Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கூடா ஒழுக்கம்

271. §

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகன் வாழ்வைக் கண்டு அவன் உடலிலுள்ள ஐம்பூதங்களும் சிரிக்கும்.§

272. §

குற்றமென்றறிந்த ஒரு செயலிலே ஒருவன் நெஞ்சம் நன்றாகத் தோய்ந்திருப்பின் அவன் வெளிப்புறத் தவக் கோலத்தினால் என்ன பயன்?§

273. §

மனம் அடக்க ஆற்றலற்றவன் துறவியின் ஆடை அணிதல் பசு ஒன்று புலியின் தோலைப் போர்த்திப் புல் மேய்வதை ஒக்கும்.§

274. §

துறவியின் ஆடையில் மறைந்திருந்து தீச் செயல் இழைப்பவர் புதரில் ஒளிந்திருந்து வேடன் பறவைகளைப் பிடித்தலை ஒக்கும்.§

275. §

தாம் பற்றற்ற துறவியர் என்று போலியாக ஒழுகுகின்றவர் ஏன் இப்படிச் செய்தோம் என்று வருந்தும் காலமும் நேரமும் பின் வரும்.§

276. §

உலகப் பற்றினை உள்ளத்தால் துறவாமல் துறவுக் கோலம் பூண்டு ஏமாற்றி வாழ்பவர்களைப் போன்ற கல் நெஞ்சர் எவருமில்லை.§

277. §

சிவப்பும் கருமையுமான இருநிறம் உள்ள குன்றிமணியின் புறம் போல் கவர்ச்சியாக வெளித்தோற்றம் பூண்டு அதன் மூக்கு போல் இருள் மனம் உடையார் உளர்.§

278. §

தூய உள்ளமுள்ளவர் போல் புனித தீர்த்தங்கள் ஆடிக்கொண்டு இருண்ட நெஞ்சத்திலே தீய ஒழுக்கம் மறைந்திருக்க வாழ்வோர் பலர்.§

279. §

அம்பு நேராயினும் கொடியது, யாழ் வளைவாயினும் இன்பந்தருவது. எனவே மனிதரின் புறத் தோற்றத்தை ஒதுக்கி அவரவர் செயல் கொண்டு அவரை மதிப்பிடுக.§

280. §

சான்றோரால் இகழப்படும் இழிச்செயல்களை ஒழிப்பின் சடா முடியை வளர்த்தலோ தலையை மழித்தலோ செய்ய வேண்டுவதில்லை.§