“நாத சம்பிரதாயம் கோயில் வழிபாட்டை ஈடாக வைத்து, குண்டலியோக உத்வேகத்தால் அத்வைத ஈஷ்வரவாதத்தின் அடிப்படையில், வலுவான குரு சிஷ்ய முறையில் ஞானப் பிரகாசமிட்டு, ஆன்மாவைக் கிளர்ந்தெழச் செய்யும் ஞானநூல்களின் வழிகாட்டுதலோடு, ஆன்மப் பயிற்சியாலும் தவத்தாலும் ஞானவிழிப்படையச் செய்து நம்முள் ஆழத்தில் இருக்கும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.” குருதேவர்§
சிவனை அடையும் வழி என்ற இளையோர்களுக்கான இந்த சமய வினா-விடை புத்தகத்திற்கு உங்களை வரவேற்கிறோம். வண்ணமயமான இந்த புத்தகத்தை நீங்கள் ரசிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். இப்புத்தகம் என் குருநாதர் எழுதிய சிவபெருமானுடன் ஒரு திருநடனம், சிவபெருமானுடன் வாழ்தல், சிவபெருமானுடன் ஐக்கியமாதல் ஆகிய முப்பெரும் குரு போதனைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டது. சிவனை அடையும் வழி என்ற இப்புத்தகம் சுத்த சைவசித்தாந்தம் என்ற நமது சைவ சமயத்தின் எல்லா முக்கிய போதனைகளையும் வழங்குகிறது. இளையோர்களை மனதில் வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டிருப்பினும், முப்பெரும் குரு போதனைத் தொகுதிகளின் சுருக்கத்தை அறிய விரும்பும் யார்க்கும் இது பொருந்தும். இறைவனையும் தெய்வங்களையும் குறிப்பிடும்போது அவர்கள் குறிகுணங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால், ஆங்கில மொழியில் குறிப்பிடுவதுபோல் “அவர்”,, “அவருடையது” என்ற பதங்கள் ஆண்பாலைக் குறிப்பிடுவதுபோல் மிகத் தயக்கமுடனேயே இறைவனையும் தெய்வங்களையும் குறிப்பிடும்போது அந்த பதங்களை உபயோகித்துள்ளோம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.§
இளைஞர்களுக்கு: ஒரு சைவ இந்து அறியவேண்டிய மிக முக்கியமான விஷயங்களை இப்புத்தகத்தின் அறுபத்து எட்டு அத்தியாயங்களும் உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் மிக சுருக்கமாக – ஒன்று அல்லது இரண்டு பக்கங்கள் மட்டுமே என்றாலும் அதிகமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. சிவபெருமான், கணேசப்பெருமான், முருகப்பெருமான், தேவர்கள் (விண்ணவர்கள்) பற்றிய கேள்விகளுக்கு தக்க பதில்களையும், நம் வாழ்வில் எவ்வாறு அவர்கள் உதவ முடியும் என்றும், கோயில் வழிபாடு, வீட்டு வழிபாடு மூலம் நாம் எப்படி அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியும் என்றும் அறிந்து கொள்ளலாம். கர்மவினை, தர்மம், மறுபிறப்பு போன்றவைகளுக்கு மிகத் தெளிவான விளக்கத்தை நீங்கள் காணலாம். ஜபம், தியானம் மற்றும் உறுதிமொழிகள் உங்கள் வாழ்க்கையை எப்படி மேம்படுத்த உதவுகின்றன என்ற விளக்கங்களையும் காணலாம். உங்களின் மிக முக்கியமான இலட்சியங்களை அடைய எப்படி வாழ்க்கையை சிறப்பான முறையில் நடத்தலாம் என்றும் நீங்கள் இதில் கற்றுக்கொள்ளலாம். வீட்டு வாழ்வின் உட்பார்வை, மற்றவர்களோடு புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளுதல், பிறசமய சகிப்பு, சைவ உணவு உண்ணுதல், சுற்றுச்சூழலை மதித்தல் போன்ற செய்திகள் இந்த அத்தியாயங்களில் அடங்கியுள்ளன. இறப்பு, மரணித்தல், மறுபிறவி, பாவம் தீமை போன்ற கடினமான தத்துவார்த்த அங்கங்களையும் அவை விவாதிக்கின்றன. சுருக்கமான இக்கட்டுரைகளை உள்வாங்கிக்கொள்வதன்மூலம் நம் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், தத்துவங்களைப் பற்றி தெளிவான விளக்கம் ஏற்படும். வாழ்வைப் பற்றி ஓர் ஆழமான விரிவான கண்ணோட்டம் கிடைக்கும்.§
ஆசிரியர்களுக்கு: இப்புத்தகம் 10 வயதுக்கும் மேற்பட்ட இளையோர்களுக்கு எழுதப்பட்டது. பாடங்களிலுள்ள எல்லா வார்த்தைகளையும் உங்கள் மாணவர்கள் புரிந்துகொள்ளுமாறு ஆசிரியர்களான நீங்கள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அதனால் அந்த வார்த்தைகளின் பொருள் தெளிவாக அவர்கள் மனதில் பதிவாகும். உங்களிடம் கேள்விகள் கேட்க அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள்.§
பெற்றோர்களுக்கு: இது உங்கள் பிள்ளைகள் மேற்கொள்ளும் மிக முக்கியமான கல்வியாக இருக்கலாம். இது இந்து சமயத்தின் மிகப் பழம் பிரிவான சைவ சமயத்தைப் பற்றியது. குறிப்பாக சைவ சித்தாந்தத்தைப்பற்றிய கல்வியாகும். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சமயக் கல்வி முக்கியமல்ல என்றும், அவர்கள் பள்ளிப் பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் நம்புகின்றனர். இதில் விவேகம் என்னவென்றால் இரண்டையுமே கற்றுக்கொள்வதுதான் சிறப்பு. இங்கு விளக்கப்படும் இந்து மதத்தின் சைவ சமயம் பல நடைமுறை வழக்கங்களை விளக்குகிறது. பள்ளிப்பாடங்களில் உங்கள் பிள்ளைகள் சிறப்பாக விளங்கிட அவை உதவும். மேலும் உங்கள் பிள்ளைகள் குறைந்த மன உளைச்சலுடன், சமச்சீரான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கும் முதிர்ச்சியான உறவுகளை உருவாக்கவும் அது உதவுகிறது. உங்கள் பிள்ளைகள் பயிலும் சிவனை அடையும் வழி என்ற இப்பாடங்களில் நீங்கள் ஆர்வம்காட்டி அனைத்து பாடங்களையும் படியுங்கள். உங்கள் பிள்ளையின் ஆன்மா மற்றும் மனசாட்சியைப்பற்றிய கல்வியென்று இந்த சமயப்பாடப் புத்தகத்தைக் கருதுங்கள். நம் சமயத்தைப் புரிந்துகொள்ளும் ஓர் ஆன்மீகப் பயிற்சியாகவும் அதனை வாழ்வில் தகுந்த அறிவு விளக்கத்தோடு கடைப்பிடித்து அதன் ஞானத்தையும் நுண்ணறிவையும் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள தயார் படுத்தும் பயிற்சியாகவும் இதனை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளின் பாடங்களில் உதவி செய்யுங்கள். அப்படிச் செய்யும்போது உங்களுக்கே தெரியாத பல கேள்விகளுக்கு விடைகள் அங்கே கிடைக்கலாம்.§
சற்குரு போதிநாத வேலன்சுவாமி§
163வது ஜகதாச்சாரியர் நந்திநாத சம்பிரதாயம் கைலாச பரம்பரை§
குருமகாசன்னிதானம்§
காவாய் ஆதீனம், ஹாவாய், அமெரிக்கா§