13§ |
நாம் எப்படி கடவுளைக் காண்பது?§ |
சிவபெருமானை நாம் அறிந்துகொள்ள முடியும் என்றும், இங்கேயே இப்பொழுதே நாம் அவரை அனுபவித்து உணர முடியும் என்றும் சைவ சமயம் நமக்கு போதிக்கிறது. இது வெறும் நம்பிக்கை அல்ல. “யாவற்றிலும் கடவுளைக் காண்பீர். நீங்கள் கடவுளிடம் இருக்கிறீர்கள். கடவுள் உங்களில் இருக்கிறார். எல்லோரிடமும் கடவுள் இருக்கிறார். அங்கே இறைவனைக் காணுங்கள்,” என்று சற்குரு யோகஸ்வாமி பறைசாற்றியிருக்கிறார்.§
எல்லாவற்றிலும் எல்லாப் பொருள் உள்ளேயும் சிவபெருமானைக் காண மிகவும் ஆழ்ந்து தியானம் செய்ய வேண்டும். “அவர் ஒவ்வொரு ஆன்மாவின் ஆன்மாவாக இருக்கிறார். நீங்கள் அகக் கண்ணைத் திறந்து பார்த்தால் அவர் மற்றவர்களிடம் இருப்பதையும், உலகில் அவர் உலகமாக இருப்பதையும் காணலாம்” என்று குருதேவர் போதித்திருக்கிறார். தொடக்கமாக, கடவுளைக் காண மிக எளிமையான வழி யாதெனில் அவரை பெரிய மகான்களிடத்தில் காணுதலாம். மகான்களின் ஆன்மீக ஒளிவட்டம் நம்மை உயர்லைக்கு உயர்த்துவதை உணரலாம். பிறர் கண்களில் காணமுடியாத ஒளிப்பிரகாசத்தை அவர்களின் கண்களில் காணலாம். அவர்களின் வெறும் வார்த்தை ஒலியே நம்மை மேலும் ஆன்மீகத்தில் ஈடுபட ஊக்குவிக்கும். கடவுளைக் காணும் இன்னொரு வழி யாதெனில் இன்னொருவரின் கண்களை ஆழமாக நோக்குதல். அவரின் குணாதிசயங்களுக்கு அப்பால் பார்த்து, அவரின் அறிவின் ஆழத்திற்கும் மேலாகச் சென்று அங்கே தூய உயிர்ச் சக்தியாக இருக்கும் கடவுளைக் காணுங்கள். இப்படிப் பார்க்கும் வழக்கம் மனிதர்களோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. மரங்கள் பறவைகள் விலங்குகளிடம் அந்த உயிர்ச் சக்தியைக் காணலாம். இப்படிச் செய்யும்போது கடவுளே நம் உயிராக இருக்கிறார் என்று அறிந்து கொள்கிறீர்கள். கடவுளே எல்லா உயிர்களிலும் உயிராக இருக்கிறார். இப்படி உயிருள்ள அனைத்திலும் உயிர் சக்தி இருப்பதை உணர்வது கடவுள் அங்கே இருப்பதை உணர்வதாம்.§
பிருகதாரண்ய உபநிடதம், “யார் ஒருவன் உயிரின் உயிராக, கண்ணின் கண்ணாக, காதின் காதாக, மனதின் மனதாகக் கடவுள் இருக்கிறார் என்று அறிகிறானோ, அவனே காரணம் அனைத்துக்கும் காரணமாக விளங்கும் மெய்ப்பொருளை முழுமையாக அறிகிறான்,” என்று விளக்குகிறது. கடவுளைக் காண வேண்டிய மூன்றாவது இடம் இந்துக் கோயிலாகும். மிக சக்தி வாய்ந்த கோயில்களில் அங்கே பிரதிஷ்டைப் பண்ணப்பட்டிருக்கும் மூர்த்தியின் பிரசன்னத்தை உணரமுடியும் என்பதோடு பூசையின்போது அம்மூர்த்தியின் திருமேனியையும் ஒரு நொடி காணமுடியும். ஞானக்காட்சி காணக்கூடிய உங்களின் மூன்றாம் கண்ணால் நீங்கள் இதனைக் காணலாம். மகான்கள் ஞானிகள் மட்டுமின்றி பலரும் கடவுளின் தரிசனத்தை ஞானப்பார்வையில் பார்த்துள்ளனர்.§
குருதேவர்: இன்னொருவரைப்பற்றி நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லையென்றால் ஒரு புன்னகை உதிர்த்துவிட்டு, “சிவபெருமானே உன்னை இந்தக் கோலத்திலும் பார்ப்பது சுகமாகத்தான் இருக்கிறது” என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். ஆண்டவனை நேசிக்கும் ஆன்மாவுக்கு விலங்குகள், பிச்சைக்காரர்கள், இளவரசிகள், அரசியல்வாதிகள், நண்பர்கள், எதிரிகள், மகான்கள், ஞானிகள், துறவிகள் அனைவருமே சிவபெருமான்தான். ஒரு புன்னகையுடன் அவன் தனக்குள் எண்ணிக் கொள்கிறான், “சிவபெருமானே. எத்தனையோ ரூபங்களில் இருக்கும் உன்னை இப்படி இன்னொரு வடிவத்தில் காண எவ்வளவு இனிமையாக இருக்கிறது”.§