32§ |
தர்மம் என்றால் என்ன?§ |
கடவுள் பிரபஞ்சத்தைப் படைக்கின்றபோது படைப்புக்களைக் கவனிப்பதற்காக ஒழுங்கு விதிகளையும் நியதிகளையும் ஏற்படுத்தி வைக்கிறார். தர்மம் என்பது உலகத் தோற்றத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் நிலவும் தெய்வீக சட்டமாகும். அதாவது பிரபஞ்ச நியதிகளை நிலைநிறுத்துவதிலிருந்து, சமயம் நன்னெறிசார்ந்த விதிகள்வரை நிலவும் விதிகளுக்கு ஒப்ப நம்மை இணக்கத்தோடு பிணைத்து வைக்கும் தெய்வீக சட்டமாகும். அது நன்மையாற்றுதல், நன்னெறி ஒழுகல், கடமையை ஆற்றுதலுமாம். அதுவே நம்மை விடுதலைக்கு இட்டுச்செல்லும் பாதை.§
உலகத் தோற்றத்தின் நான்கு படிநிலைகளில் தர்மம் செயல்படுகிறது. அதாவது பிரபஞ்ச நிலையில், மானுடநிலையில், சமூக நிலையில் மற்றும் தனிநபர் நிலையில் தர்மம் செயல்படுகிறது. பிரபஞ்ச தர்மவிதியானது துணை அணுத்துகள் (subatomic quantums) முதல் பால்வெளி மண்டலக் கூட்டங்கள் வரையுள்ள இயற்கை உலகை ஆள்கிறது. சமூக தர்மம் சமுதாயத்தைக் காக்கிறது. மானுடதர்மம் வாழ்வின் நான்கு நெறிகளுக்கு வழிகாட்டுகிறது. தனிநபர் தர்மம் உங்கள் வாழ்வின் சொந்த வடிவமைப்பாகும். முற்பிறவியில் நீங்கள் ஆற்றிய வினைகள் அந்த வடிவமைப்பை நிர்ணயிப்பதோடு இதர மூன்று தர்மங்களின் தாக்கங்களும் அதனை நிர்ணயிக்கிறது.§
உங்களின் தனிப்பட்ட தர்மம் யாது என்று கண்டுபிடிக்கவும் அதைப் புரிந்துகொள்ளவும் சிறந்த வழி என்னவென்றால் நீங்கள் கணபதியை வணங்குவதே யாகும். நமது முற்பிறவி வினைகளை அவர் அறிவார் என்பதால் வாழ்க்கையின் சரியான பாதையை அவரால் காட்டமுடியும்.§
குருநாதர் அருளியதாவது: “இந்த விசேட நெறியைக் கடைப்பிடிப்பதன்மூலம்—அதாவது ஞானகுரு, அறிவார்ந்த பெரியோர்கள் மற்றும் நமது சொந்த ஆன்மாவின் குரல்—இவர்கள் காட்டும் நெறியைக் கடைப்பிடிப்பதன்மூலம் நாம் நம்மோடும் உலகத்தோடும் திருப்தி அடைந்தவர்களாகவும் அமைதி அடைந்தவர்களாகவும் ஆகிறோம்.”§
வாழ்வின் ஒவ்வொரு படியிலும் நாம் ஒழுகவேண்டிய தர்மம் என்னவென்றால் நன்னெறிப் பாதையைக் கடைப்பிடிப்பதாகும். இளைஞர்களாகிய உங்களின் பெரிய தர்மம் என்னவென்றால் ஒரு நல்ல மாணவராகவும், நல்ல மகன் அல்லது மகளாகவும் இருப்பதே. பெற்றோர்களின் தர்மம் என்னவென்றால் உங்களைக் காப்பாற்றுவதே. ஆசிரியர்களின் தர்மம் யாதெனில் உங்களுக்கு கல்வியைக் கற்றுக்கொடுப்பதே. போலீஸ்காரரின் தர்மம் என்னவென்றால் உங்களைப் பாதுகாப்பதே. நீங்கள் பெரியவர்களானதும் இல்லற வாழ்வில் நுழைந்தவுடன் உங்கள் குடும்பத்தைப் பேணிக்காத்து வளர்ப்பது உங்களின் தர்மமாகும். பிறகு வாழ்வின் பிற்பகுதியில் முதியவரான நீங்கள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டுவது உங்களின் தர்மமாகும். தர்மம் என்பது ரயில் தண்டவாளம் போல் என்றும், தண்டவாளத்தில் ரயில் எப்படி போகும் இடத்தை அடைகிறதோ அதுபோல் நாமும் நமது தர்மநெறியில் நின்று அடையவேண்டிய இலக்கை அடையவேண்டும் என்று யோகசுவாமி அருளியிருக்கிறார். தர்மநெறி மிகவும் முக்கியமான நெறி என்பதால் சமஸ்கிருத மொழியில் இந்து சமயத்துக்கு சனாதன தர்மம் அல்லது அனாதி வழி என்பதாகும்.§
குருதேவர்: தர்மம் என்ற சொல் மிகவும் ஆழமானது பல பொருள்களை அது உள்ளடக்கியிருக்கிறது: சிவனை அடையும் வழி, பக்திமயம், நன்மை, கடமை, கடப்பாடு, என்று பல பொருள்கள் உள்ளன…. பண்டைக் கால தர்மநெறியைக் கடைப்பிடிப்பதன்மூலம், நாம் இந்த எல்லா துன்பங்களையும், மனவலிகளையும் தடுத்து நம்மிடம் ஆக்ககரமான படைப்புத்திறன் மிக்க உற்பத்தித்திறன்மிக்க தன்னுணர்வை உருவாக்கி சிவபெருமானின் திருவடிகளுக்கு மிக மிக அருகில் நம்மை கொண்டுபோய் சேர்க்கிறோம்.§