அ§
அகிம்சை: “இன்னா செய்யாமை.” எந்த உயிர்க்கும் அல்லது சுற்றுச்சூழலுக்கும் மனதாலும், சொல்லாலும், செயலாலும், கனவிலும் கூட துன்புறுத்தாமை அல்லது இழப்பு ஏற்பட செய்யாமை.§
அத்வைதம்: பதிப்பொருள் அல்லது உள்பொருள் ஒன்றே. அதுவே அனைத்துமாய் இருக்கிறது என்ற கோட்பாடு.§
அத்வைத ஈஷ்வரவாதம்: உள்பொருள் ஒன்றே அதுவே அனைத்துமாய் இரண்டற்றதாய் விளங்குகிறது என்ற கோட்பாட்டை உடையது அத்வைதம். ஈஷ்வரவாதம் என்பது இறைவன் சத்தியமாய் உணர்வுள்ளவராய் பரம்பொருளாய் விளங்குகிறார் என்ற நம்பிக்கை கொண்டது. அத்வைத ஈஷ்வரவாதம் இரண்டு கொள்கைகளையும் இணைக்கிறது. சமஸ்கிருதத்தில் இதை அத்வைத ஈஷ்வரவாதம் என்பர்.§
அஞ்சலி முத்திரை: மரியாதை, வரவேற்பைக் குறிக்கும்: இரு கரங்களையும் ஒன்றாக நெஞ்சில் கூப்பிவைக்கும் ஒரு பாவனை.§
அந்தர்லோகம்: உள்ளுலகம் அல்லது இடையிலுள்ள உலகம். ஆங்கிலத்தில் subtle (நுண்ணிய) or astral plane (சூக்கும உலகம்) என்பர். காரண உலகிற்கும் பரு உலகிற்கும் இடையிலுள்ள லோகம். மறுபிறப்பெடுக்கும்வரை ஆன்மாக்கள் தம் சூக்கும உடல்களில் செயற்படும் இடமாம். பருவுடல் இன்மையால் இன்னொரு பிறப்பெடுக்கும்வரை இங்கு சூக்குமமாய் வாழ்வதற்கு உதவி செய்யப்படுகிறது. உறக்கத்தின்போதும் ஆன்மா சூக்கும நிலையில் செயல்படுகிறது.§
அநுக்கிரகம்: சிவன் அருட்செய்யும் தன்மை: பக்குவப்பட்ட ஆன்மாவின் ஆணவம் கன்மம் மாயையையிலிருந்து விடுவிப்பது.§
அப்பர்: “தந்தை.” திருநாவுக்கரசர், சைவத் தமிழ்க் குரவர் நால்வரில் ஒருவர்.§
அறிவார்ந்த இயல்பு: மனித மனத்தின் இயல்புகள். எண்ணவும், பிரித்தறியவும், ஆய்வு செய்யவும், பகுத்தறியவும், திட்டங்கள் தீட்டவும் உரிய ஆற்றல்.§
அருள்: கடவுள் உள்ளன்போடு வழங்கும் அருட்சக்தி. சிவனின் அருள் இருவகைப்படும். மறைக்கும் சக்தி அல்லது திரோதன சக்தி. இது ஆன்மாவை ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களால் கட்டுகிறது. இப்படி வேண்டுமென்றே ஆன்மாவின் உணர்வுநிலையை கட்டுப்படுத்துவதால் ஆன்மா வளர்ச்சியடைந்து உலக அனுபவத்தால் பக்குவப்பட முடிகிறது. அருளும் சக்தி அல்லது அனுக்கிரக சக்தி என்பது சிவனின் அருள்ஞானசக்தி. இதன்மூலம் பக்குவப்பட்ட ஆன்மா மலக்கட்டிலிருந்து விடுபட்டு இறுதியில் வீடுபேறு அல்லது மோட்சத்தை அடைகிறது.§
அஷ்டாங்க யோகம்: யோக சூத்திரத்தில் கூறியுள்ள எட்டு அங்கங்கள் கொண்ட யோகம். இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. ஒன்றன் பின் ஒன்றாக வளர்ச்சி பெற்று முன்னேறுவது.§
ஆ§
ஆகமம்: அருளப்பட்ட ஞான நூல்களின் பெருந் தொகுப்பு. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளவை. கோயில் கிரியைகள், கட்டுமானம், தத்துவம், யோகம் ஆகியவற்றை விளக்குபவை. சைவம், சாக்தம், வைணவ மதங்கள் ஒவ்வொன்றுக்கும் சொந்த ஆகமங்கள் உண்டு.§
ஆலவெட்டி: இலங்கையின் வட மாநிலத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். இங்குதான் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி ஆன்மீக சாதனாவில் ஈடுபட்டு 1940ம் ஆண்டு பிற்பகுதியில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார்.§
ஆணவம்: தான் தனிபட்டவன் என்ற எண்ணம், கடவுள், உலகம் ஆகியவற்றுக்கும் வேறானது. ஆணவம் என்பது சிவபெருமானின் மறைக்கும் அருட்சக்தியில் ஓர் அங்கம்.§
ஆரத்தி: தெய்வத்தின்முன்னே பூசையின் உச்ச கட்டத்தின்போது காட்டப்படும் தீபாராதனை.§
ஆன்மா: மானுடர் உடலில் இருக்கும் உயிர். இது உடல், மனம், உணர்விலிருந்து வேறுபடுகின்றது. சமஸ்கிருதத்தில் ஆத்மன் அல்லது புருஷன் எனப்படும் இந்த ஆன்மாவுக்கு இரண்டு அம்சங்கள் உண்டு: ஆன்ம உரு அல்லது உடம்பு. இது பல ஜென்மங்களாக (பரிணமித்து) பரமேஷ்வரருடன் பூரண ஒருமையுடன் பக்குவமடைகிறது. இரண்டாவது ஆன்மாவின் சாரம் இது பராசக்தியுடனும் பராசிவனுடனும் பூரணமாய் இருக்கிறது.§
ஆதிஆன்மா (மூல ஆன்மா): படைக்கப்படாத, மூலமுதல், பூரண ஆன்மா. பரமேஷ்வரர். தனிப்பெருங் கடவுளாக படைக்கும்அம்சமாய் தன்னிலிருந்து உள்பிரபஞ்சம் மற்றும் வெளிபிரபஞ்சத்தையும், அனைத்துத் தனி ஆன்மாக்களையும் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு ஆன்மாக்களின் சாராம்சமும் இறைவன் சாரம்சமாக—சச்சிதானந்தமாகவும் பராசிவமாகவும் இருக்கின்றது.§
ஆசனம்: பல எண்ணிக்கை கொண்ட ஹடயோகத்தின் யோகாப்பியாச முறைகள். ஒவ்வொரு ஆசனமும் ஒவ்வொரு குறிப்பிட்ட பலனைத் தரும்.§
ஆசனங்கள்: இந்த ஆசனங்கள் மனதின் சக்தியையும் உடற் சக்தியையும் சமநிலைப் படுத்தி உடல் நலத்தையும் மன அமைதியையும் அதிகரிக்கிறது. ஆசனம் என்பது அட்டாங்க யோகத்தில் மூன்றவதாகும். குருதேவரின் 24 ஆசனங்களையும் முறையாக செய்யும்போது பதட்டத்தை போக்கி மனதையும் உடலையும் தியானத்துக்கு தயார் படுத்துகிறது.§
ஆசிரமம்: ஒரு குரு அல்லது இந்து துறவி தங்குமிடம்.§
இ§
இமயமலை ரிஷி: கயிலாய பரம்பரையில் முதலில் அறியப்பட்ட சித்தர். கடையிற்சுவாமியின் குரு.§
இறைவன் கோயில்: அமெரிக்கா, ஹாவாயிலுள்ள காவாய் தீவில் அமைந்திருக்கும் சோழர் கால வடிவமைப்பில் அமைந்துள்ள ஒரு சிவன் ஆலயம். முழுதும் கையாலே கருங்கல்லில் செதுக்கி மேலைநாட்டில் கட்டப்பட்ட ஒரே கோயில். பாரம்பரிய இந்து மடாலயத்தின் நடுவே வீற்றிருக்கும் இக்கோயில் இந்தியாவின் பழங்கால மடங்களையும் ஆதீனங்களையும் நினைவூட்டுகிறது. யாத்திரைத் திருத்தலமாகவும், சாதானா செய்வதற்கும், ஆன்மீகத்தை புதுப்பிக்கும் தலமாகவும் இறைவன் கோயில் விளங்குகிறது.§
இயமம்: நமது கீழ்குணங்களைக் கட்டுப்படுத்தும் ஒழுக்கக் கட்டுப்பாடுகள்.§
இஸ்லாம்: அரேபியாவில் கிபி 625ம் ஆண்டு வாக்கில் முகம்மது நபியால் தோற்றுவிக்கப்பட்ட சமயம். இச்சமயத்தின் முதன்மை ஞானசாத்திர நூல் திருக்குர்ஆன் ஆகும்.§
இந்து: இந்து சமய நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்.§
இந்து சமயம்: இந்திய நாட்டின் சமயம் மற்றும் கலாச்சார முறை. இன்று 100 கோடி மக்களால், பெரும்பாலும் இந்தியாவிலும், இன்னும் பல நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றது. சனாதன தர்மம்—அனாதி தர்மம் என்றும் வைதீக தர்மம்—”வேத தர்மம்“ என்றும் அழைக்கப்படும். உலகின் மிகப் பழமையான சமயம். துவைதம், அத்வைதம் என பல்வகைப்பட்ட தத்துவங்களை உள்ளடக்கியது. பல நம்பிக்கைகளைக் கொண்ட குடும்பம் என்றாலும் நான்கு முதன்மை பிரிவுகளைக் கொண்டுள்ளது: அவை சைவம், வைணவம், சாக்தம், ஸ்மார்த்தம் என்பன.§
ஈஷ்வரவாதம் (Theism): கடவுள் உண்மையாக உணர்வுள்ளவராய், தனிப்பெரும் முழுமுதற் பொருளாக இப்பிரபஞ்சத்தைப் படைப்பவராக, ஆள்பவராக இருக்கிறார் என்ற கொள்கை. பல்வேறுபட்ட விவரங்களுக்கிடையே பல தெய்வங்களை வணங்கும் நம்பிக்கை உள்ளது.§
உ§
உஜ்ஜயின்: இந்தியா மத்திய பிரதேசத்திலிருக்கும் ஒரு பெரிய நகர். இது தொன்மை வாய்ந்த மகாகாலேஷ்வர் சிவன் கோயில் இருக்கும் இடம். சைவ சமயத்தின் பாரம்பரிய புனித தலம்.§
உபநிடதங்கள்: வேதங்களின் நான்காவது மற்றும் இறுதிப் பகுதி. வேதமந்திரங்களின் தத்துவ விளக்கத்தையும், இறை உயிர் உலக இயல்பையும், மறுபிறவி, கர்மவினை, மோட்சமடையும் கோட்பாட்டையும் அது விவரிக்கிறது. விரிவான விளக்கங்களின் தொகுப்பே உபநிடதங்கள். வேதாந்தத்தின் அடிப்படையாக இவை விளங்குகின்றன. இந்த தத்துவ சிந்தனைகள் இந்தியாவை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆக்கிரமித்து வருகின்றன.1 முதல் 16 வரையுள்ள உபநிடதங்களே முதன்மையான அல்லது அடிப்படையானவை என்று கருதப்படுகின்றன.§
உபாசனா: “அருகில் அமர்வது.” தினமும் தவறாமல் கடவுளை வழிபடுவது அல்லது கடவுள்மீது ஆழ்ந்த சிந்தனை செய்வது. சமய வாழ்வின் கருமையம் இது. ஆன்மாவின் இயல்பு கடவுள்மீதும் தெய்வங்களின்மீதும் வற்றாத பக்தி செலுத்துவதாகும். இந்து சமயத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் (பஞ்சநித்ய கர்மங்கள்) இது ஒன்று.§
உற்சவம்: “திருவிழா.” சமய விழா அல்லது திருநாள். ஒவ்வொரு ஆண்டும் வீட்டிலும் கோயிலிலும் நடக்கும் திருவிழாக்களையும் இது உள்ளடக்கும். இந்து சமயத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் (பஞ்சநித்ய கர்மா) இதுவும் ஒன்று.§
உருத்திராட்சம்: (ருத்ராட்சம்): சிவனுக்குரிய புனிதமான சிகப்பு நிற கொட்டைமணி. சிவனடியார்களால் அணியப்படுவது. ஜெபமாலையிலும் கோர்க்கப்படுவது.§
உறுதிமொழி: நமது வாழ்வில் குறிப்பிட்ட முன்னேற்றகரமான மாற்றம் கொண்டுவர நமது மனதில் பதிவேற்றம் செய்ய நாம் ஒழுங்கு முறையாக உச்சரிக்கும் உடன்மறையான பிரகடனம் அல்லது சங்கல்பம்.§
ஒ§
ஒளியுடம்பு (Aura): உடம்புக்குள்ளும் உடம்பைச் சுற்றியும் ஒளிர்கின்ற நுண்ணிய கதிர் வீச்சு. ஒளிபடைத்த வண்ணமயமான நுண்ணிய சக்தி, மூன்றிலிருந்து ஏழு அடிவரை நீளும். ஒளியுடம்பின் வர்ணம் தன்னுணர்வுநிலைக்கும், மனோ நிலைக்கும், எண்ணங்கள், உணர்ச்சிகளுக்கு தக்கபடியும் மாறும். மேலான நல்ல எண்ண உணர்வுகள் வெளிச்சமான இதழ்களை உருவாக்கும். கீழான எதிர்மறை உணர்வுகள் இருளான வர்ணத்தைக் காட்டும். சில நிபுணர்களால் ஒளியுடம்பைக் காண முடியும்.§
ஒடிசி: இந்தியா ஒரிசா மாநிலத்தின் ஒருவகை நடனம்.§
ஓமம்: கடவுளையும் தெய்வங்களையும் வேதம் உரைத்தபடி நெருப்பில் (அக்னியில் ) செய்யப்படும் தொன்மை வழிபாடு.§
ஓம்: ஒரு புனித மந்திரம் அல்லது ஒலி. இது பல ஞான சாத்திரங்களிலும், மந்திர உச்சாடனங்களிலும் முதலில் இருப்பது. இந்தப் பிரணவ ஒலியிலிருந்துதான் எல்லா தோற்றங்களும் உண்டாயின.§
ஓம் கம் கணபதயே நம: “கணபதிக்கு வணக்கம்.” கணபதிக்கான புனித மந்திரம்.§
ஒளவையார்: தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு ஞானி (கி.மு.200). விநாயகர், முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். நன்னெறிகளை செய்யுளாகவும் பாடலாகவும் பாடியுள்ளார். இன்றும் அவரின் ஆத்திச்சூடி போன்ற புத்தகங்களை பள்ளியில் மாணவர்கள் பயில்கிறார்கள்.§
க§
கணபதி: “கணங்களின் தலைவர்.” கணேசப் பெருமானின் (வினாயகர்) இன்னொரு பெயர்.§
கணங்கள்: சிவனுக்கு உதவிசெய்யும் தேவகணங்கள்.§
கணேசர்: இந்து சமயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் போற்றும் யானை முகங்கொண்ட தெய்வம், ஒரு மகாதேவர். தடைகளுக்கெல்லாம் அதிபதி (விக்னேஸ்வரர்). பெரும் ஞானத்திற்காக இவர் போற்றப்படுகிறார் என்பதுடன், ஒவ்வொரு ஆன்மாவின் கர்மவினை சூட்சுமத்தையும் தர்ம வழியினையும் வெற்றிபெறும் வழியினையும் இவர் அறிந்து வைத்திருக்கிறார் என்பதால் எக்காரியமும் செய்வதற்குமுன் இவரை போற்றி வணங்குகின்றனர். இவர் மூலாதார சக்கரத்தில் அமர்ந்துள்ளார். எளிதாய் தொடர்பு கொள்ளலாம்.§
கணேச சதுர்த்தி: ஆகஸ்டு—செப்டம்பர் மாதத்தில் 10 நாள் கொண்டாடப்படும் கணேசப் பெருமானின் பிறந்த தின விழா. கடைசி நாளான கணேச விசர்ஜன நாளில் கணேச உருவ பொம்மையை மூன்றாம் உலகில் போய் சேர்வதற்கு நீரில் கரைத்து விடுகின்றனர்.§
கன்பூசியஸ் மதம்: கி.பி.500ம் ஆண்டு வாக்கில் சீனாவில் வாழ்ந்த கன்பூசியஸ் என்பவரின் தத்துவ நன்னெறிக் கொள்கை.§
கடவுள்: பரம்பொருளான சிவபெருமான். பிரபஞ்சத்தையும் அதிலுள்ள எல்லோரையும் யாவற்றையும் படைப்பவர். கடவுள் என்ற இச்சொல் சிவனால் படைக்கப்பட்ட கணேசப் பெருமானையும் முருகப் பெருமானையும் குறிக்கும்.§
கடையிற்சுவாமி: செல்லப்பா சுவாமியின் (1820-1875) குரு. சைவ சமயத்தை போதிக்க இவர் இந்தியா பெங்களூரிலிருந்து, ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்துக்கு வந்தார்.§
கலைகள்: கலாச்சார வாழ்வுக்குரிய கலைகளும் திறன்களும். பாடுவது, நடனமாடுவது, மாலை கட்டுதல் போன்றவை. இந்து பாரம்பரியத்தில் 64 பண்பாட்டுக் கலைகள் உள்ளன.§
கன்மம் (வினை): 1) செயல் அல்லது காரியம் 2) காரண காரிய கொள்கை 3) செய்தவருக்கே வினைப்பயன்கள் சீக்கிரமாகவோ தமதமாகவோ திரும்பும். தன்னலமான வெறுக்கத்தக்க செயல்கள் துன்பமளிக்கும். இரக்கமுள்ள செயல்கள் அன்பான பலன்கள் தருகின்றன. வெளி உலகில் புவியீர்ப்பு சக்தி எப்படி செயல்படுகின்றதோ அப்படியே கர்மவினையும் உள்ளுலக பிரபஞ்சத்தில் செயல்படுகின்றது.§
கர்ம யோகம்: ஆன்மீக மலர்ச்சிக்காக செய்யப்படும் தன்னலமற்ற சேவை. சரியை வழியில் கர்மயோகம் என்னும் சேவை முக்கியப் பகுதியாகும்.§
கயிலை மலை: (கைலை மலை) சிவபெருமானுக்குரிய புனித இமயமலை.§
காரைக்கால் அம்மையார்: 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் சைவ நாயன்மார். சூட்சும ஞானப்பாடல்கள் அருளிச்செய்வதில் பெரும் வல்லவராகவும் யோகினியாகவும் விளங்கினார். இவர் அருளிச்செய்த முக்கியப் பாடல்கள் (பதினொராம் ) திருமுறையில் இடம் பெற்றுள்ளன.§
கார்த்திகேயன்: முருகப் பெருமானின் பல பெயர்களில் ஒன்று. கார்த்திகை நட்சத்திரக் குழந்தை என்னும் பொருள்படும்.§
காசி: வாரணாசியின் இன்னொரு பெயர்.§
காசி விஸ்வநாதர்: இந்தியா வாரணாசியிலுள்ள மிகப் புகழ் பெற்ற சிவன் ஆலயம்.§
காவாய் இந்து மடாலயம்: அமேரிக்கா ஹாவாயில் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிகளால் நிறுவப்பட்ட காவாய்ஆதீனம்/மடாலயம்/கோயில்.§
காவடி: முருகனுக்கு விழா கொண்டாடும்போது அலங்கரிக்கப்பட்ட வளைவான ஒரு மரப்பலகையின் இரு மருங்கிலும் பால் குடங்கள் ஏந்தி கோயிலுக்கு தோளில் சுமந்து செல்லக்கூடியது.§
காவல் தேவர்கள்: பிறக்கும்போது ஒருவருக்கு உதவியாளராக நியமிக்கப்படும் உள்ளுலக வாசிகள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் உதவிசெய்யவும், வீட்டை ஆசீர்வதிக்கவும் மற்றும் ஆன்மீக அலைகளை வலுவாக வைத்துக்கொள்ளவும் காவல் தெய்வங்கள் உண்டு.§
கிரியா பாதம்: “சமயக் கிரியை அல்லது வழிபாட்டு மார்க்கம்.” பக்தி மார்க்கத்தில் ஆன்மீக மலர்ச்சியின் இரண்டாம் படிநிலை. பூஜை செய்வதன்மூலம் மற்றும் ஒழுங்கான சாதனா செய்வதன்மூலம் பக்தியை வளர்ப்பது. கிரியா பாதத்தின் முதன்மையான செயல்மூறை தினமும் பூஜை செய்வது.§
கிறிஸ்துவ மதம்: ஏசு கிறிஸ்துவின் போதனையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமயம். இவர்களின் ஞானசாத்திர நூல் பைபிள் ஆகும்.§
குரு: எந்தவொரு பாடத்தையும்—அதாவது சங்கீதம், நாட்டியம்,சிலைவடிப்பு அல்லது முக்கியமாக சமயத்தை போதிக்கும்—ஒரு ஆசிரியரின் அல்லது வழிநடத்துனரின் தொழிற்பெயர். தெளிவாக விளங்க முற்சேற்க்கையாய் பயன்படுத்தப்படும், உ-ம்: குடும்ப குரு-குலகுரு, வீணை ஆசிரியர்-வீணாகுரு, ஆன்மீக குரு-சற்குரு.§
குரு பரம்பரை: வரிசைக் கிரமமாய் வரும் குருமார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு தீட்சைமூலம் ஆன்மீக சக்தியை இறக்குவர்.§
குரு பூஜை: குருவை திருவடி வழிபாடு செய்து வணங்கி, அன்பு காணிக்கை அளித்தல்§
குரு பூர்ணிமை: ஒருவரின் குருவுக்கு மரியாதை செய்யும் விழா. இவ்விழா ஜூலை மாதம் முழுமதி நாளில் ஆண்டுதோறும் நடக்கும்.§
குருதேவர்: சீடர்கள் தம் குருவை அன்போடும் மரியாதையோடும் அழைக்கும் சொல். இப்புத்தகத்தில் இச்சொல் சற்குரு சிவாய சுப்பிமுனியசுவாமிகளைக் குறிக்கும்.§
கும்பமேளா: நான்கு புண்ணிய தலங்களில்-பிரயாக் (அலாகாபாத்), நாசிக், ஹரித்துவார், உஜ்ஜயின் ஆகிய இடங்களில்—12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழல்முறையில் இந்துக்கள் (ஆன்மீக சந்திப்பாக) ஒன்று கூடுகின்ற நிகழ்வு. சோதிட கணக்குப்படி சரியான நாட்கள் குறிப்பிடப்படுகின்றது என்றாலும் சரியாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதில்லை. விழா முடியும்வரை பிரயாக்கில் மட்டும் 12 கோடி மக்கள் கூடுகின்றனர். ஒரே நாளில் மட்டும் 3 கோடி மக்கள் கூடுகின்றனர். இதுவே உலகில் ஒரு நிகழ்வுக்காக ஒன்று கூடும் ஆகப் பெரிய மனித கூட்டம்.§
கும்பாலவாய் கோயில்: ஸ்ரீலங்கா ஆலவெட்டியில் அமைந்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த கணேசர் ஆலயம்.§
குங்குமம்: நெற்றியில் அணியப்படும் சிவப்பு வர்ண பொடி. கும்கும் என்று இந்தியிலும், குங்குமம் என்று தமிழிலும், கும்குமா என்று சமஸ்கிருதத்திலும் அழைக்கப்படுகிறது.§
குண்டலினி: “சுருண்டு கிடப்பவள்”: பாம்பு சக்தி.” ஒவ்வொருவருடைய முதுகுத்தண்டின் கீழ் முதலில் பாம்புபோல் சுருண்டுகிடக்கும் பிரபஞ்ச சக்தி, இறுதியில் யோகசக்தியில் ஒவ்வொரு சக்கரத்தையும் எழுப்பிவிடுகிறது.§
குண்டலினி யோகா: “பாம்பு சக்தியை ஒன்றிணைப்பது.” உயர் தியானப் பயிற்சி மற்றும் சாதனா முறைகள். ராஜயோகத்தின் ஒரு பகுதி. இதன்மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி அச்சக்தியை முதுகுத்தண்டு வழியே மேலே சகஸ்ரார சக்கரத்துக்கு கொண்டு செல்வது. மிக உயரிய பார்வையில், இந்த யோகம் சாதனா பயிற்சியாலும் மற்றும் தவத்தினாலும் அடைகின்ற நற்பலனாகும். அன்றி இப்பலன் கடும் முயற்சியினாலோ அல்லது கற்பதனாலோ அடைவதன்று.§
கேரளா: இந்தியாவின் தென்மேற்குக் கரையோர மாநிலம்.§
கைலாச பரம்பரை: சற்குரு போதிநாதர், அவரின் குருதேவர் மற்றும் அவருக்கும் முன் தோன்றிய எல்லா குருமார்களின் ஆன்மீக பரம்பரை. நந்திநாத சம்பிரதாயத்தின் ஓர் அங்கம்.§
கோலம்: தரையில் வரையப்படும் இந்துக்களின் பாரம்பரிய அலங்காரம். விழாக்காலம் திருமண விழாவின்போது அனுதினமும் வீட்டு முன்வாசலில் வரையப்படுவது. மாவு அல்லது வண்ண அரிசி மாவில், தானியவகையால் அல்லது மலர் இதழ்களால் கோலங்கள் சில நாட்களுக்கு என்றே போடப்படும். கோலங்கள் எளிமையான அல்லது நுணுக்கமான அலங்கார வடிவமைப்பில் இருக்கலாம்.§
கோயில்: இந்துக்கள் வழிபடும் இடம். கடவுளின் பூலோக இல்லம். சமஸ்கிருதத்தில் இதனை மந்திரா (இந்தியில் மந்திர்) தேவாலயா, சிவாலயா, கோயில் (தமிழ்) என்றழைக்கின்றனர்.§
கோரக்ஷநாதர்: வட இந்தியா, நேப்பாளில் கிபி 950ம் ஆண்டு வாக்கில் வாழ்ந்த ஒரு பெரிய சைவ குரு. ஆதிநாதர் பரப்பரையின் சித்தயோக குருவாகவும் சித்த சித்தாந்தத்தின் மிக முக்கியமான குருவாகவும் விளங்கினார்.§
ச§
சக்தி: “ஆற்றல், சக்தி”: சிவனின் ஆற்றலை அல்லது சக்தியை சர்வ வல்லமை படைத்த பெண் கடவுளாக (சக்தியாக) சாக்தர்கள் வணங்குகின்றனர். சைவ சமயத்தில் இச்சக்தி ஆண் பெண் உட்பட யாவற்றையும் உள்ளடக்கிய சிவனின் அம்சமாகவே கருதப்படுகிறது.§
சக்கரங்கள்: நம் உள்ளுடம்பில் இருக்கும் சக்தி மையங்கள், உணர்வுப் பீடங்கள். வண்ணமயமான பல இதழ் கொண்ட சுழல் சக்கரங்களாக அல்லது தாமரை இதழ்களாக ஏழு முதன்மைச் சக்கரங்கள் மனோவியல் ரீதியில் காணப்படுகின்றன. அவை முதுகந்தண்டின் அடியிலிருந்து தலையின் கபாலம்வரை வீற்றிருக்கினறன. கண்ணுக்குப் புலப்படாத மேலும் ஏழு கீழ்நிலை சக்கரங்கள் கால்களிலும் பாதங்களிலும் இருக்கின்றன. அவை கீழ்மை உணர்வுகளான பொறாமை, வெறுப்பு, மனம் பொறுமுதல், குற்றவுணர்வு, சோகம் போன்றவற்றின் இருப்பிடம். அவை கீழுலக நரகலோகம் அல்லது பாதாள லோகமாகும். தலைக்கு மேலே ஆக உயர்ந்த ஏழு சக்கரங்கள் உள்ளன. ஞானமடைத்தபின் அவற்றை அடையலாம்.§
சண்முகநாதன்: “ஆறுமுகம் கொண்ட பெருமான்.” முருகப் பெருமானின் பல பெயர்களில் ஒன்று.§
சமாதி: தியானம் செய்பவரும் தியானம் செய்யப்படும் பொருளும் ஒன்றே என்ற யோகத்தின் இலக்கு. இதில் சவிகல்ப சமாதி என்பது ஒரு பொருளின் சாராம்சத்துடன் ஒன்றாவது அல்லது தூய மெய்யுணர்வுடன் ஒன்றாவது. நிர்விகல்ப சமாதி என்பது அனைத்து உணர்வுகளையும் கடந்து நிற்கும் ஞானோதயம் அல்லது மெய்யுணர்வு.§
சம்பந்தர்: ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானக்குழந்தை. குழந்தைப் பருவத்திலேயே சிவபெருமனைப் போற்றி ஆயிரக்கணக்கான தேவாரப் பாடல்களைப் பாடியவர். தமிழ் சைவக் குரவர்கள் நால்வரில் ஒருவர்.§
சம்ஹாரம்: சிவபெருமானின் பிரபஞ்ச ஆற்றலான அழிக்கும் சக்தி அல்லது ஒடுக்கும் சக்தி§
சம்சாரம்: பிறப்பு, இறப்பு, மீண்டும் பிறவியெடுத்தல் என்ற பிறவிச்சுழற்சி. விரிவாகக் கூறின் சம்சாரம் என்ற சொல் அனுபவத்துக்குட்பட்ட உலகம், ஓரிடம்விட்டு இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்தல் அதாவது நிலையற்றதுமாய் மாற்றமடையக் கூடியதுமாய் இருப்பதை சம்சாரம் என்று குறிப்பிடப்படுகிறது.§
சம்ஸ்காரம்: வாழ்க்கையின் முக்கிய காலக்கட்டங்களில் செய்யப்படும் சடங்கு காரியங்கள்—பெயரிடும்போது, முதல் அமுதூட்டும்போது, காதுகுத்தும்போது, ஏடு தொடங்கும்போது, பூப்படையும்போது, மணமாகும்போது, இறந்தபோதும் செய்யப்படுவது. இச்சொல் உள்மனதில் ஆழப்பதிவான நினைவுப் பதிவுகளையும் குறிக்கும்.§
சங்கம்: சமயக் கூட்டம், அங்கத்தினர்கள் குறிப்பாக, சமயக் காரணங்களுக்கு குழுவாக ஒன்று கூடுதல்.§
சன்மார்க்கம்: “உண்மை நெறி.” மனோவியல் தேடல்கள் அல்லது சித்திகள் பெற வழிமாறிப் போகாமல், இறுதி இலக்கான மெய்ஞ்ஞானம் அடைவதற்கு இட்டுச் செல்லும் நேர் ஆன்மீகப் பாதை.§
சனாதன தர்மம்: “அனாதி சமயம்” அல்லது “என்றுமிருக்கும் மார்க்கம்” இந்து சமயத்தின் பாரம்பரிய பெயர்.§
சந்நியாசி: ஒரு இந்துத் துறவி. திருமணமாகாதவர், பிரம்மச்சாரி, சுவாமி. குடும்பம் உடமைகள், வேலை ஆகியவற்றைத் துறந்துவிட்டு எந்த கவனக்குறைவும் ஏற்படாமல் கடவுளுக்கென்றே சமய வாழ்வுக்கு வந்தவர். இன்னொரு சந்நியாசி சிறப்பாக ஒரு சற்குருவால், தீட்சை அளிக்கப்பட்ட்டதும் ஒருவர் சந்நியாசி ஆகிறார். பெண்: சந்நியாசினி§
சமஸ்கிருதம்: (இறைவனால்) அருளப்பட்ட இந்து சாத்திரங்களான சுருதிகள் (வேதங்கள், ஆகமங்கள்) உட்பட ஆயிரக்கணக்கான எழுத்துச் சுவடிகள் எழுதப்பட்ட இந்தியாவின் தொன்மை மொழி.§
சந்தோஷம்: நிறைவுத் தன்மை. இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழுதல்.§
சரவணபவ: ஆன்மீக தாகத்தின் காவலனான கார்த்திகேயப் பெருமானை (முருகனை) எழுந்தருளச் செய்யும் மந்திரம். மனதை ஓா் அமைதியான சலனமற்ற பொய்கையாக அது விவரிக்கிறது.§
சரியை பாதம்: “நன்னெறிப் படி.” மனிதனின் ஆன்மீக மலர்ச்சியின் முதல் படி. அறவழியில் வாழக் கற்றுக்கொண்டு, கர்ம யோக வழியில் தன்னலமற்ற சேவை செய்தல். கோயிலை தூய்மைப்படுத்துதல், விளக்கேற்றுதல், பூஜைக்கு பூக்கள் பறித்தல் போன்றவை பாரம்பரிய சரியை நெறியில் அடங்குவன. சரியை வழியில் ஆற்றப்படும் வழிபாடு பெரும்பாலும் புறமுகமாகும்.§
சற்குரு: கடவுளிடம் மிக நெருங்கி இருப்பவரும் மற்றவர்களை சரியான பாதையில் இட்டுச் செல்லக் கூடியவருமான ஒரு பெரும் சமயாசிரியர்.§
சிவாய சுப்பிரமுனியசுவாமி: கயிலாய பரம்பரை நந்திநாத சம்பிரதாயத்தின் சற்குரு (1927-2001). இவருக்கு 1949ம் ஆண்டு யோகசுவாமி ஓங்கி முதுகில் பலமான ஓர் அறைவிட்டு தீட்சை வழங்கினார். இவருக்குப்பின் சற்குரு போதிநாத வேலன்சுவாமி தற்போது இப்பீடத்தில் அமர்ந்திருக்கிறார். சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமி எழுதிய முப்பெரும் குருபோதனை தொகுப்பின் கருத்துக்களையே இப்புத்தகம் உள்ளடக்கியிருக்கிறது.§
சத்சங்கம்: ஒரு புனிதமான ஒன்றுகூடல். கோயில் வழிபாடு தவிர சமயக் கல்வி பயில பக்தர்கள் ஒன்றுகூடும் கூட்டம்.§
சாதனா: (சாதனை): பூஜை, யோகம், தியானம், ஜெபம், நோன்பு, தவம் போன்ற சமயம் மற்றும் ஆன்மீக ஒழுக்கங்கள்.§
சாதனா மார்க்கம்: தீவிர முயற்சி, ஆன்மீக ஒழுக்கம் மற்றும் தொடர்ச்சியான உள்முக உருமாற்றம் ஏற்படுத்தும் வழி. இதற்கு முரணாக விளங்குவது வெறும் தத்துவார்த்த பேச்சும் ஏட்டுப்படிப்பும்.§
சாது: இறைவனைத் தேடுவதில் அர்ப்பணிப்பு கொண்ட ஒரு புனித மகான்.§
சாத்தான்: பிசாசு. தீமையின் எடுத்துக்காட்டு. இது கிறிஸ்துவ மதமும் பிற மதத்தவர்களும் முன்வைக்கும் நம்பிக்கை. கடவுளின் விருப்பத்தை எதிர்க்கும் இத்தீயசக்தி ஆன்மாக்களையும் தீச்செயலுக்கு தூண்டிவிடுகிறது. (ஆனால்) இந்துசமயத்தில் அனைத்துமே கடவுளின் வெளிப்பாடு என்று நோக்கப்படுகிறது. நமது அறியாமையும், பயமும், ஆசைகளும் நம்மை தீச்செயலுக்கு இட்டுச் செல்லலாம் என்றாலும் (இந்துசமயத்தில்) சாத்தான் என்பதில்லை.§
சாக்தர்கள்: இந்து சமயத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்றான சக்தியை (முழுமுதற் கடவுளாக) வணங்குபவர்கள்.§
சாக்தம்: தெய்வீக மாதாவை முழுமுதற்பொருளாக வணங்குவோரின் சமயம். இந்து சமயத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்று.§
சாத்திரங்கள்: அதிகாரப்பூர்வமான சமயம் சார்ந்த அல்லது தத்துவார்த்த ஏடுகள். இச்சொல் ‘புத்தகம்” அல்லது “போதனைகள்” என்பதைக் குறிக்கும்.§
சிருஷ்டி: சிவபெருமானின் ஐந்து சக்திகளில் ஒன்றான ஆக்கும் சக்தி அல்லது (படைப்பை ) வெளிப்படுத்தும் சக்தி.§
சிதம்பரம்: புகழ்பெற்ற தில்லை சிதம்பர நடராஜர் கோயில் (சிதம்பரம் கோயில்) இருக்கும் ஒரு தென்னிந்திய நகரம்.§
சித்தர்: சித்திகளடைந்த ஒரு யோகி. மகத்தான ஆன்மீக சித்திகள் அல்லது ஆற்றல்கள் பெற்றவர்.§
சிவன்: “மங்கலகரமானவன்”, “அருளாளன்”, “கருணையாளன்.” சைவசமயத்தில் வழிபடப்படும் பரம்பொருள். சிவனே அனைத்துமாய் அனைத்தினுள்ளும் ஒரே நேரத்தில் படைப்பவராயும், படைப்பாகவும் உள்ளார்ந்தும் எல்லாம் கடந்தும் இருக்கிறார். அவர் ஒருவரே எனினும் அவரை மூன்று பரிபூரண நிலைகளில், அதாவது: பரமேஷ்வரராக (ஆதிஆன்மா), பராசக்தியாக (தூய உணர்வு) மற்றும் பராசிவமாக (முழுமுதற் பொருள்) அவரைத் தெளிவாக உணர்ந்து கொள்ளலாம்.§
சிவசைதன்ய பஞ்சதந்திரம்: அடுக்கடுக்கான ஐவித சிவ உணர்வின்மீது ஒன்றன்பின் ஒன்றாக மனதைக் குவியச் செய்தல்: பிராணன், எங்கும் பரவிநிற்கும் சக்தி, புனித திருவுருவம், உள்ளொளி மற்றும் புனித நாதம்.§
சிவலிங்கம்: “சிவனின் அடையாளம் அல்லது குறி.” கிட்டத்தட்ட எல்லா சிவாலயங்களிலும் காணப்படும் இவ்வடிவம் வட்ட வடிவ ஆதார பீடத்தின் மேல் நீள்வட்ட கல்லாக அமர்த்தியிருக்கும். இது எல்லா வடிவங்களையும் எல்லா குணங்களையும் கடந்த பராசிவமாக,இறுதி உண்மைப் பொருளாகக் காட்டும் மிகவும் தொன்மையான சிவலிங்கச் சின்னம்.§
சிவலோகம்: மூன்றாம் உலகு. சிவனும், தெய்வங்களும், அதி பக்குவப்பட்ட ஆன்மாக்களும் இருக்குமிடம். சிவலோகமே விண்ணவர் உலகங்களில் ஆக உயர்வான அல்லது மிகவும் நிர்மலமான லோகம்.§
சீக்கிய சமயம்: குரு நானக் என்பவரால் 500 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சமயம். சீர்திருத்த நம்பிக்கை கொண்ட இச்சமயம் மூர்த்தி (சிலை) வழிபாட்டையும் சாதிப் பிரிவனையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆதிகிராந்தம் என்பது இவர்களின் புனிதநூலாகும். பஞ்சாப்பிலுள்ள அம்ரித்சர் கோயில் இவர்களின் மையமாகும். சீக் என்றால் சிஷ்யன் என்று பஞ்சாபி மொழியில் அர்த்தம்.§
சுருதி: (முனிவர்களால்) “கேட்கப்பட்டவை.” இந்து சமயத்தில் சுருதி என்பது அருளப்பட்ட சாத்திரங்களான வேதங்களையும் ஆகமங்களையும் குறிக்கும்.§
சுத்த சைவ சித்தாந்தம்: மிகப் பழமையான சைவசித்தாந்த தத்துவமான நந்திநாத மகரிஷியின் அத்வைத ஈஷ்வரவாதம். வேதங்கள் மற்றும் சைவ சித்தாந்த ஆகமங்களைத் தவிர, இதர சாத்திர நூல்களாக திருமந்திரம், திருமுறைகள் மற்றும் திருக்குறள் ஆகியன அடங்கும்.§
சுந்தரநாதர்: திருமந்திரத்தை இயற்றிய ரிஷி திருமூலரின் இயற்பெயர்.§
சுந்தரர்: தமிழ் சைவக்குரவர் நால்வரில் ஒருவர். இவர் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.§
சுப்பிரமணியம்: முருகனின் பல நாமங்களில் இதுவும் ஒன்று. அதன் பொருள் மிக பயபக்தியுள்ளவன்; மகான்களுக்கு மிகவும் நெருக்கமானவன்.§
சுவாமி: முற்றுந் துறந்த ஓர் இந்து துறவி. பார்க்க: சந்நியாசி§
சூட்சும ஞானி (mystic): ஆழ்ந்த தியானம் அல்லது அருள்நிலையில் இறைவனோடு இணைவதற்கு ஆன்மீக நெறிகளைப் பின்பற்றும் ஒருவர்.§
சூட்சும ஞானம் (mysticism): ஆன்மீகம். தனிப்பட்ட ஆன்மீக சமய அனுபவங்களை பின்பற்றுதல்.§
செல்லப்பசுவாமி: இலங்கை, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு சற்குரு (1840-1915). யோகசுவாமியின் சற்குரு ஆவார். யோகசுவாமி பின்னர் சற்குரு சிவாய சுப்பிரமுனியசுவாமிக்கு குருவானார்.§
சேவை: எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராமல் செய்யப்படும் உதவிகரமான தொண்டூழியப் பணி, கர்மயோகம்.§
சைவ ஆகமங்கள்: சைவ சமயத்துக்காக அருளப்பட்ட புனித சாத்திரங்கள். வேதங்களுக்கு துணையாக விளங்குபவை. கடவுள் உண்டெனும் கொள்கையை வலியுறுத்துவன. சிவபெருமானை சர்வ வல்லமை படைத்தவராகவும், உள்ளார்ந்தவராகவும் யாவும் கடந்தவராகவும் அடையாளம் காண்கின்றன. 28 சைவ சித்தாந்த ஆகமங்களும், 64 காஷ்மீர் சைவ ஆகமங்களும் உள்ளன.§
சைவ சித்தாந்தம்: “சைவ சமயத்தின் முடிந்த முடிபு.” 28 சைவ சித்தாந்த ஆகமங்களின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. சைவ சித்தாந்திகளுக்கு சிவனே அனைத்துமாய் மூன்று பூரண நிலைகளில் விளங்குகிறார். பரமேஷ்வரராகவும் (படைக்கின்ற தனிப்பெரும் கடவுள்), பராசக்தியாகவும் (அனைத்து தோற்றத்துக்கும் ஆதார சக்தியாக) மற்றும் பராசிவமாகவும் (அனைத்தும் கடந்த முழுமுதற் பரம்பொருளாக) விளங்குகிறார். உயிர்களும் உலகமும் சாராம்சத்தில் சிவனைப்போல் ஒரேமாதிரி இருப்பினும் உயிர்கள் இன்னும் பரிணமித்துக் கொண்டிருப்பதால் அவை சிவனிடமிருந்து வேறுபடுகின்றன. இதுவரை தெரிந்ததில் சுத்த சைவ சித்தாந்த மரபில் காஷ்மீரைச் சேர்ந்த நந்திநாதர் மகரிஷியே முதல் குரு ஆவார் (கி.மு.250). வரலாற்றின் மத்திமப் பகுதியில் அகோரசிவம் மற்றும் மெய்கண்டார் ஆகியோரின் போதனைகளால் துவித கோட்பாட்டுடன் சைவ சித்தாந்தம் தோன்றிற்று.§
சைவம்: சைவ சமயத்தின் தமிழ் வார்த்தை. மரக்கறி உணவு என்றும் பொருள்படும்.§
சைவசமயம்: சிவபெருமானே சர்வ வல்லமை படைத்த இறைவனென வழிபடுபவர்களின் சமயம். இதுவே இந்து சமயத்தின் பெரிய நான்கு பிரிவுகளில் (சைவம், வைணவம், சாக்தம், ஸ்மார்த்தம்) ஆகப் பழமையானது.§
சைவர்கள்: சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது பின்பற்றுவோர்கள். இன்று உலகில் இவர்களின் எண்ணிக்கை 40 கோடி ஆகும்.§
ஞ§
ஞான பாதம்: “ஞான நிலை.” மனித பரிணாமத்தில் நான்காம் நிலை. சரியை கிரியை யோக படிநிலைகளில் முழுமை பெற்றதும் அடைகின்ற நிலை.§
த§
தன்னை அறிதல் (மெய்ஞ்ஞானமடைதல்): தன்னுணர்வுக்கும் அப்பால் சென்று நேரடியாக ஆத்மஞானம், பராசிவத்தை தரிசித்தல். இது யோகத்தின் உச்சம். எந்தவொரு வாழ்நாளிலும் மிகச் சிலரே இந்நிலையை அடைவர் என்றாலும் எல்லா ஆன்மாக்களுக்கும் இந்த பாக்கியம் ஊழிக்காலத்தில் உண்டு.§
தபசு: தம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக கடும் ஒழுக்கம், தவம், தியாகம் செய்தல். தபஸ் என்ற சொல்லுக்கு உஷ்ணம் சூடு என்று பொருள்.§
தவசி: மிகவும் ஒழுக்கமான தவ வாழ்வை மேற்கொள்பவர். சமயத்தின் இலக்கை அடைய சுக இன்பத்தை நீக்கி வாழ்பவர்.§
தமிழ்: தமிழர்களின் தொன்மை வாய்ந்த திராவிட மொழி. 60 கோடி தமிழின மக்களால் பேசப்படுகின்ற மொழி.§
தமிழ் நாடு: தென்னிந்திய மாநிலங்களில் ஒன்று.§
தளை: பாசம். கட்டு.§
தாண்டவம்: “சிறந்த நடனம்.” ஆண்களால் உக்கிரமாக ஆடப்படும் நடனம். சிவபிரானின் ஆனந்த நடனமே முன்மாதிரி நடனம்.§
தியானம்: அமைதியாக அமர்ந்து மூச்சைக் கட்டுப்படுத்தி எண்ண அலைகளை நிறுத்தி மனதின் உள்ளே பயணிப்பதாகும். தியானம் மூலம் நாம் புதிய அறிவைக் கட்டவிழ்கலாம். தன்னுணர்வை ஆய்வு செய்யலாம்.§
திலகம்: இந்துக்கள் தம் நெற்றியில் அணிந்துகொள்ளும் ஓர் அடையாளம். இதனை திருமண், திருநீறு, சாம்பல் அல்லது சந்தனச் சாந்தில் இட்டுக்கொள்வர். அவர்கள் எந்த சமயப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை அது எடுத்துக்காட்டும். சைவர்கள் திரிபுண்டரம் என்ற தங்களின் திலகத்தை திருநீற்றில் மூன்று பட்டையாகப் பூசி மூன்றாம் கண் இருக்கும் புருவநெற்றி நடுவே பொட்டு இட்டுக்கொள்வர்.§
திருக்கோவையார்: மாணிக்கவாசகரின் 400 பக்தி சொட்டும் பாடல்கள். இதுவும் மாணிக்கவாசகர் அருளிய இன்னொரு படைப்பான திருவாசகமும் எட்டாம் திருமுறையாக சேர்க்கப்பட்டுள்ளது. நெஞ்சை உருக்கும் இப்பாடல்கள் சிவபெருமான் மீதுள்ள எல்லையற்ற பக்தியையும், திருக்காட்சி அனுபவத்தையும், மெய்ஞானமடைய வேண்டும் என்ற தவிப்பையும் காட்டுகிறது.§
திருக்குறள்: சுமார் கி.மு.200 ஆண்டுவாக்கில் திருவள்ளுவ முனிவரால் எழுதப்பட்ட அறநெறி குறித்த அற்புத படைப்பு. மிகவும் குறுகிய வரிகளில் 14 சீர்களில் ஓர் அதிகாரத்துக்கு 10 குறள்களாக மொத்தம் 133 அதிகாரங்களை திருவள்ளுவர் எழுதியுள்ளார். இதில் கடவுள் பற்றியும், நன்னெறி, உறவுகள், மனித வலிமை பலவீனம், அரசியல் என்று இன்னும் பல பொருள்களைப் பற்றி பாடியுள்ளார். உலகின் முதன்முதலான அற நூலான திருக்குறளை மனுக்குலத்தின் பைபிள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த அறநூல்மீது தென்னிந்திய நீதிமன்றங்களில் சத்தியப் பிரமாணம் செய்கிறார்கள்.§
திருமந்திரம்: “திருமொழிகள்.” சுமார் கி.பி.200 ஆண்டுவாக்கில் திருமூலர் ரிஷியால் அருளப்பட்ட நந்திநாத சம்பிரதாயத்தின் மிகப்பழமையான தமிழ் சாத்திரம். பத்தாம் திருமுறையாக சேர்க்கப்பட்டுள்ளது. பல மறைபொருள் விஷயங்களை உள்ளடக்கியிருக்கும் பொக்கிஷமாக இருப்பதோடு, 28 சைவ சிந்தாந்த ஆகமங்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. திருமந்திர நூல் சித்தாந்த வேதாந்த கருத்துக்களை ஒருங்கிணைக்கும் நூலாக பெரும் மதிப்புடன் திகழ்கிறது.§
திருமூலர்: நந்திநாத சம்பிரதாயத்தின் ஆதிகுருமார்கள் வரிசையில் இவர் முதலாமானவர். நந்திநாதரின் சீடர். இவர் சுமார் கி.மு.200ம் ஆண்டுவாக்கில் வாழ்ந்து திருமந்திரத்தை செய்தருளினார்.§
திருமுறை: சிவபெருமானைப் போற்றி தென்னிந்திய நாயன்மார்கள் 6 ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டுவரை பாடிய ஆயிரக்கணக்கான பாடல்களின் 12 தொகுப்புகள். தமிழ் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மிகவும் முக்கியமானவை. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தர் (கி.பி.600) பாடிய தேவாரப் பாடல்கள் ஆகும். 4முதல் 6ம் திருமுறைகள் சம்பந்தர் காலத்தில் வாழ்ந்த திருநாவுக்கரசு சுவாமிகளால் அருளப்பட்ட தேவாரங்கள் ஆகும். ஏழாம் திருமுறை சுந்தரமூர்த்தி நாயன்மாரால் (கி.பி.800) பாடப்பெற்ற தேவாரப் பாடல்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஏழு திருமுறைகளின் பாடல்களையே நாம் தேவாரம் என்கிறோம். இனி 8ம் திருமுறையில் மாணிக்கவாசகர் (9ம் நூற்றாண்டு) அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் இடம் பெற்றுள்ளன. அடுத்து 9ம் திருமுறையில் திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் இடம்பெற்றுள்ளன. இவை ஒன்பது பேர் அருளியவை. பத்தாம் திருமுறையாக திருமூல நாயனாரின் (கி.மு.200) திருமந்திரம் இடம் பெற்றுள்ளது. 11ம் திருமுறையில் நக்கீரர், நம்பியாண்டார் நம்பி உட்பட 10பேர் அருளிய பாடல்கள் இடம்பெறுகின்றன. இறுதியாக 12ம் திருமுறையாக சேக்கிழார் (11ம் நூற்றாண்டு) பாடிய 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறாக பெரியபுராணம் இடம்பெற்றுள்ளது.§
திருநாவுக்கரசர்: நாயன்மார் நால்வரில் ஒருவர். அப்பர் (அப்பா) என்றும் அழைக்கப்படுவார்.§
திருவள்ளுவர்: திருக்குறளை வழங்கிய தென்னிந்திய நெசவாள முனிவர். (கி.மு.200).§
திருவாசகம்: மாணிக்கவாசகப் பெருமான் (கி.பி.850) அருளிய தமிழ் சாத்திர நூல். மிகவும் அழகிய பக்திப் பரவசப் பாடல்களைக்கொண்ட இத்தமிழ் நூல் மிகவும் உன்னத படைப்பாகக் கருதப்படுகிறது. மொத்தம் 658 பாடல்களைக் கொண்ட இந்நூலில் ஆன்மீக வாழ்வின் எல்லா படிநிலைகளும் விவரிக்கப்பட்டுள்ளன. சந்தேகம், கடுந்துயரிலிருந்து சிவபெருமான்மீது முழு நம்பிக்கை வைப்பது முதல், லெளகீக உலக வாழ்விலிருந்து குரு-சிஷ்ய உறவுவரை, மறுபிறவியிலிருந்து விடுதலையாவது பற்றியும் திருவாசகம் விவரிக்கிறது. இதில் மாணிக்கவாசகரின் சொந்த வாழ்க்கை வரலாறும் கூறப்பட்டுள்ளது. பாண்டிய மன்னனுக்கு அவர் எப்படி முதன் மந்திரியாக இருந்து பின்னர் குருந்த மரத்தின்கீழ் சிவனே குருவாக வந்து அருட்காட்சி கொடுத்தபின் உலகையே துறந்த நிகழ்வும் பதிவு செய்யப்பட்டுள்ளது.§
திருவாசி: சிவநடராஜர் மூர்த்தியை சுற்றியிருக்கும் நெருப்பு வளையம், பிரபஞ்ச உணர்வைக் குறிப்பது.§
திரிபுண்டரம்: சைவர்கள் நெற்றியில் திருநீற்றால் தரிக்கும் அடையாளக் குறி. திருநீற்றால் மூன்று வரிகள் இடப்படும். ஆணவம், கன்மம்,மாயை ஆகிய மும்மலங்களையும் எரித்துவிடுவது இதன் பொருள். மூன்றாம் கண் இருக்குமிடத்தில் ஒரு பொட்டு அல்லது பிந்தி வைத்துக்கொள்வர். விபூதியை பெண்கள் அதிகமாக பூசுவதில்லை. திருநீறு என்பது நமது உடம்பு நிலையற்றது என்பதை நினைவூட்டி ஆன்மீகத்தில் உயர்நிலையடைய பாடுபடவேண்டியதையும் இறைவனிடம் நெருங்க வேண்டிய அவசரத்தையும் காட்டுகிறது.§
திரிசூலம்: சிவபெருமான் கையில் ஏந்தியிருக்கும் மூன்று கூரிய முனைகள் கொண்ட ஈட்டி. சிவனின் மூன்று சக்திகளின் இயல்பை அதாவது இச்சா சக்தி (ஆசை, விருப்பம், அன்பு), கிரியா சக்தி (செயல்) மற்றும் ஞானசக்தி (ஞானம்) ஆகியவற்றைக் குறிக்கிறது.§
திரோதனம்: “மறைத்தல்.” சிவபெருமானின் திரோதன சக்தி என்ற இச்சக்திதான் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் ஆன்மாவோடு பிணிக்கிறது. ஒரு குறிக்கோளுடன் தன்னுணர்வு நிலையை கட்டுப்படுத்தும் இச்செய்கை ஆன்மாவை உலக அனுபவம் பெற வைத்து வளரச்செய்து பக்குவமடைய வைக்கிறது.§
தீர்த்த யாத்திரை: யாத்திரை போவது. இந்து சமயத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் (பஞ்சநித்ய கர்மம்) இது ஒன்று. யாத்திரை போவதற்கு முன் நோன்பிருந்து, பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பர். தீர்த்த யாத்திரை தருணமே ஒழுக்கத்தை தீவிரமாகக் கடைப்பிடிக்கவும், மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளவும் கவனத்தை ஆன்மீகத்தில் செலுத்தவும் உகந்த நேரம்.§
துறவிகள் மடம்: துறவிகளுக்கான ஆசிரமம் அல்லது மடம், பெரும்பாலும் ஒரு சற்குருவின் வழிநடத்தலில் நடப்பது.§
துறவி: ஒரு சந்நியாசி அல்லது சந்நியாசினி. தவ வாழ்க்கை வாழும் திருமணமாகாத ஒரு ஆண் அல்லது பெண்.§
துன்புறுத்தாமை: சமஸ்கிருதத்தில் “அகிம்சை. வாக்கு, மனம், மெய்யால் பிறரை துன்புறுத்தலைத் தவிர்த்தல்.§
தூல பிரபஞ்சம்: வெளிப்பட்டுள்ள பருமை பிரபஞ்சம். பார்க்க: நுண் பிரபஞ்சம்.§
தெய்வங்கள்: ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சியில் நமக்கு உதவுவது போன்ற பெரும் பிரபஞ்சப் பணிகளை மேற்கொள்ள சிவபெருமானால் படைக்கப்பட்ட கணேசப் பெருமான், முருகப் பெருமான் போன்ற அதி பக்குவப்பட்ட உயிர்கள்.§
ந§
நமசிவாய: “சிவனுக்கு போற்றி.”சைவர்களின் முதன்மை மந்திரம். பஞ்சாட்சரம் அல்லது அஞ்செழுத்து மந்திரம். ந—சிவனின் மறைக்கும் சக்தி. ம—உலகம் சி—சிவன் வா—அருளும் சக்தி ய—ஆன்மா.§
நமஸ்காரம்: “மரியாதை கலந்த வணக்கம்.” இந்துக்கள் மிக அதிகமாக பயன்படுத்தும் வாய்மொழி வாழ்த்து. நாம் இச்சொல்லை சொல்லும்போது இரண்டு உள்ளங்கைகளையும் நெஞ்சிலே அல்லது நெற்றி உயரே வைத்து தலையை சற்று தாழ்த்தி சொல்லுகிறோம். கோயில் தெய்வத்தின் முன்னிலையிலோ, ஒரு மகானுக்கோ, ஒரு நண்பனுக்கோ அல்லது வழியில் சந்தித்த ஒருவருக்கோ கண்பிக்கப்படும் பக்திகலந்த ஒரு சைகை மொழி.§
நந்திநாதர்: கைலாச பரம்பரை நந்திநாத சம்பிரதாயத்தின் (தெரிந்த) முதல் குரு. சுமார் கி.பி. 250 ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர்.§
நடராஜர்: பிரபஞ்சத்தில் நடனமாடும் கடவுளாக சிவபெருமான். இது கடவுள் உருவெடுத்துள்ள நிலை. சிவனின் நடனம் பிரபஞ்சம் முழுதும் எல்லோருள்ளும் சீராக தாள கதியில் நடைபெறுவது. அசையும் பொருளும் அசையாப் பொருளும் இவர் திருமேனியுள் துடித்துக் கொண்டிருக்கிறது. நடனமும் நடனமிடுவோரும் ஒன்றே. அவனருளன்றி ஓர் அணுவும் அசையாது. எனவே சிவனின் இந்த அற்புத நடனக் கோலம் அனைத்தையும் ஒன்றிணைக்கிறது.§
நாதம்: ஒலி. மெய்ப்பொருளியல்படி அனாதி நிலையின் மெல்லிய சூட்சுமமான ஒலி. தியானம் செய்வோர் நாதத்தின் ஒரு ரூபமாக “ஈஈஈஈஈ” என்ற ஒலியை தமக்குள்ளே கேட்கின்றனர்.§
நாத சம்பிரதாயம்: சைவ போதனைகளில் மிகவும் பழமையான போதனை. இதில் நந்திநாத சம்பிரதாயம் என்பது ஒரு கிளை.§
நால்வர்: “நான்கு குரவர்கள்.” மிகவும் உயர்வாகப் போற்றப்படும் தமிழ் சைவ சமய ஞானிகளான அப்பர், சுந்தரர், ஞானம்பந்தர், மாணிக்கவாசகர்.§
நியமம்: நமது ஆன்மீக இயல்பை செழிக்கசசெய்யும் நன்னெறி வழிகள், அஷ்டாங்க யோகத்தில் நியமம் இரண்டாம் அங்கமாகும்.§
நுண்பிரபஞ்சம்: (microcosm) சிறிய உலகம் அல்லது குட்டிப் பிரபஞ்சம் இந்த உள்ளுலகிலிருந்துதான் பருவுலகம் வெளிப்படுகின்றது.§
நுண்ணுடல்: சூக்கும தேகம். அந்தர்லோகம் அல்லது நுண்ணுலகில் ஆன்மா செயல்படுவதற்கு ஏதுவாக எடுத்துக்கொள்ளும் தூலமற்ற சூக்கும உடம்பு அல்லது வாகனம்.§
நுண்ணுலகம்: (லோகம்): அந்தர்லோகம் அல்லது இரண்டாம் உலகம். சூக்கும லோகம். நாம் வாழும் இவ்வுலகிற்கும் காரண உலகிற்கும் இடைப்பட்ட லோகம் இது. தூங்கும்போதும் மறுபிறவியெடுப்பதற்கு இடைப்பட்ட காலத்திலும் ஆன்மா இவ்விடத்தில் சொற்பகாலம் வாசம் செய்யும்.இந்த லோகங்கள் பல அடுக்குகளைக் கொண்டவை. தேவலோகத்திலிருந்து (தேவர்கள் வாழுமிடம்) நரகலோகம்வரை (அசுரர்கள் வாழுமிடம்) உள்ளது. மறுபிறவிகள் எடுப்பதற்கிடையில் நாம் இந்த நுண்ணுலகில்தான் முழுமையாய் வாழ்கிறோம். இந்நுண்ணுலகுக்கும் நம் உணர்வுகளுக்கும் தொடர்பு உண்டு. பார்க்க அந்தர்லோகம்§
ப§
பத்து கேவ் (பத்துமலை): மலேசியாவில் கோலாலம்பூருக்கு வெளியே பிரசித்திபெற்ற ஒரு குகை. ஆகப்பெரிய இந்த குகையில் ஒரு முருகன் கோயில் உள்ளது. மேலே குகைக்குச் செல்லும் 272 படிக்கட்டுகளின் ஓரமாக 140 அடி முருகன் சிலை வீற்றிருக்கிறது.§
பக்தி: சமய ஈடுபாடு§
பக்தி யோகம்: இதயத்தை திறந்து அன்பை பெருக்கி கடவுள் அருளைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் ஆன்மீகப் பயி ற்சிகள், வழிபாடு, பிரார்த்தனை, ஜெபம் மற்றும் பாடுதல். இப்படிப்பட்ட பக்தியானது கடவுள் மீதோ தெய்வங்கள் மீதோ, சற்குருவின்மீதோ இருக்கலாம்.§
பஜனை (பஜன்): ஆன்மீகப் பாடல். தனிப்பட்டவரால் அல்லது குழுவாகப் பாடப்படும் பக்திப் பாடல்கள், துதிகள், மந்திர உச்சாடனங்கள்.§
பழனிமலை: தென்னிந்தியா, தமிழ் நாட்டிலுள்ள புகழ்மிக்க பெரிய முருகன் கோயிலைக் கொண்டிருக்கும் இடம்.§
பஞ்சபிரம்மா: ஐந்து முகங்கள் கொண்ட சிவனின் திருவுருவம். அவரின் ஐந்து சக்திகளைக் குறிக்கும். (ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல்).§
பஞ்சாட்சரம் (பஞ்சாக்கரம்): “ஐந்தெழுத்து மந்திரம். “ நமசிவாய. சைவ சமயத்தின் முதன்மையான மந்திரம்.§
பஞ்சநித்ய கர்மங்கள்: இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து முக்கியக் கடமைகள். 1) வழிபாடு (உபாசனம்) ; 2) திருவிழாக்கள் (உற்சவங்கள்);
3) திருத்தல யாத்திரை (தீர்த்தயாத்திரை) ; 4) அறவழி (தர்மம்);
5) சடங்குகள் (சம்ஸ்காரங்கள்).§
பத்து நிமிட ஆன்மீகப் பயிற்சி: இது மாணவ வாழ்க்கை போல் அவசர கதியில் உள்ளவர்கள் ஆன்மீக ஒழுக்கங்களை தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்படி சற்குரு போதிநாதரால் வடிவமைக்கப்பட்ட அன்றாட விரைவு ஆன்மீகப் பயிற்சி. இப்பயிற்சியில் நான்கு பாகங்கள் உண்டு. வழிபாடு, உள்நோக்கி மனதை திருப்புதல், உறுதிமொழி, பாடம் படித்தல்.§
பரமேஸ்வரர்: மூல ஆன்மா, சர்வசக்தி படைத்த மகாதேவன், சிவசக்தி.
இறைவனின் தனிப்பெரும் பூரணத்துவம். அவரே செயலாற்றுகிறார், திருவுள்ளங்கொள்கிறார், ஆசீர்வதிக்கிறார், தரிசனம் கொடுக்கிறார், வழிகாட்டுகிறார், படைக்கிறார், காக்கிறார், ஒடுக்கிக்கொள்கிறார், மறைக்கிறார், அருளொளி வழங்குகிறார்.§
பரம்பரை: வழிவழியாய் வந்தவர்கள் (குருமார்கள்). தீட்சை மூலம் ஆன்மீக சக்தியை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் கொடுப்பது.§
பராசக்தி: “சர்வ சக்தி; ஆதி சக்தி” உலகத்தில் யாவற்றுக்கும் மூலப்பொருளாகவும் எங்கும் நிறைந்திருக்கும் கடவுளின் தன்னிலையற்ற தூய உணர்வு. சச்சிதானந்தம் என்றும் அது அழைக்கப்படும்.§
பராசிவம்: தான் கடவுள். சிவனின் முதல் பூரணத்துவம். காலம், உருவம், வெளி ஆகியவற்றைக் கடந்த முழுமுதல் உண்மை.§
பசு: இந்து சமய தத்துவத்தில் பசு என்பது உயிர் அல்லது ஆன்மாவைக் குறிக்கும். உயிரோடிருக்கும் யாவற்றையும், மனிதன் உட்பட, அது குறிக்கிறது. பசு என்றால் ஒரு மிருகம் என்றும் பொருள்படும்.§
பசுபதிநாதர்: (பசுக்களின் அதிபதி) சிவபெருமானுக்காக நேப்பாளத்தில் கட்டப்பட்ட மிகமுக்கியமான கோயில்.§
பதி, பசு, பாசம்: இறை, உயிர், தளை (உலகம்) என்ற மும்மல தத்துவம். தலைவன், பசு, கயிறு என்று நேர்பொருள் உண்டு.§
பாதங்கள்: (மார்க்கங்கள்): ஆன்மா பக்குமடைய சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய படிமுறையில் முன்னேற வேண்டிய நான்கு மார்க்கங்கள்.§
பாசம்: உலகின் தோன்றிய எல்லா பொருள்களும் தோன்றாப் பொருள்களும். ஆன்மாவின் மும்மல பந்தங்களான ஆணவம், கன்மம், மாயை.ஆன்மாவைக் கட்டுவது அல்லது கட்டுப்படுத்துவது.§
பாவம்: தெய்வ நீதியான தர்மத்தை மனமறிந்து மீறுதல். பாவச் செயல்கள் துன்ப கர்மப் பயனைக் கொடுத்து ஆன்மாவை அனுபவப் பாடம் படித்து பரிணமிக்கச் செய்கிறது.§
பிண்டி: (இந்தி) நெற்றியின் இரு புருவங்களுக்கிடையே இடப்படும் பொட்டு. ஒருவர் இந்து என்று காட்டும் அடையாளம். சமஸ்கிருதத்தில் இதனை பிண்டி என்பர், தமிழில் பொட்டு எனப்படும்.§
பிரசாதம்: கடவுள், தெய்வங்கள், குருவுக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட உணவு அல்லது பிறரோடு பகிா்ந்து கொள்ளும் உணவின் ஒரு பகுதி.§
பிரத்தியாகாரம்: வெளியுலகிலிருந்து—அதாவது பஞ்ச புலன்களிலிருந்து, மனவுணர்ச்சியிலிருந்து, அறிவுணர்ச்சியிலிருந்து—விழிப்புணர்வை மீட்டுக்கொள்ளுதல். இது அஷ்டாங்க யோகத்தின் ஐந்தாவது பகுதி.§
பிரபஞ்சம்: மூவுகும் கொண்ட முழுமையான இணக்கமான படைப்பு.§
பிராயச்சித்தம்: செய்த பாங்களை கழுவும் செயல்.§
பிராணன்: உயிர்ச்சக்தி. மனித உடலில் இயங்கும் பிராண ஆற்றல் அல்லது உயிர்ச்சக்தியை இது குறிப்பிட்டாலும் பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றல் அல்லது சக்தியையும் குறிக்கும்.§
பிராணயாமம்: சுவாசப் பயிற்சியின் மூலம் நுண்சக்தியான பிராணசக்தியை கட்டுப்படுத்தும் பயிற்சி நுணுக்கம். பிராணயாமம் மனதை அமைதிப்படுத்தி ஆண் பெண் சக்தியை (இடகலை பிங்கலை) சமப்படுத்துகிறது. இது அஷ்டாங்க யோகத்தில் நான்காவது பகுதி.§
புத்த மதம்: சித்தார்த்த கெளதம புத்தரின் (கி.மு. 624-544) போதனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்து சமயத்திலிருந்து கிளையாக எழுந்த ஒரு சமயம். ஆசை,வெறுப்பு, மாயை ஆகியவைகளிலிருந்து இம்மதத்தைச் சார்ந்தோர் விடுபட விழைகின்றனர். நான்கு உண்மைகளை உணர்ந்து எட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி ஞானமடைய முனைகின்றனர். தம்ம பதம் என்ற நூலே இவர்களின் பிரதம சாத்திர நூல்.§
பூஜை: இந்துக்கள் வழிபடும் முறை, கிரியா சடங்கு. இது நறுமணப்புகை காட்டுதல், நீர் வார்த்தல், நைவேத்தியம் (உணவு) படைத்தல், பூக்கள் அர்ச்சனை, திருவிளக்கு ஏற்றுதல், சமஸ்கிருத ஸ்லோகங்கள் உச்சரித்தல், மணியடித்தல் போன்றவற்றை உள்ளடக்கும். இவை யாவும் வழிபடும் கடவுளோடு தொடர்பு ஏற்படுத்த உதவுகின்றன.§
பூலோகம்: ஐம்புலன்களாலும் நம்மால் அறியப்படும் இப்பருவுலகம். இங்குதான் நாம் நமது உடலில் இயங்குகிறோம். முதல் உலகம்.§
பூமி தேவி: “பூமி தெய்வம்.” இந்து சாத்திரங்களில் பூமியை தெய்வமாக மதித்து இடப்பட்ட பெயர்.§
பூரணத்துவம் (மூன்று): நிர்மலமான குணம், பரிமானம், அல்லது அம்சம் கொண்டிருப்பது. சிவபெருமானின் மூன்று பூரணத்துவங்களை வருணிக்க பயன்படுத்தப்படும் பதம். முதல் பூரணம்: சிவபெருமானே பராசிவமாக அனைத்தையும் கடந்து இருக்கிறார் என்றாலும் அனைத்துக்கும் அவரே நிலைக்களமாக இருக்கிறார். இரண்டாம் பூரணம்: சிவனே யாவற்றிலும் உள்ளூர தூய உணர்வாக (பராசக்தி) பரிணமித்திருக்கிறார். மூன்றாம் பூரணம்: சிவபெருமான் ஆதியான்மாவாக அனைத்தையும் படைக்கும் பரமேஷ்வரனாக தனிப்பெரும் உருவாய் விளங்குகிறார்.§
பெங்களூரு: தென்னிந்திய மாநிலமான கர்னாடகத்தில் இருக்கும் ஒரு மாநகரம். இதற்குமுன் பெங்களூர் என்றழைக்கப்பட்டது.§
பொட்டு: இந்து என்பதற்கு அடையாளமாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் ஒரு சின்னம் (பிந்தி என்றும் அழைப்பர்). குங்குமம் அல்லது சந்தனத்தில் அணிவர். திருமணமாகாத பெண்கள், விதவைகள் கருப்பு பொட்டு அணிவர்.§
போகர் ரிஷி: இந்தியாவின் தமிழ் நாட்டில் பழனிமலைக் குகை ஒன்றில் கடுந்தவம் புரிந்த பெரும் சைவ சித்தர். இன்றளவும் வழிபடப்படும் நவபாஷான (முருகன்) சிலையை வடித்த பெருமை இவருக்கு உண்டு.§
போதிநாத வேலன்சுவாமி, சற்குரு: சிவாய சுப்பிரமுனியசுவாமிக்குப் பிறகு கைலாச பரம்பரையின் இன்றைய குரு.§
ம§
மகரிஷி: “மகா தரிசி”: ஒரு பெரிய சமய ஞானிக்குரிய பட்டப் பெயர்.§
மகாகாலேசுவரர்: இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் உஜ்ஜயின் என்ற இடத்தில் வீற்றிருக்கும் பழம்பெரும் சிவன் ஆலயம்.§
மகாசிவராத்திரி: ஆண்டின் ஆகப்பெரிய சிவத்திருவிழா. பிப்ரவரி-மார்ச் மாதத்தில் பிரதமை திதிக்கு முன்னிரவில் கோண்டாடப்படுவது உண்ணாவிரதமிருந்தும் இரவு முழுதும் கண் விழித்திருந்தும், மந்திரம் ஜெபித்தும், பிரார்த்தனை செய்தும், தியானம் செய்தும், சிவனை மூலக் கடவுளாகவும் அனைத்தின் ஆதாரமாகவும் போற்றி வணங்குவர்.§
மகாதேவர்: ஒளிபடைத்தவர்: கடவுள்.” சிவபெருமானைக் குறிப்பிடும் வழிபாட்டுச் சொல். இச்சொல் மிகவும் உயர் பரிணாம வளர்ச்சி பெற்றவர்களுக்கும் -அதாவது ஆன்மாக்களின் பரிணாம வளர்ச்சிக்கு உதவி செய்வ சிவபெருமானால் படைக்கப்பட்ட கணேசப் பெருமான், முருகப் பெருமான்—போன்றவர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.§
மதக் கோட்பாடு: ஒரு சமயத்தின் அடிப்படை நம்பிக்கைகளை விளக்கமாகக் காட்டும் அதிகார பிரகடனம். (சாசனம்)§
மதுரை: தென்னிந்தியா தமிழ் நாட்டிலுள்ள ஒரு மாநகர். பெருமைமிக்க மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில் இங்குதான் இருக்கிறது.§
மலங்கள்: “கழிவுகள்.” ஆன்மாவின் உண்மையான தெய்வீக இயல்பை அறியவிடாமல் அறிவைக் குறைக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களை (பாசம்) குறிக்கும் சைவ சமயத்தின் முக்கியமான வார்த்தை.§
மந்திரம்: பூஜை செய்ய, ஜெபிக்க அல்லது உணவுக்குமுன், கூட்டத்துக்குமுன் ஆசீர்வதிக்க சொல்லப்படும் வேத சாத்திரத்திலுள்ள சமஸ்கிருத சொல், சொற்றொடர் அல்லது வாக்கியம்.§
மந்திரயோகம்: ஆன்மீக மலர்ச்சிக்காக செய்யப்படும் ஜெபம், மந்திர உச்சாடனம். பார்க்க: ஜெபம்§
மச்சேந்திரநாதர்: 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்மிக்க நாத குரு. நேப்பாளத்தின் சித்த புரவலர்.§
மறுபிறவி: “உடம்பில் மீண்டும் புகுதல்.” ஆன்மா தன் பரிணாமத்தைத் தொடர மீண்டும் இவ்வுலகில் பிறப்பெடுத்தல். சமஸ்கிருதத்தில் புனர்ஜென்மம் என்றழைக்கப்படுகிறது. சூக்கும உலகிலிருந்து இச்சுழற்சி மீண்டும் மீண்டும் நடக்கிறது. பார்க்க: அந்தர்லோகம்§
மாலை: மணிகளால் கோர்க்கப்பட்டது. புனித பிரார்த்தனை, மந்திர ஜெபம் செய்வதற்காக ருத்திராட்சம், துளசி, சந்தனம் அல்லது ஸ்படிக மணிகளில் கட்டப்பட்ட மாலை: பூமாலை.§
மாணிக்கவாசகர்: வரலாற்றின் இடைக்காலத்தில் (கி.பி.850) சைவ சமய மறுமலர்ச்சி ஏற்படுத்திய தமிழ் சமயக் குரவர். தலைமை அமைச்சர் பதவியை உதறிவிட்டு துறவறம் மேற்கொண்டவர். சைவ சித்தாந்தத்தில் இவருடைய திருவாசகம் பக்தி இலக்கியத்தின் மணிமுடியாகும். அதில் அவருடைய அருள் ஏக்கத்தையும், ஆன்மீக சவால்களையும், யோக அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். இவருடைய திருவாசகமும், திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.§
மாயை: உலகத் தோற்றத்துக்கு சிவனிடமிருந்து வெளிப்பட்ட பொருள்
என்பதால் அனைத்து படைப்புக்களும் மாயை என்றே கொள்ளப்படுகிறது
பிரபஞ்சத்தின் படைக்கும் சக்தியாய் வெளிப்படும் தத்துவமான இது யாண்டும் ஆக்கல், காத்தல், ஒடுக்கும் தொழிலை செய்து கொண்டிருக்கிறது. மாயை கொள்கை இந்துசமயத்தில் முக்கியமானது என்றாலும் அது “பொய்த் தோற்றம்” என்று தவறாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.§
முத்திரைகள்: பூஜை, நடனம் மற்றும் யோகாவில் சில சக்திகளை அல்லது ஆற்றல்களை எழுப்ப அல்லது பொருள்பொதிந்த செய்தியை சொல்ல உபயோகிக்கப்படும் சூட்சும சைகைகள்.§
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஒரு பெரிய மாநகரம். முன்பு பம்பாய் என்றழைக்கப்பட்டது.§
முருகன்: சிவபெருமானின் இரண்டாவது மகன். கணபதியின் தம்பி. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் மற்றும் உலகம் முழுதும் வணங்கப்படும் ஒரு மகாதேவர். இவர் யோகத்துக்கும் ஆன்மீக முன்னேற்றத்துக்கும் அதிபதி. இருளை நீக்கி அறியாமையைப் போக்கும் அடையாளமாக கையில் ஞானசக்திவேல் ஏந்தியிருக்கிறார்.§
மூன்று உலகங்கள்: இருப்பின் மூன்று பரிமாணங்கள்: பூலோகம்: “பூமி உலகம்” பரு உலகம். 2) அந்தர்லோகம்: “உள்ளுலகம் அல்லது இடைப்பட்ட உலகம்” நுண்ணிய அல்லது சூக்கும உலகம். 3) சிவலோகம்: “சிவனின் உலகம்” தெய்வங்களும் (மகாதேவர்கள்) மிகவும் பக்குவமடைந்த ஆன்மாக்களும் இருக்கும் உலகம், காரண உலகம்.§
மூலாதார சக்கரம்: முதுகுத்தண்டின் கீழ் இருக்கும் நினைவுத் திறனுக்குள்ள
சக்கரம். கணபதியின் இருப்பிடம். ஆன்மீக வாழ்க்கையின் ஆரம்பம்.§
மூர்த்தி: பூஜையில் வைக்கப்பட்டு வழிபடப்படும் கடவுளின் திருவுருவம் அல்லது படம். கல்லால் அல்லது உலோகத்தால் அல்லது மரத்தால் மூர்த்திகள் செய்யப்படுகின்றன.§
மூஷிகம்: கணேசரின் எலி வாகனம்.இது மிகுதியையும் எத்திசைக்கும் அவரின் அருள் செல்வதையும் காட்டுகிறது.§
மெய்கண்டார்: 13 ம் நூற்றாண்டில் வாழ்ந்த துவைத பிரிவைச் சார்ந்த சைவ சித்தாந்த சமய அறிஞர். மெய்கண்ட சம்பிரதாயத்தை உருவாக்கியவர்.§
மெய்ஞ்ஞான மனம் (superconscious mind): ஒளிமனம். ஆன்மாவின் முற்றுமுணர்ந்த அறிவு. ஆக உயர்ந்த உன்னத உணர்வுநிலை.§
மேலை (கலாச்சாரம்): ஐரோப்பா அல்லது வட அமெரிக்காவை மூலமாகக் கொண்ட சிந்தனை, சம்பிரதாயம் அல்லது பழக்கவழக்கத்தைக் குறிக்கிறது.§
மோட்சம்: “விடுதலை.” பிறப்பு இறப்பு என்ற சுழலிருந்து ஆன்மா விடுபடுவது. இது அனைத்து தர்மங்களும் செய்துமுடித்து, கர்மவினைகள் தீர்ந்தபின் மெய்ஞ்ஞானம் அடைந்ததும் நடப்பது. பிறகு ஆன்மா உள்ளுலகில் தன் பரிணாமத்தைத் தொடர்கிறது.§
ய§
யஜுர் வேதம்: நால் வேதங்களில் மூன்றாவது. இவ்வேதத்தின் சம்ஹிதை பகுதியின் சிறப்பாக தொகுக்கப்பட்ட மந்திரங்கள் யக்ஞம் அல்லது ஓமம் எனும் அக்னிகாரிய சடங்குகளில் ஓதப்படுகின்றது.§
யாழ்ப்பாணம் (Jaffna): ஸ்ரீலங்காவின் வடக்கே இருக்கும் மாநகரம். இந்நகரம் வீற்றிருக்கும் தீபகற்பத்தின் பெயர்.§
யோகம்: தெய்வீக உணர்வைப் பெறுவதற்கு யோகிகளால் செய்யப்படும் தியானம், பிராணாயாமம், ஜெபம், உடம்பு கைகளால் செய்யப்படும் யோகாசனங்கள் போன்ற பல செய்முறைகள். சிலர் இவ்வார்த்தையால் ஹடயோகத்தைக் குறிப்பிடுவர். பார்க்க அஷ்டாங்க யோகம்§
யோகபாதம்: “இணையும் நிலை.” மனித மலர்ச்சியில் மூன்றாம் நிலை. சரியை படியிலும் கிரியை படியிலும் முழுமையடைந்தபின் ஒரு சற்குருவின் வழிகாட்டுதலோடு ஆன்மாவானது உள்முக (அகமுக) வழிபாட்டிற்கும் ராஜயோகத்திற்கும் திரும்புகிறது. ஆத்மஞானம் அடைவதே இலக்கு என்று சாதனா செய்வதற்கும் கடும் முயற்சியில் ஈடுபடுவதற்கும் இது சரியான நேரம்.§
யோகி: யோக நெறியில் வெற்றியடைந்த ஒருவர். பெண்: யோகினி§
யோகசூத்திரம்: சைவ நாத சித்தர் பதஞ்சலி முனிவரால் (கி.மு. 200) அருளப்பட்ட அஷ்டாங்க யோகத்தின் முதன்மையான நூல்.§
யோகசுவாமி, சற்குரு: இலங்கையின் பெரிதும் மதிக்கத்தக்க ஞானகுரு (1872-1964). சற்குரு சிவாய சுப்பிரமுனிசுவாமியின் முன்னோடி (குரு).§
யோகினி: பெண் யோகி.§
ர§
ராஜயோகம்: அஷ்டாங்க யோகம் என்று பதஞ்சலி யோகசூத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடியும், யோக உபநிடதம், திருமந்திரம் ஆகிய நூல்களில் உள்ளபடியும் ஒருவர் மெய்ஞானமடைவதற்கு உதவும் எட்டு வகையான யோகப்படிமுறைகள்.§
ராமேஸ்வரம்: ராமரால் பிரதிட்டை செய்யப்பட்ட தொன்மையான ராமநாதசுவாமி சிவன் ஆலயம் இருக்கும் ஒரு பட்டணம். இந்தியாவின் தென்கோடியில் உள்ளது.§
ரிஷி: “தரிசிப்பவர்.” ஞானோதயம் (மெய்ஞானம்) அடைந்தவர்களுக்காக உபயோகிக்கப்படும் ஒரு சொல். இது மானத காட்சியையும் தரிசன ஞானத்தையும் வலியுறுத்துகிறது.§
ல§
லிங்கம்: சிவலிங்கம். பார்க்க: சிவலிங்கம்§
வ§
வகுப்பு (பிரிவினை): ஒரே மதத்தில் பிரிந்திருக்கும் பிரிவினர்.§
வகுப்புவாதம்: சமயப் பிரிவினர்கள் சம்பந்தமானது.§
வழிபாடு: “சடங்குமூலம் வணங்குதல், பக்தி செய்தல், பின்பற்றுதல்.” தெய்வத் தன்மையை பல முறைகள்மூலம் வழிகள் மூலம் போற்றி வணங்குதல்.§
வணக்கம்: வாழ்த்து சொல்லுதல். இத்தமிழ்ச்சொல்லின் பொருள் நமஸ்தே என்று கூறுவது வணக்கம் சொல்வதற்கு சமம்.” பெருமதிப்பு”, ‘மரியாதை” “வழிபட்டு பணிதல்”§
வாகனம்: “தெய்வத்தின் வாகனம்.” ஒவ்வொரு இந்து தெய்வமும் ஒரு வாகனமாக விலங்கு அல்லது பறவையுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. தெய்வங்கள் இவற்றை தமது வாகனமாக பயன்படுத்துகின்றனர். இது குறிப்பிட்ட தெய்வத்தின் இயல்பையும் செயல்முறையையும் காட்டுகிறது.சிவபெருமானின் காளை வாகனம் வலிமையையும் ஆற்றலையும் குறிக்கிறது; முருகனின் மயில் வாகனம் அழகையும் அரசரையும் குறிக்கிறது; கணபதியின் மூஷிக வாகனம் வளமையையும் எங்கும் செல்லக்கூடிய திறமையையும் குறிக்கிறது.§
வாரானாசி: வட இந்தியாவின் ஒரு நகர். சைவர்களின் மிகப் புனிதமான உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதியோரம் அமைந்திருக்கும் இந்நகர் பனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்துக்கள் காசியில் இறப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர். காசியில் இறந்தால் முக்தி என்று நம்புகின்றனர். புகழ்பெற்ற காசி விசுவநாதர் சிவன் கோயில் இங்குதான் இருக்கிறது.§
வாஸ்து: “வாழுமிடம்.” வாஸ்து கலை என்பது வாஸ்து சாஸ்திரம் என்ற சமஸ்கிருத நூலில் உள்ளபடி குடியிருக்கும் முறை அல்லது கட்டடக்கலை என்பது. வாஸ்து சாஸ்திரத்தின் விதிமுறைகளை வீடு அல்லது கட்டடம் கட்டும்போது இயற்கையோடு இயைந்து கட்டுதல். ஸ்தபத்யவேதம் என்ற நூலின் ஒரு பகுதியே இந்த வாஸ்து கலை என்று நம்பப்படுகிறது.§
விலங்குமன இயல்பு: உடம்பு, கீழ்மை மனம் ஆகியவற்றிலிருந்து புறப்படும் தூண்டல் உணர்வுகள்: தன்னைக் காத்தல், இனவிருத்தி, பசி, தாகம், பேராசை, வெறுப்பு, கோபம், பயம், ஆசை, பொறாமை போன்றவை.§
விபூதி: சைவர்கள் புனிதம் எனக்கொள்ளும் திருநீறு. பால், நெய், தேன் போன்ற இன்னும் பிற பொருள்களோடு சேர்த்து பசு சாணத்தை எரித்து செய்யப்படுவது. நெற்றியில் பூசிக்கொள்ளப்படுவது. புனிதத்தையும் தூய்மையையும் எடுத்துக்காட்டுவது. பார்க்க திரிபுண்டரம்.§
விஷ்ணு: “யாவும் பரந்த.” இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினரின் பரம்பொருள்.§
வீடுபேறு: இறப்பு பிறப்பு சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதாகும். பார்க்க: மோட்சம்§
வெளிப்படும் சக்தி: உங்களால் பார்க்கக்கூடிய உணரக்கூடிய கடவுள் சக்தி§
வேதங்கள்: ரிஷிகளால் அருளப்பட்ட இந்து சமயத்தின் அதிகாரப்பூர்வ ஞானசாத்திரம். வேதங்களும் ஆகமங்களும் சுருதி அல்லது “கேட்கப்பட்டது” என்றழைக்கப்படுகின்றன. பல ஞானசாத்திரங்களின் தொகுப்பே வேதங்கள். அதாவது ரிக்,யஜுர், சாம, அதர்வ என்று நான்கு வேதங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மந்திர சுலோகங்கள் ஒரு லட்சத்துக்கும் மேல். இன்னும் பல சுலோகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பூமித்தாயை மதிப்பதிலிருந்து உயர்ஞான தத்துவம்வரை வேதங்கள் போதிக்கின்றன. ஒவ்வொரு வேதமும் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சம்ஹிதைகள் (மந்திரத் தொகுப்புக்கள்), பிராமணம் (பூசகர்களின் சடங்குமுறை வழிகாட்டி), ஆரண்யகம் (காட்டில் வாழும் முனிவர்களின் போதனைகள்) மற்றும் உபநிடதங்கள் (ஞானோபதேசங்கள்). கி.மு.4000 ஆண்டுகளுக்கு முன்பே வேதத்தின் மிகப் பழமையான பகுதிகள் போதிக்கப்பட்டுள்ளது. வாய்வழியாகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் போதிக்கப்பட்டு, பின்னர் அண்மைய ஆண்டுகளில் சமஸ்கிருதத்தில் எழுத்துவடிவில் வடிக்கப்பட்டு உலகின் மிகமிகப் பழமையான ஞானசாத்திர நூலாக விளங்குகிறது.§
வைணவம்: விஷ்ணுவை பரம்பொருளாக வணங்குவோரின் சமயம். இந்து சமயத்தின் நான்கு பிரிவுகளில் ஒன்று.§
வைணவர்கள்: வைணவ சமயத்தை பின்பற்றுவோர்கள்.§
ஜ§
ஜெபம்: ஒரு மந்திரத்தை அல்லது புனித ஒலியை மன ஒருமையுடன் திரும்பத் திரும்ப உச்சரிப்பது. கையில் ஒரு ஜெபமாலையுடன் மெளனமாகவோ அல்லது உரக்கவோ மாலையை உருட்டி எண்ணிகொண்டு செய்வது. இதனை ஜெபயோகம் அல்லது மந்திரயோகம் என்பர்.§
ஜெயந்தி: “பிறந்த நாள்.” ஒருவருடைய (ஞான) குரு பிறந்த நாளை குரு ஜெயந்தி என்பர்.§
ஜோதி: ஒளி, சுடர், வெளிச்சம். தியானம் செய்யும்போது மனதில் தெரியும் உள்ளொளி. இது சிவ உணர்வின் ஒரு வடிவம்.§
ஜோதிடம்: இந்து சோதிடம். வீண்ணில் திரியும் கோள்களையும் நட்சத்திரங்களையும் அடிப்படையாக வைத்து நிகழ்வுகளையும், சூழ்நிலைகளையும், குணக்கூறுகளையும், முகூர்த்த வேளையையும் நிர்ணயம் செய்கின்ற கணிப்பு அல்லது செய்முறை.§
ஜைன மதம்: அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட, ஆனால் வேதத்திற்கு வேற்றான தொன்மை வாய்ந்த சமயம். மகாவீரர் என்ற புகழ்பெற்ற ஜைன மத குரு 500ம் ஆண்டு வாக்கில் வாழ்ந்துள்ளார்.§
ஸ§
ஸ்மார்த்தம்: இந்துசமயப் பிரிவு நான்கில் ஒரு பிரிவினர். இப்பெயர் சார்பு வேதங்களான (ஸ்மிரிதி) இராமாயணம், (பகவத்கீதை உள்ளடக்கிய) மகாபாரதம், புராணங்கள், தர்ம சாத்திரங்களின் அடிப்படையில் வந்தது. வேத பிராமண மரபாக கி.மு.700ம் ஆண்டுகளில் இப்பழமையான ஸ்மார்த்த சமயம் தோன்றியது. 9ம் நூற்றாண்டு முதல் புகழ்பெற்ற ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்த போதனைகளால் மிகவும் கவரப்பட்டு வழிநடத்தப்பட்டது. ஸ்மார்த்தர்கள் எல்லா கடவுள்களும் பரம்பொருளின் வடிவங்களே என்று எல்லா கடவுள்களையும் வழிபடுவர். வகுப்பு வாதத்தை ஆதரிப்பதில்லை. ஆன்மீக அதிகார வழிகாட்டலுக்கு ஸ்மார்த்தர்கள் சங்கரரால் இந்தியா முழுதும் நிறுவப்பட்ட சங்கர மடங்களை அணுகுகின்றனர். இத்தகைய பத்து மடங்களை துறவிகளே நிர்வகிக்கின்றனர்.§
ஸ்மிரிதி: “நினைவில் வைத்துக்கொள்ளப்பட்டது;; மரபு. மனிதனின் உள்ளுணர்விலும் அனுபவத்திலும் அகழ்ந்தெடுத்த இந்து சமயத்தின் வெளிப்படுத்தப்படாத ஆனால் மிகவும் மதிக்கப்படும் சார்பு (இரண்டாம் நிலை) சாத்திரங்கள். ஸ்மிரிதிகள் மதச்சார்பற்ற விஷயங்களையும் ஆன்மீக மரபுச் செய்திகளையும் உரைக்கிறது.
1) இச்சொல் சில பழங்கால சமஸ்கிருத சுவடிகளான வேதாங்கங்கள், உபவேதங்கள், இதிகாசங்கள் மற்றும் புராணங்கள் முதலிய தொகுப்புக்களைக் குறிக்கிறது
2) ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சம்பிரதாயத்தினர் புனிதமாக போற்றும் எந்த ஸ்மிருதியையும் அல்லது சுருதியையும் (வெளிப்பட்ட சாத்திரம்) பொதுப்படையாக குறிக்கிறது. எந்த ஸ்மிரிதியை தேர்ந்தெடுப்பது என்ற விருப்பம் ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் பரம்பரைக்கும் வேறுபடுகிறது.§
ஸ்திதி: “காத்தல்.” சிவபெருமானின் ஐந்து சக்திகளில் ஒன்று.§
ஹ§
ஹரிஹரன்: சிவனும் விஷ்ணுவும் ஒன்றே, இரண்டன்று என்று விளக்கிக்காட்டும் புகழ்பெற்ற பாரம்பரிய பாதி சிவன் பாதி விஷ்ணு திருவுருவமேனி. ஹரி என்றால் விஷ்ணுக்குரிய பெயர். ஹரன் என்றால் சிவனுக்குரிய பெயர்.§
ஹடயோகம்: (யோகாப்பியாச) ஆசன முறைகள். மனம் சம்பந்தப்பட்ட பயிற்சிகள். அஷ்டாங்கயோகத்தின் மூன்றாம் பகுதி. மனதையும் உடலையும் அமைதிப்படுத்தி தியானத்துக்கு தயார் படுத்துகிறது. உடலுக்கும் உடல்நலத்துக்காகவும் செய்யப்படுவது என்றும் ஹடயோகத்தை சமயத்தில் குறிப்பிடுவர்.§
ஸ்ரீ§
ஸ்ரீருத்திரம்: “(மந்திரப் பாடல்) அளவற்ற சக்திகளைப் பிரயோகிப்பவனுக்கு.” முதல் மூன்று வேதங்களின் நடுவே இருக்கும் ஒப்பிலா சிறந்த வேத மந்திரம். சிவனை ஒடுக்கும் கடவுளாகப் போற்றி செய்வது. உலகம் முழுதுமுள்ள_சிவாலயங்களில் அடிக்கடி ஓதப்படும் மந்திரம். இந்த நீண்ட மந்திரத்தின் நடுவேதான் “நமசிவாய” என்ற மந்திரம் முதன்முதலாக வருகிறது.§
ஸ்ரீலங்கா: இந்தியாவின் தென்முனைக்கு அப்பால் இருக்கும் தீவு. முன்பு இந்நாடு சிலோன் என்று அழைக்கப்பட்டது. லட்சக்கணக்கான சைவத் தமிழர்கள் இங்கு பெரும்பாலும் கிழக்கிலும் வடக்கிலும் வாழ்கின்றனர்.§