29§ |
யார் இந்த தேவர்கள்?§ |
குருதேவர் எழுதியிருப்பதாவது: “சமயம் என்பது மூவுலகங்களையும் ஒன்றாகக் கொண்டு வருவதாகும். அதாவது மேலுலகில் இருக்கும் உலகின் ஒவ்வொரு சமயத்தின் குருமார்கள், தேவதூதர்கள், தேவர்கள், தெய்வங்கள், அருளாளர்கள், ஞானிகள் ஆகியோர், பருவுடம்பு இல்லாமல் (சூக்கும உடம்பில்) உள்ளுலகில் வாழ்ந்துகொண்டு தங்களின் சமயப் பிரிவினரின் அன்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழிகாட்டி, வழிநடத்தி, உதவிபுரிந்து, பாதுகாத்து, அருள்மழை பொழிந்து அவர்களை ஊக்குவித்து கொண்டிருக்கின்றனர்.”§
சைவர்களாகிய நீங்கள் மூவுலகிலும் உறுப்பினர்கள் உள்ள பெரிய உலகக் குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருக்கிறீர்கள். தேவர்கள் என்போர் இரண்டாவது உலகம் எனப்படும் மேலுலகில், அந்தர்லோகத்தில், ஒளி உடம்பில் வாழும் ஆன்மாக்களாவர். கடவுளுக்கும் தெய்வங்களுக்கும் உதவிபுரிவதே அவர்களின் பணி. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பதும் அவர்கள் பணிகளில் ஒன்று. இன்னொரு பணி என்னவென்றால் புதிதாக இறந்தவர்களை உள்ளுலகில் வரவேற்று தூலவுடம்பில்லாத அவர்களுக்கு சூக்கும உடம்பில் புதிய லோகத்தில் எப்படி வாழ்வது என்று கற்றுக்கொடுப்பதாகும்.§
ஒவ்வொரு இந்துவுக்கும் ஒரு காவல் தேவதை உண்டு. குழந்தை பிறந்து பெயர் வைக்கும் சடங்கின்போது இந்தக் காவல் தேவதை நியமிக்கப்படுகிறது அல்லது ஒருவர் இந்துசமயத்தில் வாழ்வின் பிற்பகுதியில் காலடி எடுத்துவைக்கும்போது நியமனம் ஆகிறது. சில தேவதைகள் பல தலைமுறையாக ஒரு தனிப்பட்ட நபரோடு அல்லது குடும்பத்தோடு உறவுகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் பல காவல் தேவதைகள் உண்டு. அவர்கள் வீட்டை ஆசீர்வதித்து அங்கு ஆன்மீக அதிர்வலைகளை பலமாக வைத்திருக்கிறார்கள். சில வேளைகளில் கோயிலிலுள்ள தேவதைகள் வீட்டில் நடக்கும் பூசையினால் கவரப்பட்டு வீட்டுக்கு வந்துவிடுவதுண்டு. மேலும் சில தேவதைகள் நாம் ஆண்டுதோறும் தூரத்தில் இருக்கும் திருத்தலத்துக்கு யாத்திரை மேற்கொண்டு வீடு திரும்பும்போது நமக்கு பல வகையிலும் உதவிபுரிய நம்முடன் வந்துவிடுவதுண்டு. வீட்டில் ஒழுங்காக பூசையோ சாதனாவோ நடக்கவில்லையென்றால் அவ்வீட்டின் அதிர்வலை சக்தி குறைந்து அந்த தேவதைகள் வீட்டைவிட்டு மெதுவாக வெளியேறிவிடுகின்றன. தேவர்கள் நம்மையும் நமது வீட்டையும் அமைதியாகக் காவல் புரிகின்றனர். அவர்களைப் பார்ப்பது அரிது. என்றாலும் வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சிகள் மற்றும் அங்கு நிலவும் இணக்கத்தை வைத்து தேவர்கள் இருப்பதை உணர முடியும்.§
குருதேவர்: வானுலகில் வாழும் இக்காவல் தேவர்களை நீங்கள் சாதாரண கண்ணால் பார்க்க இயலாது. ஆனால் மூன்றாம் கண் எனப்படும் ஞானக்கண்ணை உபயோகிக்கத்தெரிந்தவர்களுக்கு அவர்கள் தென்படுகிறார்கள். என்றாலும் அவர்கள் இருப்பதை நீங்கள் வீட்டில் உணரமுடியும். அவர்கள் உங்களைச்சுற்றி இருக்கின்றனர். உங்களுக்கு உதவிசெய்கின்றனர். உங்களுக்கு வாழ்வில் வழிகாட்ட அவர்கள் நம் சமயத்தின் பெருந்தெய்வங்களோடு தொடர்பு கொள்கிறார்கள்.§