52§ |
விருந்தினர்களை நாம் எப்படி வரவேற்கிறோம்?§ |
உலக அளவில் மிகத் தாரளமான விருந்தோம்பலுக்கு இந்துக்களும் அவர்களின் இல்லங்களும் பெயர் பெற்றுள்ளன. விருந்தினர்களை கடவுளாகவே நடத்துவது இந்துக்களின் பழக்கமாகும். பரபப்பான இன்றைய நாகரீக சூழ்நிலையில்கூட விருந்தினர்கள் (வீட்டுக்கு வந்து) நம் வேலையைக் கெடுக்கிறார்கள் என்று எண்ணக்கூடாது. எவ்வளவு முக்கியமான வேலை என்றாலும் அதை போட்டுவிட்டு வந்தவர்களை நாம் வரவேற்று உபசரிக்க வேண்டும். நம்மை யாரும் வரவேற்காமல் போனால் நமக்கு எப்படி இருக்குமோ அப்படி அந்த உணர்வு அவர்களுக்கும் ஏற்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கூட்டியே அறிவிக்காமல் விருந்தினர்கள் வீட்டுக்கு வந்துவிட்டாலும், அவர்களை குடும்ப சகிதமாக வாசலில் நின்று வரவேற்க வேண்டும். தாராளமாக நேரம் ஒதுக்கி அவர்களிடம் கனிவாக உரையாட வேண்டும். நம் உபசரிப்பில் அவர்கள் ஒவ்வொருவரும் சிறப்பு விருந்தினர் என்று உணர வேண்டும். இதுவே நமது புராதன புனித கடமையாகும். திருக்குறள் கூறுவதாவது§
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.” (குறள் 81) (“நாம் செல்வம் சேர்த்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினர்களைப் போற்றி உபசரிக்கவே.”)§
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.” (குறள் 86) (“வந்த விருந்தினர்களை வரவேற்று உபசரித்து இனி வரும் விருந்தினர்களை எதிர்பார்த்து காத்திருப்பான். அப்படிப்பட்டவனை வானுலகமும் மிகவும் வரவேற்கின்றது.”)§
வந்திருக்கும் விருந்தினர்களை நாம் வெளியே சென்று வரவேற்று, உள்ளே அழைத்து அமர இருக்கையும் அருந்த நீரும் அளிக்க வேண்டும் என்றும், அவர்கள்முன் ஒரு விளக்கேற்றி வைத்து உணவும் இருப்பிடமும் வழங்க வேண்டுமென்றும் இந்து சாத்திரங்கள் நல்ல இல்லறத்தானைப் பற்றி கூறுகின்றன. பிறகு அவர்களுக்கு விருப்பமான விஷயங்களைப் பற்றி அவர்களுடன் நட்பாக உரையாட வேண்டும். மிகவும் வசதி குறைந்த இல்லறத்தான் கூட விருந்தினர்களுக்கு உணவும் நீரும் அளிக்கத் தவறுவதில்லை. குறைந்த பட்சம் உட்காருவதற்கு ஒரு பாயும் குடிக்க ஒரு குவளை நீரும் அளிக்க வேண்டியது அவசியம். வீட்டிற்கு ஒரு புனித மகான் வருகிறார் என்றால் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி பல நாட்களுக்கு முன்பே வீட்டை சுத்தப்படுத்துவதிலும், அலங்கரிப்பதிலும், மாலை கட்டுவதிலும், பரிசுப்பொருளைத் தயார்படுத்துவதிலும் தயாராக இருக்கின்றனர்.§
விருந்தினர்கள் திரும்பிப் போகும்போது அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்கூறி அன்பளிப்புகள் வழங்க வேண்டும். அது சின்ன மிட்டாயாகவும் இருக்கலாம். பிறகு அவர்களோடு அவர்களின் வாகனம் வரை சென்று இருகரங்கூப்பி வணங்கி, வழியனுப்பியதும் அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.§
குருதேவர்: வீணையிலிருந்து புறப்படும் நாதம்போல விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை சிவனடியார்களிடமிருந்து வெளிப்படுகிறது. விருந்தினர்கள் கடவுளாகவே பாவிக்கப்படுகிறார்கள். நண்பர்கள், உறவினர்கள், வழியிற் சந்தித்தவர்கள், முன்பின் தெரியாதவர்கள்கூட, என்றுமே வற்றாத மாளாத நம்முடைய உபசரிப்பைக்கண்டு அன்புக்கு அடிமையாகின்றனர்.§