39§ |
நான்கு பெரிய தமிழ்க் குரவர்கள் யார்?§ |
நால்வர் என்போர் சுமார் 1200 ஆண்டுகளுக்குமுன் தமிழ் நாட்டில் வாழ்ந்த நான்கு சைவக் குரவர்கள் (சைவசமய ஞானிகள்) ஆவர். ஒவ்வொருவரும் தேவார பக்திப் பாடல்களைப் பாடினர். இன்றும் அவை திருக்கோயில்களிலும் சத்சங்கங்களிலும் (திருக்கூட்டம்) பாடப்படுகின்றன. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்பவர்களே அந்நால்வர் பெருமக்களாவர். இந்நால்வரையும் தமிழ் அடியார்கள் மிகவும் ஆழ்ந்து போற்றுகின்றனர்.§
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு சுவாமிகள் ஒவ்வொரு திருக்கோயில்களாகச் சென்று சிவபெருமானை வணங்கி மகிழ்ந்தார். கோயிலின் நடைபாதைகளைக் கூட்டி கற்கள் மலிந்த வளாகத்தில் மண்டிக்கிடக்கும் புற்களை அகற்றி பணிகளிலேயே மிகவும் பணிவான (உழவாரப்) பணியை செய்தார். சுந்தரர் பெருமான் சிவபெருமானை நேரடியாக தரிசித்து பல அற்புத லீலைகள தம் வாழ்வில் செய்துகாட்டியவர். தனக்கும் தன் குடும்பத்துக்கும் அடிக்கடி இறைவனிடம் காசும் உணவும் கேட்டு விண்ணப்பித்தவர். அவருடைய வேண்டுதல்கள் எப்பொழுதும் நிறைவேற்றப்பட்டன. மூன்றாவது தமிழ்ச்சமய ஞானியான சம்பந்தர் தம் மூன்று வயதிலேயே சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்று உடனே முதல் பாடலைப் பாடி அருள் பெற்றவர். தமிழ் நாடு முழுதும் சிவனைப் போற்றி தேவாரப் பாடல்கள் பாடிக்கொண்டு, மூத்தவரான அப்பர் பெருமானோடும் சில வேளைகளில் பாடிக்கொண்டு பயணம் மேற்கொண்டவர். தம் 16 வயதில் பெற்றோர்கள் அவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்தனர். என்றாலும் அப்படி நடக்கக்கூடாதென்று இருந்தது. சிவபெருமான்மீது அவருக்கு அதீத பக்தி இருந்ததால் திருமணம் நடந்தேறுவதற்கு முன்பே அவர் சிதம்பரத்துக்கு அருகேயுள்ள திருநல்லூர் சிவபெருமான் மூல சந்நிதியில் மறைந்துபோனார், அதன்பின் அவரைக் காணவில்லை. இம்மூன்று குரவர்களின் திருப்பாடல்களைத்தான் நாம் தேவாரம் என்று வழங்குகிறோம்.§
நான்காம் சமயக் குரவரான மாணிக்கவாசகர் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் முதலமைச்சராக இருந்தார். ஒருநாள் ஒரு குருந்த மரத்தின்கீழ் சிவ பெருமான் அமர்ந்து அவருக்குக் காட்சி கொடுக்க அப்போதே சிவஞானம் அடைந்தார். அதன்பின் அவர் அரசமாளிகையை விட்டு வெளியேறி பல இடங்களுக்குச். சென்று சிவன் மீது பல பக்திப் பாடல்கள் பாடி திருப்பெருந்துறையில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அவருடைய பாடல்கள் நமசிவாய மந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, பற்றறுத்தலை மேம்படுத்தவும், சிவபெருமானிடத்தில் அன்பை வளர்க்கவும் வலியுறுத்துகிறது. நெஞ்சை உருக்கும் அவரின் பாடல்கள் அவர் இயற்றிய திருவாசகம் மற்றும், திருக்கோவையார் ஆகிய இரண்டு படைப்புக்களில் காணலாம்.§
குருதேவர்: சிவபெருமான் நம்முள்ளே இருப்பதாகவும், நாம் சிவபெருமானுக்குள் இருப்பதாகவும் நமது சமயக் குரவர்கள் பாடிக் காட்டியுள்ளனர். அது தெரிந்ததும் நமக்குள் இருக்கும் பயம், கவலை, ஐயம் ஆகியன என்றென்றும் நமது மனதிலிருந்து நீங்கிவிடுகிறது.§