சிவனை அடையும் வழி

11§

சிவபெருமான் யார்?§

சிவபெருமானே இப்பிரபஞ்சத்தின் சர்வசக்தி படைத்த சர்வேஷ்வரன். அனைத்தும் அவரே அனைத்திலும் அவரே, படைப்பும் அவரே படைக்கின்றவரும் அவரே, ஒரே நேரத்தில் உள்ளும் புறமும் அனைத்தையும் கடந்து இருப்பவரும் அவரே. சிவபெருமானுக்கு மூவித இயல்புகள் உண்டு. அவரின் அதிஉயர்ந்த உண்மை இயல்பு யாதெனில் அவர் காலத்தையும் வடிவத்தையும் கடந்தவர். அவரின் இரண்டாவது இயல்பு யாதெனில் அவரின் அருள்மனம் இங்கும் அங்கும் எங்கும் வியாபித்திருக்கின்றது. அவரின் மூன்றாம் இயல்பு யாதெனில் அவரே தனிப்பெருங் கடவுளாகவும் காலத்தையும் வடிவத்தையும் படைப்பவராகவும் அவற்றின் மூலப்பொருளாகவும் இருக்கிறார். மிகவும் ஆழ்ந்த தியானத்தில் மட்டுமே கடவுளின் உண்மை இயல்பையும் மர்மங்களையும் முழுமையாக அறிய இயலும்.§

சிவன் என்றால் “மங்கலகரமானவர்,” “அருள்நிறைந்தவர்,” “கருணைமிக்கவர்” என்று பொருள்படும். சிவன் என்ற சர்வேஷ்வரனையே பல சமயங்கள் பல்லாண்டுகளாக பல நாமங்களில் வழிபட்டு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் புரிந்து கொள்ள முயன்று வருகின்றனர். சிவபெருமானுக்கு ஐந்து சக்திகள் உள்ளன: ஆக்கல், காத்தல், அழித்தல் எனும் சக்திகளுடன் மறைத்தல், அருளல் என்ற இரு அருட்சக்திகளும் உள்ளன. மூவுலகங்களையும் அவர் தன்னிலிருந்து படைத்து, அம்மூவுலகங்களின் ஒவ்வொரு அணுவிலும் ஒவ்வொரு கணமும் திருநடனமாடி காக்கின்றார். இறுதியில் அவரே தன் படைப்பை மீண்டும் தன்னுள் ஒடுக்கிக் கொள்கிறார். அவர் இதனை கோடானுகோடி ஆண்டுகளாக சுழன்று கொண்டிருக்கும் கால சுழற்சியில் தொழிற்படுத்துகிறார். பிறகு மறுபடியும் வரும் பெருங் கால சுழற்சியில் அவர் மீண்டும் படைக்கிறார். சிவனே நம்மைப்போன்ற தனிப்பட்ட உயிர்களையும் படைக்கிறார். அவரின் நான்காவது ஐந்தாவது சக்திகளான மறைத்தல் மற்றும் அருளல் சக்திகளால் நமது பரிணாம வளர்ச்சியை ஒரு தந்தை குழந்தையை காப்பதுபோல் காத்து வழிகாட்டுகிறார்.§

அன்பு பொழியும் இந்தப் பெருங்கடவுளை நாம் யாண்டும் வணங்கி வழிபடவேண்டும். அவரைக் கண்டு நாம் பயப்படக்கூடாது. அவர் நமது ஆத்மாவின் ஆத்மா. நம் மூச்சைவிட மிகவும் அருகில் இருக்கிறார். குருநாதர் நமக்கு போதித்திருப்பதாவது “அவரின் இயல்பு அன்பு. அவரை பக்தியுடன் வணங்கினால் அன்பு என்றால் என்ன என்று தெரிவதோடு பிறரிடம் அன்பாக இருப்போம்.” நமக்கு மேலே இருக்கும் சூரியன் சிவனே, நிலத்தைக் குளிர்விக்கும் காற்றும் சிவனே, ஐம்பூதங்களும் சிவனே, நம் மனதிலிருக்கும் எண்ணமும் சிவனே, நம் உடம்பிலிருக்கும் உள்ளொளியும் சிவனே, உயிருள்ள பொருள்களிலும் உயிரற்ற சடப்பொருள்களில் இருப்பவரும் சிவனே. அறிவுக்கும் அப்பால் ஆண் பெண் குறிகளுக்கும் அப்பால் உள்ள அவர் மரணமற்றவராக மூவுலகுக்கும் அப்பால் இருக்கின்றார், என்றாலும் ஆன்மாவிலும் உடனாகக் கலந்திருக்கிறார்.§

image§

shutterstock§

இந்த கேரள சுவர் சித்திரம் சிவனின் ஆண் பாதி—பெண் பாதி என்ற அர்த்தநாரீஸ்வர உருவத்தை அழகாக சித்தரிக்கிறது. சிவனும் சக்தியும் பிரிக்க முடியாத ஒரு தெய்வீகம் என்று சிவ பக்தர்கள் நம்புகின்றனர்.§

குருதேவர்: கடவுளிடம் அன்பு கொள்வது என்பது கடவுளை அறிந்து கொள்வது. கடவுளை அறிந்து கொள்வது என்பது அவர் உங்கள் மீது காட்டும் அன்பை உணர்ந்து கொள்வது. கருணைமிக்க அக்கடவுளின் சோதிமிக்க உருவை ஞானதிரிஷ்டியில் காணலாம். நம்மைப் போன்ற சிற்றுயிர்களையும் அண்ட சராசரங்களையும் அவர் கருணையோடு காக்கின்றார்.§