Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அவை அறிதல்

711. §

சொல்வன்மை அறிந்து நாவன்மை பெற்றோர் பொருள் பொதிந்த சொற்களைப் பேசு முன் சபையோரின் தரத்தை அறிதல் வேண்டும்.§

712. §

தம் கலையை நன்குணர்ந்த சொற்பொழிவாளர் தாம் அறிந்ததை எடுத்துரைக்கத் தக்க தருணம் நோக்கிக் காத்திருப்பர்.§

713. §

பேசு முன் சபையின் இயல்பை அறியத் தவறுதல் பேசும் வகை அறியாது பயன் இன்றிப் பேசுவதாகும்.§

714. §

அறிவாளிகள் முன் அறிவாளியாக விளங்குக. ஆயின் மூடர்கள் முன்னிலையில் அறிவு மழுங்கிய மூடன் போல் காட்டிக் கொள்க.§

715. §

சபையில் தன்னைவிட மூத்தோரும் உயர்ந்தோரும் இருக்கும் போது தானே முந்திச் சென்று பேசாது அடக்கத்துடன் இருத்தல் மிகச் சிறந்தது.§

716. §

அறிஞர் முன் கருத்தை எடுத்துரைப்பதில் தவறு செய்வது உயர்ந்த மேல் நிலையிலிருந்து வழுக்கிக் கீழே விழுதலை ஒக்கும்.§

717. §

நன்றாகக் கற்று அறிந்தவரின் கல்வி அவர் சொல் வன்மையின் திறனை ஆய்வு செய்யக் கூடிய பேரறிஞர் மத்தியில் மேலும் சிறந்து ஒளிவிட்டு விளங்கும்.§

718. §

சிந்தனையாளர் சபையில் கற்றவர் பேசுதல் பயிர் வளரும் பாத்தியில் நீர் இறைப்பது போல் ஆகும்.§

719. §

அறிஞர் சபையில் நல்ல கருத்துக்களை நன்கு எடுத்துக் கூறும் ஆற்றல் உள்ளவர் அறிவற்றவர் மத்தியில் மறந்தும் அவற்றைப் பேசாது இருத்தல் வேண்டும்.§

720. §

நல்ல தகுதி இல்லாதவர் கூட்டத்தில் விரிவுரை செய்வது அசுத்தத்தில் அமிர்தம் கொட்டுவது போல் ஆகும்.§