22§ |
நம் ஆன்மாவின் இயல்பு என்ன?§ |
நமது ஆன்மா அழிவற்ற ஆன்மீகப் பொருளாம். தூய மெய்யுணர்வும் முழுமுதற்பொருளுமே ஆன்மாவின் சாரமாகும். இந்த சாரம் பரிபூரணமானது, என்றுமுள்ளது, படைக்கப்படாதது. ஓர் ஒளிவீசும் விளக்கை ஐந்து வெவ்வேறு வர்ண துணிகளால் போர்த்தியிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இவைதான் நமது ஐந்து உடல்கள் அல்லது கோசங்கள். நமது பருவுடம்பே (தூலவுடம்பு) தோல் மற்றும் எலும்பிலான வெளியுடம்பு. இவ்வுலகில் வாழ்வதற்கு இந்த தோலுடம்பு அவசியம். இந்தத் தோலுடம்புக்கு உள்ளே பிராணவுடம்பு உள்ளது. இதன் பிராணசக்தியே நமது உடம்புக்குள் உலாவுகிறது. அதன்பிறகு நுண்ணிய அல்லது சூக்கும உடம்பு உள்ளது. இதுவே நமது சாதாரண எண்ணங்கள், விருப்பங்கள், மனஉணர்வுகளைக் கொண்டிருக்கின்றது. அடுத்ததாக புத்தி அல்லது அறிவு துலங்கும் உடம்பு. அது உயர்ந்த மனோபுத்தி மண்டலத்தில் செயல்படுகிறது. இறுதியாக இருப்பது ஆன்ம உடம்பு. இந்த ஆன்மவுடம்புதான் ஒவ்வொரு பிறவியாய் பரிணாமம் கண்டு, மீண்டும் மீண்டும் புதிய வெளி கோசங்களோடு பிறக்கிறது. பருவுடம்பு ( தோலுடம்பு) செத்து அழிந்தாலும் இந்த ஆன்மவுடல் சாகாமல் இருக்கும். இதனை குருதேவர் இவ்வாறு விளக்குகிறார்:§
“ஒளியால் நிரப்பப்பட்ட ஒரு பிளாஸ்டிக் உடம்புபோல் ஆன்மவுடல் தோன்றுகிறது. பிளாஸ்டிக் மனித பொம்மையில் கைகள், கால்கள், உடம்பு, தலை பகுதிகளை நியோன் விளக்கைப்போல் முழுதும் ஊடுருவிப் பார்க்கக்கூடிய வகையில் பார்த்திருப்பீர்கள். அந்த பொம்மையின் ஒரு பகுதியில் விளக்கு வெளிச்சத்தைக் காட்டினால் அப்பகுதி ஒளியால் பிரகாசிக்கும். அதேபோல்தான் உங்களின் ஆன்ம உடலும் காணப்படுகிறது.”§
நமது ஆன்ம உடல் ஆணோ பெண்ணோ அல்ல. அது மரணமடைவதில்லை. நமது சூக்கும உடல்களில் மொத்தம் 21 சக்கரங்கள் வண்ணமய சக்திபீடங்களாக சுழன்றுகொண்டிருக்கின்றன. நமது கால்களில் கீழ்நிலைச் சக்கரங்களாக பயம், கோபம் போன்ற கீழ்நிலை இச்சாவுணர்வுகள் வீற்றிருக்கின்றன. இடைநிலைச் சக்கரங்கள் ஏழு, அவை முதுகந்தண்டில் வீற்றிருக்கின்றன. உயர்நிலை சக்கரங்கள் ஏழும் தலைக்கு மேலே உள்ளன. அவற்றை மெய்ஞ்ஞானம் அடைந்தபிறகே அடையமுடியும். நம்முள்ளேயும் நம்மைச்சுற்றியும் ஒளிவட்டம் உள்ளது. நமது எண்ண உணர்வுகளுக்கு ஏற்ப அதன் வர்ணம் மாறும். நமக்கு மீண்டும் மறுபிறப்பு இல்லாமல் போனாலும், நம் ஆன்ம உடம்பு உள்ளுலகங்களான சுவர்லோகங்களில் தொடர்ந்து பரிணமித்துக் கொண்டிருக்கும். நாம் இந்த உடம்போ மனமோ அல்லது உணர்ச்சிகளோ அல்ல. நாம் என்றுமிருக்கும் ஆன்மா. அது ஒளிமிக்க ஆன்ம உடலைக் கொண்டிருக்கிறது. அதன் சாராம்சமாக தூய மெய்யுணர்வும் முழுமுதல் உண்மையும் இருக்கின்றன.§
குருதேவர்: உங்களைப் பற்றிய எண்ணங்களைத் புரட்டிப் போடுங்கள். நீங்கள் காலமற்ற, காரணமற்ற, பரவெளியற்ற இடத்திலிருந்து வெளிவந்ததாக உணருங்கள். சுத்தப் பிரகாசமான ஒளியுடம்பை, ஆன்ம உடலைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுவே “நான்.” அதுவே “சாட்சியாய் இருப்பவர்.”§