10 Questions About Hinduism

image

இந்து சமயத்தைப் பற்றி மக்கள் கேட்கும் 10 கேள்விகளும்

10 அற்புதமான பதில்களும்

image

மனிதனின் ஆழ்ந்த நம்பிக்கை இப்பொழுது உலகளாவிய நிகழ்வாகத் திகழ்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், அண்டை அயலார் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களிடம் நிறைய கேள்விகள் எழும்புகின்றன. தவறான கருத்துக்கள் பரவலாகக் காணப்படுகின்றன. சரியான புரிந்துணர்வை நிலை நிறுத்தவும் தவறான கருத்துக்களைச் சரிப்படுத்துவதற்கும் இங்கே உள்ள அறிவார்ந்த பத்து விடைகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்து சமயத்தைப் பற்றிய சினமூட்டும் அல்லது எரிச்சலூட்டும் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டிய நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்களா? இவை பதிலளிக்கச் சிரமமில்லாத கேள்விகளாகவும் இருக்கலாம். அப்படியாயின் நீங்கள் தனியொருவர் மட்டுமல்ல. உங்கள் சமயத்தைப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க நல்ல தயாரிப்பும் நல்ல மனோபாவமும் இருக்க வேண்டும். இக்கேள்விகள் நம்மோடு வேலை செய்யும் நண்பர்கள், மாணவர்கள், வழிப்போக்கர்கள் அல்லது கிறிஸ்துவ சமய நெறி சார்ந்தவர் மூலமாகவும் வரலாம். 1990 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் சிகாகோ, லெமண்ட், இந்து கோயிலிலிருந்து பதின்மர் வயது குழுவினர் "இந்துஸ்யம் டுடே" சஞ்சிகைக்கு ஒன்பது கேள்விகளுக்கு அதிகாரப் பூர்வ பதிலுக்காக வேண்டுகோள் விடுத்தனர். இக்கேள்விகள் பொதுவாக அவ்வயதினர் கேட்கும் கேள்விகள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கேள்விகள் இந்து இளைஞர்களை குழப்பமடையச் செய்தன. அவர்களின் பெற்றோர்களாலும் அவர்களுக்குத் திருப்தியான பதிலைக் கூற முடியவில்லை கேள்விகளுக்குப் பதில் தெரியாதிருந்தனர். சிவாய சுப்பிரமுனிய சுவாமிகள் சவாலை ஏற்று ஒன்பது கேள்விகளுக்கும் அடியிற் கண்டவாறு பதிலளித்தார். சஞ்சிகையின் இப்பதிப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்பதோடு பத்தாவது கேள்வியாகிய சாதி முறையையும் சேர்த்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில் இந்து சமயம் இன்று எதிர் நோக்கும் கடுமையான குறை கூறலுக்குச் சாதி முறையும் உட்பட்டிருக்கிறது.

பதில் கூறும்பொழுது நாம் மேற்கொள்ள வேண்டிய மனோபாவத்தைப் பற்றிய அறிவுரையோடு தொடங்குவோம். முதலாவதாக நீங்கள் உங்களை "யார் அந்தக் கேள்வியை கேட்பவர்?" என்று கேட்க வேண்டும். கோடிக் கணக்கான மக்கள் இந்து சமயத்திலும் ஆசியாவிலுள்ள இதர சமயங்களிலும் உண்மையாக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆகையால் இந்து சமயத்தைப்பற்றி கேள்விகளைக் கேட்பவர் எதிர்மறையான மனோபாவத்துடன் கேட்டாலும் நாம் அவரிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர் உண்மையிலேயே இந்து சமயத்தைப்பற்றிக் கற்றுக் கொள்ள விரும்புகிறார் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். சிலர் தொல்லை கொடுப்பதற்காகவும் இந்து சமயத்தைத் தாக்க வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் கருத்துக்கு உங்களைத் திசை திருப்பவும் கேட்பார்கள். மேற்கூறப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் உணர்ந்தால் பணிவோடு புன்னகையைக் காட்டி பதில் கூறு முயற்சிக்காமலும் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாமலும் அங்கிருந்து அகன்று விடுங்கள்.

image

இவற்றை மனத்தில் கொண்டு சமயத்தைப்பற்றிய கேள்விகளுக்கு உறுதியாகவும் உடனடியாகவும் பதில் கூறவேண்டாம். அது உங்களை வாதத்தில் ஆழ்த்திவிடக் கூடும். ஒரு முன்னுரைக்குப் பின்னர் கேள்விக்கு வரவேண்டும். கேள்வி கேட்பவர் உங்கள் பதிலைப் புரிந்து கொள்ள நீங்கள் வழிகாட்ட வேண்டும். உங்களுக்கு நிதானமும் கவனமும் இருந்தால் அவருக்கு நீங்கள் கூறும் கருத்து உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது என்ற உத்தரவாதத்தைத் தரும். உள்ளுணர்வால் அறிந்திருப்பதைச் சற்று நினைத்துப் பார்க்க முடியும். நீங்கள் ஆழ்ந்த பதிலுக்குச் செல்லுமுன் அவர் எம்மதத்தைச் சார்ந்தவர் என்பதைக் கேளுங்கள். இதைத் தெரிந்து கொள்வதன் மூலம் அவர் மனத்திலுள்ள எண்ணத்தை அறிந்து நீங்கள் கொடுக்கும் பதில் மிகப் பொருத்தமானதாக அமையும். மற்றொரு முக்கியமான ஒன்று, அர்த்தமுள்ள பதிலைப் பணிவுடன் கொடுக்கும் திறன் உங்களிடம் உள்ளது என்று தன்னம்பிக்கை கொள்ளுங்கள். "மன்னிக்க வேண்டும். இந்து சமயத்தைப்பற்றி இன்னும் படிக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன, உங்கள் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியாது" என்று பதில் கூறுவதும் அர்த்தமுள்ள பதிலாகும். நேர்மையும் உண்மையும் எப்பொழுதும் பாராட்டப்படும். உங்களுக்குத் தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்ளத் தயங்கக் கூடாது, இது உங்களுக்கு நீங்கள் அறிந்தவற்றிற்கு நம்பிக்கையூட்டும்.

இங்கே நான்கு முன்னுரைகள் அல்லது பீடிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கேள்விக்குப் பதில் கூறுவதற்கு முன் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்தலாம்.

1. எங்கள் சமயத்தில் நீங்கள் ஆர்வம் காட்டுவதற்காக நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆறு மனிதர்களுக்கு ஓர் இந்து இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது.

2. எங்கள் சடங்கு சம்பிரதாயத்தைப் பற்றிப் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனக்கு எல்லாம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும் உங்கள் கேள்விக்குப் பதில் கூற முயற்சிக்கிறேன்.

3. முதலாவதாக இந்து சமயத்தில் நம்பிக்கையும் அறிவார்ந்த புரிந்துணர்வு மட்டுமே முக்கியமானதல்ல என்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்துக்கள் சமய உண்மைகளை அனுபவப் பூர்வமாக அறிந்து கொள்வதற்கு அதிமுக்கிய மதிப்புக் கொடுக்கிறார்கள்.

4. நான்காவது முன்னுரையில் அவர் கேட்ட கேள்வியை மறுபடியும் கேட்டுப் பார்த்து அவர் உண்மையிலேயே எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கேட்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அவரது கேள்வியை உங்கள் சொந்த வார்த்தைகளில் மறுபடியும் சொல்லிப் பார்த்து அவரது கேள்வி சரியாக உங்களுக்குப் புரிகிறதா என்று பாருங்கள். அது குழப்பம் தரக் கூடிய கேள்வியாயிருந்தால் "இது போன்ற கேள்விகளுக்குத் தத்துவ ஞானிகள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை விடை காண்பதற்காகவே கலந்துரையாடியுள்ளனர். இருப்பினும் உங்கள் கேள்விக்கு நான் விளக்கமளிக்க முயற்சிக்கிறேன்" என்று கூறுங்கள்.

தைரியமாய் இருங்கள். உங்கள் உள் மனத்திலிருந்து பேசுங்கள். சனாதன தர்மம் ஓர் அனுபவப் பாதை. அது சமயக் கோட்பாடு அல்ல. பதில் சொல்லும் அனுபவம் உங்களை ஆன்மீகப் பாதையில் முன்னேற்றமடையச் செய்யும். உங்கள் உள்மனம் கூறுவதைக் கேட்டால் உங்கள் பதில் மூலம் நீங்களும் கற்றுக் கொள்வீர்கள். உண்மையில் இது உங்களுக்கு அதிகக் களிப்பூட்டக் கூடியதாகவும் இருக்கலாம். மிக உன்னிப்பான ஆசிரியர் எப்பொதும் மாணவனைவிட அதிகமாகக் கற்கிறார்.

முன்னுரைக்குப் பின் தயக்கமின்றி பதில் கொடுங்கள். அவர் நேர்மையானவர் என்று கருதினால் "வேறு ஏதாவது கேள்விகள் உண்டா?" என்று கேட்கலாம். அவர் மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் உங்களால் முடிந்தளவு விளக்கிக் கூறலாம். சுலபமானதாகவும் அன்றாட வாழ்வில் காணக்கூடிய உதாரணங்களையும் கூறலாம். அக்கேள்விகளைப் பற்றி இந்து சமயத்தின் அறிவார்ந்த ஆன்மாக்களும் இந்து சமய திருமறைகளும் கூறும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இந்து சமயம் சம்பந்தமாகக் கேள்வி கேட்பவர்கள் ஒவ்வொருவரும் நேர்மையற்ற முறையில் கேட்பவர்கள் அல்லது நமது சமய நம்பிக்கைக்குச் சவால் விடுபவர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது. பலர் நட்புடன் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உரையாடுபவர்களாக இருப்பார்கள். ஆகையால் தற்காக்கும் மனப்பான்மை கொண்டு எல்லாவற்றையும் கடுமையானதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவருக்கு நீங்கள் பதிலளிக்கும் போது திறந்த மனத்தோடு புன்னகை புரியுங்கள். ஏதாவது ஒரு தலைப்பைப் பற்றி அவர் கேட்கும் இரண்டாவது அல்லது மூன்றாவது கேள்விகளுக்குப் பதில் தெரியாவிடில் "எனக்குத் தெரியாது. உங்களுக்கு உண்மையாக அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருந்தால் அதைக் கவனத்தில் கொண்டு அது சம்பந்தமான புத்தகத்தை உங்களுக்கு இரவலாக அனுப்பி வைக்கிறேன்" என்று கூறுங்கள். இப்படிக் கூறும்போது புன்னகையுடன் நம்பிக்கையோடு கூறவேண்டும். வெட்கப்படக் கூடாது. உங்கள் பிறப்பின் கர்ம வினைப் பயனால் எந்தக் கேள்விக்கும் கேட்பவரைத் திருப்தியடையச் செய்யும் பதிலை உங்களால் கொடுக்க முடியும். இதனால் நீங்கள் அவர்களை நீண்டகாலத்துக்கு ஆயுள் நண்பர்களாக்கிக் கொள்ள முடியும்.

பத்து கேள்விகள் ஒவ்வொன்றும் நினைவில் கொள்ளக் கூடிய சுருக்கமான விடையுடனும் நீண்ட பதிலுடனும் மிகத் தெளிவான விளக்கத்துடனும் கொடுக்கப்பட்டுள்ளன. கேள்வி கேட்கும் பலர் குறுகிய எளிமையான விடைகளால் திருப்தியடைவார்கள். ஆகையால் அவற்றிலிருந்து தொடங்குங்கள். அவற்றிலுள்ள விளக்கங்களை உங்கள் பின்னணித் தகவல்களாகக் கொள்ளுங்கள். அல்லது தத்துவார்த்தமாக உரையாட நேரிட்டாலும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மூலவளத் தகவல்களுக்கு அடியிற் காணும் இணைய தளத்துக்குச் செல்லுங்கள்.