KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

image§

ஆய்வுச்சுருக்கம்§

“மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்” என்ற வாசகத்தினை சுதேச இந்துக்களாகிய நாங்கள் கடவுள் துதி பாடும் சந்தர்ப்பத்தில் வாயளவில் மாத்திரமே கூறுகின்றோம். ஆனால் இந்து சமயத்துடன் நேரடியாகத் தொடர்புபடாத மேலைத்தேசத்தவர்களினால் இந்துப் பாரம்பரியமானது சிறந்த முறையில் கடைப்பிடிக்கப்பட்டும், பரப்பப்பட்டும் வருகின்றது.§

ஈழத்து சித்தர் மரபையும், சைவ சித்தாந்த தத்துவ நெறியையும் அத்தோடு இந்து கலாசாரத்தையும் அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருந்து இயங்கி வருகின்ற ஹவாய் இந்து ஆதீனமானது சிறந்த முறையில் பாதுகாத்தும் வளர்த்தும் வருவதோடு இந்து சமயத்தில் கூறப்படும் துறவு நெறியே உண்மை ஞானத்தினை அடைவதற்குரிய வழி என்ற உண்மையை உணர்ந்த துறவிகளை உலகளாவிய ரீதியில் இணைத்து சிறப்பான முறையில் முன்னேறிக்கொண்டு வருகின்றது. “அமெரிக்க காவாய் இந்து ஆதீனம்” எனும் தலைப்பில் அமைந்த இந்த ஆய்வானது ஹவாய் இந்து ஆதீனத்தின் பாராட்டுதற்கரிய செயற்பாடுகளையும், நிர்வாக அமைப்புகளையும் எடுத்துக்காட்டி இதனூடாக இந்து சமூகத்தினை சனாதன தர்மத்தின் பாதையில் செல்லத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.§

இவ்வாய்வானது ஐந்து அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது அத்தியாயமானது ஆய்வு பற்றிய அறிமுகமாக காணப்படும் அதேவேளை இரண்டாவது அத்தியாயம் மேலைத்தேசத்தவர்களினால் காலனித்துவ காலக்கட்டத்தில் இந்து சமயத்திற்கு ஆற்றப்பட்ட மிக முக்கியமானதும் இந்து இலக்கியம் சார்ந்ததுமான பணிகளைப் பற்றி ஆய்வுத் தலைப்பிலிருந்து ஆராயப்படுவதாக காணப்படுகின்றது. மேலும் மூன்றாவது அத்தியாயத்தில் ஆய்வுப் பிரதேசமான ஹவாய் இந்து ஆதீனத்தின் இந்து சமய சார்ந்த பணிகளும், சமூகப்பணிகளும், ஏனைய ஆதீனம் சார்ந்த செயற்பாடுகளும் ஆராயப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நான்காவது அத்தியாயத்தில் ஆதீன துறவிகள் ஒவ்வொருவரினதும் கடமைகள் மற்றும் செயற்பாட்டின் ஊடாகவே முழு ஆதீன நிர்வாக செயற்பாடுகளும் நிகழ்கின்றன என்பது ஆராயப்பட்டுள்ளன. தொடர்ந்து ஐந்தாவது அத்தியாயமானது ஆய்வின் மூலம் பெறப்பட்ட விடயங்களைத் தொகுத்து நிறைவுரையாக கூறுவதாக அமையப்பெற்றுள்ளது. இவ்வகையில் இவ்வாய்வானது அமெரிக்காவில் உள்ள ஹவாய் இந்து ஆதீனத்தின் இந்து சமயப் பணிகளை வெளிக்கொணர்வதாகக் காணப்படுவதோடு அதன் ஊடாக இந்து சமூகத்திற்கு இந்து சமயத்தின் உலகளாவிய செல்வாக்கினை தெரியப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது.§

~ ஆய்வாளர்§