சிவனை அடையும் வழி

63§

நாம் பிரார்த்தனை செய்வது எப்படி?§

சிவபெருமானும் தெய்வங்களும் நம் மூச்சைவிட மிக அருகில் உள்ளனர். நமது கை கால்களை விட மிக அருகில் உள்ளனர். அவர்களை வணங்குவது என்பது அவர்களோடு நாம் தொடர்பு கொள்ளும் ஒரு வழிமுறையாகும். கடவுளை வணங்குவதற்கு சிவபெருமானின் முகத்தை அல்லது ஒரு தெய்வத்தின் முகத்தை கற்பனை செய்து கொள்ளுங்கள். மனத்தை அதில் குவியவிட்டு உமது பிரார்த்தனையை மனதுக்குள் கூறி அதனை தலையின் மேல் வழியாக அனுப்புங்கள். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் வணங்கலாம். ஆனால் உள்ளுலக வாசிகளுக்கு (தேவர்களுக்கு) உங்களின் பிரார்த்தனைக் குரல் புனிதமான ஒரு கோயிலில் அல்லது வீட்டின் பூஜை அறையில்தான் மிகத் தெளிவாகக் கேட்கும். எல்லா பிரார்த்தனைகளையும்விட மிகப்பெரிய ஒரு பிரார்த்தனை யாதெனில் நமது வாழ்வுக்கு அனைத்து செல்வங்களையும் வழங்கியிருக்கும் சிவபெருமானுக்கு நன்றி சொல்வதாகும். பல வேளைகளில் பக்தர்கள் ஏதாவது உதவி கேட்டு வேண்டிக் கொள்வர். அவர்களின் வேண்டுதல்களுக்கு தெய்வங்கள் பதில் அளிப்பர். பக்தர்களின் மனது அமைதிபெறுவதற்கு ஆசிவழங்கி உங்கள் ஒளிவுடம்பையும் (aura) சுத்தப்படுத்துவார்கள். சிலவேளைகளில் இது மட்டுமே போதுமானது. படிப்பில் உதவி கேட்டு நீங்கள் கணேசப் பெருமானை வணங்குவதாக வைத்துக் கொள்வோம். மகாதேவரான கணேசப் பெருமானின் அருட்கடாட்சம் உங்களுக்கு கிடைத்தவுடன் படிப்பு சம்பந்தமான விளக்கம் தெளிவாகி அதில் ஆர்வமும் ஏற்படுகிறது. எளிமையாக அப்பாடத்தை உள்வாங்கி சோதனையில் வெற்றி பெறுகிறீர்கள்.§

உங்களின் சில பிரார்த்தனைகளை சிறந்த முறையில் எப்படி நிறைவேற்றலாம் என்று உதவிசெய்ய ஒரு தேவதை நியமிக்கப்படலாம். உங்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் வழிகாட்டவும் எப்போதும் கடவுளும் அவரின் தேவதேவதைகளும் உங்கள் காவல் தேவதையும் தயாராக இருக்கிறார்கள் என்ற விஷயம் நமக்கு மனநிறைவைத் அளிக்கிறது. இந்த வரத்தை நீங்கள் சமய வாழ்வு வாழ்வதாலும் தொடர்ந்து சாதனாவை விடாமல் செய்வதாலும் பெறுகிறீர்கள். சில கோயில்கள்—உதாரணத்துக்கு ஹாவாயிலுள்ள கடவுள் கோயில்—பக்தர்கள் எழுதிக் கொடுக்கும் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்கிறது. அதை அங்கே எரித்தவுடன் தேவர்கள் படித்து நடவடிக்கை எடுக்க அவை சூக்கும வடிவில் தேவலோகத்தில் சேர்ப்பிக்கப்படுகிறது. உதவி கேட்பதற்கு முன் நாம் நமது சொந்த அறிவையும் ஆற்றலையும் முடிந்தவரை உபயோகிக்க முயல்கிறோம். நாம் பிரார்த்தனை செய்யும்போது நமக்கு என்ன தேவை எது நல்லது என்று கடவுளுக்கும் தெய்வங்களுக்கும் நன்றாகவே தெரியும் என்று எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம். எந்த வாழ்க்கைப் பாடம், எந்த அனுபவம் நமக்கு சிறப்பாக முன்னேற்றம் அளிக்கும் என்று அவர்களுக்கு நம்மை விட அதிகமாகவே தெரியும். நமது பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அவை எதிர்பார்த்தபடி இல்லையென்றாலும் நாம் அப்பலனை ஏற்றுக் கொள்கிறோம்.§

image§

shutterstock§

பூஜையின் இறுதி ஆரத்திக்குப்பின், கோயில் குருக்கள் தீபத் தட்டுடன் பக்தர்கள் நடுவே செல்கிறார் பக்தர்களை அணுகியதும் அவர்கள் இறைவனின் அருட்சக்தியாக விளங்கும் ஆரத்தி தீபத்தை ஆவலுடன் தொட்டு வணங்குகின்றனர்.§

குருதேவர்: சிவாலயத்தில் வழிபடும் பக்தர்கள் மெதுவாக தெய்வங்களின் தெய்வீக உலகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, எண்ணிலடங்கா தேவர்களிடமிருந்து ஓரிரண்டு தேவதைகள் நம்மைப் பின் தொடர்ந்து வீட்டுக்கு வருவர். இந்த காவல் தேவர்களுக்குத்தான் முதலில் நம்முடைய பிரார்த்தனைகள் புனித அக்னியில் எரிக்கப்பட்டு தேவலோகத்துக்கு மாறும்போது கிடைக்கிறது.§