64§ |
திருவிழாக்களை நாம் எப்படக் கொண்டாடுகிறோம்?§ |
இந்து சமயம் இயல்பாகவே கொண்டாட்டம் நிறைந்த சமயம். உலக வாழ்வை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு விழாக்காலத்தில் இறைவனோடு சற்று நெருங்கியிருப்பதை முக்கியம் என இந்துக்கள் கருதுகின்றனர். குடும்பத்தோடும், நண்பர்களோடும், அண்டைவீட்டுக் காரர்களோடும், அறிமுகம் இல்லாதவர்களோடும் சேர்ந்து உணவருந்தி உல்லாசமாக இருந்து இல்லச்சூழலையும் மனதையும் அவ்வேளை புதுப்பிக்கின்றனர். இதர சமயங்களைவிட இந்து சமய திருவிழாக்கள் விதவிதமாகவும் இதயத்தை ஈர்ப்பதாகவும் இருக்கின்றன. இவ்விழாக் காலங்கள் சூட்சுமஞானம் நிறைந்தவை என்றும், அப்போது இறைசக்தியும் தெய்வசக்தியும் உலகில் இறங்கி நம் ஆன்மாக்களுக்குப் புத்துயிர் ஊட்டும் என்றும், கர்மவினைகளை வெகுவாகக் குறைக்கும் என்றும், நம் குடும்பங்களை ஆசீர்வதிக்கும் என்றும் ஆழ்ந்த பக்தர்களுக்குத் தெரியும். எனினும் திருவிழாக்கள் இதைவிட அதிகமாகவே பலன் தருகின்றன. சமயத்தை வளர்ப்பதற்கும் அவ்வப்போது சமூகத்தில் ஆர்வத்தை தட்டியெழுப்பி பக்தியைக் கொழுந்தெரியச் செய்யவும் திருவிழாக்கள் அவசியம். இந்துக்கள் ஒருவரையொருவர் சந்தித்து சமய உணர்வையும் வாழ்வின் அனுபவங்களையும் பகிர்ந்து மகிழவும் அவை ஒரு பொதுவான ஆன்மீகப் பீடமாக விளங்குகின்றன.§
ஒவ்வொரு திருவிழாவுக்கும் முன்னர் விரதம் பிடிப்பதும், ஞானசாத்திரம் படிப்பதும், புனித யாத்திரை மேற்கொள்வதும், உண்ணாவிரதம் இருப்பதும் முன்னேற்பாடாக கடைப்பிடிக்கின்றனர். இப்படிப்பட்ட ஆழ்ந்த பக்தியே பக்தர்களை தெய்வங்களுக்கு மிக அருகில் கூட்டிச்சென்று ஆன்மவழியில் அவர்களை நடக்க வைக்கிறது. ஒவ்வொரு விழாவும் தொடங்கும்போது ஒட்டுமொத்தமாகச் செய்யப்படும் வழிபாடு ஒரு கூட்டு சடங்காக மாறுதலடைந்து லட்சக் கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு கலைவடிவாகச் செல்கின்றனர். ஒவ்வொரு திருவிழாவும் அதன் தன்மைக்கு ஏற்ப தனிச்சிறப்பாக மறக்க முடியாத விழாவாக விளங்குகிறது. எனவே இசையொலிகளும், வாசனைத் திரவியங்களும், வண்ணமய அலங்காரங்களும் சுவைபட சமைக்கப்பட்ட பலவிதமான அன்னதான உணவுகளும் இந்துக்களின் நம்பிக்கையை நினைவூட்டுகின்றன. புனித மந்திர உச்சாடனங்களும் ஞானிகளின் ஆன்மீக சொற்பொழிவுகளும், மெல்லிசையால் இறைவனை வாழ்த்தும் பஜனைப் பாடல்களும் மனதையும் உணர்ச்சிகளையும் சொக்க வைக்கின்றன. ஒரு திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதை ஒவ்வொரு இந்திய கிராமமும் உலகளவில் பரவியிருக்கும் இந்திய சமூகங்களும் நிர்ணயிக்கின்றன. தமது பண்பாட்டுக் கூறுகளை சிறுசிறு அளவில் பங்களிப்பதால் எண்ணிக்கையற்ற வேறுபாடுகளுடன் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அண்மைய காலமாக இந்தியாவுக்கு வெளியே பெருகிவரும் இந்தியர்களின் எண்ணிக்கையினால் திருவிழாக்கள் அனைத்துலக ரீதியில் புதிய பரிமாணத்தை எட்டியிருக்கின்றன. ஓர் இந்து திருவிழாவைவிட எது அதிக மகிழ்வூட்டுவதாகவும், உயிரோட்டமாகவும் உணர்வுமயமாகவும் இருந்து அதேவேளை பக்தியுடனும் சடங்குப்பூர்வமாகவும் இருக்க முடியும்?§
குருதேவர்: இறைவனோடும் தெய்வங்களோடும் சமூகத்தோடும் தொடர்பு கொள்ளவும் சாதனா செய்யக்கூடிய விசேஷ தினங்களாகவும் திருவிழாக்கள் விளங்குகின்றன. ஒவ்வொரு பெரிய திருவிழா நடக்கும்போது மற்றும் தெய்வ சக்தி மிக அதிகமாய் விளங்கும்போது, நாம் விழாவில் கலந்து கொள்ளவும் தூரத்தில் இருக்கும் கோயிலுக்கு ஆண்டு தோறும் யாத்திரை செய்வதற்கும் பெரிதும் முயற்சி மேற்கொள்கிறோம்.§