33§ |
மறுபிறப்பு என்றால் என்ன?§ |
மறுபிறப்பு என்றால் பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறத்தல் என்ற சுழற்சியாகும். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் உலகில் பல பிறப்புக்கள் உண்டு. ஒவ்வொரு பிறவியிலும் வாழ்ந்து இறக்கும்போது நாம் இந்த உடம்பை விடுகிறோம். ஆனால் உள்ளிருக்கும் உயிர் அல்லது ஆன்மா என்றுமே இறப்பதில்லை. நாம் உடம்பை விட்டுவிட்டு சூக்கும உடலில் (நுண்ணிய உடலில்) எப்போதும்போல் நினைந்து கொண்டும் உணர்ந்துகொண்டும் செயலாற்றிக்கொண்டும் இருக்கிறோம். தூங்கும்போதும் இதேபோல்தான் உடம்பைவிட்டு வெளியேறுகிறோம். ஒவ்வொரு முறையும் தூங்கியெழும்போது நாம் மீண்டும் நம் உடம்புக்கே திரும்பிவிடுகிறோம்.§
ஆனால் மரணத்தின்போது நாம் மீண்டும் உடம்புக்குத் திரும்பி வருவதில்லை. நாம் இந்த பூலோகத்தை விட்டு வெளியேறி உள்ளுலக லோகத்தில் நினைவுணர்வோடு வாழ்கிறோம். சிலகாலம் கழித்து நாம் மீண்டும் புதிய தாய் தந்தைக்கு புதிய குழந்தையாக புதிய பெயருடன் புதிய எதிர்காலத்துடன் பிறக்கிறோம். நாம் இவ்வுலகுக்கு மீண்டும் திரும்பிவந்து புதிய உடலில் பிறப்பதையே மறுபிறப்பு ( reincarnation) என்கிறோம். முற்பிறவியின் ஞாபகம் நாம் குழந்தையாய் இருக்கும்போது தேய்ந்து மறந்துபோய்விடுகிறது. என்றாலும் வளர்ந்துவிட்ட சிலபே௫க்கு அந்த ஞாபகம் இருக்கலாம். கடைசியாக நாம் நோயின் காரணமாகவோ, வயோதிகம் காரணமாகவோ அல்லது விபத்து காரணமாகவோ மீண்டும் இறந்து போகிறோம். நாம் மீண்டும் இந்த உடம்பை விட்டு வெளியேறி நுண்ணிய உடலில் தொடர்ந்து வசிக்கிறோம். இப்படி பலதடவை மீண்டும் மீண்டும் நடக்கிறது. சில பிறப்புக்களில் நாம் ஆணாகப் பிறக்கிறோம். சில பிறப்புக்களில் பெண்ணாகப் பிறக்கிறோம். நாம் இப்பிறவியில் எப்படி வாழ்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது அடுத்த பிறப்பு எப்படி இருக்கும் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.§
மறுபிறப்பு என்பது ஒரு பெரிய பள்ளிக்கூடம் போன்றது. ஒவ்வொரு பிறப்பும் ஒரு பள்ளியறை போன்றது. வாழ்க்கை என்னும் இப்பள்ளியில் யார் படித்து வளர்கிறார்கள்? நீங்கள்தான்.படிக்கிறீர்கள். அழிவில்லாத உங்கள் ஆன்மாதான் படிக்கிறது. பல பிறவிகள் நீங்கள் வாழ்ந்துவிட்டீர்கள். ஆன்மாவின் நெடும்பயணத்தில் ஒவ்வொரு பிறவியும் ஒரு முன்னேற்றப்படியாகும். வாழ்க்கையின் தேவையான எல்லா பாடங்களையும் படித்துமுடிந்ததும், உங்கள் ஆன்மா பக்குவமடைந்ததும், எல்லா வினைகளும் தீர்ந்துமுடிந்ததும், மெய்ஞானம் (ஆன்ம தரிசனம்) அடைந்ததும் நீங்கள் மீண்டும் பிறக்கத் தேவையில்லை. அதுவே விடுதலை அல்லது மோட்சம். ஓர் ஆன்மா பாக்கியில்லாமல் அனைத்து ஆன்மாக்களின் கதி அதுவே.§
குருதேவர்: மரண பயத்தைப் போக்கும் காரணியாக இந்துசமயத்தில் மறுபிறப்பு கொள்கை காலங்காலமாக இருந்து வருகிறது. நாம் வசிக்கும் இந்த உடம்பு நாமல்ல. அழிவற்ற ஆன்மா நாம். சம்சாரம் என்னும் பரிணாமப் பயணத்தில் அது பல உடல்களில் வாழ்ந்துள்ளது. மரணத்திற்குப் பிறகு நாம் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுலகில் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு அடுத்த பிறவியெடுக்கும்வரை முன்னர் பூமியில் நாம் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை இங்கு அனுபவிக்கிறோம்.§