7§ |
இந்து சமயத்தின முக்கியப் பிரிவுகள் யாவை?§ |
இந்து சமயத்தின் முக்கியப் பிரிவுகளாக சைவ சமயம், வைணவ சமயம், சாக்த சமயம் மற்றும் ஸ்மார்த்த சமயம் ஆகியவை விளங்குகின்றன. இரண்டு நூற்றாண்டுகளாக மேலை நாட்டினர் இந்தியாவின் சமய நம்பிக்கையை புரிந்துகொள்ள கடுமையாக முயன்றுள்ளனர். அதன் நம்பிக்கைகளும், செயல்பாட்டு முறைகளும், வழிபடு முறைகளும் மிகவும் பரந்துவிரிந்ததாகவும் மாறுபட்டும் இருப்பதைக்கண்டு அதனை முழுமையாகத் அறிந்துகொள்ளவோ அல்லது விவரிக்கவோ அவர்களால் இயலவில்லை.§
இந்தியாவின் சனாதன தர்மம் அல்லது அனாதி சமயம் என்பது நான்கு முக்கியப் பிரிவுகளைக் கொண்ட சமயம் என்பதை அவர்கள் உணரவில்லை. உதாரணமாக அவர்கள் பல தெய்வங்களைக் கண்டு இந்துக்களுக்கு சர்வசக்தி வாய்ந்த சர்வேஸ்வரக் கடவுள் ஒருவர் இல்லை என்று தவறாக கல்விமான்கள் எழுதிவைத்தனர். உண்மையில் அனைத்து இந்துக்களும் சர்வசக்தி படைத்த ஒரே கடவுளை பல பெயர்களில் வழிபடுகின்றனர். வைணவர்களுக்கு விஷ்ணுவே கடவுள். சைவர்களுக்கு சிவபெருமானே கடவுள். சாக்தர்களுக்கு சக்திதேவியே பெருங்கடவுள். மிகவும் சுதந்திரமாக வழிபடும் ஸ்மார்த்த இந்துக்களுக்கு எந்த தெய்வம் என்ற தேர்வு அவர்களின் சொந்த விருப்பத்துக்கு விடப்பட்டுள்ளது. இவ்வேறுபாடுகள் புவியியல் அமைப்பு ரீதியாகவும் மொழிவாரியாகவும் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்டன.§
ஒவ்வொரு பிரிவுக்கும் சொந்த நம்பிக்கையும், ஞானசாத்திர நூல்களும், மதாச்சாரியர்களும், சந்நியாச பாரம்பரியமும் உண்டு. ஒவ்வொரு பிரிவும் சொந்த கோயில்கள், சமய விழாக்கள் வழிபாட்டு முறைகளை வைத்துள்ளனர். சிலர் பக்தி மார்க்கத்திலும், கோயில் வழிபாட்டிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர். வேறு சிலர் யோகத்தையும், மந்திரத்தையும், ஞானசாத்திரம் வாசிப்பதையும் வலியுறுத்துகின்றனர். ஒவ்வொரு பிரிவும் லட்சோப லட்ச பக்தர்களைக் கொண்டிருக்கின்றது. நான்கு பிரிவுகளும் வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொள்வதுடன் கர்மவினை, தர்மம் மற்றும் மறுபிறவி ஆகிய அடிப்படைக் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்களின் கலாச்சாரமும் பாரம்பரியமும் ஒன்றாக இருக்கின்றன.§
பெரும்பாலான இந்துக்கள் தம் பெற்றோர்களும் தாத்தா பாட்டிகளும் பின்பற்றிய சம்பிரதாயத்தையே பின்பற்றுகின்றனர். சைவ சமயத்தைச் சேர்ந்த நாம் எல்லா இந்து சமயப் பிரிவுகளையும் மதிக்கிறோம். எப்பொழுதாவது இதர இந்து சமயப் பிரிவினரின் கோயில்களுக்கும் செல்கிறோம். அவர்கள் கொண்டாடும் விழாக்களில் கலந்து கொண்டு அவர்களின் சமயாச்சாரியர்களையும் கெளரவிக்கிறோம். என்றாலும் நாம் நமது சைவ கொள்கையில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.§
குருதேவர்: நமது பின்னணி எப்படி இருந்தாலும், நாம் நமது பிரிவின் வேரையும் சம்பிரதாயத்தையும் நிலைநிறுத்தி, நமக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் காப்பாற்றி, அதற்குள்ளேயே வலுவாக வளர வேண்டும்.§