16§ |
நமசிவாய மந்திரம் என்றால் என்ன?§ |
நமசிவாய மந்திரம் சைவசமய மந்திரங்களுள் மிகவும் புகழ்பெற்ற மந்திரமாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் அதனை தினமும் உருவேற்றுகின்றனர். நமசிவாய என்றால் “சிவனுக்கு வணக்கம்” என்று பொருள்படும். இம்மந்திரம் யஜுர் வேதத்தில் சிவபெருமானைப் போற்றும் புகழ்பெற்ற ஸ்ரீருத்திர மந்திரப் பகுதியில் காணப்படுகிறது. இதனை பஞ்சாக்கரம் அல்லது ஐந்தெழுத்து மந்திரம் என்று கூறுவர். ஒவ்வொரு எழுத்தும் பொருள் நிறைந்தது. ந என்ற எழுத்து சிவனின் மறைத்தல் ஆற்றலையும், ம என்ற எழுத்து உலகையும் காட்டுகிறது. சி என்ற எழுத்து சிவனையும், வ என்ற எழுத்து அவரின் அருட்சக்தியையும், ய என்ற எழுத்து உயிரையும் குறிக்கும். ஐந்து எழுத்துக்கள் பஞ்ச பூதங்களையும் குறிக்கும். ந என்ற எழுத்து நிலம். ம என்பது நீர், சி என்பது நெருப்பு, வ என்பது காற்று, ய என்பது ஆகாயம் அல்லது வெட்டவெளி.§
இம்மந்திரம் வாயால் அல்லது மனத்துள் பலதடவை செபிக்கப்படுவதால், நீக்கமற எங்கும் நிறைந்து முடிவற்றிருக்கும் சிவபெருமான் மீது மனதை ஒருநிலைப்படுகிறது. ஒவ்வொருவரும் இதனை சுதந்திரமாகப் பாடியாடி செபிக்கின்றனர். எனினும் இம்மந்திரத்தை ஒரு குரு அருள்வாராயின் அது மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகிறது. இம்மந்திரத்தை தீட்சை என்ற மந்திர சடங்கு மூலம் பெறுவதற்கு முன்னர் ஒருவரை குருவானவர் குறிப்பிட்ட காலம்வரை (குருகுல) பாடத்தைப் படிக்கச் சொல்வார். கோயிலில் அக்னி ஓமம் வார்த்து இந்த தீட்சா சடங்கு காரியம் நடைபெறும். குருவானவர் சீடனின் வலது காதில் இம்மந்திரத்தை மெதுவாக உச்சரித்து அதை எப்படி எப்போது செபிக்க வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிப்பார். பாரம்பரியமாக அம்மந்திரத்தை 108 தடவை உத்திராட்ச மாலையில் உருட்டி தினமும் செபிக்க வேண்டும். இதனை ஜெபயோகம் என்று அழைப்பர். சரியாக செய்தோமானால் அது மனதை அமைதிப் படுத்தி ஆன்மீக அறிவும் மனோசக்தியும் ஏற்படுத்தித் தருகிறது. சிவபெருமானுக்கு மிக அணுக்கமாக இருக்கவும் உலகலாவிய சிவபக்தர்களின் அரவணைப்பிலும் இருக்கும்படி செய்கிறது.§
குருதேவர் அறிவுறுத்தியிருப்பதாவது: “வாழ்க்கையில் கஷ்டம் அல்லது நெருக்கடி ஏற்படும்போது ‘சிவசிவ’ என்றோ அல்லது ‘ஓம் சிவாய’ என்றோ அல்லது “நமசிவாய’ என்றோ கூறிக்கொள்ளுங்கள். அனைத்தையும் மானசீகமாக அவரின் (சிவனின்) பாதத்தில் வைத்துவிடுங்கள்.”§
குருதேவர்: என் சற்குருநாதர் உதட்டிலிடருந்து நமசிவாய என்ற மந்திரத்தைக் கற்றேன். அம்மந்திரம் என் வாழ்க்கைக்கு நடுநாயகமாகவும் உற்றபலமாகவும் இருந்துகொண்டு, விதியை பூர்த்திபண்ணியுள்ளது. நமசிவாய மந்திரத்தின் ரகசியம் என்னவென்றால் அதை சரியானவர் வாயிலிருந்து சரியான நேரத்தில் கேட்கவேண்டும். அப்போதுதான், அப்போது மட்டும்தான்—அது உங்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும்.§