சிவனை அடையும் வழி

4§

சமயம் என்றால் என்ன?§

மயம் என்பது இறை, உயிர், உலகம் பற்றிய ஒரு நம்பிக்கை முறை. சரித்திரம் முழுதும் பார்க்கும்போது உலகமுழுதும் இருக்கும் உண்மையைத் தேடுவோர் உலகப் பொருள்களின் இயல்பைத் தெரிந்துகொள்ள முயன்றுள்ளனர். மனதின் மர்மங்கள் பற்றியும், பரம்பொருள் பற்றியும், வாழ்வின் நோக்கம் பற்றியும் அறிந்துகொள்ள பெரிதும் முயன்றனர். துன்பத்திற்குக் காரணம் என்ன, அதனைப் போக்கும் வழி என்ன என்றும் புரியாமல் குழம்பினர். நன்மை தீமை என்றால் என்ன, தர்மம் அதர்மம் என்றால் என்ன என்றும் ஆராய்ந்தனர்.§

மெய்ப்பொருளைத் தேடும் இந்த ஆராய்ச்சி பல தத்துவ சிந்தனைகளை உருவாக்கியிருக்கின்றது. கடவுள் நம்பிக்கை அல்லது கடவுள் எழுந்தருளியிருப்பதை ஏற்கின்ற அமைப்புகளை சமயங்கள் அல்லது மதநம்பிக்கைகள் என்று அழைக்கிறோம். இன்று உலகில் பன்னிரண்டுக்கும் மேலான பெரிய சமயங்களும் நூற்றுக்கணக்கான சிறிய சமயங்களும் உள்ளன. உலகின் 740 கோடி மக்கள் தொகையில், 600 கோடி மக்கள் ஏதாவது ஒரு சமயத்தைப் பின்பற்றுகின்றனர். கிறிஸ்துவம், இஸ்லாம், இந்துசமயம், சீன நாட்டுப்புற சமயம், புத்த சமயம் ஆகிய இவை ஐந்துமே பெரிய சமயங்களாகும். பல பாரம்பரிய கலாச்சாரங்கள் பழங்கால நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன.§

பெரும்பாலான சமயங்களில் ஞானசாத்திரம் என்ற சமய நூல்கள் உள்ளன. இந்து சமயத்தின் முதன்மையான ஞானசாத்திர நூல் வேதங்களே. புத்தர்களுக்கு தம்மபதம் என்ற நூலும், கிறிஸ்தவர்களுக்கு பைபிளும் முஸ்லிம்களுக்கு குர்ரானும் உள்ளன. வாழ்க்கையை எப்படி வாழ்வது, நாம் இறக்கும்போது என்ன நேர்கிறது என்ற விசயங்களை சமய சாத்திர நூல்களும் சரித்திரத்தில் வாழ்ந்த சமய ஞானிகளின் போதனைகளும் தெளிவாக காட்டுகின்றன.§

ஒவ்வொரு சமயமும் வழிபாட்டுத் தலங்களையும், சமயகுருமார்களையும் சமய சடங்குகளையும் கொண்டிருக்கின்றன. எல்லா சமயமும் ஒன்றல்ல. ஒவ்வொருவரின் நம்பிக்கைகளும் வழிபாட்டு முறைகளும் எப்போதும் பெரிய அளவில் வேறுபடுகின்றன. உலகிலுள்ள பெரிய சமயங்களில் இந்து சமயம், ஜைனசமயம், புத்தசமயம், சீக்கிய சமயம் ஆகியவை கிழக்கத்திய நாடுகளில் தோன்றிய சமயங்களாம். ஜுடாயிசம், ஜொரொஸ்ட்ரியனிசம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதமும் மேற்கு நாடுகளில் தோன்றியவை. கிழக்கு நாடுகளில் தோன்றிய சமயங்களுக்கும் மேற்கு நாடுகளில் தோன்றிய சமயங்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. கிழக்கில் தோன்றிய சமயங்கள் இறைவனும் உயிரும் ஒன்று என்ற ஒருமை கொள்கையையும் மனதுக்குள் உள்முகமாக நோக்கிச் செல்லும் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மேற்கு நாட்டு சமயங்கள் இறையும் உயிரும் வேறு என்ற இருமை கொள்கையையும் வெளிநோக்கு பார்வையையும் கொண்டுள்ளன. கிழக்கத்திய சமயங்கள் எல்லா பொருள்களிலும் இறைவனைக் காண்பதோடு யாவற்றையும் புனிதமாகக் கருதுகின்றனர். மேலை நாட்டு சமயங்களோ இறைவன் யாவற்றிலும் நிறைந்துள்ளான் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதுடன் எது புனிதமானது எது புனிதமற்றது என்று அழுத்தமாக பிரித்துக் காட்டுகிறது. கர்மவினை, மறுபிறவி, மோட்சம் என்ற கொள்கைகளை கிழக்கத்திய மதங்கள் உறுதியாக நம்புகின்றன. அதேவேளையில் மேற்கு நாட்டு சமயங்கள் ஆன்மாவுக்கு ஒரே பிறவிதான் என்றும் அதற்கேற்ற வெகுமதியும் தண்டனையும் கிடைக்கும் என்றும் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளன.§

image§

shutterstock§

புத்தக அலமாரியில் கலைக்களஞ்சியம் இருக்கிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒரு பெரிய சமயத்தைப்பற்றி விளக்குகிறது. அவற்றைப் புரட்டிப்பார்க்கும்போது சாதாரண தலைப்புகளின்கீழ் எவ்வளவு பெரிய நுணுக்கமான விஷயங்கள் உள்ளன என்று அறியப்படுகிறது.§

குருதேவர்: மூவுலகுக்கிடையே உள்ள தொடர்புதான் சமயம். இந்த உள்ளுலகங்களோடு நாம் தனிப்பட்ட முறையில் எப்படி தொடர்பு கொள்ளமுடியும் என்பதே கோயில் வழிபாடு.§