58§ |
ஆன்மீக நண்பர்களின் மகிமை யாது?§ |
சைவ இந்துக்களாகிய நமக்கு இந்த வாழ்க்கை மிகவும் மகிமை வாய்ந்தது என்றும், அதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்பதும் நமக்குத் தெரியும். இவ்வாழ்க்கை நமக்கு கிடைத்த ஒரு வரம் என்று எண்ணி நாம் நம்மால் இயன்றவரை செவ்வனே செயலாற்றி, நம் குணத்தை மேலும் நல்வழிப்படுத்தி, பிறர்க்கு சேவையாற்றி ஆன்மீக வாழ்வு வாழ்கிறோம். வாழ்க்கையின் நோக்கம் அறிந்து நாம் தர்மத்தை உறுதியாகக் கடைப்பிடிக்கிறோம். ஒரு நெடுந்தூர ஓட்டக்காரனைப்போல் ஓட்டத்தை முடிக்க நாம் கட்டாயம் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அதுபோல் நல்ல ஆன்மீக நண்பர்களின் நட்பு நம்மை ஆன்மீக பாதையில் வைத்திருக்கும். லெளகீக வாழ்க்கையில் உழலும் மக்களோடு நாம் சேர்ந்தால் நாம் நமது வழியிலிருந்து விலகிப்போக நேரலாம். திருக்குறள் உரைப்பதாவது.§
“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.” (குறள் 452) (தெளிவுரை: நீர் எந்த நிலத்தில் சேர்ந்திருக்கிறதோ அந்த நிலத்தின் நிறம், சுவையைப் பெறுவதுபோல், மனிதர்களின் குணமும் அறிவும் அவர்கள் சார்ந்திருக்கும் இனத்தைப் பொறுத்தே அமையும்.)§
நல்ல இந்துக்களாக இருக்கும் நண்பர்கள் எப்போதும் உங்களுக்குப் பெரிதும் உதவுவார்கள். நேர்மையற்ற அற்ப மனிதரோடு நட்பு வைத்தால் அது உங்களை தொல்லையில் மாட்டிவிடும். நன்றாகப் படிப்பவன், கருணை கொண்டவன், எப்பொதும் உதவி செய்பவன்—இப்படிப்பட்டவனோடு நீங்கள் நட்பு கொண்டால், அவனுடைய நற்குணங்கள் உங்களுக்கு உற்சாகமூட்டி உங்களை உயர்விக்கும். சிலர் சமயத்தைக் கேலி செய்வர் அல்லது குறும்பு செய்வர். சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை எதிர்ப்பார்கள். அவர்களுக்கெல்லாம் வாழ்க்கையின் உண்மை நோக்கம் என்ன என்று தெரியாது. நேரத்தை வீணடித்து மற்றவர்களைப் புண்படுத்துகின்றனர். அறிவான ஆசிரியர்கள் நம்மை எல்லோரிடமும் நன்கு பழகச் சொன்னாலும், யார் நமது குணங்களை மேம்படுத்தி, எதிர்காலத்துக்கு நல்ல வித்திடுகிறார்களோ அவர்களோடு மட்டும் நெருக்கமான நட்பு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். திருக்குறள் கூறுவதாவது:§
“மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.” (குறள் 455) (தெளிவுரை: மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.)§
ஒரே எண்ணம், ஒரே நோக்கத்துடன் செயல்படும் ஒரு சத்சங்க குழுவின் (அடியார் கூட்டம்) அங்கமாக இணையும்போது சமய வாழ்வில் நாம் பின்பற்றும் வழி எளிமையாகிறது. அப்படிப்பட்ட உறவுமுறை நம் சாதானவை மேலும் வலுப்படுத்த துணை நிற்கிறது. முக்கியமாக நாம் வாழ்வில் சிரமங்களை எதிர்நோக்கும்போது சத்சங்கம் நமக்கு துணையாகிறது. குருதேவர் அடிக்கடி இப்படி கூறுவார்:§
“தனி நபருக்கு குழு உதவி செய்கிறது. குழுவுக்கு தனிநபர் உதவி செய்கிறார்.”§
குருதேவர்: ஒத்த பாதையில் இருப்பவரோடு நட்பு கொள்ளுங்கள். ஒழுங்கானவர்களோடும் ஆக்க சிந்தனை உள்ளவர்களோடும் இருங்கள். உங்களின் உள்முக ஆன்மீக வளர்ச்சிக்கு தொடர்பே இல்லாத, உங்களின் செய்கையை குற்றம்கூறும் எதிர்மறை சிந்தனையாளரோடும் புகார் கூறிக்கொண்டிருக்கும் மக்களோடும் சேர வேண்டாம்.§