Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

சிற்றினம் சேராமை

451. §

அறிவிற் பெரியோர் சிற்றினக் கூட்டத்தைக் கண்டு அஞ்சுவர். ஆயின் அறிவிற் சிறியோர் அவருடன் இனங் கொண்டாடுவர்.§

452. §

நீரானது தான் ஊடாகப் பாயும் நிலத்தின் பாங்கினை ஒத்திருப்பது போல் மனித இயல்பும் அவரவர் கூடிப்பழகும் இனத்தவரின் இயல்பினை உடையதாயிருக்கும்.§

453. §

ஒரு மனிதனின் உணர்ச்சிகளை அவன் மனம் வெளிப்படுத்துவது போல் அவனுடைய குணத்தை அவனைச் சேரும் கூட்டம் காட்டி விடும்.§

454. §

ஒருவன் மனதில் உற்பத்தியாவது போல் தோன்றும் மெய்யறிவு அவனைச் சார்ந்த கூட்டாளிகளிலிருந்து தோன்றியதே.§

455. §

மனத்தூய்மை, செய்யும் செயலின் தூய்மை எனும் இவ்விரண்டும் ஒருவர் கூடும் கூட்டத்தால் உண்டாகும் தன்மையவை.§

456. §

தூய மனம் உடையோருக்கே புகழ் தரும் மரபு தோன்றும். அதுபோல் தூய நண்பர்களை உடையவர் இழிவான செயல்களைப் புரியார்.§

457. §

நல்ல மனம் உலகில் வாழும் உயிர்களுக்கு நன்மை பயக்கும். நல்லார் சேர்க்கையும் எல்லாப் புகழையும் தரும்.§

458. §

மெய்யறிவுடையோர் பூரண மன நலத்தைப் பெற்றிருப்பினும் இனம் மூலம் வரும் நலமே பாதுகாப்பு தரும் அரணாக அமையும்.§

459. §

மனத்தூய்மையினால் ஒருவருக்கு அடுத்த பிறவியிலே இன்பங் கைகூடும். இன நலத்தால் அது மேலும் வலுப்பெற்றுச் சிறப்படையும்.§

460. §

நல்ல இனச் சேர்க்கையில் சிறந்த துணை வேறில்லை. தீய இனச் சேர்க்கை தரும் வேதனை போல் துன்பம் வேறில்லை.§