14§ |
சிவபெருமானின் பாரம்பரிய திருவுருவங்கள் யாவை?§ |
எல்லா உருவங்களும் சிவனின் உருவங்களே. மிகவும் புனிதமான சில திருவுருவங்களை பாரம்பரியம் நமக்கு வழங்கியிருக்கிறது. உலகின் கிட்டத்தட்ட எல்லா சிவாலயங்களிலும் சிவனின் அருவமேனியைக் குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. அது வட்டவடிவான ஒரு ஆவுடையார் மேல் முட்டை வடிவில் வீற்றிருக்கும் ஒரு எளிமையான கல்லாகும். உலோகத்திலோ அல்லது ஸ்படிகக் கல்லிலோ சிவலிங்கத்தை உருவடிக்கலாம். சிவலிங்கத்தை வணங்கும்போது நாம் கடவுளை பரசிவமாகப் போற்றி வணங்குகிறோம். அதன் எளிமையான வடிவம் விவரிக்க இயலாத இறைவனின் முழுமுதற்பொருளை இயம்புகிறது. பெண் வடிவாக அல்லது சக்தி ரூபமாய் விளங்கும் அவரின் எந்த உருவத்தையும் நாம் வணங்கும்போது அனைத்திலும் சிவனின் அன்பு விளங்குவதாக நாம் சிவனைப் போற்றி வழிபடுகிறோம். பாதி ஆணாகவும் பாதி-பெண்ணாகவும் விளங்கும் சிவனின் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் மிகவும் சிறப்பாக இதை எடுத்துக் காட்டுகிறது. சிவனையும் சக்தியையும் பிரிக்க முடியாது என்பதை அது நமக்கு நினைவூட்டுகிறது.§
இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு தெய்வீக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த நடராஜரை வணங்கும்போது நாம் இறைவனை ஆதி ஆன்மாவாக எல்லா உயிர்களையும் உலகங்களையும் படைக்கின்ற கடவுளாக நாம் போற்றி வணங்குகிறோம். தீ வட்டத்தின் நடுவே—திருவாச்சியில்—சிவபெருமான் ஆடுகின்ற அந்த (நடராஜர்) திருவுருவம் உலகில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். எனவே சிவனின் மூன்று பூரண நிலைகளை நாம் மூன்று திருமேனிகளாக வழிபடுகிறோம். என்றாலும் அவரின் திருவுருவங்கள் முடிவற்றவை.§
உபநிடதங்களில் பேசப்படும் மௌனகுரு தட்சிணாமூர்த்தியும் அவரே. பாதி சிவனாக—பாதி விஷ்ணுவாக அரி-அரன் என்று பிற ஞானநூல்கள் குறிப்பிடுகின்றன. இத்திருவுருவம் இந்து சமயத்தின் இரு பெரும் கடவுளர்களின் ஒற்றுமையையும் வேறுபாடற்ற தன்மையையும் எடுத்துக்காட்டுகிறது. சைவ ஆகமங்கள் சிவனின் ஐந்து முகங்களைக் காட்டி பஞ்ச பிரம்மாவாக சிவனின் ஐந்து ஆற்றல்களைக் குறிப்பிடுகிறது. மும்முனையாக இருக்கும் திரிசூலமும் சிவனாக வழிபடப்படுகிறது. அன்பு ஞானம் செயல் ஆகிய மூன்றை அது காட்டுகிறது. “எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி..எங்கும் திருநட்டம்” என்று திருமந்திரம் நமக்கு நினைவூட்டுகிறது.§
குருதேவர்: நமக்கு வெகு நெருக்கத்தில் சிவபெருமான் இருக்கிறார். அவர் எங்கே வாழ்கிறார்? அவர் காரண உலகமாகிய மூன்றாம் உலகில் வாழ்கிறார். இவ்வுருவில் அவர் பேசவும் நினைக்கவும் அன்பு செலுத்தவும் நமது வேண்டுதல்களைப் பெறவும் நமது கர்மவினைகளை வழிநடத்தவும் முடியும். பெரிய எண்ணிக்கைகொண்ட தேவர்கூட்டத்தை அவர் வழிநடத்துகிறார். இந்த உலகம் முழுதும், பால்வெளி அனைத்திலும், பிரபஞ்சம் முற்றிலும் சிவனின் ஆணையை இத்தேவர்கள் நிறைவேற்றி வைக்கின்றனர்.§