47§ |
நாம் தியானம் செய்வது எப்படி?§ |
“தியானம் என்பது ஒரு நீண்ட பயணம். மனதுக்குள் மேற்கொள்ளப்படும் ஒரு யாத்திரை,” என்று குருதேவர் கூறியிருக்கிறார். தியானம் ஒருவர் வாழ்க்கையை குதூகலமாகவும், படைப்புத்தன்மை மிக்கதாகவும், ஆழ்ந்த அறிவுமிக்கவராகவும் ஆக்கும் என்று அவருக்குத் தெரியும். இத்தகைய பழங்கால வழக்கத்தைப் பற்றி அவர் மிகத் தெளிவாக கற்பித்துள்ளார். முதலில் நாம் ஒழுங்காக ஒவ்வொரு நாளும் தியானம் செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அதற்குச் சிறந்த நேரம் அதிகாலை நேரம். அதற்குத் தகுந்த இடம்: சுத்தமான தொந்தரவற்ற அமைதியான இடம். நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு நாளும் தியானத்தை ஆக்கிக் கொண்டால் அது நமது கர்மவினையை சமப்படுத்தி, மன அமைதியை ஏற்படுத்தி வெளி உலகத்தை நமது பார்வையில் வைக்கிறது. குருதேவர் கற்றுத் தந்ததாவது: “தியானம் செய்ய சிறந்த நேரம் சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் முன்னேயுள்ள நேரம். தொடக்கமாக நீங்கள் தியானம் செய்யும் நேரம் பத்து நிமிடங்களிலிருந்து முப்பது நிமிடங்கள்வரை இருக்க வேண்டும்.”§
மூச்சுப்பயிற்சி (பிராணாயாமம்) மிகவும் முக்கியம். முதலில் உங்கள் மனதில் எண்ணங்கள் அலைபாய்வதை உணர்வீர்கள். மூச்சைக் கட்டுப்படுத்துவதன்மூலம் எண்ணங்கள் அடங்கி, தன்னுணர்வானது சிந்தனையற்ற ஆனால் உணர்வுள்ள மனதின் ஓர் இடத்தில்போய் ஒடுங்குகிறது. குருதேவர் நமக்கு “தியானத்துக்கு முன் செய்யவேண்டிய முன்னேற்பாடுகள்” என்ற வழிகாட்டிமுறையைக் கொடுத்திருக்கின்றார். அவை நமது மனதை அமைதியாக்கி தன்னுணர்வை உள்முகமாகத் திரும்பச் செய்யும் பிராணாயாமப் பயிற்சிகளும் மனப்பயிற்சிகளுமாகும். அதேபோல் அப்பயிற்சியை திருப்பி தலைகீழாகச் செய்யும்போது நாம் சாதாரண விழிப்புநிலைக்கு திரும்பி விடுவோம். நீங்கள் உள்முகமாக மனதுக்குள் போகும் நேரம் நீங்கள் ஒதுக்கிய நேரத்தில் மூன்றில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். தியானம் செய்ய எடுக்கும் உண்மையான நேரம் பாதியாகவும், தியானத்திலிருந்து வெளியேற ஆறில் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும்.§
தியானத்துக்குள் செல்லும் முறை§
1. ஆசனம்: உங்களால் முடியுமானால் தரையில் முழு பத்மாசனத்தில் அல்லது அரை பத்மாசனமிட்டு அமரவும். உங்கள் கைகளை தொடைமீது வைத்து, இடது கைமேல் வலது கையை வைத்து, இரண்டு பெருவிரல் நுனிகள் ஒன்றை ஒன்று லேசாக தொட்டுக்கொள்ளுமாறு வைத்துக் கொள்ளவும். அல்லது ஒரு மெத்தைமீதோ அல்லது கால்கள் மண்டியிட்டோ அல்லது ஒரு நாற்காலிமீதோ நீங்கள் அமர்ந்து கொள்ளலாம். தோல்களை பின்னே நகர்த்தி முதுகந்தண்டை நேராக வைத்து, அதில் தலையையும் நேராக வைத்துக்ெகாள்ளவும். நீங்கள் சமநிலையில் தெளிவாக வசதியாக அமர்ந்து இருக்கவேண்டும்.§
2. உடல் உஷ்ணம்: உஷ்ணத்தை உங்கள் உடம்பில், தலையில், நெஞ்சில், கால்களில் உணருங்கள். உங்கள் தோல்களிலிருந்து வெளியேறும் உஷ்ணக் கதிர்களை உணருங்கள்.§
3. சுவாசம்: வாய்வழி சுவாசிக்காமல் மூக்கால் சுவாசிக்க வேண்டும். நெஞ்சுகூட்டுக்கு கீழேயும் வயிற்றுக்கு மேலேயுமுள்ள “டயாஃகிராம்” (Diaphragam) என்ற சவ்வுமூலம் சுவாசிக்க வேண்டும். சுவாசிக்கும்போது உங்கள் வயிறு உள்ளேயும் வெளியேயும் வரவேண்டும். உங்கள் நெஞ்சை விரித்தும் குறுக்கியும் சுவாசிக்கக்கூடாது. அப்படி சுவாசித்தால் மனம் அமைதி அடைய சிரமமாக இருக்கும். மூச்சை உள்ளே இழுக்கும்போது ஒன்பது எண்ணிக்கை மனதில் எண்ணிக் கொண்டு, ஒரு எண்ணிக்கை மூச்சை அடக்கிக் கொள்ளவேண்டும். பிறகு மூச்சை வெளியே விடும்போது மீண்டும் ஒன்பது எண்ணிக்கை எண்ணி, உடம்பை லேசாக சுருக்கிக் கொள்ளவேண்டும். ஒரு எண்ணிக்கை மூச்சை அடக்கிக் கொள்ளவேண்டும். இதைச் செய்து பழக முதலில் ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கை மட்டுமே உங்களுக்கு சுலபமாக இருக்கலாம்..§
4. உயிர் சக்தி: அடுத்ததாக உங்கள் உடம்பின் நரம்பு மண்டலத்தை உணருங்கள். உங்கள் முகம், கைகள், கால்களில் ஓடும் நுண்ணிய நரம்பு மண்டலத்தை உணருங்கள். அந்த நுண்ணிய நரம்பு மண்டலத்தூடே உயிர்ச்சக்தி ஆற்றல் ஓடுவதை உணருங்கள்.§
5. முதுகந்தண்டின் சக்தி: இப்பொழுது முதுகந்தண்டை லேசாக அசையுங்கள். தியானம் செய்யும்போது இப்பொழுது மட்டுமே நீங்கள் உடம்பை அசைக்க முடியும். இப்படி செய்வதால் முதுகந்தண்டில் உங்கள் மனம் குவியும் என்பதுடன் அங்கு பாயும் சக்தியையும் உணரமுடியும். முதுகந்தண்டைத் தவிர வேறு எங்கும் உங்களின் கவனம் செல்லாமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.§
6. உள்ளிழுத்தல்: உடம்பிலிருந்து சக்தியை உள்ளே இழுங்கள். முதல் மூச்சை உள்ளே இழுக்கும்போது இடது கால் முழுதும் பெருவிரல்வரை உணருங்கள். மூச்சை வெளியே விடும்போது அந்த காலிலிருந்து சக்தியை இழுத்து முதுகந்தண்டுக்குள் அனுப்புங்கள். இதேபோல் வலது காலுக்கும், இரண்டு கைகளுக்கும் செய்தபின் கடைசியாக உடம்புக்கும் செய்யுங்கள்.§
7. தூய விழிப்புணர்வு: இந்நிலையில், உங்கள் உடலைப்பற்றி சிறிதளவு உணர்வு இருக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் உணர்வோடு இருக்கிறீர்கள் என்று உணருங்கள், பிறகு அந்த உணர்வைத் தவிர வேறு எதைப்பற்றியும் உணரக்கூடாது. இந்நிலையிலேயே எவ்வளவு நேரம் இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் இருக்கவும்.§
விரும்பிய ஒரு பொருளின்மீது தியானம் செய்யுங்கள்§
உங்களின் தியானம்: தளர்வான உடலுடனும் அமைதியான மனத்துடனும் இருக்கும் நீங்கள், அன்றைய நாளின்மீது மனம் குவிக்க தயாராகி விட்டீர்கள். அது நீங்கள் தீர்க்க முயலும் ஒரு பிரச்னையாக இருக்கலாம்.அல்லது சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு முடிவாக இருக்கலாம் அல்லது உங்களுக்குப் பிடித்த ஏதோவொரு விஷயமாக இருக்கலாம். ஆனால் இந்த நேரம் நீங்கள் நினைத்து செயல்படக்கூடிய நேரமல்ல—அதாவது ஒரு நினைப்பிலிருந்து இன்னொரு நினைப்புக்கு தாவும் நேரமல்ல. மாறாக ஒரு பிரச்சினையின் மீது பொதுவாக மனதை ஒருமுகப்படுத்தி, அவ்விஷயத்தைப்பற்றி ஏதேனும் ஒரு புது யோசனை அல்லது புது கருத்து தோன்றும்வரை காத்திருப்பதாகும். எனவே நினைப்பதை விட்டுவிட்டு, மனதை வெறுமையாக்கி ஒரு புது உள்ளுணர்வு தோன்றும்வரை காத்திருங்கள். மனம் வெறுமையாய் இருக்குபோது அந்த உள்ளுணர்வு தோன்றும். இப்படி நீங்கள் மெய்ஞ்ஞான அறிவைத் தொடலாம்.§
அல்லது ஐவகை சிவஞான உணர்வின்மீது தியானம் செய்யுங்கள்§
சிவசைதன்ய பஞ்சதந்த்ர: தியானத்தில் நிச்சயம் வல்லமை பெற்றுவிட்டால், நீங்கள் இந்த உயர்நிலை தியானமுறையை பயிற்சி செய்யலாம். ஐவகை சிவ உணர்வின்மீது ஒன்றன் பின் ஒன்றாக மனதைக் குவியச் செய்யச்செய்வதே இதன் முறையாகும்.§
உயிர்க்காற்று: பிராணன். மனதை மேலே இழுக்கும் மூச்சிலும் கீழேவிடும் மூச்சில் மட்டுமே வையுங்கள். அந்தப் பிராணனை சிவபெருமானின் சித்தமாக, பிரபஞ்ச நாடியாய் செயல்படுகின்ற தெய்வீக சித்தமாக உங்கள் உடலில் உணருங்கள்.§
எங்கும் வியாபித்திருக்கும் சக்தி: சக்தி: உங்கள் உடலுக்குள்ளே இயங்குகின்ற உயிர்ச்சக்தியை உணருங்கள். இதே பிரபஞ்ச சக்தியை ஒவ்வொரு உயிரிலும் காண முயலுங்கள்.§
புனித வடிவம்: தரிசனம். ஒரு நடராஜ மூர்த்தி அல்லது சிவலிங்கம் அல்லது சற்குருவின் புனித உருவத்தை உங்கள் மனதில் நிறுத்தி அதுவே சிவபேருமான் என்ற உன்னத உணர்வைப் பெற முயலுங்கள்.§
உட்சோதி: ஜோதி: ஒரு தொலைக்காட்சித் திரையைப் பார்ப்பதுபோல் உங்கள் மனதுக்குள்ளே பார்க்கவும். அடுத்ததாக திரையிலுள்ள படங்களையும் எண்ணங்களையும் நீக்கிவிடுங்கள். வெறும் ஒளி (வெளிச்சம்) மட்டுமே எஞ்சியிருக்கும். அந்த ஒளியின் மீது மனதை செலுத்துங்கள்.§
புனித ஒலி: நாதம்: தேனீக்கள் கூட்டம் எழுப்பும் ஈஈஈஈஈஈ என்னும் நாத சப்தம் தலையினுள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பதைக் கேளுங்கள். பெரும்பாலும் முதலில் ஒரு காதில் மட்டும் இந்த நாதம் கேட்கும். பிறகு இரண்டாம் காதிலும் கேட்கும். இப்படி இரண்டு காதுகளிலும் ஒலிக்கும் நாதத்தை சமப்படுத்தி தலையின் நடுவே ஒலிக்கும்படி முயற்சிக்க வேண்டும்.§
தியானதைவிட்டு வெளியே வருதல்§
ஏழு படிகளையும் பின்னோக்கிச் செய்தல்: தியானம் செய்து முடித்ததும் மேல்நிலையிலிருந்து கீழ் இறங்கி ஆரம்ப நிலைக்குச் செல்லவேண்டும். முதுகந்தண்டை உணர்ந்து சக்தியானது அங்கிருந்து உடலின் எல்லா பகுதிக்கும் பரவிச் செல்வதை உணருங்கள். பிறகு உடலின் நரம்பு மண்டலத்தை உணர்ந்து, சுவாசத்தை உணருங்கள். இறுதியாக உடலின் வெப்பத்தை உணர்ந்து நீங்கள் அமர்ந்திப்பதை உணருங்கள். கண்களைத் திறந்து “ஓம்” என்ற பிரணவத்தை மூன்றுமுறை உச்சரிக்கவும். தியானம் முற்று பெற்றது. ஒவ்வொரு தடவையும் நாம் மனதுக்குள் உள்நோக்கி செல்லும்போது நமது வாழ்வு செம்மையுறுகிறது. நீங்கள் தியானம் செய்யாமல் இருந்தால் மட்டுமே அது கெட்ட தியானம் என்று கருதப்படும் என்று குருதேவர் கூறுகிறார்.§
குருதேவர்: உங்கள் தியான விசாரணை முழுவதிலும் மனம் அசைவதேயில்லை என்ற கொள்கையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். மனதில் எண்ணங்கள் நிலைகுத்திதான் இருக்கின்றன. தன்னுணர்வு மட்டுமே நகர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வுலகத்தின் ஒரு சுதந்திரக் குடிமகன் எப்படி ஒவ்வொரு நாடாக, ஒவ்வொரு நகரமாக எங்கேயும் குடிகொள்ளாமல் பயணம் செய்கிறானோ அப்படி, தன்னுணர்வு ஒரு எண்ணத்திலிருந்து இன்னொரு எண்ணத்துக்கு நகர்ந்து செல்கிறது.§