37§ |
இரண்டு பாதைகள் யாவை?§ |
இந்து சமுதாயத்தில் இரு வகையான வாழ்க்கையை நாம் வாலிப வயதில் வாழலாம். அதனை இரண்டு பாதைகள் (நெறிகள்) என்று அழைக்கிறோம். பெரும்பாலோர் இல்லற வாழ்வை (இல்லற நெறி) பின்பற்றுவர். மிகச் சிலரே துறவு வாழ்வைப் பின்பற்றுவர்§
திருமணமான தம்பதிகளுக்கு பெரும் கடமைகள் உள்ளன. குடும்பத்தை உருவாக்கி அதை இருவரும் ஒன்றாக நடத்துகின்றனர். தம் பிள்ளைகளை ஆன்மீகத்திலும் கல்வியிலும் சிறந்தவர்களாக, நாட்டுக்கு நல்ல குடிமக்களாக வளர்த்தெடுக்கின்றனர். இளம் வயதினருக்கும் முதியோர்களுக்கும் துறவிகள் சமூகத்துக்கும் அவர்கள் ஆதரவு நல்குகின்றனர். திருக்குறள் சுருக்கமாகக் கூறுவதாவது: “துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை.” (குறள் 42).§
(பொருள் விளக்கம்: முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவரையும் அறநெறி தவறாமல் போற்றுதல் இல்லறத்தானின் சிறந்த கடமையாகும்.)§
இல்லற வாழ்வு திருமணச் சடங்கில் தொடங்குகிறது. அங்கு புதுமணத் தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொள்வதாகவும் இறுதிவரை வாழ்வில் தர்மத்தைக் கடைப்பிடிப்பதாகவும் வாக்குறுதி எடுத்துக் கொள்கின்றனர்.§
துறவிகள் வேறு வாழ்வைப் பின்பற்றுகின்றனர். மனைவி மக்கள் என்ற வாழ்வை விடுத்து உலகத்தையே தம் குடும்பமாக அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு இரண்டு இலட்சியங்கள் உண்டு: மானுட சமுதாயத்துக்கு சேவை செய்வது; இறைஞானம் அடைவது. பெயரையும் புகழையும் அவர்கள் துறந்துவிடுகின்றனர். அவர்களின் முழு கவனமும் வழிபாடு, தியானம், யோகத்தில் இருக்கிறது. அது அவர்களைத் தூய்மையானவர்களாகவும் விவேகிகளாவும் ஆக்குகிறது. இல்லற வாழ்வில் இருப்பவரை அவர்கள் உற்சாகமூட்டி மேல்நிலைக்கு உயர்த்துகின்றனர். சில துறவிகள் சுற்றித் திரிவர் அல்லது தனியாக வாழ்வர். மற்றவர்கள் துறவிகள் மடத்தில் சேர்ந்து கொள்கின்றனர். சில துறவிகள் அற்புதமான ஆசிரியர்களாக விளங்குகின்றனர். சிலர் சுவாமிகளாக பல சீடர்களோடு வாழ்கின்றனர். இன்னும் சிலர் எந்த சத்தமுமின்றி சாதுக்களாக வாழ்கின்றனர். சைவ சமயத்தில் ஆண்களே பெரும்பாலும் துறவிகளாக இருக்கின்றனர். என்றாலும் மகளிர்களுக்கும் துறவிகள் சம்பிரதாயங்கள் உண்டு. துறவு வாழ்க்கை என்பது திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் என்றும் இறைவன், தெய்வங்கள், குரு ஆகியோருடன் பக்தியோடு இருப்பேன் என்ற சத்திய வாக்கோடு தொடங்குகிறது. பெரும்பாலான இந்துத் துறவிகள் ஆரஞ்சு வர்ண மேலாடையை அணிகின்றனர். வேறு சிலர் வெள்ளை அல்லது மஞ்சள் ஆடையை அணிகின்றனர். சிலர் தலையை மொட்டையடித்துக் கொள்கின்றனர். மேலும் சிலர் நீண்ட தலைமுடியும் தாடியும் வைத்துக் கொள்கின்றனர். இந்த இரண்டு நெறிகளையும் திருக்குறள் உயர்வாகப் பேசுகிறது.§
“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு.” (குறள் 23) “அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.” (குறள் 49)§
இதில் முக்கியமானது யாதெனில் உங்கள் பாதையை கவனமாகத் தேர்ந்தெடுத்து அதை உண்மையுடன் பின்பற்ற வேண்டும் என்பதே.§
குருதேவர்: ஒவ்வொரு இளைஞரும் இல்லறம் அல்லது துறவறம்—இந்த இரண்டு பாதையில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்..அந்தத் தேர்வு அவருடையதாக மட்டுமே, அவருடையதாக மட்டுமே இருக்கவேண்டும். இப்பிறப்பில் அவரின் கர்மவினைக்கேற்ப அவர் ஆன்மா எப்படி வாழப்போகிறது என்ற தேர்வு அவருடையது மட்டுமேயாகும். வாலிப வாழ்வின் பொறுப்பை ஏற்க இந்த இரண்டு பாதையில் ஒன்றை ஏற்றுக்கொள்ள தைரியம் வேண்டும். பெரிய தைரியம் வேண்டும்§