48§ |
அகிம்சையை நாம் ஏன் கடைப்பிடிக்கிறோம்?§ |
நாம் சைவ இந்துக்கள். இந்த அடிப்படை கொள்கை நம்மை இயல்பாகவே அகிம்சை அல்லது இன்னா செய்யாமை என்ற கொள்கையைக் கடைப்பிடிக்க உற்சாகப்படுத்துகிறது. எல்லா இடத்திலும் நாம் இறைவனைக் காண்பதால் நாம் எல்லா உயிர்களிடத்தும் ஆழ்ந்த நெருக்கத்தையும் பாசத்தையும் உணர்கிறோம். அன்பு காட்டி மதிக்கின்ற எதையும் நாம் ஒருக்காலும் துன்புறுத்துவதில்லை. எல்லா மனிதரிடத்தும், எல்லா உயிரினங்களிடத்தும், எல்லா பொருள்களிடத்தும் இறைவன் இருக்கிறார் என்று அறிந்திருப்பதால் மிகுந்த சகிப்புத்தன்மையையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் அளிக்கிறது. சிலர் கெட்டவர்கள் அதனால் அவர்கள் கெட்டவர்களாகவே நடத்தப்படவேண்டும் என்ற எண்ணத்தை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. சிலர் கெட்ட செயல்களைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் உள்ளுக்குள்ளே தெய்வீகமானவர்கள். பரிணாம வளர்ச்சியில் அவர்கள் மிகவும் கஷ்டமான பகுதியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.§
அகிம்சை கொள்கையில் இரண்டாவதாக இருப்பது கர்மவினைக் கொள்கையாகும். யாருக்காவது நாம் தீங்கு செய்தால் அது ஒருநாள் மீண்டும் நம்மிடமே திரும்பிவரும் என்று நமக்குத் தெரியும். இந்த அடிப்படை உண்மையை அறிந்து வைத்துள்ள நாம் முழுமனதாக அகிம்சையைக் கடைப்பிடிக்கிறோம். யாருக்கும் உடலால் மட்டுமல்லாமல், சொல்லாலும் மனதாலும் தீங்கிழைப்பதை தவிர்க்கிறோம். இப்படிப்பட்ட மென்மையான தன்மை பிறரை மதிக்கவும் பாராட்டவும் செய்கிறது. அகிம்சை என்பது ஆன்மீக உணர்வின் படைப்பாகும். பிறருக்கு தீங்கிழைக்கும் தன்மையானது அச்சத்தாலும், கோபம், பேராசை, பொறாமை மற்றும் வெறுத்தல் ஆகிய கீழான இச்சைமன உணர்விலிருந்து எழுகிறது. நல்லது கெட்டது, எனது உனது என்று பிரித்தாளும் போக்கை அது அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம் அதை எதிர்ப்பதில்லை.§
நமக்கு ஏற்படும் தீமை நாமே விளைவித்த வினை என்று ஏற்றுக் கொள்வதே விவேகம். அதனைப் புரிந்துணர்வோடும் மன்னிக்கும் தன்மையோடும் எதிர்கொள்ள வேண்டும். எதிர்த்து நின்றால் வினையை மேலும் பெருக்கியவர்களாவோம். ஆனாலும் அகிம்சை என்றால் அமைதியாக இருப்பது என்று அர்த்தமல்ல. நமது உயிரை அல்லது மற்றவரின் உயிரைக் காப்பாற்ற நாம் தற்காத்துக் கொள்ளலாம். அல்லது அனுமதி பெற்றுள்ள போலீசாரிடம் வலுக்கட்டாயத்தைப் பிரயோகிக்க விட்டுவிடலாம். தேச மக்களைக் காப்பாற்றும் நோக்கில் ராணுவ பலத்தை நாம் ஆதரிக்கிறோம். சமுதாயத்தையும் அரசாங்கத்தையும் மாற்றியமைப்பதிலும் புத்தாக்கம் பெறுவதிலும் அகிம்சை ஒரு வலிமையான கருவியாக விளங்குகிறது. இதை ஒத்துழையா இயக்கத்தின்மூலம் மகாத்மா காந்தி செய்துகாட்டினார்கள். சண்டையின்றி வன்முறையின்றி இந்தியாவுக்கு அது சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது. அகிம்சையை மகாவிரதம், மகாசங்கல்பம் என்றும் அழைப்பர். இதுவே இயமங்கள் நியமங்கள் யாவற்றிலும் மிகவும் முக்கியமான ஒழுக்கமாகக் கருதப்படுகிறது.§
குருதேவர்: மிகவும் மோசமான வன்முறையைப் பற்றித்தான் அகிம்சை பேசுகிறது என்று நாம் தெரிந்து கொள்வது நல்லது என்றாலும், மிகவும் நுண்ணிய கொடூரத்தையும் சாதாரண துன்புறுத்தலையும் தடுப்பது வரை அகிம்சை ஆழமாகப் போகிறது.§