1§ |
நான யார்? நான் எங்கிருந்து வந்தேன்?§ |
“நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? என்று உண்மையை (மெய்ப்பொருளை) தேடுவோர் கேட்கின்றனர். குறிப்பிட்ட பெயருடன் குறிப்பிட்ட இடத்தில் பிறந்தவன் என்பதைவிட தாம் உயர்ந்த இன்னொரு நபர் என்று உள்ளூர அவர்களுக்குத் தெரியும். உடம்பைவிட, மனதைவிட, உணர்வுகளைவிட அவர்கள் உயர்வானவர்கள் என்று உணர்கிறார்கள்.” பிறப்புக்கு முன் நான் இருந்தேனா? இறப்புக்குப்பின்னும் நான் இருப்பேனா?” என்று அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.§
இதற்கு இந்து சமயத்தில் விடை இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒரு புனித பயணத்தை மேற்கொண்டிருக்கும் தெய்வீக ஆத்மா என்று இதற்கு சைவ இந்து சமயத்தில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது. பற்பல பிறவிகளில், பற்பல உடல்களில், பற்பல குண இயல்புகளோடு வாழ்ந்துவந்திருக்கும் அழிவற்ற சோதி உடலே நாம். குருதேவர் விளக்கியிருப்பதாவது: “போதிய அனுபவம் பெற்றவுடன் ஆத்மா பாசத் தளையிலிருந்து இயற்கையாகவே விடுபட விழைகிறது. அதுவே உண்மையை நாடுவோர் முதன்முதலில் ஆன்மீக பாதையில் காலடியெடுத்து வைக்கும் உலகின் ஓர் அற்புதச் செயலை தொடக்கி வைக்கிறது. அதுவரை அந்த ஆத்மா பிறந்து வாழ்ந்து இறந்து எல்லாப் பிறவிகளிலும் ஆத்மீக பரிணாமம் அடைந்து வந்திருந்தாலும், அச்செயல்கள் உள்மனதுக்குத் தெரியாமலே மறைமுகமாக நடந்துள்ளது. இப்போது சுயநினைவுடன் கடவுளை அறிந்துகொள்ள விழைகிறது.”§
தீயிலிருந்து தீப்பொறி கிளம்புவதுபோல் நம் ஆத்மாவை சிவபெருமான் தன்னிடமிருந்து படைத்தார். தீப்பொறியும் தீயும்போல நாமும் மூலப்பொருளான சிவனைப்போல் ஒன்றாகவும் வேறாகவும் இருக்கிறோம். எண்ணுதற்கு எட்டாத பிரம்மாண்டமான அண்டங்களில் அவரின் வியாபகத்துக்குள், எல்லையற்ற அவரது படைப்புக்குள் நாம் வாழ்கிறோம்.§
சிவபெருமானே பறவைகள், மீன்கள், விலங்குகளில் உயிர்ச்சக்தியாக இருக்கிறார். நாம் கண்டு அனுபவிக்கும் எல்லா உயிர்களிலும் அவருடைய சக்தியே பாய்ந்து பரவி விளங்குகிறது. நமது வேத ரிஷிகள் “இறைவனே நமது உயிரின் உயிராக இருக்கிறார்” என்று உறுதியாய் அருளியிருக்கின்றனர். நாம் எல்லோரும் சிவபெருமானின் அழகிய குழந்தைகள். இக்கணம் நம்முள்ளே வெகு ஆழத்தில் அவரோடு நாம் ஒன்றாகவே இருக்கிறோம். நாம் இறைவனிடமிருந்து வந்தோம், இறைவனிடமே வாழ்கிறோம், இறைவனிடமே பூரண ஐக்கியம் அடைய பரிணாமம் அடைந்து வருகிறோம். நம் ஒவ்வொருவரையும் இறைவன் முழுமையாகவே படைத்தார். எனினும் நாமே நம்முள்ளே அப்பூரணத்தைக் கண்டுபிடித்து பூரணத்துவம் அடையவேண்டும். எல்லா உயிர்களிடத்தும் எல்லா மனிதர்களிடத்தும் சிவனின் உயிர்ச்சக்தியைக் காண்பதன்மூலம் சிவனின் செயலை நாம் காண்கிறோம். கடவுளின் அருகே நெருங்குவதன்மூலம் நாம் நமது அழிவற்ற ஆன்மாவின் அருகே நெருங்குகிறோம். யாவும் சிவம் யாவற்றிலும் சிவம்.§
குருதேவர் : நாம் சிவனிடமிருந்து வந்தோம் என்று தெரிந்ததும், சிவனிடமே மீண்டும் போகும் பாதை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. நாம் சிவனிடமிருந்து வந்தோம் சிவனிடம் வாழ்கிறோம் சிவனிடமே திரும்பிச் செல்கிறோம் என்று அறிவதிலே பாதி யுத்தத்தை வென்றவர்களாகிறோம். இதை இவ்வளவு தெரிந்து கொண்டாலே போகும் பாதை தெளிவாவதுடன் மீண்டும் நாம் வந்த அந்த மூலத்துக்கே, அந்த இறைவனிடமே, ஆத்மாவுக்கே திரும்பிச்செல்ல நம்மைத் தூண்டிவிடுகிறது.§