61§ |
கோயிலுக்கு நாம் எப்படி செல்கிறோம்?§ |
கடவுளோடு நெருங்கி இருப்பதற்கு நாம் கோயிலுக்குச் செல்கிறோம். சிவபெருமான் எல்லா இடத்திலும் வியாபித்திருந்தாலும், புனிதமான கோயிலில்தான் அவரின் சாந்நித்தியத்தை உணரமுடிகிறது. சிவபெருமானின் பார்வைக்கும், தேவர்களின் பார்வைக்கும் நாம் தென்படுவோம் என்பதால் நாம் சிறப்பாகத் தோற்றமளிக்க வேண்டும். கோயிலுக்குப் போகுமுன் குளித்துவிட்டு, சுத்தமான பாரம்பரிய ஆடைகளை அணிகிறோம். அர்ச்சனை பூஜைப் பொருள்களாக பழம், பால், வாசனை ஊதுபத்திகள் அல்லது அழகிய பூமாலைகள் எடுத்துச் செல்கிறோம். நாம் மனமுவந்து கொடுக்கின்ற ஒரு செயல் கடவுளின் அருளாசியைப் பெற துணைசெய்கிறது.§
கோயிலுக்கு வெளியே நாம் காலணிகளைக் கழற்றிவைத்துவிட்டு கால், கை, வாயைக் கழுவுகிறோம். பிறகு கணபதி சன்னதிக்குச் சென்று அவரை வணங்கி ஆசிபெறுகிறோம். அடுத்தபடியாக கோயிலைச் சுற்றி அல்லது உட்பிரகாரத்தைச் சுற்றி வலப்புறமாக வரும்போது ஒவ்வொரு தெய்வத்தையும் வணங்கிக் கொண்டு வருகிறோம். அப்போது பூஜை நேரமாக இருந்தால் ஆலய குருக்கள் செய்யும் பூஜையை அமைதியாக அமர்ந்து கண்டு தரிசிக்க வேண்டும். மந்திர உச்சாடத்தினாலும், முத்திரைகளாலும், எழுந்தருளிச் செய்வதாலும், அர்ச்சனைப் பொருள்களாலும் குருக்கள் தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, ஒரு அரசரை வரவேற்பதுபோல் தெய்வத்துக்கு சிறப்பு செய்கிறார். இறைவனை எழுந்தருளுமாறு அழைத்து எல்லோர் மீதும் அருள்மழை பொழியச் செய்யுமாறு வேண்டுகிறார். பூஜை நடக்கும்போது நாம் மனதை இங்கும் அங்கும் அலையவிடாமல் வழிபாட்டில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்துகிறோம். கொஞ்ச காலம் சென்றதும் குருக்கள் உச்சரிக்கும் மந்திரத்தின் பொருளும் கிரியைகளின் உட்பொருளும் நமக்கு விளங்குவதால் மனதுக்குள்ளேயே அவற்றை பின்பற்றி சொல்லிக் கொள்கிறோம். ஆரத்தி எடுத்து முடிந்ததும் கீழே விழுந்து வணங்கி தீபத்தை தொட்டு வணங்குகிறோம். வலது கையில் விபூதி, தீர்த்தம், சந்தனம், குங்குமம் வாங்கிக் கொள்கிறோம். பிறகு அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்து தியானம் செய்கிறோம் அல்லது அங்கே வீசும் அருள்மழையில் நனைகிறோம். ஜெபம் செய்வதற்கும் இது உகந்த நேரமே.§
கோயிலில் வழிபாடு பல வடிவில் இருக்கும். பக்தி மழையில் நனைந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. இறைவனோடு தொடர்பு கொள்ள வணங்கிக்கொண்டு தம்மை மெய்மறந்திருப்போரும் உண்டு. எதையோ பறிகொடுத்துவிட்ட ஒன்றுக்காக ஆறுதல் தேடுவோரும் உண்டு. பக்திப்பரவசமாக தேவாரம் பாடிக்கொண்டிருப்பவர்களும் அங்கு உண்டு. மந்திரங்களை ஜெபித்துக்கொண்டிருப்போரும், உலகை விட்டுப் போனவர்களுக்காக பிரார்த்தனை செய்வோரும் உண்டு.§
வீட்டை அடைந்ததும் புனிதமான நம் பூஜை அறைக்குள் கோயிலுள்ள தேவதேவதைகளை கவர்ந்திழுக்க பூஜையறை விளக்கை ஏற்றி வைக்கிறோம். பூஜைகளும் கிரியைகளும் நம்மை ஒரு கணம் நிறுத்தி நிதானிக்க வைத்து, நமக்குள்ளே பயணிக்க வைத்து லௌகீக வாழ்க்கை தவிர அதற்கும் மேலான வாழ்வில் கவனம் வைக்கச் செய்கிறது. பூஜை என்பது அற்புதங்கள் நிறைந்த கனிவான உறவை ஏற்படுத்தும் புனிதத் தொடர்பாகும். பூஜையின் மறுக்கமுடியாத அம்சம் பக்தியாகும். நெஞ்சில் உண்மையான அன்பு இல்லையெனில் வெளிப்புற வேஷமெல்லாம் அர்த்தமற்றவையே. ஆனால் உண்மையான பக்தியுடன் ஆற்றும் சிறிய அங்க அசைவும் புனித சடங்காகிறது.§
குருதேவர்: நமது சமயத்தின்படி உலகிலுள்ள அனைத்து கோயில் தெய்வ பீடங்களிலும் கடவுள் மற்றும் தெய்வங்களின் சாந்நித்யம் உள்ளது. இத்தகைய புனித இடங்களில் தேவர்களின் வாசமும் தெய்வங்களின் வாசமும் இருக்கும். இங்கு நீங்கள் நுழையும்போது அங்குள்ள பவித்திரத்தை உணர முடியும்.§