40§ |
நமது நன்னெறி கோட்பாடுகள் யாவை?§ |
இயமம், நியமம் என்பதே இந்து சமயத்தின் நன்னெறிக் கோட்பாடுகள். பத்து இயமங்கள் அல்லது “செய்யத் தகாதவை” களைக் கடைப்பிடிப்பதன்மூலம் நமது இச்சை மன இயல்பு (விலங்கு மனம்) கட்டுப்பாட்டில் வருகிறது. பத்து நியமங்கள் அல்லது “செய்ய வேண்டியவை” களைப் பின்பற்றுவதன்மூலம் சமய ஈடுபடும் கலாச்சார ஈடுபாடும் மேலும் அதிகரித்து நமது ஆன்மாவின் தூயத் தன்மையும் வெளிப்படுகிறது. இயமம் நியமங்கள் நமது யோக வாழ்வை வலுப்படுத்த அடிப்படைகளை வழங்குவதுடன், சிவனை அடையும் பாதையில் அவை நம்மை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் ஊன்றி நிலைபெறச் செய்கிறது.§
பத்து கட்டுப்பாடுகள் (இயமங்கள்)§
1. அகிம்சை: “துன்புறுத்தாமை.” உமது செயலாலோ அல்லது வாக்காலோ அல்லது எண்ணத்தாலோ கனவிலும்கூட பிறருக்கு நாம் தீங்கிழைத்தல் கூடாது. யாரையும் பயமுறுத்தாமல், யாருக்கும் வலியோ காயமோ ஏற்படுத்தாமல் ஓர் அன்பான வாழ்க்கை வாழுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் இறைவனைக் காணுங்கள். சைவ உணவை உண்ணுங்கள்.§
2. சத்தியம்: “உண்மை.” உண்மையான, அன்பான, நன்மையான, அவசியமான விஷயத்தை மட்டுமே பேசுங்கள். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள். குடும்பம் அல்லது நண்பர்களிடம் ரகசியத்தை மறைக்காதீர்கள். கலந்துரையாடும்போது சரியாகவும் மனந்திறந்தும் பேசுங்கள். பிறரை ஏமாற்றாதீர்கள். உங்கள் தோல்விகளை ஒப்புக்கொள்ளுங்கள். ரகசியமாக கிசுகிசுப்பதோ, பின்னால் பேசுவதோ அல்லது பொய் சொல்லுவதோ கூடாது.§
3. அஸ்தேயம்: “திருடாமை.” திருடக்கூடாது. ஆசைகளைக் கட்டுப்படுத்தி குடும்ப வருமானத்துக்கு ஏற்றபடி வாழுங்கள். மற்றவர் பொருள்மீது ஆசைப்படக்கூடாது. பிறரிடம் இரவல் வாங்கிய பொருள்களை தவறாகப் பயன்படுத்தக்கூடாது. சூதாடக்கூடாது. பிறரிடம் வாங்கிய கடனையோ திருப்பிக் கொடுக்காமல் இருக்கக்கூடாது. அனுமதியின்றி ஒப்புதலின்றி பிறரின் பெயரையோ, சொற்களையோ, வளத்தையோ அல்லது உரிமையையோ உபயோகிக்கக்கூடாது.§
4. பிரம்மச்சரியம்: “தெய்வீக நடத்தை.” திருமணம் ஆவதற்குமுன் ஆசைகளை அடக்கி பாலியல் உறவை திருமணம் ஆகும்வரை பாதுகாக்க வேண்டும். திருமணத்துக்குமுன் பாலியல் சக்தியை கல்வி கற்பதற்கும், திருமணத்துக்குப்பின் குடும்ப வெற்றிக்கும் பயன்படுத்துங்கள். மிதமாக உடையுடுத்தி மிதமாக பேசுங்கள். தூயவர்களின் நட்பை நாடுங்கள். காமப் படங்கள் மற்றும் வன்முறைப் படங்களை தொலைக்காட்சியில், திரைப்படங்களில், சஞ்சிகைகளில், கணினிகளில் பார்ப்பதை தவிர்க்கவும்.§
5. க்ஷாமா: “பொறுமை.” மக்களின் சகிக்கமுடியா தன்மையைக் கட்டுப்படுத்தி சூழ்நிலையை பொறுக்கமுடியாத தன்மையையும் கட்டுப்படுத்த வேண்டும். எதையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அவசரப்பட வேண்டாம். மற்றவர்கள் உங்களின் போக்குக்கு இணங்கி நடக்க வேண்டுமென்று வற்புறுத்தாமல் அவர்களின் இயல்புப்படி நடக்க விடுங்கள். பிறரிடம் பேசும்போது வாக்கு வாதம் செய்யாமல், குறுக்கே பேசாமல் அல்லது நீங்கள் ஒருவரே பேச்சை ஆக்கிரமிக்காமல் இருக்கவும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடம் மிக்க பொறுமையாக இருங்கள். கஷ்டமான நேரங்களிலும் நிதானம் தவறாமல் இருக்க வேண்டும்.§
6. திரிதி: “உறுதியாக இருத்தல்.” பயம், முடிவெடுக்க முடியாமை, அடிக்கடி மாறுந்தன்மை ஆகியவற்றை போக்கிவிடுங்கள். கவனத்தை சிதறவிடாமல் எதை செய்யவேண்டுமோ அந்தக் காரியத்தை செய்வதில் கண்ணுங் கருத்துமாக இருங்கள். உங்கள் முடிவுகளில் உறுதியாக இருங்கள். உங்கள் லட்சியத்தை அடைய பிரார்த்தனை செய்து நோக்கம், திட்டம், விடாமுயற்சி மற்றும் ஊக்கம் ஆகியவற்றுடன் அடையுங்கள். புகார் செய்யாமல் சாக்கு போக்கு சொல்லாமல் இருங்கள். மனோ உறுதியையும் தைரியத்தையும் உழைக்கும் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள். தடைகளை வெல்லுங்கள்.§
7. தயை: “இரக்கம்.” எல்லா உயிர்கள்மீதும் இருக்கும் கொடூரமான மனிதாபமற்ற உணர்வுகளை வெல்லுங்கள். எல்லா இடங்களிலும் இறைவனைக் காணுங்கள். மக்களிடமும், விலங்குகளிடமும், தாவரங்களிடமும், பூமாதேவியிடமும் கருணையோடு இருங்கள். உண்மையாக தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டவரை மன்னித்துவிடுங்கள். துன்பத்தால் துவண்டு போயிருப்போரின் தேவைக்கு கருணை காட்டுவதை ஊக்குவியுங்கள். பலவீனமாக இருப்பவர்கள், ஏழைகள், முதியோர்கள் மற்றும் வலியால் துன்பப்படுவோருக்கு உதவி செய்யுங்கள். குடும்பத்தில் நிலவும் சித்திரவதையையும், பிற இடத்தில் நடக்கும் கொடூரங்களையும் எதிர்த்து நில்லுங்கள்.§
8. அர்ஜவா: “நேர்மை, ஒளிவு மறைவின்றி இருத்தல்.” மோசடி செய்வதையும் தவறான செயல்களில் ஈடுபடுவதையும் விட்டுவிடுங்கள். உங்கள் நாட்டின் சட்டத்தையும் சமுதாய ஒழுக்கத்தையும் மதித்து நடந்து கொள்ளுங்கள். லஞ்சம் கொடுப்பதோ அல்லது வாங்கவோ கூடாது. யாரையும் ஏமாற்றவோ துரோகம் பண்ணவோ கூடாது. உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள். பிறர்மீது குற்றம் சுமத்தாமல் உங்களின் குறைகளை எதிர்கொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் நேர்மையாக இருங்கள்.§
9. மிதாகாரம்: “நடுத்தரமாக உணவு உட்கொள்ளல்.” அதிகமாக சாப்பிடக்கூடாது. மாமிசம், மீன், நத்தை, கோழி அல்லது முட்டை சாப்பிடக்கூடாது. புதிதாக செய்த, உடம்புக்கு சத்தான முழுமையான சைவ உணவை உண்டு மகிழுங்கள். நொறுக்குத் தீனிகளையும், வெள்ளை சீனி, வெள்ளை அரிசி, வெள்ளை மாவு போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களை தவிர்க்கவும். குறித்த நேரத்தில் பசியெடுக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். தொந்தரவான சூழ்நிலையில் அல்லது மனங்குழம்பிய நிலையில் சாப்பிடக்கூடாது.§
10. சௌச்சம்: “தூய்மை.” மனம், மெய், மொழியில் தூய்மையற்ற நிலையை தவிர்க்கவும். சுத்தமான ஆரோக்கியமான தேகத்தை வைத்திருங்கள். வீட்டையும் பணியிடத்தையும் குப்பைக்கூளமின்றி தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். அறவழியில் செல்லுங்கள். நல்லோர்களோடு உறவாடுங்கள். கடுமையான சொற்களையோ கீழ்த்தரமான சொற்களையோ சொல்லக்கூடாது.§
கடைப்பிடிக்க வேண்டிய பத்து கோட்பாடுகள் (நியமங்கள்)§
1. ஹ்ரி: “மனவருத்தம்.” தன்னடக்கத்துடன் இருக்கவும். தவறேதும் செய்துவிட்டால் அதற்காக வெட்கப்பட வேண்டும். உங்களின் தவறு எது என்று உணர்ந்து, அதை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக்கேட்டு அதனை திருத்திக் கொள்ளவும். நல்ல குறைநிறைகளை வரவேற்கவும். தூங்கப் போவதற்குமுன் எல்லா சண்டை சச்சரவுகளையும் தீர்த்துக்கொள்ளவும். சொந்தக் குறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனைக் களைந்தெறியவும். தற்புகழ்ச்சி வேண்டாம். செருக்காக நடந்துகொள்வதிலிருந்தும் பொய்யாக நடிப்பதிலிருந்தும் விலகி நில்லுங்கள்.§
2. சந்தோஷ: “திருப்தி.” வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியையும் நாடுங்கள். சந்தோஷமாக சிரித்துக்கொண்டே இருந்து மற்றவர்களையும் அவ்வாறே மகிழ்ச்சியுறச் செய்யுங்கள். உங்களின் உடல் நலம், நண்பர்கள், வைத்திருக்கும் உடைமைகளுக்காக நன்றிசொல்லி வாழுங்கள். இல்லாதவைக்காக குறைபட்டுக்கொள்ள வேண்டாம். எல்லாம் கடந்த உங்களின் உண்மைத்தன்மையை அடையாளம் காணுங்கள். எல்லாம் கடந்துநிற்கும் இக்கணத்தில் வாழ்ந்துகொண்டு ஆன்மீக வளர்ச்சிக்காக பாடுபடுங்கள்.§
3. தானம்: “கொடுத்தல்.” வருமானத்தில் பத்து சதவீதம் கோயிலுக்கோ, ஆசிரமத்துக்கோ அல்லது ஆன்மீக அமைப்புக்களுக்கோ தானம் கொடுங்கள். தேவைப்படுவோருக்கு உணவும் பொருளும் அளியுங்கள். உங்களின் நேரத்தையும் திறமையையும் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள். விருந்தினர்களை தெய்வமாக நடத்துங்கள்.§
4. அஷ்டிகா: “நம்பிக்கை.” இறைவன்மீதும், தெய்வங்கள்மீதும், குருமீதும், மெய்ஞானத்துக்கு இட்டுச்செல்லும் மார்க்கத்தின்மீதும் உறுதியாக நம்பிக்கை வையுங்கள். ஞான சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் நம்புங்கள். உங்களின் ஞான பரம்பரைக்கு விசுவாசமாக இருங்கள். குருவோடு ஒருமையுடன் இருங்கள். உங்களின் சமயநம்பிக்கையை சீர்குலைக்க முயல்பவர்களோடுளோடு நட்பு கொள்ளவேண்டாம். நம்பிக்கையை மேலும் வளர்ப்பதற்கு பக்தியையும் சாதனைகளையும் மேற்கொள்ளுங்கள். ஐயத்தையும் நம்பிக்கையின்மையையும் தவிர்க்கவும்.§
5. ஈஷ்வரபூஜானா: “ஈஷ்வரனை வணங்குதல்.” அனுதினமும் இறைவனை வணங்கி தியானம் செய்யுங்கள். வீட்டிலுள்ள பூஜையறையில் சுவாமிக்கு பழம், பூக்கள் அல்லது நைவேத்தியம் வையுங்கள். எளிமையான பூஜை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள். வீட்டை விட்டுக் கிளம்பும்போதும், திரும்பும்போதும் பூஜை அறைக்குப் போய்விட்டு வாருங்கள்.§
6. சித்தாந்த சரவண: “ஞான சாத்திரங்களைக் கேட்டல்.” உங்கள் குரு. சார்ந்த ஞானிகளின் போதனைகளைப் படியுங்கள். அவர்களின் அருள்மொழிகளைக் கேளுங்கள். ஒரு ஞான குருவைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அவர் வழியைப் பின்பற்றுங்கள். பிற வழிகளை ஆராய்ச்சி செய்து காலத்தை வீணடிக்க வேண்டாம். ஞானியிடமிருந்து சீடனை அடையக்கூடிய அந்த எழுச்சிமிகு பாடங்களையும் உபதேசங்களையும் கேளுங்கள்.§
7. மதி: “அறிவெழுச்சி.” உங்கள் சற்குருவின் வழிகாட்டுதலோடு ஆன்மீக வைராக்கியத்தையும் அறிவையும் பெருக்கிக் கொள்ளுளங்கள். கடவுளைப்பற்றி அறிந்துகொள்ளவும். உங்களில் இருக்கும் ஜோதியை எழுப்புவும் முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு அனுபவத்திலும் பொதிந்துள்ள வாழ்க்கைப் பாடத்தை தெரிந்துகொண்டு வாழ்க்கையையும் உங்களையும் புரிந்து கொள்ளுங்கள். தியானத்தின்மூலம் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்.§
8. விரதம்: “புனித சத்திய வாக்குகள்.” சமய சத்திய வாக்குகள், வழிமுறைகள், நியமங்களை மேற்கொண்டு நிறைவேற்றி வையுங்கள். அவை உங்கள் ஆன்மாவோடு, சமுதாயத்தோடு, கடவுளோடு, தெய்வங்களோடு, குருவோடு மேற்கொள்ளப்படும் ஆன்மீக ஒப்பந்தங்களாகும். காலா காலத்துக்கு உண்ணா விரதம் இருங்கள். ஒவ்வொரு ஆண்டும் யாத்திரை மேற்கொள்ளுங்கள். உங்களின் சத்திய வாக்குகள் எதுவாக இருந்தாலும் சரி,—அது உங்களின் கற்பு, திருமணம், சந்நியாசம், போதையற்ற வாழ்வு, காணிக்கை கொடுத்தல், குரு பரம்பரைக்கு விசுவாசமாக இருத்தல், சைவ உணவையே உண்ணுதல் அல்லது புகைப்பிடிப்பதை கைவிடுதல் என்று எதைப்பற்றி சத்தியம் செய்திருந்தாலும் சரி—அதை மீறாமல் மிக உறுதியாகக் கடைப்பிடியுங்கள்.§
9. ஜெபம்: “ஜெபித்தல்” உங்கள் குரு சொன்னபடி உங்கள் புனித மந்திரத்தை தினமும் ஜெபியுங்கள். முதலில் குளித்துவிட்டு மனதை அமைதியாக்கி உங்களின் மந்திர ஜெபத்தில் முழு கவனத்தையும் செலுத்தி அம்மந்திரம் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி தூய்மையாக்கி உங்களின் மனவுணர்வை மேலோங்கச் செய்யுங்கள். உங்கள் உணர்ச்சிகளையும் நதியென பொங்கிவரும் எண்ண எழுச்சிகளையும் அந்த மந்திர ஜெபம் ஒடுக்கிவிட அனுமதியுங்கள்.§
10. தபஸ்: “தவம்.” அடிக்கடி தவம், கடுமையான ஒழுக்கங்கள், பிராயச்சித்தம், தியாகச் செயல்கள் ஆகியவற்றை கடைப்பிடியுங்கள். தவறு செய்துவிட்டால் அதற்கு பிராயச்சித்தமாக 108 தடவை கீழே விழுந்து வணங்குதல் அல்லது உண்ணாவிரதம் இருந்து அந்த பாவச் செயலுக்கு பரிகாரம் தேடுங்கள். விருப்பமான உங்கள் உடைமைகள், பணம் அல்லது நேரத்தைக் கொடுத்துவிட்டு, சுய வேண்டாமை மேற்கொள்ளுங்கள்.§
குருதேவர்: இயமம் நியமங்களைக் கடைப்பிடிப்பதால் நாம் நமது தன்னுணர்வு நிலையை அன்பு, இரக்கம், அறிவு, ஆனந்தம் ஆகிய உயர் சக்கரங்களுக்கு உயர்த்தி, இயல்பாகவே தேவர்கள், மகாதேவர்களின் தெய்வீக சக்தியை எழுப்பி விடுகிறோம்§