12§ |
சிவபெருமானின் மூன்று பரிபூரண நிலைகள் யாவை?§ |
சிவபெருமானின் மூன்று மாசற்ற நிலைகளை—அதாவது முழுமுதற்பொருள், தெய்வீக மனம் மற்றும் ஆதி ஆன்மா—என்ற மூன்று நிலைகளை வர்ணிக்க குருதேவர் பரிபூரணம் என்ற சொல்லை உபயோகித்திருக்கிறார். பக்தர்கள் சிவபெருமானை மேலும் முழுமையாக அறிந்துகொள்ளவும், ஒவ்வொரு பூரண நிலையையும் வழிபாடு மூலமாகவும் தியானம் மூலமாகவும் மனதை ஒருமைப்படுத்தி அறிந்துகொள்ள உதவ குருதேவர் சிவபெருமானை இவ்வாறு விவரித்திருக்கிறார்.§
சிவபெருமான் தன் உருவைப்போலவே உயிர்களை இயல்பாகப் படைப்பதால், இந்த மூன்று பரிபூரண நிலைகளும் நமக்கும் பொருந்தும். முதலாவது பூரணத்துவம் முழுமுதற் பொருளான பரசிவம் என்பது அந்தராத்மாவின் உள்ளார்ந்த சாரமாகும். அந்தராத்மா என்றால் என்ன? குருதேவர் இதனை “அது மனதுக்கு அப்பாலும், எண்ணம் புலனுணர்வு மனவுணர்வுக்கு அப்பாலும் காலம் உருவம் பரவெளிக்கும் அப்பாலும் இருப்பது.” என்று விளக்குகிறார். இரண்டாவது பூரண நிலையான சிவபெருமானின் அகண்ட தெய்வீக மனம், சச்சிதானந்தம் அல்லது பராசக்தி என்னும் நமது மெய்ஞ்ஞான மனமாகும். அது தெய்வீக ஒளியாகவும் அன்பாகவும் சக்தியாகவும் அறிவாகவும் சுடர்விடுகின்றது. நாம் தியானத்தில் வெகு ஆழத்தில் உள்ளே அந்நிலையைத் தொடும்போது அனைத்துப் பொருள்களிலும் தூய மெய்ஞ்ஞான உணர்வாக நாம் பரவிப் பாய்வதை உணர்கிறோம். ‘நான்’ என்ற தன்னுணர்வு நம்மிடமிருந்து கரைந்துபோய் எல்லையற்ற அன்புணர்வையும் பேரின்பத்தையும் அனுபவிக்கிறோம். சிவபெருமானின் மூன்றாம் பூரணமானது ஆக்கப்படாத ஆதி ஆன்மா, பரமேஷ்வரர் எனப்படுவது கடவுளின் முழுமையாக விளங்குகிறது. அவரே இப்பிரபஞ்சத்தை ஆளுகிறார், நமது ஆன்மாவையும் உலகிலுள்ள அனைத்தையும் அவரே படைக்கிறார்.§
கடவுளை அன்புடன் நேசிப்பது என்பது கடவுளைத் தெரிந்து கொள்வதாகும். கடவுளைத் தெரிந்து கொள்வது என்பது அவர் உங்கள் மீதுள்ள அன்பை உணர்ந்து கொள்வதாகும். பரமேஷ்வரரின் ஒளியுடம்பை நாம் ஞானப் பார்வையில் பார்க்க இயலும். அது நமது சொந்த ஆன்ம உடம்பைப் போன்று அதே மாதிரி வடிவமைப்பில் இருக்கும். ஆனால் நமது ஆன்ம உடல் இன்னும் முதிச்சியடையாமல் இருப்பதால் அது ஒளிகுன்றி இருக்கும். இறைவன் ஆதி ஆன்மாவாக தனியம்சமாக நாதனாகவும் படைப்பவனாகவும் இருக்கும் தன்மையை பல வடிவங்களாய் சித்தரிக்கப்பட்டுள்ளது: சைவர்கள் நடராஜர் வடிவமாகவும், வைணவர்கள் விஷ்ணு வடிவமாகவும், சாக்தர்கள் தேவி வடிவமாகவும் சித்தரித்துள்ளனர். சிவபெருமானின் மூன்று பூரணத்துவத்தைப் புரிந்துகொள்ள ஒரு முழுமையான மாம்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மேலே தோல் இருக்கிறது, அடியில் கனி இருக்கிறது, உள்ளே கொட்டை இருக்கிறது. இருப்பினும் அது ஒரு முழுப் பழமாக இருக்கிறது. தோல்பகுதியே சிவனின் உடம்பு என்றால், கனியாக இருப்பது அவரது சச்சிதானந்த மனம், கொட்டைப் பகுதியே அவரின் உள்ளார்ந்த சாரமாகும்.§
குருதேவர்: மகாதேவரான சிவபெருமான் உருவமாகவும் அருவமாகவும் இருக்கிறார். அவர் உள்ளார்ந்த தூய உணர்வினர் அல்லது தூய வடிவினர். தனிப்பெருங்கடவுளான அவர் பல ரூபங்களாகத் தன்னை வெளிப்படுத்திக் காட்டுகிறார். யாவர்க்கும் அன்னியமான அவர் எல்லா வடிவங்களுக்கும் அப்பால் எல்லாம் கடந்த முழுமுதற்பொருளாக இருக்கிறார். சிவபெருமானை நாம் மூன்று பூரணத்துவ நிலைகளில்—அதாவது இரண்டு நிலைகளில் உருவமாகவும் ஒரு நிலையில் அருவமாகவும்—அறிகிறோம்.§