ஹடயோகம் என்பது நமது உடலைக் கையாளும் ஒரு முறையாகும். மனதையும் நாடிநரம்பு மண்டலத்தையும் அது சாந்தப்படுத்தி அமைதியாக்கும். அது தியானத்திற்கு ஒருவரை தயார்படுத்தும் ஒரு முக்கிய வழியாகும். ஹடயோகம் என்பது என்பது உடம்பை குறிப்பிட்ட நிலைகளில் வைத்து உடம்பின் நாடி நரம்புகளில் ஓடும் உயிர் சக்தியை மிகச் சீராக வைக்கும் ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு வயலின் தந்திக் கம்பியை முறுக்கேற்றி சரியான சுர கதியில் வைப்பது போலாகும். வயலினை சரிசெய்தால் ஒவ்வொரு கம்பியிலிருந்தும் சீரான நாதம் புறப்பட்டு ஒன்றுக்கொன்று ஒத்த ஒலியில் ஒலிக்கும்.§
இந்த அத்தியாயத்தில் மூலநூலில் உள்ளபடி 24 ஆசனங்களுக்கான விளக்கப் படங்களும் செய்முறைகளும் தரப்பட்டுள்ளன. மும்மூன்று ஆசனப் பகுதிகளாக எட்டு பகுதிகளில் தரப்பட்டுள்ளது. கடுமையான மேலும் பல ஆசன முறைகள் இருப்பினும் இங்கு காட்டப்பட்டிருக்கும் 24 ஆசனங்களும் எளிமையான வகையில் தினமும் பயிற்சி செய்யக்கூடியதாக நல்ல சமச்சீரான முறையை அளிக்கின்றன. ஒரு நல்ல ஆழ்ந்த தியானம் செய்ய நீங்கள் தயாராகும்போது இந்த ஆசனங்களே உங்களுக்குத் தேவைப்படும். சிறந்த பலன்கள் கிடைக்க வேண்டுமெனில் ஒரு தேர்ச்சி பெற்ற யோகா ஆசிரியரால் இந்த ஆசனங்கள் நேரடியாகக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் செய்முறைகளும் விளக்கப் படங்களும் வெறும் அடிப்படைகளே. மேலும் தெளிவான உயர்நிலை ஆசனங்களுக்கு ஒரு அங்கீகாரம் பெற்ற யோகப் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளவும்.§
ஆசனங்கள் செய்வதால் தசை திசுக்கள் நீட்டிக்கப்பட்டு, முறுக்கேறி உறுதிபெறுவதுடன் உறுப்புக்கள் மசாஜ் செய்யப்படுகின்றன. நாடிநரம்புகளை அது தூண்டிவிடுவதுடன் இடகலை பிங்கலை நாடிகளை சமநிலையில் வைக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் இருப்பினும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 24 ஆசனங்கள் உங்கள் உடம்பில் எல்லா முக்கிய உறுப்புக்களையும் இயக்குகிறது. ஒவ்வொரு யோகாசனமும் சுகமான நிலையில் 30 முதல் 120 வினாடிகள் வரை உடம்பை வருத்தாமல் செய்ய வேண்டும். முழுமையான நீட்டலும் தளர்வு நிலையும் ஏற்படும்போது உடம்பிலும் மற்றும் மனோ நாடிநரம்பு மண்டலங்களில் நுண்மையான தூண்டல் ஏற்படத் தொடங்குகிறது. தினமும் இந்த ஆசனங்களை தனிமையில் உங்கள் சொந்த அறையில் (உங்கள் உலக விஷயங்களைப் பற்றி ) கவலைப் படாமல் செய்து பழகுங்கள். உணவுக்குப் பின்னர் ஆசனங்களை செய்யக்கூடாது. சில ஆசனங்களை நீங்கள் போட முடியாவிட்டாலோ அல்லது சரியாகச் செய்ய முடியாவிட்டாலோ அதைப் பற்றி கவலைப் படாதீர்கள். உங்களால் முடிந்தவரை செய்யுங்கள். போட்டி போட்டுக்கொண்டு செய்ய விழையாமல் உங்களால் முடிந்த அளவு கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறுங்கள். பயிற்சி செய்ய செய்ய உங்கள் உடம்பு மென்மையாவதை உணர்வீர்கள். அது உங்களின் மனது இளகுவதையும் விழிப்புடன் இருப்பதையும் உள்மனதின் அழுத்தத்திலிருந்து விடுதலையாகிக் கொண்டிருப்பதையும் காட்டுகிறது. சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் எண்ணத்தையும் பிராணன் என்னும் உயிர்ச் சக்தியையும் கட்டுப்படுத்துகிறோம். யோகிகள் இதனை பிராணாயாமம் என்று அழைக்கின்றனர். இங்குள்ள ஆசனங்களுக்கு மிக எளிமையான பிராணாயாமம் தரப்பட்டுள்ளது. மூச்சை (ஒன்று இரண்டு என்று எண்ணிக் கொண்டே) ஒன்பதுவரை எண்ணி முடிக்கும்வரை உள்ளே இழுத்து, ஒரு எண்ணிக்கை நிறுத்தி, ஒன்பதுவரை எண்ணிக்கொண்டே மூச்சை மெதுவாக வெளியே விட்டு ஒரு எண்ணிக்கை நிறுத்த வேண்டும். (முடிந்தால் மதுரா எனப்படும் இருதய துடிப்பைக் கணக்கிடும் முறையிலும் செய்யலாம்). சுவாசத்தை ஆழமாக முழுமையாக (வயிற்றிலிருந்து) உள்ளே இழுக்க வேண்டும். கொஞ்சமாக நெஞ்சை விரித்து சுவாசிக்கக் கூடாது. பிராணாயாமத்தின் மூன்று பகுதிகளான மூச்சை உள்ளே இழுத்தல், மூச்சை அடக்குதல், மூச்சை வெளியேற்றுதலை சரியாகச் செய்தால் பிராணனை சரியாக இயக்கி உடம்பையும் மனதையும் அமைதிப்படுத்தி சாந்தமாக்குகிறது.§
ஹடயோகத்தால் உடலின் இறுக்கங்கள் நீங்கும்போது, மனோ உணர்வு தொடர்பான பதட்டங்களும் தானாகவே நீங்குகின்றன. இந்த அற்புதமான ரகசியத்தை நீங்கள் அன்றாட வாழ்வில் கருவியாகப் பயன்படுத்தலாம். உங்கள் மனதிலிருந்து எண்ணங்களையும் பதட்டங்களையும் அகற்றி விடுபடுங்கள். அதனால் நீங்கள் அதிக விழிப்போடும், உயிரோட்டத்துடனும் தெளிவாகவும் இருப்பீர்கள். இந்த ஹடயோக ஆசனங்களைச் செய்து பழகும்போது உங்கள் வேலை பற்றிய எண்ணங்கள், குடும்பம், நண்பர்கள், பிரச்சினைகள், சவால்கள் போன்ற எல்லா எண்ணங்களையும் மனதை விட்டு அகற்றி விடுங்கள். சாந்தி சாந்தி சாந்தி. உங்களுக்குள் முழுமையாக அமைதியாக இருந்து இந்த அற்புதக் கலையை முழுமையாய் அனுபவியுங்கள்.§
ஒவ்வொரு யோகாப்பியாச ஆசனங்களைச் செய்யும்போது உங்கள் உள்ளும் வெளியும் இருக்கும் நாடிநரம்பு மண்டலத்திலிருந்து எழும் உயிர்சக்தி பொங்கி வருவதை உணர முயலுங்கள். இந்த உயர் உணர்வினை அடையும்போது மூச்சை வெளியேவிட்டு நளினத்துடன் அடுத்த ஆசனத்துக்கு செல்லுங்கள். இந்த 24 யோகாப்பியாச ஆசனங்களும் ஒரு நாட்டிய நடனம் போலாகும். ஒரு அபினயத்திலிருந்து இன்னொன்றுக்கு பவ்வியமாக மாறி நளினம் சேர்ப்பதுதான் இதன் முக்கிய அம்சம். ஒவ்வொரு பகுதியிலும் மனதை அமைதிப்படுத்தவும் மன சிகிச்சை பெறவும் வர்ண தியானம் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் காட்டியுள்ளபடி பின்பக்கச் சுவரிலுள்ள வர்ணத்தைத்தான் நீங்கள் அந்த ஆசனம் செய்யும்போது கற்பனை செய்து கொள்ள வேண்டும். மனதுக்குள்ளே அந்த வர்ணத்தை உடம்பு முழுதும்- தலையிலிருந்து கால் கட்டை விரல்வரை - பரவுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அல்லது வெட்ட வெளியில் அந்தரத்தில் நிற்பதாகவும் அந்த ஆசனத்துக்கான குறிப்பிட்ட வர்ணம் உடல் முழுதும் எல்லா திசைகளிலும் பரவியிருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். உடம்பிலோ மனதிலோ இறுக்கம் ஏற்பட்டால் மூச்சை வெளிவிடும்போது அதுவும் சேர்ந்து வெளியேறுவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக தியானத்தில் இறங்குங்கள். சம்பிரதாயப்படி யோகாப்பியாசம் செய்ய சிறந்த நேரமாக விடியற்காலை, நண்பகல், மாலை (சூரியன் மறையும்வேலை) என்று நியமிக்கப் பட்டுள்ளது. ஆகக் குறைச்சலாக 12 நிமிடங்கள் மட்டுமே இதற்கு தேவைப்படும்.§
ஒரு முக்கியமான எச்சரிக்கை:§
கழுத்து அல்லது முதுகுவலி பிரச்சினை உள்ள தனிநபர்கள் முதுகந்தண்டுக்கு அழுத்தம் கொடுக்கும் தலைகீழாய் நிற்கும் சிரசாசனம், தோளில் நிற்கும் சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.§