46§ |
தியானம் என்றால் என்ன?§ |
தியானம் என்பது மனம், உடல், உணர்ச்சிகளை அமைதிப்படுத்தி நம்முள்ளே ஆழமாகச் செல்லும் யோகப்பயிற்சியாகும். நாம் உட்கார்ந்து ஒரு விஷயத்தைப்பற்றி சாதாரணமாக சிந்தனை செய்து கொண்டிருப்பதைவிட இது இன்னும் உயர்வானது. இது கண்களை வெறுமனே மூடிக்கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பதல்ல. மனதைக் குவித்து ஒருநிலைப்படுத்தி அதை அப்படியே நிலைநாட்டி இருக்கும்போது தியானம் கைகூடுகிறது. அது அமைதியான, விழிப்புமிக்க சக்திவாய்ந்த நிலையாகும். வெளியே உள்ள ஒரு பொருளில் அல்லது மனதுள்ளே ஒரு எண்ணத்தின்மீது ஒருமையோடு கவனத்தை செலுத்தும்போது புதிய புதிய அறிவுச் சிந்தனைகள் உமக்குள்ளே உதிக்கின்றன.§
நாம் முதலில் செய்யவேண்டியது என்னவெனில் சில நிமிடங்களுக்கு சும்மா உட்கார்ந்திருத்தல். அதன்பின் உட்காரும் நேரத்தை கூடுதலாக்கி பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு அசையாமல் வசதியாக உட்கார முடியும்வரை உட்கார்ந்து பழகவேண்டும். இப்படி இருபது நிமிடங்கள்வரை ஒரு விரலைக்கூட அசைக்காமல் அமைதியாக உட்கார முடியும்போது, உங்களின் தெய்வீக மனம் தன்னை வெளிப்படுத்த ஆரம்பிக்கும். அது உங்களின் ஆழ்மனதில் மீண்டும் புதுப் பதிவுகளை பதிவுபண்ணி உங்களின் கெட்ட பழக்கங்களைக்கூட மாற்றியமைக்க இயலும். இரண்டாவது முறை என்னவென்றால் முறையாக சுவாசிப்பது. மூச்சை மெதுவாக ஒன்பது முறை உள்ளே இழுத்து ஒன்பது முறை வெளியே விடவேண்டும். நமது உணர்ச்சிகளும் எண்ணங்களும் மூச்சோடு பிணைக்கப்பட்டுள்ளது. மூச்சை நாம் கட்டுப்படுத்தினால் நமது எண்ணங்களும் உணர்ச்சிகளும் தானாகவே அமைதியடைகின்றன. நமது உடம்பு அசையாமல் இருந்து நமது மனமும் உணர்ச்சிகளும் அமைதியாக இருக்கும்போது, நமக்குள்ளே ஆழ்ந்த அமைதியையும் புது அறிவையும் உணரமுடிகிறது. நமக்குள் இருக்கும் ஆன்மீக சக்தியை நாம் உணர்ந்து கொள்கிறோம். நமது சமயத்தை அறிந்துகொள்ளவும், வாழ்வின் பிரச்னைகளைத் தீர்க்கவும், சிறப்பான மனிதராக வாழவும் நாம் அச்சக்தியை உபயோகித்துக் கொள்ளலாம்.§
தியானம் என்பது விழிப்புணர்வைப் பற்றிய கல்வியாகும். எனவே அது உங்களைப் பற்றியும் இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய கல்வியுமாகும். தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் ஆழ் தியானத்துக்கு அது வழிதிறக்கும். ஆழ்தியானத்தில் மிகவும் உயர்ந்த தன்னுணர்வை (மெய்யுணர்வை) அனுபவிப்பீர்கள். உங்கள் ஆன்மாவின் தூய வெள்ளொளியையும் காண்பீா்ர்கள். தியானம் செய்யப் பழகினால் உங்கள் வாழ்வு சுவை மிகுந்து இருக்கும். மன அழுத்தம் இருக்காது. அதிக உயிரோட்டத்துடனும் விழிப்போடும் எக்காலமும் விளங்கிநிற்கும் இக்கணத்தில் வாழ இயலும். உங்களின் எண்ணங்கள் தூய்மையாக இருக்கும். சந்தோஷ உணர்வோடு இருப்பீர்கள்.§
குருதேவர்: மனதை மொத்தமாகப் பார்க்கும்போது மெய்பொருளைத் தேடுவோனுக்கு நம்பிக்கைத் தருகிறது. தான் வேறொரு பொருள் என்றும் மனதை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சாட்சி என்பதால் தான் மனதாக இருக்க முடியாது என்றும் நம்புகிறான். பிறகு மெய்ஞ்ஞான நிலையில் மனம் தூய்மையாக இருக்கிறது என்று உணர்கிறோம்.§