5§ |
இந்து சமயம் என்றால் என்ன?§ |
இந்தியாவின் பண்டைய சமயம் இந்துசமயம். இன்று உலகம் முழுதும் நூறு கோடி மக்கள் இதனைப் பின்பற்றுகின்றனர். யாராலும் தோற்றுவிக்கப்படாமல், இந்தியா நாகரீகம் அடைந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்து சமயம் சனாதன தர்மம்—அநாதி உண்மை—என்ற பெயரில் வழங்கி வரலாயிற்று. அது வேதத்தையும் இதர ஞானசாத்திர நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது. அதில் நான்கு நம்பிக்கைகள் நடுநாயகமாக விளங்குகின்றன. முதல் நம்பிக்கையானது சர்வ வல்லமை படைத்த கடவுள் ஒருவரே; அவரே இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அதன் முழுதும் வியாபித்திருக்கிறார்;. அவரே அனைத்திலும் அனைத்துமாக இருக்கிறார். இரண்டாம் நம்பிக்கை—காரண காரியம், வினை எதிர்வினை என்ற கர்ம வினைக்கொள்கையின்மீது நம்பிக்கை. மூன்றாவதாக தர்மம் என்ற தெய்வீக ஒழுங்கு நியதியால், அறநெறியால், கடமையால் இந்த அண்டம் ஆளப்படுகிறது என்ற நம்பிக்கை. நான்காவதாக இந்துக்கள் மறுபிறவி (Reincarnation) என்ற பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு (Rebirth) என்ற இயற்கை நடைமுறையில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.§
இந்நான்கு நம்பிக்கைகளும் மிகவும் முக்கியம் என்றாலும் இந்து சமயத்தில் ஆன்மீக பாதையில் மேலும் முன்னேறிச்செல்ல வெறும் நம்பிக்கைகள் மட்டுமே போதாது. ஆன்மீக முன்னேற்றத்துக்கு நம் செயல் நடவடிக்கைகளும் நடத்தையுமே முக்கிய அம்சமாக விளங்குகிறது. கோயில் வழிபாடு, தியானம், யோகம், திருத்தல யாத்திரை, பக்திப் பாடல்கள் மூலம் இந்துக்கள் கடவுளையும், ஆத்மஞானத்தையும் தம்முள் அனுபவிக்க விழைகின்றனர். சிறந்த இல்லற வாழ்க்கை முறையும் கால வரம்பற்ற பாரம்பரிய கலாச்சாரத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர். அவர்கள் ஞானகுருவையும், ஞானிகளையும் முனிவர்களையும் போற்றுகின்றனர். பரம்பொருளுக்கு உதவியாக இருக்கும் பல தெய்வங்களை அவர்கள் வணங்குகின்றனர். சனாதன தர்மத்தின் மூன்று தூண்களாக ஞானசாத்திர நூல்கள், கோயில்கள் மற்றும் ஞானகுருக்கள் விளங்குகின்றனர்.§
இந்து சமயத்தின் பழம் நம்பிக்கைகள் இன்று ஆலமரத்தின் பல கிளைகள்போல் பல்வேறு வடிவங்களாக விளங்கி வருகின்றன. அதன் முக்கிய நான்கு கிளைகள் அல்லது சமயப் பிரிவுகளாவன: சைவம், வைஷ்ணவம், சாக்தம் மற்றும் ஸ்மார்த்த சமயம். ஒவ்வொரு பிரிவும் பலப்பல குரு பரம்பரைகளையும், சமய ஆச்சாரியர்களையும், கோயில் குருக்களையும், புனித ஞான இலக்கியத்தையும், துறவிகள் சமூகத்தையும், பாடசாலைகளையும், யாத்திரை மையங்களையும், பல்லாயிரக்கணக்கான கோயில்களையும் கொண்டிருக்கின்றன. இந்து சமயத்துக்கென்று ஓர் அதிகார மையம் இல்லையென்பதால், இந்த நான்கு பிரிவுகளும் இந்து சமயத்தின் பொதுவான விரிந்த வரலாற்றையும், கலாச்சாரத்தையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்துகொண்டு தனித்தனி சமயமாக சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.§
குருதேவர்: இந்து சமயம் ஒரு மறைஞானமிக்க (mystical) சமயம். பக்தர்கள் தமக்குள்ளே சுயமாக அனாதி உண்மைகளை அனுபவிக்க வழிகாட்டும் அது, கடவுளும் மனிதனும் என்றென்றும் ஒன்றே என்ற சுய உணர்வின் உச்சத்தை இறுதியில் அடைகிறது.§