சிவனை அடையும் வழி

60§

கோயிலின் நோக்கம் என்ன?§

கோயில் என்ற இடத்தில்தான் நாம் வழிபாடு செய்து இறைவனோடும் தெய்வங்களோடும் தொடர்பு கொள்கிறோம். இங்கே பக்தர்கள் உற்சாகமடைந்து ஆக்ககரமான நிறைவான வாழ்வுக்கு தேவையான உதவிகள் பெறுகிறார்கள். கோயில்கள் மூன்று காரணங்களுக்காக புனிதமாகக் கருதப்படுகின்றன. முதலில் அவை சூட்சுமஞான அடிப்படையில் கட்டப்படுகின்றன; இரண்டாவதாக மிகவும் சக்திவாய்ந்த மந்திர பூஜா கிரியைகளால் கும்பாபிஷேகம் செய்யப்படுகின்றன: மூன்றாவதாக தொடர்ந்து தினமும் நடக்கும் நித்திய பூஜா காரியங்களால் ஒரு புனிதமான சக்தி அலை அங்கே உருவாகிறது.§

கம்பீரமான நமது சைவ கோயில்களைப்போல் சிறந்தவை உலகில் வேறு எங்கும் இல்லை. சில கோயில்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தவை. ஆகம விதிகளை மிகவும் கண்டிப்புடன் பின்பற்றி புனிதத்திலும் புனிதனான இறைவன் அங்கு வாசம் செய்ய ஒரு தகுந்த இடத்தை உருவாக்குகிறார்கள். தேவர்களும் தெய்வங்களும் மனிதர்களும் அக்கோயிலை நிர்மாணித்து அவ்விடம் வழிபாட்டுக்கு மட்டுமே என்பதை உறுதி செய்கிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு சக்திப் பிரவாகம் பெருகி அக்கோயிலைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாத ஒரு கண்ணாடி போன்ற பாதுகாப்பு வளையம் உருவாகின்றது. இது தேவையற்ற அதிர்வலைகளைத் தடுத்து, விண்ணுலகங்களின் வாசத்தை மட்டும் அனுமதித்து உறுதியாக தக்க வைத்துக் கொள்கிறது.§

இறைவனுடைய இந்த இல்லத்தை நீங்கள் நெருங்கும்போது அதன் ஆன்மீக அதிர்வலைகளை உங்களால் உணரமுடியும். உள்ளே நுழைந்ததும் ஓரே அமைதி உங்களை சூழ்ந்து கொள்கிறது. இங்கே உங்களின் வேண்டுதலை தேவர்களும் தெய்வங்களும் எளிதாக கேட்கமுடியும். இங்கு பழமைமிக்க வேதம் ஓதப்படுகின்றது. பாரம்பரிய கிரியைகள் தெரிந்தே நிகழ்த்தப் படுகின்றன. இவ்விடத்தில் குதூகலமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கடுமையான யாத்திரைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. பூஜையின் உச்சக் கட்டத்தில் ஆலயமணியின் ஒலியும் சங்கின் ஓசையும் கலந்து உக்கிரமாக ஒலிக்கும்போது, கோயிலில் பிரதிட்டை பண்ணப்பட்டுள்ள சிலை மூலம் அல்லது விக்கிரக மூர்த்தி மூலம் அவ்விடம் வழிபடும் தெய்வம் தன் அருட்சக்தி கதிர்களை அனுப்புகிறது. இந்த அருட்சக்தி உங்கள் உடம்பின் ஒளிவட்டத்தில் பரவி உங்கள் மனக் கவலையை அகற்றவும், குழப்பத்தை தீர்த்து வைக்கவும் மற்றும் துக்கத்தை போக்கவும் செய்கிறது. பக்தர்கள் கோயிலைவிட்டு வெளியேறும்போது உற்சாக உணர்வோடும் மனச்சுமை குறைந்ததாகவும் உணர்கின்றனர்.§

கோயிலில் உள்ள விக்கிரகம் அல்லது கற்சிலை வெறும் கடவுள் சின்னங்கள் அல்ல என்று குருதேவர் சிவாய சுப்பிரமுனியசுவாமிகள் விளக்கியுள்ளார். அங்கு தென்படும் உருவம் இப்பூலோக உருவமைப்பாகும். இதன்மூலமே கடவுள் அன்பு காட்டி, சக்தியூட்டி, அருள் வெள்ளத்தை இவ்வுலகுக்கு பெருகியோடச் செய்கிறார். கோயில் கிரியைகளின்போது இவ்விக்கிர உருவங்களை இறைவன் தற்காலிகமாக உபயோகிக்கிறார். தெய்வங்கள் உண்மையில் இருக்கின்றன என்று தெளிவு பெற்றதும் இறைவன் இல்லமான கோயில் உண்மையில் நமக்கு புனித இடமாகி அவரின் அருளைப் பெறவே நாம் கோயிலுக்குச் செல்கிறோம் என்று அறிந்து கொள்கிறோம்.§

image§

shutterstock§

இந்தியாவின் ஒரு மூலையில் அமைந்திருக்கும் முழுதும் கருங்கல்லாலான ஒரு சிவன் கோயிலை யாத்ரீகர்கள் அடைந்துவிட்டனர். இவ்விடத்தை அவர்கள் சிவபெருமானின் இல்லம் என்று நம்புகின்றனர். இத்தகைய புனித இடத்தில் அவர்கள் சிவனின் தெய்வீக அன்பையும் தெய்வீக ஒளியையும் அருகில் கொண்டுவந்திருக்கின்றனர்.§

குருதேவர்: சிவன் ஆலயமானது சிவபெருமானுக்கும் உலக மக்களுக்குமிடையே செய்துகொண்ட ஒரு உடன்படிக்கையாகவும், அவ்விடம் மூவுலக வாசிகளும் சந்திக்கும் இடமாகவும் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய ஓர் இடமாகவும் திகழ்கிறது.§