சிவனை அடையும் வழி

31§

கர்மவினை என்றால் என்ன?§

சிவபெருமான் இந்த பிரபஞ்சத்தைப் படைத்து அதனுள் எழுந்தருளியிருக்கிறார். அறிவதற்கு அரிதான நமது பிரபஞ்சத்தில் இறைவனின் பல சிறப்பு விதிகளும் ஒழுங்கு முறைகளும் செயல்படுகின்றன. ஒரு பொருள் ஆகாயத்திலிருந்து பூமியின்மேல் விழுவதை புவியீர்ப்பு சக்தி என்கிறோம். அதேபோல எண்ணம், வாக்கு, செயலால் ஆற்றப்படும் செயலுக்கு எதிர்விளைவுகளை நிர்ணயிக்கும் சட்டவிதியை கர்மவினைக்கொள்கை என்கிறோம். அது தானாகவே செயல்படும் தெய்வீக நீதியாகும். இந்த தெய்வீக சட்டத்தின்கீழ் நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம். செய்கின்ற செயலும் அச்செயலினால் ஏற்படும் பயனும்—இவ்விரண்டையும் நாம் கர்மவினை என்கிறோம்.§

கர்மவினைகள் மூவகைப்படும். (முதலாவது) முற்பிறவியில் ஆற்றிய கர்மவினைகள்; (இரண்டாவது) நாம் இப்பிறவியில் அனுபவிக்கக் கொண்டுவரும் கர்மவினைகள்; (மூன்றாவது) நாம் இப்பொழுது ஆற்றும் செயல்களால் உண்டாகும் கர்மவினைகள். நன்மை தரக்கூடிய நல்லெண்ணங்கள், சொற்கள், செயல்கள் ஆகியன நமக்கு எதிர்காலத்தில் நல்வினைப் பயன்களைக் கொண்டுவருகின்றன. துன்புறுத்தக்கூடிய செயல்கள் நமக்கு தீவினைப்பயன்களை திருப்பிக் கொண்டு வருகின்றன. தீமை செய்வது என்பது நச்சுக் கொடியை நட்டுவைப்பது போன்றது. நன்மை செய்வது என்பது சுவைமிக்க மாமரத்தை நட்டுவைப்பது போன்றது. கர்மவினைக் கொள்கையை புரிந்துகொள்வதால் நாம் விவேகமாக செயலாற்றி, ஆக்ககரமான எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றலைப் பெறுகிறோம். “நீங்களேதான் உங்களின் விதியை எழுதுகிறீர்கள். வாழ்க்கைக் கப்பலின் தலைவன் நீங்களே,” என்று குருதேவர்அருளியிருக்கிறார். கர்மவினை என்பது விதிக்கப்பட்ட விதியல்ல என்பதுதான் அவரின் கருத்து. அதனை வெல்ல முடியும்.§

ஒருவர் ஆற்றும் செயல்களினால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வதால் அவர்கள் விரைவில் அல்லது வாழ்வின் பிற்பகுதியில் தீமை செய்வதிலிருந்து விலகியிருக்கிறார்கள். இதனையே நாம் “கர்மவினைப்பயனே நமது ஆசான்” என்று வழங்குகிறோம். நமது நடத்தையை இன்னும் ஒழுங்கு படுத்திக்கொள்ள அது கற்றுக்கொடுக்கிறது. கடுமையான தீவினைகள்கூட நாம் பக்குவப்பட உதவுகின்றன. அறிவற்ற செயல்களினால் துன்பமிக்க பலன்களையே பெறுகிறோம் என்று கற்றுக்கொள்கிறோம். கர்மவினைக்கொள்கையை நாம் எவ்வளவுதான் புரிந்துகொண்டாலும் அதனை தைரியமாக எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சவாலே. நமது ஆணவம் இடையில் வந்து குறுக்கிடுகிறது. நமது உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. நாம் சிந்திக்காமலே பதிலடி கொடுத்துவிடுகிறோம். அத்தகைய குறைபாடுகளை நாம் இயமம், நியமம் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதன்மூலம் திருத்திக்கொள்ளலாம். கர்மவினையின் விளைவுகளை நாம் சில வழிகளில் மென்மைப்படுத்திக் (குறைத்து) கொள்ளலாம்: அதாவது கர்மவினையை எதிர்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வது. கர்மவினைபயனை நாம் பிராயச்சித்தம் செய்வது மூலமாகவும், நாம் ஆற்றிய தீவினைக்கு ஈடாக நல்வினை ஆற்றுவது மூலமாகவும் மற்றும் குருவின் அருள், கடவுளின் அருள் ஆகியவற்றை வேண்டுவதன் மூலம் குறைக்கலாம். கர்மவினைக்கொள்கை தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமல்ல, குழுக்களுக்கும், சமூகங்களுக்கும், நாடுகளுக்கும் பொருந்தும்.§

image§

shutterstock§

பிரபஞ்ச வினைக் கொள்கை நியதியின்படி நமது எண்ணங்கள், சொற்கள் மற்றும் செயல்கள் ‘பூமராங்க்’ கருவியைப்போல் நம்மிடமே மீண்டும் இப்பிறவியிலோ அல்லது அடுத்தடுத்த பிறவிகளிலோ எப்போதும் திரும்பி வருகின்றன. இப்போது மக்கள் சொல்வதுபோல் “எது புறப்பட்டுப் போகிறதோ, அதுவே சுற்றி வருகிறது”§

குருதேவர்: சிவனடியார்கள் எல்லா அனுபவங்களையும்—அவை எவ்வளவு கடுமையாக இருந்தாலும்—தாமே உருவாக்கிய கர்மவினை என்று எவ்வித குறையும் சொல்லாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். எது எப்படியோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு தைரியமாக அதனை ௭திர்கொள்ளும் சரணாகதியே அவர்களின் சக்தி.§