26§ |
கணேசப் பெருமான் யார்?§ |
யானை முகங்கொண்ட கணேசப் பெருமான் கலைகளுக்கும் விஞ்ஞானத்துக்கும் புரவலராகவும், தடைகளுக்கெல்லாம் அதிபதியாகவும், தர்மத்தின் காவலராகவும் இருக்கிறார். எந்த தெய்வத்தையும் வணங்குவதற்குமுன் சிவனின் மகனான இவரைத்தான்—சிவபெருமான் உட்பட—முதலில் வழிபடுகிறார்கள். கணேசரின் வாகனம் மூஷிகம் என்னும் எலி. கடவுளால் மனதின் எல்லா பகுதிக்கும் செல்ல முடியும் என்பதை இச்சின்னம் குறிக்கிறது. இதனை குருதேவர், “இவரின் பக்தர்கள் வீடு, தொழிற்சாலைகள், பணிமனைகள், மருத்துவமனைகள், மார்க்கெட்டுகள், விண்ணில் சுற்றிப்பறந்துகொண்டோ அல்லது வீட்டுத் தோட்டத்தில் மண்ணைப் புரட்டிக்கொண்டோ இருந்தாலும்—எங்கிருந்தாலும் கணேசப்பெருமான் அங்கே இருப்பார்,” என்று கற்றுத் தந்துள்ளார்.§
எந்தவொரு புது காரியத்தைத் தொடங்கும் முன்னர் நாம் அவரை வணங்குகிறோம். சோதனை எழுதப்போனாலும் சரி அல்லது எந்த கல்லூரியில் சேரலாம் போன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னரும் சரி, கணபதியைத்தான் முதலில் வணங்குகிறோம். நமக்கு கணேசரின் அருளாசி வேண்டும் என்கிறபோது நாம் கோயிலில் அவரின் பூசையில் கலந்துகொள்கிறோம் அல்லது வீட்டிலேயே அவரை வணங்கி வேண்டிக் கொள்கிறோம். அவரை ஒரு நல்ல நண்பராகப் பாவித்துப் பழகலாம். அவரோடு தொடர்புகொள்ள அவரின் யானைத் திருவுருவத்தை மனதில் நிலைநிறுத்துங்கள். மனதுக்குள் அவரின் கண்களைப் பாருங்கள். உங்களின் குறைகளை அல்லது கேள்விகளை அவரின் வலது காதில் எடுத்துச் சொல்லுங்கள். முடிந்ததும் கண்களைத் திறக்கவும். மிகவும் சூட்சுமமான மறைமுகமான முறையில் அவரின் வழிகாட்டுதல் வரும். அடுத்த ஒரு வாரத்துக்கு மிகவும் கவனமாக ஏதாவது அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பாருங்கள். உங்கள் ஆசிரியர், பெற்றோர் அல்லது நண்பர் இவர்களிடமிருந்து ஏதாவது ஒரு பரிந்துரையோ அல்லது சாதாரண கருத்தோ திடீரென்று உங்களின் அகக்கண்ணைத் திறந்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிவாக்கும்.§
கணேசப்பெருமானின் சக்தி மிகவும் மென்மையான இதமான சக்தியாகும். அச்சக்தியோடு ஏற்படும் நுண்ணிய சந்திப்புகூட நம்மை கணபதி வசிக்கும் மூலாதார சக்கரத்திற்கு அதாவது நினைவுகள் பதிவாகும் இடத்துக்கு இட்டுச்சென்று படுபலமான பாதுகாப்பு உணர்வை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. இந்த அருட்சக்தியானது நம்மை பொறாமை, அச்சம், ஆத்திரம் போன்ற மூலாதாரத்திற்கும் கீழேயுள்ள ஏழு சக்கர உணர்வு நிலைகளில் அழுந்தவிடாமல் நம்மை அதற்கும் மேலே வைத்துக் காக்கிறது. பரம்பொருளான சிவபெருமானே கணேசப்பெருமானையும், முருகப்பெருமானையும் இதர எல்லா இந்து தெய்வங்களையும் படைத்தார். அவர்களும் நம்மைப்போன்ற ஆன்மாக்களே. என்றாலும் அவர்கள் மிகவும் உயர்ந்த பரிணாம வளர்ச்சி பெற்றிருப்பதால் இறைவனோடு ஒன்றிணைந்திருக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். மிகப் பழமையான பரிபக்குவமடைந்த ஆன்மாக்களான அவர்கள் பெரிய கணங்களாக சிவலோகத்தில்வாழ்கிறார்கள். ஆண் தெய்வம் அல்லது பெண் தெய்வம் என்று பொதுவாக அவர்கள் அழைக்கப்பட்டாலும் உண்மையில் அவர்கள் குணங்குறிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.§
குருதேவர்: கிரகக்கோளங்களையும், அண்டபேரண்டங்களையும் ஆட்சிசெய்யும் ஆளுனராக கணேசப்பெருமான் படைக்கப்பட்டார். அவரின் பேரறிவு எல்லையற்றது. அவரின் நீதிமுறை நேர்மையானது…. தடைகளுக்கெல்லாம் (விக்னங்கள்) அதிபதியான இவர் முழுமையற்ற கொள்கையுடன் நாம் வாழ்வதிலிருந்தும் அல்லது தேவையற்ற வேண்டுதலைக் கேட்பதனின்றும் அல்லது நன்கு சிந்திக்கப்படாத ஒரு காரியம் தொடங்குவதிலிருந்தும் நம்மைத் தடுத்து நமக்குத் துன்பம் நேராமல் காக்கிறார்.§