சிவனை அடையும் வழி

54§

சைவர்கள் நெற்றியில் அணிகின்ற சின்னங்கள் யாவை?§

நாம் நெற்றியில் இடுகின்ற சின்னங்கள் இந்துக்களின் அர்த்தமிக்க கலாச்சார மற்றும் ஆன்மீகப் பழக்கமாகும். சிகப்பு அல்லது கருப்பு பொட்டு, வெண் பட்டை மற்றும் சந்தனச் சாந்தில் சின்னமாக நெற்றியில் அணிகிறோம். பெரும்பாலான சின்னங்கள் சமயப் பிரிவைச் சார்ந்தவை. நாம் எந்த இந்து சம்பிரதாயத்தைப் பின்பற்றுகிறோம் என்று உலகத்துக்கு அவை எடுத்துச் சொல்கின்றன. திருமாலை வணங்குவோர் பெரும்பாலோர் திருமண்ணில் வடகலை தென்கலையை நெற்றியில் அணிவர். சைவர்கள் திருநீறு என்னும் விபூதியை நெற்றியில் வெண்மையாக மூன்று பட்டையாக அணிந்திருப்பர். இச்சின்னத்தை திருபுண்டரம் என்றும் அழைப்பர்.§

இவ்வழக்கங்களின் பின்னால் ஆழமான சூட்சுமஞான விளக்கங்கள் உள்ளன. திருநீற்றை உள்ளுலகிலிருக்கும் தேவர்களால், குறிப்பாக, பூஜை நேரத்தின்போது பார்க்க முடியும். அதன்மூலம் அவர்களால் மேலும் நமக்கு சிறப்பாக உதவ முடிகிறது. திருநீறு என்பது தூய்மையைக் குறிப்பதோடு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை எரிப்பதையும் குறிக்கிறது. அதை அணிவதால் சிவபெருமானின் அருளும் பாதுகாப்பும் நமக்குக் கிடைக்கிறது. நமது உடல் நிலையற்றது என்றும் காலந்தாழ்த்தாமல் சீக்கிரமே இறைவனின் அருளை நாட வேண்டும் என்றும் திருநீறு நமக்கு நினைவூட்டி ஊக்கம் கொடுக்கிறது. நெற்றி நடுவுக்குக்கீழ் ஒரு திலகம் வைக்கப்படுகிறது. இந்தியில் இது பிந்தி என்றும் தமிழில் பொட்டு என்றும் அழைக்கப்படுகிறது. இதனை இந்து சமயத்தின் அனைத்து பிரிவினரும் உபயோகிக்கின்றனர். “மூன்றாம் கண்” என்று அழைக்கப்படும் இந்த ஆன்மீகக் கண்ணை அல்லது ஞானக்கண்ணைக் கொண்டுதான் நாம் வாழ்க்கையைப் பார்க்கவேண்டும், சாதாரணக் கண்ணால் அல்ல என்று நமக்கு அது நினைவூட்டுகிறது. சிகப்பு பொட்டு வைத்திருக்கும் பெண் திருமணமானவர் என்பதைக் குறிக்கும். கறுப்பு பொட்டு, குறிப்பாக குழந்தைக்கு வைத்திருக்கும் பொட்டு, அதன் பாதுகாப்புக்காக கவசமாக வைக்கப்படுகிறது.§

சைவத் திருக்கோயில்களில் பூஜை முடிந்ததும் விபூதி, சந்தனம், குங்குமம் வழங்கப்படும். இம்மூன்றையும் ஆண்களும் பெண்களும் அணிகின்றனர். ஆண்களைவிட பெண்கள் கொஞ்சமாகவே நெற்றியில் விபூதி இடுகின்றனர். இந்துவின் வீட்டிற்கு செல்லும் விருந்தாளிகளுக்கு வாசலிலேயே பொட்டு வைக்கப்படும். நெற்றியில் சமயச் சின்னம் அணிவதில் நாம் பெருமை கொள்கிறோம். அது நம்மை பக்திமிக்க இந்து என்று அடையாளம் காட்டுகிறது.§

image§

shutterstock§

தன் மகளின் நெற்றியில் ஒரு தாய் பாரம்பரியச் சின்னமாக பொட்டு வைக்கிறார். சமயப் பிரிவைக் காட்டும் ‘திலகம்’ என்பது அழகான அர்த்தமுள்ள அடையாளமாகும். இடதுபுறம் கீழ்பகுதியில் பொட்டுடன் கூடிய திரிபுண்டரத்தைக் காணலாம்.§

குருதேவர்: நாம் இந்த சமயத்தைச் சார்ந்தவர்கள் என்று தேவர்களின் கவனத்தை ஈர்க்க தூய விபூதியை அணிகிறோம். “எங்களுக்கு உங்களின் உதவியும் ஆசியும் வேண்டும்” என்று சொல்லும் வகையில் விபூதி சின்னம் செயல்படுகிறது. திருநீற்றைக் காண்பதன்மூலம் உங்களின் முகத்தை தேவர்களால் அடையாளம் காணமுடியும்….நெற்றியில் அணிந்திருக்கும் பொட்டு ஒருவரை இந்து என்று அடையாளம் காட்டுகிறது. பொட்டு வைப்பதற்கு சூட்சும ஞான விளக்கம் உண்டு. ஞானக்கண் என்ற மூன்றாம் கண்ணை அது குறிக்கிறது. சாதாரண கண்கள் காணமுடியாததை இந்த ஞானக்கண் காணும்.§