சிவனை அடையும் வழி

35§

ஒரு சற்குரு ஏன் மிகவும் முக்கியம்?§

மயமலையை ஏற விரும்பும் ஒருவர் ‘செர்பா’ எனும் மலையேறும் வழிகாட்டியை தம் பக்கத்தில் வைத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். ஏனெனில் நீங்கள் போகப்போகும் அந்த இடத்திற்கு அவர் ஏற்கனவே சென்ற அனுபவம் உள்ளவராக இருப்பார். அதுபோலவே நாம் ஆன்மீக வழியில் செல்லும்போது ஞானமடைந்த, உண்மைப்பொருளை தரிசித்த அந்த உண்மைப்பொருளுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடிய ஒரு சற்குரு துணையில்லாமல் செல்லக்கூடாது. குரு என்ற வார்த்தைக்கு ‘ஆசிரியர்’ என்று பொருள். கல்வி கற்பிக்கும் எவரையும் நீங்கள் குரு என்று அழைக்கலாம். நடன குரு, சங்கீத குரு அல்லது வகுப்பில் பாடம் கற்பிக்கும் ஆசிரியரும் குரு என்று அழைக்கப்படலாம். எந்தவொரு கல்வி கற்றாலும் ஒரு ஆசிரியர் முக்கியம். ஏனெனில் நம்முடைய பலவீனம் நமக்குத் தெரியாது. ஆனால் ஒரு கைதேர்ந்த ஆசிரியரால் அந்தக் குறையை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.§

உங்கள் தாயும் தந்தையும்தான் உங்களின் முதல் குரு. பல இந்துக்களுக்கு ‘சத்’ அல்லது உண்மையை போதிக்கக்கூடிய சற்குரு இருக்கிறார்கள். சற்குரு என்பவர் ஒரு பக்குவப்பட்ட ஆன்மா; இறைவனை தரிசித்தவர். இறைவழியில் பிறரையும் கூட்டிச்செல்லக்கூடியவர். சிவபெருமான் நமது ஒவ்வொருவர் கண்களிலும் ஒளிவீசிக்கொண்டு நம் ஒவ்வொருவர் உள்ளேயும் இருக்கிறார் என்றாலும், ஒரு சற்குரு பரிசுத்தமானவராகவும் ஞானமடைந்தவராகவும் இருப்பதால் அவரிடம் பிரகாசமாக ஒளிவீசுகிறார். எனவே நாம் சற்குருவை சிவனாகவே பாவித்து வணங்குகிறோம். சற்குருவானவர் முழுநேரமும் சமயவாழ்வில் ஈடுபட்டு சைவசமயத்தை நிலைநாட்டி சிவனடியார்களுக்கு உதவுகிறார். அவர் வெறுமனே வாழ்ந்து கொண்டிருப்பதாலும் உலகுக்கு அமைதியையும் ஆசியையும் கொண்டுவருகிறார்.§

ஒரு சற்குரு என்பவர் என்றுமே ஒரு சந்நியாசியாகவே இருப்பார். அவர் திருமணம் ஆகாதவராகவும் எல்லா உடைமைகளையும் கைவிட்டவராகவும், தனிப்பட்ட வாழ்வையும், குடும்ப வாழ்வையும், நண்பர்களையும் துறந்தவராகவும் இருப்பார். தன் குருவிடமிருந்து பெறுவதற்கு அரிய தீட்சை பெறுவதால் ஆக உயர்ந்த ஆன்மீக ஞானத்தையும் அதிகார ஆற்றலையும் பெறுகிறார். இதுவே சிவபெருமானின் அருளும் சக்தி, அவர் தொழிற்படுத்தும் அனுக்கிரக சக்தி. உங்கள் குடும்பத்துக்கு வழிகாட்ட ஒரு சற்குரு இருந்தால் நீங்கள் ஒரு பெரியஅதிஷ்டசாலி. உங்கள் பெற்றோர்களுக்கு அவர் விவேகமான முறையில் அறிவுரை வழங்கி குடும்பத்தை வலுவாகவும் இணக்க உணர்வோடும் ஆன்மீகத் துடிப்போடும் வைத்திருக்க முடியும். அவரைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அவரிடம் உரையாடி கேள்விகளைக் கேளுங்கள். தனது ஞானத்தை அவர் பகிர்ந்து கொள்வார்; கடவுளுக்கு அருகே நெருங்கிச்செல்ல அவர் உதவுவார்§

image§

shutterstock§

பாலியிலுள்ள ஒரு செழிப்பான ஆசிரமத்தில் உண்மையைத் தேடியலையும் ஒருவர் பூ பழங்களுடன் ஞானமடைந்த ஒரு குருவை அணுகுகிறார். உண்மையைத் தேடும் அவர் ஒரு ஆன்மீக வழிகாட்டியின் அவசியத்தை அறிந்துள்ளார்§

குருதேவர்: ஆன்மீகப் பாதையில் ஒரு சற்குரு என்பவர் அடியார்களின் ஆன்மீக வழிகாட்டியும் ஞானாசிரியரும் நண்பரும் ஒரு துணையும் ஆவார். சமயத்தின் மொத்த உருவமாக இருக்கும் அவரால் அடியார்கள் எந்நிலையில் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையையும் கவனிக்க இயலும். மனம் தந்திரவேலை செய்யும் என்பதாலும் ஆணவம் சுயமாக ஆட்கொள்ளும் ஒரு கருவி என்பதாலும் ஒரு சற்குரு தேவைப்படுகிறார். அவரே ஊக்கமூட்டி உதவிசெய்து வழிகாட்டி சீடரை தன்னுள் ஆத்மஞானம் அடைய தூண்டுகிறார்§