சிவனை அடையும் வழி

43§

சாதனா என்றால் என்ன?§

ம்முள் மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன: தூலப்பரிமாணம், உணர்ச்சி/அறிவுப் பரிமாணம் மற்றும் ஆன்மீகப் பரிமாணம். இம்மூன்றுமே சிறந்த ஆரோக்கியத்துக்காக கவனிக்கப்பட வேண்டியவை. நமது தூலத்திரேகம் உடற்பயிற்சியினால் வலுவடைகிறது. கல்வி கற்பதனாலும் தன்னொழுக்கத்தினாலும் நமது உணர்ச்சி அல்லது மூளைத்திறன் விரிவடைந்து ஊக்கம் பெறுகிறது. சாதனா என்னும் ஆன்மீகப் பயிற்சியில் அவகாசம் எடுத்து போதிய அனுபவம் பெற்று நமது ஆன்மீக இயல்பை வளர்த்துக் கொள்கிறோம். நாம் பெரும்பாலும் வெளிவிவகாரங்களிலேயே மிகுந்த நேரத்தை செலவழிப்பதால் நம்முள் இருக்கும் அந்த ஆழ்ந்த ஆனந்தமிக்க உண்மை இயல்பை உணர்வதில்லை. இப்படி உண்மை இயல்பை உணராமலேயே ஒவ்வொரு பிறப்பாக பெரும்பாலோர் போய்க்கொண்டிருக்கின்றனர். உயிர்விடும் தறுவாயில் மட்டுமே உயர் உண்மைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குகின்றனர்.§

நாம் நமது ஆன்மீக இயல்பை வளர்த்துக்கொள்ள போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு சமய ஒழுக்க நியதிகளை அல்லது ஆன்மீகப் பயிற்சியினை அன்றாடம் ஒரு கடமையாகச் செய்வது சிறப்பாகும். இந்த அமைதிமிக்க வேளையில் மட்டுமே நாம் ஆன்மீகத்தில் முன்னேறிச் செல்லும் வாழ்வின் உள்நோக்கத்தில் கவனத்தைக் குவிக்கிறோம். பூஜை செய்வது, ஜபம் செய்வது, ஞானசாத்திரங்களைப் படிப்பது, ஹடயோகம் மற்றும் தியானம் செய்வது—இவை அனைத்துமே ஆன்மீக சாதனாக்கள்தான். ஒரு சில சாதனாக்கள்—அதாவது யாத்திரைக்குச் செல்வது போன்ற சாதனாக்கள்—ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மேற்கொள்ளப்படுகிறது. சில சாதனாக்கள் குருவின் உத்தரவுப்படி ஒருமுறை மட்டுமே செய்யக்கூடியதாக இருக்கும்.§

மிகவும் பிரசித்திப்பெற்ற ஒரு சாதனா என்னவென்றால் ஒவ்வொரு நாளும் “ௐம்” என்ற மந்திரத்தை 108 தடவை உச்சரிப்பதாகும். இந்த 10 நிமிட சாதனை பரபரப்புமிக்க இக்கால உலகில் மிகவும் பிரபல்யமாக விளங்குகிறது. பரபரப்பு மிக்க வாழ்க்கை வாழ்பவர்கள் இத்தகைய அமைதியான நேரங்களை தரக்குறைவாக மதித்து அதன் பயன்களையும் சீர்தூக்கி பார்க்காமல் இருக்கின்றனர். ஆன்மீக சாதனை மன உறுதியை வளர்க்கிறது. நம்முடைய நம்பிக்கை விசுவாசத்தையும். கடவுள், தெய்வங்கள் மற்றும் குரு மீதுள்ள நம்பிக்கை விசுவாசத்தையும் வளர்க்கிறது. அது நமது உள்ளுணர்வையும் அறிவுத் திறனையும் பயன்படுத்தி மெய்ஞ்ஞான உணர்வையும், ஆன்மாவின் உள்ளார்ந்த திறத்தையும் அடைவதற்கு வழிவகுக்கிறது. “சாதனா மூலம் உடற் சக்தியையும் நரம்பு மண்டலத்தையும் நாம் கட்டுப்படுத்தக் கற்றுக் கொள்கிறோம். சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதன்மூலம் நாம் அதை உணரமுடியும். நமது மனமும் அமைதியடைகிறது. நாம் சாதனாவை வீட்டில், காட்டில், ஓடும் நதிக்கரையில், நாம் விரும்பும் மரத்தடியில், கோயிலில், குருகுலத்தில் அல்லது தூய அமைதியான சூழ்நிலையில் பயிற்சி பண்ணலாம்.” என்று குருதேவர் குறிப்பிட்டுள்ளார். யோகசுவாமி தம் சீடர்களை சமய வழிக்கு இட்டுச் செல்லும் சாதனா மார்க்கத்தை வாழ்க்கை முழுதும் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.§

image§

shutterstock§

மனதை அமைதிப்படுத்தவும் வாழ்வுக்கு வழிகாட்டவும் இந்து சமயம் நமக்கு பல வழிமுறைகளை வழங்கியுள்ளது. இங்கே இளம் பெண்கள் தம் குரு அளித்த மந்திரத்தை ஜெபமாலையில் ஜெபித்துக்கொண்டு தியானம் செய்கின்றனர்.§

குருதேவர்: தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு சாதனாவை தவறாமல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில், முடிந்தால் விடியற் காலையில் சூரியோதயத்துக்குமுன் செய்யவேண்டும்.§