம், வைஷ்ணவம், சாக்தம், சுமார்த்தம் ஆகியன. உதாரணத்துக்கு வைஷ்ணவ இந்துக்கள் V வடிவிலான திலகம் அணிவர். இது வெண்மையான திருமண்ணால் செய்யப்படுகிறது. இந்துக்களில் பலர் முக்கியமாக சமய நிகழ்வுகளில் மிகக் கவர்ச்சியான திலகம் அணிவர். பொது இடங்களிலும் பலர் எளிய பொட்டு அணிந்து அவர்கள் இந்துக்கள் என்பதை வெளிப்படுத்துகின்றனர். இம்மாதிரியான பொட்டு அல்லது திலகம் அணிவதால் அவர் இந்து சமயத்தின் எப்பிரிவைச் சார்ந்தவர் என்பதைத் அறிந்து கொண்டு அவரோடு எப்படி உரையாட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்துப் பெண்களுக்கு நெற்றியில் அணியப்படும் பொட்டு அவர்களுக்கு அழகைத் தரும் ஓர் அடையாளமாகும். ஒரு காலத்தில் ஐரோப்பிய அமெரிக்கப் பெண்கள் கண்ணத்தில் வைத்துக் கொண்ட கறுப்புப் புள்ளியைப் போன்றதல்ல இது. சிவப்பு நிறப் பொட்டு அல்லது பிண்டி திருமணமானப் பெண்களைக் குறிக்கும். கறுப்புப் பொட்டு திருமணத்திற்கு முன்னர் கெட்ட கண்களின் தாக்கத்தைத் தவிர்க்க அணியப்படுகிறது. பெண்கள் அணியும் சேலைக்கு ஏற்றவாறு பொட்டின் வர்ணத்தை ஃபேஷனுக்காகவும் அணிந்து கொள்வார்கள். அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் நடிகைகளும் நன்கு அலங்கரிக்கப்பட்ட பொட்டு அல்லது பிண்டியை அணிகிறார்கள்.

image

மனிதர்கள் முகத்தையும் உடலையும் வண்ணத்தால் அலங்கரித்துக் கொள்வது சர்வதேச அளவில் நடைபெறும் ஒன்றாகும். ஒரு பிரிவினரின் கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் அடையாளம் முதலியவற்றை வெளிப்படுத்துகிறது. நெற்றியில் அணியப்படும் பொட்டு தான் ஒரு இந்து என்று பெருமையாகக் கூறச் செய்கிறது. மேலும் ஐம்புலன்களுக்கு அப்பால் காணும் அகக் காட்சியையும் குறிக்கிறது. இங்கே ஓரு பெண் தன் சகோதரிக்கு நெற்றியில் பொட்டு வைப்பது ஒவ்வொரு நாளும் நடைபெறும் எளிமையான நிகழ்வாகும்.
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

விரிவான விளக்கம்: குறிப்பிட்டச் சமயத்தைச் சார்ந்த ஆணும் பெண்ணும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பினால் வெவ்வேறான சமயச் சின்னங்களை அணிவார்கள். பெரும்பாலும் இலை அவர்களின் கோயில்களில், தேவாலங்களில், யூதர் திருக்கோயில்களில் ஆசீர்வதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவர்கள் சிலுவையைக் கழுத்தில் அணிகிறார்கள். யூத இளைஞர்கள் சமயத் திருமறை வாசகங்கள் கொண்ட தோல் பையையும் "யார்முல்க்கா" எனப்படும் வட்டக் குல்லாவையும் அணிவார்கள். சீக்கியர்கள் தங்கள் முடியை தலைப்பாகையில் மறைத்துக் கொள்வார்கள். முஸ்லிம் பெண்கள் தங்கள் தலையை "ஹஜிப்" எனப்படும் முக்காடிட்டு மறைத்துக் கொள்வார்கள்.

ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, மற்றும் உலகத்தின் பிற நாடுகளில் இருக்கும் நீங்கள் பிண்டி எனப்படும் பொட்டு வைத்துக் கொள்ள வெட்கப்படாதீர்கள். நெற்றியில் வைக்கப்பட்டிருக்கும் பொட்டு நீங்கள் விசேஷமானவர், ஆதியந்தமில்லாத கடவுள் உண்மையை அறிந்த இந்து என்று உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். நீங்கள் வேறு நாட்டவர் அல்லது வேறு சமயத்தவர் என்று தவறாகப் புரிந்து கொள்ள அல்லது அவ்வாறு நினைக்கச் செய்யாது. நெற்றியில் அணியப்படும் புனிதப் பொட்டு இந்துக்களை முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்தி அடையாளம் காட்டும். நெற்றியில் அணியும் பொட்டின் அர்த்தம் என்ன என்று கேட்டால் பயப்படக் கூடாது.அவ்வாறு கேட்பவர்களுக்கு நல்ல பதில் கூற இப்பொழுது உங்களுக்கு நிறையத் தகவல்கள் இருக்கின்றன. அநேகமாக இதையொட்டி உங்கள் சமயத்தைப்பற்றி மேலும் பல கேள்விகளுக்கு வழிவகுக்கலாம். சிறுவர் சிறுமியர், ஆண்கள், பெண்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப சிறியதாகவோ பெரியதாகவோ பொருத்தமான வேளைகளில் எப்போதும் பொட்டு இட்டுக்கொள்ள வேண்டும். மற்றவர் முன்னால் நமது சமயத்தைப்பற்றி அதிகக் கர்வம் அல்லது செருக்குக் கொண்டிருக்கக் கூடாது. வணிக உலகத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் சிலுவையைக் கழற்றி விடுவதை நாம் காண்கிறோம். சில சமூகத்தவர்களும், கல்விக் கூடங்களும் சமயச் சின்னங்கள் அணிவதை முழுமையாகத் தடைசெய்கிறார்கள்.